9 நிபந்தனை
9 நிபந்தனை
நித்திலாவை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் ஆழ்வி... இனியவனை பற்றியும் தான். தன் பைத்தியக்கார தம்பியை மணந்து கொள்ளும்படி அவளை நித்திலா வேண்டினாள். அவள் கேள்வி என்னவென்றால், எதற்காக அவள் அவனை மணந்து கொள்ள வேண்டும்? அவனது பொறுப்பை சுமக்க அவள் யார்? யாரோ ஒருவருடைய வாழ்க்கையை சரிகட்ட, அவள் ஏன் தனது வாழ்க்கையை நெருப்பில் இடவேண்டும்? அவனுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? வேறு வாய்ப்புகளை பெற்றிருக்கும் ஒருத்தி, எதற்காக ஒரு பைத்தியக்காரனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வேண்டும்?
பார்கவி ஆழ்வியின் தோழி. அவளுக்கு ஒரு அண்ணன் இருந்ததும், அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதும் அவளுக்கு தெரியாது. இதுவரை அவள் யார் வீட்டிற்கும் சென்றதில்லை...! எதற்காக புத்தகத்தைப் பெற அவள் பார்கவியின் வீட்டிற்கு செல்ல வேண்டும்? அவள் சென்ற அதே நேரம் எதற்காக இனியவன் தன் அறையை விட்டு வெளியில் இருக்க வேண்டும்? எதற்காக அவன் பார்கவியை துரத்த வேண்டும்? அவள் ஏன் வலிய சென்று பார்கவியை காப்பாற்றும் பொருட்டு, தன்னை பலிகடாவாக்க வேண்டும்? எதற்காக அவனது பலவீனத்தை தெரிந்து கொண்டு அவனை அவள் கட்டுப்படுத்த வேண்டும்? ஏன்? தன் தலையை பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.
கற்பகம் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று விரும்பினார். அதில் தவறு இருப்பதாய் எப்பொழுதும் ஆழ்வி நினைத்ததில்லை. ஏனென்றால் அவர் வாழ்ந்தது மிக எளிமையான வாழ்க்கையை தான். ஆனால் இப்பொழுது, இன்பவனம் சென்று திரும்பிய பிறகு, அவளால் எதையும் நேர்மறையாக சிந்திக்கவே முடியவில்லை. அவளது அம்மாவின் பேராசையை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எந்த அம்மா தன் மகளை ஒரு பைத்தியத்திற்கு திருமணம் செய்து வைக்க நினைப்பார்? அதற்கு அவர் காட்டும் காரணங்கள், ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தது. இனியவனையும் அவனது குடும்பத்தாரையும் ஏமாற்றச் சொல்லி அல்லவா அவர் கற்றுக் கொடுக்கிறார்! எவ்வளவு கீழ்த்தரமான செயல்...!
கற்பகத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது, நித்திலா எவ்வளவோ மேல். தனது தம்பிக்காக தன் கௌரவத்தை விட்டு கெஞ்சினாள். அவனது நல் வாழ்விற்காக, ஒருவர் காலை பிடிக்கவும் அவள் தயாராக இருக்கிறாள். தங்கள் உறவுக்குத்தான் அவள் கொடுக்கும் மரியாதை எத்தகையது...! அவள் தன் தம்பியுடன் மிக நல்ல பிணைப்பை கொண்டிருந்திருக்க வேண்டும். அதனால் தான் எப்பாடுபட்டாவது தனது தம்பியின் வாழ்க்கையை சீர்படுத்த வேண்டும் என்று அவள் போராடிக் கொண்டிருக்கிறாள். ஆனால் கற்பகம்?
அப்போது வெளியில் இருந்து திடீர் சப்தம் எழுந்தது. தன் தலையைப் பிடித்துக் கொண்டாள் ஆழ்வி. அங்கு வந்தது அவளது அண்ணன் சொல்லின்செல்வன். அவன் தன் பங்குக்கு என்ன செய்ய காத்திருக்கிறானோ.
"அம்மா, அவங்க குடும்பத்தை நீ என்ன செஞ்ச?" என்றான்.
"அவங்களை அவ்வளவு ஈஸியா நான் விட்டிருப்பேன்னு நினைக்கிறியா? என்கிட்ட சரண்டர் ஆகறதை தவிர அவங்களுக்கு வேற வழியில்ல" என்றார் பெருமையாய்.
