69 கைபேசி அழைப்பு
69 கைபேசி அழைப்பு
புன்னகைத்தபடி தன் அறையை நோக்கி சென்றான் இனியவன். முதலிரவா? சந்தேகம் இல்லாமல் அது அவர்களது முதல் இரவு தான். ஆனால் முதலிரவு நடத்தப்படுவதற்கான நோக்கத்தை தான் அவர்கள் ஏற்கனவே பூர்த்தி செய்து விட்டார்களே...! அதைப் பற்றி யோசித்துக் கொண்டு சென்ற இனியவன், பாட்டி கூறுவதை கேட்டு நின்றான்.
"என்ன யோசிச்சிகிட்டு இருக்க, நித்தி?"
"இன்னு சொன்ன அந்த மோசமான மருந்தை பத்தி யோசிக்கிறேன் பாட்டி. இன்னுவை இந்த அளவுக்கு அழிக்கணும்னு நினைக்கிற அந்த கொடூரமான ஆள் யாரா இருப்பாங்கன்னு யோசிக்கிறேன்"
ஆம் என்று தலையசைத்தார் பாட்டி. இனியவனும் ஆழ்வியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சித்திரவேல் மென்று விழுங்கியபடி தலைகுனிந்து கொண்டான். தன் அறைக்குச் செல்லும் எண்ணத்தை கைவிட்ட இனியவன், அவர்களுடன் வந்து அமர்ந்து கொண்டான்.
"நானும் அதைப்பத்தி தான் பாட்டி யோசிச்சுக்கிட்டு இருக்கேன். எதுக்காக அவங்க என்னை கொல்லாம பைத்தியக்காரனா வச்சிருக்கணும்னு நினைச்சாங்க?" என்றான் இனியவன்.
"அவங்களுக்கு உங்க மேல பொறாமை இருக்கணும். உங்க வளர்ச்சியை சகிக்க முடியாம தான் அப்படி செஞ்சிருக்கணும்னு நினைக்கிறேன்" என்றாள் ஆழ்வி.
"ஆழ்வி சொல்றது ரொம்ப சரி. இல்லன்னா அவங்க ஏன் உன்னை பைத்தியமாக்கி இருக்கணும்?"
"என்னை பைத்தியமா வச்சிருந்தது யாருன்னு தெரிஞ்சாகணும். அது மட்டும் யாருன்னு தெரிஞ்சா, என் வாழ்க்கையோட விளையாடினதுக்காக அவங்களை ஒவ்வொரு நிமிஷமும் வருத்தப்பட வைப்பேன்" என்றான் இனியவன் கோபமாய். அது சித்திர வேலை பதற்றத்திற்கு உள்ளாகியது.
இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று எண்ணினான் சித்திரவேல். அவனுக்கு உதவியாய் இருந்த மருத்துவன் கைது செய்யப்பட்டு விட்டான். அவன் இப்பொழுது தேர்ட் டிகிரி ட்ரீட்மெண்டை அனுபவித்துக் கொண்டிருப்பான். நிச்சயம் உண்மையை உளறி விடுவான். அப்படி என்றால் தானும் சிறைக்குச் செல்ல நேரிடும். அது நடக்கக்கூடாது.
"இப்படிப்பட்ட கொடூர நோக்கம் இருக்கிற மனுஷங்க இருக்காங்கன்னு என்னால நம்பவே முடியல" என்றார் பாட்டி
"அப்படிப்பட்ட ஆளுங்கெல்லாம் நிச்சயம் இருக்கத்தான் செய்வாங்க பாட்டி. என்ன ஒன்னு, அவங்க உண்மை முகத்தை மறைச்சுக்கிட்டு இருப்பாங்க. அவர்களோட உண்மையான முகம் என்னன்னு யாருக்கும் தெரியாது" என்றான் மறைமுக அர்த்தத்தோடு.
"நீ யாரை பத்தி பேசுற ண்ணா?" என்றாள் பார்கவி.
