6. மாயாதி

6. மாயாதி

ஒருவரை ஒருவர் ரகசியமாய் ரசித்து, மனதினுள் பெட்டகமாய் சேமித்த இவ்விருவரையும் சந்திக்க வைத்து, குருதி சொட்டும் முகமாய் அவள் மடியில் அவன் இருக்க, காவலாளி அவனை காத்திடும் கடவுளாய் அவள் தெரிய, இங்கு நடந்ததில் பங்கு எடுத்து, பார்வையாளராய் பார்த்து கொண்டிருந்தது பரந்து விரிந்த அக்கடற்கரை.

மகேந்திரன் தப்பி செல்லும் நினைவினை அரும்பாடிட்டு தக்கவைக்க முயற்சித்தான். மென்மனம் கொண்ட மிருணாளினிக்கு முதலில் வந்ததென்னவோ பதற்றம் தான்! ஆனால், அவன் நிலை உரைக்க தான் உடுத்தும் வெள்ளை உடை தைரியம் அளிக்க, நிதானம் வரப்பெற்று அடுத்து என்ன எனும் யோசனைக்கு தாவினாள். மனதிற்கு நெருக்கம் ஆனவன் என்கையில் மனம் கொள்ளும் பயம் இயல்பே! கடவுளாய் நோக்கும் மருத்துவரும் அடிப்படையில் மனிதன் தானே!

கண்கள் சொறுகி மயங்கும் நிலைக்கு செல்பவனை, தன் கைப்பையில் உள்ள தண்ணீர் போத்தலை எடுத்து மகேந்திரனின் முகத்தில் நீர் தெளித்து, முகத்தில் உள்ள குருதி சொட்டுகளை துடைத்தாள்.

மிருணாளினி "மிஸ்டர்.... அய்யோ உங்க நேம்?"

உடனே அவன் சட்டையின் வலப்பக்க மார்பின் பகுதியை கண்டாள். அங்கு வெண்மை பின்னணியில் கருப்பு சிற்றெழுத்துகளாய் பெருமிதம் தாங்கி நின்றது "R. MAGENDIRA VARMAN I.P.S"

"மிஸ்டர் மகேந்திரன் இங்க பாருங்க... கண்ண தொறங்க உங்களுக்கு ஒன்னும் இல்ல. ஹாஸ்பிட்டல் போயிரலாம். ப்ளீஸ் கொஞ்சம் கண்ண தொறங்க. ஸ்டடியா இருக்க முயற்சி பண்ணுங்க உங்களால முடியும்" வார்த்தைகளால் தெம்பு கொடுக்க முயற்சித்தாள்.

தன்னிடம் முதலுதவி உபகரணங்கள் இல்லாததை அறிந்து தன்னை சாடிக்கொண்டு, தன் துப்பட்டாவை கிழித்து அவன் அடிபட்ட தலையில் கட்டினாள்.

அவனை தன் தோளில் சாய்த்து தண்ணீர் தர முயற்சித்தாள். திடம்பெற்ற ஆண்மகன் அல்லவா! சற்று கடினம் தான் மிருணாளினிக்கு. ஆனால் செய்தாள்.

அருகில் நின்ற ஆட்டோ டிரைவர் உதவியுடன், மகேந்திரனை ஆட்டோவில் ஏற்றி தான் வேலைபார்க்கும் மருத்துவமனை பெயர் கூறி அங்கு செல்ல சொன்னாள்.

மூவரையும் சுமந்து ஆட்டோ சென்றது. மிருணாளினி யாருக்கோ போன் செய்து, அப்பக்கம் உள்ளவரிடம் இங்கு நடந்ததை கூறி உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய கூறினாள்.

சுற்றம் தெரிந்தது. ஆனால்,  ஆணவனால் எதுவும் செய்ய இயலவில்லை. இருந்தும் தன் மனபலம் திரட்டி, தன் போனை உயிர்ப்பித்து உடன் பணிபுரியும் காவலாளி ஒருவருக்கு அழைத்து, நடந்ததை கூற விழைந்தான். ஆனால், ஓரிரு வாக்கியத்திற்கு மேல் அவனால் அது முடியவில்லை.

"ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாதீங்க... போனை என்கிட்ட கொடுங்க. நான் பேசுறேன்" என வாங்கி பேசி அழைப்பை துண்டித்தவள், அவன் கைபேசியின் முகத்திரையில் இருக்கும் புகைப்படம் கண்டு சொல்ல தெரியா உணர்வு பெற்றாள் மிருணாளினி. 

அதில் அவன் பெற்றோராகிய ராஜேந்திர வர்மன், கயல்விழிக்கு நடுவில் சிரித்த முகமாய் நிற்கும் மகேந்திரன்  இருந்தான்.

"நீ.. நீங்க M. V டிரஸ்ட், ஹாஸ்பிட்டல் வச்சிருக்கும் ராஜேந்திரன் சார் பையனா?"

ஆம் என தலையசைக்க, மருத்துவமனை வரவும் சரியாக இருந்தது.

தன்னை படிக்கவைத்து, வேலைகொடுத்து வாழவைக்கும் நல்உள்ளம் கொண்டவரின் மகனா இவன்? எனும் அதிர்ச்சியில் அவள் வெளியில்  அமர்ந்திருக்க,

தன் மனதின் இனியவளிடம் பேசும் வாய்ப்பு இப்படியா அமையவேண்டும் என நொந்து தன்னை அழிக்க நினைப்பவர் யார் எனும் சிந்தனையில் சிகிச்சை அறையில் அவன்!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top