4 இனிய சந்திப்பு
அருண் ஏன் பரிதவிப்போடு இருக்கிறான் என்பதை, மனோஜால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. காலையிலிருந்து அவன் மனோஜிடம் பேசக் கூட இல்லை. அவனுக்கு என்ன ஆயிற்று? எது அவனை படபடப்புடன் வைத்திருக்கிறது? அருணின் கேபினுக்கு சென்ற மனோஜ், கதவை தட்டாமல் உள்ளே நுழைந்தான். அருண், கண்ணை மூடிக்கொண்டு, தனது நாற்காலியில் சாய்ந்து கொண்டு இருப்பதை பார்த்தான்.
"அருண்..."
மனோஜின் வருகையை கவனிக்காத அவன், சட்டென்று எழுந்தான்.
"என்ன ஆச்சு உனக்கு? நான் வந்ததை கூட நீ கவனிக்கல... எது உன்னை கஷ்டப்படுத்திகிட்டு இருக்கு?"
"வேற என்ன? தருண் தான்." என்றான் சலிப்புடன்.
"அவன் என்ன செஞ்சான்?"
"இதுவரைக்கும் எதுவும் செய்யல. ஆனா, அவன் ஏதோ செய்யப் போறதா மனசுக்கு படுது."
"ஏன் அப்படி நினைக்கிற?"
"என்னால எதையும் சரியா சொல்ல முடியல. ஆனா, ஏதோ தப்பா நடக்க போறதை மட்டும், மனசு உறுத்திக்கிட்டே இருக்கு..."
"திடீர்னு உனக்கு அப்படி தோன காரணம்?"
"அவன், அவனோட ஃபிரண்டுகிட்ட பேசிக்கிட்டு இருந்ததை நான் கேட்டேன். ஏதோ ஒரு பொண்ணை பார்ட்டிக்கு அழைச்சுக்கிட்டு வர்றதுக்கு, அவனை கட்டாயப்படுத்திக்கிட்டு இருந்தான்."
"இது வழக்கமா அவன் செய்றது தானே?"
"நான் அது பத்தி கேட்டப்போ பேச்சை மாத்திட்டான், அலுமினி ஃபங்ஷன்னு... இவனெல்லாம் அலுமினி பங்க்ஷன் பத்தி யோசிக்கிறவனா?"
"ஏன் மாட்டான்? ஒருவேளை, அங்க அழகான பொண்ணுங்க வந்தா அவன் போவான் தானே?" என்றான் கிண்டலாக.
"இல்ல மனோ... நான் அப்படி நினைக்கல. அவன் ஏதோ பிளான் பண்றான். அவன் கண்ணன்கிட்ட ரொம்ப சூடா பேசினான்"
"இப்ப அவன் எங்க?"
"தெரியல"
"நம்ம அவனுடைய உடம்புல ஒரு டிராக்கிங் டிவைஸை செட் பண்ணணும் போல இருக்கு." என்றான் வேடிக்கையாக மனோஜ்.
"அதை செய்ய முடிஞ்சா, நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்." என்றான் அருண்.
"ஓவரா சிந்திக்காத... உடம்புக்கு நல்லதில்ல" என்றான் மனோஜ் சிரித்தபடி.
"அவன், எங்க குடும்ப பெயரைக் கெடுத்துடுவானோன்னு எனக்கு பயமா இருக்கு..."
"ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க? நான் உன்னை இப்படி பார்த்ததே இல்லயே..."
"ஸ்வேதா டெத்துக்கப்புறம், என்னால தருணை ஈசியா எடுத்துக்க முடியல. போதாத குறைக்கு, அவன் ட்ரக்ஸ் டீலர் கூட வேற தொடர்பு வச்சிருக்கான். அப்புறம் எப்படி நான் நிம்மதியா இருக்க முடியும்?"
"அவனுடைய ஃபிரண்ட்ஸ் யார்கிட்டயும் இந்த பார்ட்டியை பத்தி கேட்க முடியாதா?"
