50 ஆழ்வியைப் பற்றி...

50 ஆழ்வியைப் பற்றி...

நொறுங்கிப் போனாள் ஆழ்வி. இனியவன் அவளை பற்றி என்னை எண்ணினானோ தெரியவில்லை. அவள் அவன் மீது அதீத அக்கறை காட்டியது அவனுக்கு தெரியும். திருமணமான பெண்ணாக இருந்து கொண்டு அவள் அதை எப்படி செய்தால் என்று அவன் எண்ண மாட்டானா? இப்பொழுது அவள் என்ன செய்யப் போகிறாள்? பாட்டியின் அறையை நோக்கி ஓடினாள். அவளது முகத்தை பார்த்த உடனேயே அவள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை புரிந்து கொண்டார் பாட்டி.

"ஆழ்வி, என்ன ஆச்சு?"

அவரை அணைத்துக் கொண்டு ஓவென்று அழுதாள் ஆழ்வி.

"ஆழ்வி..."

"நான் கல்யாணம் ஆனவள்னு இனியவருக்கு தெரிஞ்சிருச்சு, பாட்டி"

"எப்படி தெரிஞ்சது?"

"நம்ம வீட்ல நடந்த பிரச்சனையில நான் ரொம்ப மனசு உடைஞ்சு போயிருந்தேன். என்னோட தாலியை கையில எடுத்து பாத்துகிட்டு இருந்தேன். அவர் புயல் மாறி என் ரூமுக்குள்ள வந்து என்னோட தாலியை பார்த்துட்டாரு. அவர் என்னைப் பத்தி என்ன நினைக்கிறாரோ தெரியல"

"நீ கவலைப்படாதே. நான் இன்னுகிட்ட உண்மையை சொல்றதைபத்தி நித்திலாகிட்ட பேசுறேன்" 

"இல்ல பாட்டி, அதை இப்போ செய்யாதீங்க. இப்ப தான் அவர் பணக்காரப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறதை பத்தி ஆர்வமா பேசினாரு..."

"அதனால தான் அதை உடனே பேசணும்னு நான் நினைக்கிறேன். அவன் மனசுல எந்த ஒரு எண்ணத்தையும் நம்ம வளர விடக்கூடாது. நம்ம ஏதாவது செஞ்சு ஆகணும்."

சரி என்று தலையசைத்து விட்டு தன் அறைக்கு வந்தாள் ஆழ்வி. அவள் உடனடியாக குருபரனிடம் பேச வேண்டும் என்று எண்ணினாள்.  அவனது எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அது எங்கேஜ்டாய் இருந்தது. அங்கு நடந்ததைப் பற்றி பார்க்கவி அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"குரு, நம்ம தேவையில்லாம நேரத்தை வீணாக்குறோம். அண்ணன் கிட்ட அவருக்கு ஆழ்வியோட நடந்த கல்யாணத்தை பத்தி நம்ம சொல்லிடணும்"

"நீ இனியாவை பத்தி என்ன நினைக்கிற?"

"எனக்கு என்ன சொல்றதுன்னே புரியல. பணக்கார வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி பேசும் போது அண்ணன் முகத்தில் ஒரு சிரிப்பு தெரிஞ்சது. அவர் ஆழ்வியை ஏத்துக்கலைனா என்ன செய்றது?"

"நான் அடுத்த தடவை அவனை பார்க்கும்போது, அவன் மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முயற்சி பண்றேன்"

"ஆனா..."

"அதை எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும். நீ கவலைப்படாத"

"தேங்க்ஸ் குரு"

"எதுக்காக உன் குரல் வித்தியாசமா இருக்கு?"

"தொண்டை வலிக்குது..."

"அப்படின்னா நீ ரொம்ப பேசாத. வாய்ஸ் ரெஸ்ட் கொடு..."

"ம்ம்ம்..."

"குட் நைட்..."

"பை"

அவர்கள் அழைப்பை துண்டித்துக் கொண்டார்கள். இனியவனிடம் இது பற்றி எப்படி பேசுவது என்பதை தீர்மானித்துக் கொண்டான் குரு.

மறுநாள்

ஆழ்வி குருவுக்கு ஃபோன் செய்தாள். அந்த அழைப்பை ஏற்றான் குரு.

"எப்படி இருக்கீங்க, ஆழ்வி?"

