18 அபிநயாவின் வெறுப்பு

18 அபிநயாவின் வெறுப்பு

மறுநாள் காலை

தூக்கத்திலிருந்து கண் விழித்த அபிநயா, தான் கட்டிலில் படுத்திருப்பதை கண்டாள். தன்னை போர்த்தியிருந்த போர்வையை விலக்கி விட்டு எழுந்து அமர்ந்தாள். அவள் எப்படி கட்டிலுக்கு வந்தாள்? அவளுக்கு யார் போர்த்தி விட்டது?

அப்போது சோபாவில் படுத்திருந்த அஸ்வினின் மீது அவள் பார்வை விழுந்தது. என்ன நடந்திருக்கும் என்பது அவளுக்குப் புரிந்து போனது. இந்த மனிதன் தான் அவளை இங்கு தூக்கி வந்திருக்க வேண்டும். போகிற போக்கில், இவர் அவளை எதுவும் தன்னிச்சையாக செய்ய விட மாட்டார் போல இருக்கிறதே? எவ்வளவு தைரியம் இருந்தால் அவர் அவளை தூக்கி வந்திருப்பார்? அவளைத் தொட்டுத் தூக்கும் உரிமையை, அவருக்கு யார் கொடுத்தது? அவளுக்கு கோபம் தலைக்கேறியது.

இவரும் அவருடைய தம்பியை போல் தான் போலிருக்கிறது என்று யோசித்தாவள், ஒரு வினாடி ஸ்தம்பித்து நின்றாள். இவர் அவருடைய தம்பியை போன்றவரா? ஒருவேளை, நிச்சயம் செய்தபடி இந்த திருமணம் தருணுடன் நடந்திருந்தால், அவன் இவரைப் போல சோபாவிலா உறங்கியிருப்பான்? இவர் அவனைப் போல் இல்லை போலிருக்கிறதே...!

முதன் முறையாக, அஸ்வினுக்கு சாதகமாக, அவள் மனதில் அந்த எண்ணம் உதித்தது. அவள் அந்த எண்ணத்தை உதறி விட்டாள். ஏனென்றால், அவர்களைப் பற்றி எதையும் சிந்திக்க அவள் தயாராக இல்லை. கட்டிலை விட்டு கீழே இறங்கி, தன் உடைகளை எடுத்துக் கொண்டு, குளியலறை நோக்கி சென்றாள்.

அவ்வளவு நேரம், தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த அஸ்வின், தன் கண்களை மெல்லத் திறந்தான். அவன் சோபாவில் உறங்குவதை, அபிநயா பார்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் அவன் இவ்வளவு நேரம் காத்திருந்தான். அவன், அவளிடமிருந்து விலகியிருப்பதை பார்த்தால், அவள் மனதுக்கு சற்று நிம்மதி கிடைக்கலாம். அதற்கும் மேலாக, அபிநயாவுக்கு தெரிய வேண்டும், இவன் தருணை போல் பெண்களின் சதையை சுவைப்பவன் அல்ல என்று. அவன் நினைத்தது போலவே நடந்து விட்டது.

அவள் குளித்துவிட்டு, குளியலறையை விட்டு வெளியே வந்த பொழுது, காஃபி குவளைகளுடன் அவர்களின் அறைக்குள் நுழைந்தான் அருண்.

"குட் மார்னிங், ஆவின்... குட் மார்னிங், அண்ணி..."

அவன் அபிநயாவை பார்த்து பளிச்சென்று சிரிக்க, அவனை நோக்கி பொய் சிரிப்பை உதிர்த்தாள் அவள்.

"புதுமண தம்பதிகளுக்கு ஸ்பெஷல் காஃபி, மேட் பை அருண்." என்றான்.

மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு, தன் குவளையை எடுத்துக் கொண்டான் அஸ்வின்.

"உங்க வீட்டுல இருந்து ஃபோன் பண்ணாங்களாம். ஏதோ பிரார்த்தனையை நிறைவேறத்த, கோயிலுக்கு போகணுமாம். உங்களை அங்க வர சொல்லி இருக்காங்க. நான் தான் உங்களை அழைச்சிகிட்டுப் போக போறேன்" என அவன் சொல்ல,

அதைக் கேட்டு, அதிர்ச்சியானாள் அபிநயா. அங்கு செல்ல அவளுக்கு விருப்பமில்லை. அவள் அம்மாவின் மீதும், அத்தையின் மீதும், அவளுக்கு சொல்லவொணா கோபம் இருந்தது. அவள் எவ்வளவு கோபமாக இருக்கிறாள் என்று அவர்களுக்கு காட்ட சிறந்த தருணம் இது தான். அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், மனதிற்குள் திட்டமிட்டு கொண்டாள்.

