11 பெண் சிங்கத்தின் கோபம்

11 பெண் சிங்கத்தின் கோபம்

திருமணத்திற்கு குலதெய்வ பூஜை செய்வது வழக்கம். சுபத்ரா அதை கோவிலில் செய்ய நினைத்தார். அந்த பூஜைக்கு அபிநயாவின் குடும்பத்தாரையும் அழைக்க வேண்டும் என்பது அவருடைய திட்டம். அவருக்கு தெரியும் அவர்கள் எவ்வளவு அதிருப்தியுடன் இருந்தார்கள் என்பது. சில பரிசுப் பொருட்களைக் கொடுத்து, அவர்களை ஓரளவிற்கு அவர் சமாளித்து விட்டார். அதுபோலவே, கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, அவர்களுடன் சுமுகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அவருடைய எண்ணம்.

அஸ்வினிடம் பேசி, அவர் கோவிலில் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கேட்க, அவன் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செவ்வனே செய்து முடித்தான்.

மறுநாள் காலை

தன் முன் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த புடவையையும் நகைகளையும் பார்த்து வேதனைப்பட்டாள் அபிநயா. அவளுக்கு கத்தி அழ வேண்டும் போல் தோன்றியது. அவள் மட்டும் ஏன் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது? அவள் அறவே வெறுக்கும் ஒருவனுடன் அவளுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அவளுடைய குடும்பத்தாரும் எதை பற்றியும் கவலைப்படாமல், அவள் அந்த திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? அவனை திருமணம் செய்து கொள்வதை விட, சிறையில் காலம் கழிப்பது எவ்வளவோ மேல் அல்லவா? அவளுடைய தலைவிதியை அவள் நொந்து கொண்டாள்... அவள் விதியில், உண்மையில் எழுதியிருப்பது என்ன என்பதை அறியாமல்.

அஸ்வின் இல்லம்

கோவிலுக்கு செல்வதற்காக, சுபத்திரா உற்சாகமாக மாடிப்படி இறங்கி வந்தார். கீழ் படியில் வழுவழுப்பான ஒன்று சிந்தி இருப்பதை கவனிக்காமல், அதன் மீது கால் வைக்க, வழுக்கி விழுந்தார். அவருடைய கால், சுளுக்கிக் கொண்டுவிட்டது. அவருடைய அலறல் கேட்டு, அஸ்வினும், அருணும் ஓடிவந்தார்கள். அவர்கள் வீட்டில் பணிபுரியும் ராமு, சுபத்ரா எழுந்திருக்க உதவி செய்து கொண்டிருந்தான். ஆனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. தன் காலை பிடித்தபடி, கத்தியபடி தரையிலேயே அமர்ந்திருந்தார்.

அஸ்வினும், அருணும் ஓடி சென்று அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்து, சோபாவில் அமர வைத்தார்கள். அவரின் முன் முழங்காலிட்டு அமர்ந்து, அவருடைய காலை சோதனை செய்தான் அஸ்வின். அவருடைய கால் லேசாக வீங்கி காணப்பட்டது. அப்பொழுது மாடியிலிருந்து தருணும் கீழே இறங்கி வந்தான்.

"நான் டாக்டருக்கு ஃபோன் பண்றேன். சிக்கிரமா உங்க கால் சரியாயிடும்" என்றான் அஸ்வின்.

"நான் என் காலைப் பத்தி கவலைப் படல. என்னால கோயிலுக்கு போக முடியாம போச்சேன்னு தான் கவலையா இருக்கு."

"உங்களால எப்படி கோவிலுக்கு போக முடியும்? நீங்க பூஜையை வீட்டிலேயே முடிச்சிடுங்க. அவங்க கோவிலுக்கு போய் பூஜை செஞ்சுக்கட்டும்" என்றான் அஸ்வின்.

"அவங்க ஏற்கனவே என் மேல வருத்தத்துல இருக்காங்க. நான் போகாம விட்டா, நான் வேணும்னு செஞ்சதா நினைப்பாங்க."

அது அஸ்வினும், அருணும் அறிந்தது தான். அவர்கள் தான் அபிநயாவின் வீட்டார் பேசியதை நேரடியாகவே கேட்டார்களே...

"இப்போ நம்மால எதுவும் செய்ய முடியாது. இந்த சூழ்நிலையில் நீங்க அங்க போறது நடக்காது. அவங்க சொன்னா புரிஞ்சுக்குவாங்க" என்றான் அஸ்வின்.

