48 தற்செயலாய்...

48 தற்செயலாய்...

மறுநாள் காலை

குளித்து முடித்து தலைத் துவட்டியபடி வெளியே வந்தான் இனியவன். அப்பொழுது அவன் அறையின் கதவை தட்டினாள் நித்திலா. கதவை திறந்தவன், முதல் நாள் அவன் வாங்கிக் கொடுத்த புடவையை உடுத்திக் கொண்டு அவள் நின்று இருப்பதை கண்டான். ஆழ்வியும் அவன் வாங்கிக் கொடுத்த புடவையை அணிந்திருப்பாளா என்ற எண்ணம் அவன் மனதில் உதித்தது.

"இன்னு, நல்ல காலம் நீ குளிச்சிட்ட"

"இதுல புதுசா என்னக்கா இருக்கு? நான் தினமும் தானே குளிக்கிறேன்?"

"சீக்கிரம் கிளம்பி கீழே வா"

"ம்ம்ம்..."

நித்திலா அங்கிருந்து சென்றாள்.

உடை மாற்றிக்கொண்டு தரைதளம் வந்தான் இனியவன். அவனது கால்கள் தரையோடு ஒட்டிக்கொண்டது, ஆழ்வி பூஜை அறையில் விளக்கேற்றிக் கொண்டிருப்பதை பார்த்தபோது. அவன் வாங்கிக் கொடுத்த சிவப்பு நிற சேலையில் அவள் கொள்ளை அழகாய் இருந்தாள். விளக்கை ஏற்றி முடித்துவிட்டு கண்களை மூடி பிரார்த்தனை செய்தாள். தன் மனதில் எதையோ உணர்ந்த அவள், கண்களை திறந்து, இங்கும் அங்கும் தேடினாள் அது இனியவனை வியப்புக்குள்ளாக்கியது.

இனியவனின் நிலைத்த பார்வை தன் மீது இருப்பதைக் கண்ட அவள் திகைத்து நின்றாள். ஒரு மெல்லிய புன்னகை அவன் இதழ்களில் தவழ்ந்து கொண்டிருந்தது, அவளது வயிற்றில் ஏதோ செய்தது.

தன் பார்வையை அவள் மீது இருந்து அகற்றவே முடியவில்லை இனியவனால்... அவனது கண்களில் காதல் நிரம்பி வழிந்தது. அவனுக்கு முன்னால் பதற்றத்தோடு நின்றிருக்கும் அந்தப் பெண் வேறு யாரும் அல்ல, அவனது மனைவி. அவன் தன் கணவன் என்று அவளுக்கும் தெரியும். அவனும் அவள் தன் மனைவி தான் என்று அறிந்து கொண்டு விட்டான். இருந்தாலும் அவர்களுக்கிடையில் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏனோ அவனது கண்களில் அவள் என்றும் இல்லாத அளவிற்கு அன்று அழகாய் தெரிந்தாள். அவன் வாங்கிக் கொடுத்த புடவையை அவள் அணிந்து இருந்தால் என்பதற்காக அல்ல... அவளது உள்ளம் ஈடு இணை இல்லாதது. கலங்கமற்ற இதயம் அவளுடையது. அவள் சுவாமிஜியுடன் பேசியது அவன் காதுகளில் எதிரொலித்தது. அவள் அவனுக்காக என்னவெல்லாம் செய்தாள்... அவனுடன் என்னவெல்லாம் செய்தாள் என்று அவனுக்கு தெரியும். அவனது மன நோய்க்கு சிகிச்சை அளித்திருக்கிறாள், அவனை அக்கறையாய் கவனித்துக் கொண்டிருக்கிறாள், அவனை கட்டி அணைத்து இருக்கிறாள், அவனுக்கு முத்தமிட்டு இருக்கிறாள், ஒரே கட்டிலில் அவனுடன் உறங்கி இருக்கிறாள். அந்த எண்ணம் அவனுக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

அவனது ஊடுருவும் பார்வையால் தடுமாறினாள் ஆழ்வி. ஏன் இப்படி விழுங்கி விடுபவன் போல் அவளை பார்க்கிறான்? தன் சேலை முந்தானையை இறுக்கமாய் பற்றினாள்.

