35 வேண்டுதல்

35 வேண்டுதல்

அபிநயா பலவித முகபாவங்களுடன் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, களுக்கென்று சிரித்தான் அஸ்வின். அவன் இதழோர புன்னகையுடன் நின்றிருப்பதை பார்த்தாள் அபிநயா.

"நீ உன் கூடயே சண்டை போட்டுகிட்டு இருக்க போல இருக்கு...?"

"நீங்க தருணை நம்புறீங்களா?" என்றாள் எதையும் யோசிக்காமல்.

"ஏன் கேக்குற?"

"ஏன்னா, நான் அவனை நம்பல..."

"நீ தான் பாத்தியே, அவன் எவ்வளவு தூரம் வருத்தப்பட்டான்..." உன்னை கூட அண்ணின்னு கூப்பிட்டானே..."

"எல்லாம் சுத்த நடிப்பு..."

"நீ ஏன் அப்படி நினைக்கிற?"

"பாம்பு சட்டையை மாத்துறதனால அதோட விஷத் தன்மையையும் மாத்திடுச்சின்னு  அர்த்தமில்ல..."

"என்ன ஒரு தத்துவம்....!"

"இந்த மாதிரி திடீர் மாற்றமெல்லாம் பழைய சினிமாவுல தான் நடக்கும்..."

"இருக்கலாம்"

"அவன் விரிச்ச வலையில விழுந்துடாதீங்க" அவனை எச்சரித்து ஆச்சரியப்படுத்தினாள்.

"அப்படி செய்யணும்னு அவனுக்கு என்ன அவசியம்?" என்ற கேள்வி எழுப்பினான் அஸ்வின்.

"ஏன்னா, நம்மளுடைய உறவுமுறை மேல அவனுக்கு சந்தேகம் இருக்கு. நம்ம ரெண்டு பேரும் நெருக்கமா இருக்கிறதை அவன் விரும்பல. அவன் நல்ல பிள்ளை மாதிரி நடிச்சா, நம்மளும் நம்மளுடைய உறவுமுறை நல்லா இருக்குன்னு பாட்டிகிட்ட காட்டுறதை நிறுத்துவோம் இல்ல...? அவன் நம்மளை பிரிக்க தான் இதெல்லாம் செய்யறான்"

"என்ன ஒரு ஆராய்ச்சி...!"

"நீங்க அவன்கிட்ட ஜாக்கிரதையா இருங்க" அவள் மறுபடியும் எச்சரிக்க, அதைப் பார்த்து அன்பாய் சிரித்தான் அஸ்வின்.

"நான் ஜாக்கிரதையா இருக்கேன். ஆனா நீ மட்டும் நம்ம ரெண்டு பேரும் நெருக்கமா இருக்கிற மாதிரி நடிக்கிறதை நிறுத்தாத. சரியா...? அப்ப தான் நம்ம ரெண்டு பேரும் உண்மையிலேயே ஒன்னாயிட்டோம்னு அவன் நினைப்பான்" பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளை எச்சரித்தான்.

"நீங்க சொல்றதும் சரி தான்" என்றாள் பதட்டத்துடன் நகத்தை கடித்தபடி.

அதைப் பற்றி யோசித்தபடி அவள் அங்கிருந்து செல்ல, அஸ்வின் விழுந்து விழுந்து  சிரித்தான். அவள் உண்மையிலேயே குழம்பித் தான் போயிருக்கிறாள். அதனால் தான் அவன் கேலி செய்வதைக் கூட அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அப்போது, அஸ்வினின் அறையில் அருண் நுழைந்தான்.

"ஆவின், நான் உன்கிட்ட ஒன்னு பேசணும்"

"என்னன்னு சொல்லு"

"நீ தருணை நம்பறியா?" என்று அவன் கேட்க, சிரித்தபடி தன் கண்களை சுழற்றினான் அஸ்வின்.

"அவன் மாறிட்டான்னு நான் நம்பல. மனோஜும் அதையே தான் சொல்றான்"

"மனோஜா...? அவன் இங்க வந்திருக்கானா?"

"தருணுடைய நாடகத்தைப் பத்தி நான் தான் அவனுக்கு சொன்னேன்."

