67 அந்த அணைப்பு
67 அந்த அணைப்பு
ஆழ்வியின் அறைக்குள் நுழைந்த நித்திலா அங்கு முத்து இருந்ததை பார்த்து திகைத்து நின்றாள்.
"என்ன ஆச்சுக்கா?" என்றான் இனியவன்.
"ஒன்னும் இல்ல இன்னு. நான் ஆழ்விகிட்ட பேச வந்தேன்" என்று தடுமாறினாள்.
"அப்படி என்னக்கா அவசரம்? அவகிட்ட பர்மிஷன் கூட கேட்காம நீங்க பாட்டுக்கு உள்ள வரீங்க?" என்றான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.
அதை கேட்டு திகைத்து நின்றாள் நித்திலா.
"அது வந்து..."
"நீங்க அவளை ஒரு கோடி கொடுத்து வாங்கினீங்க அப்படிங்கிறதுக்காக அவ ரூம்ல அவ பர்மிஷன் இல்லாம நுழையலாம்னு நினைக்கிறீங்களா?" என்றான் அருவருப்பான பார்வையோடு.
அவனது நேரடி தாக்குதலால் நித்திலா மட்டும் அல்ல, ஆழ்வியும் கூட சங்கடத்தில் ஆழ்ந்தாள்.
"நீ இங்க இருப்பேன்னு நான் எதிர்பார்க்கல, இன்னு"
"நான் என்ன கேட்டேன்னு நீங்க சரியா புரிஞ்சுக்கலன்னு நினைக்கிறேன். நான் இந்த ரூம்ல இருக்கேனா இல்லையாங்கிறது விஷயம் இல்ல. அவ பர்மிஷன் இல்லாம நீங்க எப்படி அவ ரூம்குள்ள வந்தீங்கன்னு தான் கேட்டேன்"
"நான் குழம்பி போய் இருந்தேன்"
"குழம்புறதுக்கு என்ன இருக்கு? அதுவும் இந்த நேரத்துல?" என்று அவன் கடிகாரத்தை பார்க்க, அது மணி 10 என்றது.
நித்திலா அமைதியாய் நின்றாள்.
"நீங்களும் முத்துவும் இந்த நேரத்துல் இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?" என்றான் சித்திரவேல்.
"எனக்கு கொடுக்கப்பட்ட மோசமான மருந்தை பத்தி ஆழ்விகிட்டையும் முத்துகிட்டையும் பேசணும்னு நெனச்சேன். அதனால தான் முத்துவை இங்க வர சொன்னேன். அதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா, லாயர் சார்?" என்றான் கிண்டலாய்.
மீண்டும் நித்திலாவை பார்த்து,
"உங்களை எது குழப்புச்சின்னு கேட்டேன்" என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டான் இனியவன். அவன் இந்த விஷயத்தை சுலபத்தில் விடுவதாய் இல்லை என்று தெரிந்தது.
நித்திலா சித்திரவேலை பார்த்து முறைத்து விட்டு, தன்னை சமாளித்துக் கொண்டு,
"உன்னால தான் நான் குழப்பமா இருக்கேன், இன்னு. நீ ஆழ்வியை உன் வைஃபா ஏத்துக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்க. நீ என்னோட ரெக்வஸ்ட்டை கன்சிடர் பண்ணுவேன்னு நெனச்சேன். நான் ஆழ்வியை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு, ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டதா நினைக்கிறேன். ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையை பாழாக்கிட்டோம் அப்படிங்கற குற்ற உணர்ச்சி என்னை ரொம்பவே பாதிச்சிருக்கு. அதை எப்படி சரி கட்டுறதுன்னு எனக்கு தெரியல." என்றாள் கையாலாகாமல்.
அதற்கு மேல் அங்கு நிற்காமல் அந்த இடத்தை விட்டு விடுவிடுவென நடந்தாள். சித்திரவேல் அவளை பின்தொடர்ந்து சென்றான்.
அவர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு,
"ரொம்ப தேங்க்ஸ் முத்து" என்றான் இனியவன்.
அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான் முத்து. ஆனால் அவன் அந்த இடத்தை விட்டு செல்லவில்லை. அவனால் சித்திரவேலை நம்ப முடியவில்லை. அவன் மீண்டும் திரும்பி வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் சற்று தூரத்தில் நின்று கொண்டான்.
நிம்மதி பெருமூச்சு விட்ட ஆழ்வி,
"நீங்க அக்கா கிட்ட ரொம்ப ரூடா பேசுறீங்கன்னு உங்களுக்கு தோணலையா?"
