7 வித்தியாசம்...

7 வித்தியாசம்...

தவறான நேரத்தில் தன் முன்னாள் வந்து நின்ற தன் அண்ணன் சொல்லின்செல்வனை பார்த்து, திகில் அடைந்தாள் ஆழ்வி. அவளிடமிருந்து பணத்தை பெறுவதற்க்காக அவன் அடிக்கடி அவள் கல்லூரிக்கு வருவது வழக்கமாய் இருந்தது. இப்பொழுதும் கூட, பணத்திற்காக தான் அவன் அங்கு வந்திருந்தான். ஆழ்வி எப்பொழுதும் அவனுக்கு பணம் கொடுத்ததில்லை என்றாலும், அவளை தொந்தரவு செய்வதை அவன் நிறுத்தவில்லை. சில சமயங்களில், அவனது தொந்தரவை சகிக்க முடியாமல் பார்கவியும் மீனாட்சியும் கூட அவனுக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள்.

பார்கவியை நோக்கி கோபத்துடன் வந்தான் சொல்லின்செல்வன். அவளுக்கு முன்னாள் வந்து நின்று, பார்கவியை மறைத்துக் கொண்டாள் ஆழ்வி.

"உன் அண்ணன், ஆழ்வியை ரேப் பண்ணானா?" என்றான் பார்கவியிடம்.

"இல்ல, அவர் என்னை ரேப் பண்ணல. அவர் மனநிலை சரியில்லாதவர். என்னை அட்டாக் பண்ணாரு. அவ்வளவு தான்" என்று அவன் கேள்விக்கு பதில் அளித்தாள் ஆழ்வி.

"பொய் சொல்லாத. அவ சொன்னதை நான் கேட்டேன். அவ உன்கிட்ட மன்னிப்பு கேட்டா. உன் உடம்புல தழும்பெல்லாம் இருக்குதாமே"

"அண்ணா, நடந்ததெல்லாம் நான் உங்ககிட்ட சொல்லிடுறேன்" என்றாள் பார்கவி கெஞ்சலாக.

"நீ என்ன சொல்ல போற? உங்க அண்ணன் என் தங்கச்சியை தொட்ட மாதிரி, நான் உன்னை தொட்டிருந்தா, நீ இப்படித்தான் கேஷுவலா நின்னு பேசிகிட்டு இருப்பியா?"

பார்கவி தலை குனிய, தன் பல்லை கடித்தாள் ஆழ்வி.

"அர்த்தம் இல்லாம பேசுறதை நிறுத்து. நீ என்ன, அவ அண்ணனை மாதிரி மனநிலை சரியில்லாதவனா? உண்மைய சொல்லப்போனா, நீ தான் பைத்தியம் மாதிரி கத்திக்கிட்டு இருக்க. இது என் மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம்னு உனக்கு புரியலையா? ரகசியமா இருக்க வேண்டிய விஷயத்தை, இப்போ நீ தான் சத்தம் போட்டு பேசிகிட்டு இருக்க" அவனைக் கடிந்து கொண்டாள் ஆழ்வி.

"நீ சொல்றது சரி தான். இது இங்க பேச வேண்டிய விஷயம் இல்ல"

தன் கைபேசியை எடுத்து தன் வீட்டு எண்ணுக்கு ஃபோன் செய்தான் அவன்.

"அண்ணா, ப்ளீஸ் அம்மா கிட்ட சொல்லாத"

"ஏன் சொல்லக்கூடாது? யாரை காப்பாத்த நீ முயற்சி பண்ற?" என்றான் பார்கவியை பார்த்தவாறு.

அதேநேரம் கற்பகம் அழைப்பை ஏற்றார். அவர் எதுவும் கேட்பதற்கு முன்,

"நீ பெத்த பொண்ணுக்கு என்ன நடந்துச்சுன்னு கூட தெரியாம, வீட்ல நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" சீறினான் அவன்.

அவன் எதைப் பற்றி பேசுகிறான் என்று புரியாத கற்பகம், முகம் சுருக்கினார்.

"முதல்ல விஷயத்தை சொல்லு, அப்புறம் கத்து"

"உன் பொண்ணை ஒருத்தன் கெடுத்துட்டான்"

"என்ன்னனது...?"

"அவ ஃபிரண்டு பார்கவியோட அண்ணன் தான் அந்த வேலையை செஞ்ச நல்லவன். தன் ஃபிரண்டை காப்பாத்துறதுக்காக இந்த விஷயத்தை உன்கிட்ட இருந்து உன் பொண்ணு மறைச்சிட்டா"

அடியோடு ஆட்டம் கண்டார் கற்பகம். ஆழ்வி கெடுக்கப்பட்டாளா?

