23 தருணின் திட்டம்
23 தருணின் திட்டம்
பதட்டத்துடன் தன் நகத்தை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அபிநயா. அவள் பேசிய வார்த்தைகள், அவள் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
"எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல, எங்க ரூமுக்குள்ள என்ன நடக்குதுன்னு நான் உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல"
"எவ்வளவு தைரியமா பேசிட்டேன்... எங்கயிருந்து எனக்கு அவ்வளவு தைரியம் வந்தது...? அதுவும் எல்லாருக்கும் முன்னாடி..."
தன் நகத்துக்கு பதிலாக விரலை கடித்துக்கொண்டு,
"ஆஆஆ" என்று அலறினாள்.
தன் கடித்த விரலை பார்த்து சிரித்துக் கொண்டாள். நேற்று இரவு, அஸ்வின் உறங்கிய சோபாவின் மீது அவள் பார்வை பதிந்தது. அவர்களுக்கிடையில் நடந்த சண்டைகளை நினைத்துக் கொண்டாள். அவர்களின் குடும்ப கதையும் மிகவும் பாவமாக தான் இருக்கிறது. சிறுவயதிலேயே அம்மாவை இழந்து விட்ட அஸ்வின் மீது அவளுக்கு பரிதாபம் ஏற்பட்டது. அப்படி இருந்தும் கூட, தருணையும், அருணையும் அவன் ஏற்றுக் கொண்ட விதம், மிகவும் பெருமை படத் தக்கது. அப்படிப்பட்ட ஒருவனுக்கு மனைவியாக இருப்பது நல்ல விஷயம் தான். எல்லோர் முன்னிலையிலும் அவள் பேசிய வார்த்தைகளை அவன் எப்படி எடுத்துக் கொண்டானோ...! அவளுக்கு வயிற்றைப் பிசைந்தது. மறுபடியும் நகத்தை கடிக்க துவங்கினாள். அப்போது அஸ்வின் அவர்கள் அறையின் உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்தவுடன், பதட்டத்துடன் எழுந்து நின்றாள். அவள் முகத்தில் தெரிந்த, பெயரிடப்படாத அந்த பாவனை, அவன் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது.
"நான் இப்ப கல்யாணம் ஆனவ. எனக்குன்னு குடும்பம் ஆயிடுச்சு. அஸ்வின் தான் என்னோட ஹஸ்பண்ட். இது மாறாது... என் கடைசி மூச்சு வரை... அதை யாராலும் மாற்ற முடியாது... மறுபடி யாராவது அதைப் பற்றி பேசி என்னை வற்புறுத்த நினைச்சா, நீங்க என்னுடைய இறுதி சடங்கை தான் செய்ய வேண்டியிருக்கும்." என்று அபிநயா பேசிய வார்த்தைகளை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை அவனால். அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. பாட்டி சொன்னது உண்மை தான். "அபிநயா தன் கணவனை எப்பொழுதும் விட்டுக்கொடுக்க மாட்டாள்" என்று அவர் கூறினாரல்லவா?
அவன் அவளைப் பார்த்து புன்னகைத்த பொழுது, அங்கிருந்து பரபரவென நீச்சல் குளத்தின் பக்கம் ஒரு சென்றாள் அபிநயா. அவன் புன்னகை மேலும் விரிவடைந்தது, அவள் ஓடிய ஓட்டத்தை பார்த்த பொழுது. ஒரு துண்டுச் சீட்டில் அவனுடைய கைபேசி எண்ணை எழுதி, அவள் பார்க்கும்படி மேஜையின் மீது வைத்துவிட்டு, அலுவலகம் கிளம்பி சென்றான், ஒரு மிக முக்கியமான மீட்டிங் இருந்ததால்.
.........
தருண் தனது அறையில் இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்தான், அடிபட்ட நாகத்தைப் போல...! அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனால், யார் மீது கோபப்படுவது என்று தான் அவனுக்கு புரியவில்லை. அவன் இப்படி பட்ட மோசமான திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. அஸ்வின் எப்படி அபிநயாவை மணந்து கொண்டான்? அவன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக மனோஜும், அருணும், அன்றொரு நாள் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தார்களே... அப்படி இருக்கும் பொழுது, அவன் எதற்காக அவளை மணந்து கொண்டான்? இந்த விஷயத்தை, தனக்கு சதாகமாக பயன்படுத்திக் கொண்டால் என்ன?
