44 நிம்மதியளித்த உண்மை
44 நிம்மதியளித்த உண்மை
அபிநயாவின் உயர்த்திய கரங்கள், *க்ளிக்* என்ற கதவு திறக்கும் ஓசை கேட்டு அப்படியே நின்றது. உள்ளே நுழைந்தது, சாக்ஷாத் அஸ்வினே தான். அவள் கத்தியை உயர்த்திப் பிடித்தபடி, கண்ணீர் சிந்தி கொண்டு நின்றிருந்த நிலையை பார்த்து அவனுக்கு பகீரென்றது. அவன் முகம் பேயறைந்தது போல் மாறியது. நாலு கால் பாய்ச்சலில் அவளை நோக்கி ஓடிச் சென்று, அவள் கையில் இருந்த கத்திரிக்கோலை பிடுங்கி கொண்டான்.
"அதை தயவு செய்து என்கிட்ட குடுங்க அஸ்வின். நான் வாழ விரும்பல... என்னால வாழ முடியாது..."
"ஏன்? இப்ப என்ன ஆயிடுச்சு?"
"நான் என்னோட புனிதத்தை இழந்துட்டேன்..."
அஸ்வின் மென்று முழுங்கினான். தான் செய்த காரியத்தால், அவள் இப்படி ஒரு மோசமான முடிவை மேற்கொள்வாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. ஆம்... அஸ்வின் அப்படித் தான் நினைத்தான்.
"அபி, நான் சொல்றத கேளு. அதுல உன்னோட தப்பு எதுவுமே இல்ல. எல்லாம் அந்த போதை மருந்தால வந்த வினை."
"இருக்கட்டுமே... இந்த கலங்கத்தோட நான் எப்படி வாழறது? என்னை நெனச்சா எனக்கே ரொம்ப கேவலமா இருக்கு..."
"தயவுசெய்து அப்படி நினைக்காத..."
"உங்களால என்னை தடுக்க முடியாது... எல்லா நேரமும் உங்களால என்னைப் பாதுகாக்க முடியாது. எது எப்படி இருந்தாலும், நான் சாக போறது உறுதி. தருண் என்னை சின்னாபின்ன படுத்தினதுக்கு அப்புறம், நான் வாழறதுல என்ன அர்த்தம் இருக்கு? அந்த மருந்தை சாப்பிட்டா நான் எப்படி நடந்துகுவேன்னு அவன் என்கிட்ட சொன்னான். நான் அவன்கிட்ட எப்படி எல்லாம் நடந்திருபேங்குற நினைப்பே என்னை கொல்லுது. குற்ற உணர்ச்சியில, தினம், தினம், கொஞ்சம், கொஞ்சமா சாகுறதைவிட, ஒரேடியா சாகுறது எவ்வளவோ மேல்..." என்று அவள் தன் நெஞ்சே வெடித்து விடும் அளவுக்கு அழுததை பார்த்து பேச்சிழந்து நின்றான் அஸ்வின்.
அப்படி என்றால், அவள் நிலைமைக்கு தருண் தான் காரணம் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாளா? ஆம்... அவள் தான் தன் சுய நினைவை இழந்திருந்தாளே... அவளுக்கு நடந்தது என்ன என்பது எப்படி தெரியும்?
"அபி, நீ நெனச்சுக்கிட்டு இருக்கிறது உண்மையில்ல"
"இல்ல... நேத்து என்ன நடந்திருக்கும்னு எனக்கு நல்லா தெரியும். அவன் அந்த வீடியோவை உங்களுக்கும் அனுப்பியிருப்பான். நான் எப்படி எல்லாம் அவன்கிட்ட நடந்துகிட்டேன்னு நீங்களும் பாத்திருப்பீங்க... இவ்வளவு நடந்ததுக்கப்புறம் நான் வாழ விரும்பல்ல"
"நீ நினைக்கிற மாதிரி அவன் கூட நீ எந்த தப்பும் செய்யல..."
"என் உடம்பு தாங்க முடியாத அளவுக்கு வலிக்குது..."
அவள் கூறியதைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தான் அஸ்வின்.
"என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சுக்க, அதை விட வேற என்ன ஆதாரம் வேணும்? என்னை சாக விடுங்க"
அவள் தோள்களை இறுகப் பற்றிக் கொண்டான் அஸ்வின்.
"நீ கொல்றதா இருந்தா, என்னை கொல்லு. ஏன்னா, உன்னுடைய இந்த நிலமைக்கு நான் தான் காரணம். தருண் இல்ல." என்று உண்மையை போட்டு உடைத்தான் அஸ்வின்.
அந்த அறை, நிசப்தமாகி போனது. அபிநயா, வாயிலிருந்து வார்த்தை வராமல் சிலை போல் நின்றாள், அஸ்வினை நம்பமுடியாத பார்வை பார்த்தபடி.
"ஆமாம்... அது நான் தான்..."
"இல்ல... நீங்க பொய் சொல்றீங்க" என்றாள் தன் தலையை இடவலமாக அசைத்து.
