74 உயிர் வாங்கும் வலி
74 உயிர் வாங்கும் வலி
"நான் குழந்தையை அபார்ஷன் பண்ணிட்டேன்" என்றாள் நித்திலா.
அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான் இனியவன். அவள் கூறிய வார்த்தைகள் சித்திரவேலின் காதில் திராவகத்தை ஊற்றியது. அவன் நித்திலாவின் தோள்களை கோபமாய் பற்றி,
"என்ன சொன்ன நீ?" என்றான்.
நித்திலா அமைதியாய் இருந்தாள்.
"சொல்லு நித்திலா, இப்போ நீ என்ன சொன்ன?" என்று அரற்றினான்.
"குழந்தையை அபார்ஷன் பண்ணிட்டேன்னு சொன்னேன்"
"உனக்கு எவ்வளவு தைரியம்? நீ எப்படி அந்த மாதிரி செய்யலாம்?அது என் குழந்தை. என்னைப் பத்தி யோசிக்காம நீ எப்படி அபார்ஷன் பண்ண? நான் அனாதையா இருந்தேன்... என் குடும்பம் முழுமை அடைய ஒரு வாரிசு எனக்கு வரணும்னு நான் எவ்வளவு ஆசையா காத்துக்கிட்டிருந்தேன்னு உனக்கு தெரியும் தானே? என் குழந்தையை கலைக்கிற உரிமையை உனக்கு யார் கொடுத்தது? சொல்லு நித்திலா..." என்று பைத்தியத்தை போல் கத்தினான் சித்திரவேல்.
நித்திலாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவள் ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தாள் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
"எதுக்காக இப்படி பண்ண? ஏன்? உனக்கு என்ன ஆச்சு? இந்த ஒரு சந்தோஷமான சந்தர்ப்பதுக்காக நம்ம எல்லாரும் எவ்வளவு காத்துகிட்டு இருந்தோம்? அறியா குழந்தையை கலைக்க உனக்கு எப்படி மனசு வந்தது?" பாட்டி கதறி அழுதார்.
இப்பொழுதும் கல் போல நின்றாள் நித்திலா. அவளை தன் பக்கம் திரும்பிய சித்திரவேல்,
"நீ இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? எதுக்காக இப்படி வாயை மூடிக்கிட்டு இருக்க? என் குழந்தையை கொன்னுட்டு உன்னால எப்படி அமைதியா இருக்க முடியுது? உனக்கு இதயமே கிடையாதா? நீ எப்படி ஈவு இரக்கமில்லாதவளா மாறின?"
தன் பல்லை கடித்த நித்திலா, ஓங்கி சித்திரவேலை அறைந்து அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தாள்.
"நான் இரக்கமில்லாதவளா? இந்த பூமிக்கு வராத ஒரு குழந்தையை கலைச்ச நான் இரக்கமில்லாதவளா இருந்தா, உங்களுக்கு என்ன பேரு?" என்று அவன் காலரை பற்றினாள்.
அவள் எந்த அர்த்தத்தில் அதை கூறினாள் என்று சித்திரவேல் மட்டுமல்ல, அங்கிருந்து யாருக்கும் புரியாமல் அவளை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
"நான் குழந்தையை அபார்ஷன் பண்ணினேன். ஏன்னா, என் குழந்தை ஒரு கிரிமினலோட குழந்தையா இருக்கிறதை நான் விரும்பல"
சித்திரவேலின் முகம் மாறியது. இனியவனும் ஆழ்வியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"என் குழந்தைக்கு உன்னோட எந்த குணமும் வந்துடக் கூடாது... உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என் தம்பியை நீ பைத்தியக்காரனா மாத்தியிருப்ப? அவனுக்கு மோசமான மருந்தை கொடுத்து, உன் நடிப்பால எங்க எல்லாரையும் பைத்தியக்காரங்களா ஆக்கி, அவனை பைத்தியமா வச்சிருக்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? எப்படி நீ எனக்கு இதை செஞ்ச? இந்த குடும்பம் உன்னை தன் சொந்த மகனா தானே நினைச்சாங்க? ஆனா நீ...? உன்னை என் புருஷன்னு சொல்லிக்க எனக்கு வெட்கமா இருக்கு..."
