71 நித்திலாவில் நடவடிக்கை

71 நித்திலாவில் நடவடிக்கை

ஆணையரின் வீட்டிற்கு வந்தான் இனியவன்.

"உக்காருங்க இனியவன்" என்று அவர் கூற,

"தேங்க்யூ சார்" என்று அவர் முன்னாள் அமர்ந்தான் இனியவன்.

"சொல்லுங்க உங்களுக்கு யார் மேல சந்தேகம் இருக்கு?"

"நான் ஆறு மாசத்துக்கு முன்னாடி அட்டாக் பண்ணப்பட்டேன். தலையில அடிச்சதால நான் பைத்தியம் ஆனேன். அந்த ஆறு மாசத்துல என் வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது. என் கௌரவம் பாதிக்கப்படக் கூடாதுன்னு என் குடும்பத்தார் நான் பைத்தியமா இருந்த விஷயத்தை ரகசியமாக வச்சிருந்தாங்க. நான் அடிபட்ட பிறகு, ரீனாசர்மா குருகிட்ட என்னோட மெண்டல் கண்டிஷன் பத்தி பேசி கிண்டல் பண்ணியிருக்கா. அதை பத்தி அவளுக்கு எப்படி தெரியும்னு எனக்கு தெரியல. ஏன்னா, அந்த விஷயத்தை என் குடும்பத்தார் ரொம்ப சீக்ரட்டா வச்சிருந்தாங்க. அது தான் குருவுக்கு அவ மேல சந்தேகத்தை வர வச்சிருக்கு. அவளுக்கு நான் இருந்த கண்டிஷன் எப்படி தெரிஞ்சிது? அதேநேரம் ரீனாவோட ஹஸ்பெண்ட் ராஜாசர்மா மேலேயும் எனக்கு சந்தேகம் இருக்கு. அவருக்கு ரீனா மேல ரொம்ப பிரியம் ஜாஸ்தி. ஆனா அவ என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு அவரை டைவர்ஸ் பண்ணிட்டா"

"அப்படின்னா நிச்சயமா ராஜா சர்மாவையும் நம்ம சந்தேகப்பட்டு தான் ஆகணும்"

"என்னோட ஆக்சிடண்ட்டுக்கு அப்புறம் ராஜா சர்மாவை டைவர்ஸ் பண்ணிட்டு, சித்தார்த் அப்படிங்கற ஒருத்தனை வளச்சி பிடிச்சா. அவங்க ரெண்டு பேரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்ல இருந்தாங்க. சமீபத்துல சித்தார்த் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டான். அதுவரைக்கும், எங்க ரெண்டு பேருடைய ஆக்சிடென்ட்க்கும் பின்னாடி ராஜா சர்மா தான் இருப்பார்னு நான் நினைச்சேன். ஆனா நான் சித்தார்த்தத்தோட இறுதி சடங்கு போயிருந்தப்போ, சித்தார்த்தோட குடும்பம் அவனுக்கும் ரீனாவுக்கும் இருந்த ரிலேஷன்ஷிப்ல விருப்பம் இல்லாம இருந்தாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அத பத்தி நடந்த வாக்குவாதத்துல ரீனா சித்தார்த்தை அடிச்சு காயப்படுத்தினதா தெரிஞ்சுகிட்டேன். அதனால சித்தார்த் தன்னுடைய ரிலேஷன்ஷிப்பை பிரேக்கப் பண்ணிக்கிட்டான். ரீனா அவனோட இறுதி சடங்குக்கு கூட வரல. அதனால, அவளே அவனை கொன்னிருக்கலாம்னு எனக்கு சந்தேகம் இருக்கு"

"நீங்க சொல்றதும் சரி தான். அவங்களுக்கு பிரேக் அப் ஆனதை நினைச்சு ராஜா சர்மா சந்தோஷம் தான் பட்டிருப்பார். அதனால அவர் அவனை கொன்னிருக்க வாய்ப்பில்ல"

"அவரை நம்ம அவ்வளவு சுலபமா எடுத்துக்க முடியாது, சார். அவர் எந்த விஷயத்துலயும் அவ்வளவு சீக்கிரமா காம்ப்ரமைஸ் ஆக மாட்டார். அவருக்கு ஒரு விஷயம் வேணும்னு நினைச்சா, வேணும் தான். அப்படித்தான் அவர் ரீனாவையும் அவ விருப்பம் இல்லாமலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு"

"அவங்க கல்யாணத்துக்கு பிறகு சந்தோஷமா இல்லையா?"

