1 மாற்றாந்தாய் பிள்ளைகள்
1 மாற்றாந்தாய் பிள்ளைகள்
ப்ரொபோரேட்டர் அஸ்வின் என்று எழுதபட்டிருந்த, கண்ணாடியால் சூழப்பட்ட, அழகான அறையில், பதட்டத்துடன் நுழைந்தான், மனோஜ். தனது அறையின் கதவை, தட்டாமல் உள்ளே நுழைந்த மனோஜை, குழப்பத்துடன் பார்த்தான் அஸ்வின்.
"என்ன ஆச்சு, மனோ?"
"ஸ்வேதா, சூசைட் பண்ணிக்கிட்டா..." என்றான் மனோஜ் மாறாத பதட்டத்துடன்.
"எந்த ஸ்வேதா?"
"போன மாசம், அவளை ஈவ்டீசிங் பண்ணதுக்காக, தருண் மேல கேஸ் ஃபைல் பண்ணாளே, அவ தான்..."
"அந்த பொண்ணா? அவ ஏன் சூசைட் பண்ணிக்கிட்டா?"
அன்றைய நாளிதழை அவனிடம் கொடுத்தான் மனோஜ்.
"திஸ் கேஸ் இஸ் அன்டர் தி இன்வெஸ்டிகேஷன்..."
"தருண் எங்க?"
"அவளோட ஃபியுனெரலுக்கு போயிருப்பான்... அவங்க ரெண்டு பேரும் தான், அதுக்கப்புறம் ஃபிரண்ட்ஸ் ஆயிட்டாங்களே...! "
அப்போது அவர்கள், அருண் பதட்டத்துடன் உள்ளே நுழைவதை பார்த்தார்கள், அதே செய்தித்தாளுடன்.
"உங்களுக்கு விஷயம் தெரியுமா?" என்றான் அருண்.
ஆமாம் என்று தலையசைத்தான் அஸ்வின்.
"அத பத்தி உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?" என அருண் கேட்க, மற்ற இருவரும் இல்லை என்று தலையசைத்தார்கள்.
"எனக்கு தருண் மேல தான் சந்தேகமா இருக்கு"
அஸ்வினும், மனோஜும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நீ ஏன் அவனை சந்தேகப்படுறேன்னு, எனக்கு நல்லாவே தெரியும். அவன் தான், அந்த பொண்ணுகிட்ட, எல்லார் முன்னாடியும், போலீஸ் ஸ்டேஷன்ல மன்னிப்பு கேட்டானே... அது அப்போவே முடிஞ்சு போச்சி தானே...?" என்றான் அஸ்வின்.
"அதனால தான் எனக்கு சந்தேகமா இருக்கு. அவன் மன்னிப்பு கேட்கிற அளவுக்கெல்லாம் நல்லவன் கிடையாது. அதுவும், இரண்டு நாளைக்கு முன்னாடி, அந்த பொண்ணை, பர்த்டே பார்ட்டின்னு சொல்லி, இவன் இன்வைட் பண்ணி இருக்கான். ஆனா, அன்னைக்கு அவனுடைய பர்த்டே இல்ல. இன்னைக்கு, அந்த பொண்ணு உயிரோட இல்ல... இதெல்லாம் என்ன?"
இதைக் கேட்ட அஸ்வினும், மனோஜூம் கூட, ஆடித் தான் போனார்கள். அவர்கள் தருணை நன்கு அறிவார்கள். அவன், பல தேவையற்ற மனிதர்களுடன் தொடர்பு கொண்டிருந்தான். அருண் அவனைப் பற்றி எப்போதும் கவலைப் பட்டுக் கொண்டிருப்பான். அவனுடைய நண்பர்களும், அவனுடைய நடவடிக்கைகளும், எப்போதும் சந்தேகத்திற்குரியதாகவே இருந்தது.
"அவன் நம்ம குடும்ப கௌரவத்தை கெடுத்துகிட்டிருக்கான். ஒரு நாள், நிச்சயமா அது நம்ம பிசினஸ்ஸையும் பாதிக்கும். அவனுடைய அக்கவுண்ட்ல பணம் போடுறத, தயவுசெய்து நிறுத்திடு, ஆவின். இப்பவாவது நான் சொல்றதை கேளு..."என்று அஸ்வினிடம் கெஞ்சினான் அருண்.