சித்திரவேல் பேசும் சக்தியை இழந்தான். அவள் குடும்பத்தினரோ அதை கேட்டு திகிலடைந்து நின்றார்கள். நித்திலாவுக்கு இந்த விஷயம் எப்படி தெரிந்தது? அதைப்பற்றி பாட்டி நித்திலாவிடம் கேட்க முயன்ற போது, அவரை தடுத்து நிறுத்தினாள் பார்கவி. அது பாட்டிக்கு மேலும் அதிர்ச்சி அளித்தது. அவர் பார்கவியை வெறித்துப் பார்த்தார்.
"நித்தி, நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க"
"ஆமாம்... நான் தப்பா தான் புரிஞ்சுகிட்டு இருந்தேன். உன்னை நான் ரொம்ப நல்லவன்னு நினைச்சேன்... எங்க நம்பிக்கைக்கு நீ பாத்திரமானவன்னு நினைச்சேன்... நீ என் மேல வச்சிருந்த அன்பு உண்மையானதுன்னு இவ்வளவு நாளா நான் தப்பா தான் நினைச்சுகிட்டு இருந்தேன்..."
"நீ நினைக்கிறது உண்மை இல்ல"
மீண்டும் சித்திரவேலின் கன்னத்தில் ஓர் அழுத்தமான அறை விழுந்தது.
"என்கிட்ட பொய் சொல்ல துணியாத. உன்னை நம்பிகிட்டு இருந்த அந்த நித்திலா செத்துப் போயிட்டா. அவ உன் மேல வச்சிருந்த நம்பிக்கையை நீ கொன்னுட்ட. இந்த உலகத்தில் எல்லாரையும் விட அதிகமா உன்னை நம்பின ஒரு அப்பாவி பெண்ணை நீ கொன்னுட்ட"
"என்னை பத்தி உன்கிட்ட யாரோ பொய் சொல்லி இருக்காங்க"
"இல்ல... அதை நானே கேட்டேன்... வேற யார்கிட்ட இருந்தும் இல்ல. உன்னோட ஃபோன்ல, உனக்கு வந்த காலை அட்டென்ட் பண்ணப்போ கேட்டேன்"
அதைக் கேட்டு, சித்திரவேலுக்கு தன் உடலில் இருந்த மொத்த ரத்தமும் வடிந்துவிட்டது போல் தோன்றியது.
"ஏன் அமைதி ஆயிட்ட? நான் என்ன கேட்டேன்னு தெரிஞ்சிக்கனுமா? என் தம்பி உங்களை பத்தி என்கிட்ட சொல்லி இருந்தா கூட நான் நம்பி இருக்க மாட்டேன். ஏன்னா, நான் உன்னை அந்த அளவுக்கு நம்பினேன். உன்னை உண்மையா நேசிச்சதை தவிர நான் என்ன தப்பு செஞ்சேன்? எதுக்காக என் தம்பியோட வாழ்க்கையை கெடுத்த? ஏன்?"
"ஏன்னா, அவர் உங்களை ரொம்ப காதலிக்கிறார்" என்றான் இனியவன்.
கண்களை சுருக்கி அவனை நித்திலா பார்க்க, சித்திரவேலோ அதிர்ச்சி அடைந்தான்.
"ஆமாம் கா. இது எல்லாத்துக்கும் அவர் உன் மேல வச்சிருந்த அளவுக்கு அதிகமான அன்பு தான் காரணம். உங்க அன்பு அவருக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு அவர் நினைச்சது தான் காரணம். நீங்க என் மேல அளவுக்கு அதிகமாக அன்பு வச்சிருந்ததை அவரால பொறுத்துக்க முடியல. உங்க டைம் மொத்தத்தையும் நீங்க எங்களுக்காக ஸ்பெண்ட் பண்ணதை அவரால தாங்க முடியல. அதனால தான், என்னை உங்ககிட்ட இருந்து விலக்கி வைக்கணும்னு நினைச்சாரு. அதனால் தான், யாரும் நெருங்க முடியாத ஒரு பைத்தியக்காரனா என்னை மாத்தி வச்சிருந்தார். அவர் எதிர்பார்த்த படியே நீங்க எல்லாரும் என்கிட்ட நெருங்கவே பயந்தீங்க. ஏன்னா, நான் காட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்"
இதையெல்லாம் கேட்ட பாட்டி உறைந்து நின்றார். இவையெல்லாம் இந்த வீட்டில் நடந்த விஷயங்களா?
"உனக்கு இதெல்லாம் தெரியுமா, சின்னு?" என்றாள் நித்திலா.
