10 அந்த பார்வை
10 அந்த பார்வை
அஸ்வின் கவலையின்றி இருப்பதைப் பார்த்து, மனோஜும் அருணும் செய்வதறியாது திகைத்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது இதை அல்ல. அவர்களுக்கு தெரியும், அஸ்வின், அபிநயாவின் மீது விருப்பம் கொண்டுள்ளான் என்பது. தருணின் சுயரூபத்தை பற்றி தெரிந்த பின் எப்படி அவனால் இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது?
தருணின் கோர முகத்தை பற்றி தெரிந்து கொண்ட பின், அருண் முழுவதுமாக உடைந்து போயிருக்கிறான் என்பதை மனோஜ் அறிந்திருந்தான். அவனுக்கு அருணை எப்படித் தேற்றுவதென்றே தெரியவில்லை. அவனுடைய அறைக்கு வந்து பார்த்த போது, தலை குணிந்தபடி அமர்ந்திருந்தான் அருண்.
"அருண், ஏன் இப்படி உக்காந்திருக்க?" என்றான் மனோஜ்.
தலையை நிமிர்ந்த அருணின் கண்கள் கலங்கி சிவந்திருந்தது.
"தருணை பற்றி தெரிஞ்சதுக்கப்புறம், நான் எப்படி நிம்மதியா இருக்க முடியும்? அவன் என்கூட பிறந்தவன்னு சொல்லிகவே எனக்கு வெட்கமா இருக்கு. கருவிலிருந்தே என் கூட இருந்த ஒருத்தன், இப்படியெல்லாம் செய்வான்னு என்னால நம்பவே முடியல. அவன் எவ்வளவு கேவலமானவன்... அவன கொல்லணும் போல இருக்கு எனக்கு... அவன் வாழவே தகுதி இல்லாதவன்." என்றான் கோபாவேசமாக.
"அதனால தான் அபிநயா அவனை கொல்ல பார்த்திருக்காங்க... பாவம் அவங்களால முடியாம போச்சு."
"அவனுடைய சாவு அவங்க கையில இல்ல போல இருக்கு... வேற யார் கைல எழுதி இருக்கோ, அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்..." என்றான் பல்லைக் கடித்தபடி.
"டென்ஷன் ஆகாம அமைதியா இரு..."
"எப்படி என்னால் முடியும்? ஆவின் எங்களுக்கு வாழ்க்கை கொடுத்தான். எங்கள முழு மனசோட தம்பிகளா ஏத்துகிட்டான். இல்லன்னா, நாங்க ஏதாவது அனாதை ஆசிரமத்தில், ஒண்ணுமே இல்லாம இருந்திருப்போம். ஏன் தருண் இதையெல்லாம் நினச்சிப் பார்க்க மறந்துட்டான்? ஏன் அவன் இவ்வளவு இதயம் இல்லாதவனா... கருணை இல்லாதவனா...இறக்கம் இல்லாதவனா இருக்கான்? அவனால பாதிக்கப்பட்ட பெண்கள், எவ்வளவு துடிச்சிருப்பாங்க...? அவங்கள பெத்தவங்க எவ்வளவு வேதனை பட்டிருப்பாங்க? நல்ல வேளை எங்க அம்மா உயிரோட இல்ல. இல்லனா, அவங்க உயிரோட இருக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமா செத்திருப்பாங்க.... இல்லனா அவங்க கையாலேயே அவனை விஷம் வச்சி கொன்னிருப்பாங்க..."
சற்றே தாமதித்தவன்....
"நம்ம அவனை ஜெயிக்க விடக் கூடாது மனோ... அவன் செஞ்ச தவறுகளுக்காக அவன் நிச்சயம் வருந்தி ஆகணும்... அவன் நிச்சயமா அபியை கல்யாணம் பண்ணிக்க கூடாது. அவங்க ஆவினுக்கு சொந்தமானவாங்க. அவங்க சந்தோஷமா இருக்கணும்ன்னா, அவங்க ஆவினைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்."
"நிச்சயமா நம்ம செய்யலாம்" என்றான் மனோ.
"என்னால நம்பவே முடியல... எல்லா உண்மையும் தெரிஞ்சதுக்கப்புறமும் கூட ஆவின் ஏன் இவ்வளவு கூலா இருக்கான்?"
"அவன் கூலா தான் இருக்கான்னு நமக்கு எப்படி தெரியும்?"
"நீ என்ன சொல்ல வர?"
"ஆழ்கடலை மேலோட்டமாக பார்க்கும் போது அமைதியா தான் தெரியும். ஆனா, உள்ள இறங்கிப் பார்த்தா தான் அதனுடைய வேகத்தை நம்மால உணர முடியும். யாராலும் சுலபமா அதுல நீந்த முடியாது."
