40 கொடூர திட்டம்

40 கொடூர திட்டம்

மாலை

"நான் சத்சங்கதுக்கு போறேன். வர லேடாகும். அஸ்வினுக்கும் ஏதோ முக்கியமான கான்ஃபிரன்ஸ் இருக்குன்னு சொன்னான். நீ ஜாக்கிரதையா இரு." என்று அபிநயாவிடம் சொன்னார் சுபத்ரா.

"காலையில ஆஃபிஸ் போகும் போது, அஸ்வின் சொன்னாரு பாட்டி..."

"நீ எனக்காக காத்திருக்காதே. நான் சாவியை எடுத்துக்கிட்டு போறேன். நீ சாப்பிட்டு தூங்கு."

"சரிங்க பாட்டி" என்று கூறிவிட்டு, அன்று மாலை அஸ்வினுடன் பேசவேண்டும் என்று தீர்மானித்திருந்ததை எண்ணிக்கொண்டாள்.

சுபத்ரா நங்கநல்லூர் நோக்கி புறப்பட்டார்.

சிறிது நேரம் கழித்து...

அஸ்வின் இல்லத்தின் தொலைபேசி மணி ஒலித்தது. அபிநயா கூறிய *ஹலோ*விற்கு மறுபக்கத்திலிருந்து எந்த பதிலும் இல்லை. மேலும் இரண்டு முறை ஹலோ சொல்லி பார்த்துவிட்டு, ரிசீவரை வைத்துவிட்டு,

"ராங் நம்பரா இருக்கும்" என்று மனதில் நினைத்துக் கொண்டாள்

வீட்டில் யாரும் இல்லாததால் தன் அறைக்கு சென்றுவிட்டாள். மறுபடியும் தொலைபேசி மணி அடித்தது. இந்த முறை வேலைக்கார ராமு, ரிசீவரை எடுத்து பேசினான்.

"ஹலோ..." என்றான் ராமு.

"நான் தருண் பேசறேன்..."

"சொல்லுங்க, தம்பி"

"பாட்டி, எங்க?"

"அவங்க சத்சங்கத்துக்காக நங்கநல்லூர் போயிருக்காங்க..."

"எப்ப போனாங்க?"

"பத்து நிமிஷம் இருக்கும்..."

"சரி, நான் சொல்றத செய்"

"சொல்லுங்க"

"என்னுடைய டாப்பை (TAB) எடுக்க நான் மறந்துட்டேன். அது என்னோட ரூம்ல இருக்கு. அதை எடுத்துக்கிட்டு நேரா அம்பத்தூர் போய், என்னோட ஃபிரண்ட் கிட்ட குடு. அவன் நாளைக்கு பாண்டிச்சேரி வரான். நான் அவன்கிட்ட இருந்து வாங்கிக்கிறேன்"

"ஆனா, வீட்ல யாரும் இல்ல. அபிநயா அண்ணி தனியா இருக்காங்க..." என்றான் தயக்கத்துடன்.

"நீ அதைப் பத்தி கவலைப்படாதே. அஸ்வின் ஆஃபீஸிலிருந்து கிளம்பிட்டான். அவன் சீக்கிரமே வீட்டுக்கு வந்துடுவான். அருண்கிட்ட பேசினப்போ சொன்னான்." என்று புளுகினான்.

"அப்படினா சரி, நான் போறேன்" என்று தயாரானான் ராமு.

"நான் சொல்ற அட்ரஸை
எழுதிக்கோ" என்று தருண் சொல்ல,

அவன் கூறிய முகவரியை, ஒரு துண்டுச்சீட்டில் ராமு எழுதிக் கொண்டான்.

அங்கிருந்து கிளம்பும் முன் அபிநயாவிடம் விஷயத்தை கூற நினைத்தான் ராமு. அதனால், அவள் அறையை நோக்கி சென்றான்.