"எனக்கு சில பேர் மேல சந்தேகம் இருக்கு. ஆனா அவங்க பேரை என்னால இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனா, ரொம்ப சீக்கிரம் அவங்க யாருன்னு வெளியில தெரிய வரும்"
இனியவன் தன் கோபத்தை கட்டுப்படுத்துவதை உணர்ந்தான் சித்திரவேல்.
"ஒருவேளை, இந்த விஷயத்துக்கு பின்னாடி இருக்கிறது யாருன்னு டாக்டர் சொல்லலன்னா என்ன செய்வீங்க?" என்றாள் ஆழ்வி.
இனியவனின் முகத்தில் ஒரு கொடூர புன்னகை தோன்றியது.
"அவன் ஏன் சொல்லாம போக போறான்? அவனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு" என்றான் ஆபத்தான புன்னகையுடன்.
"கமிஷனர் கிட்ட சொல்லி அந்த மருந்தை அவனுக்கும் கொடுக்க சொல்லு. அது எப்படிப்பட்ட வேதனையை தரும்ன்னு அவனும் தெரிஞ்சுக்கட்டும்" என்றாள் நித்திலா கோபமாய்.
அதைக் கேட்ட சித்திரவேல் மொத்த சக்தியும் இழந்தது போல் உணர்ந்தான். ஏற்கனவே இனியவன் கோபத்தில் இருக்கிறான். அது போதாதென்று நித்திலா வேறு அவனது கோபத்தில் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்கிறாள்.
"மெயின் கல்பிரிட்டுக்காக அந்த மருந்தை நான் பத்திரமா எடுத்து வச்சிருக்கேன் கா. அது யாருன்னு தெரிஞ்ச உடனே அந்த மருந்தை அவனுக்கு நான் கொடுப்பேன். அது மட்டும் இல்ல, அவனை துண்டு துண்டா வெட்டி அதை நாய்க்கு கொடுப்பேன்" என்றான் தன் வார்த்தைகளில் நெருப்பை வைத்து.
யாருக்கும் தெரியாமல், தன் கைபேசியில் இருந்து யாருடைய எண்ணுக்கோ அழைப்பு விடுத்து, அந்த அழைப்பை துண்டித்தான் சித்திரவேல். அவனுக்கு தெரியும், அந்த நபர் அவனுக்கு மீண்டும் அழைப்பு விடுப்பார் என்று. இனியவன் பேசியதை எல்லாம் ஒருவரிடம் அவன் கூறியாக வேண்டும் . ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் அவனுக்கு அழைப்பு வரவில்லை.
"இன்னு, நம்ம ஏன் நீ சந்தேகப்படுற ஆளுங்களோட ஃபோனை டிராக் பண்ண கூடாது?" என்று கூறி சித்திரவேலை மேலும் திகில் அடையச் செய்தாள் நித்திலா.
"இல்ல நித்தி, அது இல்லீகள்" என்றான் சித்திரவேல் அவசரமாக.
"இப்படிப்பட்ட தடை செய்யப்பட்ட மோசமான மருந்தை கொடுக்கறது மட்டும் லீகலா?" என்றாள்.
"இல்ல தான். ஆனா இப்போ கேஸ் போலீஸ் கைக்கு போயிடுச்சு. அதனால நம்ம எதுவும் செய்யக்கூடாது. நம்ம ஏதாவது செய்ய போக, அது நமக்கு எதிரா திரும்ப வாய்ப்பிருக்கு"
"விடுங்க கா. இதுக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும். அதை நான் ஏற்கனவே செஞ்சும் முடிச்சிட்டேன். இனியவன் கிட்ட வம்பு பண்ணா என்ன ஆகும்னு இந்த உலகம் சீக்கிரமே தெரிஞ்சுக்க போகுது" என்றான் இனியவன்.
அப்பொழுது நித்திலாவின் கைபேசிக்கு அழைப்பு வந்தது அதை பார்த்த அவள்,
"ஐயர் ஃபோன் பண்றாரு" என்று அழைப்பை ஏற்றாள்.
"சொல்லுங்க"
"......"
"ஆங்..."
"......."
"நிஜமாவா சொல்றீங்க? தேங்க்யூ" என்று அழைப்பை துண்டித்தாள் நித்திலா.
