35.அனு சந்திரன்

35.அனு சந்திரன்

மறுநாள் காலை டியூட்டிக்கு தயாராகிக்கொண்டிருந்த மகேந்திரவர்மனை ஓய்வில்லாமல் அழைத்துக்கொண்டிருந்தது அவனது அலைபேசி.

தன் சிகையை கோதியபடியே அழைப்பை ஏற்றவனின் செவிகளில் விழுந்த செய்தி அவனை அதிரச் செய்ததோடு பதற்றத்தையும் பரிசாக கொடுத்தது.

அழைப்பினூடே பல கட்டளைகளை வகுத்தவன் செழியனை தொடர்பு கொள்ள முயன்றபடியே தன் உடைமைகளோடு வீட்டிலிருந்து கிளம்பினான்.

ஊட்டி எஸ்டேட்டில்.....
மிருணாளினி பயத்தில் ஒரு புறமாக அமர்ந்து அழுதுக்கொண்டிருக்க, அவளை சுற்றி நின்ற சில சிறார்களும், தம்மை சுற்றி நடப்பவை பாதி புரிந்தும் புரியாமலும் அழுதபடியே மிருணாளியை தேற்ற முயன்றிருந்தனர்.

மறுபுறம் போலிஸ் குழு அங்கிருந்த ஒவ்வொருவரையும் விசாரித்துக் கொண்டிருந்தது.

ரங்கனும் கமலேஷ்வரனும் போலிஸாரின் கேள்விகளுக்கு பதிலளித்தபடியிருக்க அப்போது உள்ளிருந்து மிருணாளியின் போனை எடுத்து வந்தான் கிருஷ்ணா.

அவளின் போனை அவளிடம் தந்தவன்,
“அக்கா... போன் ரொம்ப நேரமா அடிச்சிட்டே இருந்துச்சு.” என்று கூற அழுதழுது சிவந்திருந்த தன் விழிகளை அழுந்த துடைத்தவள் அதனை வாங்கி பார்க்க அதில் மகியின் அழைப்புக்களே தவறப்பட்ட அழைப்புகளாக குவிந்திருந்தது.

கவலையால் தவித்திருந்த அவளின் மனமும் அவன் வரவையே நொடிக்கு நொடி வேண்டியபடியிருந்தது.

தாமதியாது அவனுக்கு அழைப்பு விடுக்க முயன்றவளின் கவனத்தை ஈர்த்தது திரையிலிருந்த குறுஞ்செய்தி அறிவிப்பு.

தெரியாத இலக்கத்திலிருந்து வந்திருந் அந்த வாட்சப் செய்தியை யோசனையோடு திறந்தவள் பார்த்தது சின்னா அழுகையில் கரைந்திடும் காணொளியே.

அதை பார்த்ததவளின் உள்ளம் பதறிட அவளின் அடுத்த முயற்சிக்கு தடைவிதிப்பது போல் அந்த அலைபேசி ஒலிர்ந்தது.

திரையில் விழுந்த இலக்கத்தை கண்டு நிதானித்தவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவ்விடத்திலிருந்து சற்று தள்ளி வந்து அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ..” என்று மெல்லிய குரலில் பதட்டத்துடன் அவள் கூற மறுபுறம்,
“வணக்கம் டாக்டரம்மா. ஊட்டிக்கு ஊர் சுத்தி பார்க்கலாம்னு வந்திருக்கீங்களாமே?” என்றவனின் குரலில் இருந்த கேலி அவனை அடையாளம் கண்டுகொள்ள உதவிட,
“யாருங்க நீங்க? எதுக்காக சின்னாவை கடத்துனீங்க?” என்ற அவள் வருத்தம் மேலிட கேட்க, மறுபுறம் இருந்தவனோ,
“அடடே டாக்டரம்மாவுக்கு நான் யாருனு தெரிஞ்சிடுச்சு போலவே... சரி. எனக்கு வேலை மிச்சம். அப்புறம் டாக்டரம்மா ஊட்டி என்ன சொல்லுது?” என்று அவன் நலம் விசாரிப்பதில் இறங்கிட மிருணாளியோ இறைஞ்சினாள்.

