86 நன்றி...!
86 நன்றி...!
நித்திலாவின் மனநிலையில் ஏற்பட்ட முன்னேற்றம், அவளது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை தந்தது. அவள் பைத்தியம் போல் நடித்தாள் என்ற விஷயத்தை இனியவன் யாரிடமும் கூறவில்லை. தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல் நடந்து கொண்டான். ஏனென்றால் அவன் நித்திலாவை சங்கடப்படுத்த விரும்பவில்லை. தன்னிடம் அது பற்றி கூறியது ஆழ்வி தான் என்று நித்திலா எண்ண வேண்டாம் என்று அவன் நினைத்தான். ஆழ்விக்கும் நித்திலாவுக்கும் இடையில் ஓர் அழகான பிடிமானம் இருந்தது. அதை கெடுக்க அவன் விரும்பவில்லை.
நித்திலா தன் துயரத்தில் இருந்து வெளிவர தன்னால் இயன்ற அளவிற்கு உதவி புரிந்தாள் ஆல்வி. நித்திலாவிடம் பேசி அவள் மனதை தெளிய செய்யும்படி சுவாமிஜி இடமும் கேட்டுக் கொண்டாள். அது நித்திலாவுக்கு தன் மனதை மாற்றிக்கொள்ள பெரிதும் உதவியது. அவளிடம் மிகப் பெரிய மாற்றத்தை அவள் குடும்பத்தினர் கண்டார்கள். தனக்கு பிறக்க இருக்கும் குழந்தையிடம் தன் மனதை ஆழ்த்தினாள் அவள். மெல்ல மெல்ல அவர்களது குடும்பம் இழந்த சந்தோஷத்தை அடைந்தது.
நித்திலாவை மேலும் சில விஷயங்களில் ஈடுபடுத்த எண்ணினான் இனியவன். அது அவளது கடந்த காலத்தை மறக்க செய்யும் என்று அவன் நம்பினான். மகிழ்ச்சி மட்டுமே அப்படி ஒரு மாற்றத்தை அவளிடம் ஏற்படுத்த முடியும் என்று அவனுக்கு தெரியும்.
இரவு உணவு வேலை
அனைவரும் உணவு மேசையில் கூடினார்கள்.
"அக்கா, நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்." என்றான்.
அனைவரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனை ஏறிட்டார்கள்.
"எதைப் பத்தி பேசணும் இன்னு?"
"நீங்க நம்ம கவியை பத்தி என்ன நினைக்கிறீங்க?" என்று அவன் கேட்க, அது பார்கவிக்கு பாதற்றத்தை தந்தது.
பாட்டியும் நித்திலாவும் அவளை சந்தேகத்துடன் பார்க்க, ஆழ்வி புன்னகை புரிந்தாள்.
"நல்ல பொண்ணு, ரொம்ப வெகுளி, எல்லாத்துக்கும் அடுத்தவங்களை சார்ந்து இருக்கா..." என்றாள் நித்திலா.
"அப்படியா?" என்று பார்கவியை பார்த்து அவன் கிண்டலாய் சிரிக்க, பார்கவி அசடு வழிந்தாள்.
"நாங்க ஏதாவது தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறியா?" என்றாள் நித்திலா.
"ஆமாம், கா. நீங்க பார்கவியைப் பத்தி தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் இருக்கு."
"என்ன விஷயம்?"
"நீங்க நினைக்கிற மாதிரி அவ வெகுளியாவோ, அடுத்தவங்களை சார்ந்தோ இல்ல."
"நீ இப்போ என்ன சொல்ல வர?"
"தனக்கு என்ன தேவைன்னு அவளால முடிவெடுக்க முடியும்னு சொல்றேன். யாரையும் காதலிக்காத அளவுக்கு அவ இன்னசென்டும் இல்ல..."
பாட்டியும் நித்திலாவும் அவளை அதிர்சியோடு ஏறிட்டார்கள். அவள் காதலிக்கிறாள் என்பது அவர்களுக்கு அதிர்ச்சி அல்ல அது பற்றி அவர்கள் தெரியாமல் இருந்தார்கள் என்பது தான் அவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
"அவ காதலிக்கிறது யாருன்று தெரிஞ்சா, நீங்க இன்னும் அதிர்ச்சியாவிங்க." என்றான் இனியவன்
"யாரை?" என்றாள் நித்திலா.
பார்கவியை பார்த்த இனியவன்,
"இப்பவாவது வாயை திறந்து பேசு." என்று சிரித்தான்.
அவள் தன் கண்களால் அவனிடம் கெஞ்ச,
"சரி விடு... அவ காதலிக்கிறது குருவை தான்." என்று குட்டை உடைத்தான் இனியவன்.
