30 மூவர் படை

30 மூவர் படை

ராமநாதன் மருத்துவமனையில் இருந்து அழைத்து வரப்பட்டார். அஸ்வின் அவர்களை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். காரை நிறுத்திவிட்டு, ராமநாதனை சக்கர நாற்காலியில் அமர வைக்க, அவர்களுக்கு உதவினான். பூட்டை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த அபிநயா, ராமநாதனுடைய பழைய கட்டில் பிரிக்கப்பட்டு சுவரில் சாய்த்து வைக்கபட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியுடன் நின்றாள்.

அதை என்ன செய்வது, எங்கு வைப்பது என்று புரியாமல் அஸ்வின் அங்கேயே வைத்திருந்தான். ஒருவேளை, அவர்களுக்கு அந்த கட்டிலின் மேல் ஏதாவது சென்டிமென்ட் இருக்கலாம். அதனால் அவன் அதை அப்புறப்படுத்த நினைக்கவில்லை.

"நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க? எதுக்காக அப்பாவோட கட்டிலை பிரிச்சிங்க? இப்போ அப்பா எங்க படுப்பார்?" என்று கேள்விகளை அடுக்கினாள் அபிநயா.

பத்மாவும், மங்கையும் கூட குழப்பமடைந்தார்கள். தன்னை சுதாகரித்துக்கொண்டு, சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு, ராமநாதனின் அறைக்குள் நுழைந்தார் பத்மா. அங்கு, விலை உயர்ந்த புது கட்டில், மெத்தை, மற்றும் குளிர்சாதன இயந்திரத்தை பார்த்து திடுக்கிட்டு நின்றார். பத்மாவை பின்தொடர்ந்து வந்த அபிநயாவும் வாயடைத்துப் போனாள்.

"பழைய கட்டில் ரொம்ப ஆடுச்சி. அது அப்பாவுக்கு கம்ஃபர்டபிளா இருக்காது. அதனால் தான் அதை மாத்திட்டேன்"

"இதெல்லாம் விலை ரொம்ப அதிகமா இருக்கும் போல இருக்கே?" என்றார் பத்மா தயங்கியபடி.

"ஆமாம் தம்பி, இவ்வளவு பணம் செலவழிக்க என்ன அவசியம் இருக்கு? நம்ம பழசையே ரிப்பேர் பண்ணியிருக்கலாமே..." என்றார் மங்கை.

"சரியான காரணத்துக்காக கூட பயன்படலன்னா, அப்புறம் அந்த பணம் இருந்து என்ன பிரயோஜனம்? அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. அவரு நல்ல சுகாதாரமான, காற்றோட்டமான இடத்துல இருக்கணும். அப்ப தான் அவர் உடம்பு சீக்கிரம் தேரி வரும்... எல்லாத்துக்கும் மேல, இது வெறும் பணம் தானே..." என்றான் புன்னகையுடன்.

"அவர் இதுவரைக்கும் ஏசியில இருந்ததே இல்ல. இதெல்லாம் அவருக்கு ரொம்ப புதுசு" என்றார் பத்மா தயங்கியபடி.

"அவர் பழக்கப்படுத்திக்கட்டும். இது ஒரு-டன் ஏசி தான். நீங்க உங்க தேவைக்கு ஏத்த மாதிரி கூலிங்கை குறைச்சுக்கலாம்"

ஏசி ரிமோட்டை எடுத்து, அதை எப்படி பயன்படுத்துவது என்று அவர்களுக்கு விளக்கிக் கூறினான்.

"நீங்க என்கிட்ட எதையும் கேட்க தயங்க வேண்டாம். என்னை உங்கள்ல ஒருத்தனா ஏத்துக்கிட்டதா நினைச்சு நான் சந்தோஷப்படுவேன்"

அங்கிருந்த மற்ற மூன்று பெண்மணிகளின் நிலைமையும் எப்படி இருந்தது என்று நம்மால் விளக்கி கூற இயலவில்லை. எந்த துணையும் இல்லாமல் விடப்பட்டிருந்த பெண்களுக்கு அஸ்வினின் வார்த்தைகள் இதமாக இருந்தது. சரி என்று மகிழ்ச்சியுடன் தலை அசைத்தார்கள். ராமநாதனை கட்டிலில் படுக்க வைக்க பத்மாவிற்கு உதவினான் அஸ்வின்.

