53 சுவரில் அடித்த பந்து

53 சுவரில் அடித்த பந்து

இதற்கிடையில்...

நித்திலாவும் பாட்டியும் ஜோசியரின் வீட்டிற்கு சென்றார்கள். சோழிகளை சுழட்டி போட்டு நடந்த விஷயத்திற்கான பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை கணித்தார் ஜோசியர். விழுந்த சோழிகளின் எண்ணிக்கையை வைத்து எதையோ கணக்கிட்டார். நித்திலாவும் பாட்டியும் அவரை பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"பிரச்சனை ரொம்ப சிக்கலா தான் மா தெரியுது. நீங்க ரொம்ப பெரிய சூறாவளியை எதிர்கொள்ள போறீங்க" என்றார் ஜோசியர்.

"நீங்க என்ன சொல்றீங்க?" என்று நடுக்கத்தோடு கேட்டார் பாட்டி.

"ஆமாமா அவங்களுக்கு எதிர்பாராத பெரிய அடி விழப்போகுது. அவங்க வாழ்க்கையையே மாத்தி போட போகுது. அதை எதிர் கொள்ள அவங்க தயாராக இருக்கணும்"

"நீங்க சொல்றதுக்கு என்ன அர்த்தம் ஜோசியரே?" என்றாள் நித்திலா பயத்துடன்.

"ஆமாம், உங்களால உங்க பிறந்த வீடு ரொம்ப பெரிய பிரச்சனையை எதிர்கொள்ளப் போகுது. அது அவ்வளவு சாதாரண பிரச்சனை இல்ல. எரிமலை மாதிரி வெடிச்சி சிதறப்போகுது" 

நித்திலாவும் பாட்டியும்  நடுக்கத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"இதையெல்லாம் தவிர்க்க எதுவும்  பரிகாரம் இல்லையா?"

"ஏற்கனவே ரொம்ப காலதாமதம் ஆயிடுச்சு. இது பரிகாரத்தை பத்தி எல்லாம் யோசிக்கிற நேரம் இல்ல. நீங்க விளைவுகளை எதிர் கொண்டு தான் ஆகணும். பிரச்சனையோட தீவிரத்தை குறைக்க, அஞ்சு எண்ணெய் கலந்த தீபத்தை ஒவ்வொரு நாள் காலையிலையும்  பூஜை ரூம்ல ஏத்தி வையுங்க. அந்த விளக்கை ஏத்தினதுக்கு பிறகு தான் நீங்க எதுவும் சாப்பிடலாம்"

"நான் அதை நிச்சயம் செய்றேன் ஜோசியரே"

அவர் சரி என்று தலையசைக்க இருவரும் எழுந்து நின்றார்கள்.

"ஒரு நிமிஷம், மா"

அவரை திரும்பிப் பார்த்தாள் நித்திலா.

"உங்களோட சொந்த வாழ்க்கையில கவனம் செலுத்துங்க. அதை நீங்க ஆரம்பத்திலேயே செஞ்சிருந்தா பல பிரச்சனைகளை உங்களால தவிர்த்திருக்க முடியும்"

"நீங்க சொல்றதுக்கு என்ன அர்த்தம் ஜோசியரே?"

"நீங்க இப்போ எதிர் கொள்ள இருக்கிற எல்லா பிரச்சனைக்கும் உங்களுடைய முந்தைய நடவடிக்கைகள் தான் காரணம். நான் சொன்னதை மட்டும் செஞ்சுகிட்டு வாங்க."

சரி என்று தலையசைத்து விட்டு அவரிடம் விட்டு அகன்றார்கள் அவர்கள்.

பாட்டியும் நித்திலாவும் காரில் ஏறி அமர்ந்தார்கள். பாட்டியின் மடியில் படுத்து அழுதாள் நித்திலா.