உள்ளூர புன்னகைத்தான் இனியவன். அவளை எந்த ரகத்தில் சேர்ப்பது என்றே அவனுக்கு புரியவில்லை. ஒரு காட்டு தனமான மனிதனின் அறைக்குள் தைரியமாய் நுழைந்த அந்தப் பெண்... ஒரு பைத்தியக்காரனை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க முடிந்த அந்தப் பெண்... ஏன் இப்போது இவ்வளவு பதட்டத்துடன் காணப்படுகிறாள்? மெல்லிய நமட்டு சிரிப்புடன் அவளை நோக்கி முன்னேற துவங்கினான். அதை உணர்ந்த ஆழ்வி, தரையை வெறித்துப் பார்த்தபடி நின்றாள். அவளுக்கு என்ன செய்வது, இதை எப்படி கையாள்வது என்றே புரியவில்லை. மெல்ல தன் தலையை திருப்பி அவள் அவனை பார்க்க, அவளது முகபாவம் அவனுக்கு புன்னகையை வரவழைத்தது.

அவளுக்கு அருகில் வந்து ஒன்றும் கூறாமல் அவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்ற போது அவள் மென்று விழுங்கினாள். அவன் தன் கையை அவளை நோக்கி நீட்டிய போது, அவள் திடுக்கிட்டாள். அவள் தோளை லேசாய் தட்டி,

"தூசி..." என்றான்.

அவனது பார்வை அவளுக்கு புதிதாய் இருந்தது. முக்கியமாய் ஆளை கொள்ளும் அந்த புன்னகை. ஆழ்வியோ, *ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்?* என்பது போல் அவனை பார்த்துக் கொண்டு நின்றாள்.

அப்பொழுது,

"ஆழ்....வி..." என்று பார்க்கவி கத்துவதை கேட்டு திடுக்கிட்டாள் ஆழ்வி

ஆழ்வி, மற்றும் இனியவன் இருவரும் அவள் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள். புது புடவையால் தன்னை போர்த்திக்கொண்டு நின்றிருந்தாள் பார்கவி. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"இந்த புடவையைக் கட்ட எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு ஆழ்வி" என்று கெஞ்சினாள் பார்கவி.

அவளுக்கு மனதளவில் நன்றி கூறி நிம்மதி பெருமூச்சு விட்டாள் ஆழ்வி. அதை இனியவன் கவனித்தான். பார்கவியின் அறையை நோக்கி ஓடினாள் ஆழ்வி அவளுக்கு புடவை கட்ட உதவுவதற்காக... தறிக்கெட்டு ஓடிய இதயத்துடிப்புடன் தான்!

மென்மையான புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டு நின்றான் இனியவன். அவனுக்கு உண்மை தெரிந்து விட்டது என்ற உண்மை அவளுக்கு தெரிந்தால் என்ன செய்வாள்? எனக்கு உண்மை தெரிந்து விட்டது என்று அவன் அவளிடம் கூற வேண்டுமா? அவன் ஏன் கூற வேண்டும்? அதை அவளே அவனிடம் கூறினால் சுவாரசியமாய் இருக்காதா? அவளை அப்படி சொல்ல வைத்தால் என்ன? ஆம், 'நான் தான் உன் மனைவி' என்றோ, 'நீ தான் என் கணவன்' என்றோ அவளே கூறட்டுமே...! அவளை எப்படி கூற வைப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான் இனியவன். ஒருவேளை இன்று அதற்கான சந்தர்ப்பம் அமைந்தால், அது இன்றே செய்து விடுவது என்றும் நினைத்தான்.

பார்கவிக்கு புடவை கட்டி விட உதவிய ஆழ்வி, பார்கவியுடன் தரைதளம் வந்தாள். கால் மீது கால் போட்டு கொண்டு, சோபாவில் தன் கைகளை விரித்து சாய்ந்து அமர்ந்திருந்த இனியவனின் பார்வை அவள் மீது இருந்ததை பார்த்தவுடன் அவளது உடல் குப்பென்று வியர்த்தது. அவளுக்கு இது மிக அதிகம். இனியவனின் இந்த பக்கத்தை அவளால் எதிர்கொள்ளவே முடியவில்லை. அவனது மனைவி அவ்வளவு அழகாய் இருந்தால் அவனும் தான் என்ன செய்வான்? அவன் இருந்த திசையின் பக்கமே திரும்பாமல் இருக்க முயன்றாள் ஆழ்வி.

