57 நடுக்கத்தில் சித்திரவேல்

57 நடுக்கத்தில் சித்திரவேல்

நித்திலா, சித்திரவேல், ஆழ்வி மூவரும் வெவ்வேறு வித குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்.

"நான் செய்யாத தப்புக்காக எதுக்காக என்னை குற்றம் சொல்ற?" என்றாள் நித்திலா.

"இதுல உங்க தப்பு எதுவும் இல்லயா?" என்று சிரித்த இனியவன்,

"நீங்க என்ன செய்றீங்கன்னு கூட உணராம, நீங்க இவ்வளவு அப்பாவியா இருக்கிறதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு கா" என்றான்.

"நான் என்ன செஞ்சேன், இன்னு?"

"நீங்க என் மேலயும், நம்ம குடும்பத்து மேலயும் அக்கறை காட்டுறீங்க. ஆனா உங்க புருஷனை கவனிக்கணும்னு உங்களுக்கு தோணல. அதுக்கு என்ன அர்த்தம்? உங்களுடைய தனி கவனிப்பு அவருக்கு தேவையில்லன்னு நினைக்கிறீங்களா?"

"அவர் என்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டார், இன்னு. உனக்கு அவரைப் பத்தி தெரியாது"

"உங்களுக்கு அவரைப் பத்தி தெரியுமா?" என்றான் விஷம புன்னகையுடன்.

"என்னைவிட அவரைப் பத்தி வேற யாருக்கு தெரியும்? எங்களுக்குள்ள இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங் பத்தி உனக்கு தெரியாது" என்றாள் நித்திலா நம்பிக்கையுடன்.

"தப்பான எண்ணத்தோட இருக்காதீங்க கா. எல்லா ஆம்பளையுமே தன்னோட மனைவி தன் மேல தனி அக்கறை காட்டணும்னு தான் விரும்புவான். ஒருவேளை, நீங்க அவர் மேல அக்கறை காட்டலன்னா, அவர் எங்களுக்கு எதிரா திரும்புவாரு. ஜாக்கிரதையா இருங்க" என்றான் சாதாரணமாய்.

சித்திரவேலின் விழி அதிர்ச்சியோடு விரிந்தது.

"நீ சொல்றதுக்கு என்ன அர்த்தம், இன்னு?"

"ஆமாம் கா, நீங்க என் மேல காட்டுற அக்கறையும், அவர் மேல காட்டுற அலட்சியமும்  அவரை என்னை வெறுக்க வைக்கும். அது எனக்கு எதிரா அவரை திருப்பும்" என்றான் புன்னகையோடு.

மென்று விழுங்கினான் சித்திரவேல். அவனது பதற்றம் எல்லை கடந்து கொண்டிருந்தது. திடீரென்று எதற்காக இனியவன் இதைப் பற்றி எல்லாம் பேசுகிறான்? அவனுக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ? அல்லது அவனது திட்டம் குறித்து அவனுக்கு பொறி தட்டி இருக்குமோ? முகத்தில் துளித்த வேர்வையை துடைத்துக் கொண்டான் சித்திரவேல்.

ஆனால் நித்திலாவோ கோபமடைந்தாள்.

"நிறுத்து இன்னு, நீ என்ன பேசுறேன்னு யோசிச்சு பேசு. எது உன்னை இப்படி எல்லாம் பேச வச்சதுன்னு எனக்கு தெரியல. அதுக்கான காரணம் என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனசுல வச்சுக்கோ. சித்ரா நீ நினைக்கிற மாதிரி இல்ல. உனக்கு அவரை பத்தி எதுவும் தெரியாது. ஆனா, எனக்கு தெரியும். நீ இல்லாதப்போ அவர் இந்த குடும்பத்துக்காக எவ்வளவு பாடுபட்டு இருக்காருன்னு உனக்கு தெரியாது. என்னோட காதலை ஏத்துக்கிட்டப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா?"

தன் உதடு மடித்து தெரியாது என்பது போல் தலையசைத்தான் இனியவன், சித்திரவேலை பார்த்தபடி. அவன் என்ன கூறினான் என்பதை நினைவு படுத்திய சித்திரவேல், தன் கண்களை மூடினான்.

