3 யார் அவள்?

3 யார் அவள்?

அஸ்வினின் மாறாத புன்னகையை பார்த்து மனோஜும், அருணும் அதிசயித்துப் போனார்கள். அன்று அபிநயாவை பார்த்துவிட்டு வந்த பிறகு, அஸ்வினால் புன்னகைகாமல் இருக்க முடியவில்லை. அவளால் பொருத்தப்பட்ட, பேட்ஜை பார்த்தபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

அருணால் எதையும் நிச்சயமாக யூகிக்க முடியவில்லை.

ஆனால் மனோஜோ, அவனுடைய மனோநிலையை நிச்சயப்படுத்திக் கொள்ள நினைத்தான். அந்தப் பெண்ணை அவனுக்கு பிடித்துவிட்டதா என்ன? ஆனால் எப்படி? அவன் அந்த பெண்ணை இரண்டு முறை தானே பார்த்திருக்கிறான்...? அதுவும் சொற்ப வினாடிகளே...! ஆனால் அந்த சொற்ப வினாடிகள் முழுவதும், அவனுடைய பார்வை, அந்த பெண்ணின் மீது தான் வேர்விட்டு பதிந்திருந்தது. அது, அவன் எந்தப் பெண்ணையும் பார்த்து, இதுவரை செய்திராத ஒன்று. அது மட்டும் அல்லாமல், அந்த பெண்ணிடம் பணம் கொடுத்த பொழுது, அவன் புன்னகை புரிந்தான்... இன்னும் அந்த பெண் பொருத்திய பேட்ஜை அணிந்திருக்கிறான்... அந்த பெண்ணுக்கு நன்கொடை அளித்தது வேண்டுமானால், அஸ்வினை பொருத்தவரை சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால், அந்த பெண்ணின் அடையாள அட்டையில் இருந்து, அவளுடைய பெயரை தெரிந்துகொள்ள துடித்தது அஸ்வின் செய்யும் காரியம் அல்ல. அது, அஸ்வினை தெரிந்த அனைவருக்கும் தெரியும்.

அருண், மனோஜை தரதரவென தனது அறைக்கு இழுத்து வந்தான். அந்த நேரம், அவர்களுக்கு மதிய உணவை அளிக்க வந்த தருண், அந்த காட்சியைக் கண்டான். அவர்கள் இருவருக்குள்ளும், ஏதோ நடக்கிறது என்பதை அவன் உணர்ந்து கொண்டான். அவனுக்கு ஆவல் மிகுந்தது. தருணை பொருத்தவரை, இந்த உலகிலேயே மிகவும் ஆபத்தான இருவர் என்றால், அது மனோஜும், அருணும் தான். அஸ்வினுடைய வல, இட கரங்கள். அஸ்வினுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள். அவன் மெல்ல அருணின் அறையின் அருகே வந்து, அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கலானான்.

"என்னடா விஷயம்?" என்றான் மனோஜ்.

"அதையே தான் நானும் கேக்குறேன்... என்ன விஷயம்?"என்று பதில் கேள்வி கேட்டான் அருண்.

"நீ எதைப் பத்தி கேக்குறே?"

"ஆவின்கிட்ட தெரியுற வித்தியாசத்துக்கு என்ன காரணம்?"

"உனக்கும் அவன்கிட்ட வித்தியாசம் தெரியுதா?" என்றான் ஆவலாக மனோஜ்.

"என்னைக்கும் இல்லாத திருநாளா, இன்னைக்கு அவன் சிரிச்சிகிட்டே இருக்கானே... அப்புறம் ஏன், எனக்கு வித்தியாசம் தெரியாது?"

"கெஸ் பண்ணு பார்க்கலாம்..."

"உனக்கு என்ன காரணம்னு தெரியுமா?" என்றான் ஆவலாக அருண்.

"நிச்சயமா சொல்ல முடியாது. ஆனா..."

"பரவாயில்ல சொல்லு."

"அந்த பொண்ண ஞாபகம் இருக்கா?"

அருணின் விழிகள் விரிந்தன.