புரோகிதரை வரவேற்றாள் நித்திலா. தாமதம் செய்யாமல் பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார் ப்ரோகிதர். அனைவரையும் ஓம குண்டத்தின் முன் அமரும்படி பணித்தார். அனைவரும் அதை சுற்றி அமர்ந்தார்கள். நித்திலாவையும் சித்திரவேலையும் ஓம குண்டத்தின் அருகே அமர சொன்னார். தனக்கு பக்கத்தில் அமருமாறு இனியவனுக்கு சைகை செய்தாள் நித்திலா. இனியவன் தன் அருகில் அமர்ந்த பின் ஆழ்வியை பார்த்து,

"ஆழ்வி, நீங்களும் வந்து உட்காருங்க" என்று இனியவனின் பக்கத்தில் அமருமாறு சைகை செய்தாள்.

அதை புரிந்து கொண்டு தலையசைத்தாள் ஆழ்வி. அவள் தன் பக்கத்தில் வேண்டிய அளவு இடைவெளி விட்டு அமர்ந்ததை பார்த்து, இனியவன் புன்னகை புரிந்தான்.

புரோகிதர் மந்திரங்களை சொல்ல துவங்கிய போது அனைவரும் கண்களை மூடி பிரார்த்தனை செய்தனர். ஆனால் இனியவன் அந்த பட்டியலில் சேரவில்லை. யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, ஆழ்வியை நோக்கி சாய்ந்த அவன்,

"புருஷன் பொண்டாட்டி தானே பூஜையில பக்கத்துல உட்காருவாங்க?" என்றான்.

திடுக்கிட்டு கண்களை திறந்த ஆழ்வி, அவன் புன்னகையோடு தன்னை நோக்கி சாய்ந்து அமர்ந்து இருந்ததை கண்டு திகைத்தாள். அவள் மீண்டும் இறுக்கமாய் கண்களை மூடி அவனை மேலும் புன்னகைக்க செய்தாள்.

பூஜை முடிவுக்கு வந்த போது, அனைவரையும் எழுந்து நிற்கச் சொன்னார் புரோகிதர்.

"எல்லாரும் ரெண்டு நிமிஷம் கண்ணை மூடி உங்களுடைய பிரார்த்தனையை முன்வைங்க"

அனைவரும் கைகளை இணைத்துக் கொண்டு கண்களை மூடி நின்றார்கள். தூப தட்டை தன் கையில் எடுத்து அந்த வீட்டின் ஒவ்வொரு திசைக்கும் மணி அடித்தபடி காட்டிக் கொண்டிருந்தார் புரோகிதர்.

திடீரென்று, தன் கையில் சூட்டை உணர்ந்தாள் நித்திலா. கீழே குனிந்து பார்த்தவள், தன் சேலை முந்தானை தீப்பற்றி எரிவதை கண்டு,

"நெருப்பு நெருப்பு..." என்று கத்தத் துவங்கினாள்.

தன் கைகளால் முந்தானையை அழுத்தி நெருப்பை அணைத்தான் சித்திரவேல். அனைவரிடமும் பதற்றம் தொற்றுக் கொண்டது. நித்திலாவை நோக்கி விரைந்த இனியவன், அவள் தோள்களை பற்றி கொண்டு,

"அக்கா உங்களுக்கு ஒன்னும் இல்லையே" என்றான் பதற்றத்துடன்.

"ஆங்..." கண்ணீருடன் தட்டு தடுமாறி கூறிய அவள் அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.

அவளது உடல் நடுங்கியது

"அக்கா ரிலாக்ஸ்... நான் இருக்கேன் இல்ல..."

மென்று விழுங்கினான் சித்திரவேல். நித்திலாவை அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்தான் இனியவன்.

"முத்து, தண்ணி கொண்டு வா" என்றான்.

மேசை மீது வைக்கப்பட்டிருந்த ஜக்கில் இருந்த தண்ணீரை ஊற்றி அவனிடம் கொடுத்தார் பாட்டி. அந்த தண்ணீரை நித்திலாவை குடிக்க செய்தான் இனியவன். அவன் ஒரு விஷயத்தை கவனித்தான், அசையாமல் அப்படியே சிலை போல் நின்றிருந்தாள் ஆழ்வி. அவள் மிகுந்த அதிர்ச்சி அடைந்திருந்தது நன்றாய் தெரிந்தது. அவள் பயந்தும் போயிருந்தாள்.

நித்திலா வாய்விட்டு அழுதாள்.