"அப்படின்னா?"
"அவனோட மூளைக்குள்ள ஏதோ வேகமா ஓடிக்கிட்டிருக்கு..."
"நெஜமாத் தான் சொல்றியா?"
"ஆமாம்... அவன் எதையுமே அவ்வளவு ஈசியா விட்டுக் கொடுக்குறவன் இல்ல"
"எனக்கு இந்த யூகம் எல்லாம் வேண்டாம். ஆவின்கிட்ட இருந்து, எனக்கு திடமான பதில் வேணும்"
"அது உனக்கு எப்பவுமே கிடைக்காது... அவன் எல்லார்கிட்டயும் எல்லாத்தையும் உளறிக் கொட்றவன் கிடையாது"
"அப்படின்னா நம்ம எதுவும் செய்ய போறதில்லயா?"
"கண்டிப்பா செய்வோம்... அஸ்வின் செய்றானோ இல்லயோ..." என்ற மனோஜை பார்த்து,
"நம்ம என்ன செய்யப் போறோம்?" என்றான் அருண்.
"இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு, அபியை அஸ்வினுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்..."
"என்கிட்ட ஒரு பிளான் இருக்கு" என்றான் அருண்.
"என்ன பிளான்? எனக்கு சொல்லு"
தன்னுடைய திட்டத்தை மனோஜுக்கு கூறினான் அருண். அதைக்கேட்டு மனோஜின் முகம் பிரகாசமாய் ஜொலித்தது.
"இந்த பிளான் மட்டும் சக்சஸ் ஆயிடுச்சின்னா..."
"நம்ம சக்ஸஸ் ஆக்குவோம்..."
"முதல்ல நமக்கு அஸ்வினுடைய மனசுல என்ன இருக்குன்னு தெரியணும்"
"அவனை வீட்ல நான் கண்காணிக்கிறேன்" என்றான் அருண்.
"ஆஃபீஸ்ல நான் பார்த்துக்குறேன்" என்றான் மனோஜ்.
இருவரும் தங்கள் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினார்கள்.
அஸ்வின் இல்லம்
மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்தான் தருண். அவனை ஓய்வெடுக்க செய்துவிட்டு, கீழே இறங்கி வந்து, அஸ்வினை அழைத்தார் சுபத்ரா. அமைதியாய் வந்து அவர் பக்கத்தில் அமர்ந்தான் அஸ்வின்.
"கல்யாணத்துக்கு தேதி குறிக்க, ஜோசியரை வர சொல்லி இருக்கேன்" என்றார் சுபத்ரா.
"ஆமாம், நேத்து நீங்க என்கிட்ட சொல்லியிருந்திங்க"
"அவர் வரும் போது நீயும் இங்க இருக்கியா?"
"அஃப்கோர்ஸ்... நான் இந்த வீட்டுக்கு மூத்த பிள்ளை இல்லயா...?"
என்று அவன் கூறியதை கேட்டு சுபத்திரா மகிழ்ச்சியடைந்தார். அவர் எண்ணியபடி, அனைத்தும் அவர் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.
அலுவலகத்திற்கு செல்ல, முழுவதுமாக தயாரான நிலையில் கீழே வந்த அருண், அஸ்வின் பாட்டியுடன் அமர்ந்திருப்பதை பார்த்து அப்படியே நின்றான். விஷயத்தை தெரிந்து கொள்ள அவன் விழைந்தான்.
"ஆவின், நான் ரெடி... வா ஆஃபிசுக்கு போகலாம்..."
"கல்யாணத்துக்குத் தேதி குறிக்க, ஜோசி யடர் வராறாம். பாட்டி என்னை இருக்க சொல்லியிருக்காங்க."
என்று அவன் கூறியதை கேட்டு முகம் சுளித்த அருண், 'என்ன மனுஷன் இவன்?' என்பது போல பார்த்தான்.
அஸ்வினுக்கு எதிரில் அமர்ந்து கொண்டு, அவனையே உற்று கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது... சலனமே இல்லாமல் அமர்ந்திருந்தான் அஸ்வின்.
ஜோதிடர் வந்ததை பார்த்து, ஓடிச்சென்று அவரை வரவேற்றார் சுபத்ரா. தருண் மற்றும் அபிநயாவின் ஜாதகங்களை அவரிடம் கொடுக்க, வேண்டிய நேரத்தை எடுத்துக் கொண்டு அதை அலசி ஆராய்ந்து, கண்களை மூடி ஆழமாய் சிந்தித்தார் அவர்.
