79 நன்றி உணர்வு

79 நன்றி உணர்வு

விஷயத்தை கேட்ட இனியவன், பிடித்திருந்த கைப்பேசியை தன் காதில் இருந்து கீழே இறக்கினான், பார்கவிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருந்த ஆழ்வியை பார்த்தபடி. மெல்ல அவள் அருகில் வந்த இனியவன், அவள் தோளை தொட்டான்.

"ஆழ்வி, நம்ம உங்க வீட்டுக்கு போகணும்" என்றான்.

"எங்க வீட்டுக்கா. ஐ அம் சாரி. என்னால அங்க வர முடியாது. உங்க தங்கச்சி கல்யாணத்துக்கு உங்க மாமியாரை கூப்பிட நினைச்சா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா நான் அங்க வரமாட்டேன்" என்று மீண்டும் பார்கவியின் பக்கம் திரும்பினாள்.

"ஆழ்வி..." என்று அவளை அழைத்து மெல்ல கண்ணிமைத்தான் இனியவன்.

அவனது கண்களை படித்த ஆழ்வி,

"என்ன ஆச்சுங்க? ஏதாவது பிரச்சனையா?" என்றாள் சந்தேகத்தோடு.

ஆம் என்று தலையசைத்தான் இனியவன்.

"என்ன ஆச்சுங்க?" என்றாள் அவனது தோள்களை பற்றி கொண்டு.

"உங்க அம்மா..."

"எங்க அம்மா?" என்றாள் பொறுமை இழந்து.

"உங்க அம்மா இறந்துட்டாங்க"

ஆழ்வியின் கண்கள் அதிர்ச்சியில் விரிவடைந்தது. அதை கூறியது இனியவனாக இல்லாத பட்சத்தில் அவள் நிச்சயம் நம்பியிருக்க மாட்டாள்.

"உங்க அண்ணன் செல்வன் உங்க அம்மாவை கொலை பண்ணிட்டான்"

தன் ரத்த செல்களில் நடுக்கத்தை உணர்ந்தாள் ஆழ்வி. அவளது இதயம் முரசு போல் ஒலித்தது. தன் சுயநினைவை இழந்து அவள் மண்ணில் சரியப் போக, அவளை தன் பக்கம் இழுத்து பிடித்துக் கொண்ட தூயவன், அவளை தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் கிடைத்த, தண்ணீர் இருந்த குவளையை நோக்கி விரைந்தான் குரு. மற்றவரிடம் விஷயத்தை கூற வெளியே ஓடினாள் பார்கவி.

அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினான் இனியவன். எழுந்து அமர்ந்த ஆழ்வி, தன் கால்களை கட்டிக்கொண்டு தன் அம்மாவுக்காக கண்ணீர் சிந்தினாள். அவள் பக்கத்தில் அமர்ந்த இனியவன்,

"ஆழ்வி, இது ரொம்ப மோசமான சூழ்நிலைன்னு எனக்கு தெரியும். ஆனா, இதை நீ எதிர் கொண்டுதான் ஆகணும். தைரியமா இரு. நம்ம உங்க அம்மா வீட்டுக்கு போகணும். நம்ம அங்கு இருக்கணும்" என்றான்.

ஒன்றும் கூறாமல் அவனைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள் ஆழ்வி.

"போகலாமா?" என்று அவன் கேட்க, அழுதபடி தலையசைத்தாள்.

அவர்கள் தரைத்தளம் வந்த போது, பாட்டியும் நித்திலாவும் அவர்களுக்காக காத்திருந்தார்கள். சந்தேகம் இல்லாமல் கண்ணீர் சிந்திய படி தான். மேலும் அவர்கள் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்காமல், அங்கிருந்து நடந்தான் இனியவன். ஏனென்றால் அவர்களுக்கு நேரம் அளித்தால், அவர்கள் அழத் துவங்கி விடுவார்கள். பிறகு, அவர்களால் அவ்வளவு சுலபமாக அங்கிருந்து கிளம்ப முடியாது என்று அவனுக்கு தெரியும்.

......

தன் திருமணத்திற்கு பிறகு முதல்முறையாக தன் வீட்டிற்கு வந்தாள் ஆழ்வி. காரை விட்டு கீழே இறங்கிய அவள், தன் அண்ணன் கையில் விலங்கு பூட்டப்பட்டு போலீஸ் ஜிப்பில் அமர்ந்திருப்பதை கண்டாள். எதைப் பற்றியும் யோசிக்காமல் வீட்டிற்குள் நுழைந்தாள். தன் அம்மாவின் சந்திக்க விருப்பமே இல்லாமல் இருந்த அந்தப் பெண், திருமணத்திற்கு பிறகு முதன்முறையாய் தன் அம்மாவை காண உள்ளே நுழைந்தாள்.  துரதிஷ்டவசமாக அது தான் அவள் தன் அம்மாவை காணப்போகும் கடைசி முறையாகவும் அமைந்தது. அவளை பின்தொடர்ந்து சென்றான் இனியவன்.

