21 அஸ்வின் கதை

21 அஸ்வின் கதை

தான் ஒரு பிச்சைக்காரனைப் போல், நடைபாதையில் விழுந்து கிடப்பதை பார்த்து, மெல்ல எழுந்து நிற்க முயன்று, வலி தாங்க முடியாமல்  தவித்தான் தருண். முகம் தெரியாத அந்த நபர்கள் தன்னை எப்படியெல்லாம் அடித்தார்கள் என்பதை எண்ணும் போது, அவனுக்கு கோபம் தலைக்கேறியது. அவர்கள் யார், அவனை ஏன் அடித்தார்கள் என்பது எதுவும் அவனுக்கு தெரியவில்லை. அவன் உடல் புண்ணாகி போயிருந்தது. அந்த புண்கள் ஆற, எப்படியும் ஒரு மாதம் தேவைப்படும். இதில் என்ன ஒரு விசித்திரம் என்றால், அனைத்துமே உள்காயங்கள் தான். வெளியில் இருந்து பார்க்க ஒன்றுமே தெரியவில்லை. அவர்கள் தேர்ந்தெடுத்த அடியாட்களாக இருக்கவேண்டும். தருணால் தன் கண்ணில் இருந்து வழிந்த நீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

தருணுக்கு தெரியும், அவர்கள் முரட்டுத்தனமான கைக்கூலிகள் என்பது. அவர்கள் யாரோ ஒருவனுக்காக வேலை செய்கிறார்கள். யார் அவன்? அவனுடைய நோக்கம் என்ன? எதற்காக, சரியாக அவனுடைய திருமண நாளன்று அவன் கடத்தப்பட்டான்?

அதை எண்ணியபோது தான் தருணுக்கு *சுருக்* என்றது.

"அடக்கடவுளே... கல்யாணம்... என்ன ஆயிற்றோ தெரியவில்லையே... நிச்சயம் கல்யாணம் நின்றிருக்கும். அதனால் என்ன...? அடுத்த முகூர்த்தத்தில் அபிநயாவை மணந்து கொண்டால் போகிறது... இரண்டு அண்ணன்களும், பாட்டியும் எதற்காக இருக்கிறார்கள்...? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...  என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை நான் நிச்சயம் சும்மா விடமாட்டேன்..." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் தருண்.

எதிரில் வந்த ஆட்டோவை வழிமறித்து, அதில் ஏறிக் கொண்டான்.

"அண்ணா நகர், அஸ்வின் இல்லம் போங்க..."

அந்த ஆட்டோ டிரைவர் அவனை உச்சி முதல் பாதம் வரை விசித்திரமாய் பார்த்தார். இந்த பிச்சைக்காரன், அஸ்வின் இல்லத்திற்கு சென்று, பிச்சை எடுக்க போகிறானா என்ன? அவன் பார்வையை புரிந்து கொண்டவன் போல,

"அது என்னோட வீடு தான்" என்றான் தருண்.

அவன் சொன்னதைக் கேட்டு, நம்பமுடியாமல் முகம் சுளித்தான் ஆட்டோ டிரைவர்.

"மீட்டருக்கு மேல ஆயிரம் ரூபா உனக்கு நான் தரேன். முதல்ல இங்கிருந்து என்ன கூட்டிட்டு போ" என்று கத்தினான்.

கியரை மாற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார் அந்த ஆட்டோ டிரைவர்.

இதற்கிடையில்... அஸ்வின் இல்லம்...

உறங்கிக்கொண்டிருந்த அபிநயாவின் கண்ணத்தை லேசாக தட்டி எழுப்பினான் அஸ்வின். நிஜத்தை கூற வேண்டுமானால், அவள் தூங்கவில்லை, தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள். கண்ணை திறக்காமல், அவன் கையை தட்டி விட்டாள் அபிநயா.

"அபி... மணி ஏழாச்சு..."

"அதனால என்ன?"

"எழுந்திரு..."

"ஏன்?"