"உங்க வீட்டுக்கு நீங்க போறதுக்கு முன்னாடி, எங்க வீட்டு வழக்கப்படி, நீங்க ஏதாவது சமைச்சு கொடுக்கணும், ஐ மீன், உங்க கண்கண்ட கணவனுக்கு ஏதாவது சமைச்சி கொடுங்க."

அவள் தன் கண்களை சுழல விட, அவளை பார்த்து புன்னகை புரிந்தான் அஸ்வின்.

"ஆவின், உன்னோட வைஃபை கிச்சனுக்கு கூட்டிக்கிட்டு போக எனக்கு பர்மிஷன் கொடு. கவலைப்படாதே, நாங்க அவங்கள கவனிச்சிகிறோம். மனோஜும் வந்துகிட்டு இருக்கான்"

அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தான் அஸ்வின்.

"நீ அவளை கிச்சனுக்கு தானே கூட்டிட்டு போற? அமேசான் ஃபாரஸ்ட்டுக்கு கூட்டிக்கிட்டு போற மாதிரி ஏன் பில்டப் குடுக்குற?" என்றான்.

"என்னமோ, நீ அவங்கள அமேசான் ஃபாரஸ்டுக்கு அனுப்பிடுறா மாதிரி..." அருண் கிண்டல் செய்ய,

"நோ சான்ஸ்..." என்று சிரித்தபடி தன் கையில் இருந்த காபியை பருகினான் அஸ்வின்.

அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றாள் அபிநயா. எப்படி இவர்களால் இவ்வளவு சகஜமாக இருக்க முடிகிறது? தருண் காணாமல் போனதை பற்றி இவர்கள் கவலைப் படுவதாகவே தெரியவில்லையே... என்னவோ, இவள் அஸ்வினுக்கு நிச்சயக்கப்பட்ட மணமகள் போலல்லவா இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்...!

"நீ போய் குளி ஆவின். நான் அண்ணிய கூட்டிகிட்டு போறேன்."

தனது எரிச்சலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் அவனை பின் தொடர்ந்தாள் அபிநயா.

அவர்கள் இருவரும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த அதே நேரம், மனோஜ் அஸ்வின் இல்லத்தில் நுழைந்தான். அவனும் அவர்களுடன் சமையல் அறையை நோக்கி சென்றான். அங்கு வேலையாள் ராமு இருந்த போதும், அவர்கள் அபிநயாவுடன் நின்று கொண்டு, அவளுக்கு தேவையான பொருள்களை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

"ராமு அண்ணா, கொஞ்சம் கசகசாவை எடுத்து, பாலோட சேர்த்து அரைச்சு கொடுங்க" என்று ராமுவை கேட்டாள்.

"சரிங்க அண்ணி" என்று கூறிவிட்டு அவள் சொன்னதை செய்தான் ராமு.

"பாயசத்தில் எதுக்கு கசகசாவை சேக்கணும்?" என்றான் மனோஜ், ஏதோ டிவி சேனலில் நடைபெறும் சமையல் நிகழ்ச்சியில் கேட்பதை போல.

அபிநயாவை தங்களுடன் இணைத்துக் கொள்ள படாதபாடு பட்டார்கள் அவர்களிருவரும். ஆனால் அவளுக்கோ, அது எரிச்சலை ஏற்படுத்தியது.

"அது பாயசத்துக்கு ஒரு ரிச் டேஸ்ட் கொடுக்கும்" என்று அவர்களை பார்க்காமல், பாயசத்தை கிளறிய படி கூறினாள்.

"இதுல முந்திரிப்பருப்பை எப்ப சேப்பிங்க? எனக்கு முந்திரிபருப்பு ரொம்ப பிடிக்கும்" என்றான் அருண், சில முந்திரி பருப்புகளை வாயில் திணித்த படி.

"கடைசியில" என்றாள்.

"அப்பறம்..." என்று மனோஜ் ஆரம்பிக்க,

தன் கையில் பிடித்திருந்த கரண்டியை, அவர்களை நோக்கி உயர்த்தி பிடித்தபடி,

"இங்கிருந்து மரியாதையா வெளியே போங்க. இல்லனா..."

