49 முதல் முயற்சி

49 முதல் முயற்சி

நித்திலாவின் புடவையை வேண்டுமென்றே பற்ற வைத்த சித்திரவேலை பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் ஆழ்வி. அதற்கான காரணத்தை அவள் ஓரளவு யூகிக்கவும் செய்தாள். ஒருவேளை அவளது யூகம் சரியானதாய் இருந்தால், இதற்கு மேல் அவள் நிச்சயம் சும்மா இருக்க கூடாது. சித்திரவேல் இனியவனை எந்த விதத்திலாவது தாக்குவான். இனியவனை எச்சரிக்க வேண்டும் என்று எண்ணினாள் அவள். அதற்கு முன் குருபரனிடம் இது குறித்து பேசியாக வேண்டும். சித்திரவேல் செய்த காரியம் பற்றி குருபரனுக்கு  தெரிய வேண்டியது அவசியம். அதனால், குருபரனுக்கு ஃபோன் செய்தாள் ஆழ்வி. அவனது ஃபோன் எங்கேஜ்டாய் இருந்தது. அவன் குருபரன் ஆயிற்றே! அவனது கைபேசி எங்கேஜ்டாய் இருப்பது வியப்பொன்றுமில்லை.

( நாம் ஒருவரது எண்ணை பிளாக் செய்து விட்டாலும் நம்மால் அவர்களை தொடர்பு கொள்ள முடியும். ஆனால் அவர்களால் தான் நம்மை தொடர்பு கொள்ள முடியாது. அவர்களுக்கு நோட்டிஃபிகேஷனும் செல்லாது)

தனது மிஸ்டு காலை பார்த்த பிறகு குருபரன் தனக்கு ஃபோன் செய்வான் என்று காத்திருந்தாள் ஆழ்வி. ஆனால் அவனுக்குத்தான் எந்த நோட்டிபிகேஷனும் வரப்போவது இல்லையே. இனியவன் தான் அவனது எண்ணை பிளாக் செய்து விட்டானே. வெறுப்போடு அமர்ந்திருந்தாள் ஆழ்வி.

சட்டென்று அவளது இதயத்துடிப்பு எகிறியது, இனியவனின் கொலைகார பார்வையை எண்ணிப் பார்த்தபோது. அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை. அவன் தன்னிடம் நெருங்க முயல்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது. ஆனால் அவன் அதை எந்த எண்ணத்தோடு செய்கிறான் என்று தான் புரியவில்லை. மனநிலை சரியில்லாத இனியவனின் மனதில் இருப்பதை முதல் ஃ வரை அவளால் கூறிவிட முடியும். ஆனால் தெளிவான இனியவனை புரிந்து கொள்வது முடியாத காரியமாய் இருக்கிறது. அவனுக்கு அவளை பிடித்திருக்கிறதா, அல்லது அவளை தொடுவது பிடித்திருக்கிறதா என்று அவளுக்கு புரியவில்லை. ஏனென்றால் பணக்காரர்களை பொறுத்தவரை இதெல்லாம் சகஜமான ஒன்றாயிற்றே...! இனியவனும் அப்படிப்பட்ட மன ஓட்டத்தோடு இருப்பானோ என்று பயந்தாள் அவள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவன் அவளை வெறுக்கவில்லை. அந்த எண்ணம் அவளுக்கு மன அமைதியை தந்தது. அவளது மனதில், ஏதோ ஒரு மூலையில், அவன் தன்னை மனைவியாய் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்று அவள் நம்பினாள்.

........

