26 பாட்டியை குறிவைத்து...

26 பாட்டியை குறிவைத்து...

அபிநயாவின் எண்ண ஓட்டம் முழுவதும், அஸ்வின் காதலித்த பெண்ணை நோக்கியே ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பெண், அஸ்வினுக்கு கிடைக்க ஏதாவது செய்தாக வேண்டும். அதே நேரம், அஸ்வினின் உதவியின்றி தருணையும் கையாள வேண்டும். ஏனென்றால், அஸ்வின் இந்த உறவை பலப்படுத்த எல்லா வித முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், அவன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயல்வான். அதனால் அவள் தருணை கையாளும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். தருணை கட்டுப்படுத்தும் ரிமோட் கண்ட்ரோல் யாரிடம் உள்ளது?பாட்டியிடம் தானே அவர்கள் உறவு பொய்யானது என்று நிரூபிக்க அவன் நினைக்கிறான்? எனவே, பாட்டிக்கு தங்கள் உறவு நல்லபடியாக உள்ளதாக நிரூபித்தாக வேண்டும். அதே நேரம் அஸ்வினிடம் இருந்தும் தருணிடமிருந்தும் விலகிச் செல்ல வேண்டும். தனக்கு தோன்றிய இந்த எண்ணத்தை அவளே பாராட்டி கொண்டாள் அபிநயா.

சமையலறையில் அபிநயா வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்ததும், சுபத்ரா ஸ்தம்பித்து நின்றார். அது மட்டுமில்லாமல், அவள் அஸ்வினுக்கு மிகவும் பிடித்த பயித்தம் பருப்பு பாயசம் செய்துகொண்டிருந்தாள். பாட்டி, சமையலறையின் வாசலில் நிற்பதை, கண்டும் காணாதது போல் வேலை செய்து கொண்டிருந்தாள் அபிநயா.

"ராமு அண்ணா, பாதாம் பருப்பு எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்றீங்களா?" என்று வேலைக்கார ராமுவிடம் கேட்க, அவன் பாதாம் டப்பாவை அவளை நோக்கி நீட்டினான்.

அதை வாங்கும் போது தான் பாட்டியை பார்ப்பது போல், அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு பணியை தொடர்ந்தாள்.

"நீ அஸ்வினுக்காகவா பாயாசம் செய்யற?" என்றார் சுபத்ரா நம்பமுடியாமல்.

"ஆமாம் பாட்டி. முதல் நாள் அவருக்கு நான் எதுவுமே செஞ்சு கொடுக்கல. அதனால இன்னைக்கு கொடுக்கலாம்னு நினைச்சேன்."

"நீ இப்படிப் பேசுறதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ உண்மையை ஏத்துகிட்டியே..."

"அஸ்வின் மாதிரி ஒரு நல்ல ஹஸ்பண்ட் கிடைச்சா, நான் ஏன் ஏத்துக்காம போகப்போறேன்? அவர் என் மேல ரொம்ப அக்கறை காட்டுறாரு..."

ஆமாம் என்று தலையசைத்தார் சுபத்திரா.

"இந்த பாயசத்தை நீங்க டேஸ்ட் பண்ணி பாக்குறீங்களா?"

"நிச்சயமா... " ஒரு ஸ்பூன் பாயசத்தை எடுத்து சுவைத்துப் பார்த்தார் சுபத்ரா.

"பிரமாதமா இருக்கு. கொண்டு போய் அஸ்வினுக்கு கொடு மா..."

சரி என்று தலையசைத்துவிட்டு, ஒரு கிண்ணத்தில் பாயசத்தை எடுத்துக் கொண்டு, தன்னைப் பற்றி பெருமையாக எண்ணியபடி, சமையல் அறையை விட்டு வெளியே வந்தாள். அவள் வெளியே வந்த நேரம், மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான் அஸ்வின். அவனை பார்த்தவுடன், கால்களுக்கடியில் வேர் விட்டது போல அப்படியே நின்றாள் அபிநயா. அவனை அவள் அங்கு எதிர்பார்க்கவில்லை.