"ஹலோ, யாரு நீங்க?" என்று அவளை தடுக்க முயன்றார்கள் அங்கிருந்த காவலர்கள்.

இனியவன் ஏதும் கூறுவதற்கு முன்பு, அவர்களை நோக்கி விரைந்த தமிழரசி,

"அவங்க தான் கற்பகத்தோட டாடர்" என்றார்.

"ஓஹோ, சரி சரி," என்றார் காவலர்.

ரத்த வெள்ளத்தில், கண்களை திறந்தபடி இறந்து கிடந்த தன் அம்மாவை கண்ட ஆழ்வியின் நெஞ்சம் பதறியது. அவரது கழுத்து, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியால் அறுபட்டு கிடந்தது. ஆழ்விக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. கற்பகத்திற்கு தடிமனான தங்க சங்கிலி அணிய வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. ஆனால் அப்படிப்பட்ட ஒரு சங்கிலியாலேயே தனது இறப்பு நிகழும் என்பதை அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

"இந்த கொலையை கண்ணால பார்த்தது யாரு?" என்றார் அங்கிருந்த ஆய்வாளர்.

"நான் தான் சார்" என்று முன்னாள் வந்து நின்றார் கற்பகத்தின் வேலைக்காரியான லட்சுமி.

"என்ன நடந்தது?"

"வழக்கம் போல அவங்க கிட்ட பணம் கேட்டு வந்தான் அவங்க பிள்ளை சொல்லின் செல்வன். வழக்கம் போலவே அவங்க அவனுக்கு பணம் கொடுக்க மாட்டேன்னு சொன்னாங்க. அவங்க பொய் சொல்றதா சொல்லி அவங்ககிட்ட சண்டை போட்டான். அவங்களுக்குள்ள வாக்குவாதம் ஏற்பட்டது. அது சூடேறிகிட்டே போச்சு. தன் கிட்ட பணம் இல்லன்னு கற்பகம் தீர்க்கமா சொன்னாங்க. ஆனா செல்வன் அதை நம்ப தயாரா இல்ல. அதனால அவங்க கழுத்துல போட்டு இருந்த சங்கிலியை தனக்கு கொடுக்கும்படி செல்வன் கேட்டான். அதைக் கேட்கக் கூடாதுன்னு அவங்க எச்சரிக்கை பண்ணாங்க. அவங்க பேச்சுக்கு எந்த மதிப்பும் கொடுக்காம, அந்த சங்கிலியை பிடிச்சி இழுக்க பாத்தான். தன் ரூமுக்கு போய் கதவை சாதிக்கலாம்னு அவங்க நினைச்சாங்க. அதுக்கு முன்னாடி, அவங்க கழுத்தில் இருந்த சங்கிலியை பிடிச்சி முழு பலத்தோட இழுத்தான். அந்த சங்கிலி ரொம்ப கனமா இருந்ததால அது அறுபடல. ஆனாலும் அவன் அவங்க கழுத்தை விடல. அப்ப தான் நான் பூரிக்கட்டையால அவன் தலையில அடிச்சேன். ஆனா, அதனால் எந்த பிரயோஜனமும் இருக்கல. அவங்க உயிர் போயிடுச்சி" என்று நடந்தவற்றை கூறி முடித்தார் லட்சுமி.

அவர் கூறியதை கேட்டபடி தன் அம்மாவையே வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள் ஆழுவி. அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொழிந்த வண்ணம் இருந்தது.

கற்பகம் விழுந்து கிடந்த நிலையை வரைந்த பிறகு, அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. சொல்லின் செல்வன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

தனது மாமியாரின் இறுதி சடங்கிற்கு வேண்டிய காரியங்களை செய்ய துவங்கினான் இனியவன்.

"இனியா, இங்க இருக்கிற வேலையை நீ பார்த்துக்கோ. நான் ஹாஸ்பிடலுக்கு போறேன்" என்று கிளம்பினான் குரு.

கற்பகத்தின் பிரேத பரிசோதனை முடிவுகளை பெற்று உடலை பெற்று திரும்புவதற்காக சென்றான் குரு .

