85 நடவடிக்கை

85 நடவடிக்கை

அழத் துவங்கிய நித்திலாவை பார்த்து,

"அழாதம்மா. உன் பிரச்சனை என்னன்னு என்கிட்ட சொல்லு. நான் அதுக்கு தீர்வு காண முடியுமான்னு பாக்குறேன். அது எதுவா இருந்தாலும், நீ நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்கள காயப்படுத்தாத." 

"நான் அவங்கள காயப்படுத்தணும்னு நினைக்கல. என் புருஷனை தான் தண்டிக்க நினைச்சேன். அவர் நிம்மதியா இருக்கக் கூடாது. என் தம்பிக்கு நடந்த எல்லா கஷ்டத்துக்கும் அவர் தான் காரணம். அவர் மட்டும் இல்ல, நானும் தான் காரணம். நான் மட்டும் எச்சரிக்கையா இருந்திருந்தா, அதை எல்லாம் தவிர்த்திருக்க முடியும். என் நம்பிக்கையை அவர் தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டாரு. தன்னோட சொந்த பலனுக்காக  அடுத்தவங்களோட வாழ்க்கையை கெடுக்கத் துணியுற அளவுக்கு  அவர் இவ்வளவு கொடூரமானவரா இருப்பார்னு நான் நினைச்சு கூட பாக்கல. நான் அவரை நம்பினேன். இந்த துரோகத்தை என்னால தாங்க முடியல" என்று அழுதாள் நித்திலா.

"அவர் தான் ஏற்கனவே ஜெயில்ல இருக்காரே..."

"ஆனா, என்னோட மனநிலையை பத்தின முன்னேற்றத்தை தனக்கு தெரிவிக்க சொல்லி என் தம்பி கிட்ட அவர் கேட்டுக்கிட்டார். நான் குணமாயிட்டேன்னு தெரிஞ்சா, அவர் நிம்மதியாயிடுவாரு. அது நடக்கக் கூடாது." என்றாள் கோபமாய்.

"நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். நீ அவரை மட்டும் தண்டிக்கல. உன் வயித்துல வளர்ற குழந்தையையும் சேர்த்து தண்டிச்சுக்கிட்டு இருக்க. மனசுல வஞ்சம் வைக்கிறது உன்னை நிச்சயம் சந்தோஷமா வைக்காது. அது கசப்பான மனநிலையை தான் ஏற்படுத்தும். நீ அவரை மன்னிக்கிறதால நீ பலவீனமானவன்னு அர்த்தம் இல்ல. அது உன்னை நிம்மதியா இருக்க செய்யும்."

தன் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் நித்திலா.

"உன்னால அவரை மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சுடு. நீ உன் வாழ்க்கையில இருந்து அவரை விலகிப் போக சொல்லிட்ட. அதே மாதிரி, உன் நினைவுகளில் இருந்தும் அவரை விலக்கி வை. உனக்குள்ள இருக்கிற சின்ன உயிருக்கு அமைதியான நல்ல சூழ்நிலை வேணும்ன்னு உனக்கு தோணலையா? உன்னை நீ அழுத்தத்துக்கு ஆளாக்குறது மூலமாக அந்த குழந்தைக்கும் நீ அழுத்தம் குடுக்குற. நீ எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம். இந்த பிரபஞ்சம் யாருக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ, அந்த தகுதியான தண்டனையை கொடுக்க நிச்சயம் தவறாது. ஏற்கனவே உன் புருஷனுக்கு நீ கொடுமையான தண்டனையை உன் வெறுப்பு மூலமா கொடுத்துட்ட. நான் உன் புருஷனுக்காக அவரை மன்னிக்க சொல்லல, நான் உனக்காகத்தான் அவரை மன்னிக்க சொல்றேன். அவரை மன்னிச்சிட்டு நிம்மதியா இரு. இந்த உலகத்துலயே ரொம்ப அழகான தாய்மை அப்படிங்கிற கட்டத்துல நீ இருக்க. அதை சந்தோஷமா அனுபவி. உன் குழந்தையை எப்படி ஒரு நல்ல மனுஷனா வளக்குறதுனு யோசி. உன்னோட சந்தோஷத்தை மட்டுமே யோசிக்கிற ஒரு அழகான குடும்பம் உனக்கு கிடைச்சிருக்கு. அவங்களை ஏமாத்தாதம்மா."