ராமு தன் அறையின் வாசலில் நிற்பதை பார்த்து குழப்பமடைந்தாள் அபிநயா. அவன் அஸ்வின் இல்லாத போது அவர்கள் அறைக்கு வருவதில்லை. அப்படி இருக்கும் பொழுது அவன் இங்கு வந்திருக்கிறான் என்றால் மிக முக்கியமான விஷயமாக தான் இருக்கும் என்று யூகித்துக் கொண்டாள். ராமு, அஸ்வின் இல்லத்தின் மிக நேர்மையான வேலைக்காரன். அவன் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்கள் அஸ்வின் இல்லத்தார்.

"சொல்லுங்க ராமு அண்ணா... என்ன விஷயம்?"

"நான் அம்பத்தூர் வரைக்கும் போறேன்..."

"அம்பத்தூருக்கா... எதுக்கு?"

"தருண் தம்பி, ஃபோன் பண்ணி அவருடைய டாப்பை அவரோட ஃப்ரெண்ட்கிட்ட கொடுக்க சொல்லி இருக்காரு. அவரோட ஃபிரென்ட் நாளைக்கு பாண்டிச்சேரி போறாராம்"

"ஓ..."

"அஸ்வின் அண்ணா ஆஃபீஸிலிருந்து கிளம்பிட்டாராம்... சீக்கிரம் வந்துடுவாராம்..." என்றான் ராமு.

அஸ்வினை விட வயதில் மூத்தவனாக இருந்தபோதிலும், ராமு அவனை அண்ணன் என்று தான் அழைத்தான்.

அபிநயாவின் முகம் ஒளிர்ந்தது. காலையில் சொல்லிவிட்டுச் சென்றது போல், கான்ஃபரன்சை முடித்துக்கொண்டு சீக்கிரம் வருகிறார் போலிருக்கிறது...

"சரி, நீங்க போயிட்டு வாங்க"

அஸ்வின் இல்லத்தை விட்டு வெளியேறினான் ராமு.

ராமு அங்கிருந்து செல்லும் வரை காத்திருந்துவிட்டு, மெல்ல வீட்டினுள் நுழைந்தான் தருண். அவன் வீட்டினுள் நுழைய, பின்பக்க கதவை பயன்படுத்தினான். பின்பக்க கதவின் சாவி, எப்பொழுதும் அவனிடம் ஒன்று இருக்கும். உள்ளே நுழைந்து அவன் செய்த முதல் காரியம், தொலைபேசி இணைப்பை துண்டித்து தான். அபிநயா சமையலறையை நோக்கி செல்வதை பார்த்து, தூணின் பின் மறைந்து நின்று கொண்டான். சத்தமின்றி அவள் அறையை நோக்கி சென்று, அவளுடைய கைப்பேசியை ஆஃப் செய்தான்.

அங்கிருந்து, எச்சரிக்கை உணர்வுடன் மெல்ல, ஒவ்வொரு தூணாக மறைந்து சமையலறையை அடைந்தான். அங்கு தனக்கு பிடித்தமான பாடலை பாடிக் கொண்டே, அபிநயா தேநீர் தயாரிப்பதை கவனித்தான். அவள் அதை ஒரு குவளையில் மாற்றும் வரை காத்திருந்தான்.

அங்கிருந்த ஒரு பூ ஜாடியை தரையில் போட்டு உடைத்தான். அந்த சத்தத்தை கேட்டு திடுக்கிட்டாள் அபிநயா. தேநீர்க் குவளையை அப்படியே விட்டுவிட்டு, வரவேற்பறையை நோக்கி ஓடினாள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தருண் சமையலறைக்குள் நுழைந்து, அபிநயா தயாராய் வைத்திருந்த தேனீர் குவளையில், எதையோ கலந்துவிட்டு, சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறினான்.

