6 எதிர்பாராத திருப்பம்
6 எதிர்பாராத திருப்பம்
மணி ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. ஆழ்விக்காக காத்திருந்தார் கற்பகம். அவள் அந்த ஆடம்பர காரில் இருந்து இறங்குவதை பார்த்த அவர், நிம்மதி பெருமூச்சு விட்டார்.
"எவ்ளோ பெரிய காரு...!" என்று அவர் மனம் எண்ணியது.
கார் ஓட்டுனருக்கு நன்றி கூறிவிட்டு, காரை விட்டு கீழே இறங்கினாள் ஆழ்வி.
அவள் கையில் புத்தகம் இல்லாததை கண்ட கற்பகம்,
"புக்கு எங்க?" என்றார்.
"வாங்கிகிட்டு வரல" என்றாள் வீட்டிற்குள் நடந்தபடி.
"உன் ஃபிரண்ட்ஸோட சேர்ந்து படிச்சிட்டியா?"
"ம்ம்ம்"
"அதனால தான் வீட்டுக்கு வர லேட் ஆச்சா?"
"ம்ம்ம்"
"பார்ட்டியை எல்லாரும் ரொம்ப நல்லா என்ஜாய் பண்ணிங்க போல இருக்கு..."
அதற்கு ஒன்றும் கூறவில்லை ஆழ்வி.
"உன் புடவையும், தலையும் கலஞ்சி இருக்கிறதை பார்க்கும் போதே புரியுது" என்றார்.
தன் அறையை நோக்கி நடந்தாள் ஆழ்வி.
"சீக்கிரம் முகம் கழுவிக்கிட்டு சாப்பிட வா"
"எனக்கு எதுவும் வேண்டாம்"
"உன் ஃபிரண்ட்ஸ் கூட சேர்ந்து சாப்பிட்டுடியா?"
"ம்ம்ம். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு" தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.
கட்டிலின் மீது தொப்பென்று அமர்ந்தாள். அவள் அறையில் மாட்டப்பட்டிருந்த மாரியம்மன் படத்தின் மீது அவளது பார்வை விழுந்தது. தன் முகத்தை சட்டென்று திருப்பிக் கொண்ட அவள், மீண்டும் அந்தப் படத்தை பார்த்தாள்.
"நான் உங்ககிட்ட பேச போறதில்ல. நீங்க என்னை ஒரு மோசமான சூழ்நிலையில கொண்டு போய் நிறுத்திட்டீங்க. இது தான் நீங்க என்னை காப்பாத்துற லட்சணமா? அவன் என் மீது பாஞ்சபோது நீங்க எங்க போயிருந்தீங்க? அவன் என்னை எப்படி எல்லாம் தொடுறான்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தீங்களா? என்ன கடவுள் நீங்க? எதுக்காக என் கூட இப்படி விளையாடுறீங்க? இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கா...? நான் உங்ககிட்ட பேசமாட்டேன்." என்றவள், அந்த புகைப்படத்தின் அருகே மூச்சு வாங்க வந்து, தன் தோளில் இருந்த முந்தானையை விலக்கி,
"பாருங்க, அவன் என்ன செஞ்சு வச்சிருக்கான்னு... இது தான் உங்களுக்கு வேணுமா? இதுக்கு அப்புறம் என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்? எப்படி என்னால அவனை நினைக்காம இருக்க முடியும்? வாழ்க்கை பூரா அவன் என் புத்தியில் இருந்துகிட்டே இருப்பான்... ஏன்னா, அவன் தான் என்னை முதலில் தொட்டவன். எனக்கு கல்யாணம் ஆகி, என் புருஷன் என்னை தொடும் போது எனக்கு அவன் என்னை தொட்டது ஞாபகம் வருமே...! நான் கல்யாணமே பண்ணிக்க வேண்டாம்னு நினைக்கிறீங்களா? நான் சாமியாரா போயிடணுமா? வாழ்க்கை பூரா உங்களுக்கு பூஜை செஞ்சுகிட்டே இருந்திடணுமா?"