"எனக்கு பதிலா, நீயும் அருணும் போயிட்டு வாங்களேன்..." என்றார் கெஞ்சலாக.

அஸ்வினும், அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"நான் போறேன் பாட்டி" என்றான் தருண்.

"உன்னோட ஆர்வம் எனக்கு புரியுது. ஆனாலும் நீ போகக்கூடாது. கல்யாணம் முடியிற வரைக்கும், இந்த வீட்டை விட்டு நீ வெளியில போக அனுமதி இல்ல."

"ஆனா பாட்டி..."

அப்போது அவனது பேச்சை வெட்டினான் அருண்.

"நானும் ஆவினும் போறோம்" என்றான் அவன்.

"நீ போறியா அஸ்வின்?" என்றார் பாட்டி.

"நான் கோவிலுக்குப் போறதா?" என்றான் கிண்டலாக.

அதைக்கேட்டு சோகமானார் சுபத்ரா. அவருக்கு தெரியும், கோவிலுக்கு செல்வது என்பது அஸ்வின் விஷயத்தில் என்றுமே நடக்காத ஒன்று.

"நாம போகலாம் ஆவின்" என்றான் அருண்.

அதைக் கேட்டு அஸ்வினுக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. அவன் அருணை நன்கு அறிவான்.

"ஆனா, நாங்க அரை மணி நேரத்துக்கு மேல் அங்கே இருக்க மாட்டோம்" என்றான் அருண்.

"நீங்க ரெண்டு பேரும் போறதே எனக்கு போதும்" உற்சாமாக கூறினார் சுபத்ரா.

அஸ்வினும், அருணும் கோவிலுக்கு கிளம்பினார்கள்.

"இதெல்லாம் என்ன, அருண்? எனக்கு சுத்தமா இதெல்லாம் பிடிக்கவே இல்ல. பணத்தையும், வசதியையும் காட்டி, அந்த குடும்பத்தை தன் வசப்படுத்த முடியும்னு பாட்டி நினைக்கிறாங்க. எனக்கு அது சரியா படல" என்றான் அஸ்வின்.

"நான் மட்டும் ரொம்ப விருப்பப்படுறா மாதிரி பேசற?" என்றான் அருண்.

"அப்புறம் எதுக்காக கோவிலுக்கு போக ஒத்துக்கிட்ட?"

"அபிநயாவோட குடும்பதுக்காக மட்டும் தான். அவங்க எவ்வளவு மன வருத்தத்தோட இருக்காங்கன்னு நமக்கு தான் தெரியுமே... அப்புறம் அந்த பொண்ணு அபிநயாவை பத்தி கொஞ்சம் யோசிச்சு பாரு..."

அபிநயாவின் பெயரைக் கேட்டவுடன் அவன் தொண்டையை ஏதோ அடைப்பதைப் போல் உணர்ந்தான் அஸ்வின்.

"பாவம் அந்த பொண்ணு. அவங்களுக்கு நம்ம குடும்பத்தையே பிடிக்கலன்னு ஓபனா சொல்லிட்டாங்க. அதுக்கு என்ன அர்த்தம்..? அவங்களுக்கு என்னையும் பிடிக்கல... உன்னையும் பிடிக்கல..."

அதை கூறிய போது அஸ்வினின் முகம் மாறியதை அருண் கவனிக்க தவறவில்லை.

"நம்ம கோயிலுக்கு போகாம விட்டா, அவங்க என்ன நினைப்பாங்களோ... அவங்களுக்காகவாவது நம்ம போய் தான் ஆகணும். நம்ம போகாம விட்டா, அவங்க நம்மள பத்தி நெனச்சது உண்மைனு ஆயிடும். நம்ம அதை நடக்க விடக்கூடாது."

அஸ்வின் ஏதும் பேசாமல் அமைதி காத்தான். அருண் சொல்வதில் தவறு ஏதுமில்லை. நேற்று அவனை நோக்கி அபிநயா வீசிய கோபப்பார்வையே அதற்கு சான்று.