"முதலிரவை நடத்த இன்னைக்கி ரொம்ப நல்ல நாளாம்" என்று ஆழ்வியை பார்த்து புன்னகை புரிந்தாள் நித்திலா.
அவள் முகத்தில் தோன்றிய வெட்கத்தை பார்த்து இனியவன் புன்னகைத்தான். அவள் அதே வெட்கத்தோடு அங்கிருந்து ஓடிப் போனாள்.
அப்பொழுது சித்திரவேலின் கைபேசி ஒலித்தது. அதில் ஒளிர்ந்த எண்ணை பார்த்து எழுந்து நின்றான். அவன் எந்த அழைப்புக்காக காத்திருந்தானோ அந்த அழைப்பு தான் அது.
"நான் இப்ப வரேன்" என்றான்
"நீங்க இங்கிருந்தே பேசலாமே, மாமா" என்றான் இனியவன்.
"இல்ல இது ஒரு கேஸ் சம்பந்தப்பட்டது" என்று தன் அறையை நோக்கி நடந்தான் சித்திரவேல்.
அவனை கண்களை சுருக்கி சந்தேகத்தோடு பார்த்தான் இனியவன். அதை கவனித்தாள் நித்திலா.
"நான் இப்போ வரேன்" என்று தன் அறையை நோக்கி சென்றாள் நித்திலா.
"ஆமாம், ரொம்ப அவசரம் தான். அந்த டாக்டர் வாயை திறக்க கூடாது. இல்லன்னா நான் மாட்டிக்குவேன். அதுக்கப்புறம் இனியவன் நம்ம யாரையுமே விட்டு வைக்க மாட்டான். நம்மளை கொன்னா கூட பரவாயில்ல. நமக்கு நரகம்னா என்னன்னு காட்டுவான். அவன் அந்த அளவுக்கு கோவமா இருக்கான். அதை என்னால வார்த்தையால சொல்ல முடியல"
"......."
"அந்த டாக்டரை நம்ம எப்படியும் தடுத்தாகணும். நீங்க என்ன செய்வீங்கன்னு எனக்கு தெரியாது. அது நடந்தே தீரணும்"
"யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க?" என்று நித்திலா கேட்க, பின்னால் திரும்பிய சித்திரவேல் அழைப்பை துண்டித்து, தன் கைபேசியின் சத்தத்தை மொத்தமாய் குறைதான். ஏதாவது அழைப்பு வந்தாலும் அது நித்திலாவின் காதுக்கு செல்லாது அல்லவா?
"என்னோட கிளையன்ட்னு நான் தான் சொன்னேனே. அதான் கேஸ் பத்தி பேசிக்கிட்டு இருந்தேன்"
"ரொம்ப கண்டிப்பா பேசினீங்களே"
"சில சமயம் அப்படித்தான் பேச வேண்டி இருக்கு"
"இன்னு, ஆழ்வியோட ஃபர்ஸ்ட் நைட்டுக்கான ஏற்பாட்டை செய்யணும். நிறைய வேலை இருக்கு"
"அதைப்பத்தி கவலைப்பட வேண்டாம். என்னோட க்ளைன்ட் ஒருத்தர் மேரேஜ் அசம்ப்லர் தான். அவர் கிட்ட நம்ம வேலையை ஒப்படைச்சுட்டா அவர் எல்லாத்தையும் செஞ்சுடுவாரு"
"நல்லதா போச்சு"
மீண்டும் தன் கைபேசியை பார்த்தான் சித்திரவேல். ஆனால் அவன் எதிர்பார்த்த நபரிடம் இருந்து அழைப்பு வரவில்லை. அவருக்கு வேறு அழைப்பு வந்துவிட்டது போலிருக்கிறது.