முந்தானையை தன் தோளில் போட்டுக்கொண்ட அவள்,
"எனக்கு நீங்க இருக்கீங்கன்னு நினைச்சேன். இந்த உலகத்திலேயே உங்களுக்கு மட்டும் தான் என் மேல் அக்கறை இருக்குன்னு நினைச்சேன். ஆனா நீங்க என்னை ஏமாத்திட்டீங்க. நான் இனிமே உங்களை கும்பிடப்போறதில்ல..." அந்தப் படத்திற்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்த அவள்,
"நான் கேட்கிற கேள்விக்கு எல்லாம் ஏதோ ஒரு விதத்துல எனக்கு பதில் சொல்லுவிங்களே... இப்போ எனக்கு என்ன பதில் சொல்லுவீங்க? சொல்லுங்க..." தன் முகத்தை மூடி அழுத்தாள் ஆழ்வி.
அப்பொழுது அவளின் அறையின் கதவை தட்டினார் கற்பகம். தன் முகத்தை துடைத்துக் கொண்டு சென்று கதவை திறந்தாள் ஆழ்வி.
"உன் ஃபிரண்ட் பார்கவி, உன்கிட்ட பேசணுமாம். அவ லைன்ல இருக்கா" என்றார்.
சரி என்று தலையசைத்த அவள்,
"பால் இருந்தா கொஞ்சம் குடுக்குறீங்களா?" என்றாள், அவள் பார்க்கவியுடன் பேசும் போது, அங்கு அவர் இருக்க வேண்டாம் என்பதற்காக அவரை வேண்டுமென்றே சமையலறைக்கு அனுப்பினாள்.
தொலைபேசியின் ரிசிவரை எடுத்து,
"ஹலோ" என்றாள்.
"ஆழ்வி, ஐ அம் சாரி" என்று தேம்பினாள் பார்கவி.
ஆழ்வி கண்களை மூடினாள்.
"உன்னை எப்படி சமாதான படுத்துறதுன்னும் எனக்கு தெரியல, உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னும் எனக்கு தெரியல"
கண்களை திறந்தாள் ஆழ்வி. நன்றியா?
"எனக்காக நீ இன்னைக்கு செஞ்ச விஷயம், யாருமே கற்பனை பண்ணி பார்க்க முடியாத ஒன்னு. நீ யாருக்குமே கிடைக்க முடியாத ரொம்ப நல்ல ஃப்ரெண்ட். அங்கிருந்து ஓடி போறதுக்கு உனக்கு சந்தர்ப்பம் இருந்த போதும் கூட, நீ ரிஸ்க் எடுத்து எனக்கு ஹெல்ப் பண்ணி, என்னை காப்பாத்துன. சாகுற வரைக்கும் நீ எனக்கு பண்ண உதவியை மறக்கவே மாட்டேன், ஆழ்வி. என் அண்ணன் மட்டும் என்னை தொட்டிருந்தா, நான் செத்துப் போயிருப்பேன். கூடப்பிறந்த அண்ணனாலையே தொடபடுறதை விட மோசமான விஷயம் இந்த உலகத்துல வேற என்ன இருக்க முடியும்? நீ தான் ஆழ்வி என்னோட கடவுள்...!"
சிலையென நின்றாள் ஆழ்வி.
"சத்தியமா சொல்றேன், உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்..."
"அதை விடு..."
"நான் சொல்றதை கேளு, ஆழ்வி"
"நான் அதைப் பத்தி பேச விரும்பல. நான் காலை கட் பண்றேன். மறுபடியும் எனக்கு ஃபோன் பண்ணாத. ப்ளீஸ்..." என்று அழைப்பை துண்டித்தாள்.
பார்கவி கூறியதை யோசித்தபடி தன் அறைக்கு சென்றாள். பாலுடன் வந்த கற்பகம், ஓடிச்சென்று அவளிடம் பால் தம்ளரை கொடுத்தார். அதை அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டு தன் அறைக்கு சென்றாள் ஆழ்வி. கலவரமான மனநிலையுடன், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். மீண்டும் மாரியம்மனின் படத்தை ஏறிட்டாள்.