"நாய்க்குட்டி பெண்ணா?" என்றான் சட்டென்று, சிறிதும் யோசிக்காமல்.

"வாவ் கலக்குற டா நீ..."

"அந்த பொண்ண அவன் மறுபடி பார்த்தானா?"

"இன்னைக்கு காலையில..."

"அடடா, நான் மிஸ் பண்ணிட்டேனே..." வருத்தப்பட்டான் அருண்.

"அவன் முகத்த பாத்திருக்கணுமே.... எப்படி தெரியுமா, வச்ச கண்ணு வாங்காம அந்த பெண்ணையே அவன் பாத்துகிட்டு இருந்தான்...?"

"நான் தான் அன்னைக்கே பார்த்தேனே. அதனால தான் என்னால சரியா கெஸ் பண்ண முடிஞ்சது. அவன் அந்த பொண்ணை விரும்புறான்னு நீ நினைக்கிறாயா?"

"99%..."

"அதுவும் சரி தான். அவனை யாராலயும் 100% கெஸ் பண்ணிட முடியாது."

"ஆனா நமக்கு, அந்த 99% போதாதா?"

"நிச்சயமா போதும்... அவன் அந்த பெண்ணை பார்க்கும் போதெல்லாம் சிரிக்கிறான்னா, நிச்சயமா அந்த பொண்ணு, அவன் மனசுல, ஏதோ ஒரு இடத்துல இருக்கான்னு தான் அர்த்தம்."

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தருணின் ஆச்சரியம் எல்லையை கடந்தது.

"அஸ்வின் காதலிக்கிறானா? யார் அந்த பொண்ணு? அந்த சிடு மூஞ்சியையே சிரிக்க வச்சிட்டான்னா, அவ நிச்சயம், ஸ்பெஷலானவளா தான் இருக்கணும்." என்று மனதில் நினைத்துக் கொண்டான் தருண்.

அந்த நேரம் தனது கேபினில் இருந்து வெளியே வந்த அஸ்வின், தருண், அருணின் கேபினுக்கு வெளியில் நின்று, ஒட்டு கேட்டுக் கொண்டிருப்பதை பார்த்தான். அவன் விருவிருவென அவனை நெருங்க, அவனைப் பார்த்த தருண் உஷார் ஆனான்.

"நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்று முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இன்றி கேட்டான் அஸ்வின்.

"லன்ச் கொண்டு வந்தேன்" என்றான், தன் கையில் இருந்த பையை காட்டி.

அவர்கள் குரலைக் கேட்டு, அருணும், மனோஜும், வெளியே வந்தார்கள்.

"லன்சா? என்ன இது புது பழக்கம்?" என்றான் அஸ்வின் தன் புருவத்தை சுருக்கி, சந்தேகத்தோடு.

அருணும் அதே சந்தேகத்தோடு தான், அவனைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

"பாட்டி, உனக்கு பிடிச்ச சாப்பாடு சமைச்சாங்க. உனக்கு கொடுக்கணும்னு தோணுச்சு அதான் வந்தேன்."

அஸ்வின், அருணை பார்க்க, அவன் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டான் அருண்.

"நீ கிளம்பு. எங்களுக்கு நிறைய வேலையிருக்கு" என்றான் அருண்.

"ஓகே. நீங்க உங்க வேலைய கவனிங்க" என்று பல்லை இளித்தான் தருண்.

தருண் அலுவலகத்தை விட்டு வெளியேறினான், அஸ்வினை, புன்னகைக்க வைத்த அந்த பெண்ணை பற்றி சிந்தித்துக் கொண்டு.

தருண், மதிய உணவைக் கொண்டு வந்ததை பற்றி தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தான் மனோஜ். ஆனால், அருணுக்கு எந்தவித குழப்பமும் இல்லை. அவனுக்கு தெரியும், ஸ்வேதா விஷயத்தை பூசி மொழுக, மிக சாதாரணமாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக, அவன் இங்கு வந்திருக்கிறான். தருணை பற்றி, அருணை விட யாருக்கு நன்றாக தெரிந்து விட முடியும்?

