20 பிடிவாதக்காரி

20 பிடிவாதக்காரி

அந்த தோட்டத்தில் இருந்த, சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டான் அஸ்வின். அபிநயா அங்கிருந்த செடி வகைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். அந்த தோட்டம் அவளுக்கு மிகவும்
பிடித்திருந்தது. அதை நேர்த்தியாக பராமரித்த விதம் மனதை கவர்ந்தது. அவளால் நம்பவே முடியவில்லை, சென்னை மாநகரின் மத்தியில், இப்படி ஒரு தோட்டம் யாருக்கும் தெரியாமல் அமைந்திருக்கக் கூடும் என்று. அஸ்வினுக்கு தோட்டக்கலையில் அலாதியான பிரியம் போலிருக்கிறது.

சிறு வயதில், பள்ளியில் படித்த, எல்லாவற்றையும் விட தன் தோட்டத்தின் மீது அளவு கடந்த பற்று வைத்திருந்த தி செல்ஃபிஷ் ஜெயின்ட் கதை அவளுக்கு நினைவுக்கு வந்தது. அஸ்வினை, அந்த கதையில் வரும் அரகனுடன் ஒப்பிட்டு பார்த்து, அவள் களுக்கென்று சிரிக்க, அதை கவனிக்க தவறவில்லை அஸ்வின்.

அப்போது, அங்கு மதிய உணவை எடுத்துக் கொண்டு, மிகப் பிரசித்தமான, ஹோட்டலிலின் டெலிவரி பாய் வருவதை அவள் பார்த்தாள்.

"எனக்கு ரொம்ப பசிக்குது
நீயும், காலையில ரொம்ப கம்மியா தான் சாப்பிட்ட..." என்றான் அஸ்வின்.

அவன் அதைக் கூட கவனித்திருக்கிறான் என்பது அவளுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

"நீயும் பசியில தான் இருப்பேன்னு நினைக்கிறேன்"

அதற்கு பதில் கூறவில்லை அபிநயா.

"உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லன்னா, நம்ம சாப்பிடலாமா?"

சரி என்று மெலிதாய் தலையசைத்தாள் அபிநயா. அவர்கள் இருவரும் சாப்பிட தொடங்கினார்கள். அஸ்வினுக்கு மிகவும் பிடித்தது, இத்தாலியன் வகை உணவுகள் தான் என்றாலும், அன்று அவன் அதை ஆடர் செய்திருக்கவில்லை. அபிநயாவுக்கு அது பிடிக்குமோ என்னவோ... அதனால், தமிழ் பாரம்பரிய உணவையே வரவழைத்து இருந்தான்.

எந்த குறையும் கூறாமல் அமைதியாய் சாப்பிட்ட அபிநயாவை பார்த்த பொழுது, அவனுக்கு நிம்மதியாக இருந்தது. அவற்றுள் திறக்கப்படாமல் இருந்த ஒரு டப்பாவை திறந்தான் அஸ்வின். அதைப் பார்த்து அவன் பெருமூச்சு விட்டான். அவன் கேட்டிருந்தது இதுவல்ல. தனது கைபேசியை எடுத்து அந்த ஹோட்டலுக்கு ஃபோன் செய்ய விழைந்தான். அவன் அந்த டப்பாவை கீழே வைத்தது தான் தாமதம், அதில் இருந்த ஜாங்கிரியை பார்த்து, அதிலிருந்து ஒன்றை எடுத்து, சப்புக்கொட்டி சுவைக்கத் தொடங்கினாள் அபிநயா.

கைபேசியை பற்றி இருந்த அவன் கை, மெல்ல கீழே இறங்கியது. அபிநயா தனது, விருப்பத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும், அவள் அந்த ஜாங்கிரியை சாப்பிட்ட விதமே, அவளுக்கு அது மிகவும் பிடிக்கும் என்பதை சுட்டிக் காட்டியது.

"ஆக்சுவலா, நான் லட்டு தான் ஆர்டர் செஞ்சிருந்தேன்..." என்றான் அஸ்வின்.

அது ஒரு விஷயமே இல்லை, என்பது போல தன் தோள்களை குலுக்கினாள் அபிநயா. உள்ளூர சிரித்துக்கொண்டான் அஸ்வின்.

அந்த தோட்டத்தில் இருப்பது அபிநயாவுக்கு சலிப்பை ஏற்படுத்தவேயில்லை. அங்கிருந்த செடி, கொடி, வகைகளும், காதல் பறவைகளும், அவள் கருத்தைக் கவர்ந்தன. அந்த தோட்டம் முழுவதும் சுற்றித் திரிந்து கொண்டு இருந்தாள். அஸ்வினுக்கு அபிநயாவை பார்த்து கொண்டிருக்க சலிக்கவா போகிறது? மாலை வரை அங்கு நேரத்தை கழித்துவிட்டு, அஸ்வின் இல்லம் நோக்கி கிளம்பினார்கள்.