"இன்னுவோட சம்மதம் இல்லாம நான் ஆழ்வியை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டேன்னு அவன் என் மேல ரொம்ப கோபப்பட போறான்னு எனக்கு பயமா இருக்கு பாட்டி. அவன் ஒருவேளை ஆழ்வியை மனைவியா ஏத்துக்கலைனா நான் என்ன செய்வேன்? அவங்களை கல்யாணம் பண்ணி வச்சதுக்காக அவன் என்னை வெறுத்துட்டா நான் எப்படி தாங்குவேன்? அவனோட வெறுப்பை என்னால தாங்க முடியாது பாட்டி"

தான் எந்த விஷயத்தை நேரடியாக இறங்கி செய்தாளோ, அதைப்பற்றி மட்டும் தான் யோசித்தாள் நித்திலா. அவளால் வேறு எந்த விதத்திலும் யோசிக்க முடியவில்லை. முக்கியமாய், சித்திரவேலை பற்றி அவளால் தவறாக எண்ணவே முடியவில்லை.

"அழாத, நித்தி. நடந்தது நடந்துப் போச்சு. நம்மால எதையும் மாத்த முடியாது. இப்போ நடக்கப் போறது எதுவா இருந்தாலும் நம்ம அதை ஃபேஸ் பண்ணித் தான் ஆகணும்" என்றார் பாட்டி.

"எனக்கு பயமா இருக்குப் பாட்டி"

"நான் அவனுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை அவன் கிட்ட சொல்லலாம்னு இருக்கேன். ஏன்னா ஆழ்வி கல்யாணம் ஆனவ அப்படிங்கற விஷயம் அவனுக்கு தெரிஞ்சிருச்சு"

"என்ன பாட்டி சொல்றீங்க? எப்படி, எப்போ தெரிஞ்சது?"

"அவள் கழுத்துல இருந்த தாலியை அவன் பாத்துட்டானாம்"

"அடக்கடவுளே...!"

"நான் அவங்க கல்யாணத்தைப் பத்தி அவன்கிட்ட உடனே சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா இப்ப இருக்குற சூழ்நிலையில அதை செய்யறது சரியான்னு எனக்கு தெரியல. ஜோசியர் சொன்னதை ஒரு வாரத்துக்கு நீ செஞ்சு பாரு. அதுக்கப்புறம் நம்ம அவன்கிட்ட பேசலாம்"

"சரிங்கப் பாட்டி"

"அதுவரைக்கும் ஜோசியர் சொன்னதைப் பத்தி யார்கிட்டயும் எதுவும் சொல்லாதே"

"சரி"

...........

இனியவன் இல்லம்.

ஆழ்வியை அணைத்தபடி நின்றிருந்தான் இனியவன். தான் தன் கணவனின் கரங்களுக்குள் அகப்பட்டு கிடப்பதை நம்பவே முடியவில்லை ஆழ்வியால். அவன் தன்னை மனைவியாய் ஏற்றுக் கொண்டதையும் அவளால் நம்ப முடியவில்லை. இடையில் நடந்த எதுவும் அவனது நினைவில் இல்லை என்றாலும், அவன் அவளை ஏற்றுக் கொண்டான். அவன் மனம் தான் எவ்வளவு பெரியது! அவன் பலமுறை அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் கவனித்து இருந்தாள். அவனது மனைவி என்ற உண்மை தெரிந்து தான் அவன் அதை செய்தானா? அவள் முகத்தில் வெட்க புன்னகை தவழ்ந்தது. 

மீண்டும் அழைப்பு மணியின் ஓசையை கேட்டார்கள்.

"என்னங்க யாரோ காலிங் பெல் அடிக்கிறாங்க" என்றாள் ஆழ்வி.

ஆம் என்று தலையசைத்தபடி அவளை விடுவித்தான் இனியவன்.

"ஆழ்வி, நீ பார்கவி ரூமுக்கு போ. நான் போய் கதவை திறக்கிறேன். நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். நான் மத்தவங்க கிட்ட என்ன பேசுறேனோ அதை பொறுத்து உன்னுடைய ரியாக்ஷன் இருக்கட்டும்"

சரி என்று தலையசைத்துவிட்டு பார்கவின் அறையை நோக்கி ஓடினாள் ஆழ்வி. தரைதளம் வந்து கதவை திறந்த இனியவன், சித்திரவேலை பார்த்து ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றான். அவனும் கூட இனியவனை பார்த்து திகைத்துத்தான் போனான். இருவரும் தங்களை சுதாகரித்துக் கொண்டு சகஜமாய் பேச துவங்கினார்கள், தங்களது அதிருப்தியை காட்டிக் கொள்ளாமல்.