சகோதரர்கள் இருவரும் கோவிலை வந்தடைந்தார்கள். பத்மாவும், மங்கையும் பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள். அபிநயா அவர்களுடன்  இல்லை.
தன் கண்களால் கோவிலை சலித்தான் அஸ்வின். அவனுடைய கண்கள், மரத்தடியில் அமர்ந்து, தரையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்த சுருதியின் மீது குத்திட்டு நின்றது. அவளை அப்படி திக்கற்று பார்த்த பொழுது, அவன் இதயதில் வலி ஏற்பட்டது.

அப்போது, மங்கை அவர்களைப் பார்த்து புன்னகை புரிந்தார்.

"வாங்க தம்பி... பாட்டி வரலயா?" என்றார்.

"படிக்கட்டில் இருந்து விழுந்து, அவங்க கால் சுளுக்கு பிடிச்சிருச்சு. அதனால தான் எங்களை அனுப்பி வைச்சாங்க."

"பூஜயை ஆரம்பிக்கலாமா, தம்பி?"

"ஓ... ஆரம்பிக்கலாமே. நான் வேணுமுன்னா உங்களுக்கு ஏதாவது உதவி செய்யட்டுமா?" என்றான் அருண்.

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், தம்பி. நாங்க எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டோம்"

பத்மா அபிநயாவை நோக்கி ஓடிச் சென்றார், அவளை அழைத்து வருவதற்காக.

"அபி, வா... தருணோட அண்ணனுங்க வந்துட்டாங்க..."

"அதனால? அதனால என்ன இப்போ? நான் அங்க வரலன்னா, என்னை ஜெயில்ல போட்டுருவாங்களா?"

"தயவுசெய்து மெதுவா பேசு..." என்று பத்மா ரகசியம் உரைக்க, தனது முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அபிநயா.

"இங்க பூஜைக்காக வந்திருக்கோம். நம்ம அவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும்."

"மரியாதை, கேட்டு வாங்குறது இல்ல... அது தானா மனசிலிருந்து வரணும்..." என்று சீறினாள் அபிநயா.

"தயவுசெஞ்சி கத்தாத... அவங்க கேட்டா மனசு வருத்தப்படுவாங்க..."

"நான் மட்டும் வருத்தப்படலியா? என்னை பத்தி ஏன் கவலைப் பட மாட்டேங்கறீங்க?"

"நம்ம இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம்..."

"நான் இல்ல... நீங்க தான் ஒத்துக்கிட்டீங்க..."

"ஆமாம். நான் தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்... நீ அவங்க வீட்டுக்கு மருமகளா போக போற... அவங்களுக்கு இந்த சமுதாயத்துல மரியாதை இருக்கு..."

"அவங்களும்... அவங்க மரியாதையும்..."

"நான் சொல்றத புரிஞ்சுக்கோ. சில விஷயங்கள் ஏன் நடக்குதுன்னு நம்மலால சொல்ல முடியாது. அதையெல்லாம் நம்மளுடைய தலையெழுத்துன்னு ஏத்துகிட்டு தான் ஆகணும்"

அவள் கையைப்பற்றி, கோவிலுக்குள் இழுத்துக் கொண்டு வந்தார் பத்மா. ஆனால், அம்மா மகள் இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அஸ்வினும், அருணும் அவர்கள் பேசியவற்றை கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது. கோபாவேசம் கொண்ட அபிநயாவின் முகத்தை, அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வின்.

"பூசாரி அய்யா மாப்பிள்ளை வீட்டார் வந்துட்டாங்க... நீங்க பூஜையை ஆரம்பிக்கலாம்." என்றார் மங்கை.

பூஜை ஆரம்பிக்கப்பட்டது.

அபிநயாவுக்கு சாமி கும்பிடவே பிடிக்கவில்லை. அவள் அம்மனின் மீது மிகவும் கோபமாக இருந்தாள். அவளை கும்பிட்டு தான் என்ன பயன்? அந்த பொறுக்கியிடமிருந்து தான் அவளை அம்மன் காப்பாற்றவில்லையேயே. அவள் அம்மன் சிலையை முறைத்தபடி நின்றிருந்தாள்.

"நான் இனிமே உங்கள கும்பிட போறதில்ல. என்னோட வாழ்க்கையை நரகமாக்கி, ஒரு பொறுக்கி கையில என்னை பிடிச்சி கொடுக்க போறீங்க... உங்களை நான் ஏன் கும்பிடணும்? ஒரு பொறுக்கிக்கு தான் நான் தகுதியானவளா? இருக்கட்டும்.... இது தான் உங்களுக்கு வேணும்னா அப்படியே நடக்கட்டும்... ஆனா, நான் மட்டும் உங்களை இனிமே கும்பிடவே மாட்டேன். என் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும்..." என்று மனதினுள் அம்மனிடம் சண்டை போட்டாள் ஸ்ருதி.