"இந்த பிள்ளை மரணத்தை சந்திச்சிருக்கணுமே" என்றார்.
ஆமாம் என்று கவலையுடன் தலையசைத்தார் சுபத்ரா.
"அந்த கண்டம் இன்னும் முழுசா விலகல... மறுபடி அவன் உயிருக்கு ஆபத்து வர வாய்ப்பிருக்கு... "
"என்ன சொல்றீங்க ஜோசியரே..." என்றார் பீதியுடன் சுபத்ரா.
"அவனுக்கு இது மறு பிறப்பு... ஆனா, அவனுடைய கெட்ட நேரம் அவனை விடாம துரத்திகிட்டிருக்கு..."
"அப்போ, நம்ம இந்த கல்யாணத்தை நடத்த முடியாதா?"
"நடத்தலாம்... ஆனா, அவன் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்..."
"என்ன செய்யணும் ஜோசியரே...?"
"அவனுக்கு மறுவாழ்வு கொடுத்த இந்த வீடு தான் அவனுக்கு பாதுகாப்பு கவசம். அவன் இங்க இருக்கிற வரைக்கும் அவனுக்கு எந்த தீங்கும் நேராது. கல்யாணம் வரைக்கும், அவன் இந்த வீட்டை விட்டு வெளியேறாம இருந்துட்டான்னா... அதுக்கப்புறம், அவன் மனைவியோட தாலி பாக்கியம், அவனை காப்பாத்தும். ஆனா, எக்காரணத்தைக் கொண்டும், கல்யாணத்துக்கு முன்னாடி அவன் இந்த வீட்டை விட்டு வெளிய ஒரு அடி கூட எடுத்து வைக்க கூடாது. அப்படி அவன் வெளியே போயிட்டா, அவன் உயிருக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது."
"அது எப்படி முடியும்? அவன் எப்பவும் வீட்டிலேயே இருக்க மாட்டானே..." என்றான் அஸ்வின்.
"இல்ல, இல்ல அவன் இந்த வீட்டை விட்டு வெளிய போகாம நான் பாத்துக்குறேன். அவன் என்னுடைய பொறுப்பு. அவன் என் பேச்சை மீறி எப்பவும் நடந்துக்க மாட்டான்" என்றார் சுபத்ரா.
"அப்போ எந்த பிரச்சனையும் இல்ல" என்றார் ஜோசியர்.
"ஆனா, தயவுசெஞ்சி கல்யாண தேதியை மட்டும் தள்ளிப் போடாதீங்க. அவனை வீட்டை விட்டு வெளிய போகாம தடுக்குறது ரொம்ப கஷ்டம். ரொம்ப நாளைக்கு அதை செய்ய முடியாது" என்றான் அஸ்வின்.
அவன், தம்பி மேல் கொண்டுள்ள பொறுப்புணர்ச்சி பார்த்து அகமகிழ்ந்து போனார் சுபத்ரா.
"ஓ... பாத்துடறேன்... அடுத்த வாரம் ஒரு சுபமுகூர்த்தம் இருக்கு... அது உங்களுக்கு பரவாயில்லயா?"
சுபத்திரா அஸ்வினை பார்த்தார்.
"ஓ... தாராளமா நீங்க அந்த டேட்டை ஃபிக்ஸ் பண்ணிடுங்க. என்ன செய்யணும்னு மட்டும் என்கிட்ட சொல்லுங்க. நானும் மனோஜும் எல்லாத்தையும் பாத்துக்குறோம்."
சுபத்திராவிற்கு மிகவும் பெருமையாக இருந்தது, ஆனால் அருணோ, உள்ளுக்குள் பொறுமிக் கொண்டிருந்தான்.
"என்ன வேண்டுமானாலும் அவர்கள் செய்து கொள்ளட்டும். ஆனால் இறுதியில் அவனுடைய பிளான் தான் ஜெயிக்கபோகிறது" என்று மனதில் நினைத்துக் கொண்டான் அருண்.
ஜோசியரின் கைபேசி, வங்கியில் இருந்து வந்த ஒரு குறுஞ்செய்தியை கிரகித்துக்கொண்டு, சத்தமிட்டது. அவசரமாய் அதை வெளியில் எடுத்து, வங்கியின் குறுஞ்செய்தியை பார்த்த ஜோசியரின் முகம் பொலிவடைந்தது,
"100000 கிரெடிட்டர்டு" என்று அதில் இருந்ததைப் பார்த்து. அவர் அஸ்வின் இல்லத்திலிருந்து சந்தோஷமாய் கிளம்பிச் சென்றார்.
....
