12 மருதாணி

12 மருதாணி

வீட்டில் இருந்து, இருந்து வெறுத்து போனான் தருண். வெளியில் எங்கும் செல்லாமல், கூண்டு பறவையாய் அவன் உள்ளிருப்பது இதுவே முதல் முறை.

அவன் கைபேசி மணியடித்த சத்தத்தை கேட்டு, அதை எடுக்க கட்டிலின் மீது பாய்ந்தான் தருண். அலைபேசியின் திரையில் ஒளிர்ந்த எண்ணை பார்த்து, இங்குமங்கும் பார்த்தபடி கதவை சாத்திவிட்டு பேசினான் தருண்.

"இத்தனை நாளா எங்க போய் தொலைஞ்ச?" என்றான்.

"…..."

"சரி விஷயத்தைச் சொல்லு"

"....……..."

"இல்ல, என் கல்யாணம் முடியிற வரைக்கும், என்னால வெளியில வர முடியாது."

"........"

"நிஜமாவா சொல்ற? உண்மையாவே அவ என்னை பத்தி கேட்டாளா?"

"........."

"அடக்கடவுளே... இப்ப நான் என்ன செய்யறது? அவள நெனச்சாலே கிக்கு ஏறுது..." தருண் பெருமூச்சு விட்டான்.

"........"

"அதை ஏன் கேக்குற? என் வீட்டு ஆளுங்க, அபியை பார்க்கவே விட மாட்டேங்கிறாங்க. கல்யாணத்துக்கு முன்னாடியே, அவளுக்கு நான் யாருன்னு காட்ற சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா ஜோசியம் என்கிற பேரால, என்னை பாட்டி கட்டி போட்டுட்டாங்க."

"........"

"இல்ல... என்னால வெளியே வர முடியாது. நான் அப்படி செஞ்சா பாட்டியோட நம்பிக்கையை நான் இழந்துடுவேன். அப்புறம் நான் ஒன்னும் இல்லாதவனா நிக்க வேண்டியது தான். அதனால தான், நான் அவங்க சொல்ற பேச்சிக்கெல்லாம் ஆடிக்கிட்டிருக்கிறேன்"

"....."

"இந்த நாடகம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல முடிவுக்கு வந்துடும். அதுக்கப்புறம் யாராலயும் என்னை தடுத்து நிறுத்த முடியாது."

அவன் கோபமாக அழைப்பை துண்டித்தான்.

அதே நேரம், தருண் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த அஸ்வின், தனது காதிலிருந்து ப்ளூடூத்தை எடுத்துவிட்டு, தனது லேப்டாப்பை லாக்அவுட் செய்தான்.

"ஆம், இந்த நாடகம் எல்லாம் வெகு சீக்கிரமே முடிந்து விடும்" என்று மனதில் நினைத்துக் கொண்டான் அஸ்வின்.

அப்போது அஸ்வினின் கைபேசிக்கு அழைப்பு வந்தது.

"சொல்லு கண்ணா" என்றான்.

"அண்ணா, நீங்க சொன்ன மாதிரியே, நான் தருண்கிட்ட பேசி அதை ரெக்கார்டு பண்ணிட்டேன். நீங்க கேக்க சொன்ன எல்லாத்தையும் நான் அவனை கேட்டுட்டேன். நாங்க பேசின ஃபைலை உங்களுக்கு மெயில் பண்ணியிருக்கேன்."

"சரி"

"அண்ணா ப்ளீஸ்... இது எதுவும் தருணுக்கு தெரிய வேணாம்..."

"என் பக்கத்திலிருந்து அவனுக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்ல. நீயும் இதை ரகசியமா பாதுகாப்பேன்னு நம்புறேன்."

"சத்தியமா நீங்க என்னை நம்பலாம்..."

"அது தான் உனக்கு நல்லது. நான் செய்ய சொன்னதை மறந்துடாத. சரியான நேரத்தில் அதை செஞ்சு முடி. "

"நிச்சயமா அண்ணா..."

"அத செஞ்சு முடிச்ச உடனே, உன்னுடைய அக்கவுண்டுக்கு பணம் வந்து சேரும்" என்றான் அஸ்வின்.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா..."

"நீ என்னுடைய கண்காணிப்பில் இருக்க அப்படிங்கறத மறந்துடாதே" என்று அவனை எச்சரித்தான் அஸ்வின்.

"நிச்சயம் மறக்க மாட்டேன் அண்ணா."

அவர்கள் அழைப்பைத் துண்டித்து கொண்டார்கள்.

தருணுடன் பேசியதை கண்ணன் பதிவு செய்திருந்த போதிலும், அவனை நம்ப  தயாராக இல்லை அஸ்வின். தருணின் அறையில், ஒரு சிறிய மைக்ரோ கேமராவை ஒளித்து வைத்து, அவனுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.

