38 அது அபிநயாவா?

38 அது அபிநயாவா?

மறுநாள்

*அஸ்வின் பில்டர்ஸ் அலுவலகம்*

"ஒரு வழியா  உன் அருமை தம்பி, ஊரை விட்டு போறான் போல இருக்கே" என்றான் கிண்டலாக மனோஜ்.

"ஆமாம். ஆனா, ஏதோ என் மனசுல உறுத்திக்கிட்டே  இருக்கு. அதுல ஏதாவது மோசமான திட்டம் இருக்குமோன்னு எனக்கு பயமாயிருக்கு" என்றான் அருண் கவலையாக.

"நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே. அவன் இந்த ஊரை விட்டு போனா கூட நான் அவனை நம்ப மாட்டேன்" என்றான் மனோஜ்.

"நீ சொல்றது தப்பில்ல"

"யாராவது இப்படி  அடியோட மாறிடுவாங்களா?" என்றான் அவநம்பிக்கையோடு மனோஜ்.

"எனக்கும் அது தான் சந்தேகமா இருக்கு "

"நம்ம எதுக்கும் அவனை கண்காணிக்கணும்"

"எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு" என்றான் அருண்.

"என்ன சந்தேகம்?"

"ஆவின், அபிநயாவை பத்தி..."

"அவங்களுக்கு என்ன ஆச்சு?"

"ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்குற மாதிரி தான் தெரியுது... ஆனா அது ரொம்ப செயற்கையா இருக்கு"

"நிஜமாவா?"

"ஆமாம்"

"ஏன் உனக்கு அப்படி தோணுது?"

"எனக்கு தெரியல"

"அதுக்கு தருண் காரணமா இருப்பானோ?"

"அவங்க ரெண்டு பேரும், அவனை பத்தி கவலைபடுற மாதிரி எனக்கு தெரியல"

"பின்ன என்ன?"

"அவங்களுக்குள்ள ஏதோ மிஸ் ஆகுது..."

"தருண் இங்கிருந்து கிளம்பட்டும். அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க நம்ம ஏதாவது பிளான் பண்ணலாம்"

"நம்ம பிளான் பண்ண போறோமா?" என்றான் ஆவலாக அருண்.

"ஆமாம்"

"சூப்பர்... அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா எனக்குப் போதும்"

அப்பொழுது  அங்கு காசோலையை பெற தருண் வந்தான். அவன் கதவை தட்ட எத்தனித்த போது, அவர்கள் பேசுவதைக் கேட்டு அப்படியே நின்றான்.

"தான் காதலிச்ச பெண்ணையே அஸ்வின் கல்யாணம் பண்ணிக்கிட்டதில எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்றான் மனோஜ்.

"உண்மை தான். தருண் அபி அண்ணியை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னாப்போ நான் ரொம்ப பயந்து போயிட்டேன். நல்ல வேலை, ஆவின் அவங்களை கல்யாணம் பண்ணிகிட்டான். அவனுக்கு அவங்க கிடைக்காம போயிருந்தா, அவன் ரொம்ப உடஞ்சி போயிருப்பான்"

"ஆமாம்... அஸ்வினுக்கு இந்த உலகத்துல இருக்குற எல்லா சந்தோஷமும் கிடைக்கணும்... அவன் அதுக்கு தகுதியானவன்."

அவன் அறைக்குள் நுழையாமல், பக்கத்திலிருந்த சிறிய அறையில் சென்று அமர்ந்துகொண்டு, நிதானமாய் சிந்தித்தான் தருண்.

"அப்படினா, அபி தான் அஸ்வின் காதலிச்ச பெண்ணா...? அதனால தான், அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு சீக்கிரம் நெருக்கமாயிட்டாங்களா? அதனால தான், இந்த மூணு பேரும் அவளைக் காப்பாத்த  அவ்வளவு சிரத்தை எடுத்தாங்களா? அதனால தான் அஸ்வின், கல்யாணத்தனைக்கு என்னை கடத்தினானா? அதனால தான், எனக்கு வாழும் போதே நரகம்னா என்னன்னு காட்டினானா?" கோபத்தில் பல்லைக் கடித்தான் தருண்.

