5 போராளி
5 போராளி
ஆழ்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். செய்வதறியாத திகைப்புடன் இனியவனின் குடும்பம் வெளியே காத்திருந்தது. பெண்கள் ஓயாமல் கண்ணீர் சிந்தியபடி இருந்தார்கள். ஆழ்வியின் நிலையை அவர்களால் சகிக்க முடியவில்லை. அவளது மேலுடலில் இருந்த சிவந்த திட்டுக்கள், அவள் கடந்து வந்த கொடுமையை பறைசாற்றியது. கையாலாகாமல் தவித்தாள் பார்கவி. நடந்ததிற்கு அவர்கள் பொறுப்பில்லை என்றாலும், அந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் தவித்தார்கள் அவர்கள். ஆழ்வியின் குடும்பத்தார்கு பதில் கூற வேண்டும் அல்லவா?
"பார்கவி, ஆழ்வியோட அம்மாவுக்கு ஃபோன் பண்ணி, விஷயத்தை அவங்ககிட்ட சொல்லு" என்றார் பாட்டி கண்களை துடைத்தபடி.
மாட்டேன் என்பது போல் திகிலுடன் தலையசைத்தாள் பார்கவி.
"நம்ம அதை செஞ்சு தான் ஆகணும், பார்கவி. நமக்கு வேற வழியில்ல."
"படிக்கிறதுக்கு புக்கு வேணும்னு கேட்டு தான் அவ நம்ம வீட்டுக்கு வந்தா. அவ ரொம்ப நல்ல பொண்ணு, பாட்டி. என்னால தான் அவ இந்த நிலைமையில இருக்கா. நான் அந்த புக்கை மறந்துட்டு போயிருக்கக் கூடாது. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணி, அவ வாழ்க்கையை கெடுத்துட்டேன்" என்று தன் கன்னத்தில் தானே அறைந்து கொண்டாள்.
"பார்கவி, கண்ட்ரோல் யுவர் செல்ஃப்" என்றாள் நித்திலா, அவள் கையைப் பிடித்தவாறு.
"அக்கா, அண்ணன் என்னை தான் தொட வந்தாரு. என்னை காப்பாத்த வந்து, அவ இதுல மாட்டிக்கிட்டா. ஆனா என்னால அவளை காப்பாத்த முடியாம போயிடுச்சு. நான் எப்படிக்கா அவ முகத்துல முழிப்பேன்? அவளோட இந்த நிலைமைக்கு நான் தான் கா காரணம்?"
"இதுக்குத்தான், என்ன செய்யணும்னு நான் உங்ககிட்ட சொன்னேன். நான் சொன்ன பேச்சை நீங்க கேட்டிருந்தா, இப்படி ஒரு மோசமான சூழ்நிலைக்கு நம்ம தள்ளப்பட்டிருக்க மாட்டோம். பொம்பளைங்க மேல அவருக்கு இருக்கிற ஈர்ப்பு நம்மளால சமாளிக்க முடியாத ஒன்னுன்னு நான் ஏற்கனவே சொன்னேன்..." என்றான் சித்திரவேல் சலிப்புடன்.
அவனை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார் பாட்டி.
"நான் உங்களை காயப்படுத்தணும்னு சொல்லல, பாட்டி. அது தான் உண்மை"
"இது எதிர்பாராம நடந்த ஒரு விஷயம். விஷயத்தோட விளைவுகள் என்னன்னு சரியா புரிஞ்சுக்காம, எந்த ஒன்னையும் எடுத்தேன் கவுத்தேன்னு செய்ய முடியாது, மாப்பிள்ளை. நீங்க அதை புரிஞ்சிக்கோங்க"
"ஆழ்...வி..." முகத்தை மூடி அழுதாள் பார்கவி.
அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்றே அவர்களுக்கு புரியவில்லை. ஆழ்வியின் வாழ்வை எப்படி சீர்படுத்துவது என்பதும் தெரியவில்லை. தெரிந்தோ, தெரியாமலோ அவளது வாழ்க்கை நாசமாவதற்கு அவர்களும் ஒரு காரணம். அது அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தான் நடந்தது என்றாலும், இனியவன் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவன் அல்லவா? வாழ்க்கையில் முதல்முறையாக அவர்கள் கையாளாகாதவர்களாய் உணர்ந்தார்கள்.
இதற்கிடையில்...
மெல்ல கண்விழித்த ஆழ்வி, தான் ஒரு மருத்துவமனையில் இருப்பதை கண்டாள். தன் இடது கையில் கூரிய வலியை உணர்ந்தாள். அவளது வலது கையில் சலைன் ஏறிக் கொண்டிருந்தது. தன் இடது கையில் கட்டு போடப்படிருந்ததை பார்த்து அவளது விழிகள் விரிந்தன. சற்று முன் நடந்தவற்றை அது அவளுக்கு நினைவூட்டியது. இனியவன் அவள் மீது பாய்ந்த காட்சி அவளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியதால், பயத்துடன் கண்களை இறுக்க மூடினாள். அதை மீண்டும் நினைக்காமல் இருக்க முயன்றாள். ஆனாலும் தன் கண்ணீரை கட்டுப்படுத்த அவளால் முடியவில்லை. ஏன் அவள் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டாள்? எதற்காக ஆண்டவன் அவளை நெருப்பின் மீது நிறுத்தினார்?
அப்பொழுது தான் அவளுக்கு தன் அம்மாவின் நினைவு வந்தது. அவள் கடிகாரத்தை பார்க்க, அது மணி 9 என்றது. கற்பகம் அவளுக்காக காத்திருப்பார். தன் மகள் தனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தருவாள் என்று அவர் நம்பிக் கொண்டிருக்கிறார். அவளது கண்ணில் இருந்து கண்ணீர் பெருகியது. கட்டிலில் எழுந்த அமர்ந்தாள். இந்த சூழ்நிலையை அவள் எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்? கத்தி மேல் நடப்பது போன்ற இந்த விஷயத்தை அவள் எப்படி கையாள போகிறாள்? நடந்தது மிக கொடூரம் என்றாலும், அதற்கு யாரும் பொறுப்பாக மாட்டார்கள். அது ஒரு விபத்து... தெரு நாய் கடிப்பது போல...!
பார்கவியை எண்ணிய போது அவளது முகம் அமைதி அடைந்தது. தன் சொந்த அண்ணனிடம் இருந்து பார்கவியை அவள் காத்தாள். தனக்கு நிகழ்ந்த இதே கொடுமை பார்கவிக்கு நிகழ்ந்திருந்தால் அவள் என்ன செய்திருப்பாள்? தன் சொந்த சகோதரனால் தொடப்பட்டிருந்தால், அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? அந்த பாதிப்பில் இருந்து அவளால் எப்பொழுதும் வெளிவந்திருக்கவே முடியாது. ஏனென்றால் அவர் அவளுடைய அண்ணன். அவள் உயிரோடு இருந்திருப்பாளா என்பது கூட சந்தேகமே...! நல்லவேளை, அவள் பார்கவியை காப்பாற்றி விட்டாள். அவளை தன் அண்ணனிடம் இருந்து காப்பாற்ற, பார்கவி எவ்வளவு போராடினால் என்று எண்ணிப் பார்த்தாள். அவனிடம் தன்னந்தனியாய் மாட்டிக் கொண்டது அவளுடைய துரதிஷ்டம். உண்மையைச் சொல்லப் போனால், இதில் அவனுடைய தவறும் ஏதுமில்லை. அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன். தன் தங்கையையே துரத்தியவன்... அவன் மீது குற்றம் சொல்லி என்ன பயன்?