"உங்க கிட்ட பேசணும்னு நான் ரெண்டு நாளா ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா உங்க நம்பர் எப்பவும் பிஸியாவே இருக்கு"


"நெஜமாவா? ஆனா உங்ககிட்ட இருந்து எனக்கு எந்த மிஸ்டு கால் நோட்டிஃபிகேஷனும் வரலையே"

"உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்"

"சொல்லுங்க"

"நேத்து நடந்த ஃபையர் ஆக்சிடென்ட் பத்தி பார்கவி சொன்னாளா?"

"ஆமாம் சொன்னா. சொல்லி ரொம்ப வருத்தப்பட்டா"

"அது ஆக்சிடென்ட் இல்லண்ணா"

"ஆக்சிடென்ட் இல்லன்னா என்ன அர்த்தம்?"

"அக்காவோட புடவையை பத்த வச்சது சித்திரவேல் அண்ணா தான்"

"என்ன சொல்றீங்க, ஆழ்வி?" என்றான் குரு அதிர்ச்சியுடன்.

"ஆமாண்ணா, நான் என் கண்ணால பார்த்தேன்"

"அவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? ஏன் இப்படி எல்லாம் செய்றான்? அந்த பைத்தியக்காரனை என்னால புரிஞ்சுக்கவே முடியல"

"ஆனா நான் புரிஞ்சுகிட்டேன்"

"அவன் ஏன் அதை செஞ்சான்னு உங்களுக்கு தெரியுமா?"

"ஆமாம், ஏன்னா அவர் அக்காவை ரொம்ப காதலிக்கிறார்"

"என்ன உளறுறீங்க?"

"ஆமாண்ணா, அவரு அந்த புடவையை கொளுத்துனதுக்கு காரணம், அது இனியவர் வங்கி கொடுத்த புடவை. அக்கா அவர் வாங்கி கொடுத்த புடவையை கட்டாம, இனியவர் கொடுத்த புடவையை கட்டிக்கிட்டது தான் அவர் கோவத்துக்கு காரணம். ஃபயர் ஆக்சிடென்ட்டுக்கு பிறகு, அவர் வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்க சொல்லி அவர் அக்காகிட்ட சொன்னாரு. அவருக்கு இனியவர் மேல பொறாமை இருக்கு. அக்கா இனியவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறத அவரால பொறுத்துக்க முடியல. அதனால தான் அவர் இனியவரை பைத்தியமாக்கி இருக்கணும்னு நினைக்கிறேன்"

வாயடைத்துப் போனான் குருபரன். அவள் கூறியதை அப்படியே நம்ப முடியாவிட்டாலும், அதை தவிர்க்கவும் அவனால் முடியவில்லை. சித்திரவேல் நித்திலாவை மிகவும் நேசிப்பது அவனுக்கு தெரியும். அவனுக்கென்று யாரும் இல்லை. ஆனால் நித்திலாவோ இனியவனை எல்லாரையும் விட அதிகமாக நேசிக்கிறாள். இனியவன் என்று வந்து விட்டால், அவளுக்கு யாருமே முக்கியமில்லை. அதனால் தான் ஆழ்வியை அவனுக்கு திருமணம் செய்து வைக்க கூட அவள் தயங்கவில்லை.

"அண்ணா..."

"இல்ல ஆழ்வி, இனியவனுக்கு பைத்தியம் பிடிக்க வச்சது அவனா இருக்க முடியாது. அவன் சூழ்நிலையை தனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டு இருப்பானே தவிர, இனியா பைத்தியம் ஆனதுக்கு அவன் காரணம் அல்ல"

"நம்ம ஏதாவது சீக்கிரம் செஞ்சாகணும். அவர் வேற என்ன செய்வாரோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு... நான் இன்னோரு விஷயமும் சொல்லணும்" என்று அவள் கூறிய போது,

"பாட்டி சீக்கிரமா பார்கவி ரூமுக்கு வாங்களேன். அவளுக்கு உடம்பு நெருப்பா கொதிக்குது" என்றாள் நித்திலா.

"அய்யய்யோ" என்றாள் அதை கேட்ட ஆழ்வி.

"என்ன ஆச்சு, ஆழ்வி?"

"பார்கவிக்கு உடம்பு நெருப்பா கொதிக்குதாம். நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்"

"சரி..."

அழைப்பை துண்டித்தாள் ஆழ்வி, இனியவனுக்கு அவளுக்கு திருமணமான விஷயம் தெரிந்து விட்டது என்பதை கூறாமலேயே...!