"இருந்திருப்பாங்கன்னு எனக்கு தோணல, சார். ராஜாஷர்மா அவளை தன் கம்பெனியோட டைரக்டரா மாத்தினார். அவ பேர்ல சில ப்ராப்பர்ட்டிஸ் கூட ரிஜிஸ்டர் பண்ணி கொடுத்தாரு. ஆனாலும் அவ அவரை ஏத்துக்க தயாராயில்ல. ஏன்னா, அவளுக்கு வயசானவர் கூட வாழ பிடிக்கல"

"இதெல்லாம் நமக்கு தெரிஞ்சி இருந்தாலும், இதை எல்லாம் நிரூபிக்க ஆதாரம் வேணும். ஆனா எப்படியும் அந்த ஆதாரத்தை நம்ம தேடி கண்டுபிடிச்சிடலாம். ஒரு நல்ல ஆஃபிசர் கிட்ட நான் இந்த கேஸை ஒப்படைக்கிறேன். கவலைப்படாதீங்க"

"ஓகே சார்"

"எனக்கும் உங்ககிட்ட கேக்க சில கேள்விகள் இருக்கு. ரீனா உங்க மெண்டல் கண்டிஷனை பத்தி கிண்டல் பண்ணதா சொன்னீங்க. உங்க குடும்பத்துல இருக்கிற யார் மேலயும் உங்களுக்கு சந்தேகம் வரலையா? ஏன்னா உங்க குடும்பத்தை சேர்ந்த யாராவது ஒருத்தர் கூட கல்ப்ரிட்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இல்ல, ஒருவேளை அவங்க உங்க மெண்டல் கண்டிஷன் பத்தி யார்கிட்டயாவது தெரிஞ்சோ தெரியாமலோ உளறி இருக்கலாம்"

தூயவனின் முகம், சித்திரவேலை நினைத்து மாறியது. அதை கவனிக்க தவறவில்லை ஆணையர்.

"தப்பா நினைக்காதீங்க இனியவன். மல்டி மில்லியனரா இருக்கிறது அவ்வளவு ஈசி இல்லை. அது முள்ளு மேல நடக்கிற மாதிரியான வாழ்க்கை. இந்த உலகத்துல 90% பிரச்சனைகள் பணத்தால தான். பணம் யாரை வேணும்னாலும் மாத்தும். அது எதையும் நடத்திக் காட்டும்"

ஆம் என்று தலையசைத்தான் இனியவன்.

"ஒரு டாக்டர் உங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்துக்கிட்டு இருந்திருக்காரு. ஆனா உங்ககிட்ட எந்த மாற்றமும் தெரியல. அவரையும் உங்க ட்ரீட்மென்ட் மெத்தடையும் மாத்தணும்னு உங்க குடும்பத்துல இருக்க யாருக்குமே தோணலையா?"

"அவங்க அப்போ எந்த மாதிரியான சூழ்நிலையில இருந்தாங்கன்னு எனக்கு தெரியல, சார். நமக்கு அந்த டாக்டர்கிட்ட இருந்து ஏதாவது க்ளூ கிடைக்கும்னு நான் எதிர்பார்த்தேன்"

"அந்த டாக்டருக்கு உங்க குடும்பத்துல இருக்கிற யாரோ ஹெல்ப் பண்ணி இருக்கணும்னு நான் ரொம்ப ஸ்ட்ராங்கா சந்தேகப்படுறேன். ஏன்னா, அப்படி ஒரு உதவி இல்லாம டாக்டரால தனியா எதையுமே செஞ்சிருக்க முடியாது"

"உண்மை தான் சார். என் ஒய்ஃப் தான் அந்த டாக்டரோட திருட்டுத்தனத்தை கண்டுபிடிச்சாங்க"

"வைஃபா? உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...? எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உங்களுக்கு கல்யாணம் ஆனதா எனக்கு ஞாபகம் இல்லையே" என்றார் அதிர்ச்சியாக.

