78 அதிர்ச்சி செய்தி
78 அதிர்ச்சி செய்தி
அழைப்பை துண்டித்த இனியவன்,
"சித்திரவேலுக்கு அரெஸ்ட் வாரண்ட் இஸ்ஸு ஆகியிருக்கு" என்றான்.
"அவருக்கு அரெஸ்ட் வாரன்டா? ஆனா ஏன்?"
"அந்த மோசமான மருந்துல அவனுக்கும் பங்கு இருக்குன்னு ரீனா ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டாளாம்"
"அப்படின்னா போலீஸ் நிச்சயம் அவரை அரெஸ்ட் பண்ணுவாங்க"
"பன்னி தானே ஆகணும்?"
"அக்கா ரொம்ப பாவம். எப்படி தான் இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர போறாங்களோ"
"அவங்க அதை வெளிப்படையா காட்டிக்காம இருக்கிறதை பார்க்க எனக்கு ஆச்சரியமா இருக்கு"
"அவங்களுக்கு குற்ற உணர்ச்சி. அவங்களால தான் நீங்க கஷ்டப்பட்டீங்கன்னு அவங்க நினைக்கிறாங்க"
"அது உண்மை தானே?"
பெருமூச்சு விட்ட ஆழ்வி,
"கடவுள் புண்ணியத்துல கவிக்காவது ஒரு நல்ல மனுஷன் கிடைச்சாரு. இல்ல?" என்றாள் ஆழ்வி.
"நீ யாரை பத்தி பேசுற?" என்று அவன் கேட்க அவனைப் பார்த்து முறைத்தாள் ஆழ்வி.
"விளையாடுறது நிறுத்துங்க"
"நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்"
"நான் குரு அண்ணனை பத்தி பேசுறேன்னு உங்களுக்கு தெரியாதா?"
"ஓஹோ... நீ குருவைத் தான் நல்லவன்னு சொன்னியா?"
"ஏன் உங்களுக்கு தெரியாதா?"
"ஆரம்பத்துல நாங்க எல்லாரும் சித்திரவேலை கூட ரொம்ப நல்லவன்னு தான் நினைச்சோம். ஆனா நமக்கு கிடச்சது என்ன? இப்போ என்ன நடந்துகிட்டு இருக்கு? அவன் நம்ம எல்லாரையும் முட்டாள் ஆக்கிட்டான்" எல்லாமே நடிப்பு. "
"ஆனா இப்போ எதுக்காக நீங்க சித்திரவேலை பத்தி பேசிகிட்டு இருக்கீங்க?"
"நான் என்ன பேசணும்னு நினைக்கிற?"
"உங்களுக்கு அண்ணனை பிடிக்கலையா?"
"எனக்கு பிடிக்குதா இல்லையாங்கிறது விஷயம் இல்ல. இது என் தங்கச்சியோட எதிர்காலம் பத்தின விஷயம்"
"குரு அண்ணன் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"
"அவனுக்கு என்கிட்ட வந்து பேசக்கூட தைரியம் இல்லனா, நான் எப்படி அவனை நம்புறது?"
"இந்த விஷயத்தை உங்ககிட்ட நான் முதல்ல பேசணும்னு அவங்க நினைச்சாங்க"
"வாழ்க்கை பூரா நீ அவங்களுக்காக நிக்க போறியா? அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறதா இருந்தா, அவங்க தான் அவங்களுக்காக பேசணும். அதை மத்தவங்க செய்யணும்னு அவங்க எப்படி எதிர்பார்க்க முடியும்?"
"குரு அண்ணனுடைய பயத்துக்கு காரணம், நீங்க இனியவன் பாலகுமாரன்...!"
"அவன் காதலிக்கிறது இனியவன் பாலகுமாரனுடைய தங்கச்சியை தானே? அப்போ அவன் இனியவன் பாலகுமாரனை ஃபேஸ் பண்ணி தானே ஆகணும்"
ஆழ்வி உதடு சுழித்தாள்.
"ஆழ்வி, இந்த விஷயத்துல நீ தலையிட வேண்டாம்னு நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தை அவங்களே சமாளிக்கட்டும். அப்ப தானே அவங்களோட காதல் எந்த அளவுக்கு ஆழமானதுன்னு நம்மால தெரிஞ்சுக்க முடியும்?"