"ஹாய் இனியவன், காலையில நான் உங்கள் வீட்ல பார்க்கவே இல்லயே..."

"சும்மா ஒரு லாங் டிரைவ் போகணும்னு தோணுச்சு"

"வீட்ல யாரும் இல்லையா?"

"தெரியல, நான் இப்பதான் வீட்டுக்கு வந்தேன்"

"ஓ..."

"மத்தவங்க எங்க போயிருக்காங்கன்னு உங்களுக்கு தெரியாதா?"

"ஜோசியரை பார்க்க போறதா நித்தி சொல்லிக்கிட்டு இருந்தா"

"ஓஹோ..."

அதே நேரம் பாட்டியுடன் உள்ளே நுழைந்த நித்திலா, அவர்களைப் பார்த்து புன்னகை புரிந்தாள்.

"ஏன் கா ஒரு மாதிரியா இருக்கீங்க?" என்றான் இனியவன் அவளது வாடிய முகத்தை பார்த்து.

"எனக்கு ஒன்னும் இல்ல, இன்னு. நான் நல்லா தான் இருக்கேன்" என்றாள் நித்திலா.

"இன்னு, நீ ஏதாவது சாப்பிட்டியா?" என்றார் பாட்டி.

"இன்னும் இல்ல பாட்டி. நான் இப்பதான் வந்தேன்"

"ஓ"

பார்கவியின் அறையிலிருந்து ஆழ்வி வருவதை அவர்கள் பார்த்தார்கள்.

"கவிக்கு இப்ப எப்படி இருக்கு?"

"நல்லா இருக்கா, கா. தூங்கிட்டு இருக்கா"

"அவளுக்கு என்ன ஆச்சு?" என்றான் இனியவன் தனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது என்பது போல்.

"அவளுக்கு ஃபீவர் இருந்தது. இப்ப பரவாயில்ல போலிருக்கு" என்றபடி 
அவளது அறையை நோக்கிச் சென்றாள் நித்திலா.

"நான் ஆஃபீசுக்கு போகலாம்னு இருக்கேன்" என்றான் இனியவன்.

"போயிட்டு வா இன்னு. ஆனா நீ ஆழ்வியை கூட்டிட்டு போறேன்னு சொன்னியே, கூட்டிகிட்டு போகலையா?" என்றாள்.

"கூட்டிக்கிட்டு போறேன், கா. பை தி வே, ஆழ்விக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்றான்.

மின்னும் கண்களுடன் அவனை ஏறிட்டான் சித்திரவேல். நித்திலாவோ தடுமாறினாள்.

"ஆமாம்" என்றாள் நித்திலா.

"அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு என்னால நம்பவே முடியல"

மென்று விழுங்கியபடி தலைகுனிந்தாள் ஆழ்வி.

"உன்னோட ஹஸ்பண்ட் என்ன பண்றாரு ஆழ்வி?" என்றான் இனியவன் வேண்டுமென்றே.

"அவர் ஒரு பிசினஸ்மேன்" என்று உண்மையை கூறினாள் ஆழ்வி.

"அப்படியா? அவர் ஒரு பிசினஸ்மேனா இருந்தா, நீ எதுக்காக வேலை தேடிக்கிட்டு இருக்க?"

"எனக்கும் அவருக்கும் பேச்சு வார்த்தை இல்ல" என்றாள்.  மெல்லிய குரலில்.

"அப்படின்னா என்ன அர்த்தம்?"

"நான் அவர் கூட இல்ல"

பாட்டியும் நித்திலாவும் அவளுக்காக வருத்தப்பட்டார்கள்.

"ஏன் அவர் கூட இல்ல?"

"அது வந்து..." என்று  தயங்குவது போல் பாசாங்கு செய்தாள் ஆழ்வி.