"சரண்டர் ஆனாங்களா? என்ன சொன்னாங்க?"
"ஆழ்வியை அவங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி கேட்டாங்க"
"என்னது? அவங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?"
"வாயை மூடு. அதுக்காக அவங்க நமக்கு பணம் கொடுக்க தயாராக இருக்காங்க"
"பணமா? எவ்வளவு?"
சில நொடி திகைத்த கற்பகத்தின் மூளை, பரபரவென வேலை செய்தது.
"அவங்க பத்து லட்சம் கொடுக்கறேன்னு சொன்னாங்க. ஆனா, நான் இருபது லட்சம் கேட்டேன்"
சொல்லின்செல்வனின் கண்களில் மின்னல் அடித்தது.
"இருவது லட்சமா நெஜமாத்தான் சொல்றியா?" என்ற அவனது கண்களில் பேராசை பொங்கி வழிந்தது.
அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வி குழப்பம் அடைந்தாள். அவர்களுக்கு ஒரு கோடி கொடுக்கிறேன் என்று தானே நித்திலா கூறினாள்? பிறகு எதற்காக கற்பகம் பொய் கூறுகிறார்?
"ஆனா, ஒரு பைத்தியக்காரனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உன் தங்கச்சி சொல்லிட்டா" என்றார் கவலையாக.
தன்னை வெறித்து பார்த்தபடி நின்றிருந்த ஆழ்வியை பார்த்தான் சொல்லின்செல்வன்.
"ஆழ்வி, நீ எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம். அவங்க ஏதாவது ஏடாகூடமா செஞ்சா, நான் அவங்களை சும்மா விட மாட்டேன்" என்றான்.
"அதனால?"
"அவனை கல்யாணம் பண்ணிக்கோ. நமக்கு இருபது லட்சம் கிடைக்கும்"
அவனுக்கு பின்னால் நின்று, உண்மையான தொகையை கூறாதே என்று செய்கை செய்த கற்பகத்தை பார்த்தாள் ஆழ்வி.
"அவன் ஒரு பைத்தியக்காரன். அது உனக்கு தெரியும் தானே?" என்றாள் ஆழ்வி.
"அதனால என்ன? நீ என்ன அவன் கூட குடும்பமா நடத்த போற? பணத்துக்காக அவனை கல்யாணம் பண்ணிக்கோ... பணத்துக்காக மட்டும்"
"அதுக்கப்புறம்?"
"அவனை போட்டு தள்ளிட்டு, நம்ம எல்லாரும் இங்கிருந்து வேற எங்கேயாவது போயிடலாம்"
தாளாத வெறுப்போடு அவனை ஏறிட்ட ஆழ்வி,
"இப்படிப்பட்ட கேவலமான வாழ்க்கையை தான் நீ வாழ்ந்துகிட்டு இருக்கியா?" என்றாள் கோபம் கொப்பளிக்க.
"எதார்த்தத்தை புரிஞ்சுக்கோ. யாரும் நமக்கு பணத்தை சும்மா கொடுக்க மாட்டாங்க. பணத்துக்காக நம்ம என்ன வேணா செய்யலாம்"
"ஆமாம்... பணத்துக்காக கூட பிறந்த தங்கச்சியை கூட விக்கலாம்... இல்ல?"
"ஆழ்வி, பணம் சம்பாதிக்கிறது அவ்வளவு ஈஸியான காரியமில்ல. ஆனா நம்ம விஷயத்துல அது நம்ம வீட்டு கதவை பலமா தட்டுது. அதை நீ மிஸ் பண்ண போறியா?"
"பணத்துக்காக கூடப்பிறந்த தங்கச்சியை நீ பலிகடவாக்குவியா?"
"நம்மகிட்ட பணம் இருந்தா, அதுக்காக ஆயிரம் பேர் நம்ம பின்னாடி வருவானுங்க. அதுல ஒருத்தனை நீ கல்யாணம் பண்ணிக்கலாம். நம்ம பணத்தோட வேறு எங்கேயாவது போய் வசதியா வாழலாம். கல்யாணத்துக்கு சரின்னு மட்டும் சொல்லு போதும்"
"என்னைப் பத்தி நீ என்ன தான் நினைச்சுகிட்டு இருக்க? எனக்கு ஃபீலிங்க்ஸ், எமோஷன்ஸ் எதுவும் கிடையாதா?"
