19 கூண்டு பறவை
19 கூண்டு பறவை
அஸ்வின் பில்டர்ஸ் அலுவலகம்
மனோஜ் மற்றும் அருணின் வரவுக்காக காத்திருந்தான் அஸ்வின். தன் கையில் இருந்த கை கடிகாரத்தை பார்த்த பொழுது, மணி பத்தரை.
இருவரும் எங்கு சென்றார்கள்? என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த பொழுதே இருவரும் அலுவலகத்தினுள் நுழைந்தார்கள்.
சென்ற காரியம் முடிந்துவிட்டது என்பதை உணர்த்தும் வண்ணம், அஸ்வினை நோக்கி தங்கள் கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு சென்றார்கள் இருவரும்.
நிம்மதிப் பெருமூச்சுவிட்டான் அஸ்வின். மாலை திருவான்மையூர் சென்று அபிநயாவை அழைத்து வரவேண்டும், என்று எண்ணியபடி தன் வேலையை தொடங்கினான்.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து, அவன் கைபேசிக்கு அழைப்பு வந்தது. அவன் மாமியார் வீட்டில் இருந்து அந்த அழைப்பு வந்திருந்ததால், அவன் முகம் மலர்ந்தது. பேசியது அவனுடைய மாமியார் பத்மா.
"சொல்லுங்க ஆன்ட்டி..."
"இன்னைக்கு, நேர்த்திக்கடன் செலுத்த, கோவிலுக்கு போக, அபியை வர சொல்லியிருந்தோம்..."
"எனக்கு தெரியும்..."
"நீங்க எப்ப அவளை கூட்டிகிட்டு வர போறீங்க? ஏற்கனவே மணி பன்னெண்டு ஆயிடுச்சு"
அதை கேட்டு திக்கென்றது அஸ்வினுக்கு. அப்படி என்றால் அபிநயா அவர்கள் வீட்டிற்கு செல்ல வில்லையா? பிறகு எங்கு போனாள்?
"காலையில பாட்டி என்கிட்ட அத பத்தி சொல்லியிருந்தாங்க. ஆனா, இப்ப என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல. நான் அவங்கள கேட்டுட்டு உங்களுக்கு சொல்றேன்"
"ஒரு நிமிஷம் தம்பி... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல"
"அபிநயா உங்க மேல கோவமா இருக்கா. அதை தானே சொல்ல வரீங்க?" என்றான் அஸ்வின்.
"ஆமாம். அவ எங்க மேல ரொம்ப கோவமா இருக்கா. அவ நிச்சயம் இங்க வரமாட்டா. ஒரு வேளை அது தான் காரணம்னா, தயவு செஞ்சி அவளை கட்டாயப்படுத்தாதீங்க. அவ ரொம்ப கோவக்காரி. பிடிவாதக்காரியும் கூட. அவளோட கோவத்தைப் பத்தி உங்களுக்கு தெரியாது"
அதைக் கேட்டு புன்னகைத்தான் அஸ்வின். அவளுடைய கோபத்தை பற்றி அவனுக்கு தெரியாதா என்ன? அவள் தான் தருணை கத்தியால் குத்தியவள் ஆயிற்றே. அதற்கு மேல், தன் சொந்த அம்மாவின் வீட்டிற்கு கூட அவள் செல்ல தயாராக இல்லை என்றால், அவளுடைய பிடிவாதத்தை பற்றி அவனுக்கு புரியவில்லையா என்ன...?
"நான் அவளை கவனிச்சிக்கிறேன். நீங்க அதை பத்தி கவலைப்பட வேண்டாம். எல்லாம் சரியாயிடும்"
"ரொம்ப நன்றி தம்பி"
அவர்கள் அழைப்பைத் துண்டித்தார்கள். தனது கார் சாவியை எடுத்துக்கொண்டு தன் அறையை விட்டு வெளியே வந்தான் அஸ்வின். அப்பொழுது மனோஜும் அருணும் அவனை நோக்கி வரைவதை கண்டான்.