அவன் கூறியது போலவே, அவர்கள் இருவரது முகத்திலும் சொல்லவொனா அதிர்ச்சி தோன்றியது.
"குருவா?"
ஆம் என்று தலையசைத்தான்.
"அவங்க ஒரு வருஷமா காதலிக்கிறாங்க."
"நான் உங்ககிட்ட சொல்ல தான் கா நினைச்சேன். ஆனா நம்ம குடும்பத்துல நடந்ததெல்லாம் அதை செய்யவிடாம தடுத்துருச்சு." என்றாள் பார்கவி முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.
"நீ அதுக்காக கவலைப்பட வேண்டிய அவசியமில்ல. தப்பான ஒருத்தரை நம்பிகிட்டு இருந்தப்போ, நான் என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்க தவறிட்டேன்." என்றாள் உணர்ச்சிவசப்பட்டு நித்திலா.
"அக்கா இதுல கவலைப்பட எதுவுமில்ல. நீங்க எதார்த்தத்தை புரிஞ்சுக்கோங்க. இந்த உலகத்துல எந்த பொண்ணும் தன் ஃபேமிலியில் இருக்கிறவங்ககிட்ட விஷயத்தை சொல்லிட்டு கமிட்டாக மாட்டா." என்று சிரித்தான் இனியவன் பேச்சை மாற்றி.
"அவ காதலிக்கிறது குரு அப்படிங்கிறதால நம்ம சந்தோஷம் தான் படணும்."
நித்திலா ஏதோ சொல்ல முடியல, அவளை கைகாட்டி நிறுத்திய அவன்,
"நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்கு தெரியும். நீங்க அதை பத்தி கவலைப்படாதீங்க. புதுசா ஒருத்தர் வரும் போது, அதுக்கு முன்னாடி இருக்கிறவங்களோட நம்ம அவங்களை கம்பேர் பண்ணி பார்க்கிறது சகஜமானது தான். அது தவிர்க்க முடியாததும் கூட. ஆனா, இந்த தடவை நான் அதே தப்பை திரும்ப செய்றதா இல்ல. நான் குருவோட பேக்ரவுண்டை நல்லாவே செக் பண்ணிட்டேன்" என்ற அவனை அனைவரும் திகிலோடு ஏறிட்டார்கள்.
"நீ அவனோட பேக்ரவுண்ட் செக் பண்ணியா?"
ஆம் என்றான் இனியவன்.
"இது தெரிஞ்சா குரு ரொம்ப பீல் பண்ணுவாரு." என்றாள் பார்கவி.
"பண்ண மாட்டான். ஏன்னா நான் அதை அவன் கிட்ட சொல்லிட்டு தான் செஞ்சேன்." என்றான் இனியவன் மேலும் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்து.
"நிஜமாவா?"
"ஆமாம். அவனுக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்ல. ஏன்னா, அவன்கிட்ட எந்த தப்பும் இல்ல."
பார்கவிக்கு அதைக் கேட்க பெருமையாய் இருந்தது.
"நம்ம கல்யாண வேலையை ஆரம்பிக்கலாமா?" என்றான் இனியவன்.
நித்திலா மகிழ்ச்சியோடு தலையசைத்தாள்.
"ஆழ்வி, நீ தான் கல்யாண வேலையெல்லாம் பார்த்துக்கணும். அக்காவை டிஸ்டர்ப் பண்ணாத."
"ஏன் நீ அப்படி சொல்ற?" என்றாள் நித்திலா.
"நீங்க பிரக்னண்டா இருக்கும்போது உங்களால எப்படி வேலை செய்ய முடியும்? நான் உங்களை ஸ்டிரெஸ் பண்ண விரும்பல."
"இது ஸ்டிரெஸ் ஆகுற மேட்டர் இல்ல. ரொம்ப சந்தோஷமான விஷயம். நம்ம தங்கச்சியோட கல்யாணம். என்னால என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். நான் ஜாக்கிரதையா இருப்பேன். நீங்க அதைப்பத்தி கவலைப்படாதீங்க."
"சரிங்க கா." என்றான் இனியவன், அவன் அதை எதிர்பார்க்காதவன் போல.
திருமண வேலைகள் ஆரம்பமாகியது. அவன் எதிர்பார்த்தது போலவே நித்திலா தன் பிரச்சனைகளை எல்லாம் மறந்து திருமண வேளையில் மகிழ்ச்சியாய் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
இந்த வேலைகளுக்கிடையில் இனியவன் ஒரு நபரை மறந்து விடவில்லை, தனது மைத்துனன் சொல்லின் செல்வன். அவனுக்கு போன் செய்து தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி கூறினான். மாமா அழைத்தால் செல்லாமல் இருப்பானா செல்வன்? இனியவன் குறிப்பிட்ட அந்த நேரத்தில் சரியாக சென்று சேர்ந்தான்.
