8 வேண்டுதல்
8 வேண்டுதல்
நித்திலாவை ஏமாற்றத்துடன் ஏறிட்ட ஆழ்வி, கற்பகத்தை பார்த்து வெதும்பினாள். நித்திலா மேற்கொண்டு பேச முயன்ற போது, தன் கையை காட்டி அவளை தடுத்து நிறுத்திய ஆழ்வி,
"தயவுசெஞ்சி இதை இதோட நிறுத்துறீங்களா??" என்றாள் சீற்றதுடன்.
அந்த இடம் அமைதியாகி போனது.
"என்னை பத்தி நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? இது பேரம் பேசுற விஷயமா? நான் என்ன வியாபார சரக்கா, நீங்க விலை கொடுத்து வாங்க? உங்களோட இந்த திமிர் பிடிச்ச செய்கை சொல்லுது, நீங்க எவ்வளவு தலைகனம் பிடிச்ச ஆளுன்னு...! உங்க பணத் திமிரையெல்லாம் என்கிட்ட காட்டாதீங்க. உங்களால ஆழ்வியை விலை கொடுத்து வாங்க முடியாது"
"ஆழ்வி, நீ என்ன பேசுற? அவங்க ஒன்னும் நமக்கு பணத்தை சும்மா கொடுக்கல. அவங்க தம்பி உன்னை கெடுத்திருக்கான்"
"வாயை மூடுங்க. நான் ஏற்கனவே சொன்னேன், அவர் என்னை கெடுக்கல" சீறி விழுந்தாள்.
"அப்படியே இருந்தா தான் என்ன? நீ சொல்றதை யார் நம்புவா? உன்னை நம்பி யார் உன்னை கல்யாணம் பண்ணிக்குவா? அவன் உன்னை கெடுக்கலைன்னு சொன்னா, உன்னை யாராவது நம்புவாங்களா?"
"நம்பலைன்னா போகட்டும்... என்னை யாரும் கல்யாணம் பண்ணிக்கலைனா அதை பத்தி எனக்கு கவலையில்ல. ஆழ்வி வெறும் சதையால ஆன உடம்போ, போல்டும், நட்டும் போட்டு முடுக்குற மெஷினோ இல்ல. உணர்ச்சியும், உணர்வுகளும் இருக்கிற மனுஷி. நான் எப்படிப்பட்டவள்னு என்னோட நடத்தை தான் சொல்லும். என்னை ஒருத்தன் கெடுத்துட்டான் அப்படிங்கறதற்காக என்னோட புனித தன்மை கெட்டுடாது. நான் யாருன்னு என் கேரக்டர் சொல்லுமே தவிர நான் கடந்து வந்த மோசமான நிகழ்ச்சி சொல்லாது."
அவள் காதருகே குனிந்த கற்பகம், ரகசியமாய்,
"ஆழ்வி, இது நமக்கு கிடைச்சிருக்கிற நல்ல சான்ஸ். அதை கெடுத்துடாத. அவங்க நமக்கு ஒரு கோடி கொடுக்கிறேன்னு சொல்றாங்க"
நெருப்பை உமிழும் கண்களோடு அவரை ஏறிட்டாள் ஆழ்வி. அவளது மனம் ரணப்பட்டிருந்தது. அவளது அம்மா அவளை விற்க தயாராகி விட்டார். மகளின் வாழ்வை கெடுக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி அவருக்கு சிறிதும் இல்லை. தான் வசதியாய் வாழ வேண்டும் என்பதற்காக, பெற்ற மகளை நரகத்தில் தள்ள அவர் தயாராகி விட்டார்.
"உங்களுக்கு பொண்ணா பொறந்ததை விட, நான் அனாதையா இருந்திருக்கலாம்" என்று அவருக்கு மட்டும் கேட்கும் படி கூறினாள். ஆனால் அது அவரை பாதித்ததாய் தெரியவில்லை.
அவர் கையை உதறிவிட்டு அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது, அவளுக்கு முன்னாள் வந்து, அவள் வழியை மறைத்துக் கொண்டு நின்றாள் நித்திலா.
"இங்க பாருங்க. என் ஃபிரண்டோட அக்காவை மரியாதை குறைவா பேசுற மாதிரி என்னை வச்சிடாதீங்க" என்று எச்சரித்து, அவள் கையை தட்டி விட்டு அங்கிருந்து நடந்தாள் ஆழ்வி.
"ஆழ்வி, ப்ளீஸ் போகாதீங்க. நான் சொல்றதை தயவு செஞ்சி கேளுங்க" என்றாள் நித்திலா.
"நித்தி, நீ செய்யறது கொஞ்சம் கூட நியாயமே இல்ல. நீ இவ்வளவு சுயநலமா இருக்கக் கூடாது" என்றான் சித்திரவேல்.
