52 ஒன்றும் ஒன்றும் ஒன்று
52 ஒன்றும் ஒன்றும் ஒன்று
வீட்டிற்கு வந்த இனியவன் வரவேற்பு அறையில் யாரும் இல்லாததை கண்டான். கதவை திறந்து விட்ட முத்து அவனையே பார்த்துக் கொண்டு நின்றான்.
"என்ன?" என்றான் புருவத்தை உயர்த்தி.
"நான் மார்க்கெட்டுக்கு போறேன் அண்ணா"
"மத்தவங்கெல்லாம் எங்க?"
"நித்திலா அக்காவும் பாட்டியும் ஜோசியரை பார்க்க போயிருக்காங்க. சித்திரவேல் அண்ணன் காலையிலேயே வெளியில போயிட்டாரு. பார்கவி தங்கச்சிக்கு உடம்பு சரியில்லன்னு அவங்க ஃப்ரெண்ட் அவங்க கூட இருக்காங்க. தங்கச்சிக்கு ஜுரம் அடிக்குது"
"ஜுரமா?"
ஆம் என்று தலையசைத்தான் முத்து. பார்கவியின் அறையை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடினான் இனியவன்.
பார்கவி உறங்கிக் கொண்டிருக்க, அவளுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஆழ்வி, இனியவனை கண்டதும் சங்கடத்துடன் எழுந்து நின்றாள். அவள் திருமணமானவள் என்று இனியவனுக்கு தெரிந்த பிறகு, அவள் அவனை காண்பது அது தான் முதல் முறை.
ஆனால் இனியவனின் பார்வை முற்றிலும் வித்தியாசமாய் இருந்தது. தனது உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாதவனாய் அவளை பார்த்துக் கொண்டு நின்றான். அவனது பார்வை புதிதாகவும் ஏக்கம் நிறைந்ததாகவும் இருந்தது. இனியவனுக்கு எப்பொழுதுமே கடவுள் நம்பிக்கை இருந்ததே இல்லை. ஒருவேளை கடவுள் என்பது உண்மையாக இருந்தால், அதற்கு ஆழ்வியை போன்ற உருவம் இருக்குமோ என்று எண்ணினான் அவன். அவள் கடந்து வந்த கடினமான பாதைக்கு அவள் நிச்சயம் தயாராக இருந்திருக்க மாட்டாள். ஆனாலும் அவள் அதை கடந்து வந்திருக்கிறாள். அவள் சங்கடத்தில் நெளிவதை கண்ட அவன் தன்னை சுதாகரித்துக் கொண்டு,
"கவிக்கு என்ன ஆச்சு?" என்றான் பார்கவியை நெருங்கியவாறு.
"அவளுக்கு ஃபீவர் இருந்தது..."
"இருந்ததுன்னா? இப்போ இல்லையா?"
"இப்போ பரவாயில்ல"
பார்கவின் நெற்றியை தொட்டுப் பார்த்த இனியவன், ஆம் என்று தலையசைத்தான். ஆழ்வியை பார்த்து மெல்ல கண்ணிமைத்த இனியவன்,
"ஆழ்வி, எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா? தலை ரொம்ப வலிக்குது" என்று பொய் உரைத்தான்.
சரி என்று தலையசைத்து விட்டு சமையலறைக்கு விரைந்தாள் ஆழ்வி. அவளது கைபேசி, கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த மேஜையின் மீது இருந்ததை கண்டான் இனியவன். அதை எடுத்துக்கொண்டு பார்கவியின் அறையை விட்டு வெளியேறினான், இன்று எப்படியும் ஆழ்வியை உண்மையை கூற வைத்தே தீர வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன். அவனுக்கு உண்மை தெரிந்து விட்டது என்று அவளிடம் கூறுவதற்கு முன், கடைசியாக ஒரு முறை அவளை உண்மையை கூற வைக்க முடிகிறதா என்று முயற்சித்து பார்க்க வேண்டும் அவனுக்கு. அதனால், அவளிடம் இருந்து உண்மையை எப்படியும் பெற்று விடுவது என்று உறுதிப் பூண்டான்.