கண்களைத் துடைத்தபடி சரி என்று தலைகசைத்தாள் நித்திலா.

"நல்லது!"

"ஆனா நான் குணமாயிட்டேன்னு அந்த மனுஷன் கிட்ட சொல்லக்கூடாதுன்னு என் குடும்பத்தார்கிட்ட சொல்லுங்க." என்று ஒரு ஒப்பந்தத்தை முன் வைத்தாள்.

"சரி, அவர்கிட்ட அவங்க சொல்ல மாட்டாங்க. அதுக்கு நான் பொறுப்பு."

"ரொம்ப நன்றி சுவாமிஜி. எனக்கு நீங்க இன்னொரு உதவி செய்ய முடியுமா?"

"என்ன வேணாலும் செய்றேன்."

"நான் நடிக்கிறேன்னு அவங்களுக்கு தெரிய வேண்டாம். அவங்க வருத்தப்படுவாங்க. நீங்க என்னை குணப்படுத்தினதா சொல்லுங்க."

புன்னகை புரிந்த சுவாமிஜி,

"சரி, நீ இன்னும் மூணு நாலு நாள்ல நல்லா ஆயிடுவேன்னு சொல்லிடுறேன். போதுமா?"

"ரொம்ப நன்றி, சுவாமிஜி!"

"ஆனா, ஒரு விஷயம். ஆழ்விக்கு நீ நடிக்கிற விஷயம் தெரியும்"

"ஆழ்விக்கு தெரியுமா?"

"ஆமாம். அவங்க தான் அதை கண்டுபிடிச்சு என்னை இங்கு வரவச்சாங்க."

"அவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?"

"உனக்கு நடந்த ஆக்சிடென்ட்டுக்கு பிறகு, நீ உன் புருஷனை பார்க்கவே பயந்த. உன்னை சமாதானப்படுத்த ஆழ்வி முயற்சி பண்ணாங்க. நீங்க அவங்க தோளில் சாஞ்சிருந்திங்க. சரியா?"

ஆமாம் என்று தலையசைத்தாள்.

"உங்க புருஷன் போலீசுக்கு ஃபோன் பன்னி சரண்டர் ஆகுறேன்னு சொன்னப்போ உங்க முகத்துல ஏற்பட்ட அதிர்ச்சிக்குறியை உங்கலால மறைக்க முடியல. உங்க உண்மையான மனநிலையை புரிஞ்சிக்க ஆழ்விக்கு அதுவே போதுமானதா இருந்தது"

நித்திலா வியந்தாள். மற்றவரின் முக பாவத்தை கவனித்து அவர்கள் மனநிலையை உணரும் அளவிற்கு ஆழ்வி அவ்வளவு திறமைசாலியா?

"ஆழ்விக்கு  மனநிலை சரியில்லாதவங்களை சமாளிச்ச அனுபவம் இருக்கே... உங்களுக்கு மனநிலை சரியில்லைன்னு நீங்க மத்தவங்களை நம்ப வைக்க முயற்சி பண்ணிங்க. ஆனா உங்களை சுத்தி  நடந்த விஷயங் உங்களுக்கு ரியாக்ட் பண்ணாம உங்களால இருக்க முடியல."

பெருமூச்சு விட்டாள் நித்திலா.

"நீங்க இப்போ ஓய்வெடுத்துக்கோங்க. உங்க குழந்தையை திடமாவும்  ஆரோக்கியமாவும் ஆக்குவதற்கான மருந்தை நான் கொடுக்கிறேன்."

சரி என்று தலையசைத்துவிட்டு படுத்துக்கொண்டாள் நித்திலா. கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார் சுவாமிஜி.

"இப்போ அவங்க எப்படி இருக்காங்க?"

"இன்னும் மூணு, நாலு நாள் ட்ரீட்மெண்ட்ல அவங்க நல்லா ஆயிடுவாங்க." என்று ஆழ்வியை பார்த்து பொருளோடு புன்னகைத்தபடி கூறினார் சுவாமிஜி.

