29 ஏற்பாடுகள்

29 ஏற்பாடுகள்

திருவான்மியூரில் அபிநயாவின் குடும்பம் வசிக்கும் பகுதி பரபரப்பானது. அங்கு ராமநாதனின் மருமகன் வேலை செய்வது தெரிந்த போது, சிலர் நேரடியாகவே அங்கு வந்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆவல் காட்டினார்கள். சிலரோ, அங்கும் இங்கும் மறைந்து நின்று வேவு பார்த்தனர். அங்கு இரண்டு குளிர்சாதன இயந்திரம் வந்து இறங்கிய போது, மேலும் கிசுகிசுத்துக் கொண்டனர். அஸ்வின் அங்கு நடந்து கொண்டிருந்த வேலையை மேலாண்மை செய்து கொண்டிருந்தான். மனோஜோ தேவையான பொருட்களை வர வழைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான்.

"இந்த வீட்டில் ஏசி ஃபிக்ஸ் பண்றது ரொம்ப ரிஸ்க்கு சார்" என்றான் ஏசி மெக்கானிக்.

"ஏன் செய்ய முடியாது?" என்றான் அஸ்வின்.

"ஒயரிங் எல்லாம் ரொம்ப பழசு சார்... ஏசியை நிச்சயமா தாங்காது. அதுவும் இரண்டு ஏசினா முடியவே முடியாது..."

"என்ன செய்யணும்?"

"ஒயரிங் மாத்தணும், சார்"

"சரி மாத்திடுங்க. எத்தனை ஆள் வேணும்னாலும் சேத்துக்கோங்க. ஆனா இன்னைக்கே வேலை முடிஞ்சாகணும்..."

"சரிங்க சார்..."

அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே அங்கிருந்த இராமநாதனின் கட்டிலில் அமர்ந்தான் மனோஜ். அந்த கட்டில் அவன் அமர்ந்த போது ஆடியதால், அதிலிருந்து எகிரி குதித்தான். அதை கவனித்த அஸ்வின், அதை ஆட்டி பார்த்தான்.

"ஒரு கட்டிலை ஆர்டர் பண்ணிடட்டுமா?" என்றான் மனோஜ்.

"அதுல ஏதாவது சந்தேகம் இருக்கா?"

"இல்ல"

"ஒரு ஃபுல் செட் ஆடர் பண்ணிடு"

"ஓகே"

தன் கைப்பேசியை எடுத்து, ஒரு கிங்சைஸ் படுக்கையை ஆர்டர் செய்தான்.

"சார், இந்த வீட்டுல நிறைய எலி இருக்கும் போல இருக்கு" என்றான் ஏசி மெக்கானிக்.

"என்னது எலியா!!!!" என்று அதிர்ச்சியானான் அஸ்வின்.

"ஆமாம், சார்..."

"மனோ அப்படியே பெஸ்டிஸைடும் பண்ணிடு"

"ஓகே"

அஸ்வின் அபிநயாவின் அறைக்குச் சென்றான். அங்கிருந்த அவள் கட்டிலில் காலை நீட்டி படுத்தான். அந்த தலையணையில் இருந்து வந்த வாசனை, அவனுக்கு அபிநயாவை நினைவுபடுத்தியது. அந்த தலையணையை வருடியபடி புன்னகை புரிந்தான்.

இருமல் சத்தம் கேட்டு எழுந்து அமர்ந்தான் அஸ்வின். அங்கு கிண்டல் சிரிப்புடன் நின்றிருந்தான் மனோஜ்.

"வேலையாளுங்க எல்லாரையும் சாப்பிட அனுப்பிட்டேன். பாட்டி ஹாஸ்பிடலுக்கு சாப்பாடு அனுப்பிட்டாங்களாம். நமக்கும் ஆடர் பண்ணிட்டேன்"

"ம்ம்ம்" என்றான் அஸ்வின்.