தன் கண்களை அஸ்வின் மீதிருந்து அகற்ற முடியாமல் நின்றாள் அபிநயா. அவளுடைய உறுதியான புத்தியை, அவளது இளகிய இதயம், அடக்கி ஆண்டது. இப்படிப்பட்ட கணவன் கிடைத்தால், எப்படி அவள் இதயத்தை அவளால் கட்டுக்குள் வைக்க முடியும்?

அஸ்வின் அங்கிருந்து புன்னகையுடன் நகர்ந்தான், அவர்கள் முகங்களில் புன்னகையை தவழ விட்டு.

"அபி ரொம்ப கொடுத்து வச்சவ. அதனால தான் அவளுக்கு இப்படி ஒரு நல்ல புருஷன் கிடைச்சிருக்கார்" என்று பெருமிதத்துடன் கூறினார் பத்மா.

"கொஞ்சம் கூட சந்தேகமே இல்ல. நான் கூட ஆரம்பத்தில் அவரை ரொம்ப தப்பா நினைச்சிட்டேன். கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்... நான் நினைச்ச மாதிரி அவர் இல்ல" என்று தன் பங்கிற்கு கூறினார் மங்கை.

அபிநயாவுக்கோ தலை வெடித்துவிடும் போலிருந்தது. அவனை தவிர்க்கும் அளவிற்கு அவனிடம் எந்த குறையுமே தென்படவில்லை.

"ஏன் இவர் இவ்வளவு நல்லவரா இருக்காரு? எனக்கு அவர ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா, அவர் என்னுடையவர் இல்ல. கடவுளே, என்னை ஏன் அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க? கல்யாணம் பண்ணி வச்சு, அவர் வாழ்க்கைல நடந்த கவலையான விஷயங்களை எனக்கு ஏன் தெரிய வச்சீங்க? இது கொஞ்சம் கூட நியாயம் இல்ல. இப்ப நான் என்ன செய்யறது? எப்படியாவது அஸ்வின் காதலிக்கிற அந்த பொண்ணை என் முன்னாடி கூட்டிக்கிட்டு வந்து நிறுத்துங்க. இல்லன்னா, நான் அவரை காதலிச்சுடுவேன் போல தெரியுது." என்று கடவுளிடம் வாதாடினாள்.

அவள் நகத்தை பதட்டத்துடன் கடித்தாள்.

"அஸ்வினை காதலிக்கிறதாவது... என்னடி அபி இப்படி சொல்ற? உன்னோட பைத்தியக்கார இதயத்துக்கு புரிய வை... அஸ்வின் வேற ஒருத்தருக்கு சொந்தமானவன்" என்று தனக்குத் தெரிந்ததை தன்னிடமே கூறிக் கொண்டாள் அபிநயா.

அஸ்வின் தனக்கு வந்த ஈமெயில்களை பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த அபிநயா, தயக்கத்துடன் நின்றாள். தலையை உயர்த்தி அவளைப் பார்த்த அஸ்வின்,

"ஏதாவது சொல்லணுமா?" என்றான்.

"ம்ம்ம்" என்றாள் தலைகுனிந்தபடி.

"சொல்லு..."

"தேங்க்ஸ்..."

"எனக்கு உன்னோட தேங்க்ஸ் வேண்டாம்"

பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவனை பார்த்தாள், அபிநயா.

"அதுக்கு பதிலா நீ வேற ஏதாவது எனக்கு கொடுக்கலாம்"

"உங்களுக்கு என்ன வேணும்?"

"நிச்சயமா அதை நீ எனக்கு கொடுக்க மாட்ட"

"என்னன்னு சொல்லுங்க"

அவள் அருகில் வந்து, தன் கன்னத்தை காட்டினான். அதை பார்த்து விழி விரிந்தாள் அபிநயா. அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு படபடப்புடன் நின்றாள்.

