59 ஓரடி முன்னால்...

59 ஓரடி முன்னால்...

மறுநாள் காலை

அனைவரும் காலை உணவுக்காக ஒன்றாய் கூடினார்கள். இன்னும் கூட நித்திலா வருத்தமாகத்தான் காணப்பட்டாள். அதை கவனித்தான் இனியவன்.

"அக்கா, ஆர் யூ ஆல்ரைட்?" என்றான்.

செயற்கையான புன்னகையோடு ஆம் என்று தலையசைத்தாள்.

"ஆழ்வி, நீ ஷார்ப்பா பத்து மணிக்கு ஆஃபீஸ்ல இருக்கணும். புரிஞ்சுதா?" என்றான்.

திகைப்படைந்த ஆழ்வி, சரி என்று தலையசைத்தாள்.

"அண்ணா, நீ அவளை உன்கூட கூட்டிட்டு போகப் போறதில்லயா?" என்றாள் பார்கவி.

"நான் எப்படி அவளைக் கூட்டிகிட்டுப் போக முடியும்? நான் அவளோட பாஸ் ஆச்சே!" என்றான் தன் தோள்களைக் குலுக்கியபடி.

"நீ ஆஃபீஸ்ல தான் பாஸ். ஆனா இங்க, நீ என்னோட அண்ணன். அவ என் ஃப்ரெண்டு..."

"அப்படின்னா, நீயே அவளை தினமும் ஆஃபீஸ்ல கூட்டிகிட்டு போய் விடு. அவ உனக்கு தானே ஃபிரண்ட், எனக்கு இல்லயே..."

இனியவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஆழ்வியை கவலையோடு ஏறிட்டாள் பார்கவி.

"நீ எல்லாத்தையும் பழகிக்கணும், ஆழ்வி. அப்ப தான் வாழ்க்கை அவ்வளவு ஈஸியானது இல்லன்னு உனக்கு புரியும்" என்றான் இனியவன்.

"அது அவளுக்கு ஏற்கனவே தெரியும்ண்ணா. வாழ்க்கையோட ரொம்ப மோசமான பக்கத்தை பார்த்தவ அவ" என்றாள் வருத்தத்தோடு பார்கவி.

சில நொடி திகைத்த இனியவன்,

"அப்படின்னா, ஆஃபீசுக்கு பஸ்ல போறதுல அவளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது" என்றான் தன்னை சுதாகரித்துக் கொண்டு.

"எதுக்காக நீ இவ்வளவு பிடிவாதமா இருக்க, இன்னு? அவளை உன்கூட கூட்டிக்கிட்டு போறதுல உனக்கு என்ன பிரச்சனை? அவளும் உன் ஆஃபீசுக்கு தானே வறா?  உனக்கு அவ்வளவு பிரச்சனை இருந்தா, எதுக்காக நீ அவளுக்கு நம்ம ஆஃபீஸ்ல வேலை கொடுத்த? அதையும் அவளாவே தேடிக்கிட்டு இருந்திருப்பாளே...! அப்போ, வாழ்க்கை மட்டுமில்ல, நம்மளை சுத்தி இருக்கிறவங்களும் எப்படிப்பட்டவங்கன்னு அவளுக்கு நல்லாவே புரிஞ்சிருக்குமே..." என்று கூறிவிட்டு சாப்பாட்டை பாதியிலேயே விட்டுவிட்டு எழுந்தாள் நித்திலா.

"அக்கா, ஏன் தேவையில்லாம  டென்ஷன் ஆகுறீங்க? இது ஒரு சாதாரண விஷயம். நான் அவளை கூட்டிகிட்டு போகலன்னா என்ன? நீங்க அவளை டிரைவர் கூட அனுப்பி வையுங்களேன்..."

அவன் பேச்சை தடுத்து,

"உன் ஐடியாவுக்கு ரொம்ப தேங்க்ஸ், இன்னு. நீ உன் வேலையை பாரு" என்று அங்கிருந்து நடந்தாள்.

"அக்கா... அக்கா சாப்பிட்டுட்டு போங்க" என்று பின்னால் இருந்து கத்தினான்.

ஆனால் நித்திலா நிற்கவில்லை
அவளை நோக்கி ஓடிய இனியவன், அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி,

"எதுக்காக சாப்பாட்டை பாதியில விட்டுட்டு போறீங்க?" என்றான்.