"அஸ்வின், அபி ரூமுக்கும் நம்ம ஒரு கிங்சைஸ் பெட் ஆடர் பண்ணணும்னு நினைக்கிறேன்..."

அஸ்வினுக்கு தெரியும் அவன் வேண்டுமென்றே வம்பு செய்கிறான் என்று.

"பாரு, அபியோட கட்டில் எவ்வளவு சின்னதா இருக்கு... உன்னால இதுல ஃப்ரீயா தூங்க முடியாது... அபிக்கும் உனக்கும் இந்த பெட்டு பத்தாது... நான் சொல்றது சரி தானே...?" என்றான் சிரிப்பை அடக்கியபடி.

"கெட் அவுட்..."

"எஸ் யுவர் ஹானர்..." என்று கூறிவிட்டு, சிரிப்பை அடக்கிக் கொண்டு வெளியே சென்றான் மனோஜ்.

அஸ்வினும் கூட, முதலில் அந்த சிறிய கட்டிலை மாற்றிவிடத் தான் நினைத்தான். ஆனால் அபிநயா என்ன செய்யப் போகிறாள் என்று, அவனுக்கு பார்க்க வேண்டும். ஏனெனில், அவனுடைய அறையில் இருப்பது போல அபிநயாவின் அறையில், அவன் படுக்க, கூடுதலாக எந்த சோபாவும் இருக்கவில்லை. இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடுவானா அவன்?

மறுபடி மனோஜ் உள்ளே வருவதை பார்த்தான் அஸ்வின்.

"எனக்கு ஒரு டவுட்" என்றான்.

"ஷூட்..."

"ராமநாதன் சாரோட ரூமை விட, அபியோட ரூம் சின்னது. ஆனா, நீ ராமநாதன் சார் ரூமுக்கு ஒரு டன் ஏசியையும், அபியுடைய ரூமுக்கு ஒன்னரை டன் ஏசியையும் போட சொல்லியிருக்க... அபி ரூமுக்கு ஒரு டன்னே போதுமே..."

"ஏன்னா, நான் அபி ரூம்ல தான் தங்கப் போறேன். உனக்கு தான் தெரியுமே, என்னால ஏசி இல்லாம இருக்க முடியாதுன்னு..."

"ஆனா, அபி குளிரில் நடுங்குவாங்களே..."

"அவ என்னோட வைஃபுன்னு உனக்கு ஞாபகம் இருக்கா....?"

"ஓ, இருக்கே..."

"நீ உன் வேலையை பாரு... என் ஒய்ஃபை நான் பாத்துக்குறேன்..."

"அப்போ, நான் நல்ல பிராண்டட் ப்ளாங்கெட் ஆர்டர் பண்ணட்டுமா? குளிருக்கு இதமா இருக்கும்"

"நான் எதையாவது தூக்கி அடிக்கிறதுக்கு முன்னாடி, இங்கிருந்து ஓடிப் போயிடு..."

"எஸ் பாஸ்..." என்று பல்லை காட்டி சிரித்தபடி அங்கிருந்து ஓடினான் மனோஜ்.

சிறிது நேரத்திற்கு பிறகு, அவர்கள் இருவருக்குமான மதிய உணவுடன் வந்தான் மனோஜ். இருவரும் உணவருந்த தொடங்கினார்கள்.

"மறுபடியும் தருணை கானோமாம்" என்றான் மனோஜ்.

"ஆமாம், அவனுடைய ஃப்ரெண்ட்ஸ் கூட இருப்பான்னு நினைக்கிறேன்" என்றான் அவனை பார்க்காமல்.

"மறுபடி யாரோ அவனை கடத்தி இருக்கணும்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற?"

"இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம்..."

"நீ அவனை தேட போறியா?"

"தேவைப்பட்டா நிச்சயமா செய்வேன்"

"வேணாம் அஸ்வின்... அவன் திரும்பி வர வேணாம்..."

ஒரு நொடி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் தொடர்ந்தான் அஸ்வின்.