"ஆமாம், நான் ரூடா தான் பேசினேன். அது தேவையும் கூட. அவங்க எப்படி கொஞ்சம் கூட மரியாதை இல்லாம நடந்துக்குறாங்கன்னு புரியல." என்றான் சலிப்புடன்.
"சித்திரவேல் தான் அவங்களை ஸ்குரு பண்ணி விட்டிருக்கணும்னு நினைக்கிறேன். அவங்களுக்கு மூளை இல்லையா? சுய புத்தியோட அவங்க எதையும் யோசிக்க மாட்டாங்களா? அவங்க புருஷன் எது சொன்னாலும் நம்பிடுவாங்களா?" என்றான் எரிச்சலோடு.
"நீங்க என் ரூமுக்கு வர்றதை அவர் பார்த்திருக்கார்..."
"நான் உன் ரூமுக்கு வந்தா என்ன? இந்த உலகம் சுத்துறத நிறுத்திடுமா? அவங்க நான் உன்னை என் வைஃபா ஏத்துக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனா நான் உன் ரூமுக்கு வந்தா, உளவு பாக்குறாங்க. என்ன அசிங்கம் இது?"
"அதனால தான் நான் உங்களை உங்க ரூமுக்கு போக சொல்லி கேட்டேன். முத்து மட்டும் சித்திரவேல் நம்ம ரூமை செக் பண்றதை கவனிக்காம இருந்தா என்ன ஆகி இருக்கும்?"
"நான் உன்னை என் வைஃபா ஏத்துக்கிட்டேன்னு அவங்ககிட்ட சொல்லி இருப்பேன். சிம்பிள்" என்றான் இனியவன் சாதாரணமாக.
"தயவுசெஞ்சி என் ரூமுக்கு வராதீங்க. இந்த மாதிரியான சங்கடங்களை தவிர்க்க..."
"சரி, நான் உன்னை என் வைஃபா எல்லா முன்னாடியும் ஏத்துக்குற வரைக்கும் உன் ரூமுக்கு வரமாட்டேன்" என்று அங்கிருந்து அவன் செல்ல நினைத்தபோது, அவன் கையை பற்றினாள் ஆழ்வி.
அவளை, *இப்பொழுது என்ன?* என்பது போல் ஏறிட்டான் இனியவன்.
"நீங்க அப்செட் ஆயிட்டீங்களா?"
"அதனால?"
"அப்போ நீங்க அப்செட்டா தான் இருக்கீங்க"
"அதனால?"
"ஏன் இப்படி குழந்தை மாதிரி நடந்துக்கிறீங்க?"
"அதனால?" என்று தன் கைகளை கட்டிக் கொண்டான்.
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? உங்களை ஹேண்டில் பண்றது ரொம்ப கஷ்டம்"
"அதனால?"
அவன் வாயை பொத்திய ஆழ்வி,
"போதும். உங்க *அதனாலய* நிறுத்துங்க. உங்களை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்" என்றாள்.
அவளை தன் கரங்களில் சுற்றி வளைத்துக் கொண்டு,
"நீ என்னை சமாளிச்சு தான் ஆகணும். நீ என்னோட வைஃப் ஆச்சே! நீ நினைச்சா என்னை சுலபமா சமாளிச்சிடலாம்" என்ற போது அவனது குரல் குழைந்தது.
அது வரப்போகும் ஆபத்தின் அறிகுறி என்பதை உணர்ந்த ஆழ்வி,
"நீங்க இப்போ இங்கிருந்து போகணும்னு நினைக்கிறேன்" என்றாள், அவன் சட்டையை தூசி தட்டியபடி.
"நான் அப்பவே போயிருப்பேன். நீ தான் என்னை நிறுத்தி என்கிட்ட விவாதம் பண்ணிக்கிட்டு இருக்க"
"உங்க முகம் வாடிப்போனா, நான் வேற என்ன செய்றது?"
"என் முகம் வாடி போனா என்ன உனக்கு?"
"அது பார்க்க நல்லா இல்லையே"
"என் முகம் வாடி போனா நான் கேவலமா இருக்கேனா?" என்றான் கிண்டலாய்.
"நீங்க அப்செட்டா இருக்கும்போது ரொம்ப ஹாட்டா இருக்கீங்க" என்றால் சிரித்து விடாமல்.
தன் தலையை பின்னால் இழுத்து அவளை வியப்போடு ஏறிட்டான்.