"அவருக்கு என் மூலமா ஒரு குடும்பம் கிடைச்சிருக்குன்னு அவர் அவ்வளவு சந்தோஷப்பட்டார். இதை அவர் என் குடும்பமா எப்பவுமே பிரிச்சு பார்த்ததில்ல. தன்னோட குடும்பமா தான் பாத்துக்கிட்டு இருக்காரு. அவர் உங்க எல்லார் மேலயும் அளவு கடந்த அன்பு வச்சுருக்காரு. அது தான் அதுக்கு காரணம். அவர் உன்னை வெறுப்பார்னு நீ எப்படி நினச்ச இன்னு?" என்றாள் வருத்தத்தோடு.

அவள் கூறியது எல்லாமே இனியவனுக்கு தெரிந்த விஷயம் தான். சித்திரவேலை மணந்து கொள்வதற்கு முன்பாக இதைப் பற்றி எல்லாம் அவள் அவனிடம் கூறியிருந்தாள்.

"அவர் குணத்துல சொக்கத்தங்கம். நான் உன் மேலயும் நம்ம குடும்பத்து மேலயும் எதுக்காக இவ்வளவு அக்கறை காட்டுறேன்னா, அம்மா நம்மளை விட்டுட்டு போனதுக்கு அப்புறம் நமக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்ல. அதனால தான் நான் உங்க கூட இருக்கணும்னு நினைச்சேன். சித்ராவுக்கும் அதைப்பத்தி நல்லாவே தெரியும். அதனால தான் நான் கல்யாணத்துக்கு பிறகு இங்க இருக்கேன்னு கேட்டப்போ அவர் மறுபேச்சு சொல்லாம ஒத்துக்கிட்டாரு"

சித்திரவேலை இனியவன் ஊடுருவும் பார்வை  பார்த்தபோதிலும், அவனது இதழ்களில் ஒரு புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

"இன்னொரு தடவை என் புருஷனைப் பத்தி ஒரு வார்த்தை பேசவும் நீ துணியாத. என் புருஷன்னு வந்துட்டா நான் வேற யாரைப் பத்தியும் கவலைப்பட மாட்டேன்"

"எனக்கு தெரியும், கா. இப்போ மாமாவுக்கும் தெரிஞ்சிருக்கும்" என்று மறைமுகமாய் அவனை தாக்கினான் இனியவன்.

"அவருக்கு ஏற்கனவே இது எல்லாமே தெரியும். அதனால தான் நான் உன்கிட்ட பாசமா இருக்கிறத பத்தி அவர் ஒரு வார்த்தை கூட சொன்னதில்ல. ஏன்னா, உறவுங்கிறது எவ்வளவு பெரிய விஷயம்னு நம்ம எல்லாரையும் விட அவருக்கு நல்லாவே தெரியும். இந்த உலகத்திலேயே அவரை வேதனைப்படுத்துற விஷயம், ஒரு உறவை இழக்கிறது தான். தயவு செஞ்சு அவரைப் பத்தி இன்னொரு தடவை இப்படி பேசாத, இன்னு"

யாருடைய முகத்தையும் பார்க்க கூட திராணியில்லாமல் தவித்தபடி நின்றான் சித்திரவேல்.

"ஏன் மாமா, அமைதியா இருக்கீங்க? உங்களுக்கு சொல்றதுக்கு எதுவும் இல்லயா?" என்றான் இனியவன் புன்னகை மாறாமல்.

"ஏன் நீங்க இப்படி எல்லாம் பேசுறீங்கன்னு எனக்கு புரியல..." என்றான் சித்திரவேல் தடுமாற்றத்துடன்.

"உண்மையாவே உங்களுக்கு புரியலயா?" என்றான் கள்ள புன்னகையோடு.

"எனக்கு எப்படி தெரியும்?" என்று மென்று விழுங்கினான் சித்திரவேல்

"எங்க அக்கா உங்களை நல்லபடியா கவனிச்சுக்கணும்னு தான் நான் நினைக்கிறேன். பாருங்க, அவங்க எவ்வளவு கண்மூடித்தனமா உங்களை நம்புறாங்க...! ஜாக்கிரதையா இருங்க மாமா, நீங்க அவங்க நம்பிக்கையை உடைச்சுட்டா, அவங்க உங்களை மொத்தமா வெறுத்துடுவாங்க" என்றான் மறைமுக அர்த்தத்தோடு.

"அவர் என் நம்பிக்கையை எப்பவும் உடைக்க மாட்டார், இன்னு" என்றாள் நித்திலா, சித்திரவேல் பதில் கூறும் முன்.

