22 தீ பந்து

22 தீ பந்து

அபிநயாவை பார்த்தவுடன் தருணின் கண்கள் ஒளிர்ந்தன. சொல்லவொண்ணா சந்தோஷத்துடன், அவன் குதுகலமானான்.

"அபி... நீ இங்க தான் இருக்கியா? எனக்கு தெரியும், என்னோட பாட்டி உன்னை இங்கிருந்து போக விட மாட்டாங்கன்னு. தேங்க் காட், நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா?" என்று துள்ளிக் குதித்தான்.

முகத்தில் எந்த உணர்வும் இன்றி வரவேற்பறைக்கு வந்து நின்றாள் அபிநயா.

அப்போது, அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை பார்த்த தருணின் தொண்டை அடைத்தது. அவளை நோக்கி பரபரவென ஓடிச் சென்று, அவள் கழுத்திலிருந்த தாலியை தொட அவன் முயன்ற போது, அவர்கள் இருவருக்கும் இடையில் வந்து நின்றான் அஸ்வின்.

"அவளை அண்ணிணு கூப்பிடு..." என்றான் இறுகிய முகத்தோடு.

அதைக் கேட்டு அதிர்ந்து போன தருண்,

"என்னது, அண்ணியா?" என்றான் நம்பமுடியாமல்.

"அவ என்னோட வைஃப். எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு..."

"நோ...." என்று அலறினான் தருண்.

அவன் முகம் பேயறைந்தது போல் மாறியது.

"ஆமாம்... நீ விட்டுட்டு போன அன்னைக்கு, அதே மேடையில, நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..."

"இது கொஞ்சம் கூட நியாயம் இல்ல. நீ எப்படி அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்? அவ எனக்கு தானே நிச்சயமானவ...?"

"நீ எதுக்கு உன் கேர்ள் ஃப்ரெண்ட் கூட கல்யாணத்துல இருந்து ஓடிப்போன?" என்று அனல் கக்கிய அருணை நோக்கி திரும்பினான் தருண்.

"இல்ல... நான் அவ கூட ஓடிப் போகல. என்னை நம்புங்க..."

"வாய மூடு. நீ உன் கேர்ள் ஃபிரண்டை பார்க்க போகல? நான் தான் அங்க இருந்தேனே..."

தருண் சுபத்ராவை நோக்கி ஓடி சென்று அவர் கையைப் பற்றிக் கொண்டான்.

"பாட்டி, நான் ஒத்துக்குறேன் நான் என் ஃபிரண்டை பாக்க போனது உண்மை தான். ஆனா, அவ எனக்கு வெறும் ஃப்ரெண்டு தான். அவ கொஞ்ச நேரத்திலேயே அங்கிருந்து கிளம்பி போயிட்டா. என்னை யாரோ கடத்திடாங்க. என்னை நம்புங்க, பாட்டி."

"போதும்... ரீல் சுத்துறதை நிறுத்து." என்றான் அருண்.

"பாட்டி நீங்களாவது என்னை நம்புங்க"

"யார் உன்னை கடத்தினது?" என்ற கேள்வி எழுப்பினான் அருண்.

"அவங்க யாருன்னு எனக்கு தெரியாது. அவங்க என் முகத்தை மூடி வச்சிருந்தாங்க."

"நீ போய் முதல்ல குளிச்சிட்டு வா" என்றார் சுபத்ரா.

"இல்ல... இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வராம நான் போக மாட்டேன்..."

"எந்த பிரச்சனையை நீ முடிக்க நினைக்கிற?" என்றார் சுபத்ரா.

"அஸ்வின் அபியை கல்யாணம் பண்ணிகிட்டா இப்ப என்ன? நம்ம குடும்ப கௌரவத்தை காப்பாத்த தான் நீங்க அத செஞ்சிருப்பீங்கன்னு எனக்கு தெரியும்."

"அதனால?" என்றார் சுபத்ரா பதட்டத்துடன்.

"நான் தான் திரும்பி வந்துட்டேனே. எனக்கு அவளை கல்யாணம் பண்ணி வச்சிடுங்க. இதுல அஸ்வினுக்கு எந்த பிரச்சினையும் இருக்காதுன்னு எனக்கு தெரியும்"

"எனக்கு பிரச்சனை இருக்கு... எனக்கு எப்படி பிரச்சனை இல்லாம இருக்கும்? அவ என்னுடைய வைஃப்..." என்று கத்தினான் அஸ்வின்.