*அங்கிருந்து ஓடி போறதுக்கு உனக்கு சந்தர்ப்பம் இருந்த போதும் கூட, நீ ரிஸ்க் எடுத்து எனக்கு ஹெல்ப் பண்ணி, என்னை காப்பாத்துன.*
*என் அண்ணன் மட்டும் என்னை தொட்டிருந்தா, நான் செத்துப் போயிருப்பேன். கூடப்பிறந்த அண்ணனாலையே தொடபடுறதை விட மோசமான விஷயம் இந்த உலகத்துல வேற என்ன இருக்க முடியும்?*
பார்கவி கூறிய அந்த வார்த்தைகள் அவள் மனதில் எதிரொளித்துக் கொண்டே இருந்தது. ஆம், அவள் நினைத்திருந்தால், அங்கிருந்து தப்பி ஓடியிருக்க முடியும். அவள் காப்பாற்றாமல் விட்டிருந்தால், பார்கவி இறந்திருப்பாள். இவை தான் கடவுள் அவளுக்கு அளிக்க நினைக்கும் பதில்களா? பார்கவி அவளை ஓடிப்போ என்று கூறிய போது, அவளால் அங்கிருந்து ஓடி இருக்க முடியும். ஆனால் ஓடாமல் இருந்தது அவள் தான். பார்கவியை காப்பாற்ற, வலிய சென்று சிக்கலில் மாட்டிக் கொண்டது அவள் தானே? பார்கவியை பற்றி எண்ணியபடி கட்டிலில் படுத்தாள்.
*அவ அண்ணன் அவ பாவாடையை பிடிச்சப்போ, பார்கவி எவ்வளவு பரிதாபமா கதறினா...! அவ அண்ணனுக்கு என்ன ஆச்சு? அவர் ஏன் மனநிலை சரியில்லாதவரா இருக்கார்? ஏன் அவர் ரத்தத்தை பார்த்து பயந்தார்? நல்ல வேளை, அவருக்கு அப்படி ஒரு பலவீனம் இருந்தது. இல்லன்னா, என் நிலைமை என்ன ஆகி இருக்குமோ... அதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லணும்" என்ற அவள் திகைத்தாள்.
அவள் இப்போது கடவுளுக்கு நன்றி கூறினாளா? இனியவனை கட்டுப்படுத்தும் வழியை அவளுக்கு காட்டியதற்காக அவள் கடவுளுக்கு நன்றி கூறினாளா? அவளாக வலிய சென்று மாட்டிக் கொண்ட பிறகும், அவளை காத்துக் கொள்ள கடவுள் அவளுக்கு ஒரு வழி காட்டினார் தானே? அவளது இதயம் படபடவென துடித்தது. தன் நெஞ்சை அழுத்தி பிடித்தாள். அப்படி அவள் தொட்ட போது, இனியவனால் ஏற்பட்ட தழும்பில் அவள் கைப்பட்டது. அவளது படபடப்பு அதிகரித்தது. இப்போது எதற்காக அவள் இவற்றையெல்லாம் யோசிக்கிறாள்? இதைப் பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது? அவளால் இந்த நினைவுகளில் இருந்து வெளியே வரவே முடியாதா? அது நிகழும் என்று அவளுக்கு நம்பிக்கை இல்லை.
இன்பவனம்
பாட்டியின் மடியில் படுத்து அழுது கொண்டிருந்தாள் நித்திலா. அவளை சமாதானப்படுத்தும் நிலையில் பாட்டியும் இல்லை.
"இந்த நரகத்துல இருந்து நம்ம இன்னு எப்ப தான் வெளியில வரப் போறானோ தெரியல. என்னால அவனை இப்படி பாக்க முடியல, பாட்டி. அவன் இனியவன்... ஆனா இப்ப இருக்கிறவன் அவன் இல்ல..."
எதையோ யோசித்த நித்திலா, திகிலுடன் எழுந்து அமர்ந்தாள்.
"அவனுக்கு குணமானதுக்கு பிறகு, அவன் பார்கவிகிட்ட எப்படி நடந்துக்கிட்டான்னு தெரிஞ்சா, என்ன ஆகும்? அவன் மனசு செத்துடும் பாட்டி..." மீண்டும் அழுதாள்.
"நான் இப்போ ஆழ்வியை பத்தி நினைச்சுக்கிட்டு இருக்கேன்" என்றார் பாட்டி.
அவரை அமைதியுடன் ஏறிட்டாள் நித்திலா.
"இந்த மாதிரி தைரியசாலியான பொண்ணை பத்தி நீ எப்பவாவது கேள்விப்பட்டு இருக்கியா?"
இல்லை என்று மெல்ல தலையசைத்தாள் நித்திலா.
"நம்ம அவங்க அம்மாவை போய் பார்த்து, அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும். நம்ம இப்படி இருக்கிறது சரி இல்ல. பொறுப்பானவங்க செய்ற காரியம் இல்ல இது. அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கு"
"நம்ம இதை எப்படி ஈடு கட்ட போறோம், பாட்டி?"