மறுநாள் காலை

பூஜையை முடித்துக்கொண்டு, பூஜை அறையில் இருந்து வெளியே வந்தார் சுபத்ரா. அஸ்வின், முழுவதும் தயாரான நிலையில், அலுவலகம் செல்ல கீழே வந்தான்.

"உன்னை பாக்கணும்னு நினைச்சேன்" என்றார் சுபத்ரா.

"என்ன விஷயம் சொல்லுங்க பாட்டி" என்றான் அஸ்வின்.

"கல்யாணத்துக்கு பொண்ணுக்கு மருதாணி வைக்கிறது நம்ம வழக்கம்."

"சரி..."

"மருதாணி இலையை அரைச்சு வைக்குறதை அபிநயா விரும்புவாளோ, மாட்டாளோ..."

"சரி, நான் அவங்க வீட்டுக்கு ஒரு பியூட்டிஷியனை அனுப்பி வைக்கிறேன்..."

"ரொம்ப சந்தோஷம்... முடிஞ்சா தருணோட இன்ஷியலை அவ கைல வரைய சொல்லேன்..."

"ஓகே. வேற ஏதாவது வேணுமா..."

"அபிநயாவுக்கு முகூர்த்த புடவை எடுக்கணும்..."

"செஞ்சிடலாம்..."

"ரொம்ப பெஸ்டா இருக்கணும்னு நினைக்கிறேன்..."

எங்க ஆஃபீசுக்கு பக்கத்தில் திருபுவனம் மஹால் இருக்கு. அங்க பெஸ்ட் குவாலிட்டி சாரீஸ் கிடைக்கும்"

"கல்யாணத்துக்கு முதல் நாள் போட்டுக்க, அவளுக்கு ஒரு லெஹங்கா தச்சி கொடுக்கலாம்னு இருக்கேன்..."

"அதுக்கு அவங்களுடைய சைஸ் வேணுமே..."

"உங்க ஆஃபீசுக்கு ஆப்போசிட்ல, டிசைனர் பிளவுஸ் தைக்கிற கடை இருக்கு. அபிநயாவை கூட்டிக்கிட்டு போயி அங்க அளவு கொடுத்திடலாம். அருண்கிட்ட சொன்னா அதை செஞ்சுடுவான்" என்றார் சுபாதிரா .

"ஆனா, அருணும் மனோஜும் கல்யாண வேலைல ரொம்ப பிசியா இருக்காங்க."

"அபிநயா தானாவே வருவாளான்னு தெரியல. அவளைப் பத்தி தான் உனக்கு தெரியுமே" என்று பெருமூச்சு விட்டார் சுபத்ரா.

"சரி, அப்ப நாளைக்கு காலையில நான் அவங்களை கூட்டிட்டு போறேன்" என்றான் அஸ்வின்.

"நிஜமாவே நீ அதை செய்ய போறியா?"

"நமக்கு வேற சாய்ஸ் இருக்கா?" என்றான் அஸ்வின். என்னவோ அவனுக்கு அதில் விருப்பமே இல்லாததை போல்.

"உன்னை ரொம்ப சிரமப்படுத்தறேனா?"

"வேற யார் செய்வா பாட்டி? நான் அவனுடைய அண்ணன் இல்லயா?"

"நான் அபிநயா வீட்டுக்கு ஃபோன் பண்ணவா?" என்றார் சுபத்ரா.

"நீங்க அதை என்கிட்ட விடுங்க நான் பார்த்துக்குறேன்" என்று கூறிவிட்டு அலுவலகம் கிளம்பி சென்றான்  அஸ்வின்.

திருவன்மியூர்

அவர்கள் வாசலில் நின்றிருந்த பெண்ணை, ஏற இறங்க பார்த்தார் மங்கை.

"யாருமா நீ?" என்றார்

"அஸ்வின் சார் என்னை அனுப்பினார். நான் கல்யாண பெண்ணோட கையில மெஹந்தி போட வந்திருக்கேன்."

அந்த நேரம் அங்கு வந்த அபிநயா, அந்தப் பெண்ணிடம் சிடுசிடுத்தாள்.

"எதுவும் தேவையில்ல. நான் என் ஃப்ரெண்ட்கிட்ட மெஹந்தி  வரஞ்சிக்கிறேன்..."

"சாரி மேடம்... எனக்கு கொடுத்த வேலையை நான் செஞ்சாகணும். நீங்க வேணும்னா அஸ்வின் சார்கிட்ட பேசுங்க" என்றார் அந்தப் பெண்.

அவள் கைப்பையிலிருந்து கைப்பேசியை எடுத்து அஸ்வின் நம்பரை டயல் செய்ய போனவளை தடுத்து நிறுத்தினாள் அபிநயா.