"அஸ்வின், பாட்டி கொடுத்த ஸ்வீட்ஸை, அபிநயா காரிலேயே மறந்துட்டு போய்ட்டாங்க" என்றான் மனோஜ்.
"அவளை நீங்க எங்க ட்ராப் பண்ணிங்க?"
"அவங்க தெருவுக்கு முன்னாடியே இறக்கி விட்டோம், அவங்க ஃபிரண்டை கூட்டிகிட்டு போறேன்னு சொன்னதால"
"அவ அவங்க அம்மா வீட்டுக்கு போகல"
"ஒருவேளை அவங்க ஃப்ரெண்ட் வீட்டுல இருக்காங்களோ என்னவோ..." என்றான் அருண்.
"இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம்..." என்றான் அஸ்வின்.
"ஏன்?" என்றான் அருண்.
"அவ, அவங்க அம்மா மேலயும் அத்தை மேலயும் ரொம்ப கோவமா இருக்கா. உங்களுக்கு தெரியாதா என்ன?"
"அப்படின்னா.... அண்ணி அவங்க வீட்டுக்கு போகலயா...?"
"ஆமாம், நான் அவளை தேடி போறேன்..."
அலுவலகத்தை விட்டு கிளம்பினான் அஸ்வின். அவனுக்கு உதவ, மனோஜ் தனது வேலையைத் துவக்கினான். அஸ்வின், மனோஜின் அழைப்பை ஏற்று பேசினான்.
"சொல்லு, மனோ..."
"அபிநயா கோவில்ல இருக்காங்க. நீங்க குலதெய்வ பூஜை செய்ய போனீங்களே அந்த கோயில் தான்."
"உனக்கு எப்படி தெரியும்?"
"அவங்க ஃபோன் சிக்னலை ட்ராக் பண்ணினேன்"
"கிரேட்... தேங்க்யூ..."
"எனி டைம்..."
அவர்கள் அழைப்பை துண்டித்து கொண்டார்கள்.
கோயில்
தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்
அபிநயா. அவள் கோபமாக இருந்தது தான் நமக்கு தெரியுமே. ஆனால், அவள் வணங்கும் அம்மனிடம் கூட அவள் கோபமாக இருந்தாள் என்பது நமக்கு தெரியாதல்லவா? அவள் அம்மன் சிலையை பார்க்க கூட இல்லை.
"உங்களுக்காக நான் இங்க வந்திருக்கேன்னு நினைக்க வேண்டாம். எனக்கு வேற வழி இல்லாம தான் நான் இங்க வந்திருக்கேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒதுங்க ஒரு இடம். அவ்வளவு தான். என்னை ஒரு ராட்சசன் கிட்டயிருந்து நான் காப்பாத்த சொன்னேன். அதற்காக, தலைக்கனம் பிடிச்ச அவன் அண்ணனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சிடுறதா? அந்த குடும்பத்தை விட்டா, வேற யாரும் உங்களுக்கு கிடைக்கலயா? ஏன் என்கிட்ட இப்படி விளையாடுறீங்கன்னு எனக்கு புரியல. என்னை இப்படி பாக்குறது தான் உங்க ஆசைனா, நல்லா பாருங்க... ஆனா, மறுபடி நான் உங்ககிட்ட எந்த உதவியும் கேப்பேன்னு மட்டும் நினைக்காதீங்க" என்று கடவுளிடம் உரிமையோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.
அங்கிருந்து தன் தோழியின் இல்லத்திற்கு செல்ல எண்ணிக் கொண்டு, அவள் கோயிலை விட்டு வெளியே வந்த போது. அங்கு ஒரு கார், க்ரீச் என்ற ஓசையோடு வந்து நின்றது.