"அக்கா ப்ளீஸ் அழாதீங்க" என்று அவளை சமாதானப்படுத்தினான் இனியவன்.

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு இன்னு. இது ஒரு அபசகுணம். ஏதோ தப்பா நடக்க போறதா மனசுக்கு படுது" என்றாள் தன் அழுகைக்கு இடையில்.

"அக்கா இப்படி ஓவர் செண்டிமெண்ட்டா இருக்காதீங்க"

எதையும் கேட்க தயாராய் இல்லாத நித்திலா, தன் முகத்தை மூடி அழுதாள்.

புரோகிதர் தயக்கத்துடன் நிற்பதை கண்டாள் ஆழ்வி. அவரை நோக்கிச் சென்றார் பாட்டி. ஆழ்வியும் அவரிடம் சென்றாள்.

"நித்திலா சொன்ன மாதிரி இது அபசகுனமா?" என்றார் பாட்டி.

"ஆமாம்மா... பொதுவாவே துணியில தீப்பத்துறது நல்ல சகுனம் இல்ல. அதுவும் இவ்வளவு பெரிய பூஜை நடக்கிற இடத்துல இப்படி நடக்கிறது நல்லதில்லம்மா"

"இதுக்கு எதுவும் பரிகாரம் செய்ய முடியாதா?"

"எல்லாமே கடவுள் விருப்பப்படி தாமா நடக்கும். நம்ம கையில என்ன இருக்கு?"

அவரும் வருத்தத்தில் இருப்பது நன்றாக புரிந்தது ஆழ்விக்கு.

"தயவு செஞ்சு இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கான்னு கொஞ்சம் பார்த்து சொல்லுங்க"

"எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் சாயங்காலம் சொல்றேன்"

பாட்டி சரி என்று தலையசைக்க, அங்கிருந்து சென்றார் புரோகிதர்.

"நித்தி போய் முதல்ல இந்த புடவையை மாத்து" என்றான் சித்திரவேல்.

"ஆமாம், நித்தி, இந்த தீ பிடிச்ச புடவையோட இருக்காத" என்றார் பாட்டி.

அழுதபடியே தன் அறைக்குச் சென்றாள் நித்திலா.

"ஏன் தான் கடவுள் நம்ம குடும்பத்தை இப்படி எல்லாம் சோதிக்கிறாரோ" என்றார் பாட்டி விரத்தியுடன்.

"பாட்டி, இது ஒரு ஆக்சிடென்ட் அப்படிங்கற கண்ணோட்டத்தில் பாருங்க" என்றான் இனியவன்.

"இன்னு, நீ இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் நம்புறது இல்ல. அதனால தான் நீ இப்படி பேசுற. ஆனா, எங்களால அப்படி இருக்க முடியல"

"நடந்தது நடந்து போச்சு. நம்மால அதை மாத்த முடியாது. அதையே நினைச்சு வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் இருக்கு?"

"உன்னால அதை புரிஞ்சிக்க முடியாது" என்று அங்கிருந்து சென்றார் பாட்டி. பார்கவியும் அவரை பின்தொடர்ந்து சென்றாள். ஏனென்றால் தான் கட்டியிருந்த புடவையில் இருந்து அவளுக்கு விடுதலை பெற வேண்டும்.

பாட்டி செல்வதையே பார்த்துக் கொண்டு நின்ற ஆழ்வி, தன்னை இனியவன் கவனிப்பதை பார்த்தாள்.

"நீயுமா?" என்றான் அவன்.

"ஆங்...?"

"ஏன் டென்ஷனா இருக்க?"

ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தாள்.

"டென்ஷனா இல்லையா?"

"இல்ல... ஐ மீன் ஆமாம்"

"ஆமாவா இல்லையா?"

"ஆமாம்"

"ஏன்?"

"அக்கா சொன்னது சரி தான். இது அபசகுணம்"

கண்களை சுழற்றினான் இனியவன். ஆழ்வியின் முகத்தில் கலவரம் தெரிந்தது. ஏன் இந்த பெண்கள் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே சிந்திக்கிறார்கள் என்று எண்ணினான் இனியவன்.

"பை தி வே, நீ இந்த புடவைல ரொம்ப அழகா இருக்க" என்றான் இனியவன்.

