82 தண்டனை

82 தண்டனை

நித்திலாவை ஏற்றிக்கொண்டு காரை வேகமாக ஓட்டிச் சென்றான் சித்திரவேல். நித்திலா அவனை அடிக்கத் துவங்கினாள். காரின் ஸ்டியரிங் வீலை பிடித்து அதை நிறுத்த முனைந்தாள். அவளது கைகளை இடது கையில் பற்றிய படி வலது கையில் காரை ஓட்டினான் சித்திரவேல்.

"என்னை எங்க கூட்டிகிட்டு போறீங்க? எனக்கு உங்க முகத்தை பார்க்க கூட பிடிக்கல. என்னை போக விடுங்க" என்று கத்தினாள் நித்திலா.

"நித்தி தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு. நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்"

"வாயை மூடுங்க. நேசத்தை பத்தி எல்லாம் நீங்க பேசிக்காதிங்க. உங்க மனசுல இருக்குறதுக்கு பேரு நேசம் கிடையாது. அது வேற என்னவோ... எல்லாமே சுத்த போலி...!"

"என்னோட பாசம் போலின்னு மட்டும் சொல்லாத. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். நீ தான் என் வாழ்க்கை. நீ இல்லாம என்னால வாழ முடியாது. நீ இல்லாம எனக்கு சந்தோஷம் இல்ல. என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. என்கூட வந்துடு. நம்ம எங்கேயாவது போய் யார் தொந்தரவும் இல்லாம நிம்மதியா வாழலாம்."

"நான் எங்கயும் வரமாட்டேன். முதல்ல காரை நிறுத்துங்க." அவன் பிடியிலிருந்து தன் கைகளை விடுவிக்க முயன்றாள்.

ஆனால் அவனது பிடி உடும்பு பிடியாய் இருந்தது.

"என் கையை விடுங்க."

"நான் உன்னை எப்பவுமே விடமாட்டேன். நீ என்கூட தான் இருக்க போற. அதை யாராலயும் மாத்த முடியாது. நீ என் மனைவி. நீ என் கூட தான் இருக்கணும். நான் சொல்றதை நீ புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. நான் தப்பு செஞ்சதெல்லாம் உன் மேல இருந்த அன்பால தான். நீ என்னை விட்டு போனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்."

"நீங்க என்னை எப்பவோ கொன்னுட்டீங்க. நீங்க ஒரு கொலைகாரன். என் மனச கொன்னிங்க, என் உணர்வுகளை கொன்னீங்க. உங்ககிட்ட பேச எதுவுமே இல்ல. எனக்கு உங்க கூட இருக்க பிடிக்கல. இப்போ நீங்க என்னை போக விடலன்னா,  நான் தற்கொலை பண்ணிக்குவேன்."

அவளை திகிலுடன் ஏறிட்டான் சித்திரவேல். அவன் பிடித்திருந்த பிடி தளர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஸ்டியரிங் வீலை தன் போக்குக்கு நித்திலா திருப்பினாள்.  அந்த வண்டி அவர்களுக்கு இடதுபுறத்தில் திரும்பி, அங்கு கொட்டி வைக்கப்பட்ட கல்லின் மேல் மோதி நின்றது. சீட் பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்த நித்திலா, காரின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்து விழுந்தாள். அவள் உடலில் பல சிறு காயங்களும், தலையில் பலமான காயமும் ஏற்பட்டது. அடுத்த நொடி அவள் மயங்கினாள். சித்திரவேலும் ஸ்டியரிங் வீலில் தலையில் இடித்து கொண்டான். காரை விட்டு கீழே இறங்கி நித்திலாவை நோக்கி ஓடினான்.

"நித்தி!" என்று அவள் கன்னத்தை தட்டினான்.

அவளிடம் எந்த அசைவும் இல்லை. அவளது நாடியை பரிசோதித்து அது சீராக இருந்ததை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான். அவளை தூக்கிக்கொண்டு வந்து காரில் அமர வைத்து, சீட் பெல்ட்டால் அவளை பிணைத்து, அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்தான்.

இதற்கிடையில்...

சித்திரவேலின் காரை பின் தொடருமாறு ஓட்டுனருக்கு ஆணையிட்டார் பாட்டி. பிறகு இனியவனுக்கு ஃபோன் செய்ய, அந்த அழைப்பை அவன் உடனே ஏற்றான்.

"இன்னு..." என்ற அவரது பதற்றம் நிறைந்த குரலை கேட்டு,

"பாட்டி, என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனை இல்லயே?" என்றான் இனியவன்.