"நாடகமா?"

"அவனுடைய ஃபிரண்ட் கண்ணன், என்ன சொன்னான்னு நீ மறந்துட்டியா?"

"என்ன சொன்னான்?"

"அவன் யாரையும் அவ்வளவு சீக்கிரம் மன்னிக்கமாட்டான்னு சொன்னான்ல...?"

"அவன் நல்லா அடி வாங்கிட்டு வந்திருக்கான். ஒருவேளை, அவனுடைய மாற்றத்துக்கு அது கூட காரணமா இருக்கலாம் இல்லயா?"

"போன தடவையும் அவன் நல்லா அடி வாங்கிட்டு தான் வந்தான். ஆனாலும் அவன் மாறல. அபி அண்ணியை தன்னுடைய அண்ணியா பார்த்ததுக்கப்புறமும் அவன் மாறல. அப்படி இருக்கும் போது, இப்போ மட்டும் எப்படி மாறுவான்?"

"மாற்றம் எப்ப வேணா ஏற்படலாமே..."

"ஏற்படலாம்... ஆனா, அது தருண்கிட்ட நிச்சயம்  ஏற்படாது..."

"ஆனா, அவன் ஏன் நடிக்கணும்?"

"நம்மளுடைய சப்போர்ட்டுக்கு தான். அவன் நம்மகிட்ட நல்ல பேர் எடுத்துட்டா, அவன் ஏதாவது தப்பு செஞ்சி மாட்டிக்கிட்டாலும் நம்ம காப்பாத்துவோம்ல? அதுக்கு தான்..."

"ஓ..."

அஸ்வின் உள்ளூர சிரித்துக் கொண்டான்.  அருணும், அபியும், ஒன்று போல் யோசிக்கிறார்கள்...

"அவன் நடிப்பை பார்த்து ஏமாந்துடாதே, ஆவின்..."

"சரி... அவன் மேல கொஞ்சம் அக்கறை காட்டு. அவனுக்கு என்ன வேணும்னு கேளு.  அவன் தேறி வர ஹெல்ப் பண்ணு."

சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றான் அருண்.

மாலை

மிகவும் பலவீனமாக இருந்ததால், இரண்டு குளுக்கோஸ் பாட்டில்களை ஏற்றியாகிவிட்டது தருணுக்கு. போதாத குறைக்கு, சுபத்திரா வேறு அவனுக்கு பழரசத்தை ஊட்டிக் கொண்டிருந்தார். இப்பொழுது அவன் ஓரளவிற்கு தேறி விட்டான்.

"அருண், என்னோட ஃபோனை அந்த ரவுடி பசங்க எடுத்துக்கிட்டாங்க.  எனக்கு புது ஃபோனும், என்னுடைய பழைய நம்பரையும் வாங்கி தரியா?" என்றான் தருண்.

"ஏற்பாடு பண்றேன்"

யாருக்கோ ஃபோன் செய்து, தருணின் பழைய போன் நம்பரை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தான் அருண்.

தருணின் மாற்றத்தை பார்த்து, சுபத்ராவின் மனம் நிம்மதி அடைந்தது. அஸ்வினும், அருணும் அவனை நன்றாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சீக்கிரமே அவர்கள் இல்லத்தின் சந்தோஷம் திரும்ப கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது அவருக்கு.

மறுநாள் காலை

ஒரு நாள் முழுக்க ஓய்வெடுத்த பின், ஓரளவு சக்தி கிடைத்ததை போல் உணர்ந்தான் தருண். அருண்,  தருணின் பழைய சிம் கார்ட் நம்பரையும், புதிய ஃபோனையும் கொடுத்தான்.

அவனை அறைக்குள்ளேயே அடைந்து கிடக்காமல், சற்று காலாற நடக்கும் படி கேட்டுக் கொண்டார் சுபத்ரா. உண்மையில் சொல்லப் போனால், தருணுக்கு கூட ஒரே அறையில் இருக்க பிடிக்கவில்லை. அவன் வெளியில் வர தான் துடித்துக் கொண்டிருந்தான். அவன் வேண்டுமென்றே அஸ்வினின் அறைப் பக்கம் சென்று, வேவு பார்க்க நினைத்தான்.