"உன் கையில என்ன?" அவள் அருகில் வந்து, அந்த கிண்ணத்தை பார்த்தான்.

"இன்னைக்கு என்ன ஸ்பெஷல், பாயசம் செஞ்சிருக்க?"

அபிநயா மெல்ல சமையலறையின் பக்கம் கண்களை ஓட விட்டாள். அங்கு சுபத்ரா புன்னகையுடன் நின்றிருபதை பார்த்து, வேறுவழியின்றி அஸ்வினை பார்த்து அசடு வழிந்தாள்.

"இந்தப் பாயசம் எனக்காகவா?"

ஆமாம் என்று தயக்கத்துடன் தலையசைத்தாள் .

"அடடே... என்னோட ஸ்வீட்ஹார்ட், எனக்காக ஸ்வீட் செஞ்சிருக்காளா?" என்றான் எதுகை மோனையுடன்.

அந்தக் கிண்ணத்தில் இருந்து, ஒரு தேக்கரண்டி பயத்தை எடுத்து, சுவைத்துப் பார்த்தான்.

"கிரேட்..."

இன்னொரு தேக்கரண்டி பாயசம் எடுத்து சாப்பிட்டான்.

"இந்த பாயசம் செஞ்ச கைக்கு நான் ஏதாவது கொடுக்கணும்..." என்று கூறிவிட்டு, சிறிதும் தாமதிக்காமல் அவள் கையை பிடித்து முத்தமிட்டான்.

தன் கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டாள் அபிநயா. அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவளை சோபாவில் அமர வைத்து அவளுக்கும் பாயசத்தை ஊட்டி விட்டான். வேறு வழியின்றி அதை விழுங்கி வைத்தாள் அபிநயா. அவள் இதழ் ஓரத்தில் துளி பாயசம் ஒட்டிக்கொண்டிருந்ததை பார்த்து, அதை தன் ஆள்காட்டி விரலால் துடைத்து, அவள் எதிர்பாராத வண்ணம், தன் வாயில் வைத்து சப்பு கொட்டினான். அவளுடைய கண்கள் பாப்கான் பொறிவது போல் வெளியே வந்தது.

"உன் உதட்டை தொட்டதால, இது ரொம்ப ஸ்வீட்டா இருக்கு" என்றான் அவள் மன உறுதியைக் குலைக்கும் வண்ணம்.

அப்போது அவர்கள் சுபத்ரா இரும்பும் சத்தத்தை கேட்டார்கள். அவர் நின்றிருந்த திசையை நோக்கி திரும்பினான் அஸ்வின். அவர் அங்கு இருப்பது, அவனுக்கு தெரியவே தெரியாது என்பது போல சற்றே தடுமாறினான்.

"அக்சுவலி, பாட்டி... நீங்க இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது"

"நம்ம ஏதாவது ஒரு விஷயத்தில் மும்முரமா இருக்கும் போது இது நடக்கிறது சகஜம் தான்..." என்று கூறிவிட்டு, புன்னகையுடன் அந்த இடத்தை விட்டுச் சென்றார் சுபத்ரா.

அபிநயாவுக்கு கத்தி அழ வேண்டும் போல் தோன்றியது. ஏன் தான் அவள் திட்டமிடும் அனைத்தும் அவளுக்கு எதிராகவே திரும்பி விடுகிறதோ...!

அங்கிருந்து செல்ல எண்ணி, அவள் வேகமாக ஒரு அடி எடுத்து வைக்க, கீழே விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தில் அவள் கால் தடுக்கி விழ போனவளை தாங்கிப் பிடித்தான் அஸ்வின். அவனிடமிருந்து விலகி செல்ல அவள் எண்ணிய போது, தருணின் குரல் கேட்டு அப்படியே நின்றாள்.

"அபி, உனக்கு என்ன ஆச்சு?" என்றான் தருண்.

ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான் அஸ்வின். அபிநயாவும் தன் பல்லை கடிப்பதை பார்த்து, அவன் அமைதியானான், அவள் என்ன செய்யப் போகிறாள் என்று பார்க்க. அவன் எண்ணியது போலவே அவன் கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டாள் அபிநயா.

"அஸ்வின், எனக்கு கால் சுளுக்கிடுச்சுன்னு நினைக்கிறேன். என்னை ரூம் வரைக்கும் கூட்டிக்கிட்டு போறீங்களா?" என்றாள்.

அவ்வளவு தான்... இப்படி ஒரு சந்தர்ப்பத்தை தவற விட்டு விடுவானா என்ன அஸ்வின்? அவர்கள் இருவரும் எதிர்பாராத வண்ணம், அவளைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டான். தருண் மட்டுமல்ல, அபிநயாவும் அதிர்ச்சியடைந்தாள். அஸ்வின் தன்னை கைத்தாங்கலாய் அழைத்துச் செல்வான் என்று அவள் எதிர்பார்த்திருந்தாள். ஆனால், அவன் சந்தர்ப்பத்தை இப்படி பயன்படுத்திக் கொள்வான் என்று அவன் நினைக்கவில்லை.

தன் அறையை நோக்கி சிரித்தபடி வீர நடை போட்டான் அஸ்வின். அவர்களை வெறித்து பார்த்துக் கொண்டு நின்றிருந்த தருண், தன் முதுகை யாரோ தொட்டதை உணர்ந்தான். அங்கு சுபத்ரா நின்று கொண்டிருப்பதை கண்டான்.

"பாத்தியா, அஸ்வினும் அபிநயாவும் எவ்வளவு ஒற்றுமையா சந்தோஷமா இருக்காங்கன்னு...? அது தான் திருமண பந்ததுடைய சிறப்பு... அது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வைக்கும்..."

வாயடைத்து நின்றிருந்தான் தருண். இந்த திருப்பத்தையும் அவன் எதிர்பார்க்கவில்லை.

"நீ புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன். அஸ்வின் ரொம்ப நல்லவன். அவனை சார்ந்தவங்களுக்கு அவன் எல்லாவிதத்திலும் நல்லது செய்வான். ஆனா, அவனுக்கு துரோகம் செஞ்சா, அவன் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்துடுவான். அபிநயா அவனுடைய மனைவி. அவன் அவளை காதலிக்க ஆரம்பிச்சிடான். அதை மறந்துடாதே."

"எனக்கு என்னவோ, அவங்க ரெண்டு பேரும், நமக்கு முன்னாடி நடிக்கிறாங்கன்னு தோணுது..."

"அப்படியா? என்கூட வா பாக்கலாம்..."

அவன் கையைப் பிடித்து அஸ்வின் அறையை நோக்கி அழைத்துச் சென்றார் சுபத்ரா.

அபிநயாவை சோபாவில் அமர வைத்துவிட்டு, அலமாரியை நோக்கி சென்றான் அஸ்வின். சோபாவைவிட்டு எழுந்திருக்க அவள் எண்ணிய போது, கதவின் பின்னால் சுபத்ராவின் புடவை தென்பட்டது. அவள் தன் பல்லை நறநறவென்று கடித்தாள். இந்த வீணாய் போன தருணுக்கு வேறு வேலையே இல்லையா? அவளை அவன் நிம்மதியாக இருக்கவிட மாட்டானா? என்ன தான் ஜென்மமோ...!

அஸ்வின் தன் கையில் ஒரு ஜெல்லோடு வந்தான்.

"இரு நான் உனக்கு மசாஜ் பண்ணி விடுறேன்"

"மசாஜா...? நீங்க செய்ய போறீங்களா...?" என்றாள் ஆச்சரியமாக.

"எனக்குள்ள ஏராளமான திறமைகள் ஒளிஞ்சிகிட்டு இருக்கு. நீ தான் அதை எல்லாம் காட்ட விட மாட்டேங்கற" என்றான் சிரித்தபடி.