"நான் பைத்தியமா இருந்தப்போ எங்க அக்கா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க, சார்" என்று நடந்தவற்றை அவரிடம் கூறினான் இனியவன், சித்திரவேலின் பாகத்தை மட்டும் தவிர்த்து. ஏனென்றால் காவலர்கள் அவனை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். அவன் கூறிய விஷயம் ஆணையரை வாய்ப்பிளக்கச் செய்தது.

"இதையெல்லாம் என்னால நம்பவே முடியல. உங்க குடும்பத்துல புதுசா நுழைஞ்ச ஒரு பொண்ணு உங்க குடும்பத்துல இருந்த மத்தவங்கள விட நல்லாவே யோசிச்சிருக்காங்க போல இருக்கு"

"சந்தேகம் இல்லாம, சார்"

"உங்க குடும்பத்துல இருக்கறவங்களை என்கொயரி பண்றதுக்கு எனக்கு உங்க பர்மிஷன் வேணும்"

சில நொடி யோசித்தான் இனியவன். இதனால் அவன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருத்தப்படத்தான் செய்வார்கள். ஆனால் அவனுக்கு வேறு வழி இல்லை.

"சரிங்க சார்" என்றான்.

"நான் உங்களுக்கு ஃபோன் பண்ணிட்டு வரேன். எல்லாரையும் வீட்ல இருக்க சொல்லுங்க"

"சரிங்க சார்" அவரிடம் இருந்து விடைபெற்றான் இனியவன்.

காரில் அமர்ந்து ஆழ்விக்கு ஃபோன் செய்தான். வரவேற்பறையில் பாட்டி, பார்கவியுடனும் அமர்ந்திருந்த ஆழ்வி, அந்த அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ..."

"ஆழ்வி, உன்கூட யாராவது இருக்காங்களா?"

"ஆமாம்"

"நம்ம ரூமுக்கு வா"

அவள் விஷயத்தை புரிந்து கொண்டு,

"எந்த ஃபைலை கேட்கிறீங்க?" என்றாள். 

"நம்ம ரூமுக்கு வந்துட்டு அதுக்கப்புறம் எனக்கு கால் பண்ணு"

"சரிங்க" என்று பாட்டியை பார்த்து,

"அவருக்கு எதோ முக்கியமான ஃபைல் வேணுமாம். அதை அவர் லேப்டாப்பில் இருந்து எடுத்துக் கொடுக்க சொல்றாரு" என்று கூறிவிட்டு தன் அறைக்கு வந்த ஆழ்வி, மீண்டும் இனியவனுக்கு ஃபோன் செய்தாள்.

"நம்ம ரூமுக்கு வந்துட்டியா?"

"வந்துட்டேன். கதவை சாத்தி தழ்பால் போடு"

"போட்டுட்டேன்"

"நான் யாரை சந்தேகப்படறேன்னு உனக்கு இதுக்கு முன்னாடி சொல்லல. நான் சொல்றதை மட்டும் கேளு"

"அண்ணன் வீட்ல இல்ல"

"எனக்கு தெரியும். அவன் கோர்ட்டுக்கு போயிருக்கான்"

"சரி, சொல்லுங்க"

"உன்னை நான் திடீர்னு என் வைஃபா எல்லாரும் முன்னாடியும் ஏன் ஏத்துக்கிட்டேன் தெரியுமா?"

"தெரியாது"

"ஏன்னா நான் சித்தார்த்தோட ஃப்யூனரலுக்கு போயிருந்தப்போ ரீனாவை பத்தி ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டேன்" அவன் ஆணையரிடம் கூறிய விஷயத்தை ஆழ்வியிடம் கூறினான்.

"அதனால தான் இந்த விஷயத்தை டிலே பண்ண வேண்டாம்னு நினைச்சேன். உன்னை என் வைஃபா ஏத்துக்கிட்ட தான் டாக்டரை அரெஸ்ட் பண்ண வைக்க முடியும். அதுக்காகத்தான் அப்படி செஞ்சேன்"

"ஆனா டாக்டர் தான் இறந்துட்டாரே..." என்றாள் கவலையாக.

"அது விஷயமே இல்ல. சித்திரவேல் தான் இருக்கானே... தேவைப்பட்டா டாக்டரும் சித்திரவேலும் என் மருந்தை பத்தி என்ன பேசினாங்கன்னு நம்ம மத்தவங்க கிட்ட சொல்லலாம்"

"நீங்க உண்மையா தான் சொல்றீங்களா?"