அஸ்வின் தனது கேபினுக்கு செல்லும் வரை, மனோஜும், அருணும் காத்திருந்தார்கள். மறுபடி அவர்கள் அருணின் கேபினுக்குள் நுழைந்தார்கள்... இந்த முறை, கதவை சாத்தி தாளிட்டு விட்டு, அவர்களின் பேச்சை தொடர்ந்தார்கள்.

"ஆவினுடய மனசுல என்ன இருக்குன்னு நம்ம கண்டுபிடிச்சாகணும்..."

"யாரு? உங்க அண்ணனா? அவனாவது வாயைத் திறக்குறதாவது... பல் இருக்கிற கோழியை கூட நீ கண்டு பிடிச்சுடலாம்... ஆனா, உங்க அண்ணன் மனசுல என்ன இருக்குன்னு மட்டும் கண்டுபிடிக்கவே முடியாது..." என்று அலுத்துக் கொண்டான் மனோஜ்.

"நம்மகிட்ட அவன் மனசை காட்டமாட்டான் தான்... ஆனா, அந்த பொண்ணு அபிநயாகிட்ட காட்டுவான் இல்ல?"

"தலையை சுத்தி மூக்கை தொடாம நேரா விஷயத்துக்கு வா..."

"நீ தான சொன்ன, அந்த பொண்ண பார்த்தவுடனே, அவன் தன்னையே மறந்துடுறான்னு...?"

"ஆனா அந்த பொண்ண நீ எப்படி கூட்டிட்டு வருவ?"

"என்னால கூட்டிகிட்டு வர முடியாது தான். ஆனா ஆவினை நம்ப வைக்க முடியும்..."

"என்னடா சொல்ற?"

"என்கிட்ட ஒரு பிளான் இருக்கு..."

"என்ன பிளான்?"

அருண் தனது திட்டத்தை கூறினான். அதைக் கேட்டு, மனோஜ் வாய் விட்டு சிரித்தான்.

"சூப்பர். இது நிச்சயமா வேலை செய்யும்னு நினைக்கிறேன்" என்றான் மனோஜ்.

"ஆமாம், இது நிச்சயமா வேலை செய்யும்"

"கமான், டூ இட்..."

"முதல்ல, நான் அந்த *ஆப்பை* டவுன்லோட் பண்ணிக்கிறேன்..."

அருண் தனது மொபைலில், *வாய்ஸ் சேஞ்சர் ஆப்பை* டவுன்லோட் செய்து கொண்டான்.

வாய்ஸ் சேஞ்சர் ஆப்பின் மூலம் *பெண்ணின் குரலை* தேர்வு செய்து கொண்டு, அஸ்வினின் கேபினின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.

அவர்கள் இருவரும் அஸ்வினுடைய அறையின் கண்ணாடி சுவரின் மூலமாக, அவனுடைய பாவனைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். தனது கையில் இருந்த, பைலை சரி பார்த்துக்கொண்டே, தொலைபேசியின் ரிசீவரை எடுத்தான் அஸ்வின்.

"ஹலோ"

"ஹாய்... நான் அபிநயா பேசுறேன்..."

அதைக் கேட்ட அஸ்வின் விக்கித்துப் போனான். பதிலளிக்க மறந்து நின்றான்.

"ஹேய்... ஆர் யூ தேர்?"

"எ... எந்த... அபிநயா?"

மனோஜும் அருணும் ஹை-ஃபை தட்டி கொண்டார்கள்.

"நீங்க என்னை மறந்துட்டீங்களா?"

"நீங்க... ப்ளூகிராஸ் அபிநயா ராமநாதானா?"

அவர்களின் முகம் மலர்ந்தது.

"இல்ல இல்ல... நான் அபிநயா சங்கர்... ஃப்ரம் ரெட் கிராஸ்."

வெறுப்புடன் தன் கண்களை சுழற்றியபடி,

"ராங் நம்பர்" என்று அழைப்பை துண்டித்தான்.