"எனக்கு சாப்பிட பிடிக்கல"

"அக்கா, உங்களுக்கு நல்லா தெரியும். யாராவது சாப்பாட்டு மேல வெறுப்பை காட்டினாலோ, காலையில சாப்பிடாம போனாலோ எனக்கு பிடிக்காது" என்றான் கண்டிப்போடு.

அமைதியாய் நின்றாள் நித்திலா.

"சரி, நான் ஆழ்வியை என்கூட கூட்டிக்கிட்டு போறேன். இப்போ உங்களுக்கு சந்தோஷமா?"

ஆம் என்று தலையசைத்தாள். மீண்டும் அவளை அழைத்து வந்து சாப்பிட வைத்த இனியவன்,

"நீங்க இப்படி என்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்றத எப்ப நிறுத்த போறீங்கன்னு தெரியல" என்றான்.

மெலிதாய் புன்னகை புரிந்தாள் நித்திலா.

"இந்த எமோஷனல் பிளாக்மெயில் எல்லா நேரமும் வேலை செய்யாது, கா. நீங்க அதையும் ஞாபகம் வச்சுக்கோங்க" என்றான் விஷம புன்னகையோடு.

அது அனைவரது முகபாவத்தையும் மாற்றியது.

"நான் என் லேப்டாப்பை கொண்டு வரேன். ரெடியா இரு, ஆழ்வி" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

நித்திலாவை பார்த்த ஆழ்வி,

"அக்கா, நான் இங்கிருந்து போயிடலாம்னு நினைக்கிறேன்" என்றாள்.

அது அனைவரையும் அதிர்ச்சியோடு அவளை பார்க்க வைத்தது.

"அவருக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு தோணல"

"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" என்றாள் பார்கவி கோபத்துடன்.

"இல்ல, கவி... இதுக்கு அப்புறமும் நான் பைத்தியமா இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன். அவர் என்னை ஏத்துக்குவாருன்னு நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர் இங்கிருந்து என்னை அனுப்ப நினைக்கிறார்னு உனக்கு புரியலயா? இன்னமும் நான் இங்கேயே ஒட்டிக்கிட்டு இருக்கணும்னு நினைக்கிறியா?"

"ஆனா, நீ அவரோட வைஃப்

"அது அவருக்கு தெரியுமா? நான் தான் அவரோட ஒய்ஃப்ன்னு நிரூபிக்க உன்கிட்ட ஆதாரம் இருக்கா? எங்க கல்யாணம் சட்டப்படி செல்லுமா? எந்த உரிமையில அவர் என்னோட புருஷன்னு சொல்ல முடியும்? அவருக்கு என்னை பிடிக்க வாய்ப்பு இருக்குன்னு எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனா இப்போ அந்த நம்பிக்கை போயிடுச்சு. நான் இங்கிருந்து போறது தான் நல்லதுன்னு தோணுது" என்று எழுந்து நின்றாள் ஆழ்வி.

"உக்காரு, ஆழ்வி"என்றாள் நித்திலா.

அவளைப் பார்த்தபடி அமர்ந்தாள் ஆழ்வி.

"உனக்கு செஞ்சு குடுத்த சத்தியத்தை நான் மறக்கல. எப்பவும் நான் உனக்காக இருப்பேன்னு நான் சொன்னேன். அதை நான் செய்வேன். இது என்னோட பிரச்சனை. உன்னோட பிரச்சனை இல்ல"

"ஆனா, அக்கா..."

தன் கையை காட்டி அவளை நிறுத்திய நித்திலா,

"இந்த வீட்டை விட்டு போகவே நீ தயாராயிட்ட... அப்போ, என் பேச்சை கேட்டு இங்க இருக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை?" என்றாள்.

"எனக்கு இங்க இருக்க பிடிக்காம நான் போறேன்னு சொல்லல, கா. அவர் என்னை தவிர்க்கிறத என்னால தாங்க முடியல"

அவளுக்கு என்ன சமாதானம் கூறுவது என்று தெரியாமல் தவித்தாள் நித்திலா. கையை கழுவி விட்டு இனியவனுக்காக காத்திருந்தாள் ஆழ்வி.

தனது மடிக்கணினியுடன் வந்த இனியவன்,

"அக்கா, நாங்க கிளம்பறோம்" என்று நடந்தான். அவனை பின்தொடர்ந்து சென்றாள் ஆழ்வி.

