27 திருந்தாத ஜென்மம்

27 திருந்தாத ஜென்மம்

கண்ணனின் அழைப்பை, தருண் ஏற்கும் வரை காத்திருந்தான் அஸ்வின்.

"எப்படி இருக்க, மச்சி...?" என்றான் கண்ணன்.

"நீ எங்க போய் தொலைஞ்ச? இப்போ தான் என் ஞாபகம் வந்துதா உனக்கு?"

"என் தாத்தாவோட இறுதி சடங்குல கலந்துக்க எங்க கிராமத்துக்கு போறேன்னு நான் தான் சொன்னேனே... எல்லாத்தையும் முடிச்சுட்டு இன்னைக்கு காலையில தான் நான் வந்தேன்..."

"இங்க என்ன நடந்ததுன்னு உனக்கு யாருமே சொல்லலயா?"

"என்னுடைய ஃபோன் தொலைஞ்சு போச்சு. என்னால யார்கிட்டயும் பேச முடியல. பழைய நம்பரை வாங்க கூட எனக்கு நேரம் கிடைக்கல. நம்பர் கிடைச்ச உடனே, உனக்கு தான் முதல்ல ஃபோன் செய்றேன்"

"சரி, சொல்லு..."

"நீ எப்படி இருக்க? எப்படி போய்கிட்டு இருக்கு...?"

"சகிக்க முடியாத அளவுக்கு, மோசமா போய்கிட்டு இருக்கு"

"ஏன்...? என்னாச்சு?"

"பாட்டி, அஸ்வினுக்கும் அபிக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க"

"ஆனா, ஏன்?"

"என் கல்யாணதன்னைக்கு என்னை யாரோ கடத்திக்கிட்டு போயிட்டாங்க. நான் இல்லாததுனால அப்படி நடந்து போச்சி"

"யார் உன்னை கடத்தினது?"

"எனக்கு தெரியல. ஆனா, சத்தியமா சொல்றேன், அவன் என் கையில கிடைச்சா, அவனுக்கு நரகம்னா என்னன்னு காட்டுவேன்"

"எல்லாம் விதிப்படி தான் நடக்கும். அபிநயா இப்ப உன்னோட அண்ணி. எல்லாத்தையும் மறந்துடு..."

"வாய மூடு... மரியாதையா வாய மூடு"

"ரிலாக்ஸ், தருண்."

"ரிலாக்ஸா இருக்கிறதா..? எப்படி இருக்கிறது? அவ என்னை கத்தியால குத்தியிருக்கா..."

"அவங்கள காப்பாத்திக்க தானே செஞ்சாங்க..."

"எப்படி வேணா இருக்கட்டும்"

"அவங்க உன் அண்ணனுடைய மனைவி. அஸ்வின் அண்ணன் உன்னை தன்னோட சொந்த தம்பி மாதிரி நினைக்கிறார். இந்த சமுதாயத்துல அவருக்கு ரொம்ப பெரிய மரியாதை இருக்கு. தயவுசெஞ்சி அவரை பத்தி மட்டுமாவது நெனச்சு பாரு. உன்னை தத்தெடுத்ததுக்காக  அவரை வருத்தப்பட வெச்சுடாதே."

கண்ணன் பேசியதைக் கேட்டு அஸ்வின் சந்தோஷப்பட்டான். தருணின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும்படி மட்டும் தான் அவன் கூறியிருந்தான். ஆனால், கண்ணன் பேசுவதை பார்த்தால், அவன் நல்லவனாக தெரிகிறான். அவன் தருணுடன் சேர்ந்து தான் கெட்டுப் போயிருக்க வேண்டும்.

"நான் என்ன செய்யறேன்னு எனக்கு நல்லாவே தெரியும். அஸ்வின் நெனச்சா, விதவிதமான பொண்ணுங்கள அவன் கட்டிலுக்கு வரவைக்க முடியும். முட்டாள்...! அத விட்டுட்டு குடும்பம், ஆஃபீஸ், பிஸினஸுன்னு கட்டி அழுதுகிட்டு இருக்கான். என்னையும் வேற அதுல இழுத்துவிட பாக்குறான்"

"நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே. நீ செய்றது ரொம்ப தப்பு"

"நீ உன் வேலையை பாரு..."