அதிலிருந்து அவள் கணவன் இறங்கியதை பார்த்த போது அவளுக்கு தூக்கி வாரி போட்டது. அவள் இங்கிருப்பது அவனுக்கு எப்படி தெரிந்தது? அவள் மறுபடியும் கோவிலுக்குள் ஓடினாள். ஆனால், அவள் ஓட்டத்தை விட அஸ்வினின் பார்வை வேகமாக இருந்ததால், அவன் அவளை பார்த்து விட்டான். அவளின் இளஞ்சிவப்பு நிற புடவையிலிருந்து கண்ணை எடுக்காமல், கோவிலுக்குள் நுழைந்தான். அவள் தூணுக்கு பின், சின்னப் பிள்ளையைப் போல் ஒளிந்து கொண்டு நிற்பதை பார்த்து, பெருமூச்சுவிட்டான் அஸ்வின்.
"அபி..." என்று அவன் குரலெழுப்ப,
தன் கண்களை அகல விரித்து, தூணோடு தூணாக ஒட்டிக் கொண்டு நின்றாள் அபிநயா. அவள் முன் சென்று, தன் கைகளை கட்டிக் கொண்டு நின்றான் அஸ்வின்.
"என்ன இது? எதுக்காக என்னை பாத்து ஒளியற?"
அவனுக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள். அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான் அஸ்வின்.
"விடுங்க என் கைய... விடுங்கன்னு சொல்றேன்ல..."
கோவில் குருக்கள் அங்கு வந்தார்.
"தம்பி, என்ன செய்றீங்க நீங்க? இது கோயில்ங்குறதை மறந்துடாதீங்க" என்றார்.
"இவ என்னோட வைஃப் அதையும் மறக்க வேண்டாம்னு சொல்லுங்க"
அவர்களை அதிர்ச்சியாய் பார்த்தார் குருக்கள்.
"நான் உங்க வைஃப்ங்குறதால இப்படி என் கைய பிடிச்சு இழுப்பீங்களா?"
"நம்ம வீட்ல போய் பேசிக்கலாம். இப்ப என்னோட கிளம்பு"
"முடியாது... என்னை நிம்மதியா இருக்க விடுங்க"
"இங்க பாரு, இந்த மாதிரி பிடிவாதம் பிடிச்சு வேண்டாத விஷயத்தை என்னை செய்ய வைக்காதே "
"மிரட்டுறீங்களா? நீங்க யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்கன்னு ஞாபகம் இருக்கா? நான் அபிநயா..."
"மிஸஸ் அபிநயா அஸ்வின்..."
என்று அவன் கூற, திணறித்தான் போனாள் அபிநயா.
"அதனால என்ன? அந்த டைட்டில் என்னை கட்டுப்படுத்தாது..."
"நம்ம வீட்ல போய் பேசிக்கலாம்னு சொன்னேன்... நம்ம ஆர்க்யூ பண்ண இது ஏத்த இடமில்ல."
அவள் கையை பிடித்துக் கொண்டு அஸ்வின் அங்கிருந்து ஒரு அடி எடுத்து வைக்க, தூணை பிடித்துக்கொண்டு பிடிவாதமாய்,
அவனை முறைத்தபடி நின்றாள் அபிநயா.
"சரி, உன்னை தூக்கிகிட்டு போறதை தவிர எனக்கு வேற வழி இல்ல, நேத்து ராத்திரி செஞ்ச மதிரி..." என்று தன் தோள்களை குலுக்கினான் அஸ்வின்.
எதைப் பற்றியும் கவலைப் படாமல், அவன் அவளை தூக்கிக்கொள்ள முயன்ற போது, அவளுக்கு திக் என்றனது. பின்னோக்கி நகர்ந்த அவளது கண்கள், அவன் முகத்தில் ஸ்தம்பித்து நின்றது. பேயறைந்தது போல் இருந்த அவள் முகத்தைப் பார்த்து உள்ளூர சிரித்து கொண்டான் அஸ்வின்.
"வரியா, தூக்கிக்கிட்டு போகட்டுமா?"