"இங்க பாரு, இந்த விஷயத்தை நான் விடப்போறதில்ல. நான் அவங்க வீட்டுக்கு போறேன். உன் பொண்ணு மேல உனக்கு அக்கறை இருந்தா, நீயும் அங்க வா" அங்கிருந்து கிளம்பினான் அவன்.

எரிச்சல் அடைந்த ஆழ்வி, பார்கவியை பார்த்தாள். அவளது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

"கவி, உன்கிட்ட காசு இருக்கா?" என்றாள் ஆழ்வி சங்கடத்துடன்.

தனது மணி பரிசை திறந்து, கட்டாய் 500 ரூபாய் நோட்டை எடுத்து அவளிடம் நீட்டினாள். அதைப் பெற்றுக் கொண்டு, தன் அண்ணனின் பின்னால் ஓடிச் சென்று, அவன் அங்கிருந்து தன் இருசக்கர வாகனத்தை கிளப்புவதற்கு முன், அவன் சட்டையை பிடித்து நிறுத்தினாள். அவளை நோக்கி திரும்பிய அவனது கோபம், அவள் கையில் கட்டாய் இருந்த பணத்தை பார்த்து பறந்தோடியது.

"இதை வாங்கிட்டு கிளம்பு" என்றாள்.

அவள் கையில் இருந்து அதை பறித்துக் கொண்ட அவன்,

"நான் உன்னை விடமாட்டேன்" என்றான் பார்கவியை பார்த்து எச்சரிக்கும் தொனியில்.

அவன் அங்கிருந்து சென்று விட்டான் தான், ஆனால் இந்த விஷயத்தை விட்டுவிடும் எண்ணம் அவனுக்கு இல்லை. அவன் தான் ஏற்கனவே கற்பகத்திடம் கொளுத்தி போட்டு விட்டானே...! மிச்சமிருக்கும் விஷயத்தை அவர் பார்த்துக் கொள்வார் என்று அவனுக்கு தெரியும். அவனுக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் பணம் அவ்வளவு எளிதாய் அவன் காண முடியாதது. இப்போதைக்கு அது அவனுக்கு போதுமானது. அந்த பணத்தை வைத்துக் கொண்டு, சிறிது நாட்களுக்கு குடித்துக்கொண்டு அவன் மகிழ்ச்சியாய் பொழுதை போக்க முடியும். அதனால் அவன் அங்கிருந்து சென்றான்.

"கவி, உன் ஃபோனை கொஞ்சம் குடு"

தன் கைபேசியை அவளிடம் கொடுத்தாள் பார்கவி. தன் வீட்டின் எண்ணுக்கு தொடர்பு கொண்டாள் ஆழ்வி. ஆனால் அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை. கற்பகம் ஏற்கனவே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டார் என்று அவளுக்கு புரிந்தது. இப்பொழுது அவள் இன்பவனம் செல்ல வேண்டும். கைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டு,

"நம்ம உங்க வீட்டுக்கு போகணும்" என்றாள்.

சரி என்று தலையசைத்து அவளுடன் நடந்தாள் பார்கவி. ஒரு நிமிடம் நின்ற ஆழ்வி, மீனாட்சியை பார்த்து,

"ஊருக்கு போனதுக்கு பிறகு எனக்கு ஃபோன் பண்ணு, பை.." என்றாள் ஆழ்வி.

உணர்ச்சிவசப்பட்ட மீனா, சரி என்று தலையசைத்தாள். அந்த நிலையிலும் அவளை வழி அனுப்பி வைத்த அவளது நிலையான மனம் கண்டு, வியப்பும்  பெருமையும் அடைந்தாள் மீனாட்சி.

ஆழ்வியும் பார்கவியும் இன்பவனம் நோக்கி பயணப்பட்டார்கள். அவர்கள் அங்கு சென்று சேர்ந்த அதே நேரம், கற்பகமும் ஆட்டோவில் வந்து இறங்கினார். காரை விட்டு குதித்த அவள், கற்பகத்தை நோக்கி ஓடினாள்.

"அம்மா..."

அவள் குரல் கேட்டு நின்ற கற்பகம்,

"செல்வா சொன்னது உண்மையா?" என்றார் கோபமாய்.

"இல்ல. அவர் மனநிலை சரியில்லாதவர். பொம்பளைங்க மேல ஈர்ப்பு ஏற்படுமாம். அதனால என்னை பார்த்து என் மேல பாஞ்சாரு. அவ்வளவு தான்"

"இதைப்பத்தி நீ ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?"