எதிர்பாராத அந்த புகழுரையை கேட்ட அவள், அதிர்ச்சியில் விழி விரித்தாள். அவள் அங்கிருந்து செல்லலாம் என்று நினைத்தபோது, அவளுக்கு முன்னால் வந்து வழிமறித்தான் இனியவன். அதை எதிர்பார்க்காத ஆழ்வி, திடுக்கிட்டு பின்னோக்கி நகர முற்பட, தடுமாறி விழப்போனவளை, அவளது தோள்களை சுற்றி வளைத்து தன்னை நோக்கி இழுத்தான். அதற்கு அணைப்பு என்று பெயரிடலாம். அவளது கூந்தல் வாசத்தை நுகர்ந்த படி கண்களை மூடினான் இனியவன். அவனை சற்று வேகமாய் பிடித்து தள்ளிவிட்டு அவன் கையில் இருந்து வெளியே வந்தாள் ஆழ்வி.

அவனிடமிருந்து சில அடிகள் அவள் நகர்ந்த போது,

"ஆழ்...வி..." என்று உறுதியான குரலில் அவளை நிறுத்தினான்.

அவள் தயக்கத்துடன் அவனைப் பார்க்க,

"எனக்கு டீ கிடைக்குமா?" என்றான்.

ஒன்றும் கூறாமல் அவள் சமையலறையை நோக்கி நடந்தாள். இனியவன் புன்னகையுடன் தன் அறைக்கு சென்றான், அவள் தன் அறைக்கு வரட்டும்! என்ற எண்ணத்துடன்...!

அவள் சமையல் அறைக்குள் நுழைவதை கண்டான் முத்து.

"உங்களுக்கு ஏதாவது வேணுமா அண்ணி?"

"இனியவர் டி கேட்டாரு"

"நான் போட்டுக் கொடுக்கவா?"

"அவர் என்னை தான் கேட்டாரு" என்று தானே தீ தயாரிக்க தொடங்கினாள்.

அதை ஒரு குவளையில் ஊற்றி முத்துவிடம் கொடுத்து,

"இதை இனியவர்கிட்ட கொடுத்திடுங்க" என்றாள்.

"அவர் உங்களை தானே அண்ணி கேட்டாரு?"

"எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு" என்று அந்த குவளையை அவன் கையில் திணித்துவிட்டு வெளியேறினாள் ஆழ்வி.

அவள் ஏன் இவ்வளவு கலவரமாய் காணப்படுகிறாள் என்று எண்ணி முகத்தை சுருக்கிய முத்து, தேனீருடன் இனியவன் அறைக்கு வந்தான். அவனைப் பார்த்தவுடன் எரிச்சல் அடைந்தான் இனியவன்.

"அண்ணா, டீ கொண்டு வந்து இருக்கேன்"

"நான் உன்னை கேட்கலையே"

"ஆனா நீங்க கேட்டதா ஆழ்வி சொன்னாங்க. இதை போட்டுக் கொடுத்ததே அவங்க தான்"

"அப்புறம் நீ எதுக்கு இதை கொண்டு வந்த?"

"அவங்களுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டாங்க"

"முக்கியமான வேலையா?" என்று முணுமுணுத்த இனியவன்,

"அவ எங்க போனா?" என்றான்.

"பாட்டி ரூமுக்கு போனாங்க"

"ம்ம்ம்..."

அந்தத் தேனீரை குடித்துவிட்டு பாட்டியின் அறைக்குச் சென்றான் இனியவன். அவன் பாட்டியின் அறையில் நுழைய முற்பட்டபோது, ஆழ்வி கேட்ட கேள்வியை கேட்டு அப்படியே நின்றான்.

"சித்ரா அண்ணனுக்கு சொந்தக்காரங்க யாரும் இல்லயா?"

"இல்ல ஆழ்வி, அவருக்குன்னு யாரும் இல்ல" என்றார் பாட்டி.

"யாரும் இல்லன்னா?"

"அவர் ஒரு அனாதை. நித்திலாவோட ஒரே காலேஜ்ல படிச்சாரு. நித்திலாவுக்கு சீனியர். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாங்க. அவர் லா படிச்சு முடிக்கிற வரைக்கும் அவருக்காக காத்திருந்தா நித்திலா"

"அவர் அக்காவை ரொம்ப காதலிக்கிறார் தானே?"

"ஆமாம், நித்திலா மேல அவருக்கு கொள்ளை பிரியம்"

"அவங்களை பத்தி சொல்றீங்களா, பாட்டி?"