அஸ்வினும், அருணும் கல்யாண வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை பார்த்து, மிகவும் சந்தோஷமாகி போனார் சுபத்ரா. மேலும் அவர்கள், அலுவலக வேலைகளை கூட வீட்டில் இருந்தபடியே செய்தது அவருக்கு மிகவும் நிம்மதியை அளித்தது. அவருடைய பேரன்களை நினைத்து மிகவும் பெருமைப் பட்டார்.
ஆனால் தருணோ, வீட்டிற்குள் முடங்கி கிடக்க முடியாமல் தவியாய் தவித்தான். வெளியில் செல்லாமல், வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தது அவனுக்கு நரகத்தில் வாழ்வது போல் இருந்தது. ஜெயில் கைதியை போல் தன்னை உணர்ந்தான் தருண்.
திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்தபோதிலும், அபிநயாவுக்கு பூ முடிக்க விரும்பினார் சுபத்ரா. அதை ஒரு சாக்காக பயன்படுத்தி, தன் குடும்பம் எவ்வளவு வசதியானது என்பதை அபிநயாவின் வீட்டாருக்கு காட்ட நினைத்தார். அபிநயாவுக்கு தன் சார்பாக தங்க, வைர நகைகளை பரிசளிக்க நினைத்தார். அவருடைய ஆசையை கூறியவுடன், ஒரு நகைக்கடையை வீட்டிற்கே அழைத்து வந்தான் அஸ்வின்.
"உங்களுக்கு எது வேணுமோ எடுத்துக்கோங்க பாட்டி" என்று கூறியபடி அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
"எனக்கு எதை செலக்ட் பண்றதுன்னே தெரியல. எல்லாமே நல்லா இருக்குற மாதிரி இருக்கு"
"அப்போ எல்லாத்தையுமே எடுத்துக்கோங்க" என்றான் கூலாக.
அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தவர்,
"உனக்கு எப்பவுமே விளையாட்டு தான்" என்றார்.
"உங்களுக்கு செலக்ட் பண்ண கஷ்டமா இருந்தா, நான் வேணா உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?" எனக் கேட்டான் அஸ்வின்.
"நெஜமாவா சொல்ற? அப்படி நீ எனக்கு ஹெல்ப் பண்ணா, உண்மையிலேயே எனக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்."
"மை ப்ளஷர்"
அவசரப்படாமல் நகைகளை தேர்ந்தெடுத்தான் அஸ்வின். அவனுடைய பொருமையை பார்த்து சுபத்திரா அசந்து போனார். அவன் அபிநயாவுக்காக தேர்ந்தெடுத்த நகைகள் ஒவ்வொன்றும் அபாரம்.
"அபிநயாவோட அம்மாவுக்கும், அத்தைக்கும் கூட ஏதாவது கொடுக்கலாம்னு நினைக்கிறேன்"
"தாராளமா குடுங்க"
அதிலிருந்து சிலவற்றை தேர்ந்தெடுத்து, அதையும் சுபத்ராவிடம் வழங்கினான் அஸ்வின்.
"நீ என்னோட பாரத்தைக் குறச்சிட்ட. நீ தேர்ந்தெடுத்த அத்தனை நகைகளும் ரொம்ப பிரமாதமா இருக்கு" என்றார் சுபத்திரா.
"நீங்க ரொம்ப ஃபார்மலா இருக்க வேண்டியதில்ல. நான் தருணுடைய அண்ணன் இல்லயா... இது என்னுடைய கடமை தானே" என்றான்.
"நம்ம நாளைக்கு அபிநயா வீட்டுக்கு போகணும். "
"ஞாபகம் இருக்கு. இதையெல்லாம் பேக் பண்ண, ஹெல்ப் பண்ணணுமா?"
"வேண்டாம். ராமுவை வச்சு பேக் பண்ணிக்கிறேன்."
"சரி, இந்த நகை பில்லை ஆஃபிசுக்கு அனுப்பிடுங்க." என்று நகை வியாபாரியிடம் கூறிவிட்டு, அவன் அலுவலகம் கிளம்பி செல்ல, சுபத்ரா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
மறுநாள் /திருவன்மியூர்
அபிநயாவின் அம்மாவும் அத்தையும், சுபத்ராவையும், அவருடைய மற்ற இரு பேரன்களையும் வரவேற்றார்கள். அவர்கள் அமர்ந்துகொள்ள, அவர்களுக்கு காபி கொண்டு வருமாறு அபிநயாவை பணித்தார் பத்மா.