"நாங்க ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தோம். திடீர்னு ஒரு கார் எங்க முன்னாடி வந்து நின்னுது. மாப்பிள்ளை அதில் இருந்து இறங்கி நம்ம நித்திலாவை கட்டாயப்படுத்தி இழுத்துகிட்டு போயிட்டாரு. அவர் அவளை எங்க கூட்டிட்டு போறாருன்னு எங்களுக்கு ஒன்னும் புரியல. ரொம்ப பயமா இருக்கு."

இனியவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

"அவங்க எந்த பக்கம் போறாங்க?"

"அவங்க கேகே நகர் பக்கம்"

"சரி, நீங்க பதட்டப்படாதீங்க. ஸ்பீக்கரை ஆன் பண்ணுங்க."

பாட்டி ஸ்பீக்கரை ஆன் செய்தவுடன்,

"மனோகர்" என்றான் இனியவன்.

"சொல்லுங்க அண்ணா" என்றார் ஓட்டுநர்.

"காரை ஜாக்கிரதையா ஓட்டுங்க. நான் வந்துடறேன்"

"சரிங்க அண்ணா. நாங்க அவங்களை ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கோம். எங்க கண்ணுக்கு முன்னாடி தான் அவங்க இருக்காங்க. ஆனா அவங்க காரு தாறுமாறா ஓடுது. அவங்க சண்டை போடற மாதிரி தெரியுது." என்றான்.

அது இனியவனின் பதட்டத்தை மேலும் அதிகரிக்க செய்தது.

சரியாக அதே நேரம், காரில் இருந்து நித்திலா வெளியே வந்து விழுவதை அவர்கள் கண்டார்கள்.

"நித்திலா..." என்று அரற்றினார் பாட்டி.

அதை கேட்ட இனியவன்,

"என்ன ஆச்சு?" என்றான்.

"அவங்க காரு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. நம்ம அக்கா கிளாசை ஒடச்சிகிட்டு வெளியில வந்து விழுந்துட்டாங்க. அவங்க மயக்கமா இருக்கிற மாதிரி தெரியுது. சித்திரவேல் மறுபடியும் அவங்களை கார்ல தூக்கிகிட்டு போறாரு."

"அவங்களை ஹாஸ்பிடலுக்கு தான் கூட்டிகிட்டு போவான். அவன் எங்க போறான்னு என்னை டைரக்ட் பண்ணு."

"சரிங்க, அண்ணா"

"என்னங்க ஆச்சு?" என்றாள் ஆழ்வி.

"சித்திரவேல், அக்காவை கிட்நாப் பண்ணிட்டானாம். அவங்க கார் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு"

ஆழ்வியும் பார்கவியும் ஒரே நேரத்தில்,

"என்னது?" என்று அதிர்ச்சி அடைந்தார்கள்.

"நான் போயிட்டு வரேன்."

"நாங்களும் வறோம்." என்று அவர்கள் இருவரும் அவனை பின்தொடர்ந்தார்கள்.

அருகில் இருந்த ஒரு சிறிய மருத்துவமனையில் நித்திலாவை சேர்த்து விட்டு, கன்னீர் சிந்திய படி வெளியே காத்திருந்தான் சித்திரவேல்.

அங்கு வந்த பாட்டி சித்திரவேலின் சட்டை காலரை பற்றினார்.

"இப்போ உனக்கு சந்தோஷமா? எங்க எல்லாரையும் கொன்னு குவிக்கிற வரைக்கும் உனக்கு திருப்தியே ஏற்படாதா? உன்னை நம்பினதை தவிர நாங்க வேற என்ன தப்பு செஞ்சோம்? எதுக்காக எங்க வாழ்கையை இப்படி சீரழிச்சுக்கிட்டு இருக்க? எதுக்காக நித்திலாவை இப்படி சித்திரவதை பண்ற?"

"பாட்டி, என்னை நம்புங்க நான் நித்திலாவை ரொம்ப நேசிக்கிறேன். ப்ளீஸ் தயவு செஞ்சி அவளை என்கிட்ட கொடுத்துடுங்க. நான் உங்ககிட்ட வேற எதுவுமே கேட்க மாட்டேன். இந்த இடத்தை விட்டு  போய் எங்கையாவது நாங்க நிம்மதியா வாழ்ந்துகிறோம்."

"எங்க சந்தோஷத்தை கொன்ன பிறகு நாங்க அவளை உன்கிட்ட கொடுக்கணுமா?"

"அவ என் வைஃப்."

"ஆனா அவ உன்னை அடியோட வெறுக்கிறா."

"ஆனா, நான் அவளை ரொம்ப நேசிக்கிறேன்."

பாட்டி அவனுக்கு பதில் கூறும் முன்,

"அதனால?" என்ற கேள்வியை எழுப்பினான் அங்கு வந்த இனியவன்.