"நான் தான் சொன்னேனே, நீ கொடுக்க மாட்டேன்னு..." என்று கூறிவிட்டு, அவள் எதிர்பாராத வண்ணம், அவள் கன்னத்தில் இதழ் பதித்தான் அஸ்வின், அவளை பேச்சை இழக்க செய்து.

"வச்சுக்கோ" என்றான்.

சிரித்தபடி தன் மடிக்கணினியை நோக்கி அவன் செல்ல, தன் கன்னத்தை தொட்டுக்கொண்டு மூச்சை பிடித்தபடி நின்றிருந்தாள் அபிநயா. அவள் இதழ் மெல்ல விரிந்தது. கதவை யாரோ தட்டுவது கேட்டு அவள் பூமிக்கு வந்தாள். அது பத்மா.

"அஸ்வின் தம்பி, நீங்க என்ன சாப்பிடுறீங்க?"

"எதுவாயிருந்தாலும் லைட்டா தான் சாப்பிடுவேன்"

"சரிங்க தம்பி" என்று கூறி விட்டு சமையல் அறையை நோக்கி சென்றார் பத்மா.

அஸ்வினிடம் இருந்து தப்பிக்க, அவரை பின்தொடர்ந்து சென்றாள் அபிநயா.

இரவு

இரவு உணவிற்குப்பின், ராமநாதனின் அறைக்கு சென்றாள் அபிநயா. அதை அஸ்வின் எதிர்பார்த்தான். அவன் அபிநயாவின் அறைக்கு வந்து, ஏசியை ஆன் செய்தான்.

உறங்கிக் கொண்டிருந்த ராமநாதனின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் அபிநயா.

"அபி, நீ உன் ரூமுக்கு போ." என்றார் பத்மா.

"கொஞ்ச நேரம் கழிச்சி போறேன் மா"

"ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு. உன் வீட்டுக்காரர் உனக்காக காத்திருப்பார்... போ..."

"நான் எப்பவுமே அவர் கூட தானேமா இருக்கேன்...? உங்க கூட தான் கொஞ்ச நேரம் இருக்கேனே..."

"காலையில இருந்து இப்போ வரைக்கும் நீ எங்க கூட தான் இருக்க... இதுக்கு மேல உன்னை இங்க இருக்க விட முடியாது. முதல்ல நீ கிளம்பு"

முகத்தை சுளித்தபடி அங்கிருந்து கிளம்பினாள் அபிநயா. அவள் அறைக்கு வந்தவளுக்கு ஏதோ உரைக்க, கதவின் அருகே அப்படியே நின்றாள்.

இன்று அவள் எங்கு உறங்க போகிறாள்? அஸ்வின் இல்லத்தில், அவன் எப்பொழுதுமே சோபாவில் தானே உறங்குவான்...! அவள் அறையில் தான் சோபா இல்லையே... அப்படி என்றால் அவன் எங்கு உறங்குவான்?

மெல்ல அறையினுள் எட்டிப்பார்த்தாள். அஸ்வின் யாருடனோ கைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசிக்கொண்டிருந்தது மனோஜ் போல் தெரிகிறது. ஏனென்றால், ஆஃபீஸ்... காண்ட்ராக்ட்... பில்டர்ஸ்... போன்ற வார்த்தைகள் தான் அஸ்வின் வாயிலிருந்து வந்து விழுந்தன.

தான் சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு, அலமாரியை நோக்கி சென்றாள். அவளுடைய இரவு உடையை எடுத்துக் கொண்டு, குளியலறை நோக்கி சென்றாள். அழைப்பை பேசி முடித்த அஸ்வின், அவள் உடை மாற்றிக் கொண்டு வருவதைப் பார்த்து கட்டிலின் நுனியில் அமர்ந்தான்.

"நீங்க கட்டில்ல படுத்துக்குங்க. நான் கீழே படுத்துக்கிறேன்" என்றாள்.

"சரி. ஆனா, உன்னை நல்லா கவர் பண்ணிக்கோ. நான், நிறைய எலிங்க இங்கேயும் அங்கேயும் சகஜமாக ஓடுறதை பார்த்தேன். உன்னைக் கடிச்சு வைக்க போது..." என்றான் சீரியஸாக.