அவனுடைய கிரிமினல் மூளை, துரிதமாக வேலை செய்தது. அபிநயா தன் அறையிலிருந்து வெளியே வருவதைப் பார்த்தான் அவன். அவள் இவனைப் பார்த்து விட்டாள் என்பதை உறுதி படுத்திக் கொண்டான். கையில் ஒரு கத்தியுடன், மெல்ல மெல்ல, ஒளிந்து, ஒளிந்து, சுபத்ராவின் அறையை நோக்கி சென்றான்.
அதைப் பார்த்தவுடன் அபிநயாவுக்கு நடுக்கம் ஏற்பட்டது. அவன் என்ன செய்யப் போகிறான்? தனக்கு சாதகமாக செயல்பட வில்லை என்பதால் பாட்டியை கொல்ல போகிறானோ? அவள் மெல்ல அவனை பின் தொடர்ந்து சென்றாள். அவள் தன்னை தொடர்கிறாள் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டான் தருண்.
அவன் கத்தியுடன் உள்ளே வருவதை பார்த்தார் சுபத்ரா.
"தருண்..."
அதிவேக நடையுடன் சென்று, அவர் காலடியில் கத்தியை வைத்து, முழங்காலிட்டு அவர் முன் அமர்ந்தான். அதைப் பார்த்து முகம் சுருக்கினாள் அபிநயா.
"என்ன செய்ற நீ?" என்றார் சுபத்ரா.
"என்னை கொன்னுடுங்க பாட்டி... தயவு செய்து என்னை கொன்னுடுங்க. நான் வாழ விரும்பல..."
"நான் சொல்றத கேளு. இப்படி எல்லாம் பேசாதே..."
"நான் என் அபியை இழந்துட்டேன். அவ இல்லாமல் என்னால வாழவே முடியாது. எனக்கு அவ வேணும், பாட்டி"
"போதும் நிறுத்து... அவ உன்னோட அண்ணி. அவள பத்தி நீ இதுக்கப்புறம் நினைக்க கூட கூடாது"
"அண்ணியா? எப்படி? ஊர் உலகத்துக்காக தான் அஸ்வின் அவளை கல்யாணம் பண்ணிகிட்டான், குடும்ப கவுரவத்தை காப்பாத்த...! அஸ்வினுக்கு உண்மையிலேயே என்ன வேணுமுன்னு நீங்க ஏன் நினைக்க மாட்டேங்கறீங்க? அவனுக்கு உணர்வுகள் இல்லயா? அவன் வேற ஒரு பெண்ணை மனசார காதலிக்கிறான். ஒரு நாள் ஆஃபீஸ்ல மனோஜும், அருணும், பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டேன். அவங்க ரெண்டு பேரும் விருப்பமில்லாம எதுக்காக இந்த கல்யாண வாழ்க்கையை வாழணும்? பாவம் அஸ்வின். விருப்பம் இல்லாத கல்யாணத்தை செஞ்சுக்க சொல்லி, அவனை வற்புறுத்தின போது, அவனுக்கு எவ்வளவு வேதனையா இருந்திருக்கும்?"
சுபத்ராவின் முகத்தில் குழப்ப ரேகைகள் ஓடியது. அவர் தருணை அதிர்ச்சியுடன் பார்த்தார். அஸ்வின் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறானா? அபிநயாவின் நிலையோ, வார்த்தைகளால் விவரிக்க முடியாததாக இருந்தது. அவள் தன் தொண்டையை அடைத்த ஏதோ ஒன்றை, விழுங்க முடியாமல் தவித்தாள்.
"எது எப்படி இருந்தாலும், அஸ்வின் இப்போ கல்யாணம் ஆனவன். அதை பத்தி மட்டும் தான் நாம யோசிக்கணும். இது அவனுடைய வாழ்க்கை. அவனுக்கு நல்லாவே தெரியும், அதை எப்படி சரி கட்டணும்னு. நீ அதைப் பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. உன்னுடைய மனசை மாத்திக்க."