நித்திலாவும் பார்கவியும் தமிழரசி கூறுவதை கேட்டு அவர் சொல்வதை செய்து கொண்டிருந்தார்கள். ஆழ்வியை யாரும் எதற்காகவும் தொந்தரவு செய்யவில்லை. அவள் எதிலும் ஈடுபடும் நிலையில் இல்லை

தமிழரசியிடம் வந்த பாட்டியும், நித்திலாவும்,

"மேடம், செல்வனை நம்ம பெயில்ல கொண்டு வரணும். அவன் தானே இறுதி சடங்கை செய்யணும்?" என்றாள் நித்திலா.

தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவர்களை ஏறிட்டாள் ஆழ்வி. தன் அம்மாவை கொன்ற அவன், அவருக்கு இறுதி சடங்கு செய்வதில் அவளுக்கு துளியும் விருப்பமில்லை. அவள் அதை வெளியில் சொல்வதற்கு முன்பு,

"தேவையில்ல, செல்வன் அதை செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல" என்றான் இனியவன்.

"இன்னு, அவன் தான் அவங்களோட ஒரே பிள்ளை. அவன் தான் இதை செய்யணும். அவங்க அம்மாவுக்கு கொல்லி போட அவன் தானே இருக்கான்?" என்றாள் நித்திலா.

"ஒருவேளை, கற்பகம் ஆண்ட்டிக்கு பிள்ளையே இல்லைனா வேற யாராவது தானே அதை செஞ்சி இருப்பாங்க? அவங்களுக்கு பிள்ளையே இல்லைன்னு நம்ம நினைச்சுக்கலாம்" என்றான்.

"அப்படின்னா இந்த வேலையை யார் செய்றது?"

"நான் செய்றேன். நான் அவங்களுக்கு மாப்பிள்ளைனா பிள்ளை மாதிரி தானே?" என்றான்.

நித்திலாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ஆழ்வி திகைத்து நின்றாள். அவளுக்கு கற்பகத்தின் மீது சொல்லவுனா கோபம் இருந்த போதும், அவளால் தன் மனதில் தன் அம்மாவிற்கான கோபத்தை வைத்துக் கொண்டிருக்க முடியவில்லை. இறந்த பிறகு அவரிடம் தன் கோபத்தைக் காட்டி என்ன ஆகிவிடப் போகிறது? அதேநேரம் இனியவன் அவர்கள் மீது காட்டிய அக்கறை, அவளை நெகிழச் செய்தது. தன் அண்ணன் தன் அம்மாவிற்கு கொள்ளியிடக் கூடாது என்று அவள் மனதில் இருந்ததை அவன் எப்படி தெரிந்து கொண்டான் என்பது அவளுக்கு புரியவில்லை.

"நீங்க கொல்லி போடுறதா இருந்தா, காரியம் முடியிற வரைக்கும் நீங்க இங்க தான் தங்கியாகணும்" என்றார் தமிழரசி.

"ஆமாம், நானும் ஆழ்வியும் எல்லா சடங்கும் முடியுற வரைக்கும் இங்க இருக்கோம்" என்றான்.

"நானும் ஆழ்வியோட இருக்கேன்" என்றாள் பார்கவி.

"அப்படின்னா நம்மளும் அவங்களோட இங்கேயே இருக்கலாம் பாட்டி" என்றாள் நித்திலா. அதற்கு பாட்டியும் ஒப்புக்கொண்டார்.

கற்பகத்தின் உடல், பிரேத பரிசோதனைக்கு பிறகு, கொண்டு வரப்பட்டது. ஒரு மகனாய் அவருக்கு செய்ய வேண்டிய கடமையை செய்தான் இனியவன்.

தன் அம்மாவின் உடலை, 'இது என்ன வாழ்க்கை?' என்பதைப் போல பார்த்துக் கொண்டு நின்றாள் ஆழ்வி. முதல் நாள் வரை தனக்கு பிடித்தபடி நகைகளை அணிந்து கொண்டு, அலட்டலாய் வளம் வந்த ஒரு பெண்மணி இன்று உயிரோடு இல்லை. என்ன ஒரு நிலையற்ற வாழ்க்கை! இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக்காக ஏன் இந்த மனிதர்கள் இப்படி அடித்துக் கொண்டு சாகிறார்களோ...! எவ்வளவு தலைக்கனம், எவ்வளவு அகங்காரம், ஆணவம், என்று வெறுப்போடு எண்ணினாள் ஆழ்வி.