"எனக்கும் அது தான் அக்கா வேணும். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். அவ்வளவு தான்" என கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றான் இனியவன்

நித்திலா முகம் சுளிக்க, சித்திரவேல் நடுநடுங்கினான். இனியவனுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று அவன் உறுதியாய் நம்பினான். அதனால் தான் வேண்டுமென்றே அவன் இப்படி எல்லாம் பேசியிருக்க வேண்டும். அவனிடம் இதைப் பற்றி எல்லாம் கூறியது யார்? யாருக்கு இதைப் பற்றி தெரிந்து இருக்கும்? சித்திரவேல் நிம்மதி இழந்தான். ஒருவேளை அவனது திருமணம் பற்றி அவனுக்கு தெரிந்திருக்குமா? ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டால் கூட அது குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து விடும் வல்லமை படைத்தவன் இனியவன். ஆழ்வி திருமணமானவள் என்று அவனுக்கு தெரிந்து விட்டது. ஆனால் அவன் அது குறித்து அலட்டிக் கொள்ளவே இல்லை. அவள் தன் மனைவி என்று அவனுக்கு தெரிந்திருக்குமோ...!

"திடீர்னு இன்னுவுக்கு என்ன ஆச்சு?" என்றாள் நித்திலா.

"நீ மாப்பிள்ளையை நல்லா கவனிச்சுக்கணும்னு அவன் நினைக்கிறான். அதை தானே சொன்னான்?" என்றார் பாட்டி.

தன் அறைக்கு சென்ற இனியவன், பாதி வழியில் திரும்பி வந்தான்.

"அக்கா, ஆழ்விக்கு நம்ம கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு"

ஆழ்வியை பார்த்து புன்னகை புரிந்தாள் நித்திலா.

"கங்கிராஜுலேஷன்ஸ் ஆழ்வி"

"தேங்க்யூ அக்கா"

அப்பொழுது அவர்கள்,

"அப்படியா?" என்ற குரல் கேட்டார்கள்.

சிறு நடை நடந்து அவர்களை நோக்கி வந்தாள் பார்க்கவி.

"இப்போ நீ எப்படி இருக்க, கவி?" என்றான் இனியவன்.

"பரவால்ல, அண்ணா"

"நீ ஏதாவது சாப்பிடுறியா?" என்றாள் நித்திலா.

"இப்ப வேண்டாம் கா"  என்ற அவள் ஆழ்வியை அணைத்து

"கங்கிராட்ஸ்" என்றாள்.

"ஆமாம், இப்போ அவ இண்டிபெண்டன்ட் ஆயிட்டா. இனிமே அவர் யார்கிட்டயும் எதையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்ல" என்று கூறினான் இனியவன், அனைவரையும் யோசனையில் ஆழ்த்தி... ஆழ்வி உட்பட...!

அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை

"அவ சீக்கிரமாவே ஏதாவது ஒரு உமன்ஸ் ஹாஸ்டலுக்கு போயிடலாம்..." என்று அவர்கள் தலையில் குண்டை தூக்கி போட்டான்.

ஆழ்வி அதிர்ச்சியில் விழி விரித்தாள். அனைவரும் அவளைத் தான் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். இனியவன் அவளிடம் கூறிய வார்த்தைகள் அவளுக்கு நினைவுக்கு வந்தது. 'நான் என்ன செய்கிறேனோ அதற்கு தகுந்தார் போல் நடந்து கொள்' என்று அவன் கூறியதை நினைத்துக் கொண்டு அந்த இடம் விட்டு அமைதியாய் சென்றுவிட்டாள் ஆழ்வி.

"நீ எதுக்காக அப்படி சொன்ன, இன்னு?" என்றாள் நித்திலா.

"என்ன சொன்னேன்?"

"எதுக்காக ஆழ்வியை உமன்ஸ் ஹாஸ்டலுக்கு அனுப்புறதை பத்தி பேசின?"

"அதுல என்னக்கா தப்பு இருக்கு? எப்படி இருந்தாலும் அவ இங்க இருந்து ஒரு நாள் போய் தானே ஆகணும்?"

"ஏன் இன்னு, உனக்கு அவளை பிடிக்கலயா?"

"இது எனக்கு அவளை பிடிச்சிருக்கா பிடிக்கலயா அப்படிங்கற விஷயம் கிடையாது. எவ்வளவு நாளைக்கு தான் அவ இங்க தங்க முடியும்?"