காரை ஸ்டார்ட் செய்த இனியவன், ஆழ்வி எதையோ யோசிப்பதை பார்த்து,

"என்ன யோசிக்கிற?" என்றான்.

"ஏற்கனவே அக்கா ரொம்ப ஸ்ட்ரெஸ்டா இருக்காங்க. நீங்க அதை இன்னும் அதிகமாகிட்டிங்க..."

அவளைப் பார்த்து புன்னகைத்த இனியவன், ஒன்றும் கூறாமல் தன் கவனத்தை சாலையின் மீது திருப்பினான். ஆழ்வியை நித்திலாவிடம் அப்படி பேசச் சொன்னது இனியவன் தான். அதற்கு அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க வேண்டும் அவனுக்கு.

இனியவன் தன்னை எங்கு அழைத்துச் செல்கிறான் என்று ஆழ்விக்குத் தெரியவில்லை. அவர்களது கார் எங்கேயோ சென்றது.

"என்னை எங்க கூட்டிட்டு போறீங்க?"

"நம்ம ரெண்டு பேரும் ஒரு ஸ்பெஷலான விஷயத்தை செலப்பிரேட் பண்ண போறோம்."

"செலப்பிரேட் பண்ண போறோமா? என்ன அது?"

"நம்மளோட ஃபர்ஸ்ட் நைட்...! கரெக்ஷன்... ஃபர்ஸ்ட் பகல்...!"

திடுக்கிட்டு அவனைப் பார்த்த ஆவி, தன்னை சமாளித்துக் கொண்டு புன்னகை புரிந்தாள்.

"நீ என்னை நம்பலயா?"

பதில் கூறாமல் வெளியே வேடிக்கை பார்த்தாள்.

"ஆழ்வி..."

"ம்ம்ம்?"

"நான் சொல்றதை நம்பு. அதை அவ்வளவு லேசா எடுத்துக்காதே"

"சரி, லேசா எடுத்துக்கல"

"நான் உன்னை ஒன்னு கேட்கலாமா?"

"கேளுங்க"

"நான் பைத்தியக்காரனா இருந்தப்போ நம்ம ரிலேஷன்ஷிப் எப்படி இருந்தது?"

"எதுக்காக உங்களை அந்த மாதிரி சொல்றீங்க?"

"பைத்தியத்தை பைத்தியம்னு சொல்லாம வேற எப்படி சொல்ல முடியும்?"

"நான் எப்படி சொல்றேன்?"

"மன... நிலை... சரியில்லாத... " என்று சிரித்தான்

"நீங்களும் அப்படியே சொல்லுங்க"

"அது ரொம்ப போர்..."

ஆழ்வி உதடு சுழித்தாள்.

"என்னோட சோஷியல் ஸ்டேட்டசை பத்தி கவலை படாம, எதை வேணா செய்ற பைத்தியமா நான் இருந்தேன்னு என்னால நம்பவே முடியல"

தன் உதடு கடித்து சிரித்தாள் ஆழ்வி.

"நான் என்னவெல்லாம் செஞ்சேன்னு நீ சொல்லவே இல்லயே"

"அதை தெரிஞ்சிகிட்டு நீங்க என்ன செய்ய போறீங்க?"

"என் அறிவை வளத்துக்கலாம்னு தான்..."

"ஏன்? பிஎச்டி பண்ண போறிங்களா என்ன?"

"அட, இது நல்ல ஐடியாவா இருக்கே..." என்று அவன் கூற புன்னகைத்தாள் ஆழ்வி.

"ஆழ்வி, நீ என்னை நம்புற இல்ல?"

"அதுல என்ன சந்தேகம்?"

"பதில் சொல்லு"

"ஆமாம்"

"எவ்வளவு?"

தன் விரல் முனையைக் காட்டி,

"இவ்வளவு..." என்றாள்.

அதைக் கேட்டு சிரித்த அவன்,

"நல்ல காலம், அவ்வளவு நம்பிக்கை இருந்துதே... சரி உன் தாலியை கழட்டி கொடு" என்றான்.

"என்னது? தாலியா? எதுக்கு?" என்றாள் அதிர்ச்சியாக.

"குடு, சொல்றேன்"

"ஆனா..."