சூழ்நிலையை அழகாய் அலசிவிட்ட போதிலும், எதார்த்தம் அவளை ஆட்டித்தான் பார்த்தது. அவள் கடந்து வந்தது அவ்வளவு கொடுமையான சம்பவம் ஆயிற்றே...! அவளது புடவை கட்டிலின் மீது வைக்கப்பட்டிருந்தது. சலைன் ஏற்றிக் கொண்டிருந்த ஊசியை தன் கையிலிருந்து உருவி எடுத்துவிட்டு, கட்டிலை விட்டு கீழே இறங்கி புடவையை கட்டிக் கொண்டாள். அகலமான பட்டை வைத்து, தன் உடலில் இருந்த காயங்களை மறைத்துக் கொண்டாள். முகத்தை துடைத்துக் கொண்டு தனது கூந்தலை சரிப்படுத்திக் கொண்டாள்.
கழிப்பறையில் இருந்து வெளியே வந்த செவிலியர் ஒருத்தி அவளை பார்த்து,
"எப்படி இருக்கீங்க?" என்றாள்.
தன் கண்ணீரை துடைத்தபடி தலையசைத்தாள் ஆழ்வி.
"இருங்க, நான் டாக்டரை கூப்பிடுறேன்"
"வேண்டாம். நான் போகணும்"
"நீங்க போகக்கூடாது. நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க"
"நான் வீக்கா இல்ல" என்றபடி அங்கிருந்து வெளி நடப்பு செய்தாள் அவள்.
மருத்துவரை அழைக்க ஓடினாள் அந்த செவிலி.
ஆழ்வி அந்த அறையை விட்டு வெளியே செல்வதை இனியவன் குடும்பத்தினர் பார்த்தார்கள். திகைப்புடன் எழுந்து நின்ற அவர்கள், நம்ப முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். நடந்ததற்காக தங்களுடன் சண்டை போடாமல், ஆழ்வி அங்கிருந்து கிளம்பிச் செல்கிறாள் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்களால் அவள் முகத்தை பார்க்க முடியவில்லை. அதனால் அவள் அழுகிறாளா, இல்லையா என்பது அவர்களுக்கு தெரியவில்லை. ஆம் அவள் அழுது கொண்டுதான் இருந்தாள். அவள் மன வலிமை படைத்த பெண்ணாக இருக்கலாம், ஆனாலும் வலி இருக்கத்தானே செய்யும்?
இரண்டு இளம் மருத்துவ உதவியாளர்கள் எதிரில் வருவதை கண்டாள் ஆழ்வி. அவளைப் பார்த்து அவர்கள் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டார்கள். அவளை அவர்கள் கடந்த போது வேண்டுமென்று சற்றே உரத்த குரலில்,
"இந்த பொண்ணு தான் உடம்பு முழுக்க சிவப்பு தழும்போட வந்தது" என்றான் ஒருவன்.
"அப்படியா?"
"ஆமாம்... தொட்டவன் நிச்சயமா அவ மார்பை தொட்டிருப்பான்..."
நடப்பதை நிறுத்திவிட்டு அவர்களை பார்த்து முறைத்தாள் ஆழ்வி. அவர்கள் முகத்தில் எகத்தாள புன்னகை தவழ்ந்தது. தன்னை அவமதிப்பவர்களை பார்த்து, ஒரு பெண் அதிகபட்சம் செய்ய முடிந்தது முறைப்பது தானே? சித்திரவேலும் பார்கவியும் அவர்களை நோக்கி கோபத்துடன் வர நினைத்தபோது, ஆழ்வியின் கோபமான பதிலை கேட்டு நின்றார்கள்.