அங்கிருந்து விடுவிடுவென நடந்தாள். காரில் அமர்ந்து, *என்ன மனிதன் இவன்?* என்பதைப் போல வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவன் குரலைக் கேட்ட பொழுது தான் அவள் இந்த உலகத்திற்கு வந்தாள்.
"உன்னோட சீட் பெல்ட்டை போட்டுக்கோ"
அஸ்வின் காரின் சென்டர் லாக்கை, அவளை பார்த்தபடி அழுத்தினான்.
"இப்ப நம்ம பேசலாம்" என்றான்.
"எனக்கு பிடிக்காத விஷயங்களை செய்ய சொல்லி ஏன் என்னை வற்புறுத்துறீங்க?"
"இப்போ நீ என்ன செய்யப் போற? எங்க போக போற? ராத்திரி வரைக்கும் கோவில்லயே இருக்க போறியா?"
"எனக்கு எங்க வீட்டுக்கு போக விருப்பம் இல்ல..."
"நான் உன்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு யார் சொன்னது?"
"அப்போ உங்க வீட்டுக்கு போனா, உங்க பாட்டிக்கு என்ன பதில் சொல்வீங்க?"
"நம்ம அங்கேயும் போகல..."
"அப்போ எங்க கூட்டிட்டு போறீங்க?"
"அதை நீயே தெரிஞ்சுக்குவ"
"இங்க பாருங்க... புதுசா கல்யாணம் ஆனவங்க செய்யறா மாதிரி, சினிமாவுக்கு கூட்டிட்டு போற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க. எனக்கு அது சுத்தமாக பிடிக்காது"
அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தான் அஸ்வின்.
"எனக்கும் பிடிக்காது..."
"எதுக்காக என்னுடைய இஷ்டதுக்கு என்னை எதையும் செய்ய விட மாட்டேங்கறீங்க?"
"நீ உன் இஷ்டத்துக்கு என்ன வேணா செய்யலாம்... எங்க வேணா போகலாம்... ஆனா, போறதுக்கு முன்னாடி எங்க போறேன்னு சொல்லிட்டு போ. அது என்னை டென்ஷன் இல்லாம வைக்கும். நீயும் சேஃபா இருப்ப"
"நான் சேஃபா தான் இருப்பேன். நீங்க ஒன்னும் என்னை பத்தி கவலைப்பட வேண்டாம்"
"எல்லா நேரமும், எல்லாரையும், கத்தியால குத்த முடியாது..." என்றான் கிண்டலாக.
"தேவைப்பட்டா அதை செய்ய நான் தயங்க மாட்டேன்"
"அஃப் கோர்ஸ்... நீ செய்வ... ஆனா, அதுக்கப்புறம் உனக்கு ஏற்படும் மன உளைச்சல் விஷயம் இல்லயா?"
அதைக் கேட்டு பேச்சிழந்து நின்றாள் அபிநயா. அவளுக்கு மட்டும் தான் தெரியும், தருணை கத்தியால் குத்திய பிறகு அவள் மனதளவில் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டாள் என்பது. நேற்று வரை, அவள் நிம்மதியன உறக்கம் கொண்டதில்லை.
அதன் பிறகு, அஸ்வினுடன் வாதாடுவதை அவள் நிறுத்தி கொண்டாள். பிடிக்கவில்லை என்பதற்காக அல்ல. இந்த மனிதனுடன் பேசி அவள் தன் வசத்தை இழக்க தயாராக இல்லை.
அரை மணி நேர பயணத்திற்கு பிறகு, அவர்களுடைய கார், ஒரு சிறிய குறுகலான தெருவிற்குள் நுழைந்தது. ஒரு தோட்டத்தின் முன் வண்டியை நிறுத்தினான் அஸ்வின். முகத்தை சுருக்கியவாறு, குழப்பத்துடன் இங்குமங்கும் பார்த்தாள் அபிநயா. காரில் இருந்து கீழே இறங்கி, அபிநயாவின் பக்க கதவை திறந்து விட்டு நின்றான் அஸ்வின், ஒரு ஜென்டில்மேனாக. சென்னை மாநகரத்தில் இப்படி ஒரு தோட்டம் இருப்பது பெரிய அதிசயம் தான்.