"அப்படின்னா நான் சிரிக்கும்போது நல்லா இல்லையா?"
"நீங்க எப்பவுமே நல்லா தான் இருப்பீங்க"
"யாருக்கோ என் மேல கிறுக்கு பிடிக்கிற மாதிரி தெரியுது..." என்று சிரித்தான்.
ஆம் என்று தலையசைத்த படி அவன் சட்டை பொத்தானை தன் விரல்களால் சுழற்றினால் ஆழ்வி.
"அப்படின்னா நீ என் ரூமுக்கு வா. என் பர்மிஷன் இல்லாம என் ரூமுக்குள்ள நுழையிற தைரியம் யாருக்கும் கிடையாது"
"மனைவிங்குற உரிமையோட தான் நான் உங்க ரூமுக்கு வருவேன்"
"உண்மையிலேயே இப்போ நான் இங்கிருந்து போகணும்னு நினைக்கிறியா?" என்று சிரித்தான்
அவள் சோகமாய் ஆம் என்று தலையசைத்தாள்.
"சரி, குட்நைட்" என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
"குட் நைட்" என்று அவனை அணைத்துக் கொண்டாள் ஆழ்வி, அவனை வியப்புக்குள்ளாக்கி.
"நீ இப்படி கிறுக்குத்தனமா நடந்துக்கிட்டா நான் எப்படி என் ரூமுக்கு போறது?"
தன் உதடு சுழித்து அவனைவிட்டு பின்னால் நகர்ந்த ஆழ்வி,
"பை" என்றாள்.
"பை" என்று அவள் நெற்றியோடு தன் நெற்றியை மோதிவிட்டு அங்கிருந்து நடந்தான் இனியவன்.
வாசலில் வந்து நின்று, திரும்பி மென்மையாய் புன்னகைத்தான். தன் உதடு மடித்து செல்லுங்கள் என்பது போல் அவள் ஜாடை செய்ய, ஆழ்ந்த யோசனையோடு அங்கிருந்து சென்றான் இனியவன்.
இதற்கிடையில்...
மிகுந்த கலவரத்தோடு காணப்பட்டாள் நித்திலா.
"உன்கிட்ட இனியவன் எப்படி இந்த மாதிரி பேசலாம்?"
"நான் ஆழ்வியோட ரூம்ல அவங்க பர்மிஷன் இல்லாம நுழைஞ்சிருக்கக் கூடாது" என்றாள் குற்ற உணர்ச்சியோடு.
"அதுல என்ன தப்பு இருக்கு?"
"தப்பு தான் நிச்சயமா அது தப்பு தான். இன்னொருத்தர் ரூமுக்குள்ள பர்மிஷன் இல்லாம நுழையிறது ரொம்ப கீழ்த்தரமான வேலை. என்னை இன்னு சந்தேகப்படுறான்னு நினைக்கிறேன்" என்றாள் தவிப்போடு.
"ஆனா..." என்று மேலே கூறப்போன அவனை கையை காட்டி தடுத்து நிறுத்தி, ஒன்றும் கூறாமல் கட்டிலில் சென்று அமர்ந்து தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டாள்.