"பரவாயில்ல, அஸ்வின். எனக்கு அவ்வளவு ஒன்றும் வலியில்லை."

"அவ்வளவு வலி இல்ல.. ஆனா வலி இருக்கு இல்ல?"

அபிநயா அமைதியானாள். உண்மையில் சொல்லப் போனால் அவளுக்கு சுத்தமாக வலியே இல்லை. ஆனால் இப்போது, அவள் அவனை தடுக்க முடியாது. அது தேவையில்லாத விவாதத்தை ஏற்படுத்தும். அது நிச்சயம் சுபத்ராவின் முன் நடக்கக் கூடாது.

அவள் எதிரில் அமர்ந்து கொண்டு, அவள் காலை தன் மடியில் வைத்துக்கொண்டான் அஸ்வின். சிறிது ஜெல்லை எடுத்து, அவள் காலில் தடவி, மெதுவாய் நீவி விட்டான். முதன் முறையாக, இந்த மனிதன் தன் கணவனாகவே இருந்துவிடக் கூடாதா, என்று ஏங்கி போனாள் அபிநயா. அவன் அவளுடைய கணவன் தான்... ஆனால் அதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவள் இல்லை. அஸ்வின் போன்ற நல்ல மனிதன், அவன் விரும்பியதை அடைய வேண்டும். அவன் விரும்பிய பெண்ணுடன் அவன் சந்தோஷமாக வாழ வேண்டும். இவ்வளவு இனிமையான ஒருவனை எப்படித் தான் அந்த பெண் விட்டுவிட்டு இருக்கிறாளோ.

அஸ்வின் மெதுவாய் தன் கண்களை உயர்த்தி, அவளுடைய ஆழமான பார்வை தன் மீது இருப்பதை கவனித்தான்.

"நீங்க எல்லாருக்கும் இதே மாதிரி தான் செஞ்சு விடுவீங்களா?"

"என்னுடைய பொண்டாட்டிக்கு மட்டும் தான் செய்வேன்..."

தன் வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பதை உணர்ந்தாள் அபிநயா. அந்த உணர்வுக்கு ஆட்பட்டதில் சுபத்திரா அங்கிருந்து சென்றுவிட்டதை அவள் கவனிக்கவில்லை.

"போதும் அஸ்வின்... உங்களுக்கு கை வலிக்க போகுது..."

"நான் பூவை தான் தொடுறேன், பாரங்கல்லை இல்ல..."

அவள் காலை பார்த்துக்கொண்டு, மெல்ல வருடியபடி கூறினான். அது அவள் மேனி முழுவதையும் சிலிர்க்க செய்தது. அவன் பிடியிலிருந்து தன் காலை விடுவிக்க எண்ணி தன் பக்கம் இழுத்தாள். அவள் காலை இறுகப் பற்றிக்கொண்டான் அஸ்வின்.

"இரு இன்னும் நான் முடிக்கல..."

"இப்போ எனக்கு வலி பரவாயில்ல..."

"நிஜமா தான் சொல்றியா?"

"ஆமாம்..."

அவள் சோபாவில் இருந்து எழுந்து நின்று அங்கு பாட்டி இருக்கிறாரா என்று கவனித்தாள். அவர் இல்லாததால் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

அவள் சேலை முந்தானையை பற்றி, அவளைத் தன் பக்கம் இழுத்தான் அஸ்வின். அவள் அவன் மடியில் விழ, பின்னால் இருந்து, அவள் இடையை சுற்றி வளைத்துக் கொண்டான்.

"என்னை விடுங்க, அஸ்வின்"

"ஏன்?"

"எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு"

"நான் தான் சொன்னேனே, நீ சங்கடப்பட வேண்டிய அவசியம் இல்லன்னு"

"முதல்ல என்னை விடுங்க..."

"நீ ஏன் இப்படி இருக்க? நான் எவ்வளவு அழகா உன் காலை மசாஜ் பண்ணிவிட்டேன்... அதைக் கூட நினைக்க மாட்டியா?"

"நான் உங்களை மசாஜ் பண்ண விட்டேன்... ஏன்னா, பாட்டி நம்மளை கவனிச்சிகிட்டு இருந்தாங்க"

"நம்மளை யார் கவனிக்கிறாங்க அப்படினெல்லாம் எனக்கு கவலை இல்ல"

அதை கூறிய போது அவன் பிடி மேலும் இறுகியது. அபிநயாவுக்கு நெருப்பின் மீது அமர்ந்திருப்பது போல் தோன்றியது. அஸ்வின் மடியில் அமர்ந்திருப்பது, அவளுக்கு சொல்லவொண்ணா சங்கடத்தை ஏற்படுத்தியது. போதாதென்று, அவன் அவள் இடுப்பை வேறு வளைத்துக் கொண்டிருக்கிறான். எவ்வளவோ முயற்சித்தும், அவன் பிடியில் இருந்து வெளிவர முடியாமல், வேறு வழியில்லாமல், மூச்சுவாங்க அவன் தோளில் சாய்ந்தாள். அவள் கண்ணத்தில் கலைந்து ஓடிய குழலை ஒதுக்கிவிட்டு, அவள் கன்னத்தை மெல்ல முத்தமிட்டான். மறுபடி, அவன் கரங்களில் இருந்து வெளிவர முயற்சித்தாள் அபிநயா.

"ஏன் இப்படியெல்லாம் செய்றீங்க?"

"ஏன்னா, நீ என்னோட வைஃப்"

"நான் உங்களை என் கணவனா ஏத்துக்கல"

"அது வரைக்கும் என்னால காத்திருக்க முடியாது"

பின்னால் திரும்பி அவனை முறைத்தாள்.

"நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா?"

"எனக்கு தெரியாது" என்றாள்.

"நான் விளக்கிச் சொல்றேன்"

"போதும் நிறுத்துங்க"

"நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லயே"

"தயவுசெய்து என்ன விடுங்க, அஸ்வின்" என்று கெஞ்சினாள்.

தன் பிடியை தளர்த்தினான் அஸ்வின். அந்த அறையிலிருந்து சிட்டாய் பறந்து சென்றாள் அபிநயா.

அப்படியே சோபாவில் சாய்ந்தான் அஸ்வின். தான் அபிநயாவுடன் இருந்த போதே, தருண் சிறிது கூட தயக்கமே இல்லாமல் அவளுக்கு உதவ ஓடி வந்ததை எண்ணினான். தன் கைப்பேசியை எடுத்து தருணின் நண்பன் கண்ணனுக்கு ஃபோன் செய்தான். இரண்டாவது மணியிலேயே எடுத்து பேசினான் கண்ணன்.

அவன் செய்ய வேண்டியது என்ன என்பதை கூறினான் அஸ்வின். அவன் கூறியதை ஏற்றுக் கொண்டு அழைப்பை துண்டித்தான் கண்ணன்.

தன் மடிக்கணினியுடன், கண்ணனும் தருணும் பேசுவதை கேட்க தயாராக இருந்தான் அஸ்வின். தாங்கள் பேசுவதை அஸ்வின் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பது கண்ணனுக்கு தெரியாது. கண்ணன், தருணுக்கு ஃபோன் செய்யும் அதே நேரம், அஸ்வினுடைய கைப்பேசிக்கும் அழைப்பு வரும்... அவனும் அவர்களுடன் தொடர்பில் இருப்பான்... அது போலத் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அஸ்வின் எதிர்பார்த்திருந்ததைப் போல் அவன் கைபேசியும் ஒலித்தது... தருணும், கண்ணனும் பேசுவதை கேட்க தயாரானான் அஸ்வின்.

தொடரும்....































Bạn đang đọc truyện trên: AzTruyen.Top