சமையலறைக்குள் செல்லும் முன் பின்னால் திரும்பிப் பார்த்த ஆழ்வி, இனியவன் தன் அறையை நோக்கி செல்வதை கவனித்தாள். அவனுக்கு காபியை கலந்து எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு வந்தாள். தனது கோட்டை கழட்டி சோபாவின் மீது வைத்தான் இனியவன். தான் கொண்டு வந்த குவளையை அவனை நோக்கி நீட்டினாள் ஆழ்வி.
"அங்க வை" என்றான்.
அவள் மேசையின் மீது அந்த குவளையை வைத்துவிட்டு அங்கிருந்து செல்ல நினைத்தபோது, அவளை தடுத்தான் இனியவன்.
"ஆழ்வி, ஒரு நிமிஷம்"
நின்று அவனை ஏறிட்டாள் ஆழ்வி.
"உன்கிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும்"
*சொல்லுங்க* என்பது போல் தலையசைத்தாள் ஆழ்வி.
"என்னோட லைஃப் பார்ட்னரை நான் சூஸ் பண்ணிட்டேன்" என்ற அவனை அதிர்ச்சியோடு ஏறிட்டாள் ஆழ்வி.
"என் கூட காலமெல்லாம் வாழ போறவ யாருன்னு நான் முடிவு பண்ணிட்டேன். அவ முழுக்க முழுக்க எனக்கு பிடிச்ச மாதிரியே இருக்கா..."
ஆழ்வியின் கண்கள் அணிச்சையாய் கலங்கின.
"நான் ஏன் இதை உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன்னு நீ நினைக்கலாம். உனக்கு என் மேல நிறைய அக்கறை இருக்குன்னு எனக்கு தெரியும்"
அவள் தொண்டையில் இருந்து எகிறி குதிக்க நினைத்த வார்த்தையை விழுங்கினாள் ஆழ்வி.
"நீ என் மேல வச்சிருக்கிற அக்கரைக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றபடி அவளை நோக்கி நகர்ந்தான்.
ஆழ்வி புன்னகைக்க முயன்றாள். ஆனால் அவளால் இயலவில்லை.
"நீ எனக்கும் என் குடும்பத்துக்கும் செஞ்சதுக்கெல்லாம் உனக்கு திருப்பி ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். ஏதாவது கேளு."
*வேண்டாம்* என்று தலையசைத்தாள் ஆழ்வி தலை குனிந்தவாறு. அவள் அருகில் வந்த இனியவன்,
"எதுவுமே வேணாமா?" என்றான் ரகசியமாய்.
அவள் வேண்டாம் என்று மீண்டும் தலையசைத்தாள்.
"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நீ என் பக்கத்துல வரும் போதெல்லாம் எனக்குள்ள ஏதோ ஒரு உணர்வு ஏற்படுது"
அவனை குழப்பத்தோடு ஏறிட்டாள் ஆழ்வி. அவனுக்குள் ஏதோ உணர்கிறானா? இப்பொழுது தானே அவன் வேறொரு பெண்ணை தேர்ந்தெடுத்து விட்டதாய் கூறினான்? அப்படி இருக்க இது என்ன புது குழப்பம்?
"உனக்கும் என் மேல விருப்பம் இருக்குன்னு எனக்கு தெரியும்" என்றான் கள்ள சிரிப்புடன்.
தவிப்போடு தலை குனிந்து கொண்டாள் ஆழ்வி. மெல்ல அவள் கூந்தலை ஒதுக்கி விட்டான். ஆழ்வி பின்வாங்கினாள்.
"நேரடியா விஷயத்துக்கு வரேன். நீ ரொம்ப அழகா இருக்க. நான் உன் கூட ஒரு நாளாவது இருக்கணும்னு நினைக்கிறேன்" என்றான் அவள் காதில் ரகசியமாய்.
அவனை அதிர்ச்சியோடு ஏறிட்டாள் ஆழ்வி.