"சரி விடு, அது உனக்கும் உன் ஹஸ்பண்டுக்கும் இருக்கிற பர்சனல் விஷயமா இருக்கும்" என்றான் மேலும் அதை கிளற விரும்பாமல்.

"ஆழ்வி, இன்னு ஆஃபீசுக்கு போறான். நீயும் அவன் கூட போ"

சரி என்று தலையசைத்த ஆழ்வி,

"நான் என்னோட சர்டிபிகேட்டை எடுத்துக்கிட்டு வரேன்" என்று தன் அறைக்கு சென்றாள்.

"நான் என்னோட கோட்டை கொண்டு வரேன்" என்று அவனும் தன் அறைக்கு சென்றான். முக்கியமாய் ஆழ்வியின் கைபேசியை கொண்டுவர. அதை தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

அவர்கள் இருவரும் வீட்டை விட்டு கிளம்பினார்கள். சித்திரவேல் நிம்மதி அடைந்தான். ஆழ்வி திருமணமானவள் என்று அவனுக்கு தெரிந்து விட்டது. இந்த நிமிடம் முதல் அவன் ஆழ்வியை பார்ப்பதையே தவிர்த்து விடுவான் என்று எண்ணினான் சித்திரவேல்.

காரில்

"நீ உன் புருஷன் கூட இல்லைன்னு எனக்கு தெரியும். ஆனா, உங்க ரெண்டு பேருக்குள்ள பேச்சுவார்த்தை கூடவா இல்ல?" என்றான் கிண்டலாய். 

"அவங்க நம்புறதுக்காக அப்படி சொன்னேன்" 

"எனக்கு தெரியும்"

"எதுக்காக அவங்ககிட்ட உண்மையை சொல்ல வேண்டாம்னு சொல்றீங்க?"

"நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அது உண்மையா இல்லையான்னு நிச்சயப்படுத்திக்க நினைக்கிறேன். அந்த உண்மை தெரியிற வரைக்கும், அவங்களுக்கு இந்த உண்மை தெரிய வேண்டாம்"

ஆழ்வி பதட்டமானாள் சித்திரவேலை பற்றிய உண்மையை அவனிடம் எப்படி கூறுவது என்று அவளுக்கு புரியவில்லை. கூறினால் அவன் அவளை நம்புவானா என்றும் அவளுக்கு தெரியவில்லை. அல்லது அவன் அந்த விஷயத்தை வைத்து வீட்டில் பிரச்சனை செய்யலாம். இப்பொழுது அவர்கள் அலுவலகம் செல்வதால் குருபரனுடன் பேசும் சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்கலாம். அப்பொழுது அவனிடம் இதைப் பற்றி விவாதிப்பது என்று முடிவுக்கு வந்தாள். அவன் நிச்சயம் அவளுக்கு உதவுவான், என்று நகத்தைக் கடித்த படி யோசித்தாள்.

"ஆழ்வி..."

"ம்ம்ம்?"

"ஜாக்கிரதை, நகத்தை கடிக்கிறேன்னு உன் விரலை கடிச்சுக்காத" என்று சிரித்தான். 

பட்டென்று தன் கரத்தை கீழே இறக்கிக் கொண்டாள். சிக்னலில் வண்டியை நிறுத்தினான் இனியவன். சிவப்பு நிறம் பச்சையாக மாற இன்னும் 32 வினாடிகள் இருந்தன. சீட்பெல்ட்டை தளர்த்திக் கொண்டு ஆழ்வியை நோக்கி திரும்பி அமர்ந்து, அவளிடம் ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். திணறிப்போன ஆழ்வி,

"நீங்க என்ன செய்றீங்க?" என்றாள் தடுமாற்றத்துடன்.

"என்னோட பொண்டாட்டியை பார்க்கிறேன்"

"ஏன்?"

"இப்படி பார்க்குற சந்தர்ப்பம் வீட்ல கிடைக்குமான்னு தெரியலையே!"

"ஏன் இப்படி பார்க்கணும்?"

"பாக்கணும்னு தோணுது"

அவள் கையைப் பிடித்து முத்தமிட்டான். அவளது கன்னங்களில் வியர்வை துளிர்பதை கண்ட அவன்,

"உனக்கு பயமா இருக்கா?" என்றான் தன் புருவத்தை உயர்த்தி.