"நானும் அதையே தான் சொல்றேன். நீயும் ஸ்ருதியை மறந்துட்டு, உன் சொந்த வேலையை பாரு"

கண்ணன் அழைப்பை துண்டித்தான். மறுபுறம் அஸ்வினும் துண்டித்துக் கொண்டான். அடுத்த நிமிடம் அஸ்வினுக்கு கண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது. தருணுடன் பேசிய அனைத்தையும், அஸ்வினிடம் கொட்டித் தீர்க்க தான் அவனை அழைத்தான் கண்ணன். அவன் அழைப்பை ஏற்று பேசினான் அஸ்வின்.

"அண்ணா..."

"சொல்லு கண்ணா"

"நீங்க அண்ணியை ஜாக்கிரதையா பாத்துக்கங்க"

"ம்ம்ம்ம் தேங்க்ஸ்..."

தருணிடம் பேசிய அனைத்தையும், அஸ்வினிடம் கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துக் கொண்டான் கண்ணன். அஸ்வினின் கோபம் விண்ணை தொட்டது. தருண் யார் சொல்வதையும் கேட்கமாட்டான் போலிருக்கிறது. அவன் ஒரு திருந்தாத ஜென்மம். அவனுக்கு யாரிடத்திலும் மரியாதை என்பது சிறிதும் இல்லை. அவனை அவன் இஷ்டத்திற்கு திறிய விடுவது சரியாக இருக்காது. அவனை நன்றாக கவனித்தாக வேண்டும்.

 
மறுநாள் காலை

அபிநயாவின் கைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த அழைப்பு யாரிடமிருந்து வருகிறது என்பதை பார்த்துவிட்டு, அந்த அழைப்பை கோபமாய் துண்டித்தாள் அவள். மறுபடியும் அவள் கைபேசி ஒலித்தது. ஃபோனை அணைத்துவிட்டு கட்டிலில் விட்டெறிந்தாள்.

அதைப் பார்த்த அஸ்வின் வியந்து போனான். அவள் ஏன் அழைப்பை ஏற்கவில்லை என்பது அவனுக்குப் புரியவில்லை. அப்போது அவனுடைய கைபேசி ஒலித்து, புரியாத அவன் கேள்விக்கு பதில் அளித்தது. தன் கைப்பேசியில் ஒளிர்ந்த புதிய எண்ணை பார்த்து, குழப்பமானான் அஸ்வின். அழைப்பை ஏற்று பேசியபோது, பத்மாவின் அழுகுரல் கேட்டு பதட்டமானான்.

"ஹலோ..."

"அஸ்வின் தம்பி..."

"ஏம்மா அழறீங்க? என்ன ஆச்சு?"

"அபியோட அப்பாவுக்கு, மறுபடியும் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. அவரை ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம். அவர் ஐசியுல இருக்கார். அவர் அபியை பாக்கணும்னு சொல்றாரு. ஆனா,  அவ ஃபோனை எடுக்க மாட்டேங்குறா..." என்று அழுதார்.

"நீங்க அழாதீங்க. நான் அவளை கூட்டிட்டு வரேன். எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கீங்க? "

"சிட்டி ஹாஸ்பிடல்"

"நீங்க கவலைப்பட வேண்டாம். நாங்க உடனே வறோம்."

பத்மாவின் அழைப்பை துண்டித்து, உடனடியாக மனோஜ்க்கு ஃபோன் செய்தான்  அஸ்வின்.

"சொல்லு அஸ்வின்..."

"அபியோட அப்பாவை சிட்டி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க. நீ உடனே அங்க போய் அவங்களுக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் செஞ்சு கொடு. நாங்க வர கொஞ்சம் நேரம் ஆகலாம்"

"கிளம்பிட்டேன்" என்றான் மனோஜ்.

அழைப்பை துண்டித்து விட்டு, ஒரு பையில், அவனுக்கும் அபிநயாவுக்கும் தேவையான துணிமணிகளை எடுத்து திணித்துக் கொண்டான். அறையின் உள்ளே நுழைந்த அபிநயா, அதை பார்த்து திடுக்கிட்டு நின்றாள்.

"என்ன செய்றீங்க?"

"பேக்கிங் பண்றேன்"

"என்னுடைதயும் சேத்து ஏன் செய்றீங்க?"

"ஏன்னா, நீயும் என்னோட வரப்போற"

"எங்க?"

