16 தருணை காணவில்லை

16 தருணை காணவில்லை

தருணை தேடி அஸ்வின் சென்று  ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. சென்றவன் திரும்பி வரவும் இல்லை, அவர்களுக்கு தருணை பற்றிய எந்த செய்தியும் கிடைக்கவும் இல்லை. நொடிக்கு நொடி, சுபத்ராவின் பதற்றம் அதிகரித்துக் கொண்டு சென்றது.

அப்பொழுது அங்கு பண்டிதர் வந்தார்.

"முகூர்த்த நேரம் நெருங்கிக்கிட்டு இருக்கு... நம்ம ஆரம்பிக்கலாமா...?" என்றார்.

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், திகைத்து நின்றார் சுபத்ரா.

"மாப்பிள்ளையை கூப்பிடுங்க" என்றார் பண்டிதர்.

"ப்ளீஸ் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. மாப்பிள்ளையை காணலை... அவனைத் தேடி தான் எங்க அண்ணன் போயிருக்கான்" என்றான் அருண்.

"என்னது...? மாப்பிள்ளையை காணோமா?" என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்க்க, அங்கு அதிர்ச்சியுடன் நின்றிருந்தார் மங்கை.

"அத்தை... ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க. அவனை தேட சொல்லி எங்க ஆளுங்களை அனுப்பி இருக்கோம். அஸ்வின் கூட அவனை தேடித்தான் போயிருக்கான்..."

"தேடிப் போய் இருக்கானா? என்ன தம்பி சொல்றீங்க நீங்க? வரவேண்டியவங்க எல்லாம் வந்து, மண்டபம் நிரம்பி வழியுது... எல்லாரும் மாப்பிள்ளையும், பெண்ணும் வரணும்னு காத்துகிட்டு இருக்காங்க..." என்றார் பதட்டத்துடன்.

"எப்படியும் முகூர்த்தத்திற்கு முன்னாடி வந்துடுவான்" என்றார் சுபத்ரா.

"முகூர்த்ததிற்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. இந்த நேரத்தில், அவனை எப்படி வெளியே போக விட்டீங்க?" என்று சீறினார் மங்கை.

"பத்து நிமிஷம்.... தயவுசெய்து பத்து நிமிஷம் காத்திருங்க" என்றார் சுபத்ரா.

ஏதும் சொல்லாமல், அங்கிருந்து விறுவிறுவென்று சென்றார் மங்கை.

இதற்கிடையில்....

சென்னை மாநகரத்தின் மத்தியில் உயர்ந்து நின்ற, ஒரு கட்டிடத்தின் அடிதளம்... சென்னையின் நடுவில், அப்படி ஒரு இடம் இருப்பதை, எவராலும் நம்ப முடியாது. நாம் மெதுவாய் அதன் உள்ளே இருந்து வரும் கத்தலை கேட்டுக்கொண்டு நுழைகிறோம்... ஒரு வாலிபன், அங்கு நாற்காலியுடன் பிணைக்கப்பட்டு, அமர வைக்கப்பட்டு இருக்கிறான். தன்னுடைய முழு பலத்தையும் திரட்டி, கத்தி கூச்சலிடுகிறான். ஆனால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை... அவனை சுற்றி இருந்த சிலரும், அவனுக்கு உதவ முன்வரவில்லை. நம்மால் அவனுடைய முகத்தை பார்க்க முடியவில்லை. ஏனெனில் அவனுடைய முகம், ஒரு சாக்கு பையினால் மூடப்பட்டிருந்தது.

ஒரு நிமிடம்... அந்த வாலிபனின் குரல், நமக்கு ஏற்கனவே பழக்கப்பட்டது போல் இருக்கிறது...! நம்மால் நம்ப முடியவில்லை.. அது கல்யாண மாப்பிள்ளை தருண் தான்.

"விடுங்கடா என்னை... நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது. எங்க அண்ணன் அஸ்வினுக்கு தெரிஞ்சதுன்னா, உங்க எல்லாரையும் காலி பண்ணிடுவான்..." என்று மிரட்டிக் கொண்டிருந்தான் தருண்.

திடீரென ஏற்பட்ட, காலடிச் சத்தத்தைக் கேட்டு அவன் மௌனமானான்.

"யாருடா நீ? எதுக்காக என்னை இங்க அடச்சி வச்சிருக்க?  என் அண்ணனுடைய ஃபோன் நம்பரை எழுதிக்கோ... பணத்துக்காக நீ என்னை கடத்தி இருந்தா, அவன் உனக்கு வேண்டிய பணத்தை கொடுப்பான்" என்று அவன் கூறியதற்கு எந்த பதிலும் இல்லை.

அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த அந்த மனிதன், அதீத ஆத்திரத்துடன் காணப்பட்டான். அங்கு நின்றிருந்த அவனுடைய ஆளை அவன் பார்க்க, ஒரு உருட்டுக்கட்டை அவனை நோக்கி நீட்டப்பட்டது. அதை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டு, தன் முழு நீல சட்டையின் கையை மடித்து கொண்டு, தருணை  நோக்கி வெகு விரைவாய் முன்னேறினான்.

"யாருடா நீ ****" என்று தருண் கெட்ட வார்த்தையில் திட்ட துவங்கும் முன், அவன் முகத்தில் வலிமையான குத்து விழுந்தது.

அந்த எதிர்பாராத குத்தில், நிலை குலைந்து போனான் தருண். ஒன்றன் பின் ஒன்றாய், ஏராளமான குத்துகளை பெற்றான் தருண். அவன் முகத்தில் விழுந்த குத்துக்கள் சொன்னது, அந்த மனிதன் எவ்வளவு கோபமாக இருந்தான் என்பதை. தருணின் முகத்தை மறைத்திருந்த  அந்த சாக்குப்பையில் ரத்தக்கறை ஏற்பட்டது.  தருணால் சீரழிக்கப்பட்ட, ஏதோ ஒரு பெண்ணின் சொந்தக்காரனாக அந்த மனிதன் இருக்க வேண்டும். அடிப்பதை நிறுத்திவிட்டு, தன் கை கடிகாரத்தை பார்த்தான் அந்த மனிதன்.

தருண், தன் காலடியில் ஏதோ ஒன்று கிடப்பதை உணர்ந்தான். அது ஒரு மரக்கட்டை. ஆத்திரத்துடன், அந்த மனிதன் நின்ற இடத்தை யூகித்து, அந்த கட்டையை  எட்டி உதைத்தான். அது அந்த மனிதனின் நெற்றியை பதம் பார்த்தது. அங்கு சுற்றியிருந்த அனைவரும், தருணை நோக்கி பாய்ந்து, தங்களது வேலையை காட்ட துவங்கினார்கள். தன் நெற்றியில் வழிந்த ரத்தத்தை, கைக்குட்டையால் அழுத்திப் பிடித்தபடி, அந்த மனிதன் அந்த இடத்தை விட்டு நடக்கத் துவங்கினான். அவனுடைய ஆட்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள். இதற்கு முன் அப்படிப்பட்ட ஒரு வலியை தருண் எப்பொழுதும் அனுபவித்திருக்க மாட்டான். அவன், தன் உள் உறுப்புக்கள் அனைத்தும் சிதைவது போல் உணர்ந்தான். அவனுடைய கத்தல், கதறலாக மாறியது. அந்த மனிதன் தன் காரை சென்று அடையும் வரை, தருணின்   கதறலை கேட்டுக்கொண்டு, திருப்தியுடன் தன் காரை அடைந்தான்.

அஸ்வின் இல்லம்

மங்கை, கோபாவேசமாக வருவதை பார்த்து குழம்பி போனார் பத்மா.

"என்ன ஆச்சி கா?" என்றார்

"என்ன சொல்றது? மாப்பிள்ளையை காணோமாம்... அவங்க அவனை தேடிக்கிட்டு இருக்காங்க."

"என்னக்கா சொல்றீங்க...? முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சே..." என்று பரபரத்தார் பத்மா.

"அவன் முகூர்த்த நேரத்துக்குள்ள வருவான்னு எனக்கு தோனல" என்றார் மங்கை.

"இப்ப என்ன பண்றது?" என்றார் பத்மா செய்வதறியாமல்.

"அவனை நான் கொல்ல தான் போறேன்" என்று ஆத்திரத்தில் கத்தினார் மங்கை.

அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த அபிநயாவின் தோழி ப்ரீத்தி, அந்த விஷயத்தை அபிநயாவிடம் சொல்ல உள்ளே ஓடினாள். அங்கு அவள் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து,

"அபி, மாப்பிள்ளையை காணோம்..."

நாற்காலியில் இருந்து, குதித்து எழுந்தாள் அபிநயா.

"நீ என்ன சொன்ன?"

"ஆமாம்... அவன் இங்க இல்ல. அவன் எங்க போனான்னு யாருக்கும் தெரியல..."