"அது அவசியம்னு எனக்கு தோணல"

"அவசியம் தான். வா, என் கூட..."

அவள் கையைப் பிடித்து இன்பவனத்தின் உள்ளே இழுத்துச் சென்றார் கற்பகம். அந்த வீட்டின் செழுமையை பார்த்து வாயடைத்து நின்றார் கற்பகம். பார்கவி பணக்காரப் பெண் என்று அவருக்கு தெரியும். ஆனால் அவள் இவ்வளவு பணக்காரி என்று அவருக்கு தெரியாது. அவரது பேராசைக்கார புத்தி பரபரவென கணக்கு போட்டு, ஒரு முடிவுக்கு வந்தது.

"வீட்ல யாரு???" என்று அவர் அரற்ற, அந்த குரல் வீடு முழுவதும் எதிரொலித்தது.

தத்தம் அறையிலிருந்து வெளியே ஓடி வந்த அவர்கள், ஒரு பெண்மணி ஆழ்வியுடன் நிற்பதை கண்டு, திகைத்தார்கள்.

"நான் ஆழ்வியோட அம்மா" என்றார் அங்கிருந்தவர்களின் மீது தன் கண்களை ஓட விட்ட கற்பகம்.

"வணக்கம்... வாங்க... நாங்களே உங்க வீட்டுக்கு வரணும்னு தான் நினைச்சுக்கிட்டு இருந்தோம்" என்றார் பாட்டி.

"ஓஓஓஓ... நினைச்சுக்கிட்டு இருந்தீங்களா? ரொம்ப சந்தோஷம்... என்னோட பொண்ணு நிலைமையில, உங்க வீட்டு பொண்ணு இருந்தா, அப்பவும் இப்படித்தான் நினைச்சுக்கிட்டே இருந்திருப்பீங்களா?"

அவர்களால் பதில் கூற முடியவில்லை. ஆம், இவ்வளவு கொடூர நிகழ்விற்கு பிறகு, அவர்கள் கற்பகத்தை சென்று சந்தித்திருக்க வேண்டும் தானே?

"என் பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு, எப்படி உங்களால நிம்மதியா சாப்பிட்டு தூங்க முடிஞ்சது?" என்றார் பற்களை படித்துக் கொண்டு.

அவர் கூறியதை கேட்டு நித்திலாவின் கண்கள் கலங்கியது. கற்பகத்தை நோக்கி ஓடிச் சென்ற பார்கவி, அவரது கரங்களை பற்றி கொண்டு,

"ஆன்ட்டி, தயவுசெய்து அப்படி சொல்லாதீங்க. ஆழ்வி என்னோட ஃப்ரெண்ட். நான் எப்பவுமே அவ சந்தோஷமா இருக்கணும்னு தான் நினைச்சிருக்கேன். இது எதிர்பாராம நடந்திருச்சு. எங்களை மன்னிச்சிடுங்க ஆன்ட்டி" என்று கெஞ்சினாள்.

"நீ மன்னிப்பு கேக்குறதால என் பொண்ணோட வாழ்க்கை மாறிட போகுதா? அவ இழந்தது அவளுக்கு திரும்ப கிடைக்குமா?"

பார்கவி அமைதியானாள்.

அப்பொழுது அவர்கள், உள்ளிருந்து ஒரு விசித்திரமான சத்தம் வருவதை கேட்டார்கள். கிரில் கதவை ஆட்டியபடி, இனியவன் தான் அந்த சப்தத்தை எழுப்பினான். அந்த சப்தத்தை எழுப்புவது யார் என்றும், அது எங்கிருந்து வருகிறது என்றும் புரிந்து கொண்ட கற்பகம், அந்த திசையை நோக்கி ஓடினார். கிரில் கதவுக்கு பின்னால் காட்டுமிராண்டி போன்ற தோற்றத்துடன் நின்றிருந்த இனியவனை கண்டார்.

தனக்கு முன்னாள் நின்ற பெண்ணை பார்த்தவுடன், வழக்கம் போல் உறும துவங்கினான் இனியவன்.

"நீ தானா டா அது? இப்போ எதுக்குடா இப்படி கத்துக்கிட்டு இருக்க? என் பொண்ணு வாழ்க்கையை நாசமாக்கினதுக்கு பிறகும் உனக்கு இன்னும் வெறி அடங்கலையா? பைத்தியக்காரா..."