"பாவம் அவங்க. நிச்சயம் அவங்களுக்கு பதட்டமா இருக்கும்"
"யாருக்கும் தெரியாம நீ எனக்கு ட்ரீட்மென்ட் குடுத்தியே, அதைவிடவா அவங்களுக்கு பதட்டமா இருந்திட போகுது?"
"அது அவசியம்"
"எல்லாமே அவசியம் தான். நமக்கு நெருக்கமானவங்களை நேசிக்கிறது, அவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்றது, அவங்க பேசுறதை கேக்குறது, எல்லாமே அவசியம் தான். இதெல்லாம் ரொம்ப சாதாரணமான விஷயம் தான். ஆனா நமக்கு பிடிச்சவங்களுக்கு டைம் கொடுக்காம நம்ம இக்னோர் பண்ணிட்டோம்னா, அங்க தான் பிரச்சனை ஆரம்பிக்கிது. அதனால, எல்லாமே நம்ம வாழ்க்கைக்கு தேவை தான். ஆனா, நீ எனக்காக செஞ்சது தேவையே இல்லாதது. அது முழுக்க முழுக்க உன்னை மட்டுமே சார்ந்த விஷயம். ஆனாலும் நீ என்னை காப்பாத்தின. உன் அன்பு தான் என்னை காப்பாத்துச்சு"
"இல்ல, அந்த மொத்த கிரெடிடையும் நான் எடுத்துக்க முடியாது. என் டிரீட்மெண்ட்டால உங்க நினைவு திரும்பல. நாங்க உங்களை ராமநாதபுரத்துக்கு கூட்டிகிட்டு போகலாம்ன்னு முடிவு பண்ணி இருந்தோம். அதுக்கு முதல் நாள் தான் நீங்க படிக்கட்டிலிருந்து கீழே விழுந்து உங்க தலையில அடிபட்டுடுச்சு" என்று கூறி தயக்கத்துடன் நிறுத்தினாள்.
"சொல்ல வந்தத சொல்லி முடி"
"நீங்க படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததா சொன்னப்போ, சுவாமிஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது"
"யாராவது என்னை தள்ளி இருக்கலாம்னு சொன்னாரா?"
ஆம் என்று தலையசைத்தாள்.
"நான் மட்டும் தாக்க படாம இருந்திருந்தா, உன்னை எப்படியும் தேடி கண்டுபிடிச்சிருப்பேன் தெரியுமா"
"நிஜமாவா?"
"ஆமாம். நீ யாருன்னு எனக்கு தெரியாது. நீ எங்க இருக்கேன் தெரியாது. ஆனாலும் உன்னை நான் தேடி கண்டுபிடிக்க நினைச்சேன். எப்படி இருந்தாலும் கண்டுபிடிச்சிருப்பேன். ஏன்னா, உன்னை மிஸ் பண்ண கூடாதுன்னு நினைச்சேன். அதுக்காக என்ன வேணாலும் செய்யலாம்னு நினைத்தேன். அதையே தான் நான் குரு கிட்டையும் கவிக்கிடையும் எதிர்பாக்குறேன். நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியுதா?"
ஆம் என்று தலையசைத்தாள் ஆழ்வி.
"அவங்களுக்கு தேவையானதை அவங்களே போராடி அடையட்டும். நீ ஏற்கனவே கவிக்கு தேவையான அளவுக்கு செஞ்சிட்ட. அவ தனக்காக ஃபைட் பண்ணட்டும்... அட்லீஸ்ட் இப்பவாவது..." என்று ஆழமான பொருளோடு கூறிய அவன், அவள் தோளை சுற்றி வளைத்துக் கொண்டு புன்னகைத்தான்.
"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா?"
"கேளு"
"உண்மையிலேயே உங்களுக்கு என்னை பார்த்த உடனே பிடிச்சிதா?"
இதழ் ஓர புன்னகை சிந்தினான் இனியவன்.
"பார்த்த உடனே பிடிக்கிற அளவுக்கு எல்லாம் நான் ஒன்னும் அழகில்ல" என்று அவள் கூற,
"அப்படியா? நீ அழகில்லையா?" என்றான் ஆச்சரியமாக.