கற்பகத்தின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தன் வாழ்க்கையை மாற்றி அமைத்த, ஆழ்வி என்னும் பொக்கிஷம் தனக்கு கிடைக்க காரணமாய் இருந்த கற்பகத்தின் உடலை ஒரு மகனாய் எரியூட்டினான் இனியவன். ஆம், கற்பகத்திற்கு அவன் தன் நன்றியை தெரிவிக்கும் முறை இது. அவர் எவ்வளவு பேராசைக்காரியாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். தன் வாழ்க்கை மலர காரணமாய் இருந்த அவருக்கு நன்றி செலுத்துவது தன் கடமையென்று எண்ணினான் இனியவன். ஆழ்வி இல்லாத ஒரு வாழ்வை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

ஆழ்வியின் வீட்டிற்கு மற்ற வேலை ஆட்களுடன் வந்த முத்து, வீட்டை கழுவி சுத்தப்படுத்தி அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டான். அங்கிருந்த அனைவருக்கும் உணவு சமைக்கவும் அவர்கள் தயாரானார்கள். ஆனால் ஒரு பிரசித்தி பெற்ற உணவகத்தில் இருந்து உணவை வரவழைத்து விட்டான் இனியவன்.

ஆழ்வியை இனியவன் சாப்பிட சொன்னபோது அவள் மறுக்கவில்லை. சம்பிரதாயத்திற்காக சிறிதளவு சாப்பிட்டுக் கொண்டாள். அவளை மேலும் சாப்பிடச் சொல்லி இனியவன் வற்புறுத்தவில்லை.

மறுநாள் வருவதாக கூறினார் தமிழரசி. சரி என்று தலையசைத்தான் இனியவன்.

"ஆழ்வியை பார்த்துக்கோங்க, இனியவன். அவ வருத்தத்தை வெளிப்படையாக காமிக்கல அப்படிங்கறதுக்காக அவ வருத்தமா இல்லன்னு அர்த்தமில்ல"

"அவளை நான் பார்த்துக்கிறேன்" என்றான் இனியவன்.

இனியவன் குடும்பத்து பெண்களை தன் அறையில் தங்க வைத்தாள் ஆழ்வி. ஏற்றி வைக்கப்பட்ட விளக்கில் எண்ணெய் குறைவாய் இருந்ததை பார்த்து அதில் எண்ணெயை ஊற்றி விட்டு தன் அம்மாவின் அறைக்கு வந்தாள் ஆழ்வி.

கட்டிலில் படித்தபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தான் இனியவன். கட்டிலின் மறுபுறத்தை ஆக்கிரமித்துக் கொண்டாள் ஆழ்வி.

அவளை தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டு,

"உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு எனக்கு தெரியல ஆழ்வி" என்றான் இனியவன்.

"சில விஷயங்களுக்கெல்லாம் ஆறுதலே கிடையாது. சில விஷயங்கள் ஈடு செய்ய முடியாதது. தங்கத்தால தன்னை அலங்கரிச்சுக்கணும்னு ஆசைப்பட்ட ஒருத்தரோட முடிவு, அந்த தங்கத்தாலயே நடந்திருக்கு. இதுக்கு நம்ம விதின்னு பேர் சொல்லாம, வேற என்ன சொல்றது?" என்றாள் ஆழ்வி.

"ரொம்ப யோசிக்காத ஆழ்வி. அதை விட்டுடு" என்றான் இனியவன்.

"பணத்துக்காக தான் அவங்க என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. கடைசியில, அந்த பணமே அவங்க வாழ்க்கை இழக்க காரணமாயிடுச்சு, பாத்திங்களா?"

"ஆனா எதுக்காக ஆன்ட்டி செல்வனுக்கு பணம் கொடுக்க மாட்டேன்னு சொன்னாங்க? அந்த பணத்தை வச்சுக்கிட்டு அவங்க என்ன செய்ய போறாங்க?"

"எனக்கும் அதைப்பத்தி ஒன்னும் தெரியல. அந்த பணம் என்ன ஆச்சுன்னு நாளைக்கு நம்ம தேடி பார்க்கலாம்" என்றாள். 

"தேவையில்ல விடு. எல்லாமே முடிஞ்சு போச்சு. இனிமே அந்த பணம் கிடைச்சு என்ன ஆகப்போகுது?" என்றான் இனியவன்.

அவனுக்கு பதில் கூறாமல் அமைதியாய் இருந்தாள் ஆழ்வி. அதற்காக அவள் அந்த பணத்தை பற்றி யோசிக்காமல் இருந்தாள் என்று அர்த்தம் இல்லை. அந்த பணத்தை அவள் எப்படியும் தேடி கண்டுபிடித்தாக வேண்டும். அதன் மூலம் அவளுக்கு ஆக வேண்டிய வேலை இருந்தது.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top