31 அர்ப்பணம்
31 அர்ப்பணம்
தருணின் ஆத்திரம் எல்லையை கடந்து கொண்டிருந்தது. அவன் எப்பொழுதும் அருண் மற்றும் மனோஜிடம் எச்சரிக்கையாக தான் இருந்திருக்கிறான். ஏனென்றால், அவர்களுக்கு அஸ்வினிடம் இருக்கும் விஸ்வாசம், யாருடனும் ஒப்பிட முடியாதது. சக்தி கூறிய வார்த்தைகளை மறுபடியும் எண்ணி பார்த்தான்.
"அவர்கள் எப்போதும் ஒன்றாகத் தான் இருப்பார்கள்"
அதை நினைத்துப் பார்த்தற்கு பின், அந்த மூன்றாமவன் யார் என்பதை ஊகிப்பதில் அவனுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.
*அவர்கள் எப்போதும் ஒன்றாகத் தான் இருப்பார்கள் என்றால், அந்த மூன்றாமவன் நிச்சயம் அஸ்வின் தான். தன்னை கடத்தியது அஸ்வினா? ஆனால் அவன் எதற்காக அதைச் செய்தான்? அவனும், அருணும், அபிநயாவை தான் திருமணம் செய்து கொள்வதை விரும்பவில்லை என்பது தெரியும். ஸ்வேதாவின் மரணத்தில் இருந்தே அவர்கள் இருவரும் அவன் மீது அதிருப்தியோடு இருந்ததை அவன் அறிந்திருந்தான். ஒருவேளை, அவன் ஏன் அபிநயாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான் என்ற உண்மையான எண்ணத்தை அஸ்வின் அறிந்திருப்பானா? அதனால் தான் தனக்கும் அபிக்கும் நடக்க இருந்த திருமணத்தை அவன் தடுத்து விட்டானோ? அவனால் தான் திருமணம் நின்று விட்டதா? திருமணத்தை நிறுத்தி விட்ட உறுத்தலில் தான், அவன் தன் காதலை துறந்து, அவனே அவளை திருமணம் செய்து கொண்டானோ? இப்பொழுது கூட, அவன் மனைவியை தன்னிடமிருந்து காப்பாற்றத் தான் அவன் தன்னை கடத்தியிருக்க வேண்டும். அவன் தான் அப்படி என்றால் அவனுக்கு கூட்டாக இந்த அருணும், மனோஜும் வேறு உடந்தை. அவர்களுக்கு என்ன வந்தது? எதற்காக அவர்கள் அபிநயா தான் முக்கியமானவள் என்பது போல நடந்து கொள்கிறார்கள்? அவள் என்ன அவர்களுக்கு அவ்வளவு முக்கியமா? எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள் மூவரும் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். எவ்வளவு தைரியம் இருந்தால் அவர்கள் சாகும் வரை அவனை அடித்திருப்பார்கள்? முக்கியமாக அஸ்வின்... அவன் செய்த செயலுக்காக அவன் வருத்தப்பட்டு தீரவேண்டும். என்னை விட உனக்கு அவள் தானே முக்கியம்? அப்படி என்றால், அவளுக்கு வலித்தால், அவளை விட உங்ளுக்கு அதிகமாக வலிக்கும் இல்லையா? அஸ்வின், நீ விரைவிலேயே தெரிந்து கொள்ளப் போகிறாய், தருண் யாரென்பதை... தருணை தொட்டால் என்ன நடக்கும் என்பதையும் சேர்த்து..." என்று தனக்குள்ளே சபதம் செய்து கொண்ட தருணின் எண்ண சங்கிலி உடைந்தது, அவர்கள் பேசுவதைக் கேட்டு.
"அவங்க யாருக்காவது ஃபோன் பண்ணி, என்ன செய்யறதுன்னு கேளு" என்றான் ஒருவன்.
"தேவையில்ல. இவன் இங்கேயே கிடக்கட்டும். அஸ்வின் சார் ஃபோன் பண்ற வரைக்கும், நம்ம காத்திருக்கணும்." என்று அஸ்வினின் பெயரை கூறி, தருணின் யூகம் சரி என்று நிரூபித்தான் சக்தி.
தருண் தன் பல்லை நறநறவென கடித்தான்.
"இங்கிருந்து எப்படியாவது தப்பி செல்ல வேண்டும். தான் செய்த தவறுக்காக அவர்கள் வருந்தும்படி செய்தாக வேண்டும். அனைத்தையும் திட்டமிட்டு கச்சிதமாக செய்ய வேண்டும். இந்த முறை, தருண் உங்கள் அனைவரையும் அழ வைக்கப் போகிறான். அபிநயா என்ற பெயர் கொண்ட உங்கள் விரலை வைத்தே உங்கள் கண்களை குத்த போகிறான்" என்று உள்ளுக்குள் கர்ஜித்துக் கொண்டான் தருண்.