சரி என்று தலையசைத்த பாட்டி,

"அவர் சட்டம் படிச்சு முடிச்சதுக்கு பிறகு அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. பிறகு நித்திலாவை தன்னோட வீட்டுக்கு கூட்டிகிட்டு போகணும்னு மாப்பிள்ளை விருப்பப்பட்டாரு. ஆனா, இன்னுவை விட்டுப் போக நித்திலா விருப்பப்படல. அதனால அவர் இங்கேயே இருக்க ஒத்துக்கிட்டாரு. அவருக்கும் யாரும் இல்ல இல்லயா? ஆனா இங்க இருக்க ஒத்துக்கிட்டாரே தவிர, நித்திலாவோட செலவுக்கும் தனக்கும் சேர்த்து ஆகுற செலவுக்கான பணத்தை மாப்பிள்ளை மாசா மாசம் குடுத்துடுறாரு"

"நெஜமாவா?"

"ஆமாம், நித்திலா அவருடைய பணத்தை செலவு பண்ணணும்னு தான் அவருக்கு விருப்பம். நித்திலாவை இன்னுகிட்ட பணம் வாங்க விடமாட்டார்"

"ஓ... இனியவர் அக்கா மேல ரொம்ப பாசம் வச்சிருக்கிற மாதிரியே, சித்ரா அண்ணனும் அக்காவை ரொம்ப நேசிக்கிறார் இல்ல?"

"ஆமாம் அதுல எந்த சந்தேகமும் இல்ல"

"சித்ரா அண்ணன் அவரோட பணத்தை மட்டுமல்ல அவரோட டைமையும் அக்கா கூட ஸ்பென்ட் பண்ணணும்னு நினைக்கிறாருன்னு நினைக்கிறேன்"

"நீ சொல்றது சரி தான். இன்னுவுக்கு அடிபட்டதுக்கு பிறகு, மாப்பிள்ளை தான் இந்த குடும்பத்தோட பொறுப்பை ஏத்துக்கிட்டாரு. எல்லா சந்தர்ப்பத்திலும் நித்திலாவுக்கு துணையா இருந்தாரு. அவ அவருக்கு எப்போ ஃபோன் பண்ணாலும், எல்லா வேலையையும் அப்படியே போட்டுட்டு அடுத்த சில நிமிஷத்துல அவ முன்னாடி வந்து நின்னாரு... எவ்வளவு பிசியா இருந்தாலும் சரி"

திடீரென்று ஆழ்வியை எது சித்திரவேலை பற்றி விசாரிக்கச் செய்தது என்று புரியவில்லை இனியவனுக்கு, அதுவும் இந்த அசாதாரண சூழ்நிலையில்...! ஆழ்வியின் பதற்றத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? என்னவாக இருக்கும்?

"புரோகிதர் நடந்ததுக்கு ஏதாவது பரிகாரம் சொன்னாரா பாட்டி?"

"சாயங்காலம் சொல்றேன்னு சொல்லி இருக்காரு"

"அக்கா ரொம்ப பயந்திருக்காங்க"

"ஆமாம். ஏன்னா, இது உண்மையிலேயே அபசகுனம் தான்"

"கவலைப்படாதீங்க பாட்டி எல்லாம் சரியாயிடும்"

"அப்படித்தான் நம்பணும்"

செயற்கையான புன்னகையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள் ஆழ்வி. ஒரு தூணின் பின் மறைந்து கொண்டான் இனியவன். முன்பிருந்ததை விட அவள் அதிக பதற்றத்தோடு காணப்பட்டாள். தன் தலையை அழுத்தி பிடித்தவாறு தன் அறைக்குச் சென்றாள். அதை பார்த்து இனியவன் கண்களை சுருக்கினான். சித்திரவேலிடம் ஏதோ தவறு இருக்கிறது. அதை ஆழ்வி கண்டுபிடித்து விட்டாள் போல் தெரிகிறது. என்று ஊகித்தான் இனியவன். அவனது ஊகம் சரி தான்.

ஆழ்வியின் பதற்றத்திற்கு காரணம், நித்திலாவின் சேலையில் தீ பற்ற வைத்தது சித்திரவேல் தான். தற்செயலாய் அதை பார்த்து விட்டிருந்தாள் ஆழ்வி.

தொடரும்...














Bạn đang đọc truyện trên: AzTruyen.Top