"ஆமாம். அதை செஞ்சு தான் ஆகணும். ஏன்னா, இந்த விஷயம் ரொம்ப தீவிரமாயிக்கிட்டே போகுது. டாக்டர் லாக்கப்ல இறந்தது தான் அதுக்கு ரொம்ப பெரிய உதாரணம்"

"நீங்க சொல்றது சரி"

"நீ வீட்லயே இருந்தாலும் ஜாக்கிரதையா இரு. முத்துவையும் அலர்ட் பண்ணு"

"சரி"

"நான் வீட்டுக்கு வரேன்"

"வாங்க" என்று அழைப்பை துண்டித்தாள்.

முத்துவை எச்சரிக்க சமையலறைக்கு சென்றாள். அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்தான் சித்திரவேல். வழக்கம் போலவே பாட்டி, பார்கவியை பார்த்து புன்னகைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றான். நிம்மதி பெருமூச்சு விட்டு சமையலறைக்கு வந்தாள் ஆழ்வி. முத்து அவளை பார்த்து புன்னகை புரிந்தான்.

"முத்து, அவர் உங்களை ஜாக்கிரதையா இருக்க சொன்னாரு" என்றாள் ரகசியமாக.

"எதைப் பற்றி சொல்றீங்க அண்ணி?"

"சித்ரா அண்ணனை பத்தி தான்"

"நான் ஏற்கனவே ஜாக்கிரதையா தான் இருக்கேன்"

"இன்னும் ஜாக்கிரதையா இருக்கணும். டாக்டர் போலீஸ் கஸ்டடியில் இறந்துட்டாரு. அந்த மருந்துக்கு பின்னாடி இருக்கிறவன் ரொம்ப ஆபத்தானவனா இருக்கணும்னு இனியவர் நினைக்கிறார். நீங்க தான் எனக்கு இங்க ஹெல்ப் பண்ணிங்க. அதனால இனியவர் உங்களை ஜாக்கிரதையா இருக்க சொன்னாரு"

"அண்ணன் நம்ம பக்கத்துல இருக்கும் போது நம்ம எதுக்காக  கவலைப்படணும்?"

"உண்மை தான். ஆனா, டாக்டர் இறந்துட்டாரே... அதையும் நம்ம மறக்க கூடாது"

"அவன் போலீஸ் கஸ்டடியில இருந்ததால தான் இறந்தான். அவன் மட்டும் நம்ம வீட்ல இருந்திருந்தா இறந்திருக்க மாட்டான்" என்று அவன் கூற, திகைப்பில் ஆழ்ந்தாள் ஆழ்வி. அவனுக்கு தான் இனியவனின் மீது எவ்வளவு நம்பிக்கை!

அவர்கள் இருவருக்கும் தெரியாது, அவர்களுடைய பேச்சை பார்கவி கேட்டுக் கொண்டிருந்தது. மருத்துவன் சிறைச்சாலையில் இறந்ததிலிருந்தே அவள் மிகவும் சஞ்சலத்துடன் காணப்பட்டாள். ஒரு தோழியாய், ஆழ்வி அதைப்பற்றி அவளிடம் பேசுவாள் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவள் அமைதியாக இருந்தாள். இனியவனிடம் இருந்து அழைப்பு வந்த பிறகு, அவனுக்கு கோப்பை கொடுப்பதற்காக தன் அறைக்கு வந்த ஆழ்வி, கதவை சாத்தி தள்ளிட்டுக் கொண்டது அவளை மேலும் குழப்பியது. அது தான் அவளை ஆழ்வியை தொடர்ந்து சமையல் அறைக்கு வரச் செய்தது. இங்கு, அவள் வீட்டில் என்ன நடந்தது என்பதும், அதை செய்தது தன் மாமா என்பதும் தெரிய வந்தது. அவள் கண்கள் கலங்குவதை அவளால் தடுக்க முடியவில்லை. ஏனென்றால் இது நித்திலாவுக்கும் பாட்டிக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாய் இருக்கும். இந்த உண்மையை நித்திலா எப்படி தாங்க போகிறாள் என்று அவளுக்கு புரியவில்லை. அதை நினைத்த போது அவளது உடல் நடுங்கியது. சித்திரவேலின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை எப்படிப்பட்டது! அவன் எப்படி அவர்களை இந்த அளவிற்கு ஏமாற்ற துணிந்தான்? அதுவும் இனியவனுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்ய அவனுக்கு எப்படி மனம் வந்தது? எதற்காக அவன் அப்படி செய்திருப்பான்? எப்படி ஆழ்வி அவனை கண்டுபிடித்தாள்? எதற்காக அவள் அவனைப் பற்றி யாரிடமும் கூறாமல் இருக்கிறாள்? முத்துவுக்கும் கூட அவனைப் பற்றி தெரிந்திருக்கிறது. அப்படி என்றால் இது பற்றி குருவுக்கும் தெரியுமா? சித்திரவேலை பற்றி அவன் அறிந்திருப்பானா? யோசித்தபடி தன் அறைக்கு சென்றாள் பார்கவி.