தருண் உள்ளூற கொதித்துக் கொண்டிருந்தான். சிறிதுகூட அசைவில்லாமல் அப்படியே படுத்திருப்பது நரகத்திற்கு சமமானது. அவன் உடல் மரத்துப் போனது. அவனுக்கு வேறு வழியில்லை. இங்கிருந்து தப்பிச் செல்ல அவனுக்கு இருக்கும் ஒரே சந்தர்ப்பம் இது தான். அவன் அங்கு அனுபவித்துக் கொண்டிருந்த அவஸ்த்தைகள் அவனை அரக்கனாக மாற்றியது.
மறுநாள் காலை
தூக்கத்திலிருந்து கண் விழித்தாள் அபிநயா. அவளால் சிறிது கூட அசைய முடியவில்லை. அப்பொழுது தான் அஸ்வினின் பிடிக்குள் தான் இருப்பதை பார்த்தாள். அவளுடைய கால்கள் அஸ்வினின் கால்களுடன் பின்னப்பட்டு இருந்தன. அவன் அவளை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தான். அவனை தள்ளி விட முயற்சிதாள் அபிநயா. தன் தூக்கத்திற்கு இடைஞ்சல் ஏற்பட்டதால், தன் கண்களை மெல்ல தூக்க கலக்கத்துடன் திறந்தான் அஸ்வின்.
"விடுங்க... என்னை விடுங்க..."
அஸ்வின் அவளை தன் பிடியிலிருந்து விடுவித்தான்.
"இது தான் நீங்க நடந்துக்கிற லட்சணமா? நான் உங்கள ஜென்டில்மேன்னு நினைச்சேன். ஆனா, நீங்க என்னுடைய எண்ணத்தை பொய்யாக்கிட்டீங்க" என்று படபடவென பொறிந்தாள்.
"நீ கராத்தே கத்துக்கிட்டியா?" என்றான், அவள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், கண்ணை கசக்கியபடி.
"என்னது...??? பேச்சை மாத்தாதீங்க..."
"எனக்கு மட்டும் தான் தெரியும், நான் உன்கிட்டயிருந்து எத்தனை உதை வாங்கினேன்னு... எவ்வளவு பவர்ஃபுல் கிக்ஸ் உன்னுடையது... என்னை அந்த கிக்ஸ்ல இருந்து காப்பாத்திக்க தான் நான் உன்னை கெட்டியா பிடிச்சுக்க வேண்டியதா போச்சு..."
அவன் பொய் கூறவில்லை என்று அபிநயாவுக்கு தெரியும். அவள் தோழி ப்ரீத்தி, அதைப் பற்றி அவளிடம் பலமுறை கூறியிருக்கிறாள்.
அதனால் தான் அபிநயா எப்பொழுதும் தனியாக உறங்குவதையே விரும்புவாள்.
"இன்னிக்கு ராத்திரி நான் கீழே படுத்துக்கிறேன்" என்றாள்.
"ஆனா, என்னோட வைஃபை, எலிக்கு டின்னரா ஸர்வ் பண்ண நான் தயாரா இல்ல..."
அபிநயா பதட்டமாக தன் நகத்தை கடித்தாள்.
"அப்ப நான் என்ன செய்யுறது?" என்றாள்.
"நேத்து ராத்திரியே, என்னோட கராத்தே சாம்பியன் ஓய்ஃப்கிட்டயிருந்து என்னை காப்பாத்திகுறதுல நான் எக்ஸ்பர்ட் ஆயிட்டேன். சோ, கூல்..."
எதையோ யோசித்தவன்...
"அதே நேரம் இவ்வளவு அருமையான சந்தர்ப்பத்தை நான் எப்படி விடுறது?" என்று கிடைத்த சந்தர்ப்பத்தில் அவளை காலை வாரினான்.
அவன் கூறியதைக் கேட்டு அவள் வாயைத் பிளந்தாள்.
"நீ என்னை பத்தி என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சு, நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்." என்றான்.
"நான் உங்களை பத்தி எதுவும் நினைக்கல" என்றாள்.
"நீ சரியான புளுகு மூட்டை. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே, நீ என்னை ஜென்டில்மேன்னு சொன்ன...?"
அவள் தன் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள். அவள் கோபத்தில் கூறியதை இவன் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விட்டானே...!
"நான் ஜென்டில்மேன் தான்...! சரியான நேரம் வரும் போது, நான் எவ்வளவு ஜென்டில்னு நீயே தெரிஞ்சுக்குவ" என்றான் இரட்டை அர்த்தத்தில்.