தன் குரலை மேலும் உயர்த்தினான் இனியவன், அவர் தன்னை பார்த்து கத்துவதை கண்டு எரிச்சல் அடைந்த அவன். அந்த கிரில் கதவின் மீது ஏறி நின்று, வெறி கொண்டு அதை பிடித்து உலுக்கினான்.

தன் அம்மாவின் நடத்தையை சகித்துக் கொள்ள முடியவில்லை ஆழ்வியால். இனியவனுக்கும் கற்பகத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருப்பதாய் தெரியவில்லை. அவரும் மனநிலை சரியில்லாதவர் போல் தான் நடந்து கொண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து குரல் எழுப்பிக் கொண்டார்கள். கற்பகத்தை நோக்கிச் சென்றாள் ஆழ்வி.

"என் வயிறு எரியுதுடா... என் வயித்தெரிச்சல்  உன்னை சும்மா விடாது..."

அவரிடம் வந்த ஆழ்வி, அவர் கரத்தை பற்றி நிறுத்தினாள். அவளை பார்த்த இனியவனின் முகம் மாறியது. புரிந்து கொள்ள  முடியாத ஒரு முக பாவத்துடன் கிரில் கதவிலிருந்து மெல்ல இறங்கினான்.

"அம்மா, தயவு செய்து நிறுத்துங்க. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு"

"என்னை என்ன செய்ய சொல்ற? உன்னை வச்சுக்கிட்டு நான் என்ன செய்வேன்? உன்னை யாரு கல்யாணம் பண்ணிக்குவா? ரெண்டு நாளா நீ ஏன் படிக்காம இருந்தேன்னு எனக்கு இப்பதான் புரியுது. இந்த மன அழுத்தத்துல நீ பரிட்சையை நல்லா எழுதியிருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். உனக்கு எப்படி வேலை கிடைக்கும்?"

அவரது தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டு, அவருடன் நடந்தாள் ஆழ்வி. அவள் மெல்ல பின்னால் திரும்பிப் பார்க்க, தன் தலையை வெடுக்கென்று இழுத்து, சுவருக்கு பின்னால் ஒளிந்து கொண்டான் இனியவன்.

இவ்வளவு கலோபரத்திலும் நித்திலாவின் கண்கள் இனியவனின் மீதே இருந்தது. ஆழ்வியை பார்த்தவுடன் அவனது நடவடிக்கையை மாறியதை அவள் கவனித்தாள். அவளைப் பார்த்தவுடன் அவன் கத்துவத்தை நிறுத்தி விட்டான். அவனது முகம் மாறியது. ஆழ்வி கற்பகத்தை நோக்கி சென்ற போது, அவன் கிரில் கதவிலிருந்து கீழே இறங்கி, சுவருக்கு பின்னால் ஒளிந்து கொண்டான். இப்பொழுதும் கூட, பயந்தபடி மெல்ல அவளை எட்டிப் பார்த்த வண்ணம் இருந்தான். அதற்கான சரியான காரணம் நித்திலாவிற்கு புரியவில்லை. ஆனால், அவள் கண்டது உண்மை. இனியவன் ஆழ்வியை பார்த்து பயப்படுகிறான். அவளைப் பார்த்தவுடன் அடங்கிப் போனான். அவளுக்கு முன்னால் அமைதியாகி விட்டான். பெண்களைப் பார்த்தாலே அவர்கள் மீது பாய துடிக்கும் அவன், அவளைப் பார்த்தவுடன் வித்தியாசமாய் நடந்து கொண்டான். இதற்கு என்ன அர்த்தம்? ஆழ்வி மற்ற அனைவரிடமிருந்தும் வித்தியாசமானவள்.

"நீ இங்க வந்திருக்கவே கூடாது, ஆழ்வி" என்ற கற்பகம், பாட்டியை நோக்கி திரும்பி,

"எதுக்காக இப்படி ஒரு ஆபத்தான மனுஷனை வீட்ல வச்சுருக்கீங்க? எதுக்காக அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பாம இருக்கீங்க? இன்னும் எத்தனை பேரோட வாழ்க்கையை கெடுக்க போறீங்க? உங்க வீட்டுக்கு புக்கு வாங்க தானே என் பொண்ணு வந்தா? அது அவ்வளவு பெரிய குற்றமா? உங்க பைத்தியக்கார பிள்ளைக்கு என் பொண்ணை நீங்க இறையாக்கிட்டீங்க... அவன் என் பொண்ணை கெடுத்துட்டான். எங்களை மாதிரி ஏழைங்கன்னா நீங்க என்ன வேணா செய்வீங்களா?"