"அப்படின்னா அவருக்கு கால் பண்ணி, வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க"
"ஒன்னு பண்ணு. நான் அவர் நம்பரை உன்கிட்ட கொடுக்கிறேன். நீயே அவர்கிட்ட பேசு"
"இது கூட நல்ல ஐடியா தான். நானே டைரக்டா பேசுறேன். ஆனா முதல்ல நீங்க அவர்கிட்ட பேசி என்னை இன்டெர்யூஸ் பண்ணி வையுங்க. அதுக்கப்புறம் நான் அவர்கிட்ட பேசுகிறேன்"
"சரி"
திருமண ஏற்பட்டாளரிடம் பேசி தேவையான ஏற்பாடுகளை செய்து முடித்தான் சித்திரவேல்.
அப்பொழுது அவன் பாக்கெட்டில் இருந்த கைபேசி வெளிச்சம் பெற்றது. அதில் சத்தம் இல்லாமல் வெளிச்சம் ஏற்பட்டதை நித்திலா கவனித்தாள் . மெல்ல அதை அவன் பாக்கெட்டில் இருந்து உருவி எடுத்து அந்த அழைப்பை ஏற்றாள். அதைக் கண்ட சித்திரவேல் திடுக்கிட்டான். அந்த கைபேசியை அவளிடம் இருந்து அவன் பறிக்க முயல்வதற்கு முன், அந்த அழைப்பை விடுத்தவன் பேச துவங்கினான்.
"டாக்டர் வாயை திறக்க மாட்டான். நீ கவலைப்படாதே"
அதைக் கேட்டு நித்திலா முகம் சுருக்கினாள்.
"யார் பேசுறீங்க?" என்றாள்.
அந்த அழைப்பை விடுத்தவன் துணுக்குற்றான்.
"இது குணசேகரன் தானே?" என்றான்.
"இல்லங்க. இது சித்திரவேல் நம்பர்"
"சாரி, ராங் நம்பர்" என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.
கைபேசியை கட்டிலின் மீது வைத்தாள் நித்திலா.
"யார் கால் பண்ணது?" என்றான் சித்திரவேல்.
"ராங் நம்பர்"
"சரி, எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் ஓவர்" என்றான்.
"தேங்க்யூ சித்ரா" என்று அவனை அன்பாய் அணைத்துக்கொண்டாள் நித்திலா.
சமையலறை
தேநீர் குடிக்க வேண்டும் என்று தோன்றியதால் சமையலறைக்கு வந்தாள் ஆழ்வி.
"வாழ்த்துக்கள் அண்ணி" என்றான் முத்து.
"தேங்க்யூ" என்றாள் ஆழ்வி.
"நீங்களும் அண்ணனும் ஒண்ணா சேர்ந்துட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்"
"எனக்கு தெரியும்"
"நான் உங்களுக்கு டீ போட்டுக் கொடுக்கவா?"
"இல்ல, உங்களுக்கும் சேர்த்து நானே போட்டுக் கொடுக்கிறேன்" என்று பாலை கொதிக்க வைத்தாள்.
முத்துவிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால் பின்னால் திரும்பி பார்க்க, அங்கே முத்து இருக்கவில்லை. நுழைவு வாயிலை பார்த்த அவளுக்கு முத்து அங்கிருந்து அவசரமாய் சென்றதன் காரணம் புரிந்து போனது. அங்கு நின்றிருந்த இனியவனை பார்த்து.
உதடு கடித்தபடி பாலை பார்த்துக்கொண்டு வெட்கத்தோடு நின்றாள். இனியவன் அவளை நோக்கி வருவது அவளுக்கு தெரிந்தது. ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள் ஆழ்வி.
அவள் பின்னால் வந்து நின்றான் இனியவன். அவன் எவ்வளவு நெருக்கமாய் நின்றான் என்பதை, அவள் தோளை உரசிய அவனது சூடான மூச்சு காற்று கூறியது. அவனது ஈர உதடுகளை தன் தோளில் உணர்ந்த அவள் தன் கண்களை மூடினாள். தன் கரங்களால் அவள் இடையை சுற்றி வளைத்தான். ஆழ்வி அடுப்பை அணைத்தாள். இதற்குப் பிறகு தன்னால் தேனீர் தயாரிக்க முடியும் என்று அவள் நம்பவில்லை.