கீழே உடைந்து கிடந்த பூ ஜாடியை பார்த்து குழப்பமடைந்தாள் அபிநயா. வரவேற்பறையில் யாரும் தென்படவில்லை. ஒருவேளை, அதை உடைத்தது பூனையாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டாள். அதை சுத்தப்படுத்த எத்தனித்த போது சமையலறையில் விட்டுவிட்டு வந்த தேனீர், அவளுக்கு நினைவுக்கு வந்தது. மறுபடியும் சமையலறைக்கு வந்து, அந்த தேனீர் குவளையை எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு வந்து, ஆறுவதற்கு முன் அதை ஆற அமர குடித்து முடித்தாள்.

குடித்து முடித்துவிட்டு, தேநீர்க் குவளையை மேசையின் மீது வைத்துவிட்டு, உடைந்த பூஜாடியை சுத்தப்படுத்த துவங்கினாள். அவற்றை குப்பை கூடையில் கொட்டிவிட்டு, தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

தேநீரில் கலக்கிய மருந்து செயல்பட தூங்குவதற்காக, பத்து நிமிடம் காத்திருந்தான் தருண். தன்னுடைய சக்தியை அபிநயாவுடன் சண்டை போடுவதில் வீணாக்க அவன் விரும்பவில்லை. அவள் தான் கத்தியை தூக்கக் கூட தயங்காதவள் ஆயிற்றே...!

தன் அறையை நெருங்கிக் கொண்டிருந்த காலடி சத்தத்தை கேட்டு, அஸ்வின் வந்துவிட்டதாக எண்ணி மகிழ்ச்சியடைந்தாள் அபிநயா. அஸ்வினுக்கு பதிலாக, தருண் தன் அறைக்குள் நுழைவதை பார்த்து அவள் திடுக்கிட்டாள். இவன் பாண்டிச்சேரியில் இருக்க
வேண்டியவனாயிற்றே...! இவன் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான்?

"நீயா?"

"ஆமாம். நான் தான்..."

"நீ பாண்டிச்சேரிக்கு போகலயா?"

"இல்ல.. இங்க எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு."

"வேலை இருந்தா அதை பாக்குறதை விட்டுட்டு, எதுக்கு என்னோட ரூமுக்கு வந்த?" என்று கேட்டாள் காட்டமாக.

"அந்த முக்கியமான வேலையை நான் செய்ய போறதே உன்னோட ரூம்ல தான்... அதுவும் உன்னோட..." என்றான் முழு வில்லத்தனத்தோடு.

அவனுடைய பேச்சு அவளுக்கு சரியாகப்படவில்லை. சமீபத்தில் அவன் பேசும் விதம் மாறியிருந்தது. இன்று அவன் பேசுவது அது போல் இல்லை.

"என்னோட உனக்கு என்ன வேலை?" என்றாள் துணிச்சலாக.

"ஒரு ஆம்பிளையும், பொம்பளையும் என்ன வேலை செய்வாங்கன்னு உனக்கு தெரியாதா?" என்றான் கேலியாக.

அவன் பேச்சு, அவள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுவது போல் இருந்தது.

"உன் கூட என்ன வேலை செய்யப் போறேன்னு உனக்கு இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். புரியல்லன்னா, இன்னும் கொஞ்ச நேரத்துல புரியும்"

"உன்னுடைய பேத்தலை நிறுத்திட்டு, மரியாதையா இங்கிருந்து வெளியே போ. இல்லனா..."

"இல்லன்னா என்ன செய்வ? மறுபடியும் என்னை கத்தியால குத்த போறியா?" என்று எகத்தாளமாய் கேட்டான்.

தன் சட்டைப் பையிலிருந்து, ஒரு மடக்கு கத்தியை அவன் வெளியில் எடுத்தான். அபிநயாவின் கையைப் பிடித்து, அந்த கத்தியை அவள் கையில் திணித்தான்.

"கமான்... கோ அஹெட்... குத்து" என்றான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு.

தன் கையை உயர்த்தி, அவனை குத்த முயற்சித்தாள் அபிநயா. அவள் கையைப் பிடித்து, முறுக்கினான் தருண்.