"அந்த மாதிரி பிரயோஜனம் இல்லாத விஷயத்தை பத்தி பேசுறதுனால உனக்கு கிடைக்கப் போறது எதுவும் இல்ல"
"ஓஹோ... உன்னை பொறுத்த வரைக்கும், ஃபீலிங்க்ஸும் எமோஷன்சும் பிரயோஜனம் இல்லாத விஷயமா?"
"அதையெல்லாம் விடு. நேரா விஷயத்துக்கு வா. நீ அவனை கல்யாணம் பண்ணிக்குவியா மாட்டியா?"
தனது கைகளை கட்டிக்கொண்டு ஒன்றும் கூறாமல் நின்றாள் ஆழ்வி.
"அம்மா, அவங்களுக்கு ஃபோன் பண்ணி, நம்ம தயார்னு சொல்லு" என்றான்.
அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் ஆழ்வி.
"இவ மட்டும் ஒத்துக்கலைன்னா, அவங்களை பழி வாங்குறதை தவிர எனக்கு வேற வழியில்ல"
"பழி வாங்குவியா?" என்றாள் ஆழ்வி அதிர்ச்சியுடன்.
"ஆமாம். அவன் உன்னை கெடுத்தான்ல? அதே மாதிரி அவன் தங்கச்சியை நான் கெடுத்துட்டு போறேன். அதுக்கப்புறம் பார்கவியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்கிட்ட ஓடி வர்றதை தவிர அவங்களுக்கு வேற வழி இருக்காது"
"நீ என்ன பைத்தியமா?" சீறினாள் ஆழ்வி.
"நீ என்ன வேணா நினைச்சுக்கோ. நான் அதை நிச்சயமா செய்வேன்"
"நீ மனுஷனே இல்ல. நீ ஒரு மிருகம்"
"அம்மா, ஏன் சும்மா நின்னுகிட்டு இருக்க? நான் உன்னை என்ன செய்ய சொன்னேன்?"
"நான் தற்கொலை பண்ணிகிட்டா என்ன செய்வ?" என்றாள் ஆழ்வி.
"நீ தற்கொலை பண்ணிக்கிட்டாலும் நான் பார்கவியை விடமாட்டேன்"
மென்று விழுங்கினாள் ஆழ்வி.
"அம்மா ஏன் சும்மா நிக்கிறீங்க? அவனை எந்த பைத்தியக்காரத்தனமும் செய்ய வேண்டாம்னு சொல்லுங்க" என்றாள் கெஞ்சலாய்.
"இங்க பைத்தியக்காரி நீ தான் ஆழ்வி. வசதியா வாழறதுக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைச்ச பிறகும், நீ தான் தேவையில்லாம யோசிச்சுக்கிட்டு இருக்க. நீ இவ்வளவு சுயநலவாதியா இருப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கல. தற்கொலை பண்ணிக்கிட்டாலும் பண்ணிக்குவ, ஆனா எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க மாட்ட, இல்ல? நீ இவ்வளவு சீப்பானவளா?"
மெல்ல பின்னோக்கி நகர்ந்தாள் ஆழ்வி.
"நான் நித்திலாவுக்கு ஃபோன் பண்ண போறேன்" என்றார் கற்பகம்.
தன் அறைக்கு ஓடி சென்று கதவை சாத்தி தாழிட்டு கொண்டாள். கற்பகமும், சொல்லின்செல்வனும் கதவை தட்டினார்கள். ஆனால் அவள் கதவை திறக்கவில்லை.
இதற்கிடையில்...
இன்ப வனம்
நித்திலா வீட்டினுள் நுழைவதை பார்த்தார்கள் இன்பவன வாசிகள். அவளை நோக்கி ஓடிச் சென்ற பார்கவி,
"அக்கா, எங்க போயிருந்த?" என்றாள் பதற்றத்துடன், அவள் எங்கு சென்றிருக்கக் கூடும் என்று அவள் யுகம் செய்து விட்டிருந்ததால்.