"உங்க அம்மா ஃபோன் பண்ணாங்க. நம்ம அங்க தான் போறோம்"

"என்னது...? நான் அங்க வரல" என்றாள் கோபமாக.

"அபி..."

"சொன்னா சொன்னது தான். நான் வரமாட்டேன்னா, வரமாட்டேன் தான்"

"உங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க. அவர் ஐசியூல இருக்காரு."

அதைக் கேட்டு அவள் பேச்சிழந்து  நின்றாள்.

"நான் போறேன். ஏன்னா, இந்த நேரத்துல அவங்களுக்கு துணையா இருக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு."

அவன் அங்கிருந்து விறுவிறுவென நடக்க, இமை கொட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் அபிநயா. அவன் படாரென்று கதவை சாத்திய சத்தம் கேட்டு தான் அவள் சுயநினைவிற்கு வந்தாள்.  அவனை பின் தொடர்ந்து ஓடி சென்று, காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். அஸ்வின் டாப் கியரில் வண்டியை கிளப்பினான்.

சிட்டி ஹாஸ்பிடல்

அஸ்வினும், அபிநயாவும் மருத்துவமனைக்கு வந்த பொழுது, அங்கு ஏற்கனவே மனோஜும், அருணும் அபிநயாவின் குடும்பத்தினருடன் இருந்தார்கள். அவசர சிகிச்சைப் பிரிவின் கண்ணாடி கதவின் வழியாக, தன் தந்தையை பார்த்து கண்ணீர் சிந்தினாள் அபிநயா. பலவித சாதனங்கள் உடலோடு பொருத்தப்பட்டு அவளுடைய தந்தை படுத்திருந்தார். அவள் கன்னத்தில் உருண்டு ஓடிய கண்ணீரை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவள் தான் அப்பா பெண்ணாயிற்றே...!

"அப்பா எப்படி இருக்கார்?" என்றான் அஸ்வின்.

"இப்ப தேவலாம்" பத்மா.

"ஒன்னும் பிரச்சனை இல்ல. அவர் நல்லா இருக்கார்" என்றான் மனோஜ்.

"ஆனா, அவருக்கு நல்ல கவனிப்பும் ரெஸ்ட்டும் தேவை" என்றான் அருண்.

அப்போது அவர்கள், சுபத்ரா மருத்துவமனைக்குள் வருவதை கவனித்தார்கள். அஸ்வின் அருணை பார்க்க,

"நான் தான் சொன்னேன்" என்றான் அருண்.

"அபிநயா அப்பா எப்படி இருக்கார்?" என்றார் சுபத்ரா.

"பரவாயில்லங்க, நல்லா இருக்கார்" என்றார் மங்கை.

"ஒன்னும் கவலைப்படாதீங்க... எல்லாம் சரியாயிடும்" என்றார் சுபத்ரா.

"நானும், அபியும் அவர் கொஞ்சம் தேறி வர்ற வரைக்கும் அவங்களோட இருக்கோம்" என்றான் அஸ்வின்.

"ஆமாம், அவங்களுக்கும் ஒரு துணை தேவை. நீ அவங்க கூட இரு" என்றார் சுபத்ரா.

அவருடைய கனிவான பேச்சை கேட்டு மங்கையும், பத்மாவும், வாயை பிளந்து கொண்டு நின்றார்கள். சிறிது நேரம் அங்கு அவர்களுடன் இருந்துவிட்டு, மனோஜ் மற்றும் அருணுடன் சுபத்ரா கிளம்பிச் சென்றார்.

அவர்களுக்கென்று தான் ஏற்பாடு செய்திருந்த டீலக்ஸ் ரூமிற்கு, மங்கையையும், பத்மாவையும் அழைத்துச் சென்றான் அஸ்வின். மருத்துவமனை உணவகத்தில் இருந்து அவர்களுக்கு உணவு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அவர்கள் மறுத்த போதும் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தான். அபிநயா மட்டும் எதையும் சாப்பிட மறுத்து விட்டாள்.

"அபி, இந்த சாண்ட்விச்சை சாப்பிடு" என்றான்அஸ்வின்.

"எனக்கு வேண்டாம்"

"யாருக்காக பட்டினி இருக்க? அப்பாவுக்காகவா? நீ பட்டினி இருந்தா அவர் எழுந்துடுவாரா?"