சித்திரவேல் சிறிதும் எதிர்பாராத விதத்தில் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டு,

"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அக்காவை கடத்திக்கிட்டு போவ?" என்றான்.

"நான் செஞ்ச தப்பையெல்லாம் தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க. நித்தியை மட்டும் என்கிட்ட இருந்து பிரிச்சிடாதீங்க. அவ தான் என் வாழ்க்கை. அவ தான் என் மூச்சு. அவ தான் எனக்கு எல்லாமே." என்று கெஞ்சினான் சித்திரவேல்.

"நான் உன்னை மன்னிக்கிறேனா இல்லயாங்கிறது விஷயமே இல்ல. ஆனா, நம்பிக்கையை கொன்ன உன்னை அக்கா நிச்சயம் மன்னிக்க மாட்டாங்க. நீ என்ன இழந்தேன்னு எப்பவாவது யோசிச்சு பாத்தியா? உனக்காகவே துடிச்சுக்கிட்டு இருந்த ஒரு உண்மையான இதயத்தை நீ உடைச்சிருக்க. மறுபடியும் அந்த இதயம் உன்னை எப்படி ஏத்துக்கும்?"

"அவ என்னோட வைஃப். அவளை திரும்ப கேட்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு?"

"சரி, தனக்கு என்ன வேணும்னு அக்காவே முடிவு பண்ணட்டும். நீ அவங்க வாழ்க்கையில மறுபடியும் வேணும்னு அவங்க சொன்னா, உன் மேல இருக்கிற எல்லா கேசையும் நான் வாபஸ் வாங்கிடுறேன். நீ எங்க போகணும்னு நினைக்கிறாயோ, அங்க, அக்காவை கூட்டிக்கிட்டு தாராளமா போ. நான் உன்னை தடுக்க மாட்டேன். ஆனா, அக்கா உன் கூட வாழ விரும்பலன்னா, நான் நிச்சயமா உன்னை பொருத்துக்க மாட்டேன்." என்றான். அது ஒரு எச்சரிக்கை தான்.

இனியவனின் அசைக்க முடியாத நம்பிக்கையை பார்த்த சித்திரவேல் அடியோடு ஆட்டம் கண்டு போனான். அவன் மீது இருந்த அத்தனை வழக்குகளையும் திரும்ப பெற கூட அவன் சித்தமாய் இருக்கிறான். அப்படி என்றால், நித்திலா அவன் மீது அந்த அளவிற்க்கா மன வருத்தத்தில் இருக்கிறாள். எது எப்படி இருந்த போதிலும், அவளை தன்னால் சமாதானப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

அழுதுகொண்டிருந்த பாட்டியை சமாதானப்படுத்த முயன்றாள் ஆழ்வி.

"பாட்டி, தயவுசெஞ்சு அழாதீங்க."

"நான் வேற என்ன செய்ய முடியும்? இவனோட பிள்ளைங்கற ஒரே காரணத்துக்காக தன் வயித்துல இருந்த கருவை அவ அழிக்க நினைச்சா. (என்றார் சித்திரவேலை சுட்டிக்காட்டி) ஆனா கடவுள் புண்ணியத்துல அவளோட ஃப்ரெண்டு அந்த குழந்தையை காப்பாத்திட்டா."

அதைக் கேட்ட சித்திரவேலின் முகம் பிரகாசம் அடைந்தது. குழந்தையை காப்பாற்றிவிட்டாரா? அப்படி என்றால் அவனது குழந்தை பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா? ஓடி சென்று பாட்டியின் முன் முழங்காலிட்டு அமர்ந்த அவன்,

"நீங்க என்ன சொன்னீங்க? என் குழந்தை நல்லா இருக்கா?"

"ஆமாம். நல்லா தான் இருக்கு. ஏன்னா, நித்திலா உன்னை மாதிரி இல்ல. அவ ரொம்ப நல்லவ. அதனால தான் கடவுள் அவளுக்கு இன்னொரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்காங்க. ஆனா நீ அவளை வலுக்கட்டாயமா இழுத்துகிட்டு போய், அவளை காரில் இருந்து கீழே விழ வச்சிட்ட.  இப்ப அந்த குழந்தையோட நிலைமை எப்படி இருக்கோ தெரியல..."