"நான் பொய் சொல்லல. தருண் உன்னை தொடுறதுக்கு முன்னாடியே நான் வீட்டுக்கு வந்துட்டேன். நான் வந்தப்போ அவன் நம்ம ரூம்ல இல்ல. உன் தலையை அழுத்தி பிடிச்சிக்கிட்டு, நீ கட்டிலில் உட்கார்ந்திருந்த. அப்ப தான் அந்த மருந்து வேலை செய்ய ஆரம்பிச்சிருந்தது."
அவனை வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு நின்றாள் அபிநயா.
"நா... நான்... சூழ்நிலையை எனக்கு சாதகமாக பயன்படுத்திக்கல... அந்த மருந்தோட பாதிப்புல, நீ சொன்னதை கேட்க நான் மறுத்த போது, உன்னை கத்தியால குத்திக்க முயற்சி பண்ண... எனக்கு வேற வழி தெரியல. அதனால தான், என்னால உன்னை மறுக்க முடியல..."
"நீங்க.... நீங்க சொல்றது உண்மையிலேயே உண்மையா? இல்ல... என்னை காப்பாத்த பொய் சொல்றீங்களா?"
இல்லை என்று தலையசைத்தான் அஸ்வின்.
"நேத்து நான் எல்லை கடந்தது உண்மை தான். ஆனா, உன் உயிரைக் காப்பாத்த தான் நான் அதை செஞ்சேன். இப்பவும், உன் உயிரை காப்பாத்த தான் உண்மையை சொல்லிகிட்டு இருக்கேன் "
அப்பொழுது ஸ்ருதியின் பார்வை, அவன் கழுத்தில் ஏற்பட்டிருந்த, சிவந்த தழும்பின் மீது விழுந்தது. "என் உடம்புல இருக்கும் காயங்களை பாக்கும் போது, நான் சொல்றது உண்மைன்னு நீ நம்புவ" என்ற தருணின் வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன. வீக்கம் வற்றி போயிருந்தாலும், அவன் கீழுதடு இன்னும் சிறுது வீங்கித் தான் காணப்பட்டது. அதை மறைக்க அஸ்வின் முயற்சித்து கொண்டிருந்ததை கவனித்தாள்.
"ஐயம் சாரி... நான் அதை வேணும்னு..." அவன் கூறி முடிக்கும் முன்,
அவனை எவ்வளவு இறுக்கமாக அணைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு இறுக்கமாக அணைத்துக் கொண்டு, அவன் நெஞ்சில் தன் முகம் பதித்தாள்.
"அபி, என்னை மன்னிச்சுடு"
இல்லை என்று அவசர அவசரமாய் தலையசைத்தாள் ஸ்ருதி.
"இல்லங்க அஸ்வின்... நீங்க என்னை காப்பாத்திட்டீங்க... என் மானத்தைக் காப்பாத்திட்டீங்க... என் வாழ்க்கையே ஒரு மிருகத்துகிட்டயிருந்து காப்பாதிட்டிங்க. தேங்க்யூ... தேங்க்யூ சோ மச்..."
அஸ்வினின் முகத்தில் திருப்திகரமான புன்னகை மலர்ந்தது. அவளைத் தன் கரங்களால் சுற்றி வளைத்து, உச்சி முகர்ந்தான். அபிநயாவின் கண்கள் அருவியாய் பொழிந்தன... அது நிச்சயம் ஆனந்த கண்ணீர் தான்... கண்ணீர் வடித்துகொண்டு, அவன் நெஞ்சில் சாய்ந்தபடி புன்னகை புரிந்தாள் அபிநயா.
இருவரும் தன்னிலை மறந்து சற்று நேரம் அப்படியே நின்றார்கள். அவள் அணைப்பில் இருந்த வித்தியாசத்தை நன்கு உணர்ந்தான் அஸ்வின். நேற்று இருந்த அந்த முரட்டு அனைப்பிற்கும், இன்று அவளின்
இந்த இதமான அனைப்பிற்கும் தான் எவ்வளவு வித்தியாசம்...! இறுக்கமாய் அணைத்திருந்த பொழுதும், அந்த அணைப்பு மென்மையாய் தெரிந்தது இன்று.
அபிநயா தன் சுய நினைவை பெற்றாள். அவள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாள்? வேறு ஒருத்திக்கு சொந்தமான அஸ்வினை, அவள் எப்படி கட்டித் தழுவலாம்? அவனுக்கு கிடைக்கவேண்டிய சந்தோஷத்தை அவள் எப்படி தட்டிப் பறிக்கலாம்? தருணிடமிருந்து தன்னை காப்பாற்ற, ஏற்கனவே அவன் பிடிக்காத விஷயங்களையெல்லாம் செய்திருக்கிறான். அதுவே ஈடு செய்ய முடியாத உதவி. அதோடு மட்டுமல்லாமல், அவன் தன் வாயாலேயே கூறியிருக்கிறான், நேற்று அவன் செய்த அனைத்தும், அவள் உயிரைக் காப்பதற்கு மட்டும் தான் என்று. இந்த சூழ்நிலையை அவள் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. அஸ்வினின் அணைப்பிலிருந்து வெளி வந்தவள், வேறு பக்கம் தன் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள். அதைப் பார்த்து குழப்பமடைந்தான் அஸ்வின்.