"அதை நம்ம எப்படி முடிவு பண்ண முடியும்?"

"முடியும்... நம்மால நிச்சயமா முடியும்... அவன் எங்க இருக்கான்னு தேடி கண்டுபிடிச்சு, அவனை உலகத்தை விட்டே அனுப்பிடலாம்."

"நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா?"

"அவன் அபியை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிக் கேட்டது, எனக்கு சுத்தமா பிடிக்கல"

"அபி தான் அவனுக்கு பதிலடி கொடுத்துடாளே..."

"அவங்களுடைய பதிலடி, அவனை தடுத்து நிறுத்தும்னு நினைக்கிறியா?"

"இப்போ நான் என்ன செய்யணும்னு சொல்ற?"

"ஒன்னும் இல்ல..."

அதன் பிறகு மனோஜ் எதுவும் பேசவில்லை. அஸ்வின் உள்ளூர சிரித்துக்கொண்டான்.

சிட்டி மருத்துவமனை

ராமநாதன் தனி அறைக்கு மாற்றப்பட்டார். உறங்கிக் கொண்டிருந்த அவரின் அருகில் அமர்ந்திருந்தாள் அபிநயா.

"அவருடைய கவலை எல்லாம் உன்னை பத்தி தான். உனக்கு பிடிக்காத கல்யாணத்தை செஞ்சி வச்சதுல அவனுக்கு ரொம்ப உறுத்தல்" என்றார் மங்கை.

"மனசுல நினைக்கிறத வெளியில சொல்லக்கூட முடியாம, அழுத்தி வச்சதனால் தான் அவருக்கு நெஞ்சு வலி வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்" என்றார் பத்மா வருத்தமாக.

"கடவுள் புண்ணியத்துல அவனுக்கு ஒன்னும் ஆகல" என்றார் மங்கை.

அப்போது அஸ்வின் அந்த அறைக்குள் நுழைந்தான்.

"ஃபேன் வேலை செய்யுதா தம்பி?" என்றார் பத்மா.

"வேலை செய்யுது" என்றான்.

அவன் புதிய மின் விசிறிகளை மாற்றிவிட்டது பற்றியோ, மேலும் அவன் அங்கு செய்திருந்த மற்ற மாற்றங்கள் பற்றியோ ஏதும் கூறவில்லை.

"இப்போ அப்பா எப்படி இருக்காரு?" என்றான்.

"டாக்டர் நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு சொல்லிட்டாரு" என்றார் மங்கை.

"ரொம்ப நல்ல விஷயம். நான் அவருக்காக ஒரு பிசியோ தெரபிஸ்ட்டை அப்பாயின்ட் பண்ணியிருக்கேன். அவர் அப்பாவுக்கு சின்ன சின்ன எக்சர்சைஸ் செய்ய சொல்லிக் கொடுப்பார். அப்பாகிட்ட சீக்கிரமே நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தெரியும். "

அங்கிருந்த மூவருக்கும் என்ன கூறுவது என்று தெரியவில்லை.

"தம்பி..." என்று பத்மா ஆரம்பிக்க,

"உங்க தேங்க்ஸ்ஸை எல்லாம் சேர்த்து வச்சுக்கோங்க. மொத்தமாக வாங்கிக்கிறேன்" என்றான் சிரித்தபடி.

அவன் கைபேசிக்கு அப்பொழுது ஒரு அழைப்பு வர, அவன் அந்த அறையிலிருந்து வெளியே வந்தான். அந்த அழைப்பு சுபத்ராவிடம் இருந்து தான் வந்திருந்தது.

"சொல்லுங்க, பாட்டி"

"தருண் இன்னும் வீட்டுக்கு வரல"

"சரி, நான் அதை பாத்துக்குறேன்"

"கொஞ்சம் சீக்கிரம் செய், அஸ்வின்"

"சரிங்க, பாட்டி"

"ராமநாதன் எப்படி இருக்கார்?"