ஆமாம், என்று புத்துணர்ச்சியுடன் தலையசைத்தான் அருண்.
தருணுடைய நண்பன் கண்ணனுக்கு ஃபோன் செய்தான். ஆனால், அவன் அருணின் அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை. அருணும் அதோடு விட்டுவிடுவாதாக இல்லை. அவன் தன் முயற்சியை தொடர்ந்தான். கடைசியில் கண்ணன், அருணின் அழைப்புக்கு பதில் அளிக்கலானான்.
"நான் அருண் பேசறேன்... தருணோட பிரதர்"
"தெரியும் பிரதர். எங்கிட்ட உங்க நம்பர் இருக்கு."
"அதனால தான், என்னுடைய காலை அட்டன்ட் பண்ணலயா?" என்றான் காட்டமாக.
"அய்யோ... அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நான் என்னுடைய ஃபோனை, சைலண்ட் மோடில் போட்டுட்டு, தூங்கிக்கிட்டு இருந்தேன். அதனால தான் எடுக்க முடியல."
"தருண் எங்க?"
"தெரியலயே... நான் காலையிலயிருந்து அவனைப் பார்க்கவே இல்ல."
"அவன், எந்த பார்ட்டியை பத்தி நேத்து உன்கிட்ட ஃபோன்ல பேசிக்கிட்டு இருந்தான்?"
"ஓ அதுவா? அது எங்க காலேஜ் அலுமினி பங்க்ஷன் பத்தி ப்ளான் பண்ணிட்டு இருந்தோம்."
"டேட் ஃபிக்ஸ் பண்ணியாச்சா?"
"இன்னும் இல்ல பிரதர்."
"டேட் ஃபிக்ஸ் பண்ண உடனே, எனக்கு தெரியப்படுத்து"
"கண்டிப்பா..."
அவர்கள் அழைப்பைத் துண்டித்து கொண்டார்கள். அவன் தோளை ஆதரவாய் தட்டிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றான் மனோஜ். அருணும் சற்றே புத்துணர்ச்சி அடைந்தான். ஏன்னென்றால், தருண் மற்றும் கண்ணனின் வார்த்தைகள் முரண்படவில்லை அல்லவா?
அதேநேரம்,
ஃபோனை துண்டித்துவிட்டு, பெருமூச்சு விட்ட கண்ணனை, புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்றான் தருண்.
"உங்க அண்ணன் நம்மள சந்தேகப்படுறார்..." என்றான் பீதியுடன்.
"அவன் எப்பவுமே அப்படித் தான் அதையெல்லாம் பத்தி யார் கவலைப் பட்டது?" என்றான் அனாயசமாக.
"ஜாக்கிரதை... அவருக்கு மட்டும் உண்மை தெரிஞ்சா, உன்னால எதுவும் செய்ய முடியாது."
"நான் தருண்... அதை மறந்துடாதே..." என்றான் பந்தாவாக.
மாலை
அடுத்தடுத்து, பல கட்டட வேலைகளை பார்வையிட்டுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தான் அஸ்வின். அது பின் மாலைப் பொழுது என்பதால், நன்றாக இருட்டி விட்டிருந்தது. போக்குவரத்து தொந்தரவுகளை சமாளிக்க, அவன் எப்போதுமே நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவதில்லை. அது போலவே அன்றும், நெடுஞ்சாலையை தவிர்த்து, மெல்லிய இசையின் பின்னணியில், காரை செலுத்திக் கொண்டு வந்தான் அஸ்வின்.
திடீரென்று, இடப்பக்கமாக இருந்த சிறிய சாலையிலிருந்து, ஒரு பெண் தலைதெறிக்க ஓடி வருவதை கண்டான். அவன் ஸடன் பிரேக்கை அழுத்த, அந்தப் பெண், அவன் காரின் போனட் மீது விழுந்தாள்.
