24.மாயமென்னவோ

விழிகள் உருட்டி, கை கால்கள் உதைத்து உதட்டை பிதுக்கி அழ தயாரானாள் சசி.

"இதோ வந்துட்டேன்டா. செல்லம். கொஞ்ச நேரம் விளையாடுடா கண்ணா. அம்மா வந்துடறேன்" என்ற சிந்துவின் குரலில் அம்மா வரவில்லை என்ற கோபம் ஆற்றாமையாய் கூடியது.

"ம மா.... ம்மா..." என்று தன் நடவாத பாதங்களால் தவழ முயற்சி செய்து கொண்டிருந்தது குழந்தை.

"பட்டு குட்டி என்ன பண்றிங்க? சத்தமே காணோம்?" என்று சமயலறையில் இருந்து மீண்டும் குரல் கேட்க, பசியின் தாக்கம், தவழ முடியாத கோபம், என்று  இம்முறை ஏமாற்றத்தின் உச்சம் தொட, வீல் என்று கத்த தொடங்கியது.

"ஒஹ் ஒஹ் செல்லம் அழக்கூடாது. அம்மா மட்டும் என்ன பண்ணுவேன். யார் வேலை செஞ்சு தருவாங்க? வேலை முடிஞ்சுது. ரெண்டு நிமிஷம் உனக்கு புவ்வா மட்டும் எடுத்துட்டு வருவேணாம். என் புஜ்ஜிக்குட்டில?" என்று கொஞ்சியபடி குழந்தை நெய் சாதத்தை பிசைந்து கொண்டிருந்தாள் சிந்து.

அவளின் உரையாடல் புரிந்ததோ இல்லையோ? அம்மாவின் குரல் தன் உடலின் மனதில் இதமான வெப்பமாய் பதிய இன்னும் அழுகை இரண்டு மடங்காக கூடியது.

"இதோ வந்துட்டேன்" என்று ஓடி வந்து குழந்தையை தூக்க, மறைந்து போன மந்திரவாதி போல் பொங்கி கொட்டிய அழுகை கன நொடியில் அடங்கியதின் மாயம் என்னவாக  இருக்கும்?.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top