அவள் கோபத்தை பார்த்து,

"ஓகே, ஓகே. நீங்க செய்ங்க. நாங்க போறோம்..." என்று மனோஜ் கூற, அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடிச் சென்றார்கள்.

தன் கையில் இருந்த கரண்டியை, *லொட்* என்று கீழே வைத்தாள் அபிநயா, எரிச்சலுடன்.

அபிநயா அவர்களை துரத்தி அடித்தாலும், அவர்கள் இருவரும் அதை பற்றி கவலைப்படவில்லை. ஏனென்றால், இது அவர்கள் எதிர்பார்த்தது தான்.

தான் சமைத்த பாயசத்தை, டைனிங் டேபிளுக்கு எடுத்து வந்தாள் அபிநயா. அங்கு சுபத்திரா காத்திருந்தார். அந்த பாயசத்தை அனைவருக்கும் பரிமாறினாள் அபிநயா முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு. அது மற்ற அனைவரையும் வருத்தப்பட வைத்தது, அஸ்வின் ஒருவனை தவிர. அவனுக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு விஷயத்தில் நேரத்தை செலவழிக்க அவன் தயாராக இல்லை போலிருக்கிறது. பாயசத்தை, அமைதியாய் ருசித்து சாப்பிட்டான் அவன்.

அபிநயா தன்னிடம் பேசாமல் முரண்டு பிடித்ததை பார்த்தபொழுது சுபத்திராவுக்கு வருத்தம் மேலோங்கியது. அபிநயாவின் *டோன்ட் கேர்* நடவடிக்கை, அவருக்கு பயத்தை ஏற்படுத்தியது.

"அஸ்வின், அபிநயாவை அவங்க அம்மா வீட்டுல விட்டுட்டு வா" என்றார் சுபத்ரா.

"நானும், மனோஜும் போறோம்" என்றான் அருண்.

"ஆமாம், நாங்க அங்கிருந்து நேரா ஆஃபீஸுக்கு போறோம்" என்றான் மனோஜ்.

"கல்யாணத்துக்கு பிறகு முதல் தடவையா உங்க அம்மா வீட்டுக்கு போற, இந்த ஸ்வீட்ஸ் எடுத்துக்கிட்டு போமா" என்றார் சுபத்ரா.

அவர் கையில் இருந்து அதை பெற்றுக் கொண்டு, அருணையும் மனோஜையும் பின்தொடர்ந்தாள் அபிநயா. சொல்லியே தீர வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அவள் சுபத்ராவிடமோ, அஸ்வினிடமோ சொல்லிக்கொள்ளாமல் சென்றது தான் அது.

"என்னை மன்னிச்சிடு அஸ்வின். என்னால தான் நீ இவளை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாயிடுச்சு" என்றார் வருத்தத்துடன்.

"நீங்க அதுக்காக சந்தோஷம் தானே படணும், பாட்டி...?" என்றான் அஸ்வின்.

ஏதும் புரியாமல், அவனைப் பார்த்து முகம் சுளித்தார் சுபத்திரா.

"தருண் அவளை கல்யாணம் பண்ணியிருந்தா, பாவம் தருணுடைய வாழ்க்கை நாசமா போயிருக்கும். நீங்களும், அவனை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டு இருப்பீங்க. ஏன்னா எல்லாரையும் விட, உங்களுக்கு அவனைத் தானே ரொம்ப பிடிக்கும்..." என்று வார்த்தையால் விளையாடினான் அஸ்வின்.

அவனை வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு நின்றார் சுபத்திரா. அவன் பேசியதற்கு என்ன அர்த்தம்? தருணை மட்டும் தான், தான் நேசிக்கிறேன் என்று அஸ்வின் நினைத்துக் கொண்டிருக்கிறானா?

அவருடைய அதிர்ச்சியடைந்த முகத்தைப் பார்த்து, திருப்தி அடைந்தவனாய் அங்கிருந்து கிளம்பிச் சென்றான் அஸ்வின்.

காரின் முன் இருக்கைகளை, மனோஜும், அருணும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். பின் இருக்கையில் அமர்ந்த அபிநயா,
அன்று அஸ்வின் கூறியதை நினைத்து பார்த்தாள்.

