77 கைது ஆணை
77 கைது ஆணை
இனியவனின் மனதில் நிம்மதி பிறந்தது. சித்திரவேல் மற்றும் நித்திலாவின் விஷயத்தை தவிர மற்ற அனைத்தும் நல்லபடியாகவே முடிந்தது. நித்திலாவின் விஷயத்தில் அவன் இன்னும் கூட பெரிய பிரச்சனையை எதிர்பார்த்து இருந்தான். நல்ல வேலை, அதை நித்திலாவே கண்டுபிடித்து விட்டதால், அவன் எதிர்பார்த்தது போல் ஒன்றும் நடக்கவில்லை. குழந்தையும் பாதுகாப்பாக இருக்கிறது. சித்திரவேல் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். மருத்துவன் கொல்லப்பட்டு விட்டான். இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விட்டார்கள். சித்திரவேல் ஒருவன் தான் வெளியில் உலவி கொண்டிருக்கிறான். அவனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவன் அனைவரையும் விடவும் ஆபத்தானவன். அவன் பிடிப்படும் வரை அவன் குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் பிரச்சனை தான். அவனுக்கு அது தெரியும். அவன் நித்திலாவை பார்க்க வேண்டும் என்று எண்ணினான். அதனால் அவள் அறைக்கு வந்தான்.
அப்பொழுது நித்திலாவுக்கு பழச்சாறு கொண்டு சென்றாள் ஆழ்வி. இனியவனை பார்த்தவுடன் தன் உதட்டை சுழித்துக்கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அதை பார்த்து இனியவன் புன்னகை புரிந்தான்.
நித்திலா பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட ஆழ்வி, உள்ளே நுழையாமல் வெளியே நின்றாள். நித்திலா பாட்டியின் மடியில் படுத்து அழுது கொண்டிருந்தாள்.
"என் குழந்தை என்னை எப்பவும் மன்னிக்க மாட்டா, பாட்டி"
"நீ அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்து இருக்கக் கூடாது, நித்திலா"
"எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல பாட்டி. அவரை எப்படி தண்டிக்கிறதுன்னு எனக்கு தெரியல!
"அவரை நம்ம போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருக்கலாம்"
"அவருக்கு அது பத்தாது, பாட்டி. அவரை நான் உணர்வுபூர்வமா உடைச்சு போடணும்னு நினைச்சேன், அவர் என்னை செஞ்ச மாதிரி. அப்ப தான் அவருக்கு என்னோட வலி என்னன்னு புரியும். நான் அதுல ஜெயிச்சுட்டேன்"
"உன்னோட வலிக்கு என்ன பதில்? அவரை தண்டிக்கிறேன்னு நீ உன்னையே நினைச்சுக்கிட்ட. இந்த வலி உன் இதயத்துல வாழ்நாள் பூரா இருக்குமே..."
"எனக்கு தெரியும் பாட்டி. என்னாலயும் என்னை மன்னிக்க முடியாது. எந்த ஒரு அம்மாவும் செய்யக்கூடாததை தானே நான் செஞ்சேன்? அவள் என் உயிர், என் ரத்தம், என் வாழ்க்கை... ஆனா நான் அவளை கொன்னுட்டேன்"
பாட்டி ஏதோ கூற எண்ணிய போது இனியவன் கூறியதை கேட்டு நிறுத்தினார்.
"இல்ல, நீங்க அவளை கொல்லல" என்றபடி உள்ளே நுழைந்தான் இனியவன். கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்து அவள் கரத்தை பற்றி கொண்டு,
"அக்கா, நீங்க சித்திரவேலை எப்படி தண்டிக்கணும்னு நினைச்சீங்களோ அப்படியே தண்டிச்சிட்டீங்க. அது முடிஞ்சு போச்சு. இப்போதிலிருந்து நீங்க அதைப்பத்தி யோசிக்காதீங்க. உங்க குழந்தையை பத்தி மட்டும் நினைங்க"
நித்திலாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டார்கள்.
"நீ என்ன சொல்ற இன்னு? நித்திலா குழந்தையை பத்தி நினைக்கணுமா?" என்றார் பாட்டி புரிந்து கொள்ள முடியாமல்.