"ஆழ்வியை பாக்க போயிருந்தேன்" என்றாள் நடந்தபடி.
"ஏன்கா இப்படி எல்லாம் செய்யற? ஏற்கனவே காயப்பட்டு இருக்கிற அவ காயத்தை, மேல மேல எதுக்கு ரணமாக்குற? இதையெல்லாம் நிறுத்து" என்று வீடு அதிரும்படி கத்தினாள்.
"நீ இவ்வளவு சுயநலவாதியா இருப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கல, நித்தி. உன் மனசுல இருந்த ஈரம் எல்லாம் வத்தி போச்சா? ஒரு சின்ன பொண்ணோட வாழ்க்கையை பாழாக்குற மனசு உனக்கு எப்படி வந்தது?" என்றான் சித்திரவேல் சலிப்புடன்.
அவர்களுக்கு பதில் அளிக்காமல் தன் அறைக்கு சென்றாள் நித்திலா. பாட்டி தன் அறைக்குள் வந்து கதவை சாத்தி தாளிடுவதை கண்ட அவள், அமைதியாய் கட்டிலில் அமர்ந்தாள். அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தார் பாட்டி. அடுத்த நொடி அவர் மடியில் படுத்து ஓவென்று அழுதாள் நித்திலா.
"என்னை மன்னிச்சிடுங்க பாட்டி. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. நம்ம இன்னுவை குணமாக்க, இதை விட்டா எனக்கு வேற வழி இருக்கிறதா தெரியல" எழுந்து அமர்ந்து பாட்டியை பார்த்த அவள்,
"நான் சுயநலமா நடந்துக்கிறேன்னு எனக்கு தெரியும். ஆனா சத்தியமா சொல்றேன், நான் எப்பவும் ஆழ்வி பக்கம் தான் நிப்பேன். நம்ம இன்னுவே அவளுக்கு எதிரா இருந்தாலும் அவங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன். அவங்க ஆசைப்படுற எல்லாத்தையும் நான் நிறைவேத்தி வைப்பேன். என்னை நம்புங்க பாட்டி. நமக்கு அவங்க வேணும்... நம்ம குடும்பத்துக்கு அவங்க வேணும்... நம்ம இன்னுவுக்கு அவங்க வேணும்...!"
"நம்ம இன்னு கூட இருக்கிற வாழ்க்கை எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு உனக்கு தெரியும் தானே? அவன் இருக்கிற நிலைமை நமக்கு தெரியாதா?" என்றார் வேதனையுடன்.
"இல்ல பாட்டி, மத்தவங்களுக்கு தான் அவன் கூட இருக்கிறது கஷ்டமான காரியம். ஆனா ஆழ்விக்கு நிச்சயம் அப்படி இருக்காது"
"நீ என்ன சொல்ற? அவனால அவளுக்கு ஏற்பட்ட கதியை நீ பாக்கல?"
"ஆனா ஒரு கட்டத்துல, அவன் கட்டுப்பட்டான்"
பாட்டி யோசனையில் ஆழ்ந்தார்.
"அவங்ககிட்ட அவன் நடந்துக்கிறது வேற மாதிரி இருக்கு. அவங்களைப் பார்த்த உடனே அவன் அமைதி ஆயிட்டான்"
"அப்படியா?" என்றார் நம்ப முடியாமல்.
"இன்னைக்கு கற்பகம் ஆன்ட்டி அவனைப் பார்த்து சத்தம் போட்டப்போ, அதை நான் என் கண்ணால பார்த்தேன். ஆழ்வியை பார்க்கிற வரைக்கும், கேட்டு மேல ஏறி நின்னு அவனும் அவங்களுக்கு ஈக்குவலா கத்திகிட்டே இருந்தான். ஆனா அவங்களை பார்த்த உடனே, கேட்டை விட்டு கீழே இறங்கி, சுவத்துக்கு பின்னால போய் ஒளிஞ்சிகிட்டான்"
"இதை என்னால நம்ப முடியல"
"ஆனா, அது உண்மை பாட்டி. ஆழ்வியால அவனைக் கட்டுப்படுத்த முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு"
"ஆனா அவனுக்கு அடிபட்ட நாளிலிருந்து நம்ம அவனுக்கு ட்ரீட்மெண்ட் குடுத்துக்கிட்டு தானே இருக்கோம்? அவன்கிட்ட எந்த முன்னேற்றமும் இல்லையே..."