சிறு வயது முதலே, அஸ்வினை, *ஆவின்* என்று கூப்பிட பழகிவிட்டிருந்தான் அருண்.
"நான் மட்டும் என்ன, அவனோட நடவடிக்கைகளால ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு நினைக்கிறாயா? பாட்டியோட வார்த்தையை எதிர்த்து, என்னால எதுவுமே செய்ய முடியல. அவங்க தான், அவனை தலையில வச்சு கொண்டாடுறாங்க. நான் ஏதாவது சொன்னா, மாற்றாந்தாய் பிள்ளைங்குறதால தான், நான் அவனை வெறுக்கிறதா, பாட்டி நினைக்கிறாங்க." என்று சலிப்புடன் கூறினான் அஸ்வின்.
"இது சுத்தப் பேத்தல்... அப்படி நீ மாற்றாந்தாய் பிள்ளையை வெறுக்குறவனா இருந்தா, என்கிட்ட மட்டும் ஏன் வெறுப்பை காட்டுறதில்ல? நாங்க ரெண்டு பேருமே உனக்கு மாற்றாந்தாய் பிள்ளைகள் தானே? நான், உன்கிட்ட அப்படி ஒரு வெறுப்பை பார்த்ததே இல்லயே... அவங்க அத புரிஞ்சுக்கணும். அவன் நம்ம கையில இருந்து மொத்தமாக நழுவி போறதுக்கு முன்னாடி, நம்ம ஏதாவது செஞ்சாகணும். ஒருவேளை, பாட்டிகிட்ட பேசுறதுக்கு உனக்கு சங்கடமா இருந்தா, தயவு செய்து, நான் அவங்ககிட்ட பேசும் போது நீ குறுக்க மட்டும் வராம இரு. ப்ளீஸ்..." என்று கெஞ்சிவிட்டு, அவன் அறையில் இருந்து வெளியேறினான் அருண்.
"அவன் சொல்றதுல எந்த தப்பும் இல்ல. நீ தருணை தடுத்து நிறுத்தியாகணும். இல்லனா அவன் நமக்கு மிகப்பெரிய தலைவலியா இருப்பான்." என்று எச்சரித்தான் மனோஜ்.
ஆமாம் என்று தலையசைத்தான் அஸ்வின். அவனது அறையில் இருந்து மனோஜ் வெளியேற, கண்களை மூடி, தன் நாற்காலியில் சாய்ந்தான் அஸ்வின்.
அவனுடைய அம்மா ருக்மணி, அவனுடைய அப்பா கண்ணன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிந்து, தற்கொலை செய்து கொண்டார். அதனால், அவனுடைய அப்பாவும் குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரம், ஏதும் இல்லாமல் தன்னந்தனியாய் விடப்பட்ட அஸ்வினுக்கு, அவனுடைய பாட்டி சுபத்திரா தான் படிப்பதற்கு உதவி செய்தார். உதவித்தொகை மூலம், தொழில் நுட்ப கல்வி பயின்று, வங்கி கடன் மூலம் இந்த நிறுவனத்தை துவங்கி, தனது கடின உழைப்பாலும், அறிவாற்றலாலும், நேர்மையாலும், இன்று மிகச் சிறந்த கட்டடக் கலை நிபுணராக வலம் வந்து கொண்டிருக்கிறான். அவன் அடுத்தடுத்து அடைந்த தொடர் வெற்றிகளால், பொருளாதார நிலையில் உச்சத்தை அடைந்தான். தமிழகத்தின் மிகச்சிறந்த பத்து கட்டடக்கலை நிபுணர்களில் ஒருவனாக, ஐந்து வருடங்களில் மாறியவன், இன்று கோடிகளில் புரள்கிறான்.
ஒரு நாள், அவனுடைய பாட்டிக்கு, கண்ணன் தொடர்பு வைத்திருந்த அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு செய்தி வந்தது. தன்னை சந்திக்குமாறு அதில் அவள் கூறியிருந்தாள். ஆனால், சுபத்திரா, அதற்கு செவிசாய்க்கவில்லை. அவளை சந்திக்க மறுத்து விட்டார்.