பார்கவியின் அறையை நோக்கி விரைந்தாள் ஆழ்வி. அவளது உடல் காய்ச்சலில் கொதித்தது. மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவளுக்கு ஊசி போடப்பட்டது.

"ஜோசியருக்கு ஃபோன் பண்ணி நம்ம நாளைக்கு வரோம்னு சொல்லிட்டு" என்றார் பாட்டி.

"சரிங்க பாட்டி" என்றாள் நித்திலா.

"ஏன் கா?" என்றாள் ஆழ்வி.

"ஃபயர் ஆக்சிடென்ட் நடந்ததுல்ல? அதுக்கு பரிகாரம் சொல்கிறேன்னு ஜோசியர் இன்னிக்கு வர சொல்லி இருந்தாரு. ஆனா பார்கவியை இந்த நிலைமையில விட்டுட்டு நாங்க எப்படி போறது?"

"நான் தான் இருக்கேனே கா? அவளை நான் பார்த்துக்கிறேன். நீங்களும் பாட்டியும் போயிட்டு வாங்க" என்றாள் ஆவி.

நித்திலா பாட்டியை பார்க்க, அவர் சரி என்று தலையசைத்தார். ஆழ்வி பார்கவியுடன் அமர்ந்து கொண்டாள். அன்று அவள் இனியவனை பார்க்கவில்லை. அவன் எங்கு சென்றான் என்று தெரியவில்லை.

......

அதேநேரம்,

தனது வழக்கறிஞரான ஜீவானந்தத்தின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் இனியவன். தன் வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட பல விஷயங்களை அவரிடம் விவாதிக்க எண்ணினான். அது வேறு யாருக்கும் தெரிய கூடாது என்றும் எண்ணினான். அவரை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று எண்ணியதால் அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டிற்கு சென்றான்.

தனது சக வழக்கறிஞர்களுடன், நடைபெற இருக்கும் பார் கவுன்சில் தேர்தலை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார் ஜீவானந்தம். இனியவனை பார்த்த அவரது உதவியாளர், எதைப் பற்றியும் யோசிக்காமல் நேரடியாக அவனை உள்ளே அழைத்து வந்தார்.

இனியவனை தன் வீட்டில் பார்த்த ஜீவானந்தம், உணர்ச்சிவசப்பட்டார். அங்கிருந்த மற்றொரு நபரும் அவனைப் பார்த்து வியப்படைந்தார்.

"ஐ பி கே... " அவனை நோக்கி ஓடிய ஜீவானந்தம், அவன் கரத்தை பற்றிக் கொண்டார்.

"ஹலோ மிஸ்டர் ஜீவானந்தம்" என்று அவரோடு கைக்குலுக்கினான் இனியவன்.

"உங்களை பார்க்கிறதுல ரொம்ப சந்தோஷம்" என்றார் ஜீவானந்தம்.

"நீங்க ஏதோ ஒரு இம்பார்ட்டண்டான மீட்டிங்கில் இருக்கீங்கன்னு நினைக்கிறேன்" என்று தன் கண்களை அங்கு இருந்தவர்கள் மீது ஓட விட்டான் இனியவன்.

"ஆமாம், ஆனா, நான் ஒரு ஷார்ட் பிரேக் எடுத்துக்க முடியும்" என்று அங்கு அமர்ந்திருந்த அவர்களை பார்த்தார் ஜீவானந்தம். அவர்கள் சரி என்று தலையசைத்தார்கள்.

தனது பர்சனல் கேபினுக்கு அவனை அழைத்து வந்தார் ஜீவானந்தம்.

"எப்படி இருக்கீங்க ஐ பி கே?"

"நான் நல்லா இருக்கேன், சார்"

"கடவுள் புண்ணியத்துல நான் உங்களை மறுபடியும் பார்த்துட்டேன்"

இனியவன் புன்னகை புரிந்தான்.

"உங்களைப் பார்க்க நான் எத்தனை தடவை ட்ரை பண்ணேன்னு தெரியுமா? ஆனா என்னை யாருமே உங்களை பார்க்க விடல" என்றார் வருத்தத்துடன்.

"நான் கோமாவில் இருந்தேன். உங்களுக்கு அது தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்"

"எனக்கும் அப்படித்தான் சொன்னாங்க. ஆனா கோமாவில் இருக்கிறவங்களை ஒரு தடவை பார்க்க விட்டா என்ன தப்பு நடந்திடப் போகுது? உங்களோட லாயரா இருந்துகிட்டு உங்களை பார்க்கிற உரிமை எனக்கு இல்லையா?"