இதற்கிடையில்...

தங்கள் அறைக்கு வந்த சித்திரவேல், கதவு சாத்தி தாளிடப்பட்டிருப்பதை பார்த்து முகம் சுருக்கினான். நித்திலா பகலில் எப்பொழுதும் தன் அறை கதவை வைப்பதில்லை. கதவை தட்டினான் சித்திரவேல். கதவை திறந்த நித்திலாவை பார்த்த சித்திரவேல் பதற்றம் அடைந்தான்.

"நித்தி, என்ன ஆச்சு உனக்கு? ஏன் ஒரு மாதிரியா இருக்க?" என்றான் அக்கறையாய்.

அது நித்திலாவை சற்று அசைத்து தான் பார்த்தது. இருந்தாலும் தன்னை சமாளித்துக் கொண்டு,

"தலைவலி. அதனால படுத்து தூங்கினேன்" 

"இப்போ உனக்கு எப்படி இருக்கு?"

"பரவாயில்ல"

"நான் தைலம் தேச்சு விடட்டுமா?"

"வேண்டாம்"

"காப்பி சாப்பிட்டியா?"

"நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்" என்று அவள் கூற, புன்னகைத்தான் சித்திரவேல்.

"சரி வெயிட் பண்ணு. நான் ஃபிரஷ் ஆயிட்டு வரேன்"

தனது உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றான் சித்திரவேல். அவனை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் நித்திலா. அவன் தன் மீது கொண்டிருந்த அக்கறை பொய்யாய் இருக்கும் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. தன் குடும்பத்தையே உடைத்துப் போடும் அளவிற்கு ஒரு செயலை அவன் செய்திருப்பான் என்பதை கூட அவளால் யோசிக்க முடியவில்லை.

மேசையின் மீதிருந்த சித்திரவேலின்  கைபேசியை கண்ட அவள், அதை எடுத்தாள். அதற்கு சித்திரவேல் ரகசிய சொல்லை பதிவு செய்ததில்லை. ஏனென்றால், அவனது கைபேசியை நித்திலா எப்பொழுதும் எடுத்ததில்லை. அதை எடுத்து, அவனுக்கு வந்திருந்த அழைப்புகளைப் பார்த்தாள். அவள் ஏற்று பேசிய அந்த எண், பட்டியலில் இருக்கவில்லை. எதற்காக அந்த எண்ணெய் சித்திரவேல் அழித்தான் என்று அவளுக்கு புரியவில்லை. அவனது காண்டாக்ட் லிஸ்ட்டை எடுத்து பார்த்தபோது பெயர் இல்லாமல் சில எண்கள் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவளுக்கு நன்றாக நினைவிருந்தது, அவள் ஏற்று பேசிய அந்த எண்7010 xxx xxx

அந்த எண் அவனது காண்டாக்ட் லிஸ்டில் இருந்தது. அந்த எண்ணுக்கு அவள் அழைப்பு விடுத்தாள். அந்த அழைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

"சித்திரவேல், எத்தனை தடவை எனக்கு ஃபோன் பண்ணி புலம்பிக்கிட்டே இருக்க போற? நீ பதட்டமா இருக்கேன்னு எனக்கு தெரியும். நான் சொன்ன மாதிரியே டாக்டரோட வாயை மூட வச்சேனா இல்லயா? ரிலாக்ஸா இரு" அழைப்பு துண்டிக்கப்பட்டது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top