45 தேவதையும் சாத்தானும்

45 தேவதையும் சாத்தானும்

அஸ்வின் இல்லம்

சுபத்ராவின்  அறைக்கு வந்த அஸ்வின்,  அவர் படுத்தபடி அழுது கொண்டிருப்பதை கண்டான்.

"என்ன ஆச்சு, பாட்டி?" என்றான் அஸ்வின்.

அதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார் சுபத்திரா. கண்களைத் துடைத்தபடி அமர்ந்தார். ஏதும் கூறாமல், அவரையே பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான் அஸ்வின். சுபத்ரா அழுவதை அவன் பார்ப்பது இதுவே முதல் முறை. அவர் ஒரு இரும்பு பெண்மணி... எதற்கும் கலங்காதவர்...!

"நான் தருணை பாத்தேன். அவன் பாண்டிச்சேரி போகல" என்றார் அமைதியாக.

அதை கேட்டு பெருமூச்சு விட்டான் அஸ்வின்.

"அவன் செஞ்ச தப்புக்கு, அவன் தண்டனை அனுபவிசாகணும். அவனை பிடிச்சி போலீஸ்ல ஒப்படைச்சிடு."

"நீங்க அவனை பத்தி கவலைப்பட வேண்டாம்."

"அவன் இவ்வளவு கீழ்த்தரமா இறங்குவான்னு நான் கனவிலும் நினைக்கல. அவன் எவ்வளவு நல்லவனா இருந்தான்....!"

"அவன் எப்பவுமே நல்லவனா இருந்ததில்ல. நல்லவன் மாதிரி நடிச்சிகிட்டு தான் இருந்தான்."

"நான் அவனை மறுபடி பாக்க விரும்பல. நான் அவனை அடியோடு வெறுக்கிறேன்..."

"ரிலாக்ஸ் பாட்டி..."

"எப்படி இருக்க முடியும்? நான் எப்படி அபிநயா முகத்துல விழிப்பேன்? அவன் அவளை என்ன செய்ய நினசான்னு நினைக்கும் போதே என் உடம்பெல்லாம் நடுங்குது. அண்ணிங்குறவ அம்மாவுக்கு சமம் இல்லயா?" என்று கூறிவிட்டு, ஓவென்று அழுதார்.

"அந்த சட்ட திட்டங்கள் எல்லாம் மனுஷனுக்கு தான் பொருந்தும். தருணுக்கு கிடையாது. எந்த விபரீதமும் ஏற்படாமல அபியை காப்பாத்திட்டத்துக்காக , உங்க கடவுளுக்கு நன்றி சொல்லுங்க. அழுகையை நிறுத்திட்டு ரெஸ்ட் எடுங்க"

சுபத்ராவின் அறையில் இருந்து வெளியேறினான் அஸ்வின். அப்போது அவனை அருண் அழைத்தான்.

"மனோஜ் உனக்கு காண்ட்ராக்ட் டாக்குமெண்ட்டை அனுப்பிட்டானா?"

"எந்த டாக்குமென்ட்?"

"காவேரி நகர் டாக்குமென்ட். உனக்கு அனுப்பி இருக்கேன்னு சொன்னான்"

"இரு, செக் பண்றேன்"

தன் கைப்பேசியை வெளியில் எடுத்து, கேலரிக்குள் நுழைந்தான். அவன் கேலரியில் வெகு சொற்ப புகைப்படங்களே இருந்தன. அதிலிருந்த ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தை பார்த்து, புன்னகை புரிந்தான் அருண். அதில் அபிநயா கண்களை மூடிக்கொண்டு, அஸ்வினின் தோளில் சாய்ந்திருந்தாள். தருணை, கத்தியால் குத்திவிட்டு ஓடி வந்து, அஸ்வினின் காரின் முன் விழுந்த போது, அஸ்வின் எடுத்த புகைப்படம் அது.

"நீ எப்போதிலிருந்து செல்ஃபி எடுக்க ஆரம்பிச்ச, ஆவின்?"

ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து, மனோஜ் அனுப்பியிருந்த புகைப்படத்தை அருணிடம் காட்டினான் அஸ்வின்.

"இதை என்னோட ஃபோனுக்கு அனுப்பு"

"ய்யா..."

அவர்கள் இருவரும் புன்னகையுடன், அவர்களது அறைகளுக்கு சென்றார்கள்.

.....

நீச்சல் குளத்தின் பக்கம் நின்று கொண்டு, யாருடனோ இரகசியமாய் கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தான் அஸ்வின். அவன் என்ன பேசுகிறான் என்பது சுத்தமாக கேட்கவே இல்லை. கட்டிலில் அமர்ந்திருந்த அபிநயா, தன் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டாள். ஆனால், ஏதும் பிரயோஜனம் இல்லை, அவள் காதில் ஒன்றும் விழவில்லை. மெல்ல கட்டிலை விட்டு கீழே இறங்கி, பூனை போல் மெதுவாய் நடந்து, அவன் அருகில் சென்று, திரைச்சீலைக்கு பின்னால்  நின்று கொண்டு, அவன் பேசுவதை கவனிக்கலானாள். அப்பொழுதும் அவளால் ஒன்றும் கேட்க முடியவில்லை. எப்பொழுதும் உறக்கத் தானே பேசுவான்...? இப்பொழுது மட்டும் என்னவானது? அப்படி யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறான்? ஒருவேளை அவனுடைய கேர்ள்ஃபிரண்டாக இருக்குமோ?

திரைச்சீலையின் பின்னிருந்து வெளியே வந்து, இன்னும் சற்று அருகில் சென்றாள்.

ஃபிரானா ஃபிஷ் என்று அவன் கூறியது அவள் காதில் விழுந்தது. அவள் முகத்தை சுருக்கினாள். எதற்காக அவன் மீனைப் பற்றி பேசுகிறான்? அவனுடைய கட்டிட தொழிலுக்கும், மீனுக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை சமைப்பதற்காக கேட்கிறானோ? ஆனால், ஃபிரானா மீனை சமைக்க மாட்டார்களே? எது எப்படி இருந்தாலும், அவன் அவனுடைய கேர்ள்ஃபிரன்டிடம் பேசவில்லை. இப்போதைக்கு அது போதுமானது. மெல்ல பின்னால் நகர்ந்து, கட்டிலை அடைந்தாள் அவள்.

அப்போதைக்கு அவள் சாந்தமடைந்தாலும், அவளால் ஃபிரானா மீனைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால், ஃபிரானா மீனைப் பற்றி, ஒரு முறை அவள் டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறாள்.

பேசி முடித்து விட்டு, அறையின்  உள்ளே வந்தான் அஸ்வின். மடிக்கணினியை உயிர்பித்துவிட்டு வேலை செய்யத் தொடங்கினான். தலையை நிமிர்த்தியவன்,

"மருந்து சாப்பிட்டியா?" என்றான் அபிநயாவை பார்த்து.

ஆம் என்று தலையசைத்தாள்.

"இப்போ நீ பெட்டரா ஃபீல் பண்றல்ல?"

மறுபடியும் ஆமாம் என்று தலையசைத்தாள்.

"ரொம்ப வலிக்குதா?" என அவன் கேட்க,

அவள் கண்கள் திடுக்கிட்டு  அகல விரிந்தன். அவன் எந்த வலியைப் பற்றி கேட்கிறான்? அவள் என்ன பதில் சொல்வது?

அவள் பதில் கூறாமல் இருக்கவே,

"நான் உன்கிட்ட என்னமோ கேட்டேன்" என்றான் அஸ்வின்.