"நான் உங்களை பாக்கணும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் இங்க வந்தேன். ஆனா நீங்க ரொம்ப பிசியா இருக்கீங்க போல இருக்கு. நம்ம ஒரு நாள் ஃப்ரீயா மீட் பண்ணலாம்"

"நிச்சயமா செய்யலாம். பார் கவுன்சில் எலக்சன் முடியட்டும்..."

"ஓகே"

அவரிடமிருந்து விடை பெற்று வெளியேறினான் இனியவன். தற்போது அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவன் எண்ணினான். ஏனென்றால் அவனது கதை மிக நீண்டது. அது ஒரே நாளில் முடியாது.

வெளியே வந்த இனியவன், தன்னை பார்த்து ஒரு பெண் சிரித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான்.

"ஹலோ ஐ பி கே. எப்படி இருக்கீங்க?" என்றார் அந்த பெண்மணி.

கண்களை சுருக்கினான் இனியவன். அந்த பெண் யார் என்று அவனுக்கு தெரியவில்லை. ஆனால் அதை அவன் காட்டிக் கொள்ளவும் இல்லை. அவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினான். ஏனென்றால், இப்பொழுதெல்லாம் அவனுக்கு முன்பின் அறிமுகம் இல்லாத அந்நியர்கள் தான் அவனைப் பற்றிய பெரும்பாலான உண்மையை கூறுகிறார்கள்.

"நான் நல்லா இருக்கேன். நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

அந்தப் பெண்மணி யார் என்று கூறிய போது இனியவனின் ஆர்வம் எல்லையை கடந்தது.

"நான் தமிழரசி. ஆழ்வியோட ஆன்ட்டி"

ஆழ்வியின் பெயரைக் கேட்டவுடன் இனியவன் துணுக்குற்றான்.

"ஓ, நீங்களா மேடம்? எப்படி இருக்கீங்க?"

"என்னைப் பத்தி ஆழ்வி உங்ககிட்ட சொல்லி இருக்கா போல இருக்கு..."

"ஆமாம் சொன்னா" என்று பொய்யுரைத்தான்.

"கடவுள் புண்ணியத்துல நீங்க பழைய நிலைமைக்கு திரும்பி வந்துட்டீங்க. நான் என்னோட கேஸ்ல ரொம்ப பிசியா இருந்தேன். இப்போ பார் கவுன்சில் எலக்சன் வேற வந்துடுச்சு. அதனால தான் என்னால நேர்ல வந்து உங்களை எல்லாம் பார்க்க முடியல. நீங்க குணமானதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆழ்வி சந்தோஷமா இருக்கிறதை நான் பார்க்கணும். நான் நிச்சயம் வீட்டுக்கு வந்து ஆழ்வியை பாக்குறேன்"

"இப்போ நீங்க வீட்டுக்கு வந்தா அவளை சந்தோஷமா பார்க்க முடியாது" என்றான் இனியவன்.

"நீங்க என்ன சொல்றீங்க?"

"உங்களைப் பத்தி ஆழ்வி என்கிட்ட எதுவும் சொல்லல"

"எதுவும் சொல்லலைன்னா?"

"நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது"

"ஆனா உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி பேசினீங்களே?"

"ஆழ்வி என்னோட ஒய்ஃப்னு எனக்கு தெரியும். ஆனா இதுவரைக்கும் அதை யாரும் என்கிட்ட சொல்லல"

சங்கடத்திற்கு ஆளானார் தமிழரசி. அவர் உலறிவிட்டார் என்று அவருக்கு புரிந்தது.

"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா மேடம்?"

"கேளுங்க சார்"

"ஒரு லாயரா இருந்துகிட்டு நீங்க எப்படி இந்த கல்யாணத்தை நடக்க விட்டீங்க? மனநிலை சரியில்லாத ஒருத்தனுக்கு நடக்கிற கல்யாணம் சட்டப்படி செல்லாதுன்னு உங்களுக்கு தெரியாதா?"

"உங்க வீட்டிலேயே ஒரு லாயரை வச்சுக்கிட்டு நீங்க இந்த கேள்வியை என்னை கேட்கலாமா ஐபிகே? உங்க மாமா ஏன் இந்த கல்யாணத்தை நிறுத்தல?"