"நீ இங்க தூங்குறதை பாட்டி  பார்க்க போறாங்க..."

"பாத்தா என்ன? என் தலையை வெட்டிடுவாங்களோ?" கண்ணை திறக்காமலே கேட்டாள்.

"உனக்கு இனிமையாவே பேச தெரியாதா? எப்ப பாத்தாலும் வெட்டுறது, குத்துறது, இது  தானா...? நீ பேசும் போதெல்லாம், எனக்கு கசாப்புக் கடைக்காரர் தான் ஞாபகத்துக்கு வறார்" என்று அவளை கிண்டல் செய்தான்.

"ரொம்ப சந்தோஷம்" என்றபடி எழுந்து அமர்ந்தாள்.

அஸ்வின் குளித்துமுடித்து புத்துணர்ச்சியுடன் காணப்பட்டான். படுத்திருந்த தலையணையும், போர்வையும், சுருட்டிக்கொண்டு, உள்ளே சென்று அதை கட்டிலின் மீது வீசிவிட்டு, குளியல் அறையை நோக்கி சென்றாள் அபிநயா.

குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த பொழுது அஸ்வின், பிளாக் காஃபியை குடித்தபடி, தனது மடிக்கணினியில் மின்னஞ்சல்களை பார்த்து கொண்டிருந்தான். அங்கு மற்றும் ஒரு கப்பில் காஃபி வைக்கப்பட்டிருந்தது. அவளுக்கு தெரியும், அது அவளுக்காக தான் வைக்கப்பட்டிருக்கிறது என்று. தெரிந்திருந்த போதும் அதை அவள் எடுத்துகொள்ளவில்லை.

"ஆறிபோறதுக்கு முன்னாடி காஃபியைக் குடி" என்றான் அஸ்வின்.

"எனக்கு தேவையில்ல"

"நான் காஃபியை தான் எடுத்துக்க சொன்னேன்... அஸ்வினை இல்ல" என்று அவள் வம்புக்கு வந்தான்.

"நானும் காஃபியை பத்தி தான் பேசினேன்..." என்றாள் பல்லைக் கடித்தபடி.

"நல்ல வேலை... நீ அஸ்வினை வேண்டாம்னு சொல்லல..." என்றான் சிரித்தபடி.

"என்ன மனுஷன் நீங்க?"

"சாதாரண மனுஷன் தான்"

தன் கண்களை சுழற்றினாள்.

"இவர் கிட்ட பேசாம இருக்கறது நல்லது..." என்று கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்ப எத்தனிதவளை,

"எங்க போற?" என்றான்.

"எனக்கு காஃபி போட்டுக்க போறேன்..."

"முன்னாடி இருக்கிற காஃபிய விட்டுட்டு, வேற போட்டுக்கப் போறியா?"

அவனுக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து சென்றாள். தலையசைத்துவிட்டு, சிரித்துக்கொண்டான்  அஸ்வின்.

சமையலறை

"குட் மார்னிங், அண்ணி" என்றான் சமையலறையில் இருந்த  அருண்.

அவனைப் பார்த்து தலையசைத்து விட்டு, அடுப்பை பற்றவைக்க போனவளை,

"இருங்க அண்ணி. நான் உங்களுக்கு காபி போடுறேன்" என்றான்.

"வேண்டாம் நானே பாத்துக்கிறேன்"

"ஆவினுக்கும் சேர்த்து தானே?"  என்ற அவன் கேள்விக்கு அவள் பதில் அளிக்கவில்லை.

"நான் ஏன் அஸ்வினை ஆவின்னு கூப்பிடறேன்னு, நீங்க என்னை கேப்பிங்கன்னு நினைச்சேன்" என்று பேச்சைத் துவங்கினான்.

"நான் ஏன் கேக்கலன்னா, எனக்கு தெரியும், எதுவும் உருப்படியான அர்த்தம் இருக்காதுன்னு..."