"ஆமாம் பாட்டி, அக்கா இனிமே அவங்க குழந்தையை பத்தி மட்டும் தான் நினைக்கணும்"
"இன்னு, நீ யோசிச்சு தான் பேசுறியா? அது அவளை காயப்படுத்தும்..."
"இல்ல பாட்டி. அது அவங்களை காயப்படுத்தாது. ஏன்னா,
குழந்தை இன்னும் உயிரோட தான் இருக்கு"
அதைக் கேட்டு நித்திலா திகைத்து நின்றாள். அவள் இனியவனையே வெறித்து பார்த்தபடி இருந்தாள். அவள் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது. இனியவன் அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
"நீ என்ன சொல்ற, இன்னு?"
"ஆமாம் கா. குழந்தை
நல்லபடியா இருக்கு"
"நீ சொல்றது உண்மையா, இன்னு?" என்றார் பாட்டி.
"உங்களுக்கு சீமா அக்காவை ஞாபகம் இருக்கா?"
ஆம் என்று தலையசைத்தார் பாட்டி.
"அவங்க தான் நம்ம பாப்பாவை காப்பாத்திட்டாங்க. அவங்க அக்காவோட கருவை கலைக்கல. ஏன்னா அவங்களுக்கு தெரியும், அக்கா குழந்தைக்காக எவ்வளவு ஆர்வமாக காத்துக்கிட்டு இருந்தாங்கன்னு. அதனால அக்கா குழந்தையை கலைக்கணும்னு சொன்ன,போது, ஏதோ பிரச்சனை இருக்கிறதுனால தான் இப்படி கேக்குறாங்கன்னு நினைச்சுட்டு அவங்களுக்கு அபார்ஷன் பண்ணாம, மயக்கம் மருந்து மட்டும் கொடுத்து அவங்களை படுக்க வச்சி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க"
நிம்மதி பெருமூச்சு விட்டு கண்களை மூடினார் பாட்டி. நித்திலா நம்ப முடியாமல் கண்ணீர் சிந்திய படி புன்னகையுடன் தன் வாயைப் பொத்திய படி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நிஜமாவா சொல்ற, இன்னு?"
"ஆமாம் கா. சித்திரவேலை பொறுத்த வரைக்கும் குழந்தை இறந்ததா இருக்கட்டும். அவனுக்கு அந்த பனிஷ்மென்ட் தேவை தான். ஆனா உங்களுக்கு அது தேவையில்ல. உங்களை மாதிரி நல்லவங்க கஷ்டப்படக்கூடாது. உங்க குழந்தை இன்னும் உங்ககிட்ட தான் இருக்கு... எப்பவும் உங்ககிட்டே தான் இருக்கும்"
இனியவனை அணைத்துக் கொண்டு சந்தோஷத்தில் கண்ணீர் சிந்தினாள் நித்திலா.
"சாரி, இன்னு. நான் உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன்"
"அக்கா ப்ளீஸ் உங்களை திட படுத்திக்கோங்க. உங்க குழந்தையை வளர்க்க வேண்டிய ரொம்ப பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு. மறுபடியும் அதை ஏதாவது செய்யணும்னு நினைக்காதீங்க"
"இல்ல இன்னு. சத்தியமா இந்த மாதிரி ஒரு முட்டாள் தனத்தை நான் மறுபடியும் யோசிக்க மாட்டேன்" என்றாள் நித்திலா.
"எனக்கு உங்ககிட்ட இன்னொரு வேண்டுதலும் இருக்கு"
"சொல்லு இன்னு"
"இது குழந்தைக்கு கிடைச்ச செகண்ட் சான்ஸ். அவ ஹெல்தியா வளர அவளுக்கு நல்ல சூழ்நிலை தேவை. தயவு செஞ்சு உங்களை ஸ்ட்ரெஸ் பண்ணிக்காம நல்லதையே நினைங்க. நம்மளால மாத்த முடியாத எதையும் யோசிக்காதீங்க. உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க கா. உங்க குழந்தைக்காகவாவது இதையெல்லாம் செய்யுங்க"
சரி என்று தலைகசைத்தாள் நித்திலா.