"நீ உன் புருஷனை பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம். நமக்குள்ள இருக்கிற உறவை பத்தி யாருக்கும் தெரியாம நான் பாத்துக்குறேன். எல்லாரும் தூங்குனதுக்கு பிறகு என்னோட ரூமுக்கு வா. என்னை சந்தோஷப்படுத்து. உன்னோட வாழ்க்கையை நீ நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு நான் மாத்தி காட்டுறேன்"
அடுத்த நொடி அவளை இறுக்கமாய் அனைத்து தன் கன்னத்தை அவள் கன்னத்தோடு உரசினான்.
அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியின் எல்லைக்குச் செனறாள் ஆழ்வி. இனியவன் யாரும் பெற முடியாத மாணிக்கம் என்று அவள் எண்ணியிருந்தாள். ஆனால் அவன் அப்படி அல்ல.
தனது சக்தியை எல்லாம் திரட்டி கோபமாய் அவனை பிடித்து தள்ளினாள். அவளது கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது. அவளது உதடுகள் துடித்தன.
"நான் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கல. நீங்க இவ்வளவு கீழ்த்தரமானவரா இருப்பீங்கன்னு நான் கற்பனை கூட செஞ்சு பாக்கல. எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு, உங்களை என்னோட புரு..." அந்த வாக்கியத்தை முடிக்காமல் விட்டு தன் உதடு கடித்தபடி நின்றாள் ஆழ்வி.
கூரிய பார்வையுடன் தன் கைகளை கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தான் இனியவன். தான் உளர இருந்தது என்ன என்பது அப்பொழுது தான் ஆழ்விக்கு புரிந்தது. அவனது ஊடுருவும் பார்வை, அவள் வயிற்றை கலக்கியது. ஏன் அப்படி பார்க்கிறான் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
"என்ன ஆச்சு? நீ சொல்ல வந்ததை சொல்லி முடிக்க வேண்டியது தானே?" என்றான் அமைதியான குரலில்.
அவன் என்ன கூறுகிறான் என்றே புரியவில்லை ஆழ்விக்கு.
"நீ சொல்ல வந்ததை நான் சொல்லட்டுமா? உனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு... என்னை உன் புருஷன்னு சொல்லிக்க...! அப்படித்தானே?" என்றான்.
அவனை திகிலோடு ஏறிட்டாள் ஆழ்வி.
"நான் பைத்தியக்காரனா இருந்தப்போவே என்னை உன் புருஷன் என்று சொல்லிக்க நீ வெட்கப்படலையே...! அப்புறம் இப்ப மட்டும் ஏன் வெட்கப்படுற?" என்றான் மென்று விழுங்கியபடி.
கண்ணீர் கட்டி நின்ற கண்களுடன் அதிர்ச்சியே வடிவாய் அவனை ஏறிட்டாள். தங்களது உறவு பற்றியும், அவன் பைத்தியமாய் இருந்ததை பற்றியும் அவனுக்கு எப்படி தெரிந்தது என்று அவளுக்கு புரியவில்லை.
தனது பாக்கெட்டில் இருந்த அவளது கைபேசியை எடுத்து தன்னுடைய ரேகைகளை பதித்து அதை திறந்தான் இனியவன், அவள் கண்களை பார்த்தபடி. அது அவளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது
"உன்னோட போன்.... என்னோட ஃபிங்கர் பிரிண்ட் வச்சு... ஓபன் ஆகுது... ( என்ற வார்த்தைகளை போதுமான இடைவெளி விட்டு அழுத்தமாய் உச்சரித்து) உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லனா இது எப்படி சாத்தியம்?" என்றான் தன் புருவத்தை உயர்த்தி.
அவனுக்கு உண்மை எப்படி தெரிந்தது என்பது அப்பொழுது அவளுக்கு புரிந்து போனது.