"நீங்க நிறைய அழகான பொண்ணுங்களை பாத்திருப்பீங்க. ரீனா சர்மா கூட ரொம்ப அழகா தான் இருக்காங்க"
"என்னது? ரீனாவா?" என்று களுக்கென்று சிரித்தான்.
"நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைனாலும் அவங்க அழகு தான்"
"இப்போ நீ என்ன சொல்ல வர?"
"உங்களுக்கு ஏன் என்னை பிடிச்சது?"
"உன்னை பாத்த பார்த்த உடனே என் மனசுல ஏதோ புதுசா உணர்ந்தேன். ஒருவேளை, நான் எதிர்பாக்காத ஒன்னை நீ செஞ்சதால இருக்கலாம். நீ அந்த பழக்காரருக்கு உதவி செஞ்ச விதம் என்னை ரொம்பவே கவர்ந்தது. கையை விரிச்சுக்கிட்டு நடுரோட்ல நீ நின்னதை பார்க்கும்போது ரொம்ப க்யூட்டா இருந்தது"
அதைக் கேட்ட ஆழ்வியின் கன்னம் சிவந்தது.
"நம்ம ரெண்டு பேருக்கும் ஏதோ ஒரு முற்பிறவி தொடர்பு இருக்குன்னு நினைக்கிறேன்"
"எனக்கு மறுபிறப்புல எல்லாம் நம்பிக்கை இல்ல. ஒருவேளை நம்ம சந்திப்பு அப்படித்தான் நிகழ்ந்ததுன்னா, அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்றான் இனியவன்.
"நம்ம உறவு எப்படி இருக்குமோன்னு நினச்சி நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா?" என்றாள் அவன் நெஞ்சில் சாய்ந்த படி.
"எனக்கு தெரியும்" என்றான் அவள் முகத்தை பார்த்தபடி.
"நான் எதுக்காக பயந்தேன் தெரியுமா?"
"எதுக்காக?"
"உங்கள மாதிரி இவ்வளவு அழகான ஒருத்தர் சிங்கிளா இருக்க முடியாதுன்னு நெனச்சேன்"
பளிச்சென்று சிரித்தான். இனியவன்
"நீங்க ரொம்ப ஹாண்ட்ஸாமா இருக்கீங்க"
"அதை பல பொண்ணுங்க சொல்லி கேட்டிருக்கேன். ஆனா உன்கிட்ட இருந்து கேட்கும் போது கிக்கா இருக்கு"
சுவரில் மாட்டப்பட்டிருந்த அவனது புகைப்படத்தை பார்த்த ஆழ்வி,
"நான் எப்பவும் இந்த ஃபோட்டோ கூட தான் பேசிக்கிட்டு இருப்பேன்" என்றாள்.
ஆர்வத்தோடு புருவம் உயர்த்தினான் இனியவன்.
"இந்த ஃபோட்டோவை நான் முதல் தடவை பார்க்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. ஏன்னா, நீங்க இவ்வளவு ஹான்ஸமாய் இருப்பீங்கன்னு அதுவரைக்கும் எனக்கு தெரியாது. அப்போ தான் உங்களை பார்க்க ரொம்ப பாவமா ஆயிடுச்சு" என்றாள் அவன் புகைப்படத்தை பார்த்தபடி.
நிலையான புன்னகையோடு அவளை பார்த்து புன்னகைத்தபடி இருந்தான் இனியவன். தன்னை இவ்வளவு ஆழமாய் நேசிக்கும் மனைவி கிடைத்திருக்கிறாள் என்று பெருமை கொண்டான்.
அவனை நோக்கி திரும்பிய ஆழ்வி, அவன் கண்களை சந்தித்தவாறு அவன் கண்ணம் தொட்டாள். மெல்ல தன் கண்ணின் கண்களை இமைத்தான் இனியவன். அவள் கையின் மீது தன் கையை வைத்து, அவள் உள்ளங்கையில் முத்தமிட்டான். அவன் கண்களில் இருந்து தன் கண்களை அவன் உதட்டுக்கு இறக்கிய ஆழ்வி, தன் உதடுகளை அவன் உதட்டின் மீது ஒற்றி எடுத்தாள். அரை மயக்க நிலையில் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் இனியவன். அவனை அணைத்துக் கொண்டு அவன் கழுத்தில் தன் முகம் புதைத்தாள் ஆழ்வி. அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்ட இனியவன்,
"ஆழ்வி..." என்றான்.
