13 அஸ்வினுடன்...

13 அஸ்வினுடன்...

மறுநாள்

சுபத்ரா, அபிநயாவின் இல்லத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். வழக்கம் போல், மங்கை ஃபோனை எடுத்து பேசினார்.

"யாரு பேசுறீங்க?"

"நான் சுபத்ரா பேசுறேன்..."

"வணக்கங்க..."

"அபிநயாவோட லெஹங்காவுக்கு அளவெடுக்க, அவளை அழைச்சிட்டு போக, அஸ்வின் அங்க வந்துகிட்டு இருக்கான். அபிநயாவை அவனோட கொஞ்சம் அனுப்பி வையுங்க. அவனே, மறுபடியும் அவளை கொண்டு வந்து விட்டுடுவான்."

"சரிங்க..."

என்று அவர் கூற அழைப்பைத் துண்டித்தார் சுபத்ரா. மங்கையோ புலம்பத் துவங்கினார். அவருக்கும் பத்மாவிற்கு மட்டும் தான் தெரியும், அபிநயாவை கிளப்புவது பெரும்பாடு என்பது. ஏனெறால், அவருக்கு தெரியாது, அபிநயா அஸ்வினுடன் செல்ல ஏற்கனவே ஒப்புக் கொண்டுவிட்டாள் என்பது.

"அவ என்ன செய்யப் போறாளோ தெரியலயே..." என்று மனதிற்குள் பொறுமினார்.

"ஃபோன் யாருகிட்டயிருந்து கா?" என்றார் பத்மா.

"எல்லாம் அந்த தலைக்கனம் பிடிச்ச பொம்பளைகிட்ட இருந்து தான்..."

"ஏதாவது பிரச்சனையா?"

"அபியை அழச்சிக்கிட்டு போக அஸ்வின் வராராம்."

"அடக்கடவுளே... அவளுடைய கோபத்தை, அவ அந்த தம்பி மேல காட்டாம இருக்கணும்..." என்று திகிலுடன் கூறினார் பத்மா.

"அவ அவங்க வீட்டு மருமகளா போகப்போறா... அவளே அவர்கிட்ட பேசிக்கட்டும்"

அபிநயாவின் அறையை நோக்கி சென்ற பத்மாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. முழுவதும் தயாரான நிலையில் இருந்தாள் அபிநயா.

"நீ எங்க கெளம்பிட்ட?"

"வேற எங்க? லெஹங்காவுக்கு அளவு கொடுக்க போறேன்..."

"உன்னை இப்படிப் பார்க்கும் போது, எனக்கு ரொம்ப சந்தோஷமா..."

அவரை மேலே பேச விடாமல், வெட்டி பேசினாள் அபிநயா.

"எனக்கும் சந்தோஷம் தான்... நீங்களாவது சந்தோஷமா இருக்கீங்கன்னு..." என்றாள் வெடுக்கென்று.

"அபி..."

"போதும் மா... நான் ரொம்ப களச்சி போயிட்டேன்... என்ன நடக்கணுமோ அது நடக்கட்டும்..."

தன் இயலாமையை நினைத்து நொந்து கொண்டார் பத்மா. அந்த நேரம், அவர்கள் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. அஸ்வினாக தான் இருக்க வேண்டும், என்ற கணிப்புடன் கதவை திறந்தார் பத்மா. அவருடைய கணிப்பு சரி தான். பாந்தமான உடையில், அட்டகாசமாக நின்றிருந்தான் அஸ்வின்.

"வணக்கம் ஆன்ட்டி..."

"அபி தயாராயிகிட்டிருக்கா. இப்ப வந்துடுவா... உள்ள வாங்க..."

உள்ளே வந்து, சோபாவில் அமர்ந்தான் அஸ்வின். அவனுக்கு காஃபி கொண்டு வர, சமையலறை நோக்கி விரைந்தார் பத்மா. ஏற்கனவே பால் சூடாக இருந்ததால், இரண்டு நிமிடத்தில் காஃபியோடு வந்தார்.