அவள் கைபேசியில் இருந்த கேலரியை திறந்து, ஒவ்வொரு புகைப்படமாய் தள்ளிக்கொண்டே வந்தான். வாயடைத்து நின்றாள் ஆழ்வி. தன் கைபேசியை வைத்தே அவன் அனைத்தையும் கண்டுபிடித்து விட்டான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அந்த மிகப்பெரிய திருப்பத்திற்கு தயாராக இல்லாத அவள், அங்கிருந்து சென்றுவிட முயன்றாள். ஆனால் அவளை அவ்வளவு சுலபமாய் விட்டுவிடும் மனோ நிலையில் இனியவன் இல்லை. அவளுக்கு முன்னால் ஓடிச் சென்று அவள் வழியை மறித்தான்.
"எங்க ஓடுற? ஆங்...? இப்ப கூட பேச மாட்டியா நீ?"
ஆழ்வி தலை குனிந்து நின்றாள்.
"ஒரு பைத்தியக்காரனை விட நான் என்ன அவ்வளவு பயங்கரமாவா இருக்கேன்?" என்றான்.
தன் விரல்களை இறுக்க மூடினாள் ஆழ்வி, அதற்கு என்ன பதில் கூறுவதென்று புரியாமல். அவளது மேற்கையை பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.
"சொல்லு ஆழ்வி, நான் உன்னை என் வைஃபா ஏத்துக்க மாட்டேன்னு நினைச்சியா?" என்றான் வலி நிறைந்த குரலில்.
தலை நிமிர்த்தி அவனைப் பார்க்க, அவள் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது.
"நீ என்னோட வைஃப். ஆனா எனக்கு அந்த விஷயம் தெரியல. என்னைத் தவிர எல்லாருக்கும் அது தெரிஞ்சு இருக்கு. இந்த சொசைட்டில எனக்குன்னு இருக்குற மரியாதை என்னன்னு தெரியுமா உனக்கு?"
"ஐயோ, அதனால தான் நான் உங்ககிட்ட நெருங்கி வர பயந்தேன். உங்களோட மரியாதை எப்படிப்பட்டதுன்னு எனக்கு தெரியும். அது தான் என்னை உங்ககிட்ட நெருங்கி வரவிடாம தடுத்துச்சு"
"ஓ... நான் பைத்தியக்காரனா இருந்தப்போ என்னோட மரியாதைக்கு எந்த பங்கமும் ஏற்படலையா? உன் மேல பாஞ்சு மிருகம் மாதிரி நடந்துக்கிட்டேனே அப்போ என்னோட மரியாதை குறையலையா? உன்னை விட்டுட்டு நான் உதவாத ஒரு பணக்காரப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்குவேன்னு எப்படி நினைச்ச?"
அவளால் பதில் கூற முடியவில்லை.
தனது சட்டையை விலக்கி அதில் இருந்த கடித்த தழும்பை அவளிடம் காட்டினான்.
"இதை உனக்கு ஞாபகம் இருக்கா?"
சங்கடத்தில் நெளிந்தாள் ஆழ்வி. அவளுக்கு நன்றாகவே தெரியும் அது என்னவென்று.
"இதைப் பார்த்த நாள்ல இருந்து நான் குழப்பத்திலேயே இருந்தேன். ஏன்னா, எனக்கு நல்லா தெரியும், இது யாரோ என்னை கடிச்ச தழும்புன்னு"
பரிதாபமாய் அவனை ஏறிட்டாள் ஆழ்வி.
"நான் உன்னை அட்டாக் பண்ணும் போது, நீ தான் என்னை கடிச்சி இருக்கணும்... அப்படித்தானே?"
ஒன்றும் கூறாமல் தலை தாழ்த்தினாள் ஆள்வி.
"சோ... அது நீ தான்..."
கண்களை மூடினாள் ஆழ்வி.
"ஐ அம் சாரி" என்றான் வருத்தத்தோடு.
திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் ஆழ்வி.
"என்னால தான் நீ உன் வாழ்க்கையில மோசமான காலகட்டத்தை சந்திக்க வேண்டியதா போச்சு"
அவள் இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
"எல்லாத்துக்கும் தேங்க்ஸ்... என்னை மனநோயிலிருந்து வெளியில கொண்டு வந்ததுக்கு தேங்க்ஸ்... என்னோட வாழ்க்கையில வந்ததுக்கு தேங்க்ஸ்..."