அஸ்வின் இல்லம்

அவர்கள் உள்ளே நுழைவதை பார்த்து, அப்படியே நின்றார் சுபத்ரா. அவருடன் அருணும் நின்று கொண்டிருந்தான்.

"இந்த நாள் எப்படிமா போச்சி?" என்றார் அபிநயாவை பார்த்து.

அஸ்வினை நோக்கி திரும்பிய தன் பார்வையை, கட்டுப்படுத்த முடியவில்லை அபிநயாவால். அவள் என்ன கூற போகிறாள் என்று அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். உண்மையில், எதிர்பாராத விதமாய் அந்த நாள் அஸ்வினுடன் மிக அருமையாய் சென்றது. அழகான இடத்தில், அருமையான மதிய உணவு.

*பரவாயில்லை* என்பது போல் தலையை அசைத்து விட்டு, அங்கிருந்து சென்றாள் அபிநயா.

அவள் அப்படி அசட்டையாக இருப்பதை பார்த்து பெருமூச்சு விட்டார் சுபத்ரா. அங்கிருந்து தன் அறைக்கு செல்ல எத்தனித்த அஸ்வினை அழைத்தார் சுபத்ரா.

"என்ன பாட்டி?"

"தருணை பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சுதா?" என்றார் கவலையாக.

இல்லை என்று தலை அசைத்தான் அஸ்வின்.

"அவனோட கேர்ள் ஃப்ரெண்ட் கூட அவன் ஜாலியா இருப்பான்" என்றான் அருண்.

"அவனை தேடி கண்டுபிடிங்க. நம்ம இப்படி இருக்கிறது சரி இல்ல. ஏதாவது செய் அஸ்வின்..." என்றார் சுபத்ரா.

சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அஸ்வின். அருண் அவனை பின்தொடர்ந்தான். சற்று தொலைவிற்கு அவர்கள் வந்த பின், அஸ்வினை வழி மறித்து தடுத்து நிறுத்தினான் அருண்.

"என்ன?" என்றான் அஸ்வின்.

"நீ தருணை தேட போறியா?" என்றான்.

"அஃப் கோர்ஸ்..." என்றான் அஸ்வின்.

"ப்ளீஸ், தயவு செஞ்சி அவனை தேடாதே ..." என்று கெஞ்சினான் அருண்.

"ஏன்?"

"அபி அண்ணி இருக்கிற அதே இடத்துல அவன் இருக்க வேண்டாம்"

"இப்போ, அவ என்னோட வைஃப்..."

"அது தான் எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு. நான் ஏற்கனவே அவனுடைய நடத்தையால ரொம்ப சங்கடதுல இருக்கேன். மறுபடி, அவன் செய்யக் கூடாத எதையாவது செஞ்சுட்டா, என்னால பொறுத்துக்க முடியாது. அவனை அப்படியே விட்டுடு."

"அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்காம நம்ம எப்படி முடிவு செய்ய முடியும்? ஒருவேளை அவன், அபியை அவனோட அண்ணி ஸ்தானத்தில் பார்த்தா, மனசு மாற வாய்ப்பிருக்கு இல்லயா?"

"அவன் மாறுவான்னு நீ நினைக்கிறாயா?"

"பாக்கலாம்..."

அருணை நிராதரவாய் விட்டுவிட்டு, அங்கிருந்து சென்றான் அஸ்வின்.

அன்று முழுவதும் அபிநயாவை அவர்கள் அறையில் பார்க்கவில்லை அஸ்வின். அவர்கள் அறைக்குள் அவள் நுழையவே இல்லை. வீட்டில் இருந்த யாரையும் சட்டை செய்யாமல், அவள் இங்கும் அங்கும் திரிந்து கொண்டு இருந்தாள். அவளைப் பொறுத்தவரை, வேலைக்கார ராமுவும், சுபத்ராவும் ஒன்று தான்.

இரவு உணவு முடிந்த பிறகு தான் தங்கள் அறைக்குள் நுழைந்தாள் அபிநயா. இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அவள் சமையலறையிலேயே தனியாக சாப்பிட்டு கொண்டாள். அது சுபத்ராவின் பதட்டத்தை அதிகரித்தது. அவள் இப்படியே இருந்தால் என்ன செய்வது?

அவள் உள்ளே நுழைந்த போது, நீச்சல் குளத்திற்கு போகும் கதவை சாத்தி தாழிட்டு விட்டு, அதன் மேல் சாய்ந்துக்கொண்டு, அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அஸ்வின். தன் கண்களை சுழற்றி விட்டு, தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நின்றாள் அபிநயா.