தன் கண்களை ஓட விட்டு, மெதுவாய் காபியை பருகத் தொடங்கினான் அஸ்வின். அவன் காப்பியை குடித்துவிட்டு குவளையை மேஜை மீது வைத்த நொடி பொழுதில், அவள் அறையில் இருந்து வெளியே வந்தாள் அபிநயா, அவன் காபியை குடித்து முடிக்கட்டும் என்று காத்திருந்தது போல. உண்மை தான். அவள் தன் அறையின் சுவற்றில் சாய்ந்தபடி, அவன் காபி குடிக்கும் வரை காத்திருக்கத் தான் செய்தாள். அவன் காபியை குடித்து முடிக்கும் வரை அவன் முன் நின்று கொண்டிருக்க அவள் பிரியப்படவில்லை. ஆனால், மகிழுந்தில் அவனுடன் பயணிக்கும் போது, என்ன செய்யப் போகிறாள்?

"நாங்க சீக்கிரம் வந்துடுறோம் ஆன்ட்டி..." என்றான் அஸ்வின்.

"சரிங்க தம்பி" என்றார் மங்கை.

விடுவிடுவென காரை நோக்கி சென்று அபிநயா ஏறுவதற்காக, முன் பக்க கதவை திறந்து கொண்டு நின்றான் அஸ்வின், தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை நிரூபித்து. ஆனால், அந்த மரியாதையை தவிர்த்துவிட்டு, பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள் அபிநயா. தன் கைகளை கட்டிக் கொண்டு, அவளையே பார்த்தபடி, திறந்த கதவை மூடாமல், அங்கேயே நின்றான் அஸ்வின்.

"என்ன?" என்பதை போல அவனைப் பார்த்தாள் அபிநயா.

"உன்னை பின்னால உக்கார வச்சி வண்டி ஓட்ட, நான் உன்னுடைய டிரைவர் இல்ல..." என்றான் புன்னகையுடன்.

தன் முகத்தை சிடுசிடுவென திருப்பிக் கொண்டாள் அபிநயா பிடிவாதமாக. அஸ்வினும் தனது பிடிவாதத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை. அவன் அசையாமல் அதே இடத்தில் நிற்கவே, வேறு வழியின்றி பின் சீட்டில் இருந்து இறங்கி, பின்பக்க கதவை *டொம்* என்று சாத்திவிட்டு, அஸ்வினை முறைத்தபடி, முன் சீட்டில் வந்து அமர்ந்தாள்.

"ஹாட்டி ஃபெல்லோ" என்று அவள் முணுமுணுத்தது, அஸ்வினின் காதில் நன்றாகவே விழுந்தது. அதை கேட்காதவன் போல, கள்ள புன்னகையுடன் இன்ஜினை உயிர்ப்பித்தான் அஸ்வின்.

"சீட் பெல்ட்டை போட்டுக்கோ..."

"போற போக்கைப் பார்த்தா, சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட, இவங்க சொல்ற படி தான் ஆடணும் போலிருக்கு..." என்று கூறிக்கொண்டே பெல்ட்டை மாட்டி கொண்டாள்.

"கட்டி வைக்கிற மாதிரி தெரிஞ்சாலும், பெல்ட்குள்ள இருந்தா, நீ சேஃபா இருப்ப..."

"சேஃபா இருக்கிறதைப் பத்தி யார் பேசுறது....? ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்..." என்றாள் எரிச்சலாக.

அவள் அப்படி கூறியது, அஸ்வினின் மனதிற்கு வருத்தத்தை அளித்தது. நிலைமையை பார்த்தால், அவன் தனது இலக்கை எட்ட வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

அப்போது ஒரு சிறுவன், அவர்கள் காரை நோக்கி,

"அபி அக்கா" என்று அழைத்துக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்து பிரேக்கை அழுத்தினான் அஸ்வின். அவன் அபிநயாவின் பக்கமாக வந்தான்.

"என்ன ஆச்சு, விஷால்?" என்றாள் அபிநயா.

"ஸ்கூல் வேனை மிஸ் பண்ணிட்டேன். நீங்க என்னை ஸ்கூல்ல விடுறீங்களா?" என்றான் மூச்சிரைத்தபடி விஷால்.