"நீங்க சொல்றது சரி தான். உருப்படியான அர்த்தம் இல்ல... ஆனா, ஒரு கதை இருக்கு... உங்களுக்குச் சொல்லட்டுமா?"

அடுப்பை அனைத்து விட்டு, பாலை ஒரு குவளையில் ஊற்றினாள் அபிநயா.

"நான் சின்ன பையனா இருந்தப்போ, எங்க அப்பாகிட்ட கேட்டேன், அவருடைய *மூத்த மகனுடைய பெயர்* என்னன்னு..."

காஃபியை கலக்கிக் கொண்டிருந்த அவளது கை, அப்படியே நின்றது. *அவருடைய மூத்த மகனுடைய* பெயரா? குழப்பத்துடன் அருணை பார்த்தாள். எதற்காக அவன், அவனுடைய அண்ணனை, *அப்பாவின் மூத்த மகன்* என்று குறிப்பிட வேண்டும்?

"எங்க அப்பா, அஸ்வின்னு சொன்னாரு. நான் ஆவின்னு சொன்னேன். எங்க அப்பாவுக்கு அது பிடிச்சதால அதை திருத்தாம அப்படியே விட்டுட்டாரு..."

"ஆனா, உங்க கூடவே இருந்த அண்ணனோட பெயரை, நீங்க எதுக்காக உங்க அப்பாகிட்ட கேட்டீங்க?"

"இல்ல... அந்த நேரம், நாங்க ஒன்னா இல்ல..."

"ஏன்?"

"ஏன்னா, நானும், தருணும், அஸ்வினோட மாற்றாந்தாய் பிள்ளைங்க..."

"என்ன?"  என்ற அதிர்ச்சியாய் கேட்டாள் அபிநயா.

"எங்க அப்பா நல்லவர் இல்ல. தனக்கு கல்யாணம் ஆனதை மறச்சி, எங்க அம்மாவை அவர் வலையில் விழ வச்சி, அவங்களோட திருப்திக்காக அவங்களையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. நானும், தருணும் பிறந்ததுக்கு அப்புறம் தான், அவர் ஏற்கனவே கல்யாணம் ஆனவர்ங்குற உண்மை எங்க அம்மாவுக்கு தெரிய வந்தது. நாங்க ரெண்டு பேரும் இரட்டை பிறவிங்க.  கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம்,  எங்க அப்பா தன்னை ஏமாத்தின உண்மை தெரிஞ்சு அஸ்வினுடைய அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. ஜனங்களுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாம, அவமானம் தாங்க முடியாம, எங்க அப்பாவும் தற்கொலை பண்ணிக்கிட்டார். அஸ்வினுடைய அம்மாவோட சாவுக்கு தான்தான் காரணம் அப்படிங்கிற உறுத்தல்ல, எங்க அம்மா படுத்த படுக்கையாயிடாங்க. அவங்க இறந்ததுக்கு அப்புறம், சாப்பாட்டுக்கே வழியில்லாம அனாதை ஆசிரமத்தில் இருந்த எங்களை, பாட்டி தான்  இங்க அழைச்சிக்கிட்டு வந்தாங்க. அஸ்வின் எங்களை அவனுடைய தம்பிகளா ஏத்துகிட்டான். அவன் எப்பவுமே எங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளா நடத்தினது இல்ல. அவன் ரொம்ப இனிமையானவன். கனவில் கூட நெனச்சி பார்க்க முடியாத சந்தோஷத்தையும், வசதி, வாய்ப்புகளையும் , அவன் எங்களுக்கு கொடுத்தான். ஆனா, தருண் அதை தவறா பயன்படுத்திக்கிட்டான். அதனால, அவன் மேல அஸ்வினுக்கு ரொம்ப மனவருத்தம். உங்ககிட்ட தருண் தப்பா  நடந்துகிட்டதுல அஸ்வினுக்கு அவன் மேலே ரொம்ப கோவம். உங்களுக்கு தருணோட நடக்க இருந்த கல்யாணத்துல, அவனுக்கு துளி கூட விருப்பம் இல்ல. ஆனா, பாட்டி தான் ரொம்ப பிடிவாதமா இருந்தாங்க. ஏன்னா, உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா தருண் திருந்திடுவான்னு அவங்க நம்பினாங்க. நானும் அஸ்வினும் அவங்களை எவ்வளவோ எச்சரித்தும், அவங்க கேக்கல. ஆனா, கடைசியில எல்லாமே மாறிப் போயிடுச்சு. நீங்க அஸ்வினை கல்யாணம் பண்ணிகிட்டிங்க."