இனியவன் அமைதியாய் நின்றான்.

"இதுல நானோ மிஸ்டர் சித்திரவேலோ செய்யறதுக்கு எதுவும் இல்ல. உங்க அக்கா தான் இந்த கல்யாணம் நடந்து ஆகணும்னு பிடிவாதமா இருந்தாங்க. ஆழ்வியோட அம்மாவும் பணத்துக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சா"

"மனநிலை சரியில்லாத ஒருத்தன் ஒரு பொண்ணை ரேப் பண்ண முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா?"

"நிச்சயமா இல்ல... அப்படி நடக்க வாய்ப்பில்ல"

"அப்படி இருக்கும்போது, எப்படி எல்லாரும் நான் அவளை ரேப் பண்ணேன்னு நம்புறாங்க?"

"ஆழ்வியோட அண்ணன் உங்க தங்கச்சிகிட்ட அவ பேசிக்கிட்டு இருந்ததை கேட்டு தப்பா புரிஞ்சுகிட்டன்.  நீங்க அவளை ரேப் பண்ணலன்னு ஆழ்வி உங்க அக்காகிட்ட நேரடியாவே சொல்லிட்டா. அது எல்லாருக்கும் தெரியும்"

நிம்மதி பெருமூச்சு விட்டான் இனியவன். அந்த ஒரு விஷயம் தான் அவன் மனது அரித்துக்கொண்டிருந்தது. ஆனால் ஆழ்வி அப்படி சொல்லவில்லை.

"இன்னொரு விஷயத்தையும் நீங்க புரிஞ்சுக்கணும். நீங்க ரேப் பண்ணிங்க அப்படிங்கறது உங்க கல்யாணத்துக்கான காரணம் இல்ல. ஆழ்வியோட டைமிங் சென்ஸ் தான் உங்க அக்காவை ரொம்பவே அட்ராக்ட் பண்ணிடுச்சு. நீங்க ஆழ்வியை பார்த்து கண்ட்ரோல் ஆனீங்க. அவளால் மட்டும் தான் உங்களை கண்ட்ரோல் பண்ண முடியும்னு உங்க அக்கா நினைச்சாங்க"

அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான் இனியவன்.

"ஆழ்வி ரொம்ப நல்ல பொண்ணு. என் ஃப்ரெண்ட்  கற்பகத்தோட டாட்டர். பணத்துக்காக தன் மகள உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க அவ சம்மதிச்சா. உங்க அக்கா அவளுக்கு ஒரு கோடி ரூபா கொடுத்தாங்க"

"தயவு செஞ்சு என்ன நடந்ததுன்னு எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?"

"இப்போ உங்களுக்கு டைம் இருக்கா?"

ஆம் என்று தலையசைத்த இனியவன், தனது காரை நோக்கி அவரை அழைத்துச் சென்றான். தனது காரில் அவர்கள் அமர்ந்து கொண்ட பின்,

"இப்ப சொல்லுங்க மேடம்"

"ஆழ்வி உங்க தங்கச்சியோட ஃப்ரெண்ட். அவகிட்ட ஒரு புக்கு வாங்குறதுக்காக அவ உங்க வீட்டுக்கு வந்தா. அப்போ உங்க வீட்ல யாரும் இல்ல. அதனால கிரில் கேட் ரூமில் இருந்து உங்களை உலவ விட்டிருந்தாங்க. உங்க முன்னாடி ஒரு பொண்ண பார்த்த உடனே நீங்க அவளை துரத்த ஆரம்பிச்சீங்க. அவ உங்க தங்கச்சி பார்கவி. ஆழ்வி நினைச்சிருந்தா அவ அங்க இருந்து ஓடிப்போய் தன்னை காப்பாத்திக்கிட்டு இருந்திருக்க முடியும். ஆனா அவ அப்படி செய்யல. தன்னோட ஃப்ரெண்டை அப்படியே விட்டுட்டு போக அவளால முடியல. உங்ககிட்ட இருந்து அவளை காப்பாத்த நினைச்சா. உங்களோட கவனம் ஆழ்வி பக்கம் திரும்பிச்சு. தன்னை காப்பாத்திக்கிற போராட்டத்துல அவ கிரில் கேட் போட்ட ரூம்ல உங்ககிட்ட மாட்டிக்கிட்டா. உங்ககிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக உங்களுடைய வீக்னஸ் என்னன்னு உங்க தங்கச்சிகிட்ட கேட்டா. உங்களுக்கு ரத்தத்தை பார்த்தா பயம்னு அவ சொன்ன அதே நேரம் நீங்க அவ மேல பாஞ்சிட்டிங்க. உங்களை பயமுறுத்துறதுக்காக தன்னோட தலையில இருந்த கிளிப்பை எடுத்து தன் கையை வெட்டிக்கிட்டா ஆழ்வி"