"எனக்கு எல்லாம் தெரியும். அது மட்டுமில்ல. எங்களுக்கு கல்யாணம் ஆன அடுத்த நாளே அந்த மோசமான மருந்தை பத்தி ஆழ்வி கண்டுபிடிச்சிட்டா. அதுல சித்திரவேலுக்கும் பங்கு இருந்தது அவளுக்கு தெரியும். டாக்டரும் சித்திரவேலும் அந்த மருந்தை பத்தி பேசிக்கிட்டிருந்ததை கேட்டிருக்கா. அதனால தான் அவ அந்த மருந்தை எனக்கு கொடுக்குறதை நிறுத்திட்டா. அந்த உண்மையை உங்ககிட்ட சொல்ல அவ பயந்ததுக்கு காரணம், நீங்க எல்லாரும் சித்திரவேல் மேல வச்சிருந்த நம்பிக்கை தான்"
நித்திலா ஆழ்வியை பார்க்க, அவள் தலை குனிந்து கொண்டாள்.
"நீங்க இன்னுகிட்ட திடிர்னு இன்வால்வ்மெண்ட் காட்டினப்போ, நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். அந்த மருந்துல இருந்து அவனை காப்பாத்த தான் நீங்க அவன்கிட்ட நெருங்கி போனீங்க... அப்படித்தானே?" என்றாள் நித்திலா.
அவளுக்கு பதில் கூறாமல் அமைதி காத்தாள் ஆழ்வி.
"அவ அந்த மோசமான மருந்துல இருந்து மட்டும் என்னை காப்பாத்தல. ராமநாதபுரத்தில் இருந்து சித்த மருந்து வர வச்சி, அதை எனக்கு கொடுத்து, என்னை குணமாக்கினா. அந்த மருந்தால தான் நான் இம்ப்ரூவ்மெண்ட் காட்டினேன்" என்றான் இனியவன், அனைவரையும் பேச்சிழக்கச் செய்து, சித்திரவேலையும் சேர்த்து!
"இதைப் பத்தி நீ ஏன் என்கிட்ட எதுவும் சொல்லல இன்னு?"
"சொல்லணும்னு தான் கா நினைச்சேன். அதே நேரத்துல, சொல்லக்கூடாதுன்னும் தோணிச்சு. சித்திரவேல் இதை பொசசிவ்னஸ்ல தான் செஞ்சாருன்னு நாங்க புரிஞ்சுகிட்டோம். நீங்க அவர் கூட மட்டுமே இருக்கணும்னு அவர் நினைச்சாரு"
அவனது பேச்சை துண்டித்து,
"அப்படின்னா என் குழந்தையை கலைக்கணும்னு நான் எடுத்த முடிவு ரொம்ப சரியானது தான். ஏன்னா, நான் என் குழந்தையோட நேரம் செலவிடுறதை பார்த்து, இவன் அந்த குழந்தையை கொன்னாலும் கொன்னுடுவான். பெத்த அப்பாவாலயே சித்திரவதை அனுபவிச்சி அந்த குழந்தை சாகறதுக்கு பதில், அது பிறக்காமா இருக்கிறது எவ்வளவோ மேல்" என்று கதறலுடன் கூறினாள் நித்திலா, சித்திரவேலை பார்த்தபடி.
"அவரை விடுங்க கா. நீங்க உங்க குழந்தையை நேசிக்கலயா? இதுல இழந்தது நீங்களும் தானே? எதுக்காக உங்களை நீங்கள் தண்டிச்சுக்கிறிங்க?"
"ஏன்னா நான் தான் எல்லாத்துக்கும் காரணம். என்னால் தானே எல்லாமே நடந்தது? நான் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருந்தா, நம்ம வாழ்க்கையில இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. என்னால தான் நீ சொல்ல முடியாத வலியை ஒவ்வொரு நாளும் அனுபவிச்ச... காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்த... தகுதி இல்லாதவனை நம்புனதுக்காக இது எனக்கு நானே கொடுத்துக்கிற தண்டனை" என்று தன் முகத்தை மூடி அழுதாள்.
"ஆனா இதுல அந்த குழந்தையோட தப்பு என்ன இருக்கு நித்திலா? என்றார் பாட்டி அழுத விழிகளோடு.