சில மதங்களுக்கு பிறகு, அந்தப் பெண் இறந்து விட்டதாகவும், அவள் தனது இரட்டை பிள்ளைகளான, அருணையும், தருணையையும், அனாதை இல்லத்தில் விட்டு விட்டதாகவும் தெரிய வந்தது. அதைக் கேட்டு சுபத்திராவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரது பேரப்பிள்ளைகளை, அனாதை என்ற முத்திரையுடன் விட்டு விடாமல், அவர் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.
ஆரம்பத்தில், அஸ்வினுக்கு அவர்களை பிடிக்க வில்லை தான். அவனால் அவர்களைத் தனது தம்பிகளாக அங்கீகரிக்க முடியவில்லை. ஆனால், தருணுடைய உண்மை நிலை தெரிய வந்த போது, அவன் மனம் இலகிபோனது. ஊட்டச்சத்துக் குறைவால், தருண், தனது பற்களை இழந்திருந்தான். ஊட்டச்சத்து குறைவு, ஒருவனை இந்த அளவிற்கு பாதிக்குமானால், அவர்கள் எப்படிப்பட்ட ஏழ்மை நிலையில் இருந்திருக்க வேண்டும், எந்த அளவிற்கு பட்டினியால் வாடியிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியாதவன் அல்ல அஸ்வின். அவன் மனம் தனது தம்பிகளுக்காக கனிய தொடங்கியது. சுபத்ராவும் அவர்களை உள்ளங்கையில் தாங்க தொடங்கினார்.
செயற்கை பல் பொருத்தும் சிகிச்சைக்காக, தருணை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தான் அஸ்வின். அது தான், தருணின் வாழ்கை முறையை மாற்றிப் போட்டது. அவனுடைய அண்ணன் அஸ்வின், எந்த அளவிற்கு வளமையும், வல்லமையும் பெற்றவன் என்பதை அவன் உணர்ந்தான். அமெரிக்காவில் அவன் பெற்ற சிகிச்சையும், கவனிப்பும், அவன் கனவிலும் கூட கண்டிராதது. ஒரு இளவரசன் போல் அவன் கவனித்துக் கொள்ளப்பட்டான். சோற்றுக்கே வழியில்லாமல் இருந்த ஒருவனுக்கு, இது மிகவும் அதிகம்...! அந்த புதிய ஆடம்பர வாழ்க்கை முறை, அவனுடைய நடவடிக்கைகளை முற்றிலுமாக மாற்றி, தலை கால் புரியாமல் அட வைத்தது. அவனுக்கு கிடைத்த சலுகையை அவன் உரிமையாக எண்ணினான். மது, மாது, என்று அவனுடைய வாழ்கை முற்றிலுமாக மாறி போனது. போதாத குறைக்கு, சுபத்ராவும் அவர் பங்குக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைத்தார். அவன் விரும்பிய அனைத்தும் அவனுக்கு கிடைக்க செய்தார். சுபத்ரா துணைக்கு இருக்கும் தைரியத்தில், அவன் எதையும் செய்யத் துணிந்தான். இன்று அவன், இரக்கமின்றி பெண்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.
ஆனால், அருணோ முற்றிலும் வித்தியாசமானவன். அவன், அஸ்வின் தங்களுக்கு அளித்த வாழ்க்கையை மதித்தான். போற்றிப் பாதுகாக்க நினைத்தான். அஸ்வினுக்கும், பாட்டிக்கும், விசுவாசமாக இருக்கும் முடிவெடுத்தான். அவன் தனது பாட்டியிடம் விரும்பாத ஒரு விஷயம் இருக்குமானால், அது அவர் தருணுக்கு கொடுக்கும் அனாவசிய *இடம்* தான். அருணுடைய அந்த நேர்மையும், விசுவாசமும் அஸ்வினுக்கு மிகவும் பிடித்துப் போனது. வெகு விரைவிலேயே, தனது தோழனான மனோஜுக்கு அடுத்த இடத்தை, அவன் மனதில் அருணுக்கு வழங்கினான் அஸ்வின். மனோஜும் அருணும் அஸ்வினுடைய வல, இட, கரங்கள்.