"அண்ணா அவ என்னோட ஃப்ரெண்ட். தயவு செஞ்சு அவளை இப்படி ஹர்ட் பண்ணாத"

"கவி நீ எதார்த்தத்தை புரிஞ்சுக்கோ. ஒரு பொண்ணு ஒரு அந்நிய வீட்ல ரொம்ப நாளைக்கு விருந்தாளியா இருந்தா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?"

"அண்ணா எப்போதிலிருந்து நீ எங்களை விட்டுட்டு மத்தவங்களை பத்தி கவலைப்பட ஆரம்பிச்ச? எங்க மேல உனக்கு அக்கறை இல்லயா?"

"எதுக்காக நீ இவ்வளவு சீரியஸா பேசுற?"

"நான் ஆழ்விக்கு வாக்கு கொடுத்து இருக்கேன். அவ இங்க தான் இருப்பா. அவ்வளவு தான். அவ இங்க இருக்கிறது உனக்கு பிடிக்கலன்னா நானும் அவ கூட சேர்ந்து ஹாஸ்டலுக்கு போறேன்" என்றாள் நிற்கவே தடுமாறிய பார்கவி.

அவளை நெருங்கி வந்த இனியவன், அவளை சோபாவில் அமர வைத்து,

"உனக்கு இன்னும் உடம்பு  கம்ப்ளிட்டா குணமாகல. எதுக்கு இப்போ ஹைப்பர் ஆக்குற?"

"ஆழ்வியை இங்கிருந்து அனுப்புறதை பத்தி பேச மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணு"

கண்களை சுழற்றினான் இனியவன். நடப்பதை எல்லாம் பார்த்து குழம்பிப் போனான் சித்திரவேல். இந்த இனியவனுக்கு என்ன தான் பிரச்சனை? சற்று நேரத்திற்கு முன்பு தான் எதையோ தெரிந்து கொண்டவன் போல் பேசினான். ஆனால் இப்பொழுது, ஆழ்வியை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்கிறான்... அவனுக்கு ஆழ்வியை பிடிக்கவில்லையா?

அவர்கள் பேசுவதை மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த ஆழ்விக்கும் குழப்பம் ஏற்பட்டது. அவன் என்ன தான் செய்ய நினைக்கிறான் என்று அவளால் ஒரு முடிவுக்கு வரவே முடியவில்லை.

"சரி, நான் அவளை இங்கிருந்து அனுப்புறதை பத்தி பேச மாட்டேன். அவ இங்க எவ்வளவு நாள் இருக்கணுமோ இருக்கட்டும். போதுமா?" என்றான் இனியவன்.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா" என்று அவன் தோளில் சாய்ந்தாள் பார்கவி.

"வா உன் ரூமுக்கு போகலாம். உனக்கு ரெஸ்ட் வேணும்" என்று அவளை அழைத்துச் சென்றான் இனியவன்.

பதட்டத்தோடு சோபாவில் அமர்ந்தாள் நித்திலா.

"ரிலாக்ஸ், நித்தி" 

"இல்ல சித்ரா, நம்ம குடும்பம் என்னால ரொம்ப பெரிய பிரச்சனையை ஃபேஸ் பண்ண போகுதுன்னு ஜோசியர் சொன்னாரு"

சித்திரவேல் மேலும் அதிர்ச்சி அடைந்தான்.

"உன்னாலயா?"

"ஆமாம் என்னோட பிறந்த வீடு என்னால ரொம்ப பெரிய பிரச்சனையை சந்திக்கப்போகுதாம். அதுக்கு காரணம் நான் எச்சரிக்கையா இல்லாம போனதுதான்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இன்னு இதுவரை அவன் பேசாத விஷயத்தை எல்லாம் பேசுறான். அவனுக்கு என் மேல ஏதோ வருத்தம் இருக்கிற மாதிரி தெரியுது. இப்போ ஆழ்வியையும் வீட்டை விட்டு அனுப்பணும்னு சொல்றான். அவன் கிட்ட ஏற்பட்டு இருக்கிற இந்த மாற்றம் எனக்கு நடுக்கத்தை தருது. என்னை அடித்து வீழ்த்துற அளவுக்கு ஏதோ நடக்க போகுதுன்னு என் மனசு சொல்லுது"

"நித்தி, ஏன் தேவையில்லாம டென்ஷன் ஆகுற? உனக்கு புரிய வைக்கணும்னு தான் மச்சான் அப்படி எல்லாம் பேசி இருப்பாரு"

"என் மூளை வேலை செய்யவே மாட்டேங்குது"