அவன் தங்கள் அறையை நோக்கி வருவதை கவனித்த அபிநயா, அவன் அவளை பார்க்கும் முன் அறையினுள் ஓடிப்போனாள். அவள் அப்படி பதறியடித்து ஓடி வருவதைப் பார்த்து முகம் சுளித்தான் அஸ்வின்.

தன் கண்ணில் ஏதோ விழுந்து விட்டது போல் பாசாங்கு செய்து, கண்ணைக் கசக்கினாள்.

"என்ன ஆச்சு?" என்றான் அஸ்வின் பதட்டமாக.

"கண்ணுல தூசி விழுந்துடுச்சு..."

"இரு, நான் பாக்குறேன்"

அவள் அருகில் வந்து, அவள் முகத்தை அழகாய் பற்றி, அவள் கண்ணை ஊதிவிட்டான். அபிநயாவின் மனம் தடுமாறியது. அவன் சட்டையை கெட்டியாகப் பற்றிக் கொண்டு, கண்ணிமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் தன்னுள் தொலைந்து போனதை உணர்ந்து, மென்று முழுங்கினான் அஸ்வின்.

இந்தப் பெண்,  இப்போதெல்லாம் ஒவ்வொரு நிமிடமும் வித்தியாசமான உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். அவள் விழி ஓரத்தை அவன் மெல்ல வருடினான். தன்னை மறந்து  அவள் கண்களை மூடினாள்.

உண்மையிலேயே அதை அவள் வேண்டுமென்று செய்யவில்லை. அப்போது அவர்கள் அறையை கடந்து சென்ற தருண், அந்தக் காட்சியைக் கண்டு வெம்பினான்.

"இப்ப பரவாயில்லையா...? இல்ல இன்னும் உறுத்துதா? " என்றான் அஸ்வின் அக்கறையுடன்.

இல்லை என்று தலையசைத்தாள், அவன் முகத்தில் இருந்து கண்ணை எடுக்காமல்.

தன் விரலை, தன் உள்ளங்கையில் நன்றாக சூடு பறக்க தேய்த்து. அந்த வெதுவெதுப்பான விரலை, அவள் கண்ணின் மீது வைத்தான். அது அவளுக்கு இதமாக இருந்தது.

"நல்லாயிருக்கா?"

ஆமாம் என்று அவள் தலையசைக்க, மேலும் சில முறை அதையே திரும்ப செய்தான்.

தருண் அங்கிருந்து சென்றான், அவர்களின் கொஞ்சல்களையும், ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறையையும்  பார்க்க சகிக்காமல்.

அஸ்வின் கதவருகே தன் கண்களை செலுத்தினான்.

"அவன் போயிட்டான்" என்றான்.

அப்பொழுது தான் அவளுக்கு உண்மை உறைத்தது.  தருண் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தான் அஸ்வின் இதெல்லாம் செய்திருக்கிறான். அவளுக்கு தொண்டையை அடைத்தது. அவளுக்கு உறைத்த உண்மை அவளுக்கு பிடிக்கவில்லை. உண்மையை விட கற்பனைகள் இன்பமானவை... சுகமானவை...!

அஸ்வினின் அடுத்த வார்த்தைகள் அவளை கிச்சு கிச்சு மூட்டின.

"இந்த ஒரு விஷயத்துக்காக நான் தருணை மனசார நேசிக்கிறேன். அவன் என் மனைவியை எப்பவும் என் பக்கத்திலேயே இருக்க வைக்கிறான்." அவள் கன்னத்தை செல்லமாக தட்டினான்.

உள்ளூர புன்னகைத்து அங்கிருந்து செல்ல எத்தனிதவளை, கையை பிடித்து இழுத்து, மறுபடியும் தன் முன் கொண்டு வந்தான்.

"எங்க போற?"

"பூஜை பண்ணப்போறேன்"

"எனக்காகவும் கடவுள்கிட்ட வேண்டிக்கிறியா?"

*என்ன வேண்டணும்?* என்பது போல் அவனை பார்த்தாள் அபிநயா

"சொல்லு... வேண்டிக்கிறியா?"

சரி என்று தலையசைத்தாள் அபிநயா.