"எப்படி இருக்க செல்வா?"
"நல்லா இருக்கேன், மாமா."
"நான் உன்னை எதுக்கு கூப்பிட்டேன்னு தெரியுமா?"
இல்லை என்று தலையசைத்தான்.
"சென்னைக்கு வெளியில ஒரு குடோன் வாங்கலாம்னு இருக்கேன். அதை பார்த்துக்குற பொறுப்பை உன்கிட்ட கொடுக்கலாம்னு இருக்கேன். ஏன்னா, அதை செய்ய பொறுப்பான, நம்பகமான ஒருத்தர் எனக்கு வேணும். அதுக்கு வேற யாரையும் என்னால நம்ப முடியாது. நீ என்ன சொல்ற?" என்றான்.
கண்ணிமைக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த செல்வனைப் பார்த்து,
"என்ன எதுவுமே சொல்ல மாட்டேங்குற? உனக்கு இந்த வேலை பிடிக்கலையா?" என்றான்.
"இல்ல... நான் அப்படி சொல்லல... உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல," என்றான்.
"தேவையில்லை..."
"இல்ல மாமா. நான் குடிக்கு அடிமையா இருந்த வரைக்கும் என்னோட எதிர்காலத்தை பத்தி எல்லாம் நான் யோசிச்சதே இல்ல. ஆனா குடியை விட்டதுக்கு பிறகு, என்னோட எதிர்காலத்தை நினைச்சாலே பயமாய் இருக்கு. ஏன்னா, எனக்கு எதுவுமே தெரியாது."
"வாழ்க்கைனா என்னன்னு நீ புரிஞ்சுகிட்டல? அது போதும். எல்லாம் சரியாயிடும்."
"ரொம்ப நன்றி, மாமா." என்று உணர்ச்சிவசப்பட்டு, அவனிடமிருந்து விடை பெற்றான் சொல்லின் செல்வன்.
.............
வீட்டுக்கு வந்த இனியவன் தன் கழுத்தில் இருந்த ட்டையை தளர்த்தியபடி தன் அறையை நோக்கி நடந்தான். அவனை நோக்கி ஓடி வந்த ஆழ்வி, அவனை இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள். தன் புருவம் உயர்த்தி புன்னகைத்தான் இனியவன்.
"தேங்க்யூ சோ மச்."
"எதுக்கு?"
"செல்வம் அண்ணா கால் பண்ணி இருந்தாரு. நீங்க என்ன செஞ்சிங்கன்னு சொன்னாரு."
"நீ எனக்கு தேங்க் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அவனுக்கு நான் வேலை தான் கொடுத்தேன். நீ எங்க குடும்பத்துக்காக செஞ்சிருக்கிறத கம்பேர் பண்ணும் போது அது ஒண்ணுமே இல்ல."
"அண்ணன் வேலை தேடிக்கிட்டு இருக்காருன்னு கேள்விப்பட்டேன். ஆனா, நான் ஃபோன் பண்ணும் போது அவர் அதைப்பத்தி என்கிட்ட எதுவும் சொல்லல. அவருக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறது எனக்கு புரிஞ்சிது."
"அதை பத்தி நீ ஏன் என்கிட்ட எதுவும் சொல்லல?"
"உங்ககிட்ட நான் எப்படி கேட்க முடியும்? அவருக்கு எதுவுமே தெரியாது. எந்த வேலையிலயும் அனுபவமே கிடையாது."
"நிறுத்து, நிறுத்து... அவனுக்கு மாமாவா இருந்துகிட்டு அவன்கிட்ட நான் எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் எதிர்பார்ப்பேன்னு நினைச்சியா?"
"ஆனா,"
"அவன் இப்போ குடிப்பழக்கத்தை விட்டுட்டான். அக்கா கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுத்துட்டான். அப்படின்னா என்ன அர்த்தம்? அவன் நேர்மையா வாழ விரும்புறான். அதை நம்ம மதிக்கணும். நம்மளே அவனுக்கு சப்போர்ட் பண்ணலன்னா, வேற யார் சப்போர்ட் பண்ணுவா? திருந்தி வாழ நினைக்கிற மச்சானுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலன்னா இவ்வளவு பெரிய கம்பெனி இருந்து என்ன பிரயோஜனம்?"
அவள் புன்னகைக்க, அவளை தழுவிக் கொண்டான்.
"ரொம்ப ஃபார்மலா இருக்காதே. உங்க அண்ணனுக்கு வேலை வேணும்னு நீ என்கிட்ட கேட்டு இருக்கணும். அதுக்கு உனக்கு உரிமை இருக்கு. அதை புரிஞ்சுக்கோ."
"அப்படியா?"