அப்போது பூஜை முடித்து விட்டு வெளியே வந்த பூசாரி, யாரும் எதிர்பாராத வண்ணம்,

"நீண்ட ஆயுளுடனும், சந்தோஷத்துடனும், இரண்டு பேரும் மனம் ஒத்து வாழணும்" என்று கூறி மஞ்சள் அரிசியை, அஸ்வின் மற்றும் அபிநயாவின் மீது தூவி வாழ்த்தினர். *மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள்* என்று கூறியதைக் கேட்டு, அஸ்வின் தான் மாப்பிள்ளை என்று அவர் எண்ணிவிட்டார்.

அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியானார்கள். தன் முகத்தைத் சுருக்கி அவனை அபிநயா பார்க்க, அவனோ, முகத்தில் எந்தவித உணர்ச்சியுமின்றி, அமைதியாய் அவள் முகத்தை படித்துக் கொண்டிருந்தான். அவன் ஏதும் சொல்லாமல் நிற்பதை பார்த்து அருணே கூட அசந்து தான் போனான்.

"அவர் மாப்பிள்ளை இல்ல... அவர் மாப்பிள்ளையோட மூத்த அண்ணன்" என்றார் மங்கை.

"ஓ அப்படியா... நான் இவர் தான் மாப்பிள்ளைன்னு நினைச்சிட்டேன்" என்றபடி அவர் உள்ளே சென்று விட்டார்.

அஸ்வின் தன் கண்களை அபிநயாவின் மீதிருந்து அகற்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அபிநயாவோ, எதையும் கண்டு கொள்ளவேயில்லை.

"நாங்க கிளம்புறோம், அத்தை" என்றான் அருண்.

"இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி" என்றாள் மங்கை.

"இது எங்க கடமை" என்றான் அவன்.

அஸ்வினும் அருணும் அங்கிருந்து தங்கள் காரை நோக்கி நடந்தார்கள். அஸ்வின் கார் கதவை திறக்க முற்பட்ட போது,

"ஒரு நிமிஷம்" என்று யாரோ சொல்வது அவன் காதில் விழுந்தது.

பின்னால் திரும்பிப் பார்த்தவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அங்கு அபிநயா நின்று கொண்டிருந்தாள். குழப்பத்துடன் இங்குமங்கும் பார்த்தவன், அங்கு யாரும் இல்லாமல் போகவே, அவள் தன்னைத் தான் அழைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். அவள் அழைப்பதைப் பார்த்து, காரில் இருந்து அவசரமாக இறங்கினான் அருண்.

"என்னையா?" என்று ஆச்சரியத்துடன் அவளை பார்த்து கேட்டான் அஸ்வின்.

"நீங்க தானே, அஸ்வின்?"

அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல், அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வின்.

"நீங்க என்ன அவ்வளவு பெரிய ஆளா? உங்க பாட்டி சொன்னாங்க, இந்த ஸோஸைட்டில உங்களுக்கு ரொம்ப செல்வாக்கு அதிகமாமே? நீங்க நினைச்சா ஆகாத காரியம் எதுவுமே இல்லயாமே? நீங்க ரொம்ப பவர்ஃபுல்லான ஆளுன்னு சொன்னாங்க. விருப்பம் இல்லாத ஒரு பெண்ணை, வற்புறுத்தி, மிரட்டி ஒரு பொறுக்கிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் உங்க பவரா? இது தான் நீங்க விரும்புறதா? உங்க பவரை யூஸ் பண்ணி, ஒரு பொண்ணோட வாழ்க்கையை காப்பாத்த முடியாத பவர் எல்லாம் என்ன ஒரு பெரிய பவர்? அதுல உங்களுக்கும் உங்க பாட்டிக்கும் என்ன பெரிய பெருமை? உங்க குடும்ப கௌரவத்தை பத்தியும், உங்களுடைய செல்வாக்கு பத்தியும், உங்க பாட்டி ரொம்ப பெருமை பட்டுக்கிட்டாங்க... நானும் பாக்குறேன்... அவனை கல்யாணம் பண்ணிகிட்டு, அவனை நான் குத்திக் கொல்லும் போது, அவங்க குடும்ப கவுரவத்தை எப்படிக் காப்பாத்திகிறாங்கன்னு நானும் பாக்குறேன்... ஆனா, இந்த தடவை அவன் நிச்சயம் உயிரோட தப்பிக்க மாட்டான். நான் உங்களுக்கு சவால் விடறேன். முடிஞ்சா என்கிட்டயிருந்து உங்க தம்பிய காப்பாத்திக்கங்க. அவன் என் கையால தான் சாக போறான். உங்க பவரை வச்சி என்ன செய்ய முடியுமோ செய்யுங்க."