இனியவனும் ஆழ்வியைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தான்... அவளைப் பற்றியும், அவளது திடீரென்று  மாறிப்போன நடவடிக்கையை பற்றியும். அவளது அந்த மாற்றத்திற்கு காரணம் சித்திரவேலாக இருக்கலாம். ஆனால் சித்திரவேல் அப்படி என்ன செய்ய முயன்றிருப்பான்? அவன் இல்லாத போது அவனது அலுவலகத்தில் கால் வைக்க கூட நினைக்கவில்லை சித்திரவேல். அவன் நினைத்திருந்தால் அவனது அலுவலகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் தன் கீழ் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை அப்படி இருக்கும்போது அவனுக்கு என்ன தான் வேண்டும்? சித்திரவேலுக்கு ஆழ்வியை பிடிக்கவில்லை என்பதை இனியவன் அறிந்திருந்தான். ஆழ்விக்கும் கூட அது பற்றி தெரிந்திருக்கலாம். அதனால் தான் அவள் பதற்றமாக காணப்பட்டாளோ?

எது எப்படி இருந்த போதிலும், அவன் சித்திரவேலை குறைத்து மதிப்பிடக் கூடாது. அவன் ஒரு வழக்கறிஞன். சட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு ஓட்டைகளையும் நன்கு அறிந்தவன். இதுவரை சித்திரவேல் தனக்கு எதிராய் என்னவெல்லாம் செய்திருக்கிறான் என்பது அவனுக்கு தெரியாது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், ஒரு வழக்கறிஞரின் மன ஓட்டம் என்ன என்பதை இன்னொரு வழக்கறிஞரால் தான் உணர முடியும். அதனால் தன் வழக்கறிஞரான பாலகிருஷ்ணனை சந்திப்பது என்று முடிவுக்கு வந்தான் இனியவன். அதை செய்வதற்கு முன், ஒரு முக்கியமான விஷயத்தில் சித்திரவேலின் எதிர்வினை என்ன என்பதை தெரிந்து கொள்ள நினைத்தான்.

நித்திலாவின் அறைக்குச் சென்றவன், அவளது அறையை நெருங்கிய போது தன் காதுகளை கூர்மையாக்கி கொண்டு தன் நடையின் வேகத்தை குறைத்தான். ஒருவேளை சித்திரவேல் நித்திலாவிடம் எதை பற்றியாவது பேசிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணி...! ஆனால் அவர்களது அறை அமைதியாய் இருந்தது. சித்திரவேலின் முக பாவத்தை கவனித்தபடி அவர்களது அறைக்குள் நுழைந்தான் இனியவன். அவனைப் பார்த்தவுடன் சித்திரவேலின் முகம் சில நொடிகள் மாறி பின் இயல்புக்கு திரும்பியது.

"நீங்க இப்ப எப்படி இருக்கீங்க கா?" என்றபடி நித்திலாவின் பக்கத்தில் அமர்ந்தான்.

நன்றாக இருக்கிறேன் என்பது போல் சோகமாய் தலையசைத்தாள் நித்திலா.

"அதை கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே சொல்லலாமே..."

நித்திலா அவனை சோகமாய் பார்த்தாள்.

"அப்படின்னா நீங்க இன்னும் அதை விட்டு வெளியில வரல..."

முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள் நித்திலா.

"அப்படின்னா இன்னைக்கு என்னை பட்டினி போடுறதுன்னு முடிவு பண்ணி இருக்கீங்க. அப்படித்தானே?"

"ஏன் அப்படி சொல்ற?" என்றாள் நித்திலா அதிர்ச்சியுடன்.

"எனக்கு பசிக்குது. ஆனா நீங்க இப்படி சோகமா இருந்தா, நான் எப்படி சாப்பிடுறது?"

"நீ போய் சாப்பிடு, இன்னு"

"நோ வே, நீங்க சாப்பிடுற வரைக்கும் நானும் சாப்பிட மாட்டேன். வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்"

"இன்னு..."

"சரி, நீங்க அழுதுகிட்டே இருங்க. நான் கிளம்புறேன்"

அங்கிருந்து கிளம்ப முற்பட்டான் இனியவன். அவன் கையைப் பிடித்து நிறுத்தினான் நித்திலா. அது இனியவனை புன்னகைக்க செய்தது.

"நானும் சாப்பிடுறேன்"

"வாங்க" என்று அவளை உணவு மேசைக்கு அழைத்து வந்தான் இனியவன்.