"நீங்க எல்லாரும் தருணை ரொம்ப குறைச்சி எடை போட்டுட்டீங்க... அவனுக்கு கொடுக்க கூடாத கஷ்டத்தை எல்லாம் கொடுத்திட்டீங்க... அதுக்கு தண்டனையா, வாழ்நாள் முழுக்க நீங்க அழ போறீங்க...  சாவை விட மோசமான தண்டனையை நான் உங்களுக்கு கொடுக்க போறேன்..." உள்ளுக்குள் சீறினான் தருண்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மனோஜின் அறைக்குள் நுழைந்தான் தருண். அவனை சகஜமாக வரவேற்று, அவனிடம் கொடுக்க வேண்டிய செக்கை கொடுத்தான் மனோஜ்.

"தேங்க்யூ"

"எனக்கு தேங்க்ஸ் சொல்ல தேவையில்ல. உங்க அண்ணனுக்கு நன்றியுள்ளவனா இரு." என்றான் மனோஜ்.

"நீ சொல்றதும் சரி தான். நான் எவ்வளவு நன்றியுள்ளவன்னு நீ சீக்கிரமே தெரிஞ்சுக்குவ" என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான், தருண்.

மனோஜும், அருணும் ஒருவரை பார்த்துக் கொண்டார்கள்.

தன் அறையின் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு, நிமிர்ந்து அமர்ந்த அஸ்வின், தருண் உள்ளே நுழைவதை கண்டான்.

"செக்கை வாங்கிட்டியா?"

"வாங்கிட்டேன். ரொம்ப தேங்க்ஸ்" என்றான் அந்த செக்கை அஸ்வினிடம் காட்டியபடி தருண்.

சரி என்று தலை அசைத்தான் அஸ்வின்.

"நான் நாளைக்கு பாண்டிச்சேரி கிளம்புறேன்" என்றான் தருண்.

"இவ்வளவு சீக்கிரமாவா?"

"ஆமாம். செய்ய வேண்டிய ஃபார்மலிடீஸ் நிறைய இருக்கு. ஒரு பிசினஸ் ஆரம்பிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு, உன்னை விட  யாருக்கு நல்லா தெரிஞ்சிட போகுது?"

ஆமாம் என்று தலையசைத்தான் அஸ்வின்.

"நான் சொன்ன மாதிரி, உன்னுடைய பணத்தை, ரெண்டு வருஷத்துல திருப்பிக் கொடுத்துடுவேன்" என்றான் தருண்.

"ஆல் தி பெஸ்ட்"

"தேங்க்யூ"

அஸ்வின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவன், தன் காரில் அமர்ந்து ஸ்டீஃபனுக்கு ஃபோன் செய்தான்.  இரண்டாவது மணியிலேயே அதை எடுத்தான் ஸ்டீஃபன்.

"உன்னுடைய காலுக்காக தான் நான் காத்திருக்கேன். அவ ஃபோட்டோவ அனுப்பு. நான் அவளை முடிச்சிடறேன்."

"தேவையில்ல" என்று தருண் சொல்ல,

"ஏன்?" அதிர்ச்சியாய் கேட்டான் ஸ்டீஃபன்.

"பிளானை கேன்சல் பண்ணிட்டேன்"

"ஆனா, ஏன்?"

"ஏன்னா, அவளுக்கு சாவெல்லாம் பத்தாது"

"அப்படின்னா?"

"அதை விடு. நான் உனக்கு அப்புறமா ஃபோன் பண்றேன். சீக்கிரமே நம்ம சந்திக்கலாம்"

"ஓகே. பை"

அழைப்பை துண்டித்துவிட்டு ஆபத்தாய் சிரித்தான் தருண்.

அன்றிரவு

தூக்கத்திலிருந்து அலறி அடித்துக் கொண்டு எழுந்தாள் அபிநயா. அதைக் கேட்டு  தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தான் அஸ்வின். 

"என்ன ஆச்சு, அபி?"

அவனுக்கு பதில் சொல்லாமல், வியர்த்துக் கொட்டிய தன் முகத்தை துடைத்தாள் அபிநயா. அஸ்வின் அவள் தோளை பிடித்து உலுக்கினான்.

"கெட்ட கனவு கண்டியா?" என்றான்.

ஆமாம் என்று தலையாட்டினாள் பயத்துடன்.

"வெறும் கனவு தானே... அதுக்கு ஏன் பயப்படுற?"

அவள் பதட்டத்துடன் அவனை பார்க்க, அவள் கண்கள் கலங்கியிருந்தன.

"எதுக்காக அழற?" என்று பதறினான் அஸ்வின்.

தன் தலையை பிடித்துக் கொண்டு, அழுதபடி ஒன்றுமில்லை  என்று தலையசைத்தாள்.

"உன் கனவுல ஏதாவது மோசமா நடந்துதா?"

அவள் மறுபடியும் ஆமாம் என்று தலையசைத்தாள்.