அவளை தன்னை நோக்கி திருப்பியவன்,
"இன்னைக்கு ராத்திரி நீ என் ரூமுக்குள்ள என் பொண்டாட்டிங்குற உரிமையோட வர போற. நம்ம இனிமே தனித்தனியா இருக்க வேண்டியதில்ல"
"இதுக்காக தான் என்னை ஒய்ஃபா எத்துக்கிட்டீங்களா?"
"அதுக்காகவும் தான்"
"வேற என்ன காரணம்?"
"அப்பறம் சொல்றேன்"
"இப்போ ஏன் சொல்ல கூடாது?"
"இந்த ரொமான்டிக் மொமெண்ட்டை சோதப்ப வேண்டாம்னு தான்"
"அப்படின்னா?"
"அதை பத்தி பேச ஆரம்பிச்சா என் மூட் மாறிடும்... ரெடியா இரு... நம்ம ஃபஸ்ட் நைட் அவசரமா நடந்ததுல எனக்கு திருப்தியே இல்ல. உன்னை இன்னைக்கு ஆற அமர எடுத்துக்க போறேன்."
வெட்கம் தாங்காமல் அவன் தோளில் சாய்ந்த அவள்,
"இங்க எதுக்கு வந்திங்க?" என்றாள்.
"என் பொண்டாட்டியை கட்டிப்பிடிக்க"
"நீங்க இப்படி பேசுறதை யாராவது கேட்டா, அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்"
"நோ நோ, இன்னைக்கு அப்படி நடக்க கூடாது"
"ஏன்?"
"அப்பறம் நம்ம ஃபஸ்ட் நைட் நடக்காதே..." என்றான் சிரிப்பை அடக்கியபடி.
அவன் நெஞ்சில் குத்தினாள் ஆழ்வி மேலும் அவனை சிரிக்கச் செய்து.
அப்போது அவர்கள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டார்கள். அவனை லேசாய் தள்ளிவிட்டு நின்றாள் ஆழ்வி.
முத்து உள்ளே வருவதை பார்த்து வேறு யாரோ வருவதை புரிந்து கொண்டார்கள். சமையலறை மேடை மீது சாய்ந்து கொண்டு நின்றான் இனியவன். மீண்டும் அடுப்பை எரிய விட்டாள் ஆழ்வி. அவர்கள் எதிர்பார்த்தது போலவே பார்கவி அங்கு வந்தாள்.
"ஆழ்வி..." என்ற அவள் அங்கு இனியவன் நின்றதை பார்த்து நின்றாள்.
"நீங்க இம்ப்ரூவ் ஆகிட்டு வந்ததை பார்த்த டாக்டர், உங்களுக்கு ஒரு ஊசி போடணும்னு சொன்னாரு" என்று பேச்சை மாற்றினாள் ஆழ்வி.
"அப்படியா?" என்றான் இனியவன், அவர்கள் இதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்கவிக்கு காட்டுவதற்காக.
"ஆமாம் ண்ணா, குரு கூட அக்காவை கண்ணா பின்னான்னு திட்டிட்டாரு" என்று பார்கவி கூற, ஆம் என்று தலையசைத்த ஆழ்வி.
"குரு அண்ணா எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணாரு" என்றாள்.
"ஐ சீ..."
"உனக்கு என்ன வேணும், கவி?" என்றாள் ஆழ்வி
"ஒன்னும் இல்ல, உன் ரூமை வெக்கெட் பண்ண உனக்கு ஹெல்ப் வேணுமான்னு கேட்க வந்தேன்"
"சரி பண்ணலாம். இவர் டீ கேட்டாரு. போட்டு கொடுத்துட்டு வரேன்"
"டேக் யுவர் டைம்" என்று அங்கிருந்து சென்றாள் பார்கவி.
இனியவனிடம் தேனிர் குவளையை தந்தாள் ஆழ்வி. அதை ஒரு வாய் குடித்துவிட்டு, அந்த குவலையை அவள் கையில் திணித்து விட்டு சென்றான் இனியவன். அந்தத் தேநீரை புன்னகையோடு பருகினாள் ஆழ்வி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top