"முத்து..."

"சொல்லுங்க அண்ணா"

"எல்லாரையும் சாப்பிட வர சொல்லு" என்று வேண்டுமென்றே அனைவரையும் அழைத்தான் இனியவன்.

"சரிங்க அண்ணா"

முத்து அனைவரையும் அழைக்க, அனைவரும் உணவு மேசையில் கூடினார்கள், ஆழ்வி உட்பட.

"எப்படி இருக்கீங்க, அக்கா?" என்றாள் ஆழ்வி.

பரவாயில்லை என்று தலையசைத்தாள் நித்திலா.

"அக்கா உன் ஸாரி ரொம்ப சூப்பரா இருக்கு" என்றாள் பார்கவி.

"அது என்னோட செலக்ஷன்" என்றான் பெருமையுடன் சித்திரவேல்.

"ஓஹோ, இந்த புடவை தான் நேத்து நீங்க வாங்கிட்டு வந்ததா?"

"ஆமாம், பூஜைல கட்டிக்க இந்த புடவையை தான் அவர் வாங்கிட்டு வந்தாரு" என்றாள் நித்திலா.

அது ஆழ்வியின் முக பாவத்தை மாற்றியது. அதை கவனித்தான் இனியவன்.

"ஒருவேளை, நீ முதல்லயே இந்த புடவையை கட்டியிருந்தா, இந்த ஃபயர் ஆக்சிடென்ட் நடக்காமலே போயிருக்குமோ என்னமோ" என்றான் சித்திரவேல் சோகமாய்.

அமைதியாய் தன் தட்டில் கோடுகளை வரைந்து கொண்டிருந்தாள் ஆழ்வி.

"அண்ணா, இன்னைக்கு நீ ஆழ்வியை ஆஃபீசுக்கு கூட்டிகிட்டு போறேன்னு சொன்னியே..." என்றாள் பார்கவி.

"ஆமாம், கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னேன். இன்னைக்கு நடந்த விஷயம் எல்லாரையும் சோகமா மாத்திடுச்சு. அப்படி இருக்கும் போது நான் எப்படி ஆஃபீசுக்கு போறது? அதனால ப்ரோக்ராமை கேன்சல் பண்ணிட்டேன்"

"அப்படின்னா நாளைக்கு போயேன்"

"போகலாம்... நீ என்ன சொல்ற ஆழ்வி?"

"ஆங்?"

"நம்ம நாளைக்கு ஆஃபீஸ் போகலாமா?" என்றான்.

"சரி"

அனைவரும் சாப்பிட்டு முடிக்கட்டும் என்று காத்திருந்தான் இனியவன். ஏனென்றால், அவன் பேசத்துவங்கி விட்டால், யாரும் சாப்பிட மாட்டார்கள் என்று அவனுக்கு தெரியும். அதனால் அவர்கள் சாப்பிடும் வரை காத்திருந்தான்.

"அக்கா, நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்னு நினைச்சேன்"

"என்ன இன்னு?"

"மாமா மாதிரி ஒருத்தர் நம்ம கூட இருக்க நம்ம ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்"

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனை ஆச்சரியத்துடன் பார்த்தான் சித்திரவேல். நித்திலா அவனை பெருமையோடு பார்க்க, ஆழ்வியோ மென்று விழுங்கினாள். 

"நீ சொல்றது உண்மை தான் அண்ணா... உனக்கு தெரியாது, மாமா நமக்காக எவ்வளவு ஹெல்ப் பண்ணாருன்னு... அதுவும் நீ..."

*மனநிலை சரியில்லாமல் இருந்தபோது* என்று அவள் கூறுவதற்கு முன், அவள் தொடையை பிடித்து அழுத்தினாள் ஆழ்வி.

"கோமா ஸ்டேஜ்ல இருந்தபோது" என்று சமாளித்தாள் பார்கவி.

இனியவன் சித்திரவேலை பார்த்து புன்னகை புரிந்தான்.