நித்திலா தன் குடும்பத்தை எந்த அளவுக்கு நேசிக்கிறாள் என்பது சித்திரவேலுக்கு தெரியும். அவன் அவளது தம்பிக்கு என்ன செய்தான் என்று அவளுக்கு தெரிந்து விட்டால் என்ன ஆகும்? அவள் அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதாய் தெரிகிறது. இனியவன் அவன் மீது குறை கூறிய போது கூட அவள் அவனின் விட்டுக் கொடுக்காமல் நின்றாள். இனியவனுக்கு மோசமான மருந்தை கொடுத்து அவனை பைத்தியமாக்கி அவன் பெரிய தவறு செய்து விட்டானோ...? அந்த மருந்தை பற்றிய உண்மை நித்திலாவுக்கு தெரிய வந்தால் அவனது நிலைமை என்னவாகும்? அவள் அவனை நிச்சயம் அடியோடு வெறுத்து ஒதுக்குவாள். அவனது காதலை அவள் புரிந்து கொள்வாளா? நிச்சயம் மாட்டாள். ஏனென்றால் அவளும் தன் தம்பி மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறாள். ஒருவேளை அவனை அவள் விவாகரத்து செய்து விட்டால் என்னவாகும்? சித்திரவேலின் உடல் குப்பென்று வியர்த்தது. இந்த விஷயத்தில் நித்திலாவை எப்படி கையாள்வது என்று அவனுக்கு புரியவில்லை.

"நீங்க வாங்க, நம்ம ரூமுக்கு போகலாம். உங்களுக்கு ரெஸ்ட் வேணும்" என்றாள் நித்திலா.

சரி என்று அவளுடன் நடந்தான் சித்திரவேல். இதுவே வேறு ஒரு தருணமாக இருந்திருந்தால், அவள் அவன் மீது காட்டிய அக்கறைக்கு அவன் சந்தோஷத்தில் திளைத்திருப்பான். ஆனால் இப்பொழுது இருக்கும் சூழ்நிலை அவனை அதை அனுபவிக்க விடவில்லை.

பார்கவியை அவளது அறையில் விட்டு விட்டு வெளியே வந்தான் இனியவன். வரவேற்பறையில் யாரும் இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு ஆழ்வியின் அறைக்கு வந்தான். நகம் கடித்த படி கட்டிலில் அமர்ந்திருந்த அவள், அவனை பார்த்தவுடன் எழுந்து நின்றாள்.

"என் மேல அப்செட்டா இருக்கியா?"

இல்லை என்று தலையசைத்தாள்.

"நெஜமாவா?"

ஆம் என்று தலையசைத்தாள்.

"நான் உன்னை ஹாஸ்டலுக்கு அனுப்ப சொன்னேன்"

"ம்ம்ம்"

"அது உனக்கு கஷ்டமா இல்லயா?"

ஆழ்வி அமைதியாய் நின்றாள்.

"ஆழ்வி ஏதாவது சொல்லு"

"உங்களுக்கு பிடிச்சா நான் இங்க இருப்பேன். நீங்க என்னை அனுப்பணும்னு நினைச்சா, நான் இங்கிருந்து போயிடுவேன்"

முகத்தை சுருக்கிய இனியவன்,

"நீ இங்கிருந்து போயிடுவியா?" என்றான்.

"ம்ம்ம்..."

"உனக்கு என்ன பைத்தியமா? "

"ம்ம்ம்..."

"அப்படின்னா நீ என் மேல அப்சட்டா தான் இருக்க"

"இல்ல"

"அப்புறம் ஏன் இப்படி பேசுற?"

"நான் என்ன செய்வேனோ அதைத்தான் சொன்னேன்"

"எனக்காக போராட மாட்டியா?"

"உங்களுக்காக எந்த அளவுக்கு போராடணுமோ, அதை நான் ஏற்கனவே செஞ்சு முடிச்சிட்டேன். அது உங்களுக்கும் தெரியும். இது உங்க டர்ன். உங்க வைஃப் உங்க கூட இருக்கணும்னு நினைச்சா, அதுக்கு நீங்க தான் போராடணும்"

"நாளைக்கு காலையில ரெடியா இரு"

"எதுக்கு?"

"நம்ம ஒரு இடத்துக்கு போக போறோம்"

"எங்க?"

"எங்கன்னு சொல்லலனா என்கூட வர மாட்டியா?"

"இதுக்கு பதில் உங்களுக்கே தெரியும்"

"ஃபைன்... ரெடியா இரு" என்று அங்கிருந்து சென்றான் இனியவன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top