"வலி எல்லாருக்கும் பொதுவானது. அதே மாதிரி தான் உணர்வுகளும்... அந்த வலியை நம்ம உணராத வரைக்கும், அந்த வலியை நம்மால புரிஞ்சிக்க முடியாது. இன்னுவை பைத்தியக்காரனா வச்சிருந்தா இவருக்கு எல்லாமே கிடைச்சிடும்னு அவர் நினைச்சுக்கிட்டு இருந்தாரு. ஆனா, தான் பிடிபட்டா எல்லாத்தையும் தான் இழக்க நேரிடும்னு அவர் உணரல. நான் எமோஷனலா ரொம்ப பலவீனமானவள்னு அவர் நினைச்சிருக்காரு. அழறதைத் தவிர என்னால வேறு எதுவும் செய்ய முடியாதுன்னு அவர் நினைச்சாரு. என் உணர்வுகளை பத்தி அவர் ஒரு நிமிஷம் யோசிச்சி இருந்தா கூட, நம்ம வாழ்க்கையில அவர் விளையாடியிருக்க மாட்டார். அவர் என்னை ரொம்ப கொறச்சி எடை போட்டுட்டார், பாட்டி. நான் எந்த அளவுக்கு போவேன்னு அவர் கொஞ்சமும் யோசிச்சி பாக்கல. என்னால என்ன செய்ய முடியும்னு அவர் தெரிஞ்சுக்கணும். என்னாலையும் அவரை அடிச்சி நொறுக்க முடியும்னு அவர் தெரிஞ்சுக்கணும். அப்படித்தானே அவர் என்னையும் அடிச்சு நொறுக்குனாரு?" என்று தன் மனம் உடைய கதறி அழுதாள் நித்திலா.
"அவர் செஞ்சதையே நீங்களும் செஞ்சா, உங்களுக்கும் அவருக்கும் என்னக்கா வித்தியாசம்?" என்றான் இனியவன் வேதனையோடு.
"நான் ஏன் அவர்கிட்ட இருந்து மாறுபட்டு இருக்கணும்? ஒரு கெட்டவனுக்கு நல்லவளா இருந்து நான் எண்ணத்தை கண்டேன்? என் நிம்மதியை இழந்த பிறகு, எனக்கு என்ன கிடைச்சிட போகுது? ஒரு கருவை கலைக்கிறது தப்புன்னு எனக்கும் தெரியும். ஆனா, அந்த குழந்தை வளர்ந்து, அவங்க அப்பாவை பத்தி கேட்கும் போது, அதுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? உங்க அப்பா ஒரு கிரிமினல்... எந்த குடும்பம் அவரை கண்மூடித்தனமா நம்புச்சோ, அந்த குடும்பத்தையே அழிச்சவர்னு சொல்லட்டுமா? தன் அப்பாவை நினைச்சி அந்த குழந்தை வருத்தப்படணுமா?" என்று அவள் மனம் வெதும்ப, இனியவனுக்கு தொண்டையை அடைத்தது. பெண்களோ தாங்க முடியாமல் கண்ணீர் வடித்தனர்.
நித்திலாவின் நிலைமை அவர்கள் யாருக்கும் புரியாமல் இல்லை. நாம் கண்மூடித்தனமாய் நம்பும் ஒருவர் நம் முதுகில் குத்தும் போது ஏற்படும் வலி, உயிர் போகும் வலியை விட கொடுமையானது. அதை அனுபவித்தவரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அவள் குழந்தையை கலைத்து விட்ட விஷயத்தை யாராலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் அவள் கோபம் நியாயமானது.
சரியா தவறா என்று கூறி விடுவது வெகு சுலபமானது. ஆனால் அதை அனுபவித்தவருக்கு மட்டுமே தெரியும் அது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பது. துரோகத்தை சந்திக்கும் மனம் தெளிவாக வேலை செய்வதில்லை. யோசிக்கும் திறனை மூளை இழந்து விடுகிறது. இந்த உலகத்தால் கைவிட்டது போல் உணரத் தோன்றும். துரோகத்தை சந்திப்பது என்பது மிகப்பெரிய வலி. அதுவும், யார் தனக்கு எல்லாமும் என்று எண்ணி இருந்தார்களோ, அந்த நபராலேயே அதை அனுபவிப்பது கொடுமையானது. அந்த நிலையில் தான் இப்பொழுது நித்திலா இருந்தாள்.
மெல்ல நித்திலாவின் அருகில் வந்த சித்திரவேல்,
"நித்தி, ஐ அம், சாரி. நீ என் மேல கோவமா இருக்கேன்னு எனக்கு தெரியும். நான் செஞ்சது தப்பு தான். ஆனா நான் அதை உன் மேல வச்ச அளவுக்கு அதிகமான அன்பால தான் செஞ்சேன். உன்னால கற்பனை பண்ண முடியாத அளவுக்கு நான் உன் மேல அன்பு வச்சிருக்கேன்"
"ஆமாம், உங்க சந்தோஷத்துக்காக நீங்க அடுத்தவங்களோட வாழ்க்கையை அழிக்கிற அளவுக்கு போவீங்கன்னு நான் கற்பனை பண்ணல தான்..."