தங்களுடைய திட்டம் பலித்து விட்டதை எண்ணி, மனோஜும், அருணும் ஆர்ப்பரித்தார்கள். அஸ்வின், தனது முகத்தை தன் கரங்களால் மூடிக்கொண்டு, அமர்ந்திருந்ததை பார்த்த பொழுது, அவர்களுடைய மகிழ்ச்சியான முகம் வாடிப்போனது.

"நம்ம எப்படியாவது அந்த பெண்ணை தேடி கண்டு பிடிச்சாகணும்" என்றான் அருண்.

"அதை நீ என்கிட்ட விடு. நான் பார்த்துக்குறேன்" என்றான் மனோஜ்.

"ஆனா, நம்ம அந்தப் பெண்ணை கண்டு பிடிக்கிற வரைக்கும், அதைப்பத்தி ஆவினுக்கு தெரியக் கூடாது..."

"சரி... எனக்கு நாலு நாள் டைம் கொடு. நான் அந்த பொண்ணப்பத்தி அத்தனை விஷயத்தையும் கொண்டு வரேன்"

"நாலு நாளா? எதுக்கு? உன்னோட டிடெக்டிவ் ஏஜன்ட் ரோஷன், அரை நாளில் கண்டுபிடிச்சுடுவான்னு நெனச்சேன்"

"அவன் சென்னையில் இல்ல. ஹனி மூனுக்கு ஊட்டி போய் இருக்கான். அதனால தான், அவனை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன்"

"ஓ அப்படியா? ஆமாம், அவனை டிஸ்டர்ப் பண்ணி பாவத்தை தேடிக்காத. அவன் நம்மள சபிச்சிட போறான்." என்று அருண் கூற, இருவரும் சிரித்தார்கள்.

மறுநாள்

சுபத்ரா மிகவும் சோகமாக இருந்தார். ஒரு சைட்டைப் பார்வையிடும் வேலையை அஸ்வின், அருணுக்கு கொடுத்திருந்ததால், அருண், சீக்கிரமாகவே கிளம்பி சென்று விட்டான். தருணும், மற்றொரு காரில், வழக்கம் போல வெளியே சென்று விட்டான்.

அஸ்வின் தனது ஃபோனில், மெயிலை செக் செய்து கொண்டு, மாடிப்படி இறங்கி வந்தவன், சுபத்ரா சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து, முகத்தை சுருக்கினான்.

"என்ன ஆச்சு, பாட்டி? உங்களுக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லயே?"

"இன்னைக்கு உங்க தாத்தாவோட பிறந்தநாள். அதுக்காக கோவில்ல பூஜைக்காக பணம் கட்டியிருந்தேன். வழக்கமா அருண், உன் கூட தான் ஆஃபீசுக்கு வருவான். ஆனா இன்னைக்கு, அவன் ஒரு காரை எடுத்துக்கிட்டு சீக்கிரம் போய்ட்டான். இப்ப நான் எப்படி கோயிலுக்கு போறதுன்னு தெரியலை.

சிறிது நேரம் யோசித்தவன்,

"சரி, வாங்க, நான் உங்களை டிராப் பண்றேன். நான் ஆஃபிசுக்கு போயிட்டு, டிரைவர்கிட்ட காரை கொடுத்துவிடறேன். அவன் உங்களை கோவில்லயிருந்து பிக்அப் பண்ணிக்குவான். "

சுபத்ராவின் முகம் ஒளி பெற்றது.

"நீ சொல்றது நிஜமா? நான் ஒன்னும் கனவு காணலையே?"

"இன்னைக்கு தாத்தாவோட பிறந்தநாள் அப்படிங்கிறதால தான் நான் ஒத்துகிட்டேன்" என்றான் திடமாக.

"எப்படியோ நீ வர்றதே போதும்."
என்று கூறிவிட்டு, சமையலறையை பார்த்தபடி,

"ராமு, அந்த பேக்கை எடுத்துக்கிட்டு வந்து கார்ல வை" என்றார்.

ராமு அந்த பிரசாத பையை கொண்டு வந்து காரில் வைத்தான்.

அஸ்வின் காரை கிளப்பிக் கொண்டு சென்று, பாட்டியை கோவிலில் இறக்கி விட்டான்.