தன் கண்களை இமைக்காமல், அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அபிநயா, தன் கையில் இருந்த காஃபி ஆறி போவதை மறந்து. இவர்கள் ஒரே அம்மாவின் பிள்ளைகள் இல்லையா? இந்த குடும்பத்தின் பின் இப்படி ஒரு சோகக் கதை இருக்கிறதா? இவன் கூறுவது எல்லாம் உண்மையாக இருந்தால், அஸ்வின் மிகச் சிறந்த மனிதனாக தெரிகிறான். தன் அம்மாவிற்கு நேர்ந்த கொடுமையை எல்லாம் மறந்து, மாற்றாந்தாய் பிள்ளைகளை, தன் தம்பிகளாக ஏற்றுக் கொண்டுள்ளான் என்றால், அவன் நல்லவனாக தானே இருக்க வேண்டும்? ஆம் அதனால் தான், தனது குடும்ப கவுரவம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக, தருண் ஓடிவிட்ட பின், அவளை திருமணம் செய்து கொண்டுள்ளான். முதன் முறையாக அவனைப் பற்றி, உயர்வாக உணர்ந்தாள் அபிநயா.

"இது தான் எங்க குடும்ப கதை. இப்போ நீங்களும் இந்த குடும்பத்துல ஒருத்தராயிட்டீங்க. அதனால, இத நீங்க தெரிஞ்சுக்கணும் நான் நினைச்சேன்"

பெயரிட முடியாத உணர்வுடன், அவனைப் பார்த்து புன்னகை புரிந்தாள் அபிநயா. அவளிடம் ஏற்பட்ட திடீர் மாறுதலை உணர்ந்தான் அருண். ஆம், இந்த உண்மையை அவள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை தானே? அஸ்வினைப் பற்றியும், அவன் குடும்பத்தைப் பற்றியும், தவறாக எண்ணிக் கொண்டிருந்த அவளுக்கு, இது எதிர்பாராதது தான். தனது முயற்சியை பலன் அளித்துவிட்டதில் ஆனந்தம் அடைந்தான் அருண்.

அந்த நேரம் அழைப்பு மணி ஒலித்தது. வந்திருப்பது யார் என்று பார்க்க, சமையலறையிலிருந்து வெளியே ஓடினான் அருண். அவனுக்கு முன்னாதாக வேலைக்கார ராமு கதவை திறந்தான். வாசலில் தருண் நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்து, அருணுக்கு தூக்கி வாரிப்போட்டது. தருண் பார்க்க பலவீனமாக காணப்பட்டான். அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்பது அவனுக்கு புரியவில்லை.

சுபத்ராவை அழைத்தபடி மெல்ல உள்ளே நுழைந்தான் தருண். அவன் குரலைக் கேட்டு ஓடோடி வந்தார் சுபத்ரா. அவனைப் பார்த்ததும் சந்தோஷத்தில் திளைத்தார். ஆனந்த கண்ணீர் வடித்தபடி, அவனை ஆரத் தழுவினார்.

"எப்படி கண்ணா இருக்க? நீ எங்க இருந்த? எப்படி திடீர்னு காணாம போயிட்ட?"

அவருக்கு பதில் சொல்ல போனவன், அப்படியே நின்றான், சமையலறையில் இருந்து வெளிவந்த அபிநயாவை பார்த்த பொழுது. அவன் முகம் பிரகாசமானது.

தொடரும்... 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top