"அவளுக்கு ஒரு நல்ல வேலை கொடுக்க மாப்பிள்ளை தான் தயாராக இருக்கிறாரே. நம்ம அதைப்பத்தி அவங்க அம்மா கிட்ட பேசலாம்"
"அவ அனுபவிச்ச கொடுமையை, ஒரு வேலையை கொடுத்து சரி பண்ணிட முடியும்னு நினைக்கிறீங்களா?"
"எதைக் கொடுத்தும் அவ அனுபவிச்ச கொடுமையை நம்மால சரி கட்டவே முடியாது. அவ ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பொண்ணுன்னு பார்க்கவி சொன்னா. அவ குடும்பத்தோட நிலமையை நம்ம மாத்தலாம். நம்மால அதைத்தான் செய்ய முடியும்"
ஆம் என்று தலையசைத்தாள் நித்திலா.
"நம்ம நாளைக்கு அவங்க வீட்டுக்கு போகலாம்"
"வேண்டாம் பாட்டி. நாளைக்கு அவங்களுக்கு கடைசி பரிட்சை இருக்கு. அது முடியிற வரைக்கும் நம்ம அவளை ஸ்டிரெஸ் பண்ண வேண்டாம். பரிட்சை முடிஞ்சதுக்கு பிறகு, நம்ம போய் அவங்களை பார்க்கலாம்"
சரி என்று தலையசைத்தார் பாட்டி.
மறுப்புறம்,
பார்கவியால் படிக்கவும் முடியவில்லை, தூங்கவும் முடியவில்லை. நடந்த சம்பவத்திலிருந்து அவளால் வெளிவரவே முடியவில்லை. அவள் இருந்த நிலைமையை விட, ஆழ்வியின் நிலை மோசம் என்பதை அவள் உணர்ந்திருந்தாள். அதனால் தான் அவளிடம் பேசுவதைக் கூட ஆழ்வி தவிர்த்து விட்டாள். அந்த நாள் ஆமை வேகத்தில் நகர்ந்தது. அவள் ஒன்றும் படிக்கவும் இல்லை, அதைப்பற்றி அவள் கவலைப்படவும் இல்லை.
மறுநாள்
பரிட்சைக்கு செல்ல தயாரானாள் பார்கவி. பாட்டி வழக்கம் போல் பூஜை செய்து கொண்டிருந்தார். வழக்கத்திற்கு மாறாக பூஜை அறைக்கு சென்று பாட்டிக்கு வியப்பளித்தாள். கண்களை மூடி,
"என் ஃபிரண்டு ஆழ்விக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுங்க. அவளை இந்த ஸ்ட்ரெஸ்ல இருந்து வெளியில கொண்டு வாங்க" என்று மனதார வேண்டினாள்.
காலை உணவை சாப்பிடாமலேயே கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள்.
ஏஎம்டி கல்லூரி
பார்கவியை நோக்கி சந்தோஷமாய் ஓடி வந்தாள் மீனாட்சி.
"ஹாய் பேபி..."
மெலிதாய் சிரித்தாள் பார்கவி.
"ஏய் உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்க?"
அமைதி காத்தாள் பார்கவி.
"கவலைப்படாத. ஆழ்வி நல்லா படிச்சிட்டு வந்து, உன்னை பாஸ் பண்ண வச்சுடுவா"
தலை கவிழ்ந்து நின்ற பார்கவியை பார்த்த மீனாட்சிக்கு குழப்பம் ஏற்பட்டது. அவள் முகத்தை உயர்த்திப் பிடிக்க, அவள் கண்கள் கலங்கி இருந்ததை பார்த்து,
"ஏய், என்ன ஆச்சு?" என்றாள்.
அவளை கட்டிப்பிடித்துக் கொண்டு, அழுதாள் பார்கவி.
"என்ன ஆச்சு, கவி?"
நடந்தவற்றை அவளிடம் கூறினாள் பார்கவி. பீதியுடன் நின்றாள் மீனாட்சி.
"உன்னோட அண்ணன் மனநிலை சரியில்லாதவரா?"
ஆம் என்று தலையசைத்தாள்.
"எதுக்காக அவரை ட்ரீட் பண்ணாம வச்சிருக்கீங்க?"