"ஆமாம்... அவன் என் மார்பை தொட்டான். ஏன்னா, அவன் ஒரு பைத்தியம். அவன் சுய நினைவோட இருந்திருந்தா, நிச்சயம் உங்களை மாதிரி கொடூரமானவனா இருந்திருக்க மாட்டான். நான் மட்டுமில்ல, வீட்டை விட்டு வெளிய போற ஒவ்வொரு பொம்பளையும் கூட்டமான பஸ்லயும், கூட்டமான இடத்துலயும், ஒவ்வொரு நாளும் இந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொண்டுகிட்டு தான் இருக்காங்க. ஆனா அவங்களை அப்படி கொடுமைப்படுத்துறவங்க எல்லாம் பைத்தியக்காரங்க இல்ல. மனுஷன்ங்குற பேர்ல ஊருக்குள்ள நடமாடிக்கிட்டிருக்கிற மிருகங்க. இந்த மாதிரி கொடுமைக்கு ஆளானவங்களை பார்த்து கிண்டல் பண்றத நிறுத்திட்டு, வீட்டுக்கு போய் உங்க அம்மாவும், அக்கா தங்கச்சியும் இந்த மாதிரி கொடுமைக்கு எத்தனை தடவை ஆளானாங்கன்னு கேளுங்க. அப்படியே, ஒரு மகனா, ஒரு சகோதரனா, அவங்களை பாதுகாக்க நீங்க என்ன செஞ்சீங்கன்னு உங்களையே கேட்டுக்கங்க" என்று சீறினாள் அவள்.
இனியவன் குடும்பத்தினர் பேச்சிழந்து நின்றார்கள். அவர்கள் இருக்கும் நிலை என்னவென்றே அவர்களுக்கு புரியவில்லை. இனியவன் சுயநினைவோடு இருந்திருந்தால், அவர்களைப் போல் கொடூரமானவனாய் இருந்திருக்க மாட்டான் என்று அவள் கூறினாளே...! ஒரு பெண் இவ்வளவு தைரியசாலியாகவும் எதார்த்தவாதியாகவும் இருக்க முடியும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. ஆனால், அப்படிப்பட்ட ஒரு பெண் அவர்கள் கண் முன்னால் நின்று கொண்டிருந்தாள். பார்கவியே கூட திகைத்து போனாள். ஆழ்வியை மிகவும் மென்மையானவள் என்று எண்ணியிருந்த பார்கவி, இப்படிப்பட்ட மோசமான நிலையிலும் அவள் இவ்வளவு சமநிலையோடு நின்றதை பார்த்து அசந்து போனாள்.
அங்கிருந்து செல்ல ஆழ்வி நினைத்தபோது, அங்கு நின்ற மருத்துவரை கண்டாள்.
"வேலைக்கு ஆள் எடுக்குறதுக்கு முன்னாடி, ஏற்கனவே மனசு உடைஞ்சு போய் இருக்கிறவங்களோட மனசை, மேல மேல உடைக்காம இருப்பாங்களான்னு தெரிஞ்சுக்கிட்டு தயவு செய்து ஆள் எடுங்க" என்றாள்.
அந்த உதவியாளர்களை பார்த்து முறைத்தார் அந்த மருத்துவர். அவர்கள் தலை குனிந்து கொண்டார்கள்.
ஆழ்வி அங்கிருந்து செல்ல நினைத்த போது, பார்கவியின் குரலை கேட்டு நின்று, அவளை நோக்கி திரும்பினாள். அவளை நோக்கி ஓடிச் சென்ற பார்கவி, அவளை அனைத்து கொண்டுகதறி அழுதாள். கண்களை மூடி அப்படியே நின்றாள் ஆழ்வி. அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது. அந்த காட்சியை கண்ட நித்திலா மென்று விழுங்கினாள். அவளது உறுதி நித்திலாவை பிரமிக்க செய்தது. ஆழ்வியைப் பற்றி பலமுறை பார்க்வி அவரிடம் கூறியிருக்கிறாள். ஆனால், இப்பொழுது அவள் தன் கண்முன்னால் பார்த்துக் கொண்டிருக்கும் விதத்தில் அவள் அவளை பற்றி கூறியது இல்லை.
"ஐ அம் சாரி, ஆழ்வி... என்னால தான்..."