"ஏன் கா இப்படி எல்லாம் செய்ற?" என்று ஆத்திரமும் அழுகையுமாய் கேட்டாள் பார்கவி.
அவர்களுக்கு பதில் கூறவில்லை நித்திலா.
"அக்கா, தயவு செஞ்சி இப்படி எல்லாம் செய்யாத" உரத்த குழலில் கத்தினாள் பார்கவி.
அமைதியாய் அவளை ஏறிட்டாள் நித்திலா.
"ஏற்கனவே அவ சுக்கு நூறா உடஞ்சி போயிருக்கா. நீ இன்னும் அவ வாழ்க்கையை ஏன் சிக்கலாக்குற? அண்ணனுக்கு பொண்டாட்டியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு உனக்கு தெரியாதா? என்னை அண்ணன்கிட்ட இருந்து அவ காப்பாத்தியிருக்கா. அவ மட்டும் இல்லன்னா, நான் இன்னைக்கு உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளுக்கு நம்ம நன்றியோட இருக்க வேண்டாமா? என்னை காப்பாத்தினது அவ்வளவு பெரிய குற்றம்னு அவளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையை கொடுக்குறியா? அவ இடத்துல நான் இருந்தா எனக்கும் இதைத் தான் செய்வியா?"
அவள் கேள்விகளுக்கு எந்த முக்கியத்துவமும் வழங்காத நித்திலா, தன் அறைக்கு சென்று கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டாள். அவர்கள் ஒருவரை ஒருவர் இயலாமையுடன் பார்த்துக் கொண்டார்கள்.
.........
இன்பவனத்தில் இருந்து வெளியே வந்த ஆழ்வி, ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டாள். அவளுக்கு பின்னால் ஓடி வந்த கற்பகமும் அதில் ஏறினார். அவர் ஏதோ சொல்ல முயல, அவரைப் கோபக்கனல் வீசும் பார்வை பார்த்தாள் ஆழ்வி. அவர் தன் வாயை மூடிக் கொண்டார்.
வீட்டுக்கு வந்ததும், கதவை சாத்தி தாழிட்ட அவர்,
"நீ ஏன் அவங்க சொன்னதுக்கு ஒத்துக்கலைன்னு எனக்கு தெரியும். நம்ம அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுக்க கூடாது... அப்போ தான் அவங்க நமக்கு ஒரு கோடி குடுப்பாங்க" என்றார் பேராசையுடன்.
தன் ஆள்காட்டி விரலை உயர்த்தி,
"என்ன அம்மா நீ? பணத்துக்காக என்ன வேணா செய்வியா? நீ என்ன செய்றன்னு தெரிஞ்சு தான் செய்றீயா?" என்றாள் மரியாதையை கைவிட்டு.
"நீ எதை பத்தி பேசுறேன்னு எனக்கு தெரியும். அவன் ஒரு பைத்தியம். ஆனா அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படுற? அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா, உனக்கு கோடி கோடியா பணம் கிடைக்கும். அதுக்கப்புறம் நீ உன் இஷ்டத்துக்கு உன் வாழ்க்கையை வாழு. எதுக்காக அந்த மென்டலை பத்தி நீ கவலைப்படணும்? யார் உன்னை கேள்வி கேக்க முடியும்?"
அவரை ஒரு சாக்கடை புழுவை போல் பார்த்தாள் ஆழ்வி.
"எங்க அப்பாவுக்கும் நீ இதையே தான் செஞ்சியா?"
"ஆழ்...வி..."
"கத்ததே... என் மேல கோவப்படற தகுதி உனக்கு இல்ல. கட்டுப்படுத்த முடியாத மனநோயாளின்னு தெரிஞ்சும், பெத்த மகளை கல்யாணம் பண்ணி கொடுக்க துணிஞ்ச நீ ஒரு சுயநலவாதி. நான் உன் மேல வச்ச நம்பிக்கையை நீ இழந்துட்ட..."
கற்பகம் பெருமூச்சுவிட்டார்.
"பரவாயில்ல... உன் மரியாதையால எனக்கு ஆகப்போறது ஒன்னுமில்ல. என் மரியாதையை இழந்து எனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கட்டுமே..." என்றார் சிறுதும் உறுத்தலின்றி.
ஆத்திரம் பொங்க அவரை பார்த்து பல்லை கடித்தாள் ஆழ்வி. அவளுக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. ஒருபுறம், அவளை விலைக்கு வாங்க நினைக்கிறாள் நித்திலா... மறுபுறம், அவளது அம்மா அவளை விற்க தயாராகி விட்டார். அவளுக்கு மரியாதை என்று ஏதாவது இருக்கிறதா? அவளது வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா? அவள் கைவிடப்பட்டவள். அவளுக்கென்று யாரும் இல்லை. அவளது உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடியவர் ஒருவரும் இல்லை. அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது... கோபம் வந்தது... அழுகை வந்தது...!