இல்லை என்று அவசர, அவசரமாய் தலையசைத்து விட்டு, போர்வையால் தன்னை போர்த்திக் கொண்டு, படுத்துக் கொண்டாள். அதைப் பார்த்து புன்னகை புரிந்தான் அஸ்வின். மெல்ல போர்வையை கீழிறக்கி, அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தவள், அவன் மடிக் கணினியின் திரையை பார்த்தபடி புன்னகைத்துக் கொண்டிருந்ததை பார்த்தாள். அவள் கணவன் எவ்வளவு அழகு...! எவ்வளவு நல்லவன்...! எவ்வளவு அன்பானவன்...! எவ்வளவு அக்கறை காட்டுகிறான்...! அவன் வேறு ஒருத்தியை காதலிக்கிறேன் என்று கூறினால் என்ன செய்வது? அவள் அவனை விட்டுவிட்டு சென்றுவிட வேண்டியது தானா? அவளுடைய கண்கள் சட்டென்று குளமாயின. அஸ்வினை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமே அவளை கொன்றது. அவளால் அது எப்படி முடியும்? அவள் அவனிடம் அனைத்தையும் இழந்துவிட்ட பிறகு, அது நிச்சயம் முடியாது.

அப்பொழுது அஸ்வினுக்கு மனோவிடம் இருந்து அழைப்பு வந்தது. மறுபடியும் நீச்சல் குளத்தின் பக்கம் சென்றான் அஸ்வின்.

"சொல்லு மனோ"

"அண்ணி எப்படி இருக்காங்க?"

அபிநயாவின் பக்கம் தன் பார்வையை செலுத்தி, அவள் போர்வையால் கூடாரம் அமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து புன்னகை புரிந்தான்.

"நல்லா இருக்கா"

"தருண் எங்கயோ ஒளிஞ்சிருக்கான்னு நினைக்கிறேன்" என்றான் மனோ.

"அவன் சென்னையை விட்டு வெளியே போகக்கூடாது. ஒவ்வொரு மூலையையும் சல்லடை போட்டு சலிக்க சொல்லு."

"நீ கவலை படாதே. அவனை பார்த்த உடனே, அவனை கொன்னுட்டு தான் மறு வேலை."

"இல்ல... எனக்கு அவன் உயிரோட வேணும். அதை மறந்துடாதே"

"ஆனா, அவனுக்கு ஏன் நம்ம ஒரு சந்தர்ப்பம் கொடுக்கணும்?"

அதைக் கேட்டு, தன் பல்லை நறநறவென்று கடித்தான் அஸ்வின்.

"சந்தர்ப்பமா...? அவனுக்கா? நிச்சயமா இல்ல. அவன் இன்னொரு ஜென்மம் எடுத்து வந்து கூட வாழணும்னு நினைக்க கூடாது. அவனுடைய சாவு அப்படி இருக்கணும்."

அதைக் கேட்டு மனோஜ் மென்று விழுங்கினான். அஸ்வின், தனது கோபத்தை வெளிப்படையாகக் காட்டுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்படிப்பட்டவன், இப்போது தன் கோபத்தை வெளியில் காட்டிக் கொள்வதைப் பற்றி கவலைப்படவில்லை என்றால், அவனுடைய கோபத்தின் எல்லையை அளப்பது ஒன்றும் மனோஜுக்கு சிரமமாக இல்லை. இந்த முறை தருண் அஸ்வினிடம் மாட்டினானான் என்றால், அவன் ஒழிந்தான்.

"நீ சொல்ற படியே செய்யறேன்" என்றான் மனோஜ்.

அழைப்பை துண்டித்து விட்டு அறைகுள் வந்த அஸ்வின், அபிநயாவை பார்க்க, அவள் போர்வைக்குள் ஒளிந்து கொண்டியிருந்தாள்.

மிகத் தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள் அபிநயா. ஆம், அவள் தன்னுடைய இயல்புக்கு மாறாக, எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள். அது வேறொன்றும் இல்லை... அவளுக்கு அஸ்வின் வேண்டும்... அவ்வளவு தான்.

அபிநயாவின் மனதிலிருக்கும், தேவதைக்கும், சாத்தானுக்கும் இடையில் மிகப்பெரிய பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது.

"அஸ்வின்கிட்ட போ. அவன் உன்னுடைய கணவன். உனக்கு மட்டும் சொந்தமானவன். உனக்கு, அவன்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு... உனக்கு மட்டும் தான் இருக்கு." என்றது சாத்தான்.