"என்ன கனவு கண்ட? என்கிட்ட சொல்லு."

"என்னால சொல்ல முடியாது..."

"ஆனா, ஏன்?"

"அது ரொம்ப சங்கடமான விஷயம்"

"என்ன  கனவு கண்டேன்னு சொல்றதுல என்ன சங்கடம்?"

"அது அப்படித் தான்"

"நீ ஏன் எல்லாத்துக்கும் இப்படி பிடிவாதம் பிடிக்கிற?"

"நான்... என்னை... நியூடா பார்த்தேன்"

அஸ்வினுக்கு தூக்கி வாரிப்போட்டது. தன்னை சுதாரித்துக் கொண்டான்.

"அதனால என்ன? நீ தினமும் குளிக்கும் போது அப்படித் தானே இருக்க?" என்று சமாதான படுத்த முயன்றான்.

"இல்ல... அந்த கனவுல என்னோட கற்பை இழந்ததுக்காக நான் அழுதேன்"

தன் முகத்தை மூடிக்கொண்டு ஓவென்று அழுதாள் அபிநயா.

அவளுக்கு எப்படி சமாதானம் கூறுவது என்று அவனுக்கு புரியவில்லை. என்னவென்று சொல்லி அவன் சமாதானப்படுத்த முடியும்? அவன் மெல்ல அவள் தோளை தொட்டான்.

"அபி அழாதே..."

அவள் மேலும் அழுது, அவனை சங்கடத்திற்கு உள்ளாகினாள். அவள் தலையை மென்மையாய் வருடி கொடுத்தான்.

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எனக்கு படபடன்னு வருது" என்று அவள் படபடத்தாள்.

கிட்டத்தட்ட அஸ்வினுக்கும் அப்படித் தான் இருந்தது. அவனுக்கும் எதுவுமே சரியாக படவில்லை.

"நீ என்னை நம்புறியா?" என்றான்.

ஆமாம் என்று தலை அசைத்தாள்.

"அப்போ அமைதியா இரு. நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன். சரியா?"

அவள் சரி என்று தலை அசைத்தாள்.

"சரி படுத்துக்கோ"

அவள் வேண்டாம் என்று தலையசைத்தாள்.

"அபி..."

அவள் கட்டிலை விட்டு கீழே இறங்க முயல, அவள் கையை பிடித்து இழுத்து, தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டான். அவள் எழுந்திருக்க முயல, அவள் தோளை இறுகப் பற்றி அவளை எச்சரித்தான்.

"படுனா படு..."

தன் தலையை உயர்த்தி அவள் அஸ்வினை பார்க்க, அவன் கண்ணை மூடி உறங்கு என்று சைகை செய்தான். தன் கண்களை மூடிக்கொண்டு, அவன் கால் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள். அவன் மெல்ல அவள் தலையை வருடிக் கொடுக்க, அவள் விழியோரம் கண்ணீர் கசிந்ததை கவனித்தான் அவன். மென்று விழுங்கியவாரு அவள் கண்ணீரை துடைத்து விட்டான். அவன் மடியில் படுத்தபடி உறங்கிப் போனாள் அபிநயா... உலகத்திலேயே பாதுகாப்பான இடத்தில்...!

தான் விரும்பிய பெண், தன் மடியில் படுத்துகிடந்த போதும், அவளை ரசிக்கும் மனநிலையில் இல்லை அஸ்வின். ஏகப்பட்ட போராட்டங்களுக்கு பின், அவளை தன் வாழ்வில் கொண்டான் அவன். அவளிடம் இன்று ஒரு இனம்புரியாத பதற்றத்தை உணர்ந்தான் அவன். அவனுக்கு தெரியும் அவள் தன்னிடம் வர துடிக்கிறாள் என்று. தன்னுடன் இருக்க விரும்புகிறாள் என்று. ஆனால் வர மறுக்கிறாள்... ஏன்? இப்போது கூட பார், அவள் எவ்வளவு அமைதியாய் அவன் மடியில் உறங்கிக் கொண்டிருக்கிறாள்... அவனை அவளுக்கு பிடிக்கவில்லை என்றால், அப்படி அவள் நிம்மதியாக உறங்குவாளா? அவளிடம் பேசி தீர்க்க வேண்டியது நிரம்ப உள்ளது. அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும்.

தருண் இங்கு இருக்கும் வரை, அலுவலகம் செல்லக் கூடாது என்று தீர்மானித்தான் அஸ்வின்.

தொடரும்...



Bạn đang đọc truyện trên: AzTruyen.Top