"நான் ஆஃபிசுக்கு போயிட்டு, டிரைவரை அனுப்பி வைக்கிறேன்" என்றான் அஸ்வின்.

"சரி" என்று கூறிவிட்டு, தான் கொண்டு வந்த பையை தூக்க முயன்றார் பாட்டி. ஆனால். அது அவரால் இயலவில்லை. அந்த பை மிகவும் கனமாக இருந்தது. அதை தூக்கிக் கொண்டு, அவர் சில படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும்.

"நீங்க போங்க. நான் கொண்டு வரேன்" என்றான் அஸ்வின்.
சரி என்று தலையசைத்துவிட்டு பாட்டி, காரை விட்டு கீழே இறங்கினார்.

அந்த நேரம், அஸ்வினுக்கு மனோஜிடம் இருந்து அழைப்பு வந்தது.

"எங்க மேன் இருக்க நீ?"

"கோவிலில்" என்றான் பெருமூச்சு விட்டபடி.

"எப்போதிலிருந்து சிங்கம், புல்லு தின்ன ஆரம்பிச்சது?" என்று கேட்டு விட்டு, இடி இடி என சிரித்தான் மனோஜ்.

"ஷட் அப். நான் பாட்டியை டிராப் பண்ண வந்தேன்."

"ஓகே. கம் ஃபாஸ்ட்."

"அப்படின்னா, கட் த டேம் கால்..."
என்று அழைப்பை துண்டிதுவிட்டு, பையுடன் படிகளில் ஏறத் தொடங்கினான், அஸ்வின். அந்தப் பை நிஜமாகவே மிகவும் கனமாக இருந்தது.

ஏறிக்கொண்டே மேல் படியை பார்த்தவனுக்கு, ஒரு நிமிடம் சுற்றியிருந்த அனைத்தும் நின்று போனது, படி இறங்கிக் கொண்டிருந்த அபிநயாவை பார்த்ததால்.

பின்னப்படாமல் விடப்பட்டிருந்த, பட்டுப்போன்ற, அவளது இடுப்பளவு கூந்தல், காற்றில் அலையென மிதந்தது.

அஸ்வின் தன்னை சுதாகரித்துக் கொள்வதற்கு முன், அவள் அவனை கடந்து சென்றுவிட்டாள். தன் கையில் இருந்த, பையை பார்த்து அலுத்துக் கொண்டான் அவன். நாலு கால் பாய்ச்சலில் படி ஏறி சென்று, பாட்டியின் முன், அந்த பையை வைத்துவிட்டு, வெளியில் ஓடினான்.

"அஸ்வின்..."

"நான் அவசரமா போகணும்" என்று ஓடிக் கொண்டே கூறிவிட்டு, அதே வேகத்துடன் படியிறங்கி, அபிநயாவை தேடிக்கொண்டு, கீழே வந்தான். அவள் ஒரு ஆட்டோவில் ஏறி, அவன் ஆஃபீஸுக்கு எதிர் திசையில் செல்வதை பார்த்து, அலுப்புடன் மூச்சிறைக்க நின்றான்.

அதன் பிறகு தான், அவன் சுய உணர்வு வேலை செய்தது. அவனுக்கு என்ன ஆயிற்று? ஏன் அந்த பொண்னின் பின் இப்படி ஓடுகிறான்? அந்த பெண்ணின் முன் போய் நின்று என்ன சொல்லப் போகிறான்? அவன் மதி இழந்துவிட்டானா என்ன? ஏன் அந்த பெண்ணை பார்க்கும் பொழுதெல்லாம் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல் மாறி விடுகிறான்? தனக்கு என்ன நேர்கிறது என்பது அவனுக்கே புரியவில்லை.

அஸ்வின் இல்லம்

மாலை

அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய அருண், தருணின் அறையை கடந்து, தன் அறைக்கு சென்று கொண்டிருந்தான்.
தருணின் பேச்சை கேட்ட பொழுது, அவன் கால்கள் நகர மறுத்தன. அவனது அறையின் கதவு சாத்தப்பட்டிருந்தது. தருண் யாருடனோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது.