"என்னை உன் விரல் நுனி அளவுக்கு நம்புறன்னு சொன்னேன்ல?"

பெருமூச்சுவிட்டு தன் தாலியை அவனிடம் அவிழ்த்து கொடுத்தாள். அதை தன் பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான் இனியவன்.

அவர்களது கார் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தது.

"நம்ம எதுக்காக இங்க வந்திருக்கோம்?"

"நான் தான் சொன்னேனே..."

"என்ன சொன்னீங்க?"

"இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்... இல்ல ஃபர்ஸ்ட் பகல் நடக்கப்போகுது"

காரை விட்டு கீழே இறங்கி, கார் சாவியை அந்த ஹோட்டலின் பணியாளரிடம் கொடுத்தான்.

"கொஞ்சம் கீழ இறங்குறீங்களா, மேடம்?" என்றார் அந்த பணியாளர்.

காரை விட்டு கீழே இறங்கினாள் ஆழ்வி.  இருவரும் இரண்டாம் தளத்திற்கு வந்தார்கள். அங்கிருந்த ஒரு அறையின் கதவை தட்டினான் இனியவன். கதவு திறக்கப்பட்டது. ஆழ்வியுடன் உள்ளே நுழைந்தான் இனியவன். அங்கிருந்தவர்கள் யார் என்று அவளுக்கு தெரியவில்லை.

"ஹலோ இனியவன்" என்று தன் கையை அவனை நோக்கி நீட்டினார் அவனது வழக்கறிஞரான ஜீவானந்தம்.

"சாரி, மிஸ்டர் ஜீவானந்தம். உங்க பிஸி ஷெட்டியூல்ல நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்"

"பரவாயில்ல, இனியவன். நான் மேனேஜ் பண்ணிட்டேன்"

"இவங்க மிஸஸ் ஆழ்வி இனியவன்" என்று அவளை ஜீவானந்தத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

"ஆழ்வி, இவர் என்னோட லாயர்"

"வணக்கம், சார்" என்றாள் ஆழ்வி.

"உக்காருங்க மேடம்"

அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள் ஆழ்வி. இனியவனிடம் ஒரு கோப்பை கொடுத்தார் ஜீவானந்தம். இருபது நிமிடங்கள் எடுத்துக்கொண்டு  அதை பொறுமையாய் படித்தான் இனியவன்.

"எல்லாம் சரியா இருக்கு, சார்" என்று அதை ஜீவானந்தத்திடம் திருப்பிக் கொடுத்தான்.

"அவங்க எப்ப வருவாங்க?"

"வந்துகிட்டு இருக்கணும்" என்றான் இனியவன்.

அப்பொழுது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு இனியவன் கதவை திறந்தான். தமிழரசியுடன் உள்ளே நுழைந்தான் குருபரன். அங்கு தமிழரசியை பார்த்த ஆழ்வி ஆச்சரியமடைந்தாள்.

"ஆன்ட்டி!" என்று அவரை அணைத்துக் கொண்டாள்.

"எப்படிடா இருக்க?"

"நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"

"கிரேட்"

தமிழரசியை பார்த்து வியப்படைந்த ஜீவானந்தம்,

"மிஸஸ் இனியவனும் நீங்களும் ரிலேட்டிவ்ஸ்ஸா?" என்றார்.

ஆம் என்ற தலையசைத்தார் தமிழரசி.

"அப்போ நீங்க  ஜீவானந்தம் சாரை பாக்க வரலையா?" என்றாள் ஆழ்வி மெல்லிய குரலில்.

இல்லை என்று தலையசைத்தார்
தமிழரசி.

"நான் இங்க உனக்காக தான் வந்திருக்கேன்"

"எனக்காகவா?"

"ஆமாம்"

"நம்ம ஆரம்பிக்கலாமா?" என்றார் ஜீவானந்தம்.

தமிழரசியை பார்த்தான் இனியவன்.

"ஆரம்பிக்கலாம்... டைம் ரொம்ப நல்லா இருக்கு" என்றார் தமிழரசி.