"நான் உன்னுடைய டிரைவர் இல்ல"

இன்று, அவன், அவளுடையை கணவனாகிவிட்ட காரணத்தால் அவள் அதை நினைத்து பார்த்தாளோ என்னவோ.

"உங்களுக்கு என்ன பிடிக்கும், அபிநயா?" என்று மெல்ல பேச்சைத் துவங்கினான் மனோஜ்.

"எனக்கு எதுவும் பிடிக்காது" என்றாள் வெடுக்கென்று .

"பொய்... உங்களுக்கு என்ன பிடிக்கும்னு எங்களுக்கு தெரியும்" என்றான் மனோஜ்.

அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்தாள் அபிநயா.

"நாய், பூனை, கழுதை, குரங்கு, ஆடு, மாடு... "

அதைக் கேட்டு அபிநயா  வாயடைத்துப் போனாள். இவர்கள், அவளைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள் என்று அவளுக்கு புரிந்தது.

"அவங்களுக்கு பிடிக்காத ஒரே அனிமல் தருண் மட்டும் தான்" என்று கவுண்டர் கொடுத்து சிரித்தான் அருண். அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு தருணை கேலி செய்வதை பார்த்து, அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதா என்பது அவளுக்கு புரியவில்லை. தருண் காணாமல் போனதைப் பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லையா? இவர்கள் மனதில் என்ன தான் இருக்கிறது?

"உங்க பிரதர் காணாம போயிட்டான்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?" என்றாள் அவள்.

மனோஜும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மறுபடியும் சிரித்தார்கள் .

"எங்களுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு" என்றான் அருண்.

"உங்க ரெண்டு பேரையும் பார்த்தா, நீங்க கொஞ்சம் கூட கவலைப்படுற மாதிரி தெரியலயே....?"

"நாங்க ஏன் கவலைப் படணும்?" என்று எதிர் கேள்வி கேட்டான் அருண்.

"அவனை யாராவது கடத்தி இருந்தா என்ன செய்வீங்க?"

"நாங்க அப்படி நினைக்கல" என்றான் மனோஜ்.

"ஏன்?"

"ஏன்னா, அவன் எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்டோட ஓடிப் போயிட்டான்" என்றான் அருண்.

"என்னது?" என்று அதிர்ச்சி காட்டினாள் அபிநயா.

"ஆமாம். அவன் அந்த பொண்ண சந்திக்க போனதை நானே பார்த்தேன். அதுக்கு அப்புறம் அவன் திரும்பி வரல" என்றான் அருண்.

"தருண் நல்லவன் இல்லன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். அதனால தான் நீங்க அஸ்வினை கல்யாணம் பண்ணிக்கணும்னு நாங்க நினைச்சோம். ஏன்னா, நீங்க அஸ்வின் மாதிரி ஒரு நல்லவனை தான் கல்யாணம் பண்ணிக்கணும்" என்றான் மனோஜ்.

அஸ்வினை பற்றி நல்ல அபிப்ராயத்தை அவர்கள் அவள் மனதில் புகட்ட முயன்றார்கள். அவள் அப்போதும் அமைதி காத்தாள்.

"ஆவின் தான் உங்களுக்கு பொருத்தமானவன். அவன் உங்கள நல்லா கவனிச்சிக்குவான்... அதுமட்டுமில்லாம..."

"நிறுத்துங்க" என்று அவன் பேச்சை வெட்டினாள் அபிநயா.

"நான் என்ன சொல்ல வர்றேன்னா" என்று இழுத்தான் அருண்.

"நான் இங்கேயே இறங்கிக்குறேன்"

"ஆனா உங்க வீடு அடுத்த தெருவில் தானே இருக்கு...?"

"நான் என் ஃபிரண்டை கூட்டிட்டு போகப்போறேன்"

"நாங்க உங்க ரெண்டு பேரையுமே ட்ராப் பண்றோம்."

"தேவையில்ல" என்று கூறியபடி அவர்கள் பதிலுக்கு காத்திராமல், அவள் விடுவிடுவென இறங்கிச் சென்றாள்.

மனோஜும், அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விட்டார்கள்.

"இவங்களை வழிக்குக் கொண்டுவர, ஆவின் படாத பாடுபட வேண்டியிருக்கும்" என்றான் அருண் சோகமாக.

"அது உண்மை தான்" என்று அவனை ஆமோதித்தான் மனோஜ்.

அவர்கள் அலுவலகம் நோக்கி விரைந்தார்கள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top