அவள் ஏதும் சொல்லாமல் அஸ்வினை பார்க்க,

"ஏறிக்கோ" என்றான் அஸ்வின்.

அப்பொழுது அஸ்வின் பக்கம் பார்வையைத் திருப்பினான் விஷால்.

"அக்கா, மாமா டக்கரா இருக்காரு..." என்றான்.

"அவர் மாமா இல்ல..." என்றாள் சாலையை பார்த்தபடி.

"ஆனா, இவர் மாப்பிள்ளை மாதிரி இருக்காரு" என்றான் விஷால்.

தன் புன்னகையை மறைத்துக் கொண்டு, முகத்தை சாதாரணமாக வைத்துக் கொள்ள, படாத பாடு பட்டான் அஸ்வின்.

விஷாலை அவன் பள்ளியில் விட்டு கிளம்பினார்கள் அவர்கள். அவர்களுக்கு இடையில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஆனால், அஸ்வின் அவளை பார்க்காமல் இருந்தான் என்று சொல்வதற்கில்லை. அவன் பார்வையை உணரும் போதெல்லாம், அபிநயா அவன் பக்கம் திரும்ப, ஏதும் அறியாதவன் போல் சாலையில் தன் கண்களை பதித்து காரை செலுத்திக் கொண்டிருந்தான் அஸ்வின்.

அந்த புகழ்பெற்ற கடைக்கு அபிநயாவை அழைத்துச் சென்று, அளவு கொடுத்து விட்டு கிளம்பினார்கள்.

"ஆப்போசிட்ல தான் என்னுடைய ஆஃபீஸ் இருக்கு. அங்கிருந்து ஒரு ஃபைலை எடுத்துக்கிட்டு கிளம்பிடலாம்." என்றான் அஸ்வின்.

சரி என்று வேண்டா வெறுப்பாக தலையசைத்தாள் அபிநயா.

அவளை வரவேற்பறையில் அமர வைத்துவிட்டு, தன் அறையை நோக்கி சென்றான் அஸ்வின். அந்த அலுவலகத்தின் வரவேற்பாளர், அவளுக்கு ஆரஞ்சு பழச்சாறு கொடுத்து உபசரித்தாள். தன் கண்களை அந்த அலுவலகம் முழுவதும் ஓட விட்டாள் அபிநயா. அந்த அலுவலகம் கூறியது, அஸ்வினுடைய சாம்ராஜ்யம் எவ்வளவு வலுவானது என்பதை.

அப்போது வரவேற்பு அறையை கடந்து சென்ற மனோஜும், அருணும், அபிநயா அங்கு அமர்ந்திருப்பதை பார்த்து வாய் பிளந்தார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் கேள்விக் குறியுடன் பார்த்து கொண்டார்கள்.

"அவங்க அபிநயா தானே?" என்றான் அருண் நம்ப முடியாமல்.

"சந்தேகமே இல்ல... அபிநயாவே தான்" என்றான் மனோஜ் ஆச்சரியமாக.

இருவரும் அவளை நோக்கி விரைந்தார்கள்.

"நீங்க இங்க எப்படி வந்தீங்க?" என்றான் அருண்.

"லெஹங்கா அளவு கொடுக்க வந்தேன்" என்றாள் அவள்.

"என்கிட்ட சொல்லியிருந்தா, நான் உங்களை அழச்சிகிட்டு வந்திருப்பேனே" என்றான் அவன்.

"நீங்க எல்லாரும் பிஸியா இருக்கிறதா உங்க பிரதர் சொன்னார்."

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள், எந்த பிரதர்? என்ன பிசி? என்பதைப் போல.

"தருணா சொன்னான்?" என்றான் அருண்.

"இல்ல, உங்க அண்ணன்..."

"என்னது ஆவினா?" என்றான் அதிர்ச்சியுடன்.

"அது யாரு?" என்று முகம் சுளித்தாள் அபிநயா.

"ஐ மீன் அஸ்வின்..."

"ஆமாம். அவர் தான் என்னை இங்க கூட்டிகிட்டு வந்தார்."

"அவன் உங்களை பிக்கப் பண்ணானா?" என்றான் அருண்.

ஆமாம் என்று தலையசைத்தாள் அபிநயா.