தன்னுடைய யூகம் சரி தான் என்பதை புரிந்து கொண்டாள் ஆழ்வி. ஏனென்றால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அவ்வளவு விரைவாக குணப்படுத்த முடியாது என்று அவளுக்கு தெரியும்.

"ரொம்ப நன்றி சுவாமிஜி." என்றார் பாட்டி

"அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். அவங்க வேலாவேலைக்கு மருந்தை சாப்பிடுறாங்கன்னு நிச்சயப்படுத்திகோங்க."

"மூணு நாள் டிரீட்மென்ட் போதுமா?" என்றான் இனியவன் வேண்டுமென்றே.

"பிரச்சனை அவ்வளவு தீவிரமா இல்ல. அவங்களை நம்ம எளிமையா குணப்படுத்திடலாம். கூட ரெண்டு மூணு நாள் ஆகலாம். அவ்வளவு தான். அதுக்கு மேல ஆகாது."

"நீங்க மூணு நாள் இங்க தங்க முடியுமா?" என்றான் இனியவன்.

"இல்ல, அவ்வளவு நாள் என்னால இங்க தங்க முடியாது. நாளைக்கு காலையில நான் கிளம்பியாகணும்"

"அப்படின்னா அக்காவை யார் பாத்துக்குவா?"

"ஆழ்வி தான் இருக்காங்களே!" என்றார் சுவாமிஜி. ஆழ்வியை பார்த்தவாறு. அவள் சரி என்று தலையசைத்தாள். 

"மருந்தை எப்படி கொடுக்கணும்னு நான் ஆழ்விக்கு சொல்றேன். அதை அவங்களுக்கு சரியா குடுங்க."

"சரிங்க, சுவாமிஜி" என்றாள் ஆழ்வி.

"அவங்க கிட்ட படிப்படியா முன்னேற்றத்தை பாக்கலாம்."

"ரொம்ப நன்றி." என்றான் இனியவன்.

"ஒரு பர்சனல் அட்வைஸ். அவங்க புருஷன் கிட்ட அவங்களுக்கு குணமான விஷயத்தை சொல்லாதீங்க."

"ஏன்?" என்று ஒரு புருவம் உயர்த்தினான் இனியவன்.

"அவங்களோட அடி மனசுல அவங்க புருஷனுக்கான வெறுப்பு ரொம்ப தீவிரமா இருக்கு. அவங்க அவர் மேல ரொம்ப கோவமா இருக்காங்க. அதனால அவங்க குணமாயிட்டாங்கன்னு அவர்கிட்ட சொல்லி, அவரை நிம்மதி அடைய செய்யாதிங்க. அது அவங்களோட கோபத்தை இன்னும் அதிகரிக்கும். அது அவங்களுக்கு நல்லது இல்ல. அதை அப்படியே விட்டுடுங்க."

யோசனையுடன் தலையசைத்தான் இனியவன்.

நித்திலாவுக்கு வழங்க வேண்டிய மருந்துகளை கொடுத்தார் சுவாமிஜி. அதை கவனமாய் பெற்றுக் கொண்டாள் ஆழ்வி.

சுவாமிஜி விருந்தினர் அறைக்குச் சென்றார்.

"பாட்டி, நீங்க போய் சாப்பிடுங்க. நான் அக்காவுக்கு மருந்து கொடுத்துட்டு வரேன்."

சரி என்று தலையசைத்துவிட்டு பாட்டியும் பார்கவியும் சாப்பிடச் சென்றார்கள். வழக்கம் போல் மருந்தை பாலில் கலந்து எடுத்துக்கொண்டு நித்திலாவின் அறைக்கு சென்றாள் ஆழ்வி. நித்திலா கட்டிலில் படுத்திருந்தாள். ஆழ்வியைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்தாள். ஆழ்வியுடன் யாரும் வரவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு,

"தேங்க்ஸ் ஆழ்வி... இன்னுகிட்ட என்னைப் பத்தி எதுவும் சொல்லாமல் இருந்ததுக்காக..." என்றாள்.

"நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க அக்கா. உங்களுக்கு பிடிக்காத எதையும் அவர் செய்ய மாட்டார். எந்த சூழ்நிலையிலயும் அவர் உங்க கூட இருப்பார். நீங்க பைத்தியமா நடிக்க வேண்டிய அவசியம் இல்ல கா. உங்க குடும்பம் உங்க கூட இருக்கு. அவங்க உங்களோட உணர்வுகளை நிச்சயம் புரிஞ்சிக்குவாங்க"

"குற்ற உணர்ச்சி என்னை கொல்லுது, ஆழ்வி. அவர் என்னை தனிப்பட்ட விதத்துல ஏமாத்தி இருந்தா, நான் இந்த அளவுக்கு நடந்திருக்க மாட்டேன். ஆனா அவர், அவருக்கு வாழ்க்கை கொடுத்த, அவருக்கு இந்த சமுதாயத்தில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த, அவரைப் பெருமையா உணர வச்ச  என் குடும்பத்தை ஏமாத்திட்டாரு. இன்னு எனக்கு ஒரு பெரிய மல்டி மில்லினர் சம்மந்தத்தை கொண்டு வந்தான். ஆனா நான் சித்திரவேலை விரும்பறேன்னு தெரிஞ்சதுக்கு பிறகு அவன் ஒரு வார்த்தை கூட சொல்லாம என் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான். சித்திரவேல் ஒரு அனாதை அப்படிங்கறத பத்தியோ, அவரோட ஸ்டேட்டஸ் பத்தியோ அவன் கவலையே படல. அவனுக்கு வேண்டியதெல்லாம் என்னோட சந்தோஷம் மட்டும் தான். அவன் என் சந்தோஷத்தை பத்தி மட்டும் தான் யோசிச்சான். ஆனால் சித்திரவேல்? அவனை பைத்தியமாக்கி வச்சிருந்தாரு... அவரோட நடிப்பு மூலமா எங்க எல்லாரையும் பைத்தியமாக்குனாரு. எங்க குடும்பத்துக்கு அவர் ஒரு சாபக்கேடு."

"விடுங்கக்கா. போனது போகட்டும். நம்மால அதை மாத்த முடியாது. உங்களுக்கு கடவுள் அம்மாவா இருக்க ஒரு அருமையான இரண்டாவது சந்தர்ப்பத்தை கொடுத்திருக்காரு. அதைப்பத்தி மட்டும் யோசிங்க. மத்த எதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காதீங்க. இனியவர் எல்லாத்தையும் பாத்துக்குவாரு."

ஆம் என்று தலையசைத்தபடி  ஆழ்வியை அன்பாய் அனைத்து கொண்டாள் நித்திலா. 

"தேங்க்யூ ஆழ்வி, எங்க வாழ்க்கையில வந்ததுக்காக உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்."

"ரெஸ்ட் எடுத்துக்கோங்க, கா."

நித்திலா படுத்துக்கொள்ள, மென்மையான இசையை ஒலிக்கச் செய்து அங்கிருந்து கிளம்பினாள் ஆழ்வி.

தங்கள் அறைக்கு வந்த ஆழ்வி, இனியவனை காணாமல் தேடினாள். அவள் பின்னால் திரும்பிப் பார்த்தபோது, சுவரில் சாய்ந்து கொண்டு அவளை தலை சாய்த்து பார்த்தபடி நின்றிருந்தான் இனியவன்.

"நீங்க இங்க என்ன செய்றீங்க?"

அவளுக்கு பதிலளிக்காமல்,

"அக்கா என்ன சொன்னாங்க?" என்றான்.

"அவங்க நல்லா இருக்காங்க."

"அவங்க எப்படி இருக்காங்கன்னு நான் கேட்கல. என்ன சொன்னாங்கன்னு கேட்டேன்."

"அவங்க என்ன சொல்ல முடியும்? ஒன்னும் இல்லையே...!" என்று சாதாரணமாக இருக்க முயன்றாள்.

அவள் அருகில் வந்து நின்ற இனியவன், அவள் முகத்தை படிக்க, அவள் தலை தாழ்த்திக் கொண்டாள்.