சித்திரவேல் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து,
"நித்தி, நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். இனியவன் உன்னோட பழைய தம்பி இல்ல. உண்மைய சொல்லப்போனா, அவர் எப்பவுமே உனக்கு ஒரு நல்ல தம்பியா இருந்ததில்ல. நீ தான் அவர் மேல அன்பு வச்சிருக்க. அவரு எப்பவுமே உன் அளவுக்கு உன்னை நேசிச்சது இல்ல"
தன் பல்லை கடித்துக் கொண்டு அவனை முறைத்த நித்திலா,
"வாயை மூடுங்க. இன்னொரு வார்த்தை என் தம்பியை பத்தி பேசினா நல்லா இருக்காது. எங்க அன்பை கம்பேர் பண்ற வேலை வச்சுக்காதீங்க. ஆமாம் அவன் என்னை மாதிரி இல்ல தான். இப்போ என்ன அதுக்கு? இது ஒன்றும் பிசினஸ் இல்ல. அவன் என்ன கொடுக்கிறானோ அதையே நானும் திருப்பிக் கொடுக்கிறதுக்கு. அவன்கிட்ட இருந்து பதிலுக்கு நான் எதையாவது எதிர்பார்த்தா, அது வியாபாரம். நான் ஒரு சுயநலமான அக்காவா இருக்க விரும்பல. அவன் ஆழ்வியை ஏத்துக்கணும். அது தான் என்னோட விருப்பம். ஆழ்வி ரொம்ப நல்ல பொண்ணு. இன்னு அவ கூட சந்தோஷமா இருப்பான். ஆழ்வி அவனை சந்தோஷமா வச்சிருப்பா. எனக்கு வேண்டியது எல்லாம் அது தான். இன்னு மட்டும் ஆழ்வியை ஏத்துக்கிட்டா, அதுக்கு பிறகு நான் இங்க இருக்க மாட்டேன். ஆழ்வி அவன் கூட இருந்தா, இன்னுவுக்கு யாரோட உதவியும் தேவையில்ல"
அதைக் கேட்ட சித்திரவேல் திகைப்படைந்தான். ஆழ்வியை இனியவன் ஏற்றுக்கொண்டால், நித்திலா இந்த வீட்டை விட்டு புறப்பட்டு விடுவாளா? அவனது கண்களில் மின்னல் மின்னியது. இது தான் நித்திலாவுக்கு வேண்டும் என்பது அவனுக்கு முன்பே தெரிந்திருந்தால், அவனால் முடிந்த அனைத்து முயற்சியையும் எடுத்து அவர்களை சேர்த்து வைத்திருப்பானே!
"நித்தி, நீ சொன்னது உண்மையா?"
"ஏன்? நான் சொன்னதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லயா?"
"நீ இந்த வீட்டை விட்டு போனா இனியவன் ரொம்ப ஃபீல் பண்ணுவாரே..."
"அது விஷயமே இல்ல. இது நடந்து தான் ஆகணும். நமக்கு கல்யாணம் ஆனப்போ நான் இங்க இருக்க விரும்புனதுக்கு காரணம், அப்போ பாட்டி உடம்பு சரியில்லாம இருந்தாங்க. பார்கவியும் ரொம்ப சின்ன பொண்ணா இருந்தா. இந்த குடும்பத்தோட பொறுப்பை ஆழ்வி ஏத்துக்கிட்டா, நான் நிம்மதியா இங்கிருந்து கிளம்புவேன். ஏன்னா, அவங்களுக்கு எல்லாத்தையும் சமாளிக்கிற திறமை இருக்கு"
அதை கேட்டு சித்திரவேல் நிம்மதி பெருமூச்சு விட்டான். எப்பாடுபட்டாவது இனியவனை ஆழ்வியை ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டும். அவன் ஆழ்வியை ஏற்றுக்கொண்டால், அதன் பிறகு தன்னுடன் நித்திலா தங்கள் வீட்டிற்கு வந்து விடுவாள். எந்த இடையூறும் இல்லாமல் அவர்கள் நிம்மதியாய் வாழலாம் என்று எண்ணினான் சித்திரவேல்.
மறுநாள் காலை
வழக்கம் போல் அனைவரும் உணவு மேசையில் கூறினார்கள், இனியவன் ஒருவனைத் தவிர.
"முத்து, இன்னுவை கூப்பிடு" என்றார் பாட்டி.
"அண்ணன் வீட்ல இல்ல பாட்டி" என்றான் முத்து.
"அவர் எங்க போனார்?" என்றான் சித்திரவேல்.
"தெரியல அவர் நான் காபி கொண்டு போனப்போ அவரு ரூம்ல இல்ல. வீடு ஃபுல்லா தேடிப் பார்த்தேன். அவர் இல்ல" என்றான்.
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், ஆழ்வி உட்பட.
"கமிஷனர் ஆஃபீஸ்க்கு போகும் போது ஆழ்வியையும் தன்னோட கூட்டிக்கிட்டு போவேன்னு சொன்னானே இன்னு?" என்றார் பாட்டி.
"ஆமாம் பாட்டி. ஆனா இவ்வளவு சீக்கிரம் அண்ணன் எங்க போனார்னு தெரியலயே" என்றாள் பார்கவி.
இனியவன் எங்கு சென்றான் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. தன் கைபேசியை எடுத்து இனியவனுக்கு ஃபோன் செய்தான் சித்திரவேல். ஆனால் அவன் அழைப்பை இனியவன் ஏற்கவில்லை.
"அவர் காலை அட்டென்ட் பண்ணல" என்றான் சித்திரவேல்.