"எனக்கு என்னுடைய பொண்டாட்டி வேணும்... மொத்தமா... எல்லா விதத்திலும்... உன்கிட்டயிருந்து தள்ளி இருக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு..." என்றான் ரகசியமாக.

அவளுக்கு குப் என்று வியர்த்தது. அவள் வியர்வைத் துளிகளில் மொத்தமாய் நனைந்து போனாள். பேச்சிழந்து  சிலை போல் நின்றாள். என்ன மாதிரியான வேண்டுதல் இது? உண்மையிலேயே அவனுக்கு இதெல்லாம் வேண்டுமா? அவன் உண்மையிலேயே இந்த திருமண பந்தத்தை தொடர விரும்புகிறானா?

அவள் கண் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, சீரியசானான் அஸ்வின். சந்தேகமில்லை... அவன் எல்லையை கடந்து தான் விட்டான். அவர்கள் இன்னும் சாதாரண வாழ்க்கையையே வாழ தொடங்காத பொழுது, அவன் அவளிடம் நேரடியாக இப்படி கேட்டிருக்கக் கூடாது.

அஸ்வின் அங்கிருந்து சென்றான், எண்ண அலைகளில் அபிநயாவை மிதக்கவிட்டு.

அபிநயா பூஜை செய்து கொண்டிருந்தாள். அவள் அஸ்வினின் வேண்டுதலை முன்வைக்கவில்லை தான்... ஆனால், அவள் அந்த வேண்டுதலை பற்றி மனதால் நினைக்கவில்லை என்று நாம் கூறுவதற்கில்லை. அவனின் வேண்டுதலை விட, அதன் உள்ளார்ந்த அர்த்தம் தான் அவள் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அவள் பூஜை அறையில் இருந்த அம்மனின் படத்தை பார்க்க, எப்பொழுதுமே சிரித்தபடி இருக்கும் அம்மன், அன்று  அவளைப் பார்த்து, அதிகமாய் சிரிப்பது போல் தோன்றியது அவளுக்கு.

"என்னை பார்த்து சிரிக்கிறதை நிறுத்துங்கம்மா. இப்படி அமைதியா எதுவுமே தெரியாத மாதிரி இருக்கிறதை விட, என் புருஷனை பத்தி தெரிஞ்சுக்க எனக்கு உதவ கூடாதா...? அவருடைய வேண்டுதலை நீங்களும் கேட்டிங்க தானே...? பாருங்க, என் உடம்பெல்லாம் எப்படி நடுங்குதுன்னு. அவருக்கு நான் மொத்தமா வேணுமாம். அவரைப் பத்தியும், அவரோட கேர்ள் ஃப்ரெண்ட்  பத்தியும்,  நான் முழுசா தெரிஞ்சுக்காம அவரை என்னை தொடவிடமாட்டேன். தயவு செஞ்சி, அந்த பெண்ணை பத்தி நான் தெரிஞ்சிக்க எனக்கு உதவி செய்யுங்க. நான் என்னை அறியாமலேயே அவரை காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்னு உங்களுக்கு தெரியும் தானே? என் புருஷன் எனக்கு மட்டும் தான் சொந்தம்னு, நான் சுயநலமா மாறுவதற்கு முன்னாடி, எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்க. யாரையாவது என்னோட  உதவிக்கு அனுப்புங்க." என்று கூறி விட்டு கண்ணை திறந்தவள், தருண் அவளை கவனிக்காமல் பூஜையறையை கடந்து செல்வதை பார்த்தாள். அவள் அம்மன் படத்தை பார்த்து முகம் சுளித்தாள்.

"எனக்கு உதவக்கூடிய ஒருத்தரை  எனக்கு காட்ட சொன்னேன். இந்த பொறுக்கியை இல்ல..." என்று சிணுங்கினாள்.

பாவம் அந்த பெண்... அவளுக்கு எப்படித் தெரியும் அந்த பொறுக்கி தான் அவர்களுடைய அனைத்து வேண்டுதல்களையும் நிஜமாக்க  போகும் துருப்புச் சீட்டு என்று...?

தொடரும்...






 






Bạn đang đọc truyện trên: AzTruyen.Top