நடுக்கத்துடன் நகத்தை கடித்தாள் அபிநயா. அஸ்வின் சொல்வது உண்மை தான். அவளுக்கு தெரியும், அங்கே நிறைய எலிகள் இருக்கிறது என்று. ஆனால் அவளுக்கு தெரியாது அஸ்வின் பெஸ்டிசைட் செய்துவிட்டான் என்று.

"உனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னா, நம்ம கட்டிலை ஷேர் பண்ணிக்கலாம்." என்றான் அஸ்வின்.

ஒரு நொடி கூட யோசிக்காமல் உடனே தலையசைத்தாள். எலிகளை விட அஸ்வின் எவ்வளவோ பரவாயில்லை தானே...!

இடது ஓரத்தில் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள் அபிநயா. ஆனால், அவளை சக்திவாய்ந்த பார்வை விழுங்கிக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். தாறுமாறாய் துடிக்கும் தன் இதயத்தை கட்டுப்படுத்த அஸ்வினுக்கு எதிர்திசையில் திரும்பி படுத்துகொண்டாள். கடந்த நாட்களில் அவள் சரியாக உறங்காததால், சிறிது நேரத்திலேயே அயர்ந்து தூங்கி போனாள்.

தன் தொடையின் மீது ஏதோ அழுத்தியது போல் உணர்ந்ததால் கண்விழித்தான் அஸ்வின். அபிநயாவின் கால் தன் மீது இருப்பதை பார்த்தான். அவன் தொண்டையிலிருந்து களுக்கென்று சிரிப்பு வெளி வந்தது. இரவு முழுவதும், இப்படியும், அப்படியும், புரண்டு கொண்டிருந்தாள் அபிநயா. அஸ்வின் தனது வயிற்றில் வலிமையான இரண்டு மூன்று உதைகளை வாங்கினான். அவன் மனத்தில் ஒரு சந்தேகம் உதித்தது. உண்மையிலேயே அவள் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறாளா, இல்லை வேண்டுமென்றே எட்டி உதைக்கிறாளா, என்பது தான் அது. ஆனால், அவள் உண்மையிலேயே உறங்கிக் கொண்டு தான் இருந்தாள். அவளைத் தன் பிடிக்குள் வைத்திருப்பதை தவிர அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. தன் கால்களால் அவள் கால்களை பூட்டிக் கொண்டு, அவளை கட்டி அணைத்துக்கொண்டான், அவள் உதைகளில் இருந்து தப்பிக்க. புன்னகைத்தபடி கண்களை மூடி கொண்டு உறங்க முற்பட்டான். நடுஇரவில் உறங்கிப் போனான்.

......

ஒரு கட்டை பென்ச்சில் படுக்க வைக்கபட்டிருந்தான் தருண். அவனை நன்றாக *கவனித்துக் கொண்டிருக்கும்* அந்த மனிதர்கள், அவனை சுற்றி நின்றிருந்தார்கள்.

அவர்களில் ஒருவன் தருணின் முகத்தில் தண்ணீர் தெளித்தான். ஆனால், தருணிடம் எந்த அசைவும் ஏற்படவில்லை.

"இப்போ, நம்ம என்ன செய்யறது?" என்றான் ஒருவன்.

"நான் சக்தியை கூப்பிட்டிருக்கேன். அவன் வந்துகிட்டு இருக்கான். அவன் வந்ததுக்கு அப்புறம், என்ன செய்யணும்னு சொல்லுவான்." என்றான் மற்றொருவன்.

தருண் மூச்சை பிடித்துக் கொண்டு படுத்திருந்தான். மணிக்கணக்காக அசையாமல் இருப்பது, அவ்வளவு சாதாரண விஷயமல்ல. தன்னை கடத்தியது யார் என்று தெரிந்துகொள்ள, அவன் அந்த கஷ்டத்தை ஏற்று அனுபவித்துக் கொண்டிருந்தான். தான் மயங்கி விட்டது போல, சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் நடித்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது சக்தி அங்கு வந்து சேர்ந்தான்.

"அவனுக்கு என்ன ஆச்சு?"