அவள் இல்லை என்று தலையசைத்தாள். அவளது நெற்றியில் இருந்த வியர்வை துளிகளை துடைத்து விட்டான். அவள் மெல்ல தன் கண்ணிமைத்தாள்.

பின்னால் இருந்து வந்த வாகன இரைச்சல், அவனை சிக்னலை பார்வையிட சொன்னது. நேராய் அமர்ந்து கொண்டு, காரை ஸ்டார்ட் செய்தான். ஆழ்வி வெட்கப் புன்னகை பூத்தாள்.

தனது அலுவலகத்தின் பார்க்கிங் லாட்டில் காரைக் கொண்டு வந்து நிறுத்தினான் இனியவன்.

"ஆழ்வி, நான் வெளியில வந்து உன்னை கூட்டிகிட்டு போற வரைக்கும் நீ கார்லையே இரு. சரியா?"

"சரி" என்றாள்

இனியவன் அலுவலகத்தின் நுழைந்தான்.

அங்கு...

சித்திரவேலை பற்றி ஆழ்வி கூறியதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் குருபரன். சித்திரவேலை பற்றி இனியவனிடம் பேச வேண்டும் என்று எண்ணினான் அவன். அதற்கு முன் ஆழ்வி அவனது மனைவி என்பதையும் அவனிடம் கூறி விட வேண்டும். அதை செயல்படுத்தும் திட்டம் அவன் மனதில் இருந்தது. இனியவன் மனதில் பொறாமையை விதைத்து அதை செய்ய நினைத்தான் குருபரன். ஆழ்வி அவனிடம் சகஜமாய் பழகுவதை பார்த்த இனியவன் வெறுப்படைந்ததை அவன் கவனித்திருந்தான். இதனால் அவனது திட்டம் பலிக்கும் என்று அவன் நம்பினான், அவனுக்கும் ஆழ்விக்கும் இடையில் இருந்தது சகோதர பாசம் தான் என்பது இனியவனுக்கு தெரிந்துவிட்ட உண்மையை அறியாமல்!

தனது அறையின் கண்ணாடி சுவரின் வழியாக இனியவன் அலுவலகத்திற்குள் வருவதை கண்ட குருபரன் துணுக்குற்றான். தனது கைபேசியை எடுத்து அதை சைலண்ட் மோடில் போட்டு, ஆழ்வியிடம் பேசுவது போல் பாசாங்கு செய்தான்.

பாவம் அவன், ஆழ்வியின் கைப்பேசி இருப்பதே இனியவனிடம் தான் என்ற உண்மை அவனுக்கு தெரியவில்லை. அதோடு மட்டுமின்றி, அவனது எண்ணை ஆழ்வியின்  கைபேசியில் பிளாக் செய்ததே இனியவன் தான் என்பதும் அவனுக்குத் தெரியாது அல்லவா!

அவனது அறையின் கதவை திறந்த இனியவன் அவன் தனக்கு முதுகை காட்டியபடி கைபேசியில் பேசிக் கொண்டிருப்பதை கண்டான்.

"போங்க ஆழ்வி, இருந்தாலும் நீங்க ரொம்ப ஓவர்" என்று சிரித்தான்.

அவனது நடிப்பை பார்த்த இனியவன் கண்களை சுருக்கினான். கைகளை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்த படி நின்றான்.  பின்னால் திரும்பிய குருபரன் இனியவனை பார்த்து,

"ஐ பி கே...!" இப்பொழுது தான் அவன் இனியவனை பார்ப்பது போல் பாசாங்கு செய்து,

"ஆழ்வி, நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்" என்று அழைப்பை துண்டிப்பது போல் பாவனை செய்தான்.

"ஃபோன்ல ஆழ்வியா?" என்றான் இனியவன் முகத்தில் எந்த மாற்றமுமின்றி.

"ஆமா..."

"அவ எதுக்கு உனக்கு கால் பண்ணா?"