"நீ அவருடைய மனைவியா இருக்கலாம். ஆனா, அவர் வேற ஒரு பெண்ணை காதலிக்கிறார். " என்றது தேவதை.

"அவர் வேற ஒருத்திய காதலிச்சா என்ன? நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டீங்க... அதை மறந்துடாதே" என்றது சாத்தான்.

"ஆனா, நீ தான் உன்னுடைய சுய நினைவிலேயே இல்லையே" என்றது தேவதை.

"நீ உன்னோட சுய நினைவில் இல்லைனா என்ன? அஸ்வின் தான் அவருடைய சுய நினைவில் இருந்தாரே...? அதோட பின்விளைவு என்னன்னு அவருக்கு தெரியாதா என்ன? அவர் நினைச்சிருந்தா, அந்த சூழ்நிலையை தவிர்த்திருக்க முடியாதா? அவரே உன்னை முழுசா ஏத்துகிட்ட பிறகு, நீ எதுக்காக தயங்குற? சரியோ, தப்போ, நீ உன்னை முழுமையா அவர்கிட்ட இழந்துட்ட...  எதுக்காக உன்னுடைய புருஷனை வேற யாருக்கோ விட்டுக் கொடுக்கணும்?" என்று சாத்தியக்கூறுகளை அடுக்கியது சாத்தான்.

"அவ வேற யாரோ இல்ல, அஸ்வின் காதலிக்கிற பொண்ணு"

"ஆனா அஸ்வின், எல்லா விதத்திலயும் இந்த உறவை மேம்படுத்த விரும்புறார். அதை பத்தி நீ என்ன சொல்ற?" என்று தேவதையை மடக்கியது சாத்தான்.

"அப்போ அவரையே நேரடியா கேட்க வேண்டியது தானே? அவர் என்ன நினைக்கிறார்னு தெரிஞ்சுக்க வேண்டியது முக்கியமில்லயா?"

"முக்கியம் இல்ல... நீ அவ சொல்றத கேட்காத, அபி" என்றது சாத்தான்.

"அவ சொல்றத கேட்காத... அவ உன்னை தப்பா வழிநடத்துறா. நீ காலமெல்லாம் அஸ்வினை சந்தேகப்பட்டுகிட்டே இருக்க போறியா? உன்னால அப்படி நிம்மதியா வாழ முடியுமா? நீ அவரை நேரடியா கேட்டுடு..." என்று கெஞ்சியது தேவதை.

"ஆமாம். நீ சொல்றது தான் சரி. நேரடியா அஸ்வின்கிடையே கேட்டுட வேண்டியது தான். நீ தான் எனக்கு வேணும்னு அவர் சொன்னா, நான் அவர் கூட சந்தோஷமா வாழ்வேன். ஒருவேளை, அவர் வேறு ஒருத்தியை காதலிக்கிறது உண்மை தான்னு சொன்னா, அந்த பொண்ணை தேடி கண்டுபிடிச்சு, அவளை நான் கொன்னுடுவேன்." என்றாள் அபிநயா.

"என்னது... கொல்லப் போறியா?" என்று அலறின தேவதையும் சாத்தானும்.

தான் கூறிய வார்த்தைகளை எண்ணி அபிநயாவே ஆட்டம் கண்டு தான் போனாள்.

"அபி...." என்று கெஞ்சியது தேவதை.

"ஆமாம்... நான் அஸ்வினுடன் வாழத்தான் போறேன். ஏன்னா, போரிலும், காதலிலும் எல்லாம் நியாயம் தான்..." என்றாள்.

"என்னது காதலா? நீ அஸ்வினை காதலிக்கிறாயா?" என்றது தேவதை.

"ஆமாம்... அவர் தருணை மாதிரி இல்லன்னு தெரிஞ்ச போதே, நான் அவரை காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். அவர் என்னோட புருஷன். அவரை நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவர் என்னுடையவர்... எனக்கு மட்டும் சொந்தமானவர்..." என்றாள் திடமாக.

தொடரும்...

 
 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top