அவன் பொடிவைத்து பேசியதை புரிந்துகொண்டு மென்று விழுங்கினாள் அபிநயா. அவள் முகம் போன போக்கைப் பார்த்து, சிரித்துக்கொண்டே குளியலறையை நோக்கி நகர்ந்தான் அஸ்வின்.
"நல்லா கவனிச்சுக்கோ அபி, இந்த ஆளு அவருடைய லிமிட்டை கிராஸ் பண்றாரு...( சற்றே நிறுத்தியவள் ) லிமிட்டை க்ராஸ் பண்றாரா? உன் மனசாட்சியை தொட்டு சொல்லு... நேத்து ராத்திரி உனக்கு எவ்வளவு நெருக்கமா படுத்திருந்த போதும், அவர் எவ்வளவு ஜெண்டிலா நடந்துகிட்டார்! ஒருவேளை, அவர் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறதால கூட அவர் எல்லை மீறாம இருந்திருக்கலாம்! உண்மையிலேயே அஸ்வின் ஒரு ஜென்டில்மேன் தான். எதுக்காக நீ காத்திருக்க? ஏதாவது செய். எப்படியாவது அவர் காதலிக்கிற பொண்ண கண்டுபிடி "
என்று எண்ணியபடி, அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.
குளியல் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு, அப்படியே நின்றாள் அபிநயா. அஸ்வின் குளியலறையிலிருந்து தலையை துவட்டியபடி வெளியே வந்தான்.
"நாம எப்போ உங்க வீட்டுக்கு போக போறோம்?" என அவள் கேட்க, ஒரு நொடி வாயடைத்துப் போனான் அஸ்வின்.
அங்கு செல்ல வேண்டும் என்று அபிநயாவா கேட்பது? அவளுக்கு திடீரென என்ன ஆனது?
"ஏன், உங்க வீடு அவ்வளவு சீக்கிரம் உனக்கு போரடிச்சுப் போச்சா?" அவன் கிண்டலாக கேட்க,
அதே கிண்டலுடன்,
"ஆமாம்" என்றாள்.
"இல்ல... ஒருவேளை என் கூட ஒரே கட்டில்ல தூங்க பயமா இருக்கா...?"
அவனுக்கு பதில் கூறாமல், அங்கிருந்து விரைந்து சென்றாள். ஏனென்றால் அவன் கூறியது உண்மை தான்.
மாலை
அபிநயா தயார் செய்திருந்த இஞ்சி தேநீரை சுவைத்து குடித்து கொண்டிருந்தான் அஸ்வின். திடீரென்று மிக அதிக சத்தத்துடன் ஒரு பாடல் ஒலிக்க, அதிர்ந்தான் அவன்.
"என்னமா அது?" என்றாள் அபிநயா.
"கமலாவோட குழந்தைக்கு இது முதல் பிறந்தநாள். அதை சிறப்பா கொண்டாடுறாங்களாம்... மியூசிக் பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்காங்களாம்..."
"அடக்கடவுளே... அப்போ இன்னைக்கு தூங்க முடியாது போல இருக்கே..." என்றார் மங்கை.
அஸ்வின், ராமநாதனை பற்றி கவலைப் பட்டான். காலுக்கு கீழே, தரை அதிர்ந்ததை உணர்ந்தான்.
கமலாவின் வீட்டிற்கு வெகு அருகில் அவர்கள் வீடு இருந்ததால், அவர்களால் அந்த அதிக சத்தத்தை பொறுக்க முடியவில்லை.
வெளியில் இருந்து வந்த *மைக் டெஸ்டிங்... மைக் டெஸ்டிங்* என்பதை கேட்டு அவன் வெளியே வந்தான். அந்த ஏரியா ஆட்கள் முழுவதும் அங்கு குழுமி இருந்தார்கள். இசை குழுவினர், முதல் பாடலைப் பாடத் தொடங்கினார்கள்.
அஸ்வின் அவர்களை நோக்கி சென்று, அங்கிருந்த ஒருவனிடம் ஏதோ கேட்டான். அவன் ஒருவரை நோக்கி கை நீட்ட, அஸ்வின் அவனிடம் சென்று அவன் காதில் ஏதோ கூறினான். வீட்டில் இருந்து அதை பார்த்த அபிநயா, ஏதும் புரியாமல் முகம் சுளித்தாள். அந்த மனிதனின் கையில், அஸ்வின் பணத்தை வைத்து அழுத்துவதை கவனித்தாள் அவள். அடுத்த நிமிடம் சப்தம் கணிசமாக குறைந்தது. அந்த மனிதனுடன் கைகுலுக்கிவிட்டு அங்கிருந்து நகர முற்பட்டான் அஸ்வின். ஏதோ யோசித்தவன், அந்த மனிதனை மறுபடி அழைத்து, மீண்டும் அவனிடம் பணத்தைக் கொடுத்து, அவன் காதில் ஏதோ கூறினான். அந்த மனிதன், அஸ்வினை நோக்கி அவன் கட்டை விரலை உயர்த்தி சிரித்தான்.