"இதுக்கப்புறம் நான் அவரைப் பற்றி யோசிக்க மாட்டேன். நிச்சயம் என் மனசை மாத்திக்க முயற்சி செய்றேன்"
"தேங்க்யூ கா" என்று ஆழ்வியை பார்த்த இனியவன்
"ஆழ்வி..." என்றான்.
"ஆங்...?"
"நீயும் கவியும் அக்காவை பார்த்துக்கணும். நீங்க அதை நல்லபடியா செய்வீங்கன்னு நினைக்கிறேன்"
"கண்டிப்பா செய்வோம் அண்ணா" என்றாள் பார்கவி. ஆழ்வி தலையை மட்டும் அசைத்தாள்.
"அக்காவை சந்தோஷப்படுத்த உன்கிட்ட ஏதாவது ஐடியா இருக்கா?"
ஆழ்விக்கு தெரியும் எதற்காக அவன் கேட்கிறான் என்று. இப்பொழுது அவள் அவனுக்கு பதில் கூறி தானே ஆக வேண்டும்! அவள் வேறு வழி இன்றி அவனிடம் பேசியாக வேண்டும்...!
ஆனால் இனியவன் எதிர்பார்க்காத வண்ணம்,
"நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க கா. நான், பாட்டி, கவி எல்லாரும் உங்களுக்காக இருக்கோம். உங்களை நாங்க தனியா இருக்க விடமாட்டோம். நீங்க எப்பவும் உங்க ரூம்ல இருக்காதீங்க. வெளியில வாங்க, எங்க எல்லார்கூடயும் இருங்க கா"
"சரிங்க ஆழ்வி" என்றாள்.
நித்திலாவின் முகத்தில் நிம்மதி தெரிந்ததை கவனித்தாள் ஆழ்வி. அவளது குழந்தை தான் நன்றாக இருக்கிறதே...!
தனக்கு பதிலளிக்காமல் புத்திசாலித்தனமாய் நித்திலாவுக்கு பதிலளித்த ஆவியை முறைத்தபடி அமர்ந்திருந்தான் இனியவன்.
"ஆழ்வி, நம்ம அக்காவை வெளியில கூட்டிகிட்டு போனா என்ன?" என்று மீண்டும் அவளிடம் கேட்டான் இனியவன்.
"அது அக்காவுக்கு சேஃப்ன்னு நீங்க நினைக்கிறீங்களா பாட்டி?" என்றாள் ஆழ்வி.
பாட்டி இல்லை என்று தலையசைத்தார்.
"அப்படின்னா நம்ம அக்காவை நாலு மாசத்துக்கு பிறகு வெளியில கூட்டிகிட்டு போலாமா பாட்டி?" என்றாள்.
"நீ சொல்றது தான் சரி. முதல் நாலு மாசத்துக்கு நித்திலா ஜாக்கிரதையா இருக்கணும்"
இனியவனை ஓரக்கண்ணால் பார்த்த ஆழ்வி, அவன் தன்னை பார்த்து கள்ளப்புன்னகை பூப்பதை கவனித்தாள்.
!அக்கா நான் உங்களுக்கும் பாப்பாவுக்கும் நல்ல ஹெல்தியான ஃபுட்டா சமைச்சு கொடுக்கிறேன்"
சரி என்று புன்னகைத்தாள். நித்திலா
"பாட்டி எனக்கு உங்க பர்மிஷன் வேணும்"
"எதுக்கு ஆழ்வி?"
"நான் கவிக்கு சமையல் சொல்லிக் கொடுக்கலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க?"
ஆழ்வி எதற்காக அப்படி கூறினாள் என்பதை புரிந்து கொண்ட பார்கவி புன்னகை புரிந்தாள்.
"தாராளமா சொல்லிக் கொடு. அவளும் சமையல் கத்துக்கட்டும்"
"ஆனா அவ சமைச்ச சாப்பாட்டை நான் சாப்பிட மாட்டேன் பா" என்றாள் நித்திலா, தான் நான் சகஜமாய் இருப்பதாய் காட்டிக் கொண்டு.