"ட்ரீட் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம். மாமா அவரால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சுகிட்டு தான் இருக்காரு. ஆனா எந்த இம்ப்ரூவ்மெண்ட்டும் இல்ல"
"அப்படின்னா ட்ரீட்மென்டை மாத்த வேண்டியது தானே?"
"என் அண்ணன் ஒரு ஃபேமஸ் பிசினஸ்மேன். அவருக்குன்னு இந்த சமுதாயத்தில் பெரிய மரியாதை இருக்கு. நாங்க அவரை வெளிப்படையா ட்ரீட் பண்ணா,
அவரைப் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிடும்."
"அவர் குணமாகணும் அப்படிங்கறது எல்லாத்தையும் விட முக்கியம் இல்லையா?"
"அவர் குணமாயிடுவாருன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு"
"ஆழ்வி எப்படி இருக்கா?"
"அவ என்ன நிலைமையில இருக்கான்னு எனக்கு தெரியல. ஹாஸ்பிடல்ல அவ ரொம்ப தைரியமாவும், எதார்த்தமாவும் பேசினா. ஆனா, என்கிட்ட ஃபோன்ல பேசவும் மறுத்துட்டா. அவ இதை எப்படி எடுத்துக்கிட்டான்னு எனக்கு புரியல"
"அவ என்ன செய்றான்னு பார்க்கலாம்"
"இந்த நிலைமையில அவ எக்ஸாமுக்கு வருவாளான்னே எனக்கு தெரியல"
பரீட்சைக்கான கடைசி மணி ஒலித்தது. அனைவரும் அவர்களது தேர்வு கூடங்களுக்கு சென்றார்கள். காலியாய் இருந்த ஆழ்வியின் இடத்தை கவலையோடு பார்த்தாள் பார்கவி. அவள் பரிட்சைக்கு வர மாட்டாள் என்ற முடிவுக்கு, பார்கவியும் மீனாட்சியும் வந்தார்கள். ஆனால், தேர்வாளர் அவர்களுக்கு விடைத்தாள்களை கொடுக்க துவங்கிய போது, அந்த கூடத்தினுள் நுழைந்தாள் ஆழ்வி.
பார்கவியும் மீனாட்சியும் ஒருவரை ஒருவர் பார்த்து நிம்மதியுடன் புன்னகைத்துக் கொண்டார்கள். தன் இடத்தில் வந்து அமர்ந்த ஆழ்வி, பரீட்சை எழுத துவங்கினாள். அவளுக்கு தெரியும் பார்கவி அவளையே தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று. தான் எழுதிய விடைத்தாளை அவளுக்கு தெளிவாய் தெரியும்படி ஆழ்வி வைத்த போது, பார்கவியை குற்ற உணர்ச்சி கொன்றது. அவளது கண்கள் கலங்கின. அவளைப் பார்த்து அழாதே என்பது போல் செய்கை செய்த ஆழ்வி, பரீட்சை எழுது என்றாள். கண்களை துடைத்துக் கொண்டு எழுத துவங்கினாள் பார்கவி.
அவர்கள் பரீட்சை முடிந்து வெளியே வந்தார்கள். ஆழ்வி அங்கிருந்து செல்வதற்கு முன்னால், அவளை நோக்கி ஓடிச் சென்றாள் பார்கவி.
"ஆழ்வி..."
"இங்க பாரு, பார்கவி, நடந்த எதுக்கும் நீ காரணம் இல்ல. இது ஒரு ஆக்சிடென்ட். அதனால சீன் கிரியேட் பண்ணாத. எனக்கு ஒன்னும் இல்ல. புரிஞ்சுதா?"
அழுதபடி அவளை அணைத்துக் கொண்டாள் பார்கவி.
"என்னை மன்னிச்சிடு ஆழ்வி. என் அண்ணனுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அவர் ஒரு பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்குறது இது தான் முதல் தடவை. உன் உடம்புல இருந்த சிவப்பு காயங்களை பார்த்தபோது அவர் உன்கிட்ட எப்படி நடந்துக்கிட்டார்னு என்னால புரிஞ்சுக்க முடிந்தது"
ஆழ்வியும் பார்கவியும் திடுக்கிட்டார்கள்,
"என்னது உன் அண்ணன் என் தங்கச்சியை ரேப் பண்ணிட்டானா?" என்ற குரலைக் கேட்டு.
ஆழ்வி திகில் அடைந்தாள், கோபமாய் நின்றிருந்த தன் அண்ணன் சொல்லின்செல்வனை பார்த்து...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top