அவன் மீண்டும் மீண்டும் சந்தித்த, அதே நீல சிலுவை சங்கத்தை சேர்ந்த, அதே பெண் தான் அவள்... அபிநயா...! அவன் முகத்தை அவள் ஒரு நொடி தான் பார்த்திருப்பாள். அவள் முகம் பேயறைந்தது போல் இருந்தது. மூச்சிரைக்க நின்ற அவள், நிற்கவே சிரமப் படுவதை உணர்ந்தான் அஸ்வின். சட்டென்று காரை விட்டு கீழே இறங்கினான். அந்தப் பெண் தனது கண்களை திறந்து வைத்திருக்க முயன்றாள். ஆனால், அவளால் முடியவில்லை. அடுத்த நொடி, அவள் தனது சுயநினைவை இழந்து சரிந்தாள். அவள் கீழே விழும் முன், அவளைத் தன் கரங்களில் தாங்கி பிடித்தான் அஸ்வின்.
அந்த பெண்ணின் களங்கமற்ற முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, அவன் தன்னை மறந்து நின்றான். தெய்வீகமான அழகு அவளுடையது. அவள் கண்ணின் ஓரத்தில் இருந்து, வெளியேற துடித்த ஒரு துளி கண்ணீரை, அது வெளியேறும் முன், துடைத்தான் அஸ்வின். அப்போது தான், அவன் தன் சுய நினைவிற்கு வந்தான். அவனது மூளை துரிதமாக வேலை செய்தது. அப்படியே அவளை அள்ளி கொண்டு சென்று தனது காரில் அமர வைத்து, சீட் பெல்ட்டால் அவளை பினைத்துவிட்டு, அருகிலிருந்த மருத்துவமனையை நோக்கி விரைந்தான்.
மருத்துவமனையின் முன் காரை நிறுத்திவிட்டு, தனது தோளில் சாய்ந்திருந்த அபிநயாவின் மீது பார்வையை ஓட்டிய அவனுக்கு, வாழ்க்கை இப்படியே சென்று விடக் கூடாதா? என்று தோன்றியது.
பட்டென்று அவன் மனம், இதுவரை அவன் செய்திராத ஒன்றை செய்ய தூண்டியது. தனது மொபைல் ஃபோனை வெளியில் எடுத்து அவளை தன்னுடன் சேர்த்து படம் பிடித்துக்கொண்டான். எது அவனை அப்படி செய்ய தூண்டியது என்று தெரியவில்லை. ஒருவேளை, எதிர்காலத்தில் அந்தப்படத்தை அவளிடம் காட்டி, அவளை வியப்பில் ஆழ்த்தலாம் என்று, நினைத்தானோ என்னவோ.
*உண்மை* அவன் மூளையை சுண்டி விட்டது. அவன் தனது பைத்தியக்கார நடவடிக்கைகளை எண்ணி வியந்து போனான். இந்தப் பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம், அவன் ஏன் அவனாகவே இருப்பதில்லை? தன்னை நினைத்து சிரித்தவாறே, அவளை மீண்டும் தூக்கிக்கொண்டான். அவளை கையில் ஏந்தியபடி, மருத்துவமனையின் உள்ளே சென்றான், அந்த மருத்துவமனை வளாகத்தின் நடைபாதை முடிவுக்கு வந்து விடவே கூடாது என்று எண்ணியபடி.
அவளை படுக்கையில் கிடத்தினான். மயக்கத்தில் இருந்த அவளின் முகத்தை மயக்கத்துடன் பார்த்துக் கொண்டு பின்னால் நகர்ந்தான்.
அப்பொழுது அங்கு டாக்டர் வந்துவிட்டார்.
"என்ன ஆச்சு, சார்?"
"இந்தப் பொண்ணு, என்னுடைய காருக்கு முன்னாடி, மயங்கி விழுந்துட்டாங்க."