"உங்க வீட்டுக்கே வந்து பிக்கப் பண்ணானா?" என்றான் மனோஜ்.

அதற்கும் தலையசைத்தாள் அபிநயா.

"உங்களை மறுபடி டிராப் பண்றதா சொன்னானா?" என்றான் அருண்.

இவர்களுக்கு என்ன பைத்தியமா? என்பதைப் போல் அவர்களை பார்த்தாள் அபிநயா.

"நீங்க இங்க வர போறீங்கன்னு எங்களுக்கு தெரியாது... அதான்..." என்று அசடு வழிந்தான் அருண்.

"ஆமாம், நாங்க ரொம்ப பிஸி" என்ற மனோஜ்,

"வேலையே இல்லாம" என்று அவள் காதில் விழாதபடி மெதுவாய் கூறினான்.

அப்போது அங்கு வந்த வரவேற்பாளர் பெண்,

"மேடம், சார் உங்களுக்காக காத்திருக்கார்" என்றாள்.

பழச்சாறு குவளையை, மேஜை மீது வைத்துவிட்டு எழுந்து நின்றாள் அபிநயா. அவள் வெளியே செல்ல, அங்கு அஸ்வின் காரில் அமர்ந்தபடி அவளுக்காக காத்திருந்தான். இந்த முறை, அஸ்வின் தனக்கு கட்டளையிடும் சந்தர்ப்பத்தை அளிக்க விரும்பாத வண்ணம், அவளாகவே முன் சீட்டில் அமர்ந்து, சீட் பெல்ட்டை மாட்டி கொண்டாள். அவர்கள் திருவான்மியூர் நோக்கி பயணப்பட்டார்கள்.

அபிநயா அஸ்வினுடன் செல்வதை பார்த்து, சிலை போல் நின்றார்கள் அருணும் மனோஜூம்.

"மனோ..."

"ம்ம்ம்ம்?"

"இங்க என்ன நடக்குது?"

"சத்தியமா எனக்கு புரியல"

"ஆவின் மனசுல என்ன இருக்கு?"

"ஆண்டவனுக்கு தான் தெரியும்"

"அவன் ஏன் இதெல்லாம் செய்றான்?"

"அவன் என்ன வேணாலும் செய்வான்"

"என்னால அவனை புரிஞ்சுக்கவே முடியல"

"அது தான் அஸ்வின்"

"அவன் உண்மையிலேயே, தருணுடைய கல்யாணத்துக்கு தான் இதெல்லாம் செய்றானா?"

"இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம்..."

"அவன் ஏன் நம்ம கூட சேந்துக்க மாட்டேங்குறான்?"

"ஏன்னா அவன் அருண் இல்ல..."

அருண் அவனைப் பார்த்து முறைக்க, அங்கிருந்து சிரித்தபடி ஓடிச் சென்றான் மனோஜ்.
.......

அஸ்வின் அபிநயாவின், கார் பயணம் அமைதியாகவே கடந்தது. அவர்கள் இருவரும் பேசவில்லை தான், ஆனால் அவர்களுடைய மனங்கள் அமைதியாய் இல்லை. பல்வேறு எண்ணங்கள், அவர்களுடைய மனங்களில், சூறைக் காற்றாய் வீசிக்கொண்டிருந்தது. அவனுடைய பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த பெண் தான் அவனுடைய மனம், நிம்மதி இழந்ததற்கு காரணம்.

அபிநயாவை அவள் வீட்டில் இறக்கி விட்டு, அவளிடம் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினான் அஸ்வின். அதைப் பற்றி அவளும் கவலைப்படவில்லை.

சில நாட்களுக்கு முன்பு, அவளை தேடி அலைந்தான் அவன். பைத்தியக்காரனைப் போல் அவள் பின் ஓடினான். ஆனால், அவள் அவனுக்கு வெகு அருகில் அமர்ந்திருந்த பொழுது, அவனால் ஒரு வார்த்தை கூட அவளிடம் பேச முடியாமல் போனது.

எல்லாம் இன்னும் மூன்று நாட்களில் சரியாகிவிடும்... இன்னும் மூன்றே நாட்களில்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top