தன் அறையின் கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டு, தரையில் தொப்பன்று அமர்ந்து, கதவின் மீது சாய்ந்து கண்களை மூடினாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு,
அவள் அறையின் கதவை யாரோ தட்டினார்கள். இரண்டு முறை தட்டும் வரை அவள் கதவை திறக்கவில்லை. தொடர்ந்து கதவை தட்டும் சத்தம் கேட்டதால், அவளுக்கு எரிச்சல் ஏற்பட்டது. கதவை திறந்து கற்பகத்தின் மீது எறிந்து விழ அவள் முனைந்த போது, அங்கு நித்திலா நிற்பதை பார்த்து திகைத்தாள்.
"இங்க பாருங்க, நான் யார்கிட்டயும் பேச விரும்பல"
அவள் கோபத்தை பொருட்படுத்தாமல், உள்ளே நுழைந்து கதவை சாத்தி தாழிட்டாள் நித்திலா. அது ஆழ்வியின் கோபத்தை அதிகரித்தது.
"என்னை பத்தி நீங்க என்ன நினைச்சுகிட்டு..." என்று ஆரம்பித்த ஆழ்வி, வார்த்தை வராமல் தடுமாறினாள், நித்திலா மண்டியிட்டு அவள் கால்களை பற்றி கொண்டபோது.
"என் மேல உங்களுக்கு கோபம் இருந்தா, என்னை நாலு அடி கூட அடிச்சுக்கோங்க. ஆனா நான் சொல்றதை ஒரே ஒரு தடவை கேளுங்க" என்றாள் நித்திலா, அவள் கால்களை பிடித்தவாறு.
அவள் தன் கால்களைப் பற்றிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தாள் ஆழ்வி.
"என்னை தப்பா நினைக்காதீங்க, ஆழ்வி. நான் பேரம் பேச இங்க வரல. நான் உங்களை என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறது தலைக்கனத்தால இல்ல. நான் உங்க உணர்வுகளை அவமானப்படுத்தல. எனக்கு உங்க உதவி வேணும். உங்களால மட்டும் தான் எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும். தயவு செஞ்சி எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க. உங்களை விட்டா எங்களுக்கு வேற யாரும் இல்ல" தன் கரங்களை குவித்து மன்றாடினாள்.
ஒன்றும் புரியாமல் அவளை வெறித்து பார்த்துக் கொண்டு நின்றாள் ஆழ்வி. சற்று நேரத்திற்கு முன்பு வரை ரப்பர் பந்து போல் எதிரி கொண்டிருந்த அவள் பேச்சிழந்து நின்றாள்.
"நீங்க தயவு செஞ்சி எழுந்திருங்க" என்று அவள் தோள்களை பிடித்து தூக்கி விட்டாள் ஆழ்வி.
"எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க, ஆழ்வி"
"எப்படி? உங்க தம்பியை கல்யாணம் பண்ணிக்கிட்டா?" என்றாள் வேதனையுடன்.
"ஆமாம். அவன் ஆறு மாசமா இப்படித்தான் இருக்கான். நாங்க அவனை கவனிச்சுக்கிட்டு தான் இருக்கோம். அவனுக்கு பொம்பளைங்க மேல அட்ராக்ஷன் இருக்கு. அதனால தான் அன்னைக்கு அவன் உங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டான். ஆனா இன்னைக்கு, உங்களை பார்த்தப்போ அவன் அமைதியானான். பயத்தோட சுவத்துக்கு பின்னால ஒளிஞ்சிகிட்டான். அதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியல. ஆனா அவனை கட்டுப்படுத்துற சக்தி உங்களுக்கு இருக்கு. அதை இதுவரைக்கும் நான் வேற யார்கிட்டயும் பார்த்ததில்ல. உங்க அம்மாவை பார்த்தப்போ அவன் எப்படி கத்தி ஆர்ப்பாட்டம் செஞ்சானோ, அதைத்தான் அவன் வழக்கமாக செய்வான். ஆனா உங்களைப் பார்த்த உடனே, அவன் அமைதியாயிட்டான். அதை இதுக்கு முன்னாடி நான் எப்பவும் பார்த்ததே இல்ல"
அவள் கூறியது உண்மை தான். அதை ஆழ்வியும் கவனித்தாள்.