ஆழ்வி சுவாமிஜி இடம் தனது கிளிப்பை பற்றி கூறியது அப்பொழுது அவன் நினைவுக்கு வந்தது. அதனால் தான் அவன் அந்த கிளிப்பை பார்த்து பயந்தானா?

"அவ எதிர்பார்த்தது மாதிரியே ரத்தத்தை பார்த்த உடனே நீங்க அவளை விட்டு ஓடி போயிட்டீங்க. வெளிய போயிருந்த உங்க குடும்பத்தை சேர்ந்தவங்க வந்தாங்க. அவளை மோசமான நிலைமையில பார்த்த அவங்க, அவளை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணாங்க"

மென்று விழுங்கினான் இனியவன்.

"ஆழ்வியை பார்க்கும் போதெல்லாம் நீங்க பயந்திங்க. ஒருவேளை அவளை பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு ரத்தம் ஞாபகம் வந்திருக்கலாம். உங்க அக்கா அதை கவனிச்சாங்க. ஆழ்வியால மட்டும் தான் உங்களை கண்ட்ரோல் பண்ண முடியும்னு அவங்க நினைச்சாங்க. அவளோட டைமிங் சென்ஸ் அவங்களுக்கு நம்பிக்கை தந்தது. அதனால அவளை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சாங்க"

"ஆழ்வி அதுக்கு சம்மதிச்சாளா?"

"அவளுக்கு வேற வழி இருக்கல. அவங்க அம்மாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கணும்னு அவ ரொம்பவே விரும்பினா. அதுக்காகவே நல்லா படிச்சா. ஆனா அதுக்கு முன்னாடி அவ வாழ்க்கைல ரொம்ப பெரிய திருப்பம் ஏற்பட்டுச்சு. நீங்க அவ வாழ்க்கையில வந்தீங்க. எது எப்படியோ அவ நினைச்ச மாதிரியே அவங்க அம்மாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அவ கொடுத்துட்டா"

"எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா?"

"நம்ம மீட் பண்ணதை பத்தி நான் ஆழ்விகிட்ட எதுவும் சொல்லக்கூடாது. அப்படித்தானே?"

"ஆமாம். நானே அவகிட்ட இதைப்பத்தி நேரடியா பேசணும்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி ஆழ்விகிட்ட இருந்து சில விஷயங்களை நான் கிளியர் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன். அதனால நீங்க அவளுக்கு கால் பண்ண முடியுமா?"

"நான் அவளுக்கு கால் பண்ணணுமா?"

"எனக்கு சில சந்தேகம் இருக்கு. அதை ஆழ்விகிட்ட இருந்து நான் தெரிஞ்சுக்கணும். எதுக்காக அவ எங்க கல்யாணத்தை என்கிட்ட இருந்து மறைச்சு வச்சிருக்கான்னு எனக்கு தெரியல. அதுமட்டுமில்லாம, என் வாழ்க்கையில நிறைய விஷயங்கள் நடந்துக்கிட்டு இருக்கு. அது பத்தி எல்லாம் ஆழ்விக்கு தெரியும்னு எனக்கு தோணுது"

"ஆனா அதை நான் ஏன் செய்யணும்னு நினைக்கிறீங்க?"

"எங்க கல்யாணத்தைப் பத்தி உங்களைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. அதனால ஆழ்வி இதைப் பத்தி உங்க கிட்ட பேசுவாள்ன்னு நினைக்கிறேன்"

சரி என்று தலையசைத்தார் தமிழரசி. அவளிடம் என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்று அவரிடம் கூறினான். ஆழ்வியின் எண்ணுக்கு ஃபோன் செய்த தமிழரசி, ஸ்பீக்கரை ஆன் செய்தார். ஆழ்வி அழைப்பை ஏற்றாள். தன் மூச்சை பிடித்து காத்திருந்தான் இனியவன், ஆழ்வி அவனைப் பற்றி பேசப் போகிறாள்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top