பறவைகளின் *கீச் கீச்* சத்தத்தை கேட்டபடி காரில் இருந்து கீழே இறங்கினாள் அபிநயா. அவள் கண்கள் இங்கும் அங்கும் அலை பாய்ந்தன. கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த *காதல் பறவைகள்* மேல் அவள் கண்கள் குத்திட்டு நின்றது. குபுக்கென்று வெளிவந்த சந்தோஷத்துடன் அந்த பறவை கூண்டை நோக்கி ஓடினாள். வண்ண வண்ண பறவைகளிடம் அவள் மனம் பறி போனது.
அப்பொழுது தோட்டக்காரனை அங்கு அழைத்தான் அஸ்வின்.
"எதுக்காக இந்த பறவைகளை இப்படி அடைச்சு வெச்சு கொடுமை படுத்துற? அதுங்கள பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. அத திறந்து விடு" என்று ஆணையிட்டான், பறவைகளை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த அபிநயாவை பார்த்தபடி.
"இல்ல இல்ல அதை திறந்து விடாதீங்க" என்று பதட்டத்துடன் கூறினாள் அபிநயா.
"ஏன்...? பறவைங்க பறக்குறதுக்காக தானே...?"
"அதுங்க கூண்டில் இருந்தா தான் பாதுகாப்பா இருக்கும்..."
"என்ன சொல்ற நீ? அதுங்க பாவம் இல்லயா? பறவைங்க பறக்கத் தானே விரும்பும்?"
"இல்ல... இந்த பறவைங்களால வேகமாக பறக்க முடியாது. காக்கா, கழுகு மாதிரி மோசமான பறவைங்க இதை சுலபமாக பிடிச்சிடும். அதுங்களுக்கு இது இறையாயிடும்." சோகமாக அந்த பறவைகளை பார்த்தபடி கூறினாள் அபிநயா.
அவள் கூறிய பதிலை கேட்டு, தன் கைகளை கட்டிக் கொண்டு, அவளை பார்த்து புன்னகைத்தான் அஸ்வின். அவன் அப்படி பார்த்து புன்னகைத்ததன் அர்த்தம் புரியாமல், அவனையே கேட்டுவிட எத்தனித்த போது,
"அப்போ, இந்த பறவைகளை கூண்டுல அடைச்சு வைக்கிறது, ஆபத்தான பறவைங்ககிட்ட இருந்து அதுங்களை பாதுகாக்க தான், இல்லயா?"
அவன் அவளுக்கு என்ன உணர்த்த விரும்புகிறான் என்பதை புரிந்து கொண்டு, அந்த பறவைகளை நோக்கி தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் அபிநயா.
"நீ புத்திசாலி பொண்ணு. நான் என்ன சொல்ல வரேன்னு நீ புரிஞ்சிகிட்டிருப்ப. இந்த பறவைகள மாதிரியே சில சமயம் நம்ம வாழ்க்கையிலும் நடக்கிறது உண்டு. உனக்கும் கூட அடைபட்டு கிடைக்கிற மாதிரி தோணலாம். ஆனா, அது உன்னை கழுகுகிட்ட இருந்து பாதுகாக்கும்."
அபிநயாவுக்கு, அவன் பேசுவதை கேட்க ஆச்சரியமாக இருந்தது. இதன் மூலம் அவன் சொல்ல முயல்வது என்ன? அவன் அவளுடைய பாதுகாவலன் என்று கூறுகிறானா?
அவளுடைய இதயம் வேகமாக துடித்தது. இந்த எதிர்பாராத ஆதரவை எப்படி எதிர்கொள்வது என்று அவளுக்கு புரியவில்லை. அஸ்வின் அவளுடைய பாதுகாவலனாக இருப்பான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அப்படிப்பட்டவனா அஸ்வின்?
தொடரும்.....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top