அபிநயா அமைதி காத்தாள். அவள் கையைப் பிடித்து அந்த சான்ட்விச்சை வைத்தான்.

"நீ எனக்காக ஒன்னும் சாப்பிட வேண்டாம். உங்க அப்பாவுக்காக சாப்பிடு. நாளைக்கு அவரு கண் விழிச்சி உன்னை பாக்கும் போது, நீ சோர்வா இருந்தா, அவர் வருத்தப்பட மாட்டாரா?"

தன் தலையை உயர்த்தி அவனை அவள் ஏறிட்டு பார்க்க, அவன் சாப்பிடு என்று சைகை செய்தான். அவள் அதை மெல்ல உண்ண ஆரம்பித்தாள். திருப்தி புன்னகை உதிர்த்தான் அஸ்வின்.

"நான் இங்க இருக்கேன். நீ ரூமுக்கு போய் கொஞ்ச நேரம் படுத்து தூங்கு"

அவள் வேண்டாம் என்று தலையசைத்தாள். அவள் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். சற்று நேரத்தில், அமர்ந்த நிலையிலேயே அபிநயா தூங்கிப் போக, அவளுக்கு தன் தோளை ஆதரவாய் கொடுத்தான் அஸ்வின். அவள் தருணை கத்தியால் குத்திய அந்த நாளை புன்னகையுடன் நினைத்துப் பார்த்தான். அன்றும் அவள் இது போலவே தான் அவன் தோளில் சாய்ந்திருந்தாள். அன்று, வாழ்நாள் முழுவதும் அவளுக்கு தோள் கொடுக்க அவன் விரும்பியது, இன்று நிஜமாகி விட்டது. அவள் தலையில் தன் கன்னத்தை பதித்தபடி, அவள் கை விரல்களை தன் விரலுடன் கோர்த்துக் கொண்டான்.

மறுநாள் காலை

அபிநயாவின் தந்தையின் நிலையை தெரிந்து கொள்ள, அஸ்வினை கைப்பேசி மூலம் அழைத்தார் சுபத்ரா.

"அபிநயா அப்பா எப்படி இருக்கார்?"

"அவரை அப்சர்வேஷன்ல வச்சிருக்காங்க"

"நீயும் அபிநயாவும் அவரை பாத்தீங்களா?"

"இல்ல பாட்டி. அவர் இன்னும் கண் விழிக்கல..."

"அவரை ரூமுக்கு மாத்தின  உடனே எனக்கு சொல்லு"

"நிச்சயமா..."

"நான் உங்க எல்லாருக்கும் சாப்பாடு செஞ்சு அனுப்புறேன். கேண்டீன் சாப்பாடு நல்லதில்ல"

"சரி"

அவன் அழைப்பை துண்டிக்க எண்ணிய போது,

"அஸ்வின்..."

"சொல்லுங்க, பாட்டி..."

"தருணை வீட்ல காணோம்..."

"அவனோட ஃபிரெண்ட் வீட்டுக்கு போயிருப்பான்..."

"அவன், முந்தா நேத்து காலையில வெளியில போறேன்னு போனான். அவன் இன்னும் திரும்பி வரல. எனக்கு ஃபோனும் செய்யல. அவனுடைய ஃபோன் ரிங்காயிகிட்டே இருக்கு. ஆனா, அவன் எடுக்க மாட்டேங்குறான்"

"ஒருவேளை அவன் ஃபோன்  சைலண்ட்ல இருக்குமோ என்னமோ... அவன் ஃபோனை பார்க்கும் போது, அவனே உங்களுக்கு கால் பண்ணுவான். ஈவினிங்  வரைக்கும் வெயிட் பண்ணுங்க.  அவன் ஃபோன் பண்ணலன்னா, அதுக்கு மேல நம்ம ஏதாவது ஆக்ஷன் எடுக்கலாம்."

"சரி "

ஒரு கள்ளப் புன்னகையுடன் அழைப்பை துண்டித்தான் அஸ்வின்.

......

அதே கட்டிடம்... அதே இடம்.... அதே அடியாட்கள்.... தீவிரமாக வேலை செய்வதை பார்க்கிறோம். இன்றும் தருணின் கூக்குரலைக் கேட்கிறோம்... அன்றை விட இன்னும் பலமாக...!

 தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top