"இங்க பாரு, கண்ணா, நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது. நான் சொன்னது நடந்தாகணும். இல்லன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. அதுக்கு அப்புறம் நீ என் மேல வருத்தப்படாதே."

"......."

"இந்த சில்லி எக்ஸ்கியூஸ் எல்லாம் எனக்கு வேண்டாம்."

"....."

"உன்னுடைய கேர்ள் ஃபிரண்ட்டை வச்சி இந்த வேலையை முடி. அவளால இதை நிச்சயம் செய்ய முடியும்."

"....."

"நான், உன் கேர்ள் ஃபிரண்டோட பர்த் டேவ கொண்டாட பணம் கொடுக்கிறேன்னு நெனச்சியா? அவ அந்த பார்ட்டிக்கு வரணும்னு தான் நான் பணத்தை செலவழிக்கிறேன். நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது. அவ பார்ட்டிக்கு வந்தாகணும். இல்லனா... உனக்கு என்னை பத்தி நல்லா தெரியும்." என்று மிரட்டிவிட்டு, அழைப்பை தூண்டிதான் தருண்.

அப்போது அருண், அவன் அறையின் கதவை தட்டினான். கதவைத் திறந்த தருணின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. இன்று எப்படி இவ்வளவு சீக்கிரமாக அருண் வீட்டிற்கு வந்து விட்டான்?

"யார் கூட ஃபோன்ல பேசிகிட்டு இருந்த?" என்றான் அருண்.

"என் ஃபிரண்டு கிட்ட தான்" என்றான் சகஜமாக.

"எந்த பொண்ணை பத்தி பேசிகிட்டு இருந்த?"

"பொண்ணா...? எந்த பொண்ணு?"

"அந்த பொண்ணு கண்டிப்பா பார்ட்டிக்கு வரணும்னு சொன்னியே?"

"ஓ அதுவா, அது என்னுடைய காலேஜ் அலுமினி ஃபங்க்ஷன்."

"அது எப்போ?"

"இப்ப தான் நாங்க ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கோம். இன்னும் தேதி முடிவாகல."

"ம்ம்ம்..."

அருண் அங்கிருந்து வெளியேற, தருண் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

"இந்த அருணோட தொல்லை தாங்க முடியல. இவனும் வாழ்க்கையை அனுபவிக்க மாட்டேங்குறான்... என்னையும் அனுபவிக்க விட மாட்டேங்கிறான். ஏன் தான் இவன் இப்படி இருக்கானோ... அஸ்வினுக்கு விசுவாசமா இருந்து அப்படி இவன் என்ன தான் சாதிக்கப் போறானோ..." என்று அலுத்துக் கொண்டான்.

சில நிமிடம் கழித்து அவனுக்கு கண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது. அவன் ஆர்வமானான்.

"சொல்லு கண்ணா..."

"அவ பார்ட்டிக்கு வர சம்மதிச்சுட்டா..."

"யா... ஹூ....தட்ஸ் மை பாய்..." என்று சந்தோஷத்தில் துள்ளி குதித்தான்.

"ஆனா தருண்... நான் என்ன நினைக்கிறேன்னா..."

"நீ ஒண்ணும் நினைக்க வேண்டாம். நீ பார்ட்டிய, உன் கேர்ள் ஃபிரண்டோட என்ஜாய் பண்ணு. என்னை தொந்தரவு பண்ணாத..."

"நீ ரிஸ்க் எடுக்குறியோன்னு தோணுது..."

"சில ஸ்பெஷலான விஷயங்களுக்காக நம்ம ரிஸ்க் எடுத்து தான் ஆகணும்..."

"ஆனா...."

"நாளைக்கு பார்ட்டியில் சந்திக்கலாம்..."

என்று கூறிவிட்டு, அவன் வார்த்தைக்கு செவி சாய்க்காமல், அழைப்பை துண்டித்தான் தருண், நாளைய பார்ட்டியை பற்றிய வெறித்தனமான சிந்தனையுடன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top