"ஆழ்வி, நீ மட்டும் இல்லன்னா இந்த குடும்பம் என்ன ஆகி இருக்கும்னு சொல்லவே முடியாது. நீ எங்க குடும்பத்தோட பொக்கிஷம். உன்னை சந்தோஷப்படுத்த வேண்டிய கடமை இந்த வீட்ல இருக்கிற ஒவ்வொரு பேருக்கும் இருக்கு."
"இது கொடுத்து வாங்குற விஷயம்னு நினைக்கிறீங்களா? குடும்பம்ங்குறது எதையும் எதிர்பார்த்து செய்ற விஷயம் கிடையாது. அது எதையும் எதிர்பாராத அன்கண்டிஷனலா இருக்கணும். எதையும் எதிர்பார்க்காம கடமையை செய்யணும். அது தான் உண்மையான அன்பு."
"சரி, நான் தோல்வியை ஒத்துக்குறேன். என் மனைவியோட குடும்பம், என் குடும்பமும் தான். அவளோட அண்ணனை சந்தோஷப்படுத்த வேண்டியது என்னோட கடமை. போதுமா?"
சரி என்று புன்னகைத்தாள் ஆழ்வி.
"உனக்கு எல்லாத்துக்கும் தேங்க்ஸ்" என்று கூறிய அவன், மேற்கொண்டு அவள் எதுவும் பேசுவதற்கு முன்,
"நான் சொல்றதை கேளு. என்னை கொஞ்சம் பேச விடு. நீ எதையும் எதிர்பார்த்து உன் கடமையை செய்யாம இருந்திருக்கலாம். ஆனால் உனக்கு தேங்க்ஸ் சொல்லாம என்னால இருக்க முடியாது. நீ அந்த பழக்காரருக்கு உதவி செஞ்ச அந்த நாள், நான் உன்னை முதல் முதல்ல பார்த்த போது, நீ என் குடும்பத்தோட விடிவெள்ளியா வருவேன்னு நான் கனவுல கூட நினைச்சு பாக்கல."
"ஒரு நல்ல மனைவி என்ன செய்யணுமோ அதை தானே நான் செஞ்சேன்?"
"ஆனா, எல்லா மனைவியும் உன்னை மாதிரி இருக்கிறதில்ல. அதனால தான் நீ ரொம்ப ஸ்பெஷல்."
"நீங்க மட்டும் என்னவாம், நீங்க ஸ்பெஷல் இல்லையா?"
"ஆமாம் பாயுறதுல நான் ரொம்ப ஸ்பெஷல். அது உன்னை விட வேற யாருக்கு நல்லா தெரிஞ்சிருக்க போகுது?"
அதை கேட்டு அவள் உதடு சுளிக்க,
"நீ கடிச்சு வைக்கிறதுல ரொம்ப ஸ்பெஷல்" என்று தன் தோளிலிருந்து தழும்பை காட்டி சிரித்தான்.
அவள் முகத்தை உம் என்று வைத்துக் கொள்ள, அவளை கட்டிக்ககொண்டு சிரித்தான்.
"இதெல்லாம் நம்மளுடைய ரகசிய திறமைகள். நான் எத்தனையோ முறை உன் மேல கட்டில்ல பாஞ்சிருக்கேன். ஆனா என் சுயநினைவோட மறுபடியும் உன்கிட்ட கடி படுற அந்த அதிர்ஷ்டம் மட்டும் எனக்கு வாய்க்கவே இல்ல. என் ஆசையை நிறைவேத்த நீ தயாரா இல்ல."
"இப்படி எல்லாம் சிறுபிள்ளைத்தனமா பேசாதீங்க."
"என் ஆசையை நிறைவேத்தினா உனக்கு என்ன குறைஞ்சிட போகுது?"
"போங்க..."
"ப்ளீஸ், என்னை ஒரு தடவை கடியேன்..."
"போதும் நிறுத்துங்க..."
"மாட்டேன். நீ என்னை கடிக்கிற வரைக்கும் நிறுத்த மாட்டேன்."
அவனைப் பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி சென்றாள் ஆழ்வி. தன் அடிபட்ட தழும்பை தடவியபடி புன்னகையோடு நின்றான் இனியவன். அவள் அவனை வந்தடைந்த விதம் வேண்டுமானால் இனிமை தர முடியாததாய் இருக்கலாம். ஆனால் அவளுடைய வருகை, அவனது வாழ்க்கையை இனிமையாக்கியது. அவள் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அவன் அவளுக்கு நன்றி கடன் பட்டவன் தான்.
தொடரும்...
குறிப்பு: அடுத்த பகுதியுடன் *நீயின்றி அமையாது (என்) உலகு!* நிறைவு பெறுகிறது. தங்கள் மேலான ஆதரவுக்கு மிக்க நன்றி.🙏
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top