"ஆமாம் இன்னு, மாப்பிள்ளை மட்டும் நம்ம வீட்ல இல்லாம போயிருந்தா, நாங்க ரொம்பவே தவிச்சு போய் இருப்போம்" என்றார் பாட்டி.

*உங்களோட தவிப்பு எல்லாத்துக்கும் அவர் தான் பாட்டி காரணம்* என்று மனதிற்குள் எண்ணினாள் ஆழ்வி.

"அது சரி இன்னு, திடீர்னு நம்ம எவ்வளவு கொடுத்து வச்சவங்கன்னு உனக்கு ஏன் தோணுச்சு?" என்றாள் நித்திலா ஆர்வமாய்.

"என்னை லைஃப்ல செட்டில் பண்ணிடணும்னு மாமா ரொம்ப ஆர்வமா இருக்கார்" என்றான் சித்திரவேலை பார்த்தவாறு. சித்திரவேலின் முகத்தில் ஈயாடவில்லை.

அனைவரது பார்வையும் சித்திரவேலை நோக்கி திரும்பியது. என்ன அர்த்தத்தில் அப்படி கூறினான் என்று அவர்களுக்கு புரியவில்லை.

"எனக்கு பொருத்தமான பணக்கார (என்பதை அழுத்தி) வீட்டு பொண்ணை தேடி கண்டுபிடிக்கவும் அவர் தயாரா இருக்காரு" என்ற இனியவன், அனைவரது கண்களும் அதிர்ச்சியில் விரிவடைவதை கவனித்தான்.

"நான் பணக்கார வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்கறதுல, எந்த காம்ப்ரமைஸும் பண்ணிக்க கூடாதுன்னு மாமா நினைக்கிறார்"

தன் பல்லை கடித்தவாறு அவனை பார்த்து முறைத்தாள் நித்திலா.

"வரப்போற பொண்ணு எல்லா விதத்துலயும் எனக்கு சமமானவளா இருக்கணும்னு அவர் விரும்புறார்"

அனைவரது பார்வையும், தனது தட்டையே பார்த்துக் கொண்டிருந்த ஆழ்வியின் பக்கம் திரும்பியது. அவளது மனநிலை அனைவருக்கும் புரிந்தே இருந்தது, இனியவனுக்கும் தான்.

"நீங்க இன்னுகிட்ட அவன் கல்யாணத்தைப் பத்தி பேசினீங்களா?" என்றாள் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நித்திலா

"நான் வந்து..."

அவனது பேச்சை வெட்டி,

"அதனால என்னக்கா? என்னை செட்டில் பண்ணணும்ங்குகிற பொறுப்பு அவருக்கு இருக்கு தானே?" என்றான் இனியவன்.

தன் கோபத்தை கட்டுப்படுத்த கண்களை மூடிய நித்திலா, அதை செய்ய இயலாதவளாய் அந்த இடம் விட்டு சென்றாள். அச்சத்துடன் அவளை பின்தொடர்ந்தான் சித்திரவேல்.

"அக்காவுக்கு என்ன ஆயிடுச்சு? அவங்க மாமாவை பாராட்டுவாங்கன்னு நினைச்சேனே!" என்றான் இனியவன்.

ஆழ்வியும் அந்த இடத்தை விட்டு சென்றாள்.

"அவளுக்கு என்ன ஆச்சு?" என்றான் இனியவன்.

அவனுக்கு பதில் கூறாமல் தன் அறைக்குச் சென்றார் பாட்டி. பார்கவி இயலாமையுடன் பாட்டியை பின் தொடர்ந்தாள். இனியவனோ தன் மனைவியை பின்தொடர்ந்து சென்றான்.

...........

இதற்கிடையில்,

கலக்கத்துடன் நித்திலாவை பின்தொடர்ந்து சென்றான் சித்திரவேல்.

"நித்தி" என்று அவள் கையைப் பிடிக்க அவன் முயன்ற போது, அவளது கையை உதறிவிட்டாள் நித்திலா.