அதைக் கேட்டு சித்திரவேல் திகில் அடைந்தான். காரின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு நித்திலா கீழே விழுந்து விட்டாள். ஒருவேளை, அவனது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிட்டிருந்தால்? அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவனுக்கு குலை நடுங்கியது. குழந்தைக்கு மட்டும் ஏதாவது தவறாக நேர்ந்துவிட்டால், நிச்சயம் நித்திலா அவனை எப்பொழுதும் மன்னிக்க மாட்டாள். சுவரில் சாய்ந்த படி கவலையோடு நின்றிருந்த இனியவனை ஏறிட்டான் அவன். இதனால் தான் இனியவன் அவ்வளவு நம்பிக்கையோடு பேசினானா? நித்திலாவை கடத்த முயன்றதற்காக தன்னைத்தானே சபித்துக் கொண்டான் சித்திரவேல். அவள் கருவில் இன்னும் குழந்தை உயிருடன் இருக்கிறது என்ற உண்மை அவனுக்கு தெரிந்திருந்தால், அவளை எச்சரிக்கையாக அவன் கையாண்டிருப்பான். ஆனால் நடந்தது நடந்து விட்டது. அதை எப்படி சரி கட்டுவது என்பதை பற்றித்தான் அவன் யோசித்தாக வேண்டும். ஆனால் பிரச்சனையின் ஆழம், அதை அவ்வளவு சுலபமாய் சரி கட்டி விட கூடும் என்று தோன்றவில்லை. தனக்குத்தானே குழி தோண்டிக்கொண்டது போல் நினைத்தான் சித்திரவேல்.

அனைவரும் பதற்றத்தோடு காத்திருந்தார்கள். அப்பொழுது அறுவை சிகிச்சை அருகில் இருந்து மருத்துவர் வெளியே வந்தார். அனைவரும் ஓடி சென்று அவரை சூழ்ந்து கொண்டார்கள்.

"டாக்டர். அக்கா எப்படி இருக்காங்க?" என்றான் இனியவன்.

"குழந்தை எப்படி இருக்கு?" என்றான் சித்திரவேல்.

"நல்ல காலமா அவங்க வயித்துல எந்த அடியும் படாததுனால குழந்தை நல்லா இருக்கு." என்றவுடன் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

"ஆனா..." என்று இழுத்தார் மருத்துவர் தயக்கத்தோடு.

"ஆனா என்ன, டாக்டர்?" என்றான் இனியவன் பயத்துடன்.

"அவங்களோட மெண்டல் ஸ்டேட் சொல்ற மாதிரி இல்ல."

"என்ன சொல்றீங்க டாக்டர்?"

"ஆமாம். அவங்க தலையில அடிபட்டதனால அவங்க மனநிலை சரியில்ல"

அனைவரையும் விடவும் அதிகமாய் அதிர்ச்சி அடைந்தது சித்திரவேல் தான்.

"எங்க யாரையுமே அவங்களால அடையாளம் கண்டுக்க முடியாதா?" என்றான் இனியவன்.

"இப்போதைக்கு அவங்க நிலையை பத்தி எங்களால எதுவும் சொல்ல முடியாது. அவங்க குழந்தை மாதிரி பேசுறாங்க. கொஞ்ச நாளைக்கு அவங்க அப்சர்வேஷன்ல இருக்கணும். அப்போ தான் எங்களால் எதுவும் சொல்ல முடியும்."

"நித்திலா நிச்சயம் என்னை அடையாளம் கண்டுக்குவா. அவளை நான் பார்த்துக்கிறேன்." என்று அந்த அறைக்குள் ஓடினான் சித்திரவேல்.

அனைவரும் அவனை பின்தொடர்ந்து சென்றார்கள். தனது முந்தானையை பல்லில் கடித்துக்கொண்டு, காரணமே இல்லாமல் கலகலவென சிரித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் நித்திலா.

"நித்தி..." என்று சித்திரவேல் அழைத்தவுடன், சிரிப்பதை நிறுத்திவிட்டு அவனை ஏறிட்ட அவளது முகபாவம் மாறியது.

"கொலைகாரன்..." என்று ஓலமிட்டபடி கட்டிலை விட்டு கீழே இறங்கி, அந்த அறையின் மூளைக்கு ஓடிச் சென்று அமர்ந்து, தன் கால்களை கட்டிக்கொண்டு முகத்தை புதைத்துக் கொண்டாள்.

"கொலைகாரன்... அவன் ஒரு கொலைகாரன்... நீ போ இங்கிருந்து" என்று கத்தினாள்.

அதிர்ச்சியே வடிவாய் நின்றிருந்தான் சித்திரவேல். அவள் தன்னை கொலைகாரன் என்று அழைத்ததை கேட்டு  அவனது கண்கள் கட்டுப்பாடு இன்றி கண்ணீரை பொழிந்தன.

மற்றவர்கள் இயலாமையுடன் நின்றார்கள்.

"நீங்க தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுங்க." என்றார் மருத்துவர்.

உயிரற்ற உடல் போல் அந்த அறையை விட்டு வெளியேறிய சித்திரவேல், வெளியே வந்து தரையில் அமர்ந்து கதறி அழுதான்.

தொடரும்...











Bạn đang đọc truyện trên: AzTruyen.Top