தனது அறையின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு கண் விழித்தான் அஸ்வின். அது அவனுடைய தோழன் மனோஜ் தான்.
"நம்ம *ஸைட்டை* பைனலைஸ் பண்ண கிளம்பணும்" என்றான் மனோஜ்.
"அருண் எங்க?"
"அவன் பார்க்கிங் லாட்டுக்கு போயிட்டான்." என்றான் மனோஜ்
சரி என்று தலையசைத்துவிட்டு, அவர்கள் இருவரும் பார்க்கிங்கை நோக்கி விரைந்தார்கள்.
மழை லேசாக தூறிக்கொண்டிருந்தது. வழக்கத்திற்கு மாறாக, லேசாக இருட்டி விட்டிருந்தது. அஸ்வினுக்கு கார் ஓட்டுவதில் அதீத விருப்பம். அதிலும், இந்த சிறு தூரலில் கார் ஒட்டுவது என்றால், அது அலாதியானது. மனோஜும் அருணும் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, இப்பொழுது கட்ட இருக்கும், கட்டிடத்தின் அமைப்பைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
சிறிது தூரம் சென்ற பின், திடீரென, ஒரு பெண் சாலையின் குறுக்காக ஓடி வருவதைக் கண்டு, சட்டென்று பிரேக்கை அழுத்தினான் அஸ்வின்.
வெறுப்பில், பல்லைக் கடித்துக் கொண்டு, அந்த பெண்ணை திட்ட போனவன், வார்த்தை வெளியே வராமல் ஸ்தம்பித்து நின்றான். அந்தப் பெண், அவன் காரில் அடிபட இருந்த, ஒரு நாய்க்குட்டியை, தன் கையில் தூக்கி, அந்த நாய் குட்டியை காப்பாற்றி விட்ட சந்தோஷதில், அழகாய் புன்னகை புரிந்தாள். அஸ்வின் இமைக்க மறந்தான். அவனது கை, அனிச்சையாக, காரின் கண்ணாடியை, கீழே இறக்கியது. ஒரு வயதான பெரியவர், அந்த பெண்ணை திட்டுவது அவனுக்கு கேட்டது.
"ஏய் பொண்ணு, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அடிபட்டிருந்தா என்ன ஆகுறது?"
"இந்த நாய்க்குட்டிக்கு அடி பட்டிருந்தா, என்ன ஆகறது? எல்லா உயிரும் தானே வாழணும்...!" என்றாள் அந்தப் பெண்.
"அந்த நாய்க்குட்டிக்கு அடிபட்டா, அது போலீஸ் கேஸ் ஆகாது. ஆனா, நீ அடி பட்டா ஆகும்..."
"இந்த நாய்க்குட்டி அடிபட்டா கூட, ப்ளூ கிராஸ் கேஸ் எடுக்கும்..."
என்று கூறிவிட்டு தனது இடது கையை காட்டினாள். அவளுடைய ஆள்காட்டி விரலுக்கு கீழ், ப்ளூகிராஸ் சின்னம் பேனாவால் வரையப்பட்டிருந்தது.
தன் தலையை அசைத்தபடி அந்த பெரிய மனிதர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். களுக்கென்று சிரித்த அந்த பெண்ணின் கவனம், மீண்டும் அந்த நாய்குட்டியின் மேல் சென்றது. அன்பாய் அந்த நாய்க்குட்டியை வருடிவிட்டு, அந்த வழியாக வந்த ஆட்டோவில், அந்த நாய் குட்டியுடன் ஏறிச் சென்றாள் அந்தப் பெண்.
மனோஜும், அருணும், அஸ்வினை வைத்த கண் வாங்காமல் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவன் புன்னகை புரிந்து கொண்டிருந்தான். அது உலகின் எட்டாவது அதிசயம். மெதுவாய் அஸ்வினின் தோளைத் தொட்டான் மனோஜ். அஸ்வினை, அந்த தொடுதல், வானத்திலிருந்து பூமிக்கு கொண்டு வந்தது. தனது தோழர்கள் இருவரும் தன்னை பார்த்து கிண்டலாக சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பொழுது, அவனுக்கு சங்கடமாக போனது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ஒன்றும் நடக்காதது போல், காரை கிளப்பி சென்றான் அஸ்வின்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top