"வேண்டாம். நீங்க வந்த வேலையை செஞ்சுட்டுப் போங்க. அவர்கிட்ட பேசணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல" என்றாள்.

"உள்ளே வாம்மா" என்று அந்த பெண்ணை அழைத்தார் மங்கை.

அந்தப் பெண், உள்ளே  வந்து வசதியாக அமர்ந்து கொண்டாள் .

"டீ, காபி ஏதாவது சாப்பிடுறியாமா?" என்றார் மங்கை.

"இல்ல மா, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். கல்யாண பெண்ணை வர சொல்லுங்க" என்றாள் அந்தப் பெண்.

அவள் அருகில் வந்து அமர்ந்தாள் அபிநயா.

"சிம்பிள் டிசைன் போதும்" என்றாள்.

அது அவள் எவ்வளவு விருப்பமின்றி இருக்கிறாள் என்பதை காட்டியது.

சரி என்று தலையசைத்துவிட்டு தன் பணியை தொடங்கினாள் அந்த பெண். நடப்பதைப் பார்த்தால், அந்தப் பெண் அபிநயாவின் பேச்சைக் கேட்க தயாராக இல்லை போல் தெரிகிறது. *சரி* என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு, அவள் மிக அழகாக தன் கைவண்ணத்தை காட்டிக் கொண்டிருந்தாள். அந்த மெஹந்தி டிசைனின் நடுவில் சிறிது இடைவெளி விட்டிருந்தாள், மணமகனின் முதல் எழுத்தை எழுதுவதற்காக.

அப்போது அந்த பெண்ணின் கைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அவள் கைபேசியை அபிநயாவை நோக்கி நீட்டியபடி கூறினாள்,

"அஸ்வின் சார் லைன்ல இருக்காரு. உங்க லேண்ட்லைன்  அவருக்கு கிடைக்கலயாம்..."

அவள் கையில் இருந்து கைபேசியை பெற்றுக்கொண்டு,

"அத்தை, உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு." என்றாள்.

"யாருடைய ஃபோன்?" என்றார் மங்கை.

சரியாக அதே நேரம், அந்த பியூட்டிசியன் பெண்ணும்,

"என்ன லெட்டர் எழுதணும்?" என்றாள்.

"அஸ்வின்... " என்று மங்கைக்கு பதிலளித்தாள் அபிநயா.

பியூட்டிஷியன் பெண்ணோ, அவள் மணமகனின் பெயரை கூறுகிறாள் என்று எண்ணி, அவள் கையில் "A" என்ற எழுத்தை எழுதி விட்டாள்.

மங்கை பேசுவதை கவனித்துக்கொண்டு, பியூட்டிஷியன் அவள் கையில் எழுதியதை கவனிக்க தவறினாள் அபிநயா.

"சரிங்க தம்பி... நாளைக்கு அபி தயாரா இருப்பா"

*அவள் தயாராக இருப்பாள்* என்று மங்கை கூறியதைக் கேட்டு முகம் சுளித்தாள் அபிநயா. தனது அத்தை எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்? பேசி முடித்து, கைபேசியை பியூட்டிஷியன் பெண்ணை நோக்கி நீட்டினார் மங்கை. அதை வாங்கி வைத்துக் கொண்டு, மறுபடி தன் கவனத்தை அபிநயாவின் கையை நோக்கி திருப்பினாள் அந்த பெண்.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அபிநயாவை கவனித்தார் மங்கை.

"உன் கல்யாணத்துக்கு முதல் நாள் போட்டுக்க லெஹங்கா அளவைக் எடுக்க, நாளைக்கு அஸ்வின் வந்து உன்னை கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு."

"என்னது...? அவர் கூடவா? நான் போகமாட்டேன்..."

"அப்புறம் உன் டிரஸ்  அளவை எப்படி எடுக்கிறது?"

"இங்க வந்து எடுத்துக்க சொல்லுங்க."

"உனக்கு போக இஷ்டம் இல்லன்னா, நீயே அதை அந்த தம்பிகிட்ட சொல்லிடு" என்று கூறி விட்டு உள்ளே சென்றார் மங்கை.

"அவர் நம்பரை குடுங்க" என்றாள்
அபிநயா, பியூட்டிஷியன் பெண்ணிடம்.

"யாரோட நம்பரை கேக்குறீங்க?"

"அஸ்வின் நம்பரை தான்"

"அவரோட நம்பர் உங்ககிட்ட இல்லயா?"

"இல்ல"

"நம்பவே முடியல"

அவள் ஏன் அப்படி கூறுகிறாள் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் முகம் சுளித்தாள் அபிநயா. பியூட்டிசியன் பெண் அஸ்வினின் நம்பரை கொடுக்க, அவனுக்கு ஃபோன் செய்தாள் அபிநயா.