அபிநயாவின் உள்ளத்தை அவள் முகம் பிரதிபலித்தது... ஆயிரம் வாட் மின்சார விளக்கை போல் அவள் முகம் ஒளிர்ந்தது.

"அந்த பொறுக்கிகிட்ட இருந்து நீ தப்பிச்சிட்ட" என்று குதூகலித்தாள் பிரீத்தி.

"அம்மா தாயே கருமாரி... உங்களை நம்பாம இருந்ததுக்கு  என்னை
மன்னிச்சிடுங்க." என்று கரங்களை குவித்தபடி மேல் நோக்கி பார்த்து கூறினாள் அபிநயா.

வெளியில் மங்கையின் குரல் ஹை பிட்சில் ஒலித்துக் கொண்டிருந்தது. வெளியில் நடப்பது என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவர்கள் இருவரும் ஓடி வந்து சுவரின் பின் மறைந்து கொண்டு நின்றார்கள்.

தன் குடும்ப கௌரவத்தை வைத்து ஏதும் செய்ய முடியாமல் அமைதியாய் நின்று கொண்டிருந்த சுபத்ராவை பார்த்து மங்கை கேள்வி மேல் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.

"நல்லா இருக்குங்க நீங்க செஞ்சது... திட்டம் போட்டு எங்களை பழி வாங்கிட்டீங்க... ஒன்னுத்துக்கும் உதவாத உங்க பேரன், அவன் புத்தியை காட்டிட்டான். அவனை நம்பாதீங்கன்னு அபிநயா தலையில அடிச்சுகிட்டா. அவ பேச்சை கேட்காம போன நாங்க முட்டாள். இது எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம். உங்க பேரனை ஒழுங்கா வளத்திருந்தா அவன் இப்படி தறிகெட்டு திரிஞ்சிருக்க மாட்டான். அவன் ஆடின ஆட்டத்துக்கு எல்லாம் கூட சேர்ந்து, நீங்களும் ஆடுனிங்க. இந்த கல்யாணம் வேண்டாம்னு, எங்க காலை பிடிச்சி கெஞ்சினா அபிநயா. விருப்பமே இல்லாத
கல்யாணத்தை செஞ்சுக்க சொல்லி நாங்க தான் எங்க பொண்ணை கட்டாய படுத்தினோம். ஏன் தெரியுமா? நீங்க உங்க பவரை காட்டி எங்களை மிரட்டினீங்க. நீங்க தான் ரொம்ப பேசுவீங்களே... இப்போ என்ன சொல்ல போறீங்க? ஏன் அமைதியா இருக்கீங்க?" என்று பிடி பிடி என பிடித்தார் மங்கை.

"உங்க குடும்ப கௌரவம் எப்படிப்பட்டதுன்னு நாங்க நல்லா   தெரிஞ்சுக்கிட்டோம். இந்த அவமானத்தை நாங்க எப்பவுமே மறக்க மாட்டோம். வாங்க கா நம்ம போகலாம். அபியோட தலையெழுத்தை அந்த கடவுள் தீர்மானிக்கட்டும். " என்றார் பத்மா.

அப்பொழுது, அவர்கள் அத்தனை பேருடைய பார்வையும், நுழைவாயிலை நோக்கி திரும்பியது. நெற்றியில் ரத்தக் கறையுடன் உள்ளே நுழைந்தான் அஸ்வின்.

அவனை நோக்கி ஓடினான் அருண்.

"என்ன ஆச்சு, ஆவின்?"

"அதை விடு" என்றான் அஸ்வின்.

"தருணை பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?" என்றார் சுபத்ரா.

இல்லை என்று தலையசைத்தான் அஸ்வின்.

"போச்சு... நம்ப கடைசி நம்பிக்கையும் வீணா போச்சு." என்ற மங்கை, பத்மாவை பார்த்தபடி,

"இன்னும் ஏன் இங்க நின்னுகிட்டு இருக்க? செய்யுறதுக்கு இங்க எதுவும் இல்ல. இவங்க பணத்தால பணக்காரங்க. நடத்தையிலும், ஒழுக்கத்திலும் பரம ஏழைங்க. இவங்களால நம்மள புரிஞ்சுக்க முடியாது. அவங்களுக்கு பணத்தோட பவர் மட்டும் தான் தெரியும்."