"கவலைப்படாதீங்க கா, கவி சாப்பிட்டதுக்கு பிறகு தான் நான் அதை உங்களுக்கு கொடுப்பேன்" என்றாள் ஆழ்வி.
"இதெல்லாம் ரொம்ப ஓவர்" என்றாள் பார்கவி, தன் முகத்தை சுளுக்கு என்று வைத்துக்கொண்டு.
"சரி வா போலாம்" என்று பார்கவியியை தன்னுடன் அழைத்துச் சென்றாள் ஆழ்வி, இனியவனை பார்த்து ஒரு நமட்டு புன்னகை வீசிவிட்டு.
இனியவனுக்கு புரிந்து போனது, அவள் தனது வார்த்தைகளை மிகவும் சீரியசாய் எடுத்துக் கொண்டு விட்டாள் என்று.
"அக்கா நீங்க ரெஸ்ட் எடுத்துக்குங்க" என்று கூறிவிட்டு, பாட்டியை தன்னுடன் வருமாறு சைகை செய்தான் இனியவன். வெளியே வந்த பாட்டி,
"என்ன இன்னு?" என்றார்.
"அக்கா கிட்ட பேச சித்திரவேல் ட்ரை பண்ணலாம். ஆனா அது நடக்கக்கூடாது. அக்கா டென்ஷன் ஆயிடுவாங்க. ஏன்னா அவன் அக்காவை எமோஷனல் பிளாக்மெயில் பண்ண வாய்ப்பு இருக்கு"
"நீ அதைப் பத்தி கவலைப்படாதே இன்னு. நான் அவ கூட தான் இருப்பேன். நான் அவ ஃபோனை சைலன்ட்ல போட்டுடுறேன்"
சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றான் இனியவன். அவன் எதிர்பார்த்ததுபடியே ஆழ்வி அவர்களது அறைக்கு செல்லவில்லை. அவள் பார்கவிக்கு சமையல் சொல்லிக் கொடுக்கிறேன் என்ற பெயரில் சமையலறையில் இருந்தாள்.
குருவுக்கு ஃபோன் செய்தான் இனியவன். அந்த அழைப்பை உடனே ஏற்றான் குரு.
"சொல்லு, இனியா"
"குரு, நீ சிபி சக்கரவர்த்தியை பத்தி கொஞ்சம் என்குயரி பண்ணணும்"
"சரி, இனியா"
"எனக்கு அவனைப் பத்தியும் அவன் குடும்பத்தை பத்தியும் எல்லா டீடைல்ஸும் வேணும்"
"சரி"
"முக்கியமா, அவன் பார்கவிக்கு செட் ஆவானான்னு தெரியணும்"
சரி என்று சொல்லப் போன குரு, வாயடைத்து நின்றான், அவன் கூறுவது என்ன என்பதை புரிந்து கொண்டு.
"பார்கவிக்கு செட் ஆவானா வா?"
"ஆமாம். அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன். அவன் ரொம்ப நல்ல பையன். ஆமாம் தானே?"
"ஆமாம்" என்று தடுமாறினான் குரு.
"சரி, நான் சொன்னதை செய்" என்று அழைப்பை துண்டித்து விட்டு, சமையலறைக்கு வந்தான் இனியவன்.
சமையல் என்ற பெயரில் சமையலறையை தலைகீழாய் புரட்டிக் கொண்டிருந்தாள் பார்கவி. அவனைப் பார்த்தவுடன் முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டாள் ஆழ்வி.
"உன்னோட இன்ட்ரஸ்ட்டை நான் அப்ரிஷியேட் பண்றேன்" என்றான் இனியவன்.
"தேங்க்ஸ் அண்ணா"
"இப்படித் தான் நீ உன் கல்யாணத்துக்கு ரெடியா ஆகணும்"
அதைக் கேட்டு பார்கவிக்கு கன்னம் சிவந்தது.
"உனக்கு சிபி சக்கரவர்த்தியை ஞாபகம் இருக்கா?"