"அவங்க இல்ல. நான் தான் கால் பண்ணேன்"

உள்ளூர் புன்னகைத்தான் இனியவன். அவனது நண்பன் எவ்வளவு அழகாய் பொய்யுரைக்கிறான்...! அவனது எண்ணை பிளாக் செய்த பிறகு அவனால் எப்படி ஆழ்விக்கு ஃபோன் செய்ய முடியும்? குருபரன் என்ன செய்ய முயல்கிறான் என்பது அவனுக்கு புரிந்து போனது. குருபரன் அடித்த பந்து, அவனிடமே திரும்பி சென்றால் அவன் என்ன செய்வான்? அதை செய்ய முடிவு செய்தான் இனியவன்.

"ஓ..."

"அவங்க கிட்ட பேசினாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்குது" என்றான் குருபரன், இனியவனின் முக பாவத்தை கவனித்தவாறு.

"அப்படியா?"

"ஆமா, அவங்க கிட்ட பேசினாலே ரொம்ப ரிலாக்ஸா இருக்கும்"

"ம்ம்ம்?"

இனியவனின் முகத்தில் குருபரன் எதிர்பார்த்த எந்த மாற்றமும் நிகழவில்லை. அவன் சாதாரணமாய் இருந்தான்.

"நீ ஆழ்வி கிட்ட க்ளோசா இருக்கிறதை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. உனக்கு ஏத்த ஒரு பொண்ணு கிடைச்சுட்டா போல இருக்கே" என்று குருபரனின் முகத்தை பார்த்தபடி இனியவன் சாதாரணமாய் கூற, அவன் முகம் பேய் அறைந்தது போல் மாறியது.

"ஆழ்வி ரொம்ப நல்ல பொண்ணு. நீ அவளோட சந்தோஷமா இருக்கிறதை பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம்மளை புரிஞ்சிக்கிற ஒருத்தர் கிடைக்கிறது ரொம்ப பெரிய விஷயம்" என்றான் இனியவன்.

தனது திட்டம் வேறு பக்கம் திசை திரும்புவதை உணர்ந்தான் குருபரன். அன்று அவன் இனியவனின் முகத்தில் பொறாமையை கண்டானே! அப்படி இருக்கும்போது இன்று அவனுக்கு என்னவானது? விஷயம் தலைகீழாய் திரும்புகிறதே...! இனியவன் அவர்களுடைய உறவு முறையை தவறாக புரிந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. இப்பொழுது அவன் என்ன செய்யப் போகிறான்?

"இல்ல, இனியா, நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல" என்று தடுமாறினான்.

"நான் என்ன நினைக்கிறேன்? ஆழ்வி நல்ல பொண்ணு தானே?" என்றான் இனியவன்

"நல்ல பொண்ணு தான்..."

"அப்பறம் நீ வேற எதை பத்தி பேசுற?"

"நீ அவங்க எனக்கு ஏத்தவங்கன்னு சொன்னது சரியில்ல"

"அட, நீ தான சொன்ன, அவகிட்ட பேசினா ரொம்ப மனசுக்கு இதமா இருக்குன்னு...?"

"ஆமா, ஆனா நீ நினைக்கிற அர்த்தத்துல இல்ல"

"நான் எந்த அர்த்தத்தில் புரிஞ்சுகிட்டேன்னு நினைக்கிற?"

"இல்ல இனியா... நாங்க சும்மா தான்..."

"இப்போ எதுக்காக இவ்வளவு டென்ஷன் ஆகுற?  உனக்கு ஆழ்வியை பிடிச்சிருந்தா அதுல என்ன தப்பு இருக்கு? உனக்காக வேணும்னா நான் அவ கிட்ட பேசுறேன்"

அந்த வார்த்தைகள் அவன் தலையில் சம்மட்டியால் அடிப்பது போல் இருந்தது.

"இல்ல இல்ல, ஆழ்வி எனக்கு தங்கச்சி மாதிரி. எங்களுக்குள்ள வேற எதுவும் இல்ல" என்று திகிலுடன் கூறினான் குருபரன்.

அதை கேட்ட இனியவன் கள்ளப்புன்னகை சிந்தினான்.

தொடரும்...


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top