சமையலறை வாயிலை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த, அஸ்வினையே பார்த்துக் கொண்டிருந்தான், அருண். காபி கொண்டு வந்து, யார் முகத்தையும் பார்க்காமல் அவர்களுக்கு கொடுத்தாள் அபிநயா. வழக்கம் போல் அவள் மிகவும் சோகமாக காணப்பட்டாள். ஆனால் அதைப் பற்றி யாரும் கவலைப் படுவதாக இல்லை.
"வந்து உட்காரு, அபிநயா" என்றார் சுபத்ரா.
அவர் பக்கத்தில் அமைதியாய் அமர்ந்தாள் அபிநயா, அஸ்வினுக்கு நேரெதிராக.
காரிலிருந்து அவர்கள் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை எடுத்து வருமாறு அருணுக்கு சமிக்ஞை செய்தார் சுபத்ரா. அவற்றை எடுத்து வந்து அபிநயாவின் முன் வைத்தான் அருண்.
அதை அவர்களுக்கு வழங்கிவிட்டு, அவர்களுடைய முக பாவங்களை கவனித்துக் கொண்டிருந்தார் சுபத்ரா. சொல்லப் போனால் அவர் அதில் வெற்றியும் அடைந்தார். பத்மாவும், மங்கையும் அந்த பரிசுப் பொருட்களை பார்த்து வாயை பிளந்தார்கள். விலை உயர்ந்த புடவைகளும், தங்க, வைர நகைகளும் அவர்கள் பார்த்திராதவை. மேலும் அபிநயாவுக்கு மட்டும் அல்லாது, தங்களுக்கும் அளிக்கப்பட்ட பரிசு பொருட்கள் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தன... இன்ப அதிர்ச்சி...! தன் வீட்டுக்கு மருமகளாக வரப்போகும் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு விலையுயர்ந்த புடவைகளும் நகைகளும் பரிசாக கிடைக்கக் கூடும் என்பது அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்காத ஒன்று.
அவற்றைப் பற்றியெல்லாம் சிறிது கூட சட்டை செய்யாத ஒருத்தி, அபிநயா மட்டும் தான். இந்த பொருட்களை கொண்டு, அவளுடைய தலை எழுத்தை, அவளால் மாற்றிவிட முடியுமா? அல்லது, நரகத்தில் வாழப் போகும் ஒருத்தி, இவற்றை எல்லாம் அணிந்து பார்க்க விருப்பப்படுவாளா? அபிநயாவுக்கு ஒரு விஷயம் நன்றாய் புரிந்து போனது. அவள் அடைபட போவது, சாதாரண கூண்டல்ல, தங்கக் கூண்டு...!
தலையை குனிந்து கொண்டு, அமைதியாய் அமர்ந்திருந்த அபிநயாவை பார்த்து புன்னகை புரிந்து கொண்டிருந்த அஸ்வினை பார்த்து, அருண் குழம்பிப் போனான். அஸ்வினின் சட்டை காலரை பற்றிக்கொண்டு "உன் மனதில் என்ன தான் இருக்கிறது?' என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.
அவர்கள் அபிநயா குடும்பத்தினரிடம் இருந்து விடைபெற தயாரானார்கள்.
"நாங்க கிளம்பறோம்" என்றார் சுபத்ரா.
"போயிட்டு வாங்க" என்றார் பத்மா.
அனைவரும் வாசலை நோக்கி நடையைக் கட்ட, அஸ்வின் மட்டும் மனதில் ஏதோ உறுத்த, திரும்பி பார்த்தான். அபிநயா அவனையே முறைத்து பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து, அவன் தடுமாறி போனான். அவள் பார்வை, அவன் வயிற்றை கலக்கியது. அவள் பார்த்த பார்வைக்கு என்ன அர்த்தம்? அவள் அவனிடம் ஏதோ சொல்ல நினைக்கிறாளா?அல்லது அவனை திட்ட வேண்டும் என்று நினைக்கிறாளா? அவனை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், அவன் பார்க்கிறான் என்று தெரிந்தும் கூட, அவள் தன் பார்வையை அவனிடம் இருந்து அகற்ற முற்படவில்லை.
அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அவள் தன்னை முறைப்பதற்கு வேண்டிய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று தோன்றியது அஸ்வினுக்கு. ஆனால் நேரம் அவனுக்கு தோதாக இல்லை. வாசலை நோக்கி அரை மனதாய் நகர்ந்தவன், நின்று ஒருமுறை திரும்பி அவளைப் பார்த்தான்.
அவன் தன்னை பார்ப்பது தெரிந்து, கோபமாய் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் அபிநயா. அவள் கோபத்தை பார்த்து அங்கிருந்து சிரித்தபடி சென்றான் அஸ்வின்.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top