அபிநயாவின் அருகில் வந்து, அமைதியாய் அவள் பக்கத்தில் நின்று கொண்டான் அஸ்வின். முதல் பாடல் முடிந்தவுடன், கைதட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள் அபிநயா.
அஸ்வினிடம் பேசிய அந்த மனிதன், ஒலிபெருக்கியின் அருகே வந்தான்.
"இப்போது நாங்கள் பாடவிருக்கும் பாடல் அஸ்வின் சாருக்கு மிகவும் பிடித்த பாடலாகும். அவர் அதை தன் மனைவிக்கு டெடிகேட் செய்கிறார்" என்றான்.
திடுக்கிட்டு, அவனை நோக்கி தன் முகத்தை திருப்பினாள் அபிநயா. இதழோர புன்னகையை அவளை நோக்கி சிந்தினான் அஸ்வின். கிடைக்கிற எந்த சான்ஸையும் விட மாட்டார் போல இருக்கே என்று எண்ணினாள் அபிநயா.
"அவர் என்ன பாடலை தன் மனைவிக்கு டெடிகேட் செய்திருக்கிறார் என்று பாருங்கள்" என்று கூறி தன் குழுவினரிடம் ஆரம்பிக்க சொன்னான்.
அபிநயாவுக்கு ஆர்வம் தாங்கவில்லை, அந்தப் பாடல் என்ன என்பதை தெரிந்து கொள்ள.
"பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா" என பாடத் துவங்கிய உடன், அபிநயா தன்னிலை மறந்து நின்றாள்.
அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும், அவகளுடைய *அப்போதைய நிலையை* விவரிப்பது போல் இருந்தது. இந்த பாடலின் மூலம் அவளுக்கு என்ன சொல்ல நினைக்கிறான் அஸ்வின்? பதட்டத்தில் தன் கைகளை பிசைந்தாள் அபிநயா. அவள் அப்படி செய்வதை பார்த்து மென்மையாக அவள் கைகளைப் பற்றி அழுத்தினான்.
அந்த தொடுதல், அவளுக்கு ஒரு விதமான கதகதப்பை அளித்தது. அவன் தொடுதலிலிருந்து தன் கையை பின்னால் இழுத்துக் கொள்ளும் எண்ணமே இல்லாமல், அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். முற்றிலும் மாறுபட்ட ஒரு எண்ணம் அவள் இதயத்தை முத்தமிட்டது. இந்த தொடுதல் அவளுக்கே சொந்தமாகி விடக்கூடாதா... இப்படிப்பட்ட ஒரு பாடலை, தனக்காக அவன் அர்ப்பணம் செய்கிறான் என்றால், அவளை பற்றி அவன் மனதில் எப்படிப்பட்ட எண்ணம் இருக்க வேண்டும்...!
மக்களின் கைத்தட்டல் ஒலியைக் கேட்டு, அவள் தன் எண்ணத்திலிருந்து வெளியே வந்தாள். அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு தலைகுனிந்தாள். அவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது அஸ்வினுக்கு புரியவே இல்லை.
அவனிடத்திலிருந்து அவள் தள்ளியே இருந்தாலும், அவள் முன்பு போல் இல்லை என்பதே உண்மை. அதை அஸ்வினும் உணர்ந்தான். அப்படி இருக்கும் போது, அவள் மனதில் இருப்பதை ஏன் திரை போட்டு மறைத்து கொண்டிருக்கிறாள்? எது அவளை தடுக்கிறது? என்பது அவனுக்குப் புரியவில்லை.
அஸ்வினின் கணிப்பு உண்மை தான். தான் அவனை நோக்கி வலிமையாக இழுக்கபடுவதை உணர்ந்தாள் அபிநயா. அப்படி ஒரு உணர்வை அவள் இதற்கு முன் யாரிடத்திலும் உணர்ந்ததில்லை. அவன், அவளிடத்திலும், அவளின் குடும்பத்தாரிடமும் நடந்து கொள்ளும் விதம், அதற்கு மிக முக்கிய காரணம். மேலும், அவன் அவளிடம் பேசும் விதமும்... அவன் மிக அழகான முகத்தில்... மிக மிக அழகான அவனுடைய சிரிப்பும்...
பாவம் அந்த சின்ன பெண் இவ்வளவையும் எப்படித் தான் சமாளிக்கிறாளோ...
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top