"உங்களுக்கு இவங்கள தெரியாதா?" என்றார் டாக்டர்.
அந்தக் கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என்று அவனுக்கு விளங்கவில்லை. அவனுக்கு அந்த பெண்ணை தெரியும். ஆனால், அவளைப் பற்றி எதுவும் தெரியாது. அவன் முகத்தில் தெரிந்த கலவரத்தை பார்த்து, மேலும் அவனை எந்த கேள்வியும் கேட்காமல், அபிநயாவை பறிசோதிக்க தொடங்கினார் டாக்டர்.
அப்பொழுது தான், அவளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினான் அஸ்வின். அவளுக்கு என்ன நேர்ந்திருக்கும்? ஏன் அப்படி தலை தெறிக்க ஓடி வந்தாள்? ஏன் அவள் அவ்வளவு பதட்டத்துடன் காணப்பட்டாள்? யாராவது அவளை துரத்திகொண்டு வந்தார்களா? அப்படியானால் அவர்கள் யார்? மனதினுள் கேள்விகளை அடுக்கினான் அஸ்வின். எந்த பிரச்சனையாக இருந்தாலும், அவன் அவளுக்கு உதவத் தயாராக இருக்கிறான். ஆனால் அந்தப் பெண், அவனிடம் அவளுடைய பிரச்சினைகளை கூறுவாளா? அது சந்தேகம் தான். முன்பின் தெரியாத ஒரு அந்நியனிடம் தனது பிரச்சினைகளை சொல்ல அவள் தயங்கலாம். ஆனால், இப்போது அவனுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்நியன் என்ற எண்ணத்தை அவள் மனதிலிருந்து அவனால் விளக்கி விட முடியுமே...!
அவனது எண்ணச்சங்கிலி உடைந்து போனது, மருத்துவர் அவனை நோக்கி வருவதைப் பார்த்த போது.
"அவங்களுக்கு என்னாச்சி, டாக்டர்? ஏன் அவங்க மயங்கி விழுந்தாங்க?"
"அவங்க ரொம்ப பெரிய மன அழுத்தத்தில் இருந்திருக்கணும். இல்லன்னா, அவங்க ரொம்ப தூரம் வேகமாக ஓடி வந்திருக்கணும்..."
அவன் ஆமாம் என்று தலையசைத்தான், ஆழ்ந்த சிந்தனையுடன். அவள் சுயநினைவு பெற்ற பின், அவள் என்ன நினைத்தாலும் சரி, அவளிடம் கேட்டு விடுவது என்று தீர்மானித்தான்.
அப்போது அவனுடைய கைபேசி சிணுங்கியது. அந்த அழைப்பு அருணிடம் இருந்து வந்தது. பேசத்தொடங்கிய உடனே, அருணின் குரலில் இருந்த பதட்டத்தைப் உணர்ந்தான் அஸ்வின்.
"ஆவின்...."
"என்ன ஆச்சு, அருண்?"
"ப்ளீஸ், சீக்கிரமா சிட்டி ஹாஸ்பிடலுக்கு வா..."
"சிட்டி ஹாஸ்பிடலா? பாட்டிக்கு ஒன்னும் இல்லயே?"
அவன் சுபத்திராவிற்கு ஏதோ நேர்ந்து விட்டதோ என்று பதட்டமானான்.
"இல்ல, இல்ல, பாட்டிக்கு ஒன்னும் இல்ல. தருணை தான் அட்மிட் பண்ணி இருக்கேன்."
"அவனுக்கு என்ன ஆச்சு?"
"நீ தயவுசெய்து நேர்ல வாயேன்" என்றான் தயக்கத்துடன்.
"என்ன விஷயம்னு சொல்லு" என்று கத்தினான் அஸ்வின்.
அருண் சொன்ன செய்தி அவனை உலுக்கியது.
"தருணை யாரோ கத்தியால குத்திட்டாங்க..."
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top