தன் தலைக்கு மேல் கையை உயர்த்தி கும்பிட்டபடி,

"ரொம்ப நன்றி சுபத்ராம்மா. நீங்க எங்க குடும்பத்துக்கு செஞ்சத நாங்க எப்பவும் மறக்க மாட்டோம். கடவுள் உங்களை காப்பாத்தட்டும்"

உள்ளே விரைந்து சென்றவர், அபிநயாவின் கையை பிடித்து பரபரவென இழுத்து வந்தார்.

"வா போகலாம்... இந்த பணக்காரங்க அவங்க பணத்தை தின்னு வாழட்டும். எனக்கு தெரியும், ஒரு நாள் அவங்க குடும்பக் கெளரவத்தால எதுவும் செய்ய முடியாம, நம்ம முன்னாடி தலை குனிஞ்சி நிப்பாங்கன்னு. கடவுளுக்கு மிஞ்சின  சக்தி இந்த உலகத்துல எதுவுமே இல்ல. பகட்டான கௌராவத்தால ஒரு பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்த உங்களால
முடியலயே..."

அந்த அரங்கம் முணுமுணுப்புகளால் நிறைந்தது. சிலர் சத்தமாக பேசவும் தயங்கவில்லை.

"இந்த அம்மா, மூத்த பிள்ளைகளை விட்டுட்டு இந்த பையனுக்கு கல்யாணம் பண்ணும் போதே நினைச்சேன், ஏதோ பிரச்சனை இருக்குன்னு" என்றார்  ஒரு பெண்மணி.

"பின்ன, நமக்கு தெரியாதா அவன் என்னெல்லாம் செஞ்சுகிட்டு சுத்திகிட்டு இருந்தான்னு..." என்றார் மற்றொருவர்.

"தயவுசெஞ்சி தேவையில்லாம பேசாதீங்க. அப்படி அந்த பெண்ணுடைய வாழ்க்கை கெட்டுப் போக பாட்டி விட மாட்டாங்க. அவங்க நிச்சயம் ஒரு வழியை தேடி கண்டு பிடிப்பாங்க." என்றான் மனோஜ்.

"என்ன வழியை கண்டுபிடிக்க போறாங்க? பாரு, அவங்க எப்படி ஒன்னும் புரியாம நிற்கிறாங்கன்னு...! பொண்ணு வீட்டுக்காரங்களும் கிளம்பி போறாங்க" என்றார் ஒருவர்.

அபிநயாவின் கையை பிடித்து இழுத்த படி நடக்கத் துவங்கினார் மங்கை. பத்மாவும் தனது கணவன் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு, அவரை பின்தொடர்ந்தார்.

அப்பொழுது,

"நில்லுங்க" என்ற சுபத்ராவின்  வார்த்தை அந்த மண்டபம் முழுதும் எதிரொலித்தது.

அவர் அபிநயாவை நோக்கி விரைந்து சென்றார். மங்கை பற்றியிருந்த அவளது கரத்தை விடுவித்தார் சுபத்திரா. அபிநயாவின் கரங்களை உயர்த்தி, அவள் அணிந்திருந்த அவர்களின் குடும்ப வளையல்களை பார்த்து,

"இந்த வளையலை அவளுக்கு நான் போட்டு விட்டபவே, அவ எங்க குடும்பத்து மருமகளா ஆயிட்டா. அவளை  இங்கிருந்து அழைச்சுக்கிட்டு போக உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல."

மங்கை ஏதோ சொல்ல எத்தனிக்க, தன் கையை உயர்த்தி, அவரை தடுத்தார் சுபத்ரா.

"இந்த கல்யாணத்துல உங்களுக்கு விருப்பமில்லன்னு எனக்கு தெரியும். ஆனா விதி, கல்யாணம் என்கிற வட்டத்துக்குள்ள நம்மளை கொண்டு வந்து நிறுத்திடுச்சி. இந்த கல்யாணத்துக்காக நான் அவளை கட்டாயப்படுத்தினது உண்மை தான். ஆனா அதுக்காக நான் அவளுடைய வாழ்க்கையை நாசம் பண்ணுவேன்னு  அர்த்தமில்ல. நீங்க நெனச்சுக்கிட்டு இருக்கறது உண்மை இல்ல. நான் எப்பவுமே அவளை பழிவாங்க நினைச்சதில்ல. அவ எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்ங்குறது என்னுடைய உண்மையான ஆசை. எது எப்படி இருந்தாலும், குறிச்ச நேரத்தில் இந்த கல்யாணம் நடக்கும், ஆனா தருணோட இல்ல... அஸ்வினோட" என்றார்.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top