"அவன் வரட்டும் விடுங்க" என்றார் பாட்டி.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. இனியவன் வீட்டிற்கு வரவும் இல்லை, யாருடைய அழைப்பையும் ஏற்கவும் இல்லை. அனைவரும் இனியவனுக்காக காத்திருந்தார்கள். ஆனால் பார்கவியால் காத்திருக்க முடியவில்லை. அவள் குருவுக்கு ஃபோன் செய்து விவரத்தை கேட்டு தெரிந்து கொள்ள நினைத்தாள். அவள் அழைப்பை ஏற்றான் குரு.
"அண்ணா எங்கே?"
"அவன் வீட்டுக்கு தான் வந்துகிட்டு இருக்கான்"
"அவர் உன் கூடத்தான் இருந்தாரா?"
"ஆமாம். நாங்க கமிஷனர் வீட்டுக்கு போயிருந்தோம். இந்த விஷயத்தை ரொம்ப பர்சனலா மூவ் பண்ண நினைக்கிறான் இனியா. அதனால அந்த மோசமான மருந்தோட ரிப்போர்ட்டை எடுத்துக்கிட்டு வந்தான்"
"ஆனா முத்து நேத்து தானே அண்ணன்கிட்ட அந்த மருந்தை கொடுத்தான்? எப்படி அவருக்கு இவ்வளவு சீக்கிரம் டெஸ்ட் ரிப்போர்ட் கிடைச்சது?" என்றாள் பார்கவி.
"உங்க அண்ணனை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? அவன் நினைச்சா எதை வேணாலும் சாதிக்க முடியும். அந்த ரிப்போர்ட்டை வாங்கிட்டு கமிஷனர் வீட்டுக்கு நேரா வந்து அந்த ரிப்போர்ட்டை கொடுத்துட்டான். கமிஷனர் அவரோட டீமுக்கு ஃபோன் பண்ணி இனியா முன்னாடியே என்ன செய்யணும்னு ஆர்டர் போட்டுட்டாரு. அதுக்கு அப்புறம் தான் அவனுக்கு திருப்தியே ஏற்பட்டுச்சு"
பார்கவி நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
"அவன் எப்ப வேணாலும் வீட்டுக்கு வருவான். அதனால காலை கட் பண்ணு" என்றான்.
"சரி, பை" என்று அழைப்பை துண்டித்து விட்டு வரவேற்பறைக்கு வந்தாள் பார்கவி.
"அண்ணன் இந்த கேசை பர்சனலா கமிஷனர்கிட்ட கொண்டு போயிருக்காரு"
"கமிஷனரை பார்க்க இவ்வளவு சீக்கிரமாவா? ஆனா அவர் பத்து மணிக்கு தானே ஆஃபீசுக்கு வருவாரு?" என்றான் சித்திரவேல்.
"அதனால தான் அவர் வீட்டுக்கே அண்ணன் போயிருக்காரு. மெயின் கல்ப்பரட்டை அரெஸ்ட் பண்ற வரைக்கும் அண்ணன் சும்மா உட்கார மாட்டார்னு நினைக்கிறேன்" என்றாள் பார்கவி.
சங்கடத்தோடு சிரித்த சித்திரவேலை கவனித்தாள் ஆழ்வி.
"நிச்சயமா இதை செஞ்சு தான் ஆகணும். அது யாராயிருந்தாலும் பரவாயில்ல. அவங்களுக்கு உரிய தண்டனை கிடைக்கனும்" என்றார் பாட்டி.
"ஆமாம் பாட்டி. எவ்வளவு தைரியம் இருந்தா அவங்க இன்னு வாழ்க்கையில இப்படி விளையாடியிருப்பாங்க? நம்ம இன்னுவை தொட அவங்களுக்கு யார் உரிமையை கொடுத்தது? அது யாரா வேணாலும் இருக்கட்டும். அவன் நரகம்ன்னா என்னன்னு பாக்கணும்" என்றாள் நித்திலா கோபத்துடன், தன் கணவனின் முகபாவம் மாறிக் கொண்டிருப்பதை கவனிக்காமல்.
அப்பொழுது அவர்கள் இனியவனின் கார் வரும் சத்தத்தை கேட்டார்கள். அனைவரும் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தார்கள். வழக்கம் போல் புயலென வீட்டினுள் நுழைந்தான் இனியவன். அவனிடம் அந்த வழக்கு பற்றி கேட்க அனைவரும் தயாரானார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாய், அவன் நேராக ஆழ்வியை நோக்கி சென்று, அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு, அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தான்... ஆழ்வியையும் சேர்த்து.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top