பார்கவி இல்லை என்று வேதனையுடன் தலையசைக்க, ஆழ்வியோ அதிர்ச்சி அடைந்தாள். அவள் தான் கூறினாளே, அவன் அவளை கெடுக்கவில்லை என்று... பிறகு எதற்காக அவளது அம்மா இப்படி கூறினார்? ஏன் அவர் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார்?

"ஒரு நிமிஷம்..." என்று கூறிய சித்திரவேலின் பக்கம் தன் பார்வையை திருப்பினார் கற்பகம்.

"உங்க நிலைமை எங்களுக்கு புரியுது. நீங்க பேசுறது எதுவும் தப்பும் இல்ல. உங்க இடத்துல யார் இருந்தாலும் அப்படித்தான் நடந்துக்குவாங்க. நீங்க என்ன கேட்டாலும் நாங்க செய்ய தயாரா இருக்கோம். ஆழ்விக்கு ஒரு நல்ல வேலை தறோம். இல்லன்னா, அதுக்கு பதிலா பணமா வேணும்னாலும் வாங்கிக்கோங்க"

தன் தலையை உயர்த்தி அவனை பார்த்து முறைத்தாள் ஆழ்வி.

"இல்ல, இல்ல, ப்ளீஸ், என்னை தப்பா நினைக்காதீங்க ஆழ்வி. எங்களால வேற என்ன செய்ய முடியும்னு எங்களுக்கு புரியல. இதுக்கு மேல என்ன செய்யறதுன்னு எங்களுக்கு தெரியல. சத்தியமா உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு மட்டும் நாங்க நினைக்கிறோம். தயவுசெய்து வேண்டாம்னு சொல்லாம வாங்கிக்கோங்க. அது உங்க எதிர்காலத்துக்கு உதவும்" என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான் சித்திரவேல்.

அதை வேண்டாம் என்று மறுத்தலிக்க ஆழ்வி முயன்ற போது,

"எவ்வளவு கொடுப்பீங்க?" என்று கற்பகம் கேட்க, அதிர்ச்சி அடைந்தாள் ஆழ்வி.

"பத்து லட்சம்???" என்றான் சித்திரவேல் சந்தோஷத்துடன்.

கற்பகத்தின் முகம் ஒளி பெற்றது. ஆனாலும் அடிக்கும் கல்லை அடித்துப் பார்க்கலாம், மாங்காய் விழுந்தால் லாபம் என்று எண்ணிய அவர்,

"எனக்கு இருபது லட்சம் வேணும்" என்றார்.

"தாராளமா வாங்கிக்கோங்க..."

"அம்ம்ம்ம்மா..." பல்லை கடித்த படி அவர் கையைப் பிடித்தாள் ஆழ்வி.

"நான் என்ன செய்றேன்னு எனக்கு நல்லா தெரியும். நீ சும்மா இரு. இவ்வளவு பணம் சம்பாதிக்கிற ஒரு சந்தர்ப்பம் நமக்கு எப்பவும் கிடைக்காது"

"சம்பாதிக்கிற சந்தர்ப்பமா?" என்ற ஆழ்வியின் குரலில் வலி தெரிந்தது.

அடுத்த நொடி தனது  காசோலை புத்தகத்தை எடுத்த சித்திரவேல், அவர் கேட்ட தொகையை அதில் எழுத முனைய, நித்திலா கூறியதை கேட்டு நின்றான்.

"நான் உங்களுக்கு அம்பது லட்சம் தரேன்"

கற்பகம் அவளை மலைப்புடன் பார்க்க, ஆழ்வி அதிர்ச்சி அடைந்தாள்.

"நான் உங்களுக்கு அம்பது லட்சம் தரேன், உங்க பொண்ணை என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சா...!" என்று அந்த வாக்கியத்தை முடித்து, அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாள் நித்திலா.

ஒன்றும் கூறாமல் தன் அம்மாவின் முக பாவத்தை கவனித்தாள் ஆழ்வி. அவரது முகபாவம் அவளுக்கு நடுக்கத்தை தந்தது. ஆழ்வியின் பக்கம் தன் முகத்தை திருப்பிய கற்பகம், அவள் தன் பல்லை கடித்துக் கொண்டு, தன்னை அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு மென்று விழுங்கினார். ஆனால், மீண்டும் நித்திலா கூறியதை கேட்டு அவர் ஆடிப் போனார்.

"ஒரு கோடி கொடுக்க கூட நான் தயாரா இருக்கேன். என்ன சொல்றீங்க?"

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top