"கூல் அஸ்வின்... எதுக்காக நீ இப்படி டென்ஷன் ஆகுற? நான் தான் அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனச்சேன். உனக்கே நல்லா தெரியும் நான் அவளை எவ்வளவு காதலிச்சேன்னு..."

"அதெல்லாம் முடிஞ்சு போன கதை" என்று உறுமினான் அருண்.

"இன்னும் எதுவும் முடியல. கல்யாணம் ஆகி இன்னும் ரெண்டு நாள் கூட ஆகல..." என்று கூறிவிட்டு அபிநயாவை பார்த்தவன்,

"எதுவாயிருந்தாலும் அபி முடிவு பண்ணட்டும். நீங்க யாரும் இதுல தலையிட வேண்டிய அவசியம் இல்ல..." என்றான் அபிநயாவை பார்த்தபடி.

அஸ்வின் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டு இருந்தான். அவன் கோபம் நொடிக்கு நொடி உயர்ந்து கொண்டிருந்தது. அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க,

"அவர் சொல்றது சரி தான். நீங்க யாரும் இதுல தலையிட வேண்டாம். நானே பாத்துக்கிறேன்" என்று அபிநயா கூற, அஸ்வினை பதட்டம் தொற்றிக்கொண்டது.

"பாத்தீங்களா... இது தான் எனக்கு வேணும். அவ, அவ்வளவு சீக்கிரம் தன் மனசை மாத்திக்க மாட்டா. அவளோட வெகுளிதனத்தை யாரும் அட்வான்டேஜா எடுத்துக்க முடியாது."

மெல்ல சுபத்ராவின் பக்கம் வந்த அபிநயா,

"இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க பாட்டி?" என்றாள் அமைதியாக.

"அபி, நீ அவங்களை பத்தி கவலைப்பட வேண்டியதில்ல. அவங்களுக்கு எல்லாரையும் விட என்னை தான் ரொம்ப பிடிக்கும். என்னோட விருப்பத்துக்கு மாறா அவங்க எதுவுமே சொல்ல மாட்டாங்க." என்றான் தருண் குதூகலமாக.

சுபத்ரா மென்று விழுங்கினார். அஸ்வினின் கூர்மையான பார்வை, ஏற்கனவே அவரை குத்தி கிழித்துக் கொண்டிருந்தது.

"தருண் சொல்றதெல்லாம் உண்மையா பாட்டி?" என்றாள் அபிநயா.

சுபத்ரா தலைகுனிந்து நின்றார்.

"நீங்க உங்க குடும்ப கௌரவத்தை பத்தி நிறைய பேசுனீங்க. இன்னைக்கு உங்க குடும்ப கவுரவம் எப்படிப்பட்டதுன்னு நான் கண் கூடா பார்த்துக்கிட்டிருக்கேன். எங்க கல்யாணத்தன்னிக்கு, முதலிரவுக்காக அஸ்வினுடைய ரூமுக்கு என்னை அனுப்பி வச்சிங்க. இன்னைக்கு, நான் உங்க சின்ன பேரனோட போகணுமா? ரொம்ப நல்லா இருக்கு உங்க குடும்ப கௌரவம்..."

"அபிநயா..."

"சும்மா கத்தாதீங்க..."

"என்னது...? உங்களுக்கு முதலிரவு நடந்துடுச்சா?" என்றான் தருண் அதிர்ச்சியுடன்.

ஆமாம் என்று தலையசைத்தாள் அபிநயா.

"சுத்த பொய்... எனக்கு அஸ்வினை பத்தி நல்லா தெரியும்..."

"ஆனா, உனக்கு என்னை பத்தி தெரியாதுல்ல..." என்றாள் அபிநயா அலட்சியமாக.

"நான் இதை நம்ப மாட்டேன்"

"நம்பாத... யாரு அதைப் பத்தி கவலைப்பட போறது? நீ என்ன நினைக்கிற, என்ன நம்புறங்குறத பத்தி எனக்கு கவலை இல்ல. அதே நேரம், எனக்கும் என் புருஷனுக்கும் நடுவுல, எங்க ரூம்குள்ள என்ன நடந்ததுன்னு, நான் உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்ல"

அஸ்வின் குடும்பத்தினர் வாயடைத்துப் போய் நின்றார்கள். அவள் இப்படி வெளிப்படையாக தாக்கிப் பேசுவது அவர்களுக்கு மரண பயத்தை உண்டாக்கியது.