அவளது பேச்சை வெட்டி,
"என்னை போகவிடு பார்கவி, எனக்கு நேரம் ஆகுது" என்றாள்.
அவளை கெஞ்சும் கண்களோடு பார்த்தாள் பார்கவி. அவளது கண்ணீரை துடைத்து விட்ட ஆழ்வி,
"நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்ல. இதுல உன்னோட தப்பு எதுவும் இல்ல. கில்டியா ஃபீல் பண்ணாத" என கூறிவிட்டு, அந்த இடம் விட்டு சென்றாள், இனியவன் குடும்பத்தினரை மலைப்புக்கு உள்ளாக்கி.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள் ஆழ்வி. அவளை தனியே அனுப்ப மனமின்றி பின்தொடர்ந்து ஓடி வந்தாள் பார்கவி.
"ஆழ்வி, ப்ளீஸ் இரு. நான் உன்னை ட்ராப் பண்றேன்" கண்ணீருடன் கெஞ்சினாள்.
ஆழ்வி மறுக்கவில்லை. இந்த விஷயம் தன் அம்மாவிற்கு தெரிய வேண்டாம் என்று அவள் எண்ணினாள். ஃபோன் செய்து காரை கொண்டு வருமாறு ஓட்டுநரை பணித்தாள் பார்கவி. அவளும் ஆழ்வியுடன் செல்ல நினைத்தபோது அவளை தடுத்தாள் ஆழ்வி.
"நீ என் கூட வர வேண்டாம். நான் போறேன்" என்றாள்.
"ஆழ்வி, ப்ளீஸ்..."
"இல்லன்னா நான் ஆட்டோவில் போறேன்..." என்றாள் உறுதியாக
"சரி நான் வரல. நீ கார்ல போ..." என்றாள் சோகமாய்.
ஆழ்வி காரில் அமர்ந்து கொள்ள,
"சாரதி அண்ணா, அவளை வீட்ல விட்டுட்டு வாங்க" என்றாள் பார்கவி.
சரி என்று தலையசைத்து, அவர் வண்டியை ஸ்டார்ட் செய்தார்.
பார்கவி தனியாய் நின்றிருப்பதை கண்டார்கள் நித்திலாவும் பாட்டியும்.
"நீ அவ கூட போகலையா?" என்றார் பாட்டி.
"அவ வேண்டாம்னு சொல்லிட்டா" என்றபடி கண்ணை துடைத்தாள்.
சித்திரவேல் தனது காரை கொண்டு வர, அதில் அனைவரும் அமர்ந்து கொண்டார்கள்
"ஆழ்வியோட அம்மா என்ன செய்யப் போறாங்கன்னு தெரியல. உங்களுக்கு இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கலாம்னு தான் நான் அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தேன். அவ எவ்வளவு நல்ல பொண்ணுன்னு உங்களுக்கு தெரிஞ்சா, நீங்க அவளுக்கு வேலை கொடுப்பிங்கன்னு நெனச்சேன்"
"அவ நம்மகிட்ட எதிர்பார்த்ததை விட ஒரு நல்ல வேலையை நம்ம அவளுக்கு கொடுக்கலாம். கவலைப்படாதே" என்றான் சித்திரவேல்.
"ஆனா, அவ இப்ப இருக்கிற நிலைமையில அவ பரிட்சைக்கு வருவாளான்னே எனக்கு தெரியல. இன்னும் ஒரு பரீட்சை தான் இருக்கு. இப்போ அவ இருக்கிற ஸ்ட்ரெஸ்ல அவளால படிக்க கூட முடியாது..."
"அதனால என்ன? எப்படி இருந்தாலும், அந்த பொண்ணுக்கு நம்ம ஏதாவது செஞ்சு தான் ஆகணும். அவ எளிஜிபிள் இல்லனாலும், அவளுக்கு நம்ம ஒரு நல்ல வேலை கொடுக்கலாம்" என்றான் சித்திரவேல்.
அழுதபடி கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தாள் பார்கவி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top