"ராத்திரி சாப்பாடு சாப்பிடலயா நீங்க?" என்று அவள் கேட்டதன் அர்த்தம் புரியாமல் முகம் சுளித்தான் அஸ்வின்.

"சாப்பிட்டேன், ஆனா உன்னை மாதிரி கிச்சன்ல இல்ல..." என்றான் கிண்டலாக.

"சாப்டீங்கல்ல...? அப்பறம் ஏன் என்னை பார்வையால சாப்பிடுறீங்க?"

அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தான் அஸ்வின்.

"சாப்பிடுறேனா...? நிஜமாவா?"

"ஏன் என்னை இப்படி முறைச்சு பாக்குறீங்க?"

"நீ அடுத்து என்ன செய்யப் போறேன்னு பாக்க காத்துகிட்டு இருக்கேன்"

"நான் என்ன செய்யப் போறேன்?"

"நீச்சல் குளம் பக்கம் போவ தானே?"

"அதனால?" என்று முகம் சுளித்தாள் அவள்.

"எப்படி இருந்தாலும் நான் உன்னை மறுபடி தூக்கிகிட்டு வரப் போறேன். அதுக்கு எதுக்கு நீ அங்க போற?"

"எவ்வளவு தைரியம் இருந்தா, என்கிட்ட நீங்க இப்படி பேசுவிங்க?"

"அஃப் கோர்ஸ், எனக்கு தைரியம் இருக்கு. நான் ஏற்கனவே அதை ப்ரூஃப் பண்ணிட்டேன்... மறந்துடாத"

முந்தின நாள் இரவு, அவளை அறைக்குள் தூக்கிக் கொண்டு வந்ததை பற்றி தான் பேசுகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. இன்று காலையில் கூட, கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் கோவிலிலிருந்து தூக்கிக்கொண்டு செல்வேன் என்றானே...!

"என்னை கண்ட்ரோல் பண்றத நிறுத்துங்க... எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பம் இல்லங்குறதை புரிஞ்சுக்கங்க..."

"எனக்கு தெரியும்... அதனால தான், நான் மேற்கொண்டு உன்னை வேற எதுக்காகவும் வற்புறுத்தல. எப்படி இருந்தாலும் உண்மையை நீ ஏத்துகிட்டு தான் ஆகணும். நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவி. எனிவே, நான் சோபாவில் படுத்துகுறேன்..."

"நான் எதுக்காக நீங்க சொல்றதை கேட்கணும்? என்னை ஆடர் பண்ண நீங்க யாரு? நீங்க சொல்றத நான் கேப்பேன்னு எப்படி எதிர் பாக்குறீங்க?"

"சரி உன் இஷ்டம். என்ன செய்யணுமோ செய்."

அவளுக்கு வழி விட்டு ஒதுங்கி நின்றான். தலையணை, மற்றும் போர்வையை எடுத்துக்கொண்டு, நீச்சல் குளத்தை நோக்கி சென்று, நீச்சல் குளத்தை ஒட்டி இருந்த காலி இடத்தில் படுக்கையை விரித்து படுத்துக் கொண்டாள்.

அஸ்வினும் அவள் பக்கத்தில் படுக்கையை விரிப்பதை பார்த்து, பல்லை கடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

"என்ன செய்றீங்க நீங்க?"

"நீ செய்யறதை நானும் செய்யறேன்"

"இங்க பாருங்க... நீங்க ஒன்னும் இங்க தூங்க வேண்டாம்"

"நான் ஏன் நீ சொல்றதை கேட்கணும்? நீ யாரு என்னை கண்ட்ரோல் பண்ண? நீ சொல்றத நான் கேட்பேன்னு எப்படி எதிர்பாக்குற?" என்று கூறி விட்டு சற்று நிறுத்தியவன்,

"நீ கேட்ட அதே கேள்விகளை நானும் கேட்க முடியும். ஆனா நான் அப்படி கேட்க மாட்டேன். ஏன்னா, நான் உன்னை மதிக்கிறேன்"

அதைக் கேட்டு அபிநயாவுக்கு ஆச்சரியம் தலைக்கேறியது. இந்த குடும்பத்தாருக்கு மரியாதை பற்றி கூட தெரியுமா? போர்வையால் தன்னை போர்த்திக் கொண்டு, மேலும் ஏதும் வாதம் செய்யாமல் அமைதியாய் படுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலை

மிகவும் சிரமப்பட்டு தன் கண்களை திறந்தான் தருண். அவன் உடல் முழுவதும் ஏற்பட்டிருந்த வலியை அவனால் தாங்க முடியவில்லை. அவனுக்கு நிறைய வாகனங்கள் செல்லும் சத்தம் கேட்டது. கண்களை மெல்ல திறந்தவன், தான் ஒரு பிச்சைக்காரனைப் போல், நடை பாதையில் விழுந்து கிடப்பதைக் கண்டான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top