"ம்ம்ம்..."
"ம்ம்ம்...?" என்ற அவனது கேள்வி அவனது எதிர்பார்ப்பை தாங்கி நின்றது.
தலையை உயர்த்தி அவனை பார்த்தாள் ஆழ்வி. அவள் முகத்தில் அவனை மறுப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவள் கிட்டத்தட்ட பார்கவியையும் அவள் இருந்த நிலையையும் மறந்தே போனாள்.
ஆழ்விக்காக ஒரு மணி நேரமாக காத்திருந்தாள் பார்கவி. அவள் தன் அறையை விட்டு வெளியே வராமல் இருந்ததை பார்த்த பார்கவி தன் பொறுமையை இழந்து, வரவேற்பறையில் இங்கும் அங்கும் உலவி கொண்டிருந்தாள். அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்க, ஓடிச்சென்று கதவைத் திறந்தாள். அங்கு குரு நின்று இருந்தான். முதல் முறையாய், குருவை பார்த்த அவள் மனதில் மகிழ்ச்சிக்கு பதில் பதற்றம் தோன்றியது.
இனியவனுக்கு ஃபோன் செய்தபடி உள்ளே நுழைந்தான் குரு. அந்த அழைப்பை இனியவன் ஏற்கவில்லை. ஏனென்றால் அவனது கைபேசி சைலன்ட் மோடில் இருந்தது. ஆழ்வியுடன் இருக்கும் போது தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவன் அதை சைலன்ட் மோடுக்கு மாற்றி இருந்தான்.
கைபேசியை காதில் இருந்து கீழே இறக்கிய குரு,
"இனியா எங்க?" என்றான்.
"அவர் ரூம்ல இருக்காரு."
"ஆழ்வி எங்க?"
"அவளும் அண்ணனோட தான் இருக்கா. நம்மள பத்தி பேசுறேன்னு அவ ரூமுக்கு போய் ஒரு மணி நேரமாச்சு. இன்னும் வெளியில வரல" என்றாள் கவலையோடு.
குரு பதற்றம் அடைந்தான். நேராக இனியவனின் அறையை நோக்கி சென்றான். பார்கவி அவனை பின் தொடராமல் தயக்கத்தோடு நிற்க, அவளை ஒரு கூரிய பார்வை பார்த்தான் குரு. முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு அவனுடன் நடந்தாள்.
குளியல் அறையில் இருந்து வெளியே வந்த இனியவன், ஆழ்வி தன் கூந்தலை கிளிப் செய்து கொண்டிருப்பதை பார்த்து,
"அந்த கிளிப்பை காட்டி என்னை பயமுறுத்தாத ஆழ்வி" என்றான் கிண்டலாய்.
அதைக்கேட்டு சிரித்த ஆழ்வி, ஏதோ சொல்ல முயன்ற போது, அவர்கள் அறையின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அலமாரியில் இருந்து ஒரு சட்டையை எடுத்து அணிந்து கொண்டான்.
ஆழ்வி கதவை திறந்து, குருவுடன் பார்கவி நின்றிருப்பதை கண்டாள். அவர்களை எதிர்பார்க்காத அவள், திகைக்கத்தான் செய்தாள். அதே நிலையில் இருந்த இனியவனை நோக்கி திரும்பினாள் ஆழ்வி.
"உள்ள வா, குரு"
குரு உள்ளே நுழைந்தான்.
"சிபியை பத்தி விசாரிச்சிட்டியா?"
"இன்னும் ஆரம்பிக்கல"
"ஏன்?"
"அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"
"எதைப்பத்தி?"
"பார்கவியை பத்தி... என்னைப்பத்தி... எங்களைப்பத்தி..."
"சொல்லு" என்று கைகளை கட்டிக் கொண்டான்.
நீண்ட மூச்சை இழுத்து விட்டு,
"நானும் பார்கவியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம். கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறோம்" என்றான்.
மென்று விழுங்கியபடி நின்றிருந்த பார்கவியை பார்த்த இனியவன்,
"அப்படியா?" என்றான்.
ஆம் என்று அவள் தலையசைத்தாள்.