"நான் இப்ப கல்யாணம் ஆனவ. எனக்குன்னு குடும்பம் ஆயிடுச்சு. அஸ்வின் தான் என்னுடைய ஹஸ்பண்ட். இது மாறாது, என் கடைசி மூச்சு வரைக்கும்...! யாராலயும் மாத்தவும் முடியாது. மறுபடியும், யாராவது அதைப் பத்தி பேசி என்னை கட்டாயப்படுத்த நெனச்சா, நீங்க என்னோட இறுதி சடங்கை செய்ய வேண்டி இருக்கும்..." என்று கூறிவிட்டு, பேச்சிழந்து நின்றிருந்த சுபத்ராவின் மீது நெருப்பை உமிழ்ந்தாள்.

அஸ்வினோ சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனான். அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை அபிநயா இந்த விஷயத்தை இப்படி கையாள்வாள் என்பதை. இந்த விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்று அவள் சொன்ன பொழுது, அவன் மிகவும் மன வேதனைக்கு ஆளானான். ஆனால், அவனே கூட இந்த விஷயத்தை இவ்வளவு புத்திசாலித்தனமாக கையாண்டு இருப்பான் என்று சொல்ல முடியாது. இந்தப் பெண்ணுக்குத் தான் எவ்வளவு தைரியம்...! தீ பந்தை போலல்லவா சீறி பாய்ந்து விட்டாள்...!

"பாட்டி, அவ பொய் சொல்றா. அவ நம்ம வாயை அடைக்க தான் இந்த மாதிரி பொய் சொல்றா." என்றான் தருண்.

"வாய மூடு... அவ பொய் சொல்றதாவே இருந்தா கூட, இப்ப என்ன அதுக்கு? அத பத்தி பேச நீ யாரு? அவ மேல உனக்கு எந்த உரிமையும் கிடையாது. தம்பதிகளுக்கு நடுவுல என்ன நடக்குதுன்னு ஆராய்ச்சி பண்றது நமக்கு தேவை இல்லாத வேலை. அவ உன்னுடைய அண்ணி. உன் மனசுல இருக்கிற பழைய எண்ணங்களை எல்லாம், மூட்டை கட்டி தூக்கி போட்டுடு... ஒரேடியா..."

தருண் அதிர்ச்சியுடன் நின்றிருந்தான். அஸ்வினை நோக்கி தன் பார்வையை திருப்பிய சுபத்ரா, அவன் மெலிதாய் புன்னகைப்பதை கண்டார்.

"உனக்கு சத்தியம் பண்ணி கொடுக்கிறேன். அந்தப் பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளாக வந்ததுக்கு அப்புறம், நான் அவளை எதுக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன். எப்போதும் அவளுக்கு துணையா இருப்பேன்" என்று, அன்று அவர் கூறிய வார்த்தையைக் காப்பாற்றினார் சுபத்திரா.

"நான் உன்னை கல்யாணத்துக்காக வற்புறுத்தினது உண்மை தான். ஆனா, அதுக்காக, உன் கல்யாணத்துக்கு அப்புறமும் அதை செய்யற கீழ்த்தரமான பொம்பள நான் இல்ல" என்றார் சுபத்ரா.

"நானும் உங்களை காயப்படுத்தணும்னு அப்படி எல்லாம் பேசல. இந்த இடத்துல, நான் என்னுடைய நிலைப்பாட்டை உறுதியா நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இல்லன்னா, சில பேர் அதை புரிஞ்சிக்க மாட்டாங்க" என்றாள் தருணை பார்த்தபடி.

"என்னை மன்னிச்சிடு. என்னால தான் உனக்கு இவ்வளவு பிரச்சினைகள். எனக்கு வரப்போற மருமக உன்னை மாதிரி தைரியசாலியா இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். அது நடந்திருச்சு." என்று கூறிவிட்டு அவளை ஆரத்தழுவிக் கொண்டார் சுபத்ரா.

அபிநயாவின் பார்வை, அவளையே பார்த்துக் கொண்டு புன்னகையுடன் நின்றிருந்த அஸ்வின் மீது விழுந்தது. அந்தப் பார்வையில், *பெருமை* மேலோங்கி இருந்தது.

தருணோ என்ன செய்வது என்று புரியாமல், மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top