"போதும் நிறுத்துங்க... இதுதான் உங்களுக்கு லிமிட். எவ்வளவு தைரியம் இருந்தா பணக்கார பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறத பத்தி நீங்க அவன்கிட்ட பேசி இருப்பீங்க?"

"அவருக்கு கல்யாணத்தில் இண்ட்ரஸ்ட் இருக்கான்னு தெரிஞ்சுகிறதுக்காக நான் அப்படி செஞ்சேன்"

"அதை செய்றதுக்கு இது தான் முறையா? உங்களை நீங்க ஒரு லாயர்ன்னு சொல்லிக்காதீங்க. ரொம்ப கேவலமா இருக்கு" சீறினாள் நித்திலா. 

"எனக்கு இந்த குடும்பத்தில் எந்த உரிமையும் இல்லையா...?"

"மண்ணாங்கட்டி... உங்களோட உரிமையை நீங்க இப்படித்தான் காட்டுவீங்கன்னா, உங்களுக்கு எந்த உரிமையும் கொடுக்க நான் விரும்பல..." நெருப்பை கக்கினாள்.

"சரி, எனக்கு எந்த உரிமையும் வேணாம். வா நம்ம வீட்டுக்கு போகலாம்"

"உங்களுக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? ஒன்னு இந்த வீட்டை விட்டு போவீங்க, இல்லன்னா, பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்வீங்களா? சுத்த மடத்தனமா இருக்கு..."

"இனியவன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான் நான் நினைச்சேன்"

"அதைப்பத்தி ஏன் நீங்க என்கிட்ட எதுவும் சொல்லல? என்கிட்ட கேக்காம நீங்க எப்படி அதை செய்யலாம்? இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலை எல்லாம் நீங்க செஞ்சுக்கிட்டு இருந்தா உங்களை யார் நம்புவா?"

"கீழ்த்தரமான வேலையா?"

"வேற என்ன? ஆழ்வியோட முகத்தை பாத்திங்களா? நான் எப்படி அவங்களை ஃபேஸ் பண்ணுவேன்? அவங்க என்னால தான் இந்த வீட்ல இருக்காங்க. ஆனா, நீங்க அவங்க வாழ்க்கையை ரொம்ப மோசமான நிலைமைக்கு தள்ளுறீங்க... நான் இதை உங்ககிட்ட எதிர்பார்க்கல... துளியும் எதிர்பார்க்கல..."

"தயவு செய்து டென்ஷனாகாத. நான் மச்சான் கிட்ட பேசுறேன்"

தன் இரண்டு கரங்களையும் கூப்பி,

"போதும். தயவு செஞ்சி நிறுத்துங்க. நீங்க செஞ்சதெல்லாம் போதும். என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்"

"என்ன செய்யப் போற?"

"இன்னுகிட்ட உண்மையை சொல்லப் போறேன்"

அதைக் கேட்ட சித்திரவேல் திகில் அடைந்தான்.

"நித்தி, தயவு செய்து அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காத. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆழ்வியோட வாழ்க்கையோட விளையாடாத"

"அவங்க வாழ்க்கையோட விளையாடினது நான் இல்ல, நீங்க தான்"

"தயவு செய்து என் மேல பழி போடாத... நான் எல்லாத்தையும் வேணும்னே செஞ்ச மாதிரி நீ பேசுற"

"இல்லைன்னு உங்களால நிரூபிக்க முடியுமா?"

"நான் என்ன செய்யணும்னு சொல்லு. நான் செய்றேன். ஆனா இனியவன் கிட்ட உண்மைய சொல்லணும்னு மட்டும் நினைக்காத"

"ஏன்?" என்று அவனை கோபமாய் பிடித்து தள்ளினாள்.

"இனியவனோட மனசுல என்ன இருக்குன்னு உனக்கு தெரியலையா? அவருக்கும் ஒரு பணக்கார பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் விருப்பம். அவர் குரலில் இருந்து அதை உன்னால கண்டுபிடிக்க முடியலையா. ஆழ்வியை பிடிக்கலைன்னு அவர் உனக்கு மூஞ்சிக்கு நேரா சொன்னா என்ன செய்வ?"