“ப்ளீஸ்ங்க... அவன் சின்னப் பையன்ங்க. அவனை விட்டுடுங்க. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லுங்க. நான் தரேன். அவனை விட்டுடுங்க.” என்று அவள் கெஞ்ச அதை பொருட்படுத்தாதவன் போல், “ஊட்டியை சுத்தி பார்க்க நான்  உங்களுக்கு உதவி பண்ணுறேன் டாக்டரம்மா. உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமேனு தான் சின்னாவை என் கூட அழைச்சிட்டு வந்துட்டேன். நாங்க இப்போ...” என்றவன் சில இடங்களின் பெயர்களை வரிசையாக சொல்லிவிட்டு, “இங்க தான் இருக்கோம். முடியும்னா நீங்களும் வந்து எங்க கூட ஜாயின் பண்ணிக்கோங்க. நீங்க லேட் பண்ண பண்ண உங்க சின்னா உங்களை விட்டு ரொம்ப தூரம் போறான்னு ஞாபகம் வச்சிக்கோங்க. அப்புறம் அடுத்த புது இடத்துக்கு போனதும் இன்னொரு நம்பருல இருந்து கூப்பிடுறேன்.” என்றவன் அழைப்பை துண்டித்திட, அடுத்து என்ன செய்வதென்று புரியாது ஒரு கணம் நிதானித்தவளுக்கு நினைவில் வந்தது அவளின் எம்.வி சார் தான்.

தாமதியாது அவனை அழைக்க முயன்றவளின் கவனத்தை மீண்டுமொருமுறை குறுஞ்செய்தி கலைத்தது.

இப்போது அக்குறுஞ்செய்தியில் சின்னா மயக்கத்தில் இருக்க அவனை முகமூடி அணிந்த ஒருவன் துப்பாக்கி முனையில் வைத்திருப்பது போன்றதொரு புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது.

அதன் கீழ், “த கவுண்டவுன் பிகின்ஸ் நவ்.” என்ற செய்தி இருந்தது.
இதை பார்த்தவளின் மூளை ஒரு நிமிடம் மூளை நிறுத்தம் செய்துவிட்டது.

அப்போது அவளருகே வந்த போலிஸ் அதிகாரி ஒருவர், “மேடம்! ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்க திடுக்கிட்டவள் அவரையும் மொபைலையும் மாறி மாறி பார்த்துவிட்டு அவரிடம் ஏதோ கூறி சமாளித்துவிட்டு எஸ்டேட் பங்களாவினுள் சென்றாள்.

செய்தி கேள்விபட்டதும் மகேந்திரனும், செழியனும் தாமதியாது ஊட்டிக்கு கிளம்பிவிட்டனர்.

மகேந்திரன் தன் பெற்றோருக்கும் நடந்ததை தெரிவித்தவன் அவர்களையும் அங்கு வரச்சொன்னான்.

ராஜேந்திரனோ ஏதும் அறியாதது போல் தன் மகனின் ஆணைகளை அரங்கேற்றிட, அவரின் சுயரூபத்தை அறிந்திராத அவரின் மனையாளோ அவரை பின்தொடர்ந்தார்.

செல்லும் வழி நெடுகிலும் மகேந்திரன் மிருணாளினியை தொடர்பு கொள்ள முயல அவளோ அவனின் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை.

அவளுக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று பயந்தவன் ரங்கனுக்கு அழைத்து விசாரிக்க, அவரோ அவள் உள்ளே இருப்பதாக கூற, நடந்ததை பற்றி விவரம் கேட்டுக்கொண்டு அழைப்பை துண்டித்தான்.

அவன் அழைப்பை துண்டிக்கும் வரை காத்திருந்த செழியன், “என்னாச்சு டா?”என்று கேட்டான்.

“மிரு போனை அட்டென்ட் பண்ண மாட்டேங்கிறாடா. ரங்கன்கிட்ட விசாரிச்சப்போ அவ உள்ள இருக்கிறதா சொல்றார்.” என்றான் கவலையாக.

“விடுடா. தங்கச்சி கவலையில உள்ள தனியா இருக்கிறதுக்காக போயிருப்பாங்க.” என்று செழியன் அவனை ஆறுதல் படுத்த முயல,
“போனை கூட அட்டென்ட் பண்ண மாட்டேங்கிறாடா.” என்றவனின் குரலில் மேடிட்டிருந்த கலக்கத்தை புரிந்துகொண்ட செழியன்,
“சரி விடு. இன்னும் கொஞ்ச நேரத்துல நாம் அங்க போயிடலாம். போனதும் பார்த்துக்கலாம்.” என்ற ஆறுதல் கூறியவனுக்கு அங்குள்ள நிஜ நிலைமை தெரிய வரும்போது?? என்னாவர்களோ??

*******

Pratilipi ID – Anu Chandran
Wattpad ID – Aji Chandran

********

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top