24 புளுகு மூட்டை

24 புளுகு மூட்டை

அஸ்வினின் கார் உள்ளே நுழைவதை கவனித்தான் தருண். அவனுடைய சதிகார மூளை வேகமாக வேலை செய்தது. அவன் ஏற்கனவே அபிநயாவை குழப்பியாகிவிட்டது. இது, அஸ்வினை கோபப்படுத்தி பார்க்க வேண்டிய நேரம். அவனுக்கு தெரியாதா என்ன, அஸ்வினின் பொல்லாத கோபத்தை பற்றி? அஸ்வினுக்கு கோபம் வந்து விட்டால், அவனுக்கு கண், மண் தெரியாது. என்ன செய்ய வேண்டும் என்பதை வேகமாக தீர்மானித்தான் தருண். அங்கிருந்து நேராக அஸ்வினின் அறையை நோக்கி ஓடினான். வெளியில் நின்றபடி, மெதுவாக அறையின் உள்ளே நோட்டம் விட்டான். அறையில் அபிநயா இல்லாததால், உள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொண்டு, கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

அறையினுள் நுழைந்த அஸ்வின், தருண் தன் கட்டிலில் அமர்ந்திருப்பதை கண்டு அப்படியே ஒரு கணம் சிலையாக நின்று, கேள்விக்குறியுடன் தருணை பார்த்தான். திடீரென அஸ்வின் வந்துவிட்டதால் பதட்டமானதை போல் நடித்தான் தருண்.

"அஸ்வின் நீ... நீ...வந்துட்டியா....? நீ சீக்கிரம் வந்துடுவேன்னு அபிக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன். அதனால தான் அவ என்னை வர சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன்."

அவன் எதை நிரூபிக்க முயல்கிறான் என்று புரிந்து போனது அஸ்வினுக்கு. அபிநயாவை பற்றி அவனுக்கு தெரியாதா என்ன?

"பழசை எல்லாம் மறந்திட சொல்லி உனக்கு புத்திமதி சொல்ல உன்னை வர சொல்லி இருப்பா. அவ உன் அண்ணி இல்லயா?"

தன் முகத்தை பூ துவாலையால்
துடைத்தபடி, குளியலறையிலிருந்து அபிநயா வெளியே வருவதைக் கண்டார்கள் அவர்கள். அவர்களின் அறையில் தருண் இருப்பதை பார்த்து முகம் சுளித்தாள் அவள். அவளுடைய பார்வை தருணின் மீது அருவருப்பை உமிழ்ந்தது. அதை படிக்க தவறவில்லை அஸ்வின்.

"நீங்க எப்ப வந்தீங்க? இவன் இங்க என்ன பண்றான்?" தருணை சுட்டிக்காட்டி கேட்டாள் ஸ்ருதி.

"நான் தான் அவனை வர சொன்னேன்"  என்றான் அஸ்வின்.

"ஓ..." தன் கையில் இருந்த பூ துவாலையை சோபாவின் மீது எறிந்து விட்டு, அங்கிருந்து நீச்சல் குளத்தின் பக்கம் சென்றாள்.

அஸ்வின் மிக சர்வ சாதாரணமாக இருப்பதை பார்த்து,  தருண் வாயடைத்துப் போனான். அஸ்வினுக்கு கோபத்தை மூட்டிவிட்டு, அவர்களுக்கிடையில் ஒரு பிளவை ஏற்படுத்தும் எண்ணத்தோடு அவன் இங்கு வந்திருந்தான்.

*தருண் ஏன் நம் அறைக்கு வந்தான்?* என்று அஸ்வின், அபிநயாவை கேட்பான் என்று எதிர்பார்த்தான் தருண். அபிநயாவும், அஸ்வின் தன்னை சந்தேகப்படுகிறான் என்று கோபம் கொள்வாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் இல்லை... அவனுடைய *இருப்புக்கு* எந்த முக்கியத்துவமும் அஸ்வின் அளிக்கவில்லை. அவன் தான் தன்னை அழைத்ததாக அபிநயாவிடமும் கூறிவிட்டான். என்ன இது?

தன் கையிலிருந்த மடிக்கணினியை, மேஜை மீது வைத்தான் அஸ்வின். அபிநயா சோபாவின் மீது வீசி விட்டுச் சென்ற பூ துவாலையை எடுத்தபடி பேசினான்.

"அபி சொன்னதை நீ கேட்டிருப்பேன்னு நினைக்கிறேன். கிளம்பு இங்கிருந்து..."