"என்னை மன்னிச்சிடுங்க நான் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தேன்" என்று அவள் கூற, முகத்தை சுருக்கினான் அஸ்வின்.
திடீரென்று அவளுக்கு என்ன ஆனது? அப்பொழுதே அவளிடம் கேட்டு விட வேண்டும் என்று தீர்மானித்து, அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவன், அந்த அறைக்குள் மருத்துவர் வருவதை பார்த்து அமைதியானான்.
"எப்படி இருக்கீங்க மிஸஸ் அஸ்வின்?"
"ஃபிலிங் பெட்டர், டாக்டர்"
"மிஸ்டர் அஸ்வின், நீங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகலாம்"
சரி என்று தலை அசைத்தான் அஸ்வின்.
"மெடிசன்சை கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க" என்றார் மருத்துவர்.
"ஓகே, டாக்டர்" என்றாள் அபிநயா.
மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டிவிட்டு, அவளை அழைத்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்பினான் அஸ்வின்.
அஸ்வின் இல்லம்
அபிநயா மிகவும் சோர்வாக காணப்பட்டாள். மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து நடக்கலானாள். அஸ்வின் அவளை நோக்கி வந்தான்.
"என் ஷோல்டரை பிடிச்சுக்கோ" என்றான்.
"பரவாயில்ல... என்னால நடக்க முடியும்" என்று அவன் முகத்தை பார்க்காமல் கூறிவிட்டு, அங்கிருந்து ஒரு அடி அவள் எடுத்து வைக்க, அவள் மேற்கையை பிடித்து, தடுத்து நிறுத்தினான் அஸ்வின். அவள் ஒரு வார்த்தையும் கூறும் முன், அவளை தன் கையில் அள்ளிக்கொண்டு சென்றான்.
"அஸ்வின், என்னை கீழே இறக்கி விடுங்க"
ஆனால் அவனோ, அவள் வார்த்தைகளை கேட்க தயாராக இல்லை. அவள் பேச்சைக் கேட்காமல், அவளை கையில் தாங்கியபடி, வீட்டினுள் நுழைந்து, அவளை கட்டிலில் படுக்க வைத்தான் அஸ்வின்.
"கட்டிலை விட்டு கீழே இறங்காத... ரெஸ்ட் எடு"
அது ஒரு கட்டளையாய் ஒலித்தது.
"ஐ அம் ஆல் ரைட்" என்று அவள் கூற,
தன் புருவத்தை உயர்த்தி, அவளை ஒரு பார்வை பார்த்தான் அஸ்வின். அந்த பார்வை அவளை ஓராயிரம் கேள்விகள் கேட்டது. அமைதியாய் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள் அபிநயா.
"நான் கொஞ்ச நேரத்துல வரேன்"
என்று கூறிவிட்டு, சுபத்ராவை பார்க்க சென்றான் அஸ்வின்.
இதற்கிடையில்...
மூன்று பக்கங்களில் இருந்தும் சூழ்ந்து கொள்ளப்பட்டான் தருண். அவனால் இருந்த இடத்தை விட்டு நகர கூட முடியவில்லை. காவல்துறை, சென்னை மாநகரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. சக்தியும் அவனுடைய ஆட்களும், தருணை தேடி, இண்டு, இடுக்கு விடாமல் சலித்துக் கொண்டு இருந்தார்கள். ரோஷனும் 24 மணி நேரமும் தருணை தேடி சுற்றி அலைந்து கொண்டிருந்தான்.
தருண் கோபத்தால் வெந்து கொண்டிருந்தான். அவனுடைய திட்டப்படி, அன்று இரவே சென்னையில் இருந்து கிளம்பிவிட வேண்டும். அதனால் தான், விமான நிலையத்தின் கிளாக் ரூமில் அவனுடைய பொருள்களை வைத்து விட்டு வந்தான்.
அவன் அங்கிருந்து சிங்கப்பூர் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தான். மூன்று மாதத்திற்கான டூரிஸ்ட் விசாவும் எடுத்து வைத்திருந்தான். அவனுடைய திட்டம், இப்படி மண்ணைக் கவ்வும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு நன்றாக தெரியும் இந்த முறை அவன் அஸ்வினுடைய அட்களின் கையில் சிக்கினால் என்ன ஆவான் என்று. அஸ்வின் அவனை நிச்சயம் உயிருடன் விட மாட்டான். அவனுடைய மரணம், நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மோசமானதாக இருக்கும். இப்போதைக்கு ஸ்டீபனின் இடத்தை தவிர பாதுகாப்பான இடம் வேறு எதுவும் அவனுக்கு கிடையாது என்பதை அவன் அறிந்திருந்தான். சில நாள் ஆறப்போட்டு விட்டு, பிறகு வெளியில் வர திட்டமிட்டான் அவன்.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top