"யார் அண்ணா?"
"நம்ம ஆஃபீஸ் பார்ட்டியில கூட வந்து கலந்துகிட்டானே. ரிஷி சக்கரவர்த்தியோட சன். நீ கூட அவன் ஹேண்ட்ஸமா இருக்கிறதா சொன்னியே"
"ஓ, அவரா? ஞாபகம் இருக்கு. ரொம்ப நல்ல டைப்"
"உனக்கு அவனை பிடிக்கும்னு எனக்கு தெரியும். அதனால தான் உன்னை பொண்ணு கேட்டு அவங்களை வர சொல்லி இருக்கேன்"
பார்கவி அதிர்ச்சி அடைந்து நிற்க, ஆழ்வி அவனை பார்த்து முறைத்தாள். ஆனால் அதை இனியவன் கண்டு கொள்ளவில்லை.
"நீ உன் வேலையை பாரு. நல்லா சமைக்க கத்துக்கோ" என்று அங்கிருந்து சென்றான் இனியவன்.
ஆழ்வியின் கரத்தைப் பற்றிக் கொண்டாள் பார்கவி.
"ஆழ்வி, ப்ளீஸ், ஏதாவது செய். அண்ணன் கிட்ட குருவை பத்தி சொல்லு, ப்ளீஸ்" என்றாள்.
ஆழ்வியை பதற்றம் தொற்றிக் கொண்டது. அவள் தான் அதை ஏற்கனவே செய்து விட்டாளே...!
"சரி நான் அவர்கிட்ட பேசுறேன்"
"நான் குருவுக்கு ஃபோன் பண்றேன்" என்று தன் கைபேசியை எடுத்து குருவுக்கு ஃபோன் செய்தாள் பார்கவி.
"குரு, அண்ணன் எனக்கும் சிபிக்கும் கல்யாண ஏற்பாடு செய்றார்"
"சிபியை பத்தி விசாரிக்க சொல்லி என்கிட்டயும் சொன்னான்"
"அய்யய்யோ, என்ன சொல்ற? இப்போ நீ என்ன செய்ய போற?"
"அவன் செய்ய சொன்னதை செய்வேன்"
"நம்மளை பத்தி நீ அண்ணன்கிட்ட சொல்ல போறது இல்லையா?"
"சொல்லணும். ஆனா எப்படின்னு தெரியல"
"நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்" என்று அழைப்பை துண்டித்த பார்க்வி,
"சிபியை பத்தி விசாரிக்க சொல்லி அண்ணன் குரு கிட்ட சொன்னாராம்" என்றாள்.
அப்படி என்றால் உண்மையிலேயே இந்த வரனில் இனியவன் மும்முரமாக தான் இருக்கிறானோ?
"ப்ளீஸ், ஏதாவது செய் ஆழ்வி" என்றாள்.
சரி என்று தலையசைத்து விட்டு தன் அறையை நோக்கி சென்றாள் ஆழ்வி. இனியவன் ஏதோ ஒரு கோப்பை சரி பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே வந்த ஆழ்வி, அவன் கையில் இருந்த கோப்பை பிடுங்கினாள். அவளை சகஜமாய் பார்த்த இனியவன்,
"அந்த ஃபைலை குடு ஆழ்வி" என்றான்.
"என்ன செய்றீங்க நீங்க?"
"ஃபைல் செக் பண்றேன்"
"நான் அதைக் கேட்கல"
"வேற எதை கேக்குற?"
"நான் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேன், குரு அண்ணாவும் பார்கவியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்கன்னு. அப்படி இருக்கும்போது எதுக்காக இப்போ சிபியோட வரனை கொண்டு வந்திருக்கீங்க?"
"அவன் ரொம்ப நல்ல பையன். குரு கூட ஆமாம்னு சொன்னா தெரியுமா?"
"அவர் ஆமாம்னு சொன்னார். ஏன்னா, அவர் உங்களுக்கு எதிரா எதுவும் செய்ய மாட்டார்"
"எப்படி செய்வான், அவன் தான் குரு ஆச்சே!"