"அக்காவுக்கு பைத்தியம் இல்லன்னு எனக்கு தெரியும்."

அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் ஆழ்வி.

"நீ அக்காகிட்ட பேசிகிட்டு இருந்ததை நான் கேட்டேன்."

"நான்... வந்து..."

"சுவாமிஜிகிட்ட இருந்து வந்த ஃபோனை நான் அட்டென்ட் பண்ணப்போ உனக்கு அக்கா மேல டவுட் இருக்குன்னு எனக்கு தெரிஞ்சது."

அவன் சுவாமிஜியின் அழைப்பை ஏற்றானா? என்று அதிர்ந்தாள் ஆழ்வி.

"அந்த காலை அட்டென்ட் பண்ணது நீன்னு நெனச்சு, உன்னோட சந்தேகத்தை பத்தி அவர் சொல்லிட்டாரு."

"என்னை மன்னிச்சிடுங்க."

"அக்காக்கு ஒன்னும் இல்லைன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு அவ்வளவு தான் வேணும்."

"அவங்க குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாங்க"

"எல்லாம் சரியாயிடும்."

"அதை உங்ககிட்ட மறைச்சதுக்காக என்னை மன்னிச்சிடுங்க."

"பொம்பளைங்க கிட்ட எந்த ரகசியமும் தாங்காது அப்படிங்கிற விஷயத்தை நீ பொய்யாக்கி இருக்க." என்றான் புன்னகையுடன்.

"அக்காவை சங்கடப்படுத்த வேண்டாம்னு தான்..."

"அதை நான் புரிஞ்சுகிட்டேன்."

"நேத்து ராத்திரி நீ ரொம்ப சகஜமா இருந்ததை பார்த்தப்போ எனக்கு சந்தேகம் வந்தது. ஏன்னா அக்காவுக்கு உண்மையிலேயே பைத்தியம் பிடிச்சிருக்கும் போது, நீ அப்படி இருக்க மாட்டேன்னு நான் நெனச்சேன்."

"அக்காவோட நடவடிக்கையை வச்சு தான் அவங்களுக்கு பைத்தியம் இல்லைன்னு நான் கண்டுபிடிச்சேன். ஆனா அதே நடவடிக்கையாலயே நான் மாட்டிக்குவேன்னு எதிர்பார்க்கல." என்று அவள் கூற, வாய்விட்டு சிரித்தான் இனியவன்.

"எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சரியாயிடும்" என்றாள் ஆழ்வி.

"ம்ம்ம்..."

"அக்கா தான் எப்படி தேறி வரப் போறாங்கன்னு எனக்கு தெரியல."

"ஆழ்வி, நீ ஒரு விஷயத்தை புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. சில விஷயங்கள் நம்ம கையில இல்லாத மாதிரி இருக்கும். ஆனா அது நம்ம கையில தான் இருக்கும். பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்ல. அந்த பிரச்சினையை நம்ம எப்படி அணுகுறோம் அப்படிங்கிறது தான் பிரச்சனையே. அதை அக்கா புரிஞ்சுக்கணும். இந்த பிரச்சனையில இருந்து வெளியில வரணும்னு அக்கா நினைச்சா நிச்சயமா அவங்களால வர முடியும். அது அவங்க கைல தான் இருக்கு. நம்மால் எதுவும் செய்ய முடியாது"

"காலம் எல்லா காயத்தையும் ஆத்தும்."

"ஆனா தழும்பு?"

"அதெல்லாம் பழைய தத்துவம். இப்போ எல்லாத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி மாத்திக்கலாம்." என்று சிரித்தாள் ஆழ்வி.

"நீ என்ன சொல்ல வர?"

"அவங்களோட குழந்தையைப் பத்தித்தான் பேசுறேன். அந்த குழந்தை அவங்களுடைய எல்லா கவலையையும் மறக்க வைக்கும்."

அவள் கையில் முத்தமிட்ட அவன்,

"அப்படியே நடக்கட்டும்." என்றான்.

ஆழ்வி அவன் நெஞ்சில் சாய, அவளை தன் கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டான் இனியவன்.

தொடரும்...



Bạn đang đọc truyện trên: AzTruyen.Top