அபிநயா தனக்கு ஃபோன் செய்வதைப் பார்த்து, ஆச்சரியமடைந்தான் அஸ்வின்.

"ஹலோ..." என்றான்.

"வந்து... நான்..."

"சொல்லு அபி..."

பேசுவது அவள் தான் என்பது அவனுக்கு எப்படி தெரியும்? அவளுக்கு விக்கியது... தனது கையை கொண்டு வாயை மூட முயன்றவள், அப்போது தன் கை மருதாணியால் நிரம்பி இருந்ததை உணர்ந்தாள். அப்போது அவள் கையில் *A* என்ற எழுத்து எழுதப்பட்டு இருப்பதை கவனித்தாள்.

"என்னது இது?" என்று பியூட்டிசியன் பெண்ணை பார்த்து கத்தினாள்.

"எதை பத்தி பேசுற நீ?" என்றான் அஸ்வின்.

"நான் உங்ககிட்ட பேசல."

தனது கையை பியூட்டிஷியன் பெண்ணை நோக்கி நீட்டி,

"என்ன இது?" என்றாள்.

"A" என்றாள் அவள் சர்வ சாதாரணமாக.

தன் கண்களை வெறுப்புடன் சுழற்றினாள் அபிநயா.

"எதுக்காக என் கையில *A* ன்னு எழுதினீங்க?"

"நீங்க தானே மாப்பிள்ளை பேர் என்னன்னு கேட்டதுக்கு அஸ்வின்னு சொன்னீங்க..."

"அஸ்வின் லைன்ல இருக்கார்னு அத்தைகிட்ட சொன்னேன்..."

"நீங்க மாப்பிள்ளை பேரை சொல்லுறீங்கன்னு நெனச்சேன். ஆனாலும் மாப்பிள்ளை பெயரை கையில் எழுதுறது வழக்கம் தானே?"

"அவர் மாப்பிள்ளை இல்ல"

"ஓ அப்படிங்களா...? சாரிங்க... நான் தெரியாம எழுதிட்டேன். நான் அதை மாத்திடறேன். மாப்பிள்ளை பெயரை சொல்லுங்கள்."

"மாப்பிள்ளை பெயரை எழுத வேண்டிய அவசியம் இல்ல. அதை அப்படியே ஒரு டிசைனா மாத்திடுங்க"

"மாப்பிள்ளை பெயரை எழுத வேண்டாமா?"

"நான் தான் எழுத வேண்டாம்னு சொல்லிட்டேனே..."

"மேடம் உங்க ஃபோன் ஆன்ல இருக்கு" என்றாள் ப்யூடிசியன்.

"அடக்கடவுளே... இதை நான் சுத்தமா மறந்துட்டேன்... ஹலோ"

"எப்படி அவங்க உன் கையில *A*ன்னு எழுதினாங்க?" என அவன் கேட்க, பேச்சிழந்து போனாள் அபிநயா. இந்த ஆள் லைனில் இருப்பது தெரியாமல் பேசி தொலைத்துவிட்டாள்.

"அது ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங். அவங்க அதை வேற டிசைனா மாத்திட்டாங்க."

"அதை நீ *D* ன்னு மாத்திக்கலயா?"

"ஐம் நாட் இன்ட்ரெஸ்டட்"

அதைக் கேட்டு, புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

"சரி... எதுக்கு எனக்கு ஃபோன் பண்ண?"

"நாளைக்கு நான் வரல"

"ஏன்?"

"யாரையாவது அனுப்பி அளவெடுக்க சொல்லுங்க"

"அவங்க எல்லாரும் ரொம்ப பிஸியான ஆளுங்க. வீட்டுக்கு வந்து அளவெடுக்க மாட்டாங்க. நான் மட்டும் தான் ஃப்ரீயா இருக்கேன்... அதனால தான் நான் வந்து உன்னை கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன். இல்லன்னா, என்னை  ஒரு டிசைனர்னு நெனச்சுக்கோ..."

அவன் மேலே எதுவும் பேசுவதற்கு முன்,

"என்னது...?" என்றாள் பல்லைக் கடித்தபடி.

"உங்க அம்மாவ அளவெடுக்க சொல்லு, நான் வேணும்னா குறிச்சிக்கிறேன்..."

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..."

"அப்போ என்ன தான் செய்யறது?"

"நானே வரேன்" என்று அவள் சொல்ல புன்னகைத்தான் அஸ்வின்.

அவள் அழைப்பை துண்டித்தாள். அவள் கையில் வரையப்பட்டிருந்த டிசைனை பார்த்த பொழுது. அதில் A என்னும் எழுத்து பளிச்சென்று  தெரியவில்லை தான். ஆனால், அது அபிநயாவுக்கு நன்றாகவே தெரிந்தது.

தொடரும்... 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top