"எதுக்காக இப்படி எல்லாம் செஞ்சு கிட்டு இருக்கீங்க?"
தன் கைகளைக் கட்டிக் கொண்டு புன்னகை புரிந்த இனியவன்,
"முதல்ல நீ என்கிட்ட எப்படி பேசுனேன்னு சொல்லு... நீ தான் என் மேல ரொம்ப கோவமா இருந்தியே" என்றான்.
கோபமாய் உதடு கடித்தாள் ஆழ்வி.
"நம்ம கதையை பத்தி நம்ம அப்புறம் பேசலாம். நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க"
"இதுவும் நம்ம விஷயம் தான்னு நினைக்கிறேன்"
"இங்க பாருங்க, என்னை வெறுப்பேத்தாதீங்க"
"நீ கேக்குற கேள்விக்கு நான் பதில் சொல்லணும்னா, நான் சொல்றதை நீ செய்யணும்"
"என்ன?"
"வந்து என் மடியில உட்கார்ந்து, என் கழுதை கட்டிக்கிட்டு, அப்புறமா கேள்வி கேளு"
அதைக் கேட்ட ஆழ்வி வாயை பிளந்தாள்.
"பதில் வேணும்னா வந்து உட்காரு"
ஆழ்வி ஏதோ சொல்ல முயன்ற போது,
"உன் ஃப்ரண்ட் உனக்காக வெளியில காத்துகிட்டு இருக்கா. மறந்துடாத" என்றான்.
தரையை உதைத்தாள் ஆழ்வி. தன் கைகளை விரித்து அவளை அழைத்தான் இனியவன். அவன் மடியில் அமர்ந்து கொண்டு அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள் முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு. இனியவன் தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டான்.
"இப்ப சொல்லு உனக்கு என்ன தெரியணும்"
"எதுக்காக..."
மேலே பேசப்போனவளை தடுத்து,
"உன்னை நம்ம ரூமுக்கு வர வைக்க, உன்னை என்கிட்ட பேச வைக்க, உன்னை என் மடியில உட்கார வைக்க," என்றான்.
அவள் அவனை விசித்திரமாய் பார்க்க, அவள் இடையை சுற்றி வளைத்துக் கொண்டான்.
"நீ என்ன நெனச்சுக்கிட்டு இருக்க? நீ என்கிட்ட பேசலனா நான் விட்டுடுவேனா?"
"சரியான சீட்டர்"
"இதுக்கு என்ன அர்த்தம்? உண்மையிலேயே பார்கவி சிபியை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறியா?" என்று சிரித்த அவன்,
"என்கிட்ட பேசாம இருக்கணும்னு நினைக்காத. ஜாக்கிரதை" என்றான்.
"நீங்களும் எனக்கு பிடிக்காததை பத்தி பேசாதீங்க"
"சரி, பேசமாட்டேன். சந்தோஷமா?"
ஆம் என்று தலையசைத்து, அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
"அவ்வளவு தானா?" என்றான் இனியவன்.
"குரு அண்ணா, பார்கவியோட கல்யாணத்துக்கு ஒத்துக்கோங்க. ப்ளீஸ்" என்றாள்.
அவளுக்கு பதில் கூற அவன் முயன்ற போது, அவனது கைபேசி மணி அடித்தது. அந்த அழைப்பை ஏற்றான் இனியவன், அது கமிஷனருடைய அழைப்பு என்பதால்..!
"ஹலோ சார்..."
"ஹலோ இனியவன், இந்த விஷயத்துல சித்திரவேலும் உடந்தை அப்படின்னு ரீனா ஸ்டேட்மெண்ட் கொடுத்துட்டா"
"அப்படியா சார்?"
"ஆமாம், சித்திரவேலுக்கு அரெஸ்ட் வாரண்ட் இஷ்யூ ஆயிடுச்சு. அவன் வீட்டுக்கு வந்தா எனக்கு தெரியப்படுத்துங்க"
"நிச்சயமா செய்றேன் சார்"
"தேங்க்யூ"
ஆழ்வியை பார்த்தபடி அழைப்பை துண்டித்தான் இனியவன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top