"அவர் நல்லா இருக்கார்... நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகுறார்."

"ரொம்ப நல்லது"

"நானும், அபியும், கொஞ்ச நாள் அவங்க வீட்ல இருந்துட்டு வரலாம்னு இருக்கோம்"

"தாராளமா செய்யுங்க. ஏதாவது வேணும்னா எனக்கு தெரியபடுத்துங்க"

"சரிங்க பாட்டி"

அவர்கள் அழைப்பைத் துண்டிக்க, உடனே அஸ்வினுக்கு மற்றும் ஒரு அழைப்பு வந்தது. அது அருணிடம் இருந்து.

"சொல்லு அருண்"

"ஆவின், நான் தருணுடைய ரூம்ல டுமாரோ லேண்ட் டிக்கெட் பாக்ஸை பார்த்தேன்"

"அதனால?"

"அவன் பெல்ஜியம் போயிருக்கான்னு நினைக்கிறேன்"

"அவன் அப்படி போறதா இருந்தா, பாட்டிகிட்ட சொல்லிட்டில்ல போயிருப்பான்....?"

"எப்படி சொல்லுவான் ? அவன் யார் கூட போயிருக்கானோ..."

"நெஜமாத் தான் சொல்றியா?"

"ஆமாம் ஆவின். அவன் ரொம்ப வருஷமாவே டுமாரோ லேண்ட் டிக்கெட் வாங்க ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தான். இந்த வருஷம் அவனுக்கு டிக்கெட் கிடைச்சிடுச்சின்னு நினைக்கிறேன். அந்த டிக்கெட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் அப்படிங்கறதால, அவன் ரொம்ப நாளைக்கு முன்னாடியே புக் பண்ணி இருந்திருக்கணும்"

"அதை பாட்டிகிட்ட சொல்லிடு. அவனை காணாம அவங்க ரொம்ப பதட்டமா இருக்காங்க"

"ஷ்யூர்"

"எதுக்கும் அவனுடைய ஃபிரன்ட்ஸ்கிட்ட அதை பத்தி கேளு"

"சரி"

உதட்டோர புன்னகை சிந்தியபடி, அந்த அழைப்பை துண்டித்தான் அஸ்வின். ஏனென்றால், இந்த திருப்பத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. அருண் கூறியது போல், வெகு நாட்களுக்கு முன்னரே தருண் அந்த டிக்கெட்டை வாங்கி இருக்க வேண்டும்.

அபிநயா தன்னருகே நிற்பதை பார்த்தான் அஸ்வின்.

"தருணை மறுபடியும் காணோமா?"

"ஆமாம்..."

"அவன் எங்கே போனான்?"

"அருண் சொல்றான், அவன் பெல்ஜியம் போயிருக்கான்னு"

"பெல்ஜியத்துல அவன் என்ன செய்றான்?"

"டுமாரோ லேண்ட் போயிருக்கணும்"

"அப்படின்னா?"

"அது உலகத்துல நடக்கிற பெரிய டான்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவெல்ல ஒன்னு. மூணு நாள் நடக்கும். உலகத்தோட எல்லா முலையில் இருந்தும் லட்சக்கணக்கானவங்க அங்க ஒன்னு கூடுவாங்க"

"ஓ..."

"அவனுக்கு மியூசிக்னா ரொம்ப பிடிக்கும்"

"மியூசிக் எல்லாம் ஒரு சாக்கு. எனக்கு தெரியாதா அவன் அங்க என்ன செய்வான்னு? பொறுக்கி..." என்று முணுமுணுத்தாள்.

"நீ ஏதாவது சொன்னியா?"

அவள் பேச்சை மாற்றினாள்.

"ஒரு நாளெல்லாம் எங்க வீட்ல என்ன செஞ்சுகிட்டு இருந்திங்க?"

"ஏன்...? என்னை பாக்காம ரொம்ப கஷ்டமா இருந்துதா?" என்றான் கிண்டலாக.