அஸ்வினும் அருணும் விக்கித்து நின்றார்கள்.

"இதெல்லாம் நான் உங்ககிட்ட சொன்னேன்னு போயி அவன்கிட்ட சொல்லுங்க." என்று கோபாவேசமாக கூறிவிட்டு, அங்கிருந்து விடுவிடுவென்று, கோவிலின் உள்ளே சென்று மறைந்தாள்.

அவளை பார்த்தபடி வாயை பிளந்து கொண்டு நின்றிருந்த அருணை பார்த்து, காரில் அமரும்படி சமிக்ஞை செய்தான் அஸ்வின். அருண் காரில் ஏறி அமர்ந்த பின், என்ஜினை உயிரூட்டி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.

"இன்னைக்கு காலைல வரைக்கும் அபிநயாவை பத்தி நான் ரொம்ப கவலைப்பட்டேன். ஆனா இப்போ, எனக்கு தருணை நினச்சா பாவமா இருக்கு." என்று விழுந்து விழுந்து சிரித்தான் அருண்.

"இது சிரிக்கக் கூடிய விஷயமா? அவளுக்கு தருணைப் பத்தி எதுவும் தெரியாது. ஆனா, நமக்கு தெரியும்..." என்றான் அஸ்வின்.

"என்னை வேற என்ன செய்ய சொல்ற? இல்ல நம்மால் என்ன செய்ய முடியும்னு நினைக்கிற? அவங்க எவ்வளவு கோவமா பேசினாங்கன்னு நீ பாத்தல்ல? அவனோட அண்ணனான உன்மேலயே அவங்களுக்கு இவ்வளவு கோவம் இருந்தா, தருண் மேல அவங்களுக்கு எவ்வளவு கோவம் இருக்கும்? அவன் எல்லா பொண்ணுங்களையும் ஒரே மாதிரி நினைச்சுட்டான். ஆனா அபிநயா மாதிரி சில பெண்களும் இருக்காங்க. புயலை பாட்டில்ல அடைக்க முடியாதுன்னு அவனுக்கு புரியல." என்று சற்றே நிறுத்தியவன்,

"அபிநயா சொன்ன மாதிரி, நீ ஏன் உன்னுடைய பவரை யூஸ் பண்ணி, ஒரு பொண்ணோட வாழ்க்கையை தருண் மாதிரி ஒரு பொறுக்கிகிட்ட இருந்து காப்பாத்தக் கூடாது?" என்றான்.

அவனுக்கு பதில் அளிக்காமல், அமைதியாய் காரை செலுத்திக் கொண்டு சென்றான் அஸ்வின். அவன் அப்படி அமைதி காப்பது அருணுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எப்படி அந்தப் பெண்ணின் வாழ்க்கை கெட்டுப் போவதை பார்த்துக் கொண்டு அவனால் சும்மா இருக்க முடிகிறது?

அஸ்வினின் மனதில் என்ன இருக்கிறது என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாது. தருண் போன்ற அரக்க குணம் படைத்தவன், அபிநயாவிடம் இருந்து மட்டுமல்ல, அனைத்து பெண்களிடம் இருந்தும் தூரமாக வைக்கப்பட வேண்டியவன்... சிறைப் படுத்தப் பட வேண்டியவன்... ஜோதிடத்தின் பெயரால் அதை இப்போதைக்கு செய்து முடித்து விட்டான் அஸ்வின். அது தான் அவன் தருணை கட்டுப்படுத்த செய்த முதல் வேலை. தருணை முழுவதுமாக செயலிழக்கச் செய்ய, அஸ்வினின் மனதில் என்னென்ன திட்டங்கள் இருக்கிறதோ யாரறிவார்?

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top