"ஏன்னா, அவன் தனியா இருக்கான்"
அவளது பேச்சை வெட்டி,
"அவன்கிட்ட நெருங்க ஆழ்வி விரும்பலைனா என்ன செய்வ? அது தப்புன்னு உன்னால சொல்ல முடியுமா?"
நித்திலா தலைகுனிந்தாள்.
"எனக்கு தெரியல, பாட்டி. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல"
"விருப்பமில்லாத பொண்ணை கல்யாணத்துக்காக கட்டாயப்படுத்துறது தப்பு. அதிலும் அவ கல்யாணம் பண்ணிக்க போறவன் பைத்தியமா இருந்தா, அதை செய்யறது கொஞ்சம் கூட நியாயமில்ல. அவளை கட்டாயப்படுத்தி நம்ம கல்யாணம் பண்ணி வச்சிட முடியும். ஆனா, அவன் கூட வாழ்ந்து தான் ஆகணும்னு நம்மால சொல்ல முடியாது... சொல்லவும் கூடாது"
அங்கிருந்து சென்றார் பாட்டி, நித்திலாவை வேதனையில் விட்டு.
.......
அமைதியாய் நாற்காலியில் அமர்ந்திருந்தாள் ஆழ்வி. அவளுக்கு அழ வேண்டும் என்று தோன்றவில்லை. அவள் மனநிலை என்னவென்று அவளுக்கு புரியவில்லை. தன் அம்மா, அண்ணனுடன் இருப்பதைக் காட்டிலும், வேறு எங்காவது சென்று விடுவது மேல் என்று தோன்றியது அவளுக்கு. தனது வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல், அவள் பார்கவியின் வாழ்க்கையை காப்பாற்றினாள். ஆனால் இப்பொழுது, இனியவனை அவள் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினால், அவளது அந்த தியாகத்திற்கு மதிப்பில்லாமல் போய்விடும் போலிருக்கிறது. அவளது அண்ணன் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வான். அவன் கூறியது போலவே பார்கவியின் வாழ்க்கையை அவன் நாசமாக்கி விட்டால் என்ன செய்வது? அவன் நிச்சயம் அதை செய்வான்... அவன் செய்யக்கூடியவன் தான். அங்கு மாட்டி வைக்கப்பட்டிருந்த அம்மன் புகைப்படத்தை கண்டவுடன் அவளது கண்கள் அருவி என பொழிந்தது.
"என்னை சுத்தி இருக்கிறவங்களோட உண்மை முகத்தை எனக்கு காட்டத்தான் என்னை இப்படி ஒரு சூழ்நிலையில கொண்டு போய் நிறுத்துனீங்களா? இதைத்தான் நான் புரிஞ்சுக்கணும்னு நினைச்சீங்களா? கனவு உலகத்துல இருந்து என்னை எழுப்பி விடத்தான் என்னை அவங்க வீட்டுக்கு அனுப்பி வச்சீங்களா?"
தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள். அவள் கதவை திறந்தவுடன், கற்பகமும் சொல்லின்செல்வனும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். அவள் அவர்களுக்கு சொத்து ஆயிற்றே...!
"நான் அவரை கல்யாணம் பண்ணிக்க தயாராக இருக்கேன்"
அவர்கள் இருவரும் பைத்தியம் போல் சிரித்தார்கள்.
"ஆனா ஒரு கண்டிஷன்..."
"நீ என்ன சொன்னாலும் செய்ய நாங்க தயாரா இருக்கோம்" என்றான் சொல்லின்செல்வன். கற்பகமும் ஆமாம் என்று தலையசைத்தார்.
"இந்த நிமிஷத்துல இருந்து, உங்களுக்கும் எனக்கும் நடுவுல எந்த உறவும் கிடையாது. எந்த காரணத்துக்காகவும் நீங்க என் மாமியார் வீட்ல அடி எடுத்து வைக்கக் கூடாது... நான் செத்தாலும் நீங்க அங்க வரக்கூடாது. அவ்வளவு தான்"
அவர்கள் இருவரும் பேயறைந்தது போல் நின்றார்கள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top