"என் மேல உங்களுக்கு வருத்தம் இல்லையா?" என்றாள் நடுங்கும் குரலில்.
"உன் மேல நான் ஏன் வருத்தமா இருக்கணும்?"
"உங்க விருப்பம் இல்லாம உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்காக..."
"உனக்கு என்ன பைத்தியமா...? உன்னோட வாழ்க்கையை சீரழிச்சதுக்காக நீ தான் என் மேல வருத்தப்படணும். உன்னை என்னோட வைஃபா அடைஞ்சதுக்கு நான் ரொம்ப பெருமைப்படுறேன்"
அவள் கன்னத்தில் உருண்டோடிய கண்ணீரை துடைத்து விட்டான் இனியவன். அந்த பரவசம் தந்த மகிழ்ச்சியில் மெல்ல கண்களை மூடினாள் ஆழ்வி. அவளது பரிதாபகரமான நிலையை பார்த்து மென்று விழுங்கினான் இனியவன். அடுத்த நொடி அவளை தன் நெஞ்சோடு ஆற தழுவிக் கொண்டான். அவனது தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டு வெடித்து அழுதாள் ஆழ்வி. அவள் அழுதாள்... ஆனால் அந்த அழுகை சோகத்தின் வெளிப்பாடு அல்ல. தன் இனிய இனியவனின் கைகளில் அகப்பட்டு கிடக்கும் அந்த ஒரு நாள் மீண்டும் தன் வாழ்வில் வந்துவிட்டது எண்ணி சிந்திய ஆனந்தக் கண்ணீர் அது.
அவளை தன்னிடம் இருந்து பின்னால் இழுத்து மீண்டும் அவள் கண்ணீரை துடைத்த இனியவன்,
"நீ அழுததெல்லாம் போதும். ஏற்கனவே நீ நிறைய அழுதிருப்ப" என்றான்.
தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள் ஆழ்வி. உணர்ச்சி வெள்ளம் ததும்ப அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான் இனியவன், மீண்டும் அவளை தன் கண்களை மூடச் செய்து.
ஆழ்வி அவனிடம் ஏதோ கூற முனைந்தபோது அழைப்பு மணியின் ஓசை கேட்டது. ஆழ்வி அங்கிருந்து செல்ல நினைத்தபோது அவளை மீண்டும் தன்னை நோக்கி இழுத்த இனியவன்,
"நீ என்கிட்ட என்னமோ சொல்ல வந்தியே" என்றான்.
"நம்ம அப்பறமா பேசலாம். அதுக்கு முன்னாடி எல்லார்கிட்டயும் இதைப்பத்தி சொல்லணும்" என்ற அவளை தடுத்து,
"வேணாம் ஆழ்வி, இப்ப சொல்லாதே" என்றான்.
"ஆனா ஏன்?"
"காரணம் என்னன்னு நான் உன்கிட்ட அப்புறமா சொல்றேன். இப்போதைக்கு எனக்கு உண்மை தெரிஞ்சிட்ட விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். நான் என்ன செஞ்சாலும், அதுக்கு ஏத்த மாதிரி நீ ரியாக்ட் பண்ணு போதும்" என்றான்.
சரி என்று தலையசைத்துவிட்டு அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது, மீண்டும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் இனியவன். இதமான புன்னகை அவள் முகத்தில் படர்ந்தது.
*அணைப்பு என்பது, நாம் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிய அனுமதிக்கும் மிக அழகான தகவல் தொடர்பு வடிவம்* என்று எங்கோ படித்தது அவளுக்கு ஞாபகம் வந்தது.
அதோடு மட்டுமில்லாமல்,
"ஐ லவ் யூ, ஆழ்வி" என்று அவள் காதுகளில் ரகசியமாய் கூறினான் இனியவன். அது அவளுக்கு மயிகூச்செரியும் உணர்வை ஏற்படுத்தியது. அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் ஆழ்வி. அது இனியவனை இனிமையாய் புன்னகைக்க வைத்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top