"நீங்க சூழ்நிலையை கையாண்ட விதமும், அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நேரத்துல கூட, என்ன செய்யணும்னு நீங்க வேகமா முடிவெடுத்த விதமும் தான் உங்களை என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு என்னை நினைக்க வச்சது. சத்தியமா அதுக்கு மேல வேற எதுவும் இல்ல. என்னுடைய எண்ணம் உங்களுக்கு சுயநலமா தெரியலாம். நான் உங்களை நெருப்பு மேல தான் நிறுத்துறேன். ஆனா, என் தம்பி மட்டும் குணமாயிட்டா, அவனை மாதிரி ஒரு அருமையான புருஷன் இருக்கமாட்டான். சத்தியமா சொல்றேன், நீங்க மட்டும் என் தம்பியை கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லா சூழ்நிலையிலும் நான் உங்களுக்கு துணையா இருப்பேன். அவன் குணமடைய தேவையான எல்லாத்தையும் செய்வேன். சத்தியமா நான் இதையெல்லாம் பணத் திமிர்ல கேட்கல. என் தம்பியோட வாழ்க்கையை உங்ககிட்ட பிச்சையா கேட்கிறேன். தன் தம்பி நல்லா இருக்கணும்னு நினைக்கிற ஒரு அக்காவோட வேண்டுதலா இதை எடுத்துக்கோங்க. எங்க குடும்பம் மொத்தமும், காலம் முழுக்க உங்களுக்கு நன்றி உள்ளவங்களா இருப்போம்"
தடுமாற்றத்துடன் அவளை பார்த்துக்கொண்டு நின்றாள் ஆழ்வி.
"நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியும். அவனோட சுயநினைவு திரும்ப வந்துட்டா, அவனுக்கு உங்களை ஞாபகம் இருக்காது. நீங்க அதைப் பத்தி கவலைப்பட வேண்டியதில்ல. என் தம்பி வல்லமை பொருந்தியவனா இருக்கலாம். ஆனா நன்றி கெட்டவன் இல்ல. அவன் தன் தங்கச்சியை தொட முயற்சி பண்ணான்னு தெரிஞ்சா, அவன் சுக்குநூறா உடைஞ்சிடுவான். அவனுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. நீங்க தான் அவனோட வாழ்க்கையை திரும்ப கொடுத்தீங்கன்னு தெரிஞ்சா, உங்களை அவன் நிச்சயம் கொண்டாடி திர்ப்பான்"
என்ன கூறுவது என்று புரியவில்லை ஆழ்விக்கு. அவள் இருக்கும் நிலை எப்படிப்பட்டது என்று அவளுக்கே புரியவில்லை.
"நான் உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன். நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலனாலும் உங்க அம்மாவுக்கு நான் பணம் கொடுக்கத்தான் போறேன். ஆனா தயவுசெஞ்சி நான் சொன்னதை மட்டும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இனியவன் உங்ககிட்ட நடந்துக்கிட்டதை பார்த்ததுக்கு பிறகு, எங்களோட நம்பிக்கை சுத்தமா போயிடுச்சு. ஆனா, இன்னைக்கு அவன் உங்களைப் பார்த்து ரியாக்ட் பண்ணதை பார்த்த பிறகு, எனக்கு மறுபடியும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கு. நீங்க மட்டும் என் வேண்டுதலை ஏத்துக்கிட்டா, நான் கடவுளுக்கு நன்றி சொல்லுவேன்" தன் முன் கைகூப்பி நின்ற நித்திலாவின் முன் சிலை போல் நின்றாள் ஆழ்வி.
"இது உங்க வாழ்க்கை. வேண்டிய அவகாசம் எடுத்துக்கோங்க. இந்த கல்யாணம் உங்களுக்கு கடுமையான காலகட்டமா தான் இருக்கும். ஆனா, என் தம்பி குணமாயிட்டா, நிச்சயம் நீங்க பட்ட கஷ்டத்துக்கு ஒர்த் இருக்கும். யாருக்கும் கிடைக்க முடியாத ஒரு நல்ல புருஷனா அவன் இருப்பான். முடிவை நான் உங்ககிட்டயே விட்டுடுறேன். நீங்க சரின்னு சொன்னா, நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம்"
கதவை திறந்தாள் நித்திலா. அமைதியாய் நின்ற ஆழ்வியை பார்த்து குழம்பினார் கற்பகம். ஒன்றும் கூறாமல் அங்கிருந்து நடந்தாள் நித்திலா.
"அவ என்ன சொன்னா? நமக்கு பணம் குடுக்க ஒத்துக்கிட்டளா?" என்றார் கற்பகம்.
அமைதியாய் நின்றாள் ஆழ்வி.
"எனக்கு பணம் கிடைக்க விட மாட்டியா?"
"அந்த நித்திலா உன்னை விட ஆயிரம் மடங்கு மேல்" கோபத்துடன் கூறிவிட்டு, கதவை படார் என்று சாத்தினாள் ஆழ்வி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top