"சூழ்நிலை சரியா அமையலங்குறத்துக்காக, நாங்க மூணு பேரும் கஷ்டப்படணுமா? அபி தான் என்னுடைய வாழ்க்கை. அவ என்னை கத்தியால குத்தினதுக்கு அப்புறம் கூட, நான் அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனச்சேன்னே, அதிலிருந்து உங்களுக்கு தெரியலயா, அவ தான் என்னுடைய வாழ்க்கைனு? என்னை மாதிரியே தானே அஸ்வினும் வேற ஒரு பொண்ணு மேல பிரியமா இருக்கான்? அப்படி இருக்கும் போது, அவன் அபிக்கு எப்படி ஒரு நல்ல புருஷனா நடந்துக்க முடியும்? அவ அன்புக்காக ஏங்குறதை, என்னால் பார்த்துக்கிட்டிருக்க முடியாது. நீங்க எப்பவுமே நியாயத்தின் பக்கம் தானே இருப்பீங்க? இப்ப மட்டும் ஏன் தயங்குறீங்க? பாழா போன சமுதாயத்தைப் பாத்து பயப்படுறீங்களா? தயவு செய்து எங்க வாழ்க்கையை கெடுத்துடாதீங்க. நம்ம குடும்பத்துக்கு அஸ்வின் தான் முதுகெலும்பு. ஆனா, எதுக்காக அவனே எல்லா வலியையும் தாங்கிகணும்? அவனும் மனுஷன் தானே? அவனுக்கு பிடிச்ச பெண்ணோட வாழுற தகுதி அவனுக்கு இல்லயா? அவன் எது மேலையுமே ஆசை படவே மாட்டான். அவன் முதல்முறையா நேசிச்ச பொண்ண அவன் கையில் இருந்து பறிக்கிறது எந்த விதத்தில் நியாயம்?
"என்னால இத நம்ப முடியல..."
"அஸ்வின் வேற ஒரு பொண்ணை விரும்புறான்னு நான் உங்களுக்கு நிரூபிச்சி காட்டிட்டா என்ன செய்வீங்க? அவன் விரும்புற அந்த பெண்ண தேடி கண்டு பிடிச்சு, நான் உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன்."
"மீதி கதையை, நம்ம அதுக்கப்புறம் பேசிக்கலாம்" என்றார் சுபத்ரா.
அபிநயா அங்கிருந்து வருத்தத்துடன் செல்வதைப் பார்த்தான் தருண். அவன் உள்ளூர நகைத்துக் கொண்டான். இனிமேல், அவள் அஸ்வினிடம் நெருங்கவே மாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும்.
"அஸ்வினும், அபியும், சந்தோஷமா இல்லன்னு நிரூபிச்சிட்டா, அவங்களுக்கு விவாகரத்து வாங்கி கொடுத்துடுவீங்க தானே?"
அதைக் கேட்டு சுபத்திரா அதிர்ச்சியானார்.
"எதிர்காலத்துல அவங்க ரெண்டு பேரும், ஒருத்தரை ஒருத்தர் ஏத்துக்க முடியாம தவிக்கிறதை பார்த்து, வருத்தப்படாதீங்க. தயவுசெஞ்சி இந்த கல்யாணத்தில் இருந்து அவங்களை விடுவிச்சிடுங்க."
அவன் சரியாக குறிபார்த்து கல்லை வீசினான். அவனுக்கு பதில் ஏதும் கூறாமல், அங்கிருந்து சென்றார் சுபத்ரா. தருண் நிம்மதி பெருமூச்சு விட்டான். ஆனால், அவனுக்கு தெரியாது, அவன் கடைசியாக பேசியதையும் அபிநயா கேட்டுவிட்டாள் என்பது. அவள் அங்கிருந்து செல்ல நினைத்தாள் தான். ஆனால், அஸ்வினைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள நினைத்தால், அங்கிருந்து செல்ல அவளுக்கு மனம் வரவில்லை. இப்பொழுது, அவளுக்கு தருணின் உண்மையான எண்ணம் என்ன என்பதும், என்ன செய்ய நினைக்கிறான் என்பதும் புரிந்துவிட்டது.
அங்கிருந்து தன் அறையை நோக்கி ஓடிச் சென்றாள். அமைதியாக கட்டிலில் அமர்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்தாள். அவளுக்கு உறுத்தலாக இருந்தது. அவள் யோசிக்காமல் திருமணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. தருணிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில், அஸ்வினின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவள் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டாள். தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ, எல்லா உரிமையும் இருக்கிறது அஸ்வினுக்கு. அவர்களின் குடும்பத்திற்காக தான் அவன், அவளை திருமணம் செய்து கொண்டுள்ளான். அவனுக்கு பிடிக்காத வாழ்க்கையை, பிடிக்காத பெண்ணுடன் அவன் ஏன் வாழ வேண்டும்? அஸ்வினுடைய வாழ்க்கையில் அவள் ஒரு தடைக்கல்லாக இருக்கக்கூடாது. அவனை அவன் வழியில் போக விட வேண்டியது தான், இவள் செய்ய வேண்டியது.
அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பாட்டியிடம் நிரூபிக்க முழு மூச்சுடன் செயல்படுவான் தருண். அவளை கொத்தித் தின்ன, கழுகைப் போல் காத்திருக்கிறான். அவள் சூழ்நிலையை சரியாக கையாள வேண்டும். தருணிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில், அவள் அஸ்வினுக்கு பாரமாகி விடக்கூடாது. அதே நேரம் அஸ்வினின் துணையின்றி தருணிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. அவளும், அஸ்வினும் சந்தோஷமாக வாழ்வதாக, பாட்டியை நம்ப வைத்தாக வேண்டும். அஸ்வினிடம் இருந்து விலகி இருந்த படி அதை செய்ய வேண்டும். என்ன சூழ்நிலை இது?
ஆனால், அவளை குழப்பிக் கொண்டிருந்த விஷயம் என்னவென்றால், எப்படி அஸ்வின் எதுவுமே நடக்காதது போல், இந்த திருமணத்தில் அவனுக்கு முழு சம்மதம் என்பது போல, சர்வ சகஜமாக இருக்கிறான்? குடும்பத்தின் மீது அவ்வளவு ஒட்டுதல் உள்ளவனா? குடும்பத்திற்காக உயிராய் நேசித்த காதலை யாராவது இழப்பார்களா? எவ்வளவு உயர்ந்த பண்பாளன் அவன்...! திருமணம் செய்து கொண்டுவிட்ட ஒரே காரணத்திற்காக அவளை தருணிடமிருந்து காப்பாற்ற எப்படி எல்லாம் பாடுபடுகிறான்...! தருண் கூறியது போல், அவன் அஸ்வின் காதலிக்கும் பெண்ணை அழைத்து வந்தால், அமைதியாக அவன் வாழ்வில் இருந்து விலகி விட வேண்டும், என்று நினைத்துக் கொண்டாள் அபிநயா, அஸ்வின் காதலிப்பது அவளைத் தான் என்ற உண்மை அறியாமல்.
அப்போது, அஸ்வின் அங்கு வைத்துவிட்டு சென்ற துண்டு சீட்டின் மீது அவள் பார்வை பதிந்தது. அதில் அஸ்வினின் கைபேசி எண் இருந்ததை பார்த்து, அவனுக்கு லேண்ட் லைன் மூலம் தொடர்பு கொண்டாள்.
*ஹோம்* என்ற பெயருடன் தன் கைபேசி ஒளிர்ந்ததை கவனித்தான் அஸ்வின்.
"ஹலோ... "
மறுபுறம் அமைதி.
"ஹலோ பாட்டி..."
மீண்டும் அமைதி.
அஸ்வின் ஒரு நொடி யோசித்தான்.
"அபி..." என்று அஸ்வின் சொல்ல, அழைப்ப துண்டிக்கப்பட்டது.
அவனுக்கு யார் ஃபோன் செய்தது என்று தெரியவில்லை. அவன் மறுபடி ஃபோன் செய்ய நினைத்த போது, மீட்டிங்குக்கு அவனை அழைத்தான் அருண். மீட்டிங்கில் இருந்து வந்த பிறகு, ஃபோன் செய்து கொள்ளலாம் என்று, தனது ஃபோனை *வாய்ஸ் மெயிலில்* போட்டுவிட்டு கிளம்பி சென்றான்.
இரண்டு மணி நேரம் கழித்து
மீட்டிங்கை முடித்துக் கொண்டு தனது அறைக்கு வந்த அஸ்வின், தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்க போனவன் கை அப்படியே நின்றது, அபிநயாவிடம் இருந்து வந்த வாய்ஸ் மெசேஜை பார்த்து. தண்ணீரை குடிக்காமல் அப்படியே பாட்டிலை மேஜை மீது வைத்துவிட்டு, அந்த மெசேஜை கேட்டான்.
"எல்லார் முன்னாடியும் நான் ரொம்ப வரம்பு மீறி பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டு, தருண் பாட்டியை தன் பக்கம் சேர்த்துக்க பார்த்தான். அதனால தான், நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். உங்களுடைய நிலைப்பாட்டை தெரிஞ்சுக்காம நான் பேசியிருக்க கூடாது. தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க."
அஸ்வின் கண்களை மூடி சிரித்தான். அவள் குரலில் இருந்த தயக்கம், அவன் உணர்ந்து கொள்ளும் விதத்தில் தான் இருந்தது. பரவாயில்லையே, அபிநயாவை வழிக்குக் கொண்டு வருவது ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்காது போல் தெரிகிறதே... என்று தனக்குத் தானே நினைத்துக்கொண்டான், தருண் அபிநயாவின் மனதில் ஏற்படுத்தியிருந்த மாற்றத்தை பற்றி தெரியாமல்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top