"தருண், எல்லா நேரத்துலயும் ஏமாற மாட்டான்... ஸ்வீட் ஹார்ட்..." என்று அவள் கையிலிருந்து கத்தியை பிடுங்கி, அவளை பிடித்து தள்ளிவிட்டு, அந்தக் கத்தியை, அறையின் மூலையில் வீசி எறிந்தான்.

"என்னை காப்பாத்திக்க எனக்கு கத்தி தேவையில்லை. என்னால அதை தனியாவே செய்ய முடியும்." என்று சீறினாள்.

"நிச்சயம் உன்னால முடியும்... ஆனா, அதுக்கு நீ உன் சுயநினைவோட இருக்கணும்..." என்றான் எகத்தாளமாய்.

"நீ என்ன சொல்றே?" என்று பரிதவித்தாள் அபிநயா.

"நீ ரசிச்சி, ருசிச்சி குடிச்சியே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு டீ, அதுல ஒரு ஸ்பெஷல் மருந்து கலந்திருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்துல, அது உன்னுடைய சுயநினைவை இழக்க வைக்கும். உன்னுடைய நரம்பு மண்டலம் முறுக்கேறும். உன்னுடைய ஹார்மோன்கள் உன் ஆசையை தூண்டும். அதுக்கப்புறம், நான் எதுவுமே செய்ய வேண்டிய அவசியமில்ல... நான் என்னெல்லாம் செய்ய நெனச்சிருக்கேனோ, அதைவிட அதிகமாகவே நீ செய்வ... கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம என்கிட்ட கெஞ்ச போற..." என்று கூறிவிட்டு பேய் போல சிரித்தான் தருண்.

அந்த சிரிப்பை பார்த்து அவள் கண்கள் குளமாயின.

"நீ சொல்றதை நான் நம்ப மாட்டேன்" என்றாள் கண்ணீர் சிந்தியபடி.

"நீ நம்புவ... நாளைக்கு காலையில உன்னுடைய சுய நினைவுக்கு நீ திரும்பும் போது, உன் உடம்புல இருக்கிற வலி நிரூபிக்கும் என்னுடைய வார்த்தை எவ்வளவு உண்மைன்னு."

அபிநயாவின் கண்கள் அருவியாய் பொழிந்தன.

"வழக்கமா, இந்த மருந்தோட விளைவுகளை பத்தி, முன்னாடியே நான் யார்கிட்டயும் சொல்றதில்ல. நான் எடுக்கிற வீடியோவை, காட்டும் போது தான் அவங்க அதை தெரிஞ்சுக்குவாங்க. ஆனா, நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அதனால தான், உன்கிட்ட முன்னாடியே சொல்றேன். இந்த தடவை, அந்த வீடியோவை நான் அஸ்வினுக்கும் அனுப்ப போறேன். தன் மனைவி, தன்னுடைய உடல் தேவைக்கு, வேற ஒருத்தன்கிட்ட பிச்சை எடுக்கிறத பார்க்கும் போது, அவன் உயிரோட சாகப் போறான்... நீ என்னோட உடம்புல எவ்வளவு காதல் காயங்களை ஏற்படுத்த போறேன்னு உனக்கு தெரியாது. அதையெல்லாம் பார்க்கும் போது, உன் புருஷனுக்கு எப்படி இருக்கும் தெரியுமா?" என்று தான் செய்த கேவலத்தை, சாதனை போல் சொல்லி காட்டினான் அந்த ராட்சசன்.

அபிநயா தன் தலை கணப்பதை உணர்ந்தாள். மனதிற்குள் மாரியம்மனை நினைத்துக் கொண்டாள். தருண், அவள் அணிந்திருந்த துப்பட்டாவை பற்றி இழுத்தான்.

"அஸ்ஸ்ஸ்வின்... " என்ற ஒற்றை வார்த்தையை தவிர அவள் வயிலிருந்து வேறு ஏதும் வெளி வரவில்லை.

தன் மானம் காக்க, திரௌபதி கண்ணனை அழித்தது போல், அபிநயா  தன் மன்னனை அழைத்தாள்.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top