சில நொடி திகைத்து நின்ற நித்திலா,

"அவன்கிட்ட எப்படி பேசணும்னு எனக்கு தெரியும்"

"நான் சொல்றத கேளு நித்தி"

தன் கையை காட்டி அவனை நிறுத்தினாள் நித்திலா.

.......

தன் அறைக்கு வந்த ஆழ்வியும் கிட்டத்தட்ட அதையே தான் யோசித்துக் கொண்டிருந்தாள். இனியவன் அவளிடம் நெருங்கி வர முயல்வதை பார்த்தபோது அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. ஆனால் இப்பொழுது, அவனது எண்ணம் குறித்து அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது என்பது பணக்காரர்களைப் பொறுத்தவரை சாதாரண விஷயம். இனியவன் பணக்கார பெண்ணை மணந்து கொள்ள நினைக்கிறான் போல் தெரிகிறது.

தனது ரவிக்கைக்குள் மறைத்து வைத்திருந்த தனது தாலியை வெளியில் எடுத்த ஆழ்வி, அதை பார்த்து கண்ணீர் சிந்தினாள். கண்களை மூடி அதை தன் நெற்றியில் ஒற்றியவாறு அழுதாள்.
சித்திரவேலின் பிரச்சனையில் அவள் கதவை சாத்தி தாழிட மறந்தாள். அவளை பின்தொடர்ந்து வந்த இனியவன், அவள் தன் தாலியை பற்றி கொண்டு அழுவதை பார்த்து வேதனை அடைந்தான்.

அவன் எதிர்பார்த்து காத்திருந்த சந்தர்ப்பம் கூடி வந்தது போல் தெரிந்தது. கதவை தள்ளிக் கொண்டு அவளது அறையின் உள்ளே நுழைந்தான். அவனது திடீர் வருகையால் அதிர்ச்சி அடைந்தாள் ஆழ்வி. அவனது பார்வை அவள் கழுத்தில் இருந்த தாலியில் இருந்ததை பார்த்து அவளுக்குள் பீதி கிளம்பியது.

"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்றான் நம்பிக்கையின்மையை முகத்தில் படரவிட்ட இனியவன்.

அவனிடம் உண்மையை கூறுவதா வேண்டாமா என்று புரியாமல் திகைத்த ஆழ்வி தன்னைத்தானே நொந்து கொண்டாள். சற்று நேரத்திற்கு முன்பு தான் பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்வது பற்றி அவன் மகிழ்ச்சியோடு பேசியதை கேட்டாள். ஆனால் அவனது மனைவி பணக்கார வீட்டுப் பெண் இல்லை என்று அவனுக்கு தெரிய வந்தால் அவன் என்ன செய்வான்? கலங்கிய கண்களுடன் தன் சேலை முந்தானையை இறுகப்பற்றினாள்.

"எல்லா...ருக்கும் தெ...ரியும்" என்று தடுமாறினாள் அவள்.

அது இனியவனுக்கு ஏமாற்றத்தை தந்தது. 'ஆம், நான் உன்னைத்தான் மணந்து கொண்டிருக்கிறேன்' என்று அவள் கூறுவாள் என்று எதிர்பார்த்தான் அவன். அவள் தன்னிடம் உண்மையை கூற வேண்டும் என்று அவன் எண்ணினான். அவள் தன் உரிமையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பினான். ஆனால் அப்படி நடைபெறவில்லை. அவளிடம் இருந்து உண்மையைப் பெற அவன் வேறு வழியை தான் கையாள வேண்டும் போல் தெரிந்தது. அவளை தயங்க வைப்பது எது என்பது அவனுக்கு புரிந்தே இருந்தது. அவளது கண்ணீரை காண சகிக்காதவனாய் அந்த இடம் விட்டு சென்றான் இனியவன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top