இனியவனிடம் சில முத்திரைத் தாள்களை  கொடுத்தார்  ஜீவானந்தம். ஆழ்வியை தன்னை நோக்கி இழுத்த இனியவன், அந்த காகிதங்களில் கையெழுத்திட்டு, அவளையும் கையெழுத்திட சொன்னான். அவனிடமிருந்து பேனாவை பெற்று அதில் கையெழுத்திட குனிந்த ஆழ்வியின் கண்கள் விரிவடைந்தன. அது அவர்களின் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ததற்கான பத்திரங்கள். நிமிர்ந்து நின்று அவனை ஏறிட்டாள் ஆழ்வி

"சைன் பண்ணு" என்றான் தன் புருவத்தை உயர்த்தி.

மென்று விழுங்கியபடி அதில் கையெழுத்திட்டாள் ஆழ்வி. அவர்களது சாட்சிகளாக தமிழரசியும் குருபரனும் மகிழ்ச்சியோடு கையெழுத்திட்டார்கள்.

தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஆழ்வியின் தாலியை எடுத்து அதை மீண்டும் அவள் கழுத்தில் அணிவித்தான் இனியவன், அவளை உணர்ச்சிவப்படச் செய்து. அவள் கண்கள் கலங்கின. அவனை நோக்கி ஒரு குங்கும டப்பாவை நீட்டினார் தமிழரசி. அதிலிருந்து ஒரு துளி குங்குமத்தை எடுத்து அவள் வெற்றி வகிட்டில் இட்டான் இனியவன்.

"கொஞ்சம் அதிகமா என்னை நம்ப ட்ரை பண்ணு" என்று அவள் காதில் ரகசியம் உரைத்தான். கலங்கிய கண்களுடன் களுக்கென்று சிரித்தாள் ஆழ்வி.  

"இதுலயும் சைன் பண்ணுங்க, இனியவன்"

"யா..."

சற்று முன்பு தான் படித்த அந்த கோப்பில் கையொப்பமிட்டான் இனியவன்.

"குரு, நீங்களும் ஒரு விட்னஸா இதுல சைன் பண்ணிடுங்க" என்றார் ஜீவானந்தம்.

"ஓகே, சார்" என்று அதில் கையொப்பமிட்டான் குருபரன். அதில் ஜீவானந்தத்தின் உதவியாளரும் கையெழுத்திட்டார்.

"ரெண்டு டக்குமென்ட்டையும் ரிஜிஸ்டர் பண்ணிட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்றார் ஜீவானந்தம்.

"சரிங்க, சார்" என்றான் இனியவன்.

"ஆழ்வி, நான் கிளம்பணும். நிறைய வேலையை விட்டுட்டு இனியவன் கூப்பிட்டதால வந்தேன். நாம் அப்பறமா பேசலாம்" என்றார் தமிழரசி.

அவள் சரி என்று தலையசைத்தாள்.

"இனியவனோட நீ எங்க வீட்டுக்கு வரணும்" என்று அவர் கூற, இனியவனை ஏறிட்டாள் ஆழ்வி.

"நிச்சயமா போகலாம்" என்றான் அவன்.

"குரு, தமிழரசி மேடமை டிராப் பண்ணிட்டு ஆஃபீசுக்கு போயிடு" என்றான் இனியவன்.

"சரி, இனியா" என்று அவருடன் சென்றான் குருபரன்.

தன் கையில் இருந்த பத்திரங்களை பையில் வைப்பதற்காக அதை ஜீவானந்தம் எடுத்த போது, அவர் கையில் இருந்த பத்திரங்கள் நழுவி கீழே விழுந்தது.

சட்டென்று முழங்காலிட்டு அந்த காகிதங்களை எடுத்தாள் ஆழ்வி. அவளது கரங்கள் அப்படியே நின்றது. அவளது முகம் அதிர்ச்சியோடு மாறியது. அந்த பத்திரத்தை எடுத்து படித்துப் பார்க்க, கலங்கிய கண்களோடு இனியவனை ஏறிட்டாள்.

அதை அவள் கையில் இருந்து வாங்கி, ஜீவானந்தத்திடம் கொடுத்தான் இனியவன். அதைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்றார் ஜீவானந்தம்.

இனியவன் ஆழ்வியின் கண்களை துடைத்து விட்டான். அடுத்த நொடி, அவன் நெஞ்சில் சாய்ந்து ஓவென்று அழுதாள் ஆழ்வி.   

அது, இனியவனின் உயில். அதில், ஆழ்வியை தன் ஏகோபித்த வாரிசாய் அவன்  சட்டப்படி பதிவு செய்திருந்தான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top