"நித்தி நான் சொல்றதை கேளு"
தன் கையைக் காட்டி அவனை தடுத்து நிறுத்திய நித்திலா,
"நான் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணணும்னு நீங்க நினைச்சிருந்தா, அதை பத்தி நீங்க என்கிட்ட பேசி இருக்கணும். உங்களுக்கு என் மேல பொசசிவ்னஸ் இருந்தா, அதை என்கிட்ட நீங்க சொல்லி இருக்கணும். என்கிட்ட இருந்து உங்களுக்கு என்ன வேணும்னு கூட எனக்கு தெரியல. எல்லா உறவுகளோடையும் ஒரு குடும்பம் வேணும்னு நினைதச்சவர் நீங்க தான். அப்படி இருக்கும் போது, எப்போ நீங்க பொசசிவ்வான ஒருத்தனா மாறினீங்க? இங்க இருக்கிறதுக்கு உங்களுக்கு விருப்பமில்லன்னு சொல்லி இருந்தா, நான் உங்க கூட இந்த வீட்டை விட்டு வந்திருப்பேன். உங்க மனசுல என்ன இருந்ததுன்னு எப்பவாவது எனக்கு நீங்க தெரியப்படுத்தினீங்களா? நீங்க பேசுற பேச்சும், செயலும் வித்தியாசமா இருந்தா, உங்க மனசுல என்ன இருக்குன்னு நான் எப்படி தெரிஞ்சுக்க முடியும்?"
"எனக்கு அதைப் பத்தி உன்கிட்ட சொல்ல பயமா இருந்தது. நீ என்னை வெறுத்திடுவியோன்னு நெனச்சேன்"
"அதனால, உங்க வெறுப்பை என் தம்பி கிட்ட காட்டினீங்க... இல்லயா?"
தலை குனிந்து நின்றான் சித்திரவேல்.
"இன்னு, போலீசுக்கு ஃபோன் பண்ணு. அவங்க இவரை அரெஸ்ட் பண்ணட்டும்" என்றால் நித்திலா.
"நித்தி, ப்ளீஸ், தயவு செஞ்சி அப்படி செய்யாத. அந்த மருந்தை தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது. எல்லாத்துக்கும் அந்த டாக்டர் ஒருத்தன் தான் காரணம்"
"அந்த டாக்டரோட வாயை மூட வைக்கிற அளவுக்கு இன்னொருத்தரும் இதுல இருக்காங்க... அப்படித்தானே?" என்றாள் நித்திலா.
"நான் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுறேன்"
"தேவையில்ல" என்று இனியவனை பார்த்த நித்திலா,
"இன்னு, 7010xxx xxx டாக்டரோட லாக்கப் டெத்துக்கு பின்னால இருக்கிற அந்த மனுஷனோட நம்பர் இது தான். கமிஷனர் கிட்ட இந்த நம்பரை கொடுத்து அவனை டிரேஸ் பண்ண சொல்லி அரெஸ்ட் பண்ண சொல்லு" என்றாள் நித்திலா.
சரி என்று தலைகசைத்தான் இனியவன்.
"இவரையும் சேர்த்து" என்றாள்.
தன் தலையை இடவலமாய் அசைத்தபடி பின்னோக்கி நகர்ந்தான் சித்திரவேல்.
"நான் செஞ்சது தப்பு தான். ஆனா நான் அதை பணத்துக்காக செய்யல. அன்புக்காக தான் செஞ்சேன்" என்றான் சித்திரவேல்.
"போடா, நீயும் உன் அன்பும்" என்று தொண்டை கிழிய கத்தினாள் நித்திலா.
சித்திரவேலை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான் இனியவன். அடுத்த நொடி அங்கிருந்து தலைத்தெறிக்க ஓடினான் சித்திரவேல். அவனை பிடிக்க இனியவன் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அவனுக்கு தெரியும் எப்படியும் போலீஸ் அவனை பிடித்து விடுவார்கள் என்று. தொப்பென்று தரையில் அமர்ந்த நித்திலா, மனம் விட்டு அழுதாள். அனைவரும் அவளை நோக்கி ஓடினார்கள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top