"ப்பா.. என்ன ஒரு புத்திசாலித்தனம்... என் மனசுல இருந்தத அப்படியே சொல்லிட்டீங்க" என்று பதிலுக்கு கிண்டல் அடித்தாள்.

"புத்திசாலி நான் இல்ல... நீ தான்... கிண்டல் பண்ற மாதிரி அப்படியே உன் மனசுல இருந்ததை மறைமுகமா சொல்லிட்ட தானே?"

"உங்கள பாத்தா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு. தருண் டுமாரோ லேன்ட்ல ஜாலியா இருக்கான். ஆனா நீங்க ட்ரீம் லேண்ட்ல பாவமா இருக்கீங்க"

"பரவாயில்லயே... என்னை பத்தி பாவமெல்லாம் படுறியே... குட் இம்ப்ரூவ்மென்ட்"

அவனை விடாப்பிடியாக முறைத்துக் கொண்டு நின்றாள்.

"என்ன?"

"உங்களால நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன்... நான் நினைக்கிறத செய்யவே விட மாட்டீங்களா?"

"வெயிட்டிங்..."

"தேங்க்ஸ்..."

"எதுக்கு மேடம்?" என்றான் கிண்டலாக.

"நீங்க எங்களுக்கு செஞ்ச எல்லா உதவிக்கும்"

"எங்களுக்கா? அதுக்கு என்ன அர்த்தம்னு கொஞ்சம் சொல்றீங்களா?"

"எங்க அம்மா வீட்டுக்கு..."

"அப்படின்னா எங்களுக்குன்னு சொல்லக்கூடாது, அவங்களுக்குன்னு சொல்லணும். நீ இப்போ அவங்க வீட்டு பொண்ணு இல்ல. மிஸஸ் அபிநயா அஸ்வின் அப்படிங்கறதை மறந்துடாத"

"நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்படிங்கிறதனால அந்த மாதிரி என் பெயரை நான் எழுதணும்னு அவசியமில்ல..."

"அவ்வளவு விருப்பம் இல்லன்னா, எதுக்காக நான் கட்டின தாலியையும், நெத்தியில குங்குமத்தயும் வச்சிருக்க? நீ எப்போ என்னை புருஷனா ஏத்துக்கிறியோ, அப்போ அதெல்லாம் வைச்சுகலாமே..."

அபிநயாவுக்கு மூச்சு முட்டியது. தாலியை கழட்டி வைப்பதை பற்றி அவள் கனவிலும் கூட நினைத்ததில்லை. அவள் வளர்ந்த விதம் அப்படி.

"அம்மாவும், அத்தையும் என்னை கொன்னுடுவாங்க..." என்றாள் தடுமாற்றத்துடன்.

"நான் தான் சொல்றேன்ல... நீ கழட்டி வச்சிடு. எல்லாரையும் நான் சமாதான படுத்திக்கிறேன். நீ அதை பத்தி கவலைப்பட வேண்டாம்..."

அபிநயா மென்று முழுங்கினாள்.

"உனக்கு கஷ்டமா இருந்தா,
நீ செண்டிமெண்டா ஃபீல் பண்ணா, நான் வேணா ஹெல்ப் பண்றேன். வா, நான் கிழட்டி கொடுக்கிறேன்"

அவன் ஒரு அடி முன்னே எடுத்தது தான் தாமதம். அங்கிருந்த தூணின் மீது அவனை பிடித்து தள்ளிவிட்டு, அங்கிருந்து ஓடி போனாள் அபிநயா. தன்னை ஆசுவாசப் படுத்தியபடி புன்னகை புரிந்தான் அஸ்வின்.

அவள் தன் விருப்பத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்பதற்காக, அவளுக்கு விருப்பமில்லை என்று அர்த்தமில்லை... அது அஸ்வினுக்கும் தெரியும்.

தொடரும்...










Bạn đang đọc truyện trên: AzTruyen.Top