"நான் ஒத்துக்கலைன்னா என்ன செய்வ? இவனோட ஓடிப் போயிடுவியா?"
"இல்ல ண்ணா நிச்சயமா மாட்டேன்"
"அப்புறம் வேற என்ன செய்வ?"
அவனை நோக்கி ஓடிவந்த பார்கவி, அவன் கையைப் பிடித்துக் கொண்டு,
"நீ எப்படியும் ஒத்துக்குவேன்னு நெனச்சேன். ப்ளீஸ் அண்ணா" என்றாள்.
"அப்படின்னா, நீ நம்ம குடும்பத்தை பத்தி யோசிக்கல. குருவை தான் நினைச்சுகிட்டு இருந்த. அப்படித்தானே?"
"அண்ணா உங்க யாரையும் கஷ்டப்படுத்தணும்னு நான் இப்படி செய்யல. எனக்கு குருவை ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா உனக்கு பிடிச்சிருந்தா தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்"
"உண்மையிலேயே இந்த பைத்தியக்காரியை நீ கல்யாணம் பண்ணிக்கணுமா?" என்றான் குருவை பார்த்த இனியவன்.
அதைக் கேட்டு சிரித்த ஆழ்வி,
"போதும். அவங்களை ரொம்ப வெறுப்பேத்தாதீங்க. நீங்க நினச்ச மாதிரியே அவங்க தான் நேரடியா உங்ககிட்ட வந்து பேசிட்டாங்கல்ல? அப்புறம் என்ன வேணும் உங்களுக்கு?" என்றாள்.
"நெஜமாவா அண்ணா? உனக்கு இதுல சம்மதமா?"
"அதுல என்ன சந்தேகம்? நீ எது செஞ்சாலும் அதுல முழு நம்பிக்கை வை. நீ சந்தேகப்பட்டா, நான் எடுத்த முடிவு சரியா இல்லையான்னு எனக்கும் சந்தேகம் வரும்" என்றான்.
இரண்டு நீண்ட அடிகளை எடுத்து வைத்த குரு, அவனை அணைத்துக் கொண்டு,
"தேங்க்ஸ், இனியா" என்றான்.
அவனை பின்னால் இழுத்த இனியவன்,
"நீ என்ன நெனச்ச? நான் ஒத்துக்க மாட்டேன்னு நெனச்சியா? பைத்தியக்காரா, என் தங்கச்சிக்கு உன்ன விட ஒரு நல்லவன் கிடைச்சிடுவானா?" என்றான் குரு, நிம்மதி பெருமூச்சு விட்டு.
"தேங்க்யூ சோ மச் அண்ணா" என்று அவன் தோளில் சாய்ந்தாள் பார்கவி.
"நான் ஒத்துக்கலைன்னா நீ இவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?" என்றான் கிண்டலாய்.
"ஆமாம், நான் உன் சம்மதத்தோட தான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆனா, குருவைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்"
அதைக் கேட்டு வியப்போடு புருவம் உயர்த்தினான் இனியவன்.
"ஐ அம் சாரி இனியா, நான் உனக்கு கால் பண்ணேன். நீ என் காலை எடுக்கல"
"ஓஹோ..."
தன் கைபேசி சைலன்ட் மோடியில் இருந்ததை இனியவன் கூறவில்லை. தன் கைபேசியை எடுத்து அதை பார்த்தபோது அதில் தமிழரசியிடம் இருந்து மூன்று மிஸ்டு கால்கள் இருந்தன. எதற்காக அவர் அவனுக்கு ஃபோன் செய்தார் என்று அவனுக்கு புரியவில்லை. நேரத்தை கடத்தாமல் உடனே தமிழரசிக்கு ஃபோன் செய்தான். அவன் எதுவும் கேட்கும் முன்,
"இனியவன், தயவு செஞ்சு ஆழ்வியை கூட்டிக்கிட்டு உடனே அவ வீட்டுக்கு வாங்க" என்றார்.
"என்ன ஆச்சு. ஏதாவது பிரச்சனையா?" என்றான் இனியவன்.
அவர் கூறிய பதில் அவனை அதிர்ச்சி அடையச் செய்தது.
"அவ அண்ணன் சொல்லின் செல்வன் அவங்க அம்மா கற்பகத்தை கொலை பண்ணிட்டான்" என்றார்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top