"அவன் மயங்கினதுல இருந்து, எந்த அசைவும் இல்ல"

"நம்ம இவன புதைச்சிடலாம்னு நினைக்கிறேன்... எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும்" என்று ஒருவன் கூற, உள்ளூர நடுங்கினான் தருண். அவன் இவ்வளவு நேரம் பட்ட பாடு அனைத்தும் வீணாக போகிறதே.

ஆனால், சக்தியின் பதில் அவனுக்கு நிம்மதியை அளித்தது.

"இல்ல... நம்ம அதை செய்யக் கூடாது"

"ஆனா ஏன்? நீ தானே சொன்னே, நம்ம இவனை முடிச்சிடணும்னு..."

"எனக்கு மூனு விதமான உத்தரவு இருக்கு..."

"மூனு விதமான உத்தரவா?"

"ஆமாம் மூணு பேர்கிட்ட இருந்து..."

தருணுக்கு அதிர்ச்சியானது. மூன்று பேரா? அவர்கள் யார்? அவனை அடக்க யாருமே இல்லை என்று நினைத்திருந்தான் தருண். ஆனால் அவனுக்கே தெரியாமல், அவனைப் பழிவாங்க நிறைய பேர் காத்திருந்தது அவனுக்கு தெரியாமல் போனது.

"நீ என்ன சொல்ற?" என்றான் ஒருவன்.

"ஆமாம். ஆனா, அவங்க யாருக்கும் தெரியாது, இன்னும் இரண்டு பேர் இதுல இன்வால்வ் ஆகியிருக்காங்கன்னு. ஒவ்வொருத்தரும், தனித்தனியா, அவங்க தான் இதை செய்யறதா நினைச்சுகிட்டு இருக்காங்க."

"அவங்களுக்கு, ஒருத்தரை ஒருத்தர் தெரியுமா?" என்றான் மற்றொருவன்.

"ரொம்ப நல்லா தெரியும். அவங்க எப்பவுமே ஒன்னா தான் இருப்பாங்க."

தருண் தனது மூளையைக் கசக்கினான். தனது நண்பர் வட்டாரத்தில் இருந்த அனைத்து *மூன்று நபர் கொண்ட குழுக்களை* எண்ணிப் பார்த்தான்.

"போன தடவை இவனை கட்டத்தினப்போ, நீ இதை பத்தி எதுவுமே சொல்லலயே?" என்றான் ஒருவன்.

"போன தடவை அவனை கடத்தினது ஒரே ஒருத்தர் தான். இந்த தடவை தான் ரெண்டு பேர் கூட சேர்ந்து இருக்காங்க, முதலாமவருக்கு தெரியாம."

"அவங்களுடைய ஆடர் என்ன?"

"முதலாமவருடைய ஆடர், போன தடவை இவனை அடிச்சதை விட, இந்த தடவை ரொம்ப பலமா அடிக்க சொல்லி சொன்னாரு. இரண்டாமவர், இவன் இந்த இடத்தை விட்டு வெளியே வர கூடாதுன்னு சொல்லியிருக்கிறார். மூன்றாம் நபர், இவன் உயிரோட இருக்க கூடாதுன்னு சொல்லி இருக்காரு"

தருண் ஓரளவு யூகித்தான். இந்த மூன்று பேரில் ஒருவன் தான் சென்ற முறை அவனை கடத்தி இருக்க வேண்டும்.

"நீ அந்த மத்த ரெண்டு பேர பத்தி அவங்க யார்கிட்டயும் சொல்லலயா?"

"இல்ல. அவங்க மூணு பேருமே இந்த விஷயம் ரகசியமா இருக்கணும்னு சொல்லி இருக்காங்க"

"அந்த மத்த ரெண்டு பேரும் யாரு?" என்று ஒருவன் கேட்க, சக்தி அவர்களுடைய பெயர்களை கூறினான்.

அதைக் கேட்டு அதிர்ச்சியானான் தருண். அவர்கள் முன், தன் ஆத்திரத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். அவனுடைய ரத்தம் கொதித்தது. சக்தி கூறிய பெயர்கள், அருண் மற்றும் மனோஜ்.

தொடரும்...

















Bạn đang đọc truyện trên: AzTruyen.Top