ஏதோ சொல்ல வந்த தருணை, தன் கையை காட்டி நிறுத்தினான் அஸ்வின்.

"நான் ஏதாவது செய்யறத்துக்குள்ள நீ இங்கிருந்து போயிட்டா உனக்கு நல்லது" என்று எச்சரித்தான்.

அவன் முகத்தில் தெரிந்த கோபத்தை பார்த்து, இரண்டு அடி பின்னால் நகர்ந்த தருண், அங்கிருந்து அவசரமாக வெளியேறினான்.

தருணுடைய  கேவலமான செயலை நினைத்து மனதிற்குள் புழுங்கினான் அஸ்வின். அருண் சொன்னது சரி தான். தருண், திருந்தும் குணம் கொண்டவன் அல்ல. அவனை சாதாரணமாக எடுத்துக் கொள்வது தவறு. அவனை ஏதாவது செய்தாக வேண்டும்.

அபிநயா உள்ளே நுழைவதை பார்த்தான் அஸ்வின். தருண் இங்கு இருந்ததால் தான், அவள் வெளியே சென்றிருக்க வேண்டும். அலமாரியை நோக்கி சென்றவன், அதிலிருந்து ஒரு கொத்து சாவியை எடுத்தான்.

"அபி..."

"என்ன?" என்பது போல் அவனை பார்த்தாள் அபிநயா. அவள் கையில் அந்த கொத்து சாவியை திணித்தான்.

"நீ எப்போ தனியா இருந்தாலும் எல்லா கதவையும் பூட்டிக்கோ."

அவனை குழப்பத்துடன் பார்த்தாள் அபிநயா.

"நம்ம வீட்டிலேயே ஜாக்கிரதையா இருன்னு சொல்ல எனக்கு ரொம்ப வருத்தமா தான் இருக்கு"

ஏதோ நடந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டாள் அபிநயா.

"அவனை நீங்க இங்க கூப்பிடலயா?"

இல்லை என்று தலையசைத்தான் அஸ்வின்.

"அவன் என்ன சொன்னான்?" என்றாள் கோபமாக.

"அதை விடு..."

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க"

"நீ தான் அவனை வர சொன்னதா சொன்னான்"

"அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?" என்றாள் பல்லைக் கடித்தபடி.

அவனோடு சண்டை போட அங்கிருந்து அவள் செல்ல முயன்ற போது, அவளை வழி மறித்து நின்றான் அஸ்வின்.

"நீ எங்க போற?"

"அவனை நாக்க பிடிங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன்..."

"அவசரப்படாதே.  உன் கவனத்தை அவன் பக்கம் திருப்ப தான் இதெல்லாம் செய்யறான். அவன் நெனச்சதை நீ செஞ்சா, அவன் திரும்பத் திரும்ப இதையே தான் செஞ்சுகிட்டு இருப்பான். அவனை மதிக்காம விட்டுட்டு, உன்னோட  பாதுகாப்பை மனசுல 
வச்சுக்கோ."

"நீங்க என்ன சொல்றீங்க? நான் இங்க தான் என் வாழ்நாள் பூரா இருக்கப் போறேன். இந்த இடம் எனக்கு பாதுகாப்பா இல்லன்னா, நான் எப்படி நிம்மதியா இருக்கிறது?"

"அதுக்காக தான் இந்த சாவியை நான் உன்கிட்ட கொடுத்தேன். நீ எப்பவெல்லாம் தனியா இருக்கியோ, அப்பவெல்லாம் பூட்டிக்கிட்டு பத்திரமா இரு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இதுக்கு நான் ஒரு முடிவு செய்யறேன். உனக்கு நான் இருக்கேன். உன்னை விட, எனக்கு வேற யாரும்... வேற எதுவும்... முக்கியமில்ல."

தன் கண்களை சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அபிநயா. அவள் அப்படி பார்ப்பதை பார்த்து புன்னகை புரிந்தான் அஸ்வின்.

"நான் ஒத்துக்குறேன்... இந்த கல்யாணம் உன்னை வற்புறுத்தி தான் நடந்தது. அதுக்காக, நமக்குள்ள ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்திக்க முடியாம போயிடாது. நீ என்கிட்ட எதை வேணாலும் பகிர்ந்துக்கலாம். தயங்க வேண்டிய அவசியமில்ல"

அபிநயாவால் நம்பவே முடியவில்லை, தான் கேட்பதெல்லாம் உண்மை தான் என்று. எவ்வளவு அருமையான மனிதர் இவர்...  எவ்வளவு இனிமையாக பேசுகிறார்... எவ்வளவு பாதுகாப்பு உணர்வோடு இருக்கிறார்... ஒவ்வொரு பெண்ணும், தனக்கு வரப்போகும் கணவன், இப்படித் இருக்க வேண்டும் என்று தானே விரும்புவார்கள்...!  இவர் மனதில் இடம் பிடித்திருக்கும் அந்த பெண் மிகவும் கொடுத்து வைத்தவள். அவரை திருமணம் செய்து கொண்டுவிட்ட பிறகும் கூட, அவரோடு சேர்ந்து வாழும் கொடுப்பினை தனக்கு இல்லை. விதி அவரோடு சேர்ந்து வாழ அவளை அனுமதிக்க வில்லை, என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். தன் மனம் அஸ்வினை நோக்கி இழுக்கப்படுவதை உணர்ந்து, அங்கிருந்து சென்றுவிட நினைத்தாள். ஒரு அடி எடுத்து வைத்த பொழுது,

"அபி..." என்று அவளை அழைத்தான் அஸ்வின்.

தன் புருவத்தை உயர்த்தி, *என்ன?* என்று சைகையால் கேட்டாள்.

"உன்னோட வாய்ஸ் மெசேஜை கேட்டேன்..."

"ம்ம்ம்..."

"நீ தருணை கையாண்ட விதம், எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதுல நீ சங்கடப்பட எதுவுமில்ல. நம்ம கணவன்-மனைவி தானே...?"

சர்வசாதாரணமாக தெரிந்த அவன் முகம், அவளுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எப்படி இவனால் சகஜமாக இருக்க முடிகிறது? அவனுக்கென்று  உணர்வுகள் இல்லையா? குடும்பத்தின் மீது அவனுக்கு ஏன் இப்படி ஒரு பற்று...?

"இங்க பாருங்க அஸ்வின்..."

"பாத்துகிட்டு தானே இருக்கேன்" என்றான் தன் கைகளை கட்டிக்கொண்டு.

"நான் என்னை காப்பாத்திக்க தான் தருண்கிட்ட அப்படி எல்லாம் பேசினேன். அதுக்காக, நான் உங்களை என்னுடைய கணவனா ஏத்துக்கிட்டேன்னு அர்த்தமில்ல..."

"நீ என்னை கணவனா ஏத்துக்கிட்டேன்னு  நான் எப்ப சொன்னேன்? நீ பேசுனது எனக்கு சந்தோஷமா இருந்ததுன்னு தான் சொன்னேன்... நமக்குள்ளே, நீ சொன்ன மாதிரி எதுவுமே நடக்கலனாலும், அதை கேக்கும் போது நல்லா இருந்துது"

அவள் முதலிரவைப் பற்றி பேசியதை தான் கூறுகிறான் என்று அவளுக்கு புரிந்து போனது. அது அவளுக்கு சங்கடத்தை தந்தது. அவள் அங்கிருந்து விருவிருவென கிளம்பி சென்றாள்.

இரவு

இப்போது அபிநயா என்ன செய்யப் போகிறாள் என்று பார்க்க ஆவலாக இருந்தான் அஸ்வின். இன்றும் கூட அவள் நீச்சல் குளத்தின் பக்கத்தில் போய் படுத்துக் கொள்வாளா? மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவன், அவள் குளியல் அறைக்கு, இரவு உடையை மாற்றி கொண்டு வர செல்வதை  கவனித்தான். தனது மடிக்கணினியை அணைத்துவிட்டு, கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.

உடை மாற்றிக் கொண்டு வந்த அபிநயா, அவன் கட்டிலில் படுத்திருப்பதை பார்த்து திடுக்கிட்டு நின்றாள். கட்டிலில் படுத்தபடி விட்டத்தை பார்த்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருப்பதை போல பாசாங்கு செய்தான் அஸ்வின்.

"நீங்க ஏன் கட்டில்ல படுத்திருக்கீங்க?"

"நான் எப்பவுமே கட்டில்ல தானே படுப்பேன்...?"

"ஆனா..."

"ஓ... நீ அதை பத்தி கேக்குறியா? நேத்து நீச்சல் குளத்து பக்கம் தரையில் படுத்தது, எனக்கு முதுகெல்லாம் ஒரே வலி! அதுக்கும் மேல ஒரே கொசுக்கடி... என்னால தூங்கவே முடியல. எப்படி இருந்தாலும், நீ நீச்சல் குளத்து பக்கத்துல தான் தூங்க போற. அதனால நான் இங்கேயே தூங்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். குட் நைட்"

அவள் அங்கேயே தயக்கத்துடன் நிற்பதைப் பார்த்தான்.

"என்ன?"

"ஆக்சுவலா..."

"ஆக்சுவலா?"

"நான் எப்படி நீச்சல் குளத்து பக்கத்துல தூங்குறது?"

"நேத்து தூங்கின மாதிரி தான்"

"என்னால முடியாது"

"ஏன்?"

"அவன் தான் வந்துட்டானே..."

"யாரு?"

"அந்த ராட்சசன் தான்..."

"ஓ... தருணை சொல்றியா?"

"ஆமாம்..."

"அதனால் என்ன?"

"அவனை நான் நம்ப மாட்டேன்"

"அஃப் கோர்ஸ், நானும் தான்..."

"அவன் எப்படிப்பட்டவன்னு, உங்களால் நினைச்சி கூட பாக்க முடியாது"

"ஆனா, நீ எதுக்கு அவனை பத்தி கவலைப் படுற? நீ தான் ஜான்சி ராணி ஆச்சே.... கத்தி எடுத்து, ஒரே குத்தா குத்திடுவியே..."

"தேவைப்பட்டா நான் நிச்சயமா செய்வேன்"

"அப்புறம் எதுக்கு பயப்படுற?"

"நான் தூங்கிட்டா என்ன செய்யறது?"

"கண்டிப்பா நீ தூங்குவ. நான் தான் நேத்து பார்த்தேனே... நீ நல்லா தூங்கின... எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம..."

"அதனால தான் நான் பயப்படுறேன். உங்க தம்பி என்ன செய்வான்னு உங்களுக்கு தெரியாது..."

"என்ன செய்வான்?" தனக்கு ஒன்றுமே தெரியாதது போல் கேட்டான் அஸ்வின்.

"குளோரோஃபார்ம் கொடுத்து மயங்க செய்வான்."

"அப்ப அது நிச்சயம் ஆபத்தான விஷயம் தான். இப்ப நீ என்ன செய்யப் போற?"

"நான் இங்கயே தூங்குறேனே..."

அதைக் கேட்டு புன்னகை புரிந்தான் அஸ்வின்.

"இதை சொல்லத் தான் இவ்வளவு தூரம் சுத்தி வளைச்சியா? இந்த ரூம் உன்னுடையதும் தான். இங்க என்ன செய்யவும் உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. புரிஞ்சுதா?"

புரிந்தது என்று தலையசைத்தாள் அபிநயா.

"கட்டிலில படுத்துக்கோ. நான் சோபாவில் படுத்துக்கிறேன்."

"இல்ல வேண்டாம். நீங்களும் கட்டில்ல படுத்துக்கோங்க."

"ஒருவேளை, என்னை கட்டுப்படுத்த முடியாம, நான் ஏதாவது செஞ்சுட்டா?"

"என்ன்னனது...?" என்று அதிர்ந்தாள் அபிநயா.

சிரித்தபடி, கட்டிலை விட்டு இறங்கி சென்றான் அஸ்வின். பேயை பார்ப்பது போல், அவனைப் பார்த்துக் கொண்டு நின்ற அபிநயா, தன்னை சுதாகரித்துக் கொண்டு, கட்டிலில் படுத்துக் கொண்டாள். சிரித்தபடி சோபாவில் படுத்துக் கொண்டான் அஸ்வின். அவன் எதற்காக தருணை மீண்டும் அழைத்து வந்தானோ அதற்கான பலன் கிடைத்துவிட்டது. இனி எப்பொழுதும் நீச்சல் குளம் பக்கம் செல்வதை பற்றி அபிநயா யோசிக்க மாட்டாள்.

அபிநயாவுக்கு அஸ்வின் பேசிய வார்த்தைகள் நினைவில் வந்து சென்றன.

"நான் ஒத்துக்கறேன், உன்னை வற்புறுத்தித் தான் இந்தக் கல்யாணம் நடந்தது"

அவனையும் கூட வற்புறுத்தி தானே இந்தக் கல்யாணம் நடந்தது? அவன் காதலித்த பெண்ணை மறந்துவிட்டு, அவன் தன்னைக் மனந்து கொள்ளவில்லையா? அவளை வற்புறுத்தியதைப் பற்றி மட்டும் ஏன் அவன் பெரிதாக பேசுகிறான்? இந்த கேள்விகளை எண்ணிக்கொண்டு உறங்கிப் போனாள்.

மறுநாள் காலை

நீச்சல் குலத்தின் பக்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு, காஃபியைப் பருகியபடி, முதல் நாள், தருண் அவளை அஸ்வினின் பார்வையில் தவறாக காட்ட முயன்றதை எண்ணிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ரத்தம் கொதித்தது. அவனை இப்படியே சும்மா விட்டு விடக்கூடாது. அவனுக்கு வயிற்றெரிச்சலை தரும் வண்ணம் ஏதாவது செய்தாக வேண்டும்.

அஸ்வின் சொன்னது சரி தான். அவள் தருணை நேரடியாக தாக்கக்கூடாது. அவனுக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் அவனை கையாள வேண்டும். கண்ணை மூடியபடி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவள் கண்களை மூடி இருந்த போதும், அவளை யாரோ கண்காணிப்பது போல் தோன்றியது. தனக்கு தோன்றிய எண்ணத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல், இயல்பாக இருப்பது போல் பாசாங்கு செய்து கொண்டு, அது யார் என்று பார்த்தாள்.

இது போன்ற கீழ்த்தரமான காரியத்தை எல்லாம் அவனைத் தவிர வேறு யார் செய்வார்? தருண் ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டிருந்தான். அபிநயாவின் தலைக்குள் ஆயிரம் வாட்ஸ் பல்ப் ஒளிர்ந்தது. அவளுடைய கைப்பேசியை எடுத்து, அதை மியூட்டுக்கு மாற்றிவிட்டு, ஃபோனில் பேசுவது போல பாசாங்கு செய்தாள்.

"ஹாய் ப்ரீத்தீ"

"...….."

"நான் நல்லா இருக்கேன்... அஸ்வின் என் கூட இருக்கும் போது நான் நல்லா தானே இருப்பேன்? அவர் என்னை எப்படி பார்த்துக்கிறார் தெரியுமா? அவர கல்யாணம் பண்ணிக்க சொல்லி, என்னை வற்புறுத்தின எல்லாருக்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டு இருக்கேன். உனக்கு தெரியுமா, அவர் எப்ப ஆஃபீஸ்ல இருந்து வருவார்னு, காதலி, காதலனுக்காக காத்திருக்கிறா மாதிரி,  நான் காத்திருக்கேன். அவர் என்னை விட்டுட்டு ஆஃபிஸ் போகும் போது எனக்கு சுத்தமா பிடிக்கல. ரொம்ப கஷ்டமா இருக்கு..."

"....."

"என்னது...? எங்க அம்மா வீட்டுக்கா? என்னோட அஸ்வினை விட்டுட்டு நான் வரமாட்டேன்பா...."

"...."

"அவர் வந்தா கண்டிப்பா நானும் வருவேன்...... எனக்கு அவர் கூடவே இருக்கணும், அவருக்கு நெருக்கமா, அவ்வளவு தான்..."

"......."

"ச்சீ.... பர்சனலான விஷயத்தை எல்லாம் கேட்காதே. எனக்கு வெட்கமா இருக்கு" தன் முகத்தை கையால் மூடிக்கொண்டாள்.

"..."

"ஆமாம்....."

"....."

"அதுல நம்பாம இருக்கிறதுக்கு என்ன இருக்கு? இவ்வளவு அழகான புருஷன் என் பக்கத்தில் வரும் போது, நான் எப்படி வேண்டாம்னு சொல்றதாம்? எங்க கல்யாணத்துக்கு ஒரு அர்த்தத்தை நாங்க கொடுத்துட்டோம்..."

அபிநயா வரைமுறை இல்லாமல் புளுகி தள்ளிக் கொண்டிருந்தாள். அவள் செய்த காரியத்தில் அவள் முழு வெற்றி பெற்றாள் என்று தான் கூறவேண்டும். தருணின் வயிறு மட்டுமல்ல, எல்லாம் பற்றி எரிந்தது.

அழைப்பை துண்டிப்பது போல் பாசாங்கு செய்து விட்டு, உள்ளே செல்ல எழுந்தவளின் முகம்,  பேயறைந்தது போல் மாறியது. தன் கைகளை கட்டிக் கொண்டு, அவள் பேசுவதை